.

Pages

Sunday, September 2, 2018

காதிர் முகைதீன் கல்லூரியில் மண்டல அளவிலான கிரிக்கெட் போட்டி தொடக்கம் (படங்கள்)

அதிராம்பட்டினம், செப்.02
அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் கல்லூரியில், பாரதிதாசன் பல்கலைக்கழக தஞ்சை மண்டல அளவிலான கிரிக்கெட் தொடர் போட்டி சனிக்கிழமை தொடங்கியது.

போட்டியை, கல்லூரி முதல்வர் (பொறுப்பு) எம். முகமது முகைதீன் தொடங்கி வைத்தார். முதல் நாள் போட்டியில், கும்பகோணம் அன்னை கல்லூரி, தஞ்சாவூர் பாரத் அறிவியல் நிர்வாகவியல் கல்லூரி மோதின. இதில், கும்பகோணம் அன்னை கல்லூரி  ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இன்று ஞாயிற்றுக்கிழமை 2-வது நாள் நடந்த போட்டியில், கும்பகோணம்  அரசினர் ஆடவர் கல்லூரி, பூண்டி ஸ்ரீ புஷ்பம் கல்லூரி மோதின. இதில்,  பூண்டி ஸ்ரீ புஷ்பம் கல்லூரி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

போட்டி செப்.1 ந் தேதி தொடங்கி வரும் செப்.4 ந் தேதி வரை நடக்கிறது. போட்டி ஏற்பாட்டினை, காதிர் முகைதீன் கல்லூரி உடற்கல்வி இயக்குநர் பேராசிரியர் கே. முருகானந்தம் செய்து வருகிறார். இதில், கல்லூரி  உடற்கல்வி இயக்குநர்கள் டி.முருகராஜ், ஜே.ராஜ்குமார், சங்கர், ரவிச்சந்திரன் மற்றும் பேராசிரியர்கள் கலந்துகொண்டனர்.
 
 
 
 
 
 
 
 
 
 

'வீட்டுக்கு ஒரு தென்னை மரம் வளர்க்க வேண்டும்' ~ உலக தென்னை தின விழாவில் அமைச்சர் பேச்சு (படங்கள்)

தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை வட்டம், காசாங்காடு ஊராட்சி சமுதாய கூடத்தில் தென்னை வளர்ச்சி வாரியம் சார்பில் நடைபெற்ற உலக தென்னை தின விழாவில் மாநிலங்களவை உறுப்பினர் ஆர்.வைத்திலிங்கம் முன்னிலையிலும், மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை தலைமையிலும், வேளாண்மைத்துறை அமைச்சர் இரா.துரைக்கண்ணு இன்று (02.09.2018) கலந்து கொண்டு சிறப்பித்தார்.

முன்னதாக தென்னை மரத்திலிருந்து கிடைக்கக்கூடிய பொருட்களிலிருந்து  மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களின் கண்காட்சியை பார்வையிட்டு, குத்து விளக்கேற்றி வைத்து நிகழ்ச்சியை தொடங்கி வைத்து வேளாண்மைத்துறை அமைச்சர் பேசியதாவது : -
தென்னையின் முக்கியத்துவம் குறித்து நாம் அனைவரும் அறிந்துள்ளோம்.  தென்னை உற்பத்தி மற்றும் வளர்ப்பு நமக்கும் நமது குடும்பத்திற்கு மட்டுமல்லாமல் நாட்டிற்கே பயன் உள்ளதாக இருக்கும்.  1998ல் வியாட்நாம் நாட்டில் நடந்த சர்வதேச தென்னை கருத்தரங்கிலிருந்து தென்னை வளர்ச்சி தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. அம்மா அவர்களின் வழியில் செயல்படும் தமிழக முதல்வர் அவர்கள் எடுத்த சீரிய முயற்சியினால் தென்னை விவசாயிகள் பயன் பெறும் வகையில் நீராபானம் உற்பத்திக்கு அனுமதியளித்து, அதற்கென்று ஒரு தனி பிரிவை ஏற்படுத்தி உள்ளார்கள்.  மேலும் கொப்பரை தேங்காய் உற்பத்தி செய்யும் விவசாயிகளின் நலன் கருதி கொப்பரை தேங்காயின் விலை வீழ்ச்சியின் போது அரசே நேரடியாக கொப்பரை கொள்முதல் செய்தது.  இது போல் விவசாயிகளுக்கு தேவையான திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகின்றது.   தென்னை விவசாயம் அதிகம் செய்யப்படும் பட்டுக்கோட்டை, பேராவூரணி பகுதிகளின் விவசாயிகள் நலன் கருதி பட்டுக்கோட்டையில் வேளாண் துறையின் சார்பில் தென்னை உற்பத்தி மையம் செயல்பட்டு வருகிறது.

