.

Pages

Thursday, August 2, 2018

துபையில் இறந்த இந்திய இளைஞரின் உடல் ஈமான் அமைப்பின் மூலம் உறவினர்களிடம் ஒப்படைப்பு!

அதிரை நியூஸ்: ஆக. 02
துபாயில்  உள்ள நிறுவனம் ஒன்றில் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த ஹர்தேவ் குமார் சர்மா ( வயத் 34 ) தொழில் நுட்ப பணியாளராக வேலை செய்து வந்தார். அவர் கடந்த 09.07.2018 அன்று உடல் நலக் குறைவால் மரணமடைந்தார். அவர் வேலை பார்த்து வந்த நிறுவனம் அவரது உடலை அவரது  சொந்த ஊரில் ஒப்படைக்க உதவிடுமாறு ஈமான் அமைப்பை கேட்டுக் கொண்டது.

ஈமான் அமைப்பின் தலைவர் அல்ஹாஜ் பி.எஸ்.எம். ஹபிபுல்லா கான் மற்றும் பொதுச்செயலாளர் ஏ. ஹமீது யாசின் ஆகியோரது ஆலோசனையின் பேரில் அவரது உடல் பீகார் மாநிலம் பாட்னாவில் அவர்து சகோதரர்களிடம் மக்கள் தொடர்பு மற்றும் ஊடகத்துறை செயலாளர் முதுவை ஹிதாயத் மூலம் ஒப்படைக்கப்பட்டது.

தனது சகோதரரின் உடலை கொண்டு வர உதவிய ஈமான் அமைப்பின் மனித நேய பணிகளுக்கு  அந்த குடும்பத்தினர் நன்றி தெரிவித்தனர். மேலும் இந்த பணியில் ஒத்துழைப்பு அளித்த இந்திய துணைத் தூதரகம், அவர் வேலை பார்த்து வந்த நிறுவனத்தினர் உள்ளிட்டோருக்கும் தங்களது நன்றியை கூறினர்.

துபையில் இலவச பல் மருத்துவ முகாம்!

அதிரை நியூஸ்: ஆக.02
துபை கோடு சூக் மற்றும் அல் ராஸ் மெட்ரோ நிலையம் அருகில் அல் அப்ரா மருத்துவ நிலையம் உள்ளது. இந்த மருத்துவ நிலையத்தில் பல் மருத்துவராக தமிழகத்தைச் சேர்ந்த டாக்டர் நஜ்மா நசீர் பணிபுரிந்து வருகிறார்.

இவர் நாகர்கோவிலைச் சேர்ந்தவர். தற்போது சென்னையில் வசித்து வருகிறார். இவர் சென்னை டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலைக்கழகத்தில் படித்தவர்.

அமீரகத்தில் வசித்து வரும் தமிழக மக்களுக்கு பல்லை பரிசோதித்து அதனை முறையாக பராமரிக்க வேண்டிய ஆலோசனைகள் குறித்து விளக்கி வருகிறார். எனவே பல்லை இலவசமாக பரிசோதனை செய்து தேவையான ஆலோசனைகள் பெற விரும்புபவர்கள் 055 123 1952 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு முன் பதிவு பெற்று வருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

பல்லை முறையாக பராமரிப்பதன் மூலம் உடலுக்கு ஏற்படும் பிற தீங்குகளிலிருந்து பாதுகாத்துக் கொள்ள முடியும். எனவே பல் சுகாதாரம் குறித்த விபரங்களை டாக்டரிம் நேரடியாக ஆலோசனை பெற்று தெரிந்து கொள்ளலாம். இந்த அரிய வாய்ப்பினை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளவும். ஆலோசனை பெற வருபவர்கள் தொலைபேசியில் அழைத்து முன்பதிவு செய்து வருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

அதிரை அருகே சூறைக்காற்று, கனமழையால் பாதிக்கப்பட்டோருக்கு எம்எல்ஏ ஆறுதல் (படங்கள்)

அதிராம்பட்டினம், ஆக. 02
அதிராம்பட்டினம் அருகே கீழத்தோட்டம் கிராமத்தில் செவ்வாய்க்கிழமை மாலை இடி, மின்னல் மற்றும் பலத்த சூறைக்காற்றுடன் கன மழை பெய்தது. இதில் அந்த ஊரிலுள்ள 9 குடிசை வீடுகள் பலத்த சேதமடைந்தன.
இந்த 9 வீடுகளில் ஒரு வீட்டில் இருந்த தாய் மகேஸ்வரிக்கும், அவர் மகள் சூரியாவுக்கும் எலும்பு முறிவு ஏற்பட்டு, இருவரும் உடனடியாக தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

இதுபற்றி தகவலறிந்ததும், பட்டுக்கோட்டை எம்எல்ஏ சி.வி.சேகர் புதன்கிழமை கீழத்தோட்டம் சென்று சூறைக்காற்று, மழையால் சேதமடைந்த வீடுகளைப் பார்வையிட்டு, பாதிக்கப்பட்ட 9 குடும்பத்தினருக்கும் தனது சார்பில் தலா ரூ.2,000 நிதியுதவி வழங்கி ஆறுதல் கூறினார்.

