.

Pages

Saturday, March 2, 2019

லயன்ஸ் சங்க ஆளுநர் அலுவல் வருகை விழாவில் சாதனையாளர்கள் கெளரவிப்பு (படங்கள்)

அதிராம்பட்டினம், ஜூன் 24
அதிராம்பட்டினம் லயன்ஸ் சங்கம் சார்பில் மாவட்ட ஆளுநர் அலுவல் வருகை விழா ஆக்ஸ்போர்ட் மெட்ரிக். மேல்நிலைப்பள்ளியில் வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது .

விழாவிற்கு, அதிராம்பட்டினம் லயன்ஸ் சங்கத் தலைவர் பேராசிரியர் ஹாஜி எம்.ஏ முகமது அப்துல் காதர் தலைமை வகித்து வரவேற்றுப்பேசினார். செயலாளர் எம்.அப்துல் ரஹ்மான் ஆண்டு அறிக்கை சமர்ப்பித்தார். பொருளாளர் எம்.ஏ அப்துல் ஜலீல் நிதிநிலை அறிக்கை வாசித்தார். லயன்ஸ் சங்க மாவட்ட ஆளுநர் எச்.சேக்தாவூது அலுவல் ஆய்வு மற்றும் சேவைத் திட்டங்களை தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார்.

விழாவில், மறைந்த முன்னாள் ஜனாதிபதி ஏ.பி.ஜெ அப்துல் கலாம் பிறந்த நாளையொட்டி அனைத்து கல்லூரி மாணவர்களுக்கிடையே நடைபெற்ற பேச்சுப் போட்டியில் முதல் 3 இடங்கள் பிடித்த சாதனை மாணவர்கள் ஆ. நாகமுத்து பாண்டியன், செ.கிருஷ்ணன், சா.ச பிருந்தா ஆகியோருக்கு முறையே ரூ.3000 ரூ.2000 ரூ.1000 ரொக்கப் பரிசுகள் மற்றும் சுழற்கோப்பை வழங்கப்பட்டன. மேலும்,  கல்விச்சேவைக்காக மாநில அளவிலான விருது பெற்ற ஆக்ஸ்போர்டு மெட்ரிக். மேல்நிலைப் பள்ளித் தாளாளர் என்.உதயகுமார், சேவைப் பணிக்காக சர்வதேச லயன்ஸ் விருது பெற்ற லயன்ஸ் சங்க மாவட்டத் தலைவர் பேராசிரியர் கே.செய்யது அகமது கபீர், 'சமூகசேவை' விருது பெற்ற லயன்ஸ் சங்க மாவட்டத் தலைவர்கள் எம்.அகமது, எம்.சாகுல் ஹமீது, 'காயிதே மில்லத்' விருது பெற்ற சேக்கனா எம்.நிஜாமுதீன், என்.ஆறுமுகச்சாமி ஆகியோருக்கு சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.

விழாவில், ஆக்ஸ்போர்டு ஆக்ஸ்போர்ட் மெட்ரிக். மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் பங்கேற்ற பெற்றோர்~ பிள்ளைகள் பற்றிய விழிப்புணர்வு நாடகம் பார்வையாளர்களை பெரிதும் கவர்ந்தது.

கண்தானம் செய்த தம்பிக்கோட்டை மேலக்காடு கிராமத்தை சேர்ந்த சா.கி பாலையா தேவர், சி.ர கந்தசாமி தேவர் ஆகிய குடும்பங்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கி கெளரவிக்கப்பட்டனர்.

முன்னதாக, பசுமையை வலியுறுத்தி ஆக்ஸ்போர்டு மெட்ரிக். மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன.

விழாவில், லயன்ஸ் சங்க மாவட்ட அவைப்பொருளர் சி.தர்மராஜன், மண்டலத்தலைவர் கே.ஸ்ரீராம், லயன்ஸ் சங்க மண்டல ஜிஏவி எஸ். சந்திர பிரகாசம் ஆகியோர் கருத்துரை வழங்கினர். மேலும், மாவட்டத் தலைவர்கள் ஹாஜி எஸ்.எம் முகமது முகைதீன், ஹாஜி எம்.நெய்னா முகமது, பேராசிரியர் கே.செய்யது அகமது கபீர், எம்.அகமது, எம்.சாகுல்ஹமீது ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

நிகழ்ச்சிகளை லயன்ஸ் சங்க மாவட்டத் தலைவர் பேராசிரியர் பி. கணபதி தொகுத்து வழங்கினார். நிகழ்ச்சி ஏற்பாட்டினை லயன்ஸ் சங்க உறுப்பினர் என்.உதயகுமார் செய்திருந்தார்.