தென்னை மரத்தின் அனைத்து பகுதிகளும் விவசாயிகளுக்கு வருமானம் தரக்கூடியவையாகும்.  பல உணவு பொருட்களின் உற்பத்திக்கு தேங்காய் மூலப்பொருட்களாக விளங்குகிறது.  கடவுள் வழிபாடு முதல், உணவு உற்பத்தி செய்வது வரை தேங்காயின் தேவை இருக்கின்றது.  எனவே விவசாயகள் மட்டும் வயல்களில் தென்னை வளர்ப்பது மட்டுமல்லாமல் அனைவரும் தங்கள் வீட்டில் ஒரு தென்னங்கன்று நட்டு வளர்க்க செய்து தென்னை தேவையை உணரச் செய்ய வேண்டும்.  தென்னை உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு தமிழக அரசின் வேளாண் துறை மற்றும் தென்னை வளர்ச்சி வாரியம மூலம் செயல்படுத்தப்படும் தென்னை வளர்ச்சி குறித்த திட்டங்களை தெரிந்து கொண்டு அதனை செயல்படுத்தி பயன் பெற வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.  இவ்வாறு வேளாண்மைத்துறை அமைச்சர் பேசினார்.

இந்நிகழ்ச்சியில் தஞ்சாவூர் நாடாளுமன்ற உறுப்பினர் கு.பரசுராமன், பட்டுக்கோட்டை சட்ட மன்ற உறுப்பினர் சி.வி.சேகர், முன்னாள் சட்ட உறுப்பினர் பி.என்.ராமச்சந்திரன், பட்டுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் மகாலெட்சுமி, தென்னை வளர்ச்சி வாரிய இயக்குநர் ராஜீவ் பூஷன் பிரசாத், தென்னை வளர்ச்சி வாரிய துணை இயக்குநர் ஜெயபாண்டி, முன்னாள் தென்னை வளர்ச்சி வாரிய துணைத் தலைவர் கலைச்செல்வன், வேளாண்மைத்துறை இணை இயக்குநர் (பொ) ஜஸ்டின், துணை இயக்குநர் பொன்மலர், முன்னாள் மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் குருசேவ், மத்திய கூட்டுறவு வங்கி இயக்குநர் ஜெயபிரகாஷ் நாராயணன், முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் இரா.கார்த்திகேயன், முன்னாள் தென்னை வாரிய உறுப்பினர் மலையய்யன், முன்னாள் பட்டுக்கோட்டை தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத் தலைவர் சுப்ரமணியன், பால்வளத்தலைவர் துரை செந்தில், முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் சுப.ராஜேந்திரன், காசாங்காடு முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் சதாசிவம், தென்னை வளர்ச்சி வாரிய உறுப்பினர் மோகன்ராஜ், திரளான விவசாயிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
 

Saturday, September 1, 2018

அதிரையில் நீர்நிலை பாதுகாப்பு அறக்கட்டளை ஆலோசனைக் கூட்டம் (படங்கள்)

அதிராம்பட்டினம், செப்.01
நீர்நிலை பாதுகாப்பு அறக்கட்டளை அமைப்பின் ஆலோசனைக் கூட்டம் நடுத்தெரு ஆயிஷா மகளிர் அரங்கில் சனிக்கிழமை இரவு நடைபெற்றது.