இதன் பின்னர், தஞ்சை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தாய், மகளை நேரில் சென்று பார்த்து தனது சார்பில் ரூ.5,000 வழங்கி, இருவருக்கும் ஆறுதல் கூறினார். அப்போது, தஞ்சை மருத்துவக் கல்லூரி முதல்வர் எம்.இளங்கோவன், அதிமுக பட்டுக்கோட்டை ஒன்றியச் செயலர் பி.சுப்பிரமணியன், நகரச் செயலர் சுப.ராஜேந்திரன் மற்றும் கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.
 
 
 
 
 
 
 
 

மரண அறிவிப்பு ~ ஆமினா அம்மாள் (வயது 95)

அதிரை நியூஸ்: ஆக.02
அதிராம்பட்டினம், கடற்கரைத் தெருவைச் சேர்ந்த மர்ஹூம் கு.அ முகமது சரீப் அவர்களின் மகளும், மர்ஹூம் முகமது அப்துல் காதர் அவர்களின் மனைவியும், மர்ஹூம் கு.அ முகமது முகைதீன் அவர்களின் சகோதரியும், மர்ஹூம் என்.கே.எஸ் முகமது ஜெக்கரியா அவர்களின் கொளுந்தியாவும், மர்ஹூம் என்.கே.எஸ் உதுமான் அவர்களின் ராத்தமாவும், கு.அ முகமது அன்சாரி அவர்களின் மாமியும், ஏ.கே.எஸ் சாகுல் ஹமீது, எம்.சாகுல் ஹமீது, எஸ்.செய்யது முகமது ஆகியோரின் பெரிய மாமியாரும், எம்.முகமது இப்ராஹீம் அவர்களின் சிறிய தாயாரும், முன்னாள் கவுன்சிலர் கு.அ முகமது சரீப் (NKS) அவர்களின் உம்மம்மாவுமாகிய ஆமினா அம்மாள் (வயது 95) அவர்கள் இன்று காலை காலியார்தெரு இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

அன்னாரின் ஜனாஸா இன்று (02-08-2018) லுஹர் தொழுதவுடன் மரைக்கா  பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.

Wednesday, August 1, 2018

தடகளம், குழு விளையாட்டு போட்டிகள் நடத்த காதிர் முகைதீன் பள்ளி தேர்வு!

அதிராம்பட்டினம், ஆக.01
பட்டுக்கோட்டை வட்ட அளவிலான 2018-19 ஆம் ஆண்டு தடகளம் மற்றும் குழு விளையாட்டுப் போட்டிகள் நடத்த அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தேர்வாகி உள்ளது. மைதானத்தில் தடகளம், கபடி, கோ–கோ, கைப்பந்து, வளைபந்து, எறிபந்து, இறகுபந்து, கால்பந்து ஆகிய போட்டிகள் ஆகஸ்ட் முதல் மற்றும் 2-வது வாரம் வரை நடைபெற உள்ளது. இதில், பட்டுக்கோட்டை கல்வி மாவட்டத்தின் 125 பள்ளிக்கூடங்களை சேர்ந்த சுமார் ஆயிரம் மாணவ, மாணவிகள் பங்கேற்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

செய்தி மற்றும் படங்கள்:
மர்ஜூக் (மாணவச் செய்தியாளர்)

அதிரையில் மாட்டு இறைச்சி கடை புதிதாக திறப்பு (படங்கள்)

அதிராம்பட்டினம், ஆக.01
அதிராம்பட்டினத்தில் புதியதோர் உதயமாக 'அல் கரீம் பீஃப் ஸ்டால்' என்ற பெயரில் மாட்டு இறைச்சிக் கடை செடியங்குளம் அருகில் வெள்ளிக்கிழமை காலை முதல் உதயமாகியது. திறப்பு நாளன்று கூட்ட நெருக்கடி அதிகமாக காணப்பட்டன. விலை மலிவு என்பதால் பொதுமக்கள் ஆர்வமாக வாங்கிச்சென்றனர். விற்பனை தொடங்கிய சில மணி நேரங்களில் இறைச்சி அனைத்தும் விற்று தீர்ந்தது.

இதுகுறித்து நிறுவன உரிமையாளர் 'கிங்காங்' அப்துல் கரீம் கூறியது:
ஆரோக்கியமான மாடுகளை நேரடியாக கொள்முதல் செய்து அவற்றை மக்கள் பார்வையில் படும்படி காற்றோட்டமான பகுதியில் மேய விட்டு, ஹலாலான முறையில் சுத்தப்படுத்தி விற்பனை செய்கிறோம். இங்கு மொத்தமாகவும், சில்லறையாகவும் விற்பனை உண்டு. டெலிபோனில் ஆர்டர் செய்தால் இலவச டோர் டெலிவரி வசதி உண்டு' என்றார்.