கூட்டத்திற்கு, அதன் ஒருங்கிணைப்பாளர் எஸ்.எச் அஸ்லம் தலைமை வகித்தார். கூட்டத்தில், வறண்டு காணப்படும் அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுப்புற பகுதி ஏரி, குளங்களுக்கு நீர் நிரப்புவதில் ஏற்படும் தாமதத்தை அடுத்து, எதிர்வரும் (10.09.2018) திங்கட்கிழமை காலை 3-வது தடவையாக மாவட்ட ஆட்சியரை சந்திப்பது எனவும், இதில், விவசாயிகள், நீர்நிலை ஆர்வலர்கள், மீனவர்கள், ஜமாத்தார்கள், கிராம பஞ்சாயத்தார்கள் உள்ளிட்ட 100 க்கும் மேற்பட்டோருடன் சென்று ஆட்சியரை சந்தித்து முறையிடுவது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இக்கூட்டத்தில், 150 க்கும் மேற்பட்ட நீர் நிலை பாதுகாப்பு ஆர்வலர்கள் கலந்துகொண்டனர்.
 

அதிரை பைத்துல்மால் சேவை அமைப்பின் மாதாந்திரக் கூட்டம் (படங்கள்)

அதிராம்பட்டினம், செப்.01
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் பைத்துல்மால் சேவை அமைப்பின் ஆகஸ்ட் மாத மாதாந்திரக் கூட்டம், அவ்வமைப்பின் தலைவர் பேராசிரியர் பர்கத் அவர்களின் தலைமையில், அலுவலகத்தில் ஆக.31 வெள்ளிக்கிழமை இரவு 7 மணியளவில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், அதிரை பைத்துல்மால் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் பலர் கலந்துகொண்டனர்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கடைமடைக்கு காவிரிநீர் வராததைக் கண்டித்து அனைத்துக் கட்சியினர் 4-ம் தேதி மறியல் போராட்டம்!

பட்டுக்கோட்டை, செப்.01
பட்டுக்கோட்டை கடைமடைப் பகுதிகளுக்கு தண்ணீர் வராததைக் கண்டித்து செப்.4-ல் பட்டுக்கோட்டை, மதுக்கூர், அதிராம்பட்டினம் ஆகிய ஊர்களில் பல்வேறு அரசியல் கட்சிகள், விவசாய சங்கங்கள் சார்பில் முழு கடையடைப்புப் போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
பட்டுக்கோட்டையில் பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் விவசாய சங்கப் பிரதிநிதிகள், விவசாயிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

இதில், பட்டுக்கோட்டை கடைமடை பகுதிகளுக்கு பாசனத்துக்கு தண்ணீர் வராததை கண்டித்து பட்டுக்கோட்டை , மதுக்கூர், அதிராம்பட்டினம் ஆகிய ஊர்களில் செப்.4 ஆம் தேதி (செவ்வாய்) முழு கடையடைப்புப் போராட்டமும், அதே நாளில் பட்டுக்கோட்டை பேருந்து நிலையம் எதிரில் சாலை மறியல் போராட்டமும் நடத்துவது.

இதே கோரிக்கையை வலியுறுத்தி வேறொரு நாளில் தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக முற்றுகைப் போராட்டம் நடத்துவது ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்துக்கு இந்திய கம்யூனிஸ்ட் சார்பு விவசாயத் தொழிலாளர் சங்க மாவட்டச் செயலர் சி. பக்கிரிசாமி தலைமை வகித்தார். மாவட்ட திமுக துணைச்செயலரும், முன்னாள் எம்எல்ஏவுமான கா. அண்ணாதுரை முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில் ந. மணிமுத்து, எஸ்.ஆர். என். செந்தில்குமார் (திமுக), ஏ.ஆர்.எம். யோகானந்தம், (காங்கிரஸ்), எஸ். கந்தசாமி (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்), ஏ.எம். மார்க்ஸ் (இந்திய கம்யூனிஸ்ட்), கே. அய்யாவு ( பாஜக), எம். செந்தில்குமார் (மதிமுக), ஏ.கே. குமார் (தமாகா) வா. வீரசேனன் (நசுவினி ஆறு படுகை அணை விவசாயிகள் மேம்பாட்டுச் சங்கம்) உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
 

தஞ்சாவூர் மாவட்ட வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு (முழு விவரம்)

தஞ்சாவூர் மாவட்டம், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வரைவு வாக்காளர் பட்டியலை அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆ.அண்ணாதுரை இன்று (01.09.2018) சனிக்கிழமை வெளியிட்டார்.

வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டு மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்ததாவது: -
இந்திய தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டுள்ளவாறு. தஞ்சாவூர் மாவட்டத்தில் 01-01-2018 அன்று தகுதி நாளாகக் கொண்டு தயார் செய்யப்பட்ட 8 சட்டமன்ற தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியல் இன்று (01-09-2018) அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் வெளியிடப்பட்டுள்ளது,

தற்போது வெளியிடப்பட்டுள்ள வரைவு வாக்காளர் பட்டியலின்படி, தஞ்சாவூர் மாவட்டத்தில்  திருவிடைமருதூர் சட்ட மன்ற தொகுதியில் 1,18,924 ஆண் வாக்காளர்களும்,  1,17,109 பெண் வாக்காளர்களும்,  7 இதர பாலினத்தவர்களும், கும்பகோணம் சட்ட மன்ற தொகுதியில் 1.23.270 ஆண் வாக்காளர்களும்  1,26,576 பெண் வாக்காளர்களும்,  1 இதர பாலினத்தவரும், பாபநாசம் சட்ட மன்ற தொகுதியில் 1,19,815 ஆண் வாக்காளர்களும்,  1,22,406 பெண் வாக்காளர்களும்,  10 இதர பாலினத்தவர்களும், திருவையாறு சட்ட மன்ற தொகுதியில் 1,23,731 ஆண் வாக்காளர்களும், 1,28,014 பெண் வாக்காளர்களும்,  தஞ்சாவூர் சட்ட மன்ற தொகுதியில் 1,30,424 ஆண் வாக்காளர்களும்,  1,39,672 பெண் வாக்காளர்களும்,  49 இதர பாலினத்தவர்களும், ஒரத்தநாடு சட்ட மன்ற தொகுதியில் 1,11,109 ஆண் வாக்காளர்களும்,  1,15,414 பெண் வாக்காளர்களும், 3 இதர பாலினத்தவர்களும், பட்டுக்கோட்டை சட்ட மன்ற தொகுதியில் 1,09,721 ஆண் வாக்காளர்களும்,  1,18,146 பெண் வாக்காளர்களும்,  22 இதர பாலினத்தவர்களும், பேராவூரணி சட்ட மன்ற தொகுதியில் 1,02,708 ஆண் வாக்காளர்களும்,  1,05,185 பெண் வாக்காளர்களும்,  1 இதர பாலினத்தவரும், ஆக மொத்தம் தஞ்சாவூர் மாவட்டத்தில் 9,39,707 ஆண் வாக்காளர்களும், 9,72,522 பெண் வாக்காளர்களும், 92 இதர பாலின வாக்காளர்கள் என 19,12,322 மொத்த வாக்காளர்கள் உள்ளனர்.

கடந்த 10-01-2018 அன்று வெளியிடப்பட்ட வாக்காளர் பட்டியலில் ஆண் வாக்காளர்களின் எண்ணிக்கை 9,40,970. பெண் வாக்காளர்களின் எண்ணிக்கை 9,74,786,  இதர பாலினத்தவர் 92 ஆக கூடுதல் 19,15,848 வாக்காளர்கள் இடம் பெற்றிருந்தனர்,

11-01-2018 முதல் 31-08-2018 வரை தகுதி அடிப்படையில் ஆண் வாக்காளர்கள் 1888, பெண் வாக்காளர்கள் 2146, இதர பாலினத்தவர் 2 ஆக கூடுதல் 4,036 வாக்காளர்கள் புதிதாக இந்த வரைவு வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

11-01-2018 முதல் 31-08-2018 வரை விசாரணை அடிப்படையில் இறந்த மற்றும் இடம் பெயர்ந்த வாக்காளர்களில் ஆண் வாக்காளர்கள் 3,151, பெண் வாக்காளர்கள் 4,410 3ம் பாலினத்தவர் 1 ஆக கூடுதல் 7,562 பேர் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