தொடர்புக்கு: 6380809117
 

தஞ்சை மாவட்டத்தில் தூய்மை தர மதிப்பீடு கணக்கெடுப்புப் பணி !

தஞ்சை மாவட்டத்தில் தூய்மை தர மதிப்பீடு கணக்கெடுப்புப் பணி மேற்கொள்ளப்படவுள்ளது என்றார் ஆட்சியர் ஆ. அண்ணாதுரை.

ஆட்சியரகத்தில் ஊரக வளர்ச்சித் துறை சார்பில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தூய்மை இந்தியா இயக்கம், தூய்மை கணக்கெடுப்பு பணிகள் தொடர்பாக மாவட்ட அளவிலான முன்னோடி விளக்கக் கூட்டத்தில் அவர் பேசியது:
மாநிலம் மற்றும் மாவட்டங்களுக்குத் தூய்மை குறித்த தர மதிப்பீட்டுக்கான கணக்கெடுப்பு நடைபெறவுள்ளது. தர மதிப்பீடு சதவீத அடிப்படையில் பிரிக்கப்படவுள்ளது. பொது இடங்களில் சுகாதார வசதிகள் அளவீட்டுக்கு 30 சதவீதமும், பொதுமக்களிடையே ஏற்படுத்தப்பட்ட சுகாதார விழிப்புணர்வு குறித்த அளவீட்டுக்கு 35 சதவீதமும், குடிநீர் மற்றும் சுகாதார அமைச்சக இணையதள பதிவுகளின்படி கிராமங்களில் ஏற்படுத்தப்பட்ட சுகாதார அளவீட்டுக்கு 35 சதவீதமும் என பிரிக்கப்பட்டு, கணக்கெடுப்பு மேற்கொள்ளப்படவுள்ளது.

ஊராட்சியில் உள்ள பள்ளிகள், அங்கன்வாடிகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், சந்தைகள், முக்கிய வழிபாட்டு தலங்கள், சுற்றுலா தலங்கள் ஆகியவை சுகாதார கணக்கெடுப்பில் முக்கிய அம்சங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. எனவே, அனைத்து துறைப் பொறுப்பு அலுவலர்களும், அவரவர் துறையைச் சார்ந்த பொது இடங்களில் செய்யப்பட்டுள்ள சுகாதார வசதிகள் மற்றும் அதன் பயன்பாடுகள், திடக்கழிவு மேலாண்மை செயலாக்கம், திரவக்கழிவு மேலாண்மை செயலாக்கம், நீர் தேங்கும் இடங்கள் குறித்த ஆய்வு, ஊரகப் பகுதி வாழ் மக்களிடையே ஏற்பட்டுள்ள சுகாதார விழிப்புணர்வு குறித்த ஆய்வு மற்றும் உள்ளாட்சி அமைப்புகளில் பணிபுரியும் நபர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், சத்துணவு அமைப்பாளர்கள், சுகாதாரச் செவிலியர்கள், பள்ளி ஆசிரியர்கள் ஆகியோர் மூலம் சுகாதார நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மத்திய அரசால் வெளியிடப்பட்டுள்ள இணையதள செயலி மூலம் பொதுமக்கள் தங்களது கருத்துகளைப் புகைப்படத்துடன் பதிவேற்றம் செய்ய அறிவுறுத்த வேண்டும். மாவட்டத்துக்கு உயர்ந்த சுகாதார தர மதிப்பீடு அளிக்கும் வகையில் அனைத்து துறைகளும் செயல்பட வேண்டும் என்றார் ஆட்சியர்.

கூட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் பி. மந்திராசலம், தமிழ்நாடு ஊரக வாழ்வாதாரத் திட்ட அலுவலர் இந்துபாலா, ஊரக வளர்ச்சி செயற் பொறியாளர் சீனிவாசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மரண அறிவிப்பு ~ மஹ்மூதா பீவி (வயது 65)

அதிரை நியூஸ்: ஆக.01
அதிராம்பட்டினம், மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் கு.மூ நெய்னா முகமது அவர்களின் மருமகன் முகமது சலீம் அவர்களின் சகோதரியும், பாபநாசம் மர்ஹூம் இஸ்மாயில் கனி அவர்களின் மகளும், மர்ஹூம்  ராஜா முகமது அவர்களின் மனைவியும், சிராஜுதீன், யாசர் அரபாத், செய்யது இப்ராஹீம் ஆகியோரின் மாமியுமாகிய மஹ்மூதா பீவி (வயது 65) அவர்கள் இன்று காலை மேலத்தெரு கிராணி நகர் முகமது சலீம் இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

அன்னாரின் ஜனாஸா இன்று (01-08-2018) மாலை 4 மணியளவில் பெரிய ஜும்மா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.