வாக்குச்சாவடிகள் மறு சீரமைப்புக்கு பிறகு. தற்போது தஞ்சாவூர் மாவட்டத்தில் மொத்தம் 2,287 வாக்குச் சாவடிகள் உள்ளன.  அனைத்து வாக்குச் சாவடிகளிலும் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் (Booth Level Officers
) நியமிக்கப்பட்டு அவர்களுக்கு உரிய முறையில் பயிற்சி வழங்கப்பட்டுள்ளது. வரையறுக்கப்பட்ட அலுவலர்களாக (Designated Location Officers) மொத்தம் 1147 அலுவலர்கள் அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

மேற்படி வரைவு வாக்காளர் பட்டியல் அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் வாக்காளர்களின் பார்வைக்காக 01-09-2018 முதல் 31-10-2018 வரை வைக்கப்பட்டிருக்கும், இந்த நாட்களில் 01-01-2019 அன்று 18 வயது நிரம்பிய ஆண், பெண் இருபாலரும் (அதாவது வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றிராத 01-01-2001க்கு முன்பு பிறந்தவர்கள் அனைவரும்) விண்ணப்பிக்கலாம்.

இவர்கள் தாங்கள் வசிக்கும் பகுதிக்கு அருகாமையில் உள்ள வாக்குச்சாவடியில் மேற்குறிப்பிட்ட காலத்தில் (01-09-2018 முதல் 31-10-2018 வரை) படிவம் எண் 6 ஐ பெற்று பூர்த்தி செய்து வயது மற்றும் குடியிருப்புக்கான ஆதார ஆவண நகல்களை இணைத்து வாக்குச்சாவடி நிலை அலுவலரிடமே அளித்திடலாம்.  01-01-2019 அன்று 18 வயது பூர்த்தியடையும் அனைவரும் இவ்வாய்ப்பினைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

மேற்குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் புதிதாக பெயர் சேர்க்க படிவம்  6 ஐயும் (வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் படிவம் 6A மூலம்), பெயர் நீக்கம் செய்திட படிவம் 7 ஐயும். பெயர், முகவரி இவற்றில் ஏதேனும் திருத்தங்கள் மேற்கொண்டிட படிவம் 8 ஐயும். ஒரே தொகுதிக்குள் முகவரி மாற்றம் செய்திட படிவம் 8A ஐயும் பூர்த்தி செய்து உரிய சான்றவணங்களுடன் தொடர்புடைய வாக்குச்சாவடி அலுவலாpடமே அளிக்கலாம்,

01.09.2018 அன்று வெளியிடப்பட்டுள்ள வரைவு வாக்காளர் பட்டியல் தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள அனைத்து கிராம சபைகளிலும்.  உள்ளாட்சி அமைப்புகளிலும் வாக்காளர்களின் பார்வைக்காக 08-09-2018, 22-09-2018, 06-10-2018 மற்றும் 13-10-2018 ஆகிய நாட்கள் வைக்கப்பட்டிருக்கும்.

மேலும். வருகிற 09-09-2018, 23-09-2018, 07-10-2018 மற்றும் 14-10-2018 ஆகிய நான்கு நாட்கள் அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது. அந்நாட்களிலும் அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை பணிபுரிய அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.  எனவே, மேற்குறிப்பிட்ட சிறப்பு முகாம் நாட்களை பயன்படுத்தி பொது மக்கள் தாங்கள் வசிக்கும் பகுதிக்கு அருகாமையில் உள்ள வாக்குச்சாவடி மையத்தில் தேவையான தேர்தல் படிவங்களைப் பெற்று பூர்த்தி செய்து அளிக்கலாம்.  தஞ்சாவூர் மாவட்ட வாக்காளர்கள் இவ்வாய்ப்பினைப் பயன்படுத்தி வாக்காளர் பட்டியலில் இடம் பெறதவர்கள் இடம் பெறவும். உரிய திருத்தம் மேற்கொண்டிடவும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

01-09-2018 அன்று வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் சேர்த்தல் மற்றும் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு (Claims & objections) தொடர்புடைய வாக்காளர் பதிவு அலுவலர்களால் ( EROs ) தகுதி அடிப்படையில் ஒப்பளிப்பு ஆணை பிறப்பிக்கப்பட்டு. வருகிற 04-01-2019 அன்று இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும்,

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள வாக்காளர்கள் தங்கள் பெயர் தவறு ஏதுமின்றி வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளதா என்பதை சரிபார்த்திடவும், தவறு ஏதுமிருப்பின் அவற்றை உரிய படிவத்தில் பூர்த்தி செய்து தேவைப்படும்  சான்றவணங்களுடன் தொடர்புடைய வாக்குச்சாவடி அலுவலர்களிடம் வழங்கி நிவர்த்தி செய்து கொள்ளுமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

தங்கள் பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்க்க. நீக்க. உரிய மாற்றங்கள் மேற்கொள்ள வாக்காளர்கள் நேரடியாக உரிய படிவத்தில் பூர்த்தி செய்து அளிக்க இயலாவிடில், www.elections.tn.gov.in என்ற இணைய தள முகவரி மூலமாகவும் விண்ணப்பிக்கலாம். இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

கால்பந்து போட்டியில் காதிர் முகைதீன் பள்ளி தொடர் சாதனை!

அதிராம்பட்டினம், செப்.01
பட்டுக்கோட்டை கல்வி மாவட்ட அளவிலான கால்பந்து போட்டியில் அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாவட்ட அளவில் முதலிடம் பிடித்து மண்டல போட்டியில் விளையாட தகுதி பெற்றுள்ளது.

தஞ்சாவூர் பள்ளிக்கல்வித்துறை சார்பில், பட்டுக்கோட்டை, ஒரத்தநாடு, பேராவூரணி ஆகிய கல்வி மாவட்டங்களை உள்ளடக்கிய மாவட்ட அளவிலான கால்பந்து போட்டி ஒரத்தநாடு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இறுதிப் போட்டியில், மேன்மேலோர் பிரிவில் அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி அணி, புனவாசல் டான்போஸ்கோ அணியை 2-0 என்ற கோல் கணக்கிலும், மேலோர் பிரிவில், ஒரத்தநாடு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி அணியை 1-0 என்ற கோல் கணக்கிலும் வெற்றி பெற்று மண்டலப் போட்டிக்கு தகுதி பெற்றது.

இதையடுத்து, சாதனை நிகழ்த்திய பள்ளி மாணவர்களை, காதிர் முகைதீன் கல்வி நிறுவனங்கள் செயலர் எஸ்.ஜெ அபுல் ஹசன், பள்ளி தலைமை ஆசிரியர் ஏ.எல் அஸ்ரப் அலி, உடற்கல்வி ஆசிரியர்கள் ஏ. ராஜா, ஏ.ஜெயகாந்தன், ஆசிரியர்கள், மாணவர்கள் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.

இறகுப்பந்து போட்டியில் காதிர் முகைதீன் பெண்கள் பள்ளி மாணவிகள் சாதனை!

அதிராம்பட்டினம், செப்.01
அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் இறகுப்பந்து இரட்டையர், ஒற்றையர் பிரிவில் மாவட்ட அளவில் முதலிடம் பிடித்து சாதனை நிகழ்த்தி உள்ளனர்.

தஞ்சாவூர் பள்ளிக்கல்வித்துறை சார்பில், பட்டுக்கோட்டை, ஒரத்தநாடு, பேராவூரணி ஆகிய கல்வி மாவட்டங்களை உள்ளடக்கிய மாவட்ட அளவிலான குடியரசு தின விளையாட்டுப் போட்டி பட்டுக்கோட்டை பேட்மிட்டன் கிளப்பில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இதில், அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் ஏ.அஸ்மிதா, ஏ. ஆமீனா மரியம் ஆகியோர் இறகுப்பந்து இரட்டையர், ஒற்றையர் பிரிவில் கலந்துகொண்டு, மாவட்ட அளவில் முதலிடம் பிடித்து மண்டல போட்டியில் விளையாட தகுதி பெற்றனர்.

இதையடுத்து, சாதனை மாணவிகளை காதிர் முகைதீன் கல்வி நிறுவனங்கள் செயலர் எஸ்.ஜெ அபுல் ஹசன், பள்ளி தலைமை ஆசிரியை எம்.சுராஜ், உடற்கல்வி ஆசிரியை ஜி.அகிலா, ஆசிரியைகள், அலுவலகப் பணியாளர்கள், மாணவிகள் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.