இவ்விழாவில், லயன்ஸ் சங்க நிர்வாகிகள் டி.பி.கே ராஜேந்திரன், என்.யூ ராமமூர்த்தி, பேராசிரியர் கே. முருகானந்தம், சி.சார்லஸ், ஆர்.செல்வராஜ், என்.ஆறுமுகச்சாமி, பி. பிச்சை முத்து, எம்.நிஜாமுதீன், முல்லை ஆர். மதி, , முகமது அப்துல்லா, நெய்னா முகமது, அபுல் ஹசன் சாதலி, உமா சங்கர், ரெஜிஸ்கான், குப்பாஷா கபீர், அப்துல் காதர், அபுபக்கர், ஆக்ஸ்போர்ட் மெட்ரிக். பள்ளி ஆச்சிரியர்கள், மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

மரண அறிவிப்பு ~ கா.மு 'ஸ்டார்' சுல்தான் அப்துல் காதர் (வயது 90)

அதிரை நியூஸ்: மார்ச்.02
அதிராம்பட்டினம், மேலத்தெருவைச் சேர்ந்த மர்ஹும் கா.மு முகமது முகைதீன் மரைக்காயர் அவர்களின் மகனும், மர்ஹூம் பி.எம்.கே ஷேக் அப்துல் காதர் அவர்களின் மருமகனும், மர்ஹூம் கா.மு ஹாஜா அலாவுதீன், மர்ஹூம் ஹாஜி கா.மு குழந்தை சேக்காதி ஆகியோரின் சகோதரரும்,
எம்.எம்.எஸ் சகாபுதீன், கா.மு பதருல் ஜமான், எம்.எம்.எஸ் சரபுதீன், எம்.எம்.எஸ் முகமது சேக்காதி ஆகியோரின் மாமனாரும், கா.மு அப்துல் நாசர், கா.மு சாகுல் ஹமீது, கா.மு ஜபருல்லா ஆகியோரின் தகப்பனாருமாகிய கா.மு 'ஸ்டார்' சுல்தான் அப்துல் காதர் (வயது 90) அவர்கள் இன்று வஃபாத்தாகி விட்டார்கள்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜுவூன்

அன்னாரின் ஜனாஸா இன்று (02-03-2019) இரவு இஷா தொழுதவுடன் பெரிய ஜும்மா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.

TNPSC போட்டித் தேர்வு: ஆட்சியர் ஆய்வு!

தஞ்சாவூர் மாவட்டம், தஞ்சாவூர் பாரத் அறிவியல் மற்றும் நிர்வாகவியல் கல்லூரியில் நடைபெறும்  தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின்  அரசு தொழிற்பயிற்சி நிலைய முதல்வர் மற்றும் உதவிப் பொறியாளர் (Principal, Industrial Training Institute and Assistant Engineer (Industries) Examination) பதவிகளுக்கான போட்டித் தேர்வு நடைபெற்றதை மாவட்ட ஆட்சித்தலைவர் ஆ.அண்ணாதுரை இன்று (02.03.2019) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

ஆய்விற்கு பிறகு மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது; 
தேர்வு கண்காணிப்பில் ஈடுபடும் அலுவலர்கள் கவனமாக பணியாற்றவும், 100 சதவிகிதம் தவறுகள் நடைபெறாமல் கண்காணிக்கவும், தேர்வு எழுதுபவர்கள் தவறு செய்தால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இத்தேர்விற்கு 280 நபர்கள் தேர்வு எழுத விண்ணப்பித்து இருந்தனர்.  இன்று நடைபெற்ற தேர்வில் 160 நபர்கள் தேர்வு எழுதினர். 120 நபர்கள் தேர்வு எழுத வரவில்லை. 57.1 சதவிகித நபர்கள் இத்தேர்வு எழுதினார்கள்.

தேர்வு தொடங்கிய அரை மணி நேரத்திற்கு பின்னர் தேர்வர்கள் யாரையும் தேர்வு அறைக்குள் அனுமதிக்கக் கூடாது எனவும், தேர்வர்கள் எவரும் செல்போன், ஐபேட், கால்குலேட்டர், டேபிளேட் மற்றும் அதிநவீன மின்னணு சாதனங்கள் பயன்படுத்தக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.  தேர்வு நடைபெறும் மையங்களில் அடிப்படை வசதிகளான குடிநீர் வசதி, மின் வசதி செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு மாவட்ட  ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை தெரிவித்தார்.

அதிராம்பட்டினத்தில் பேச இயலாத - காது கேளாதோர் நலச்சங்க 9-வது ஆண்டு தொடக்க விழா (படங்கள்)

அதிராம்பட்டினம், மார்ச்.02
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினத்தில் வாழும் மாற்றுத்திறனாளிகள் பேச இயலாத - காது கேளாதோர் நலச் சங்க 9-வது ஆண்டு தொடக்க விழா  சங்க அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

விழாவிற்கு நலச்சங்கத் தலைவர் எஸ்.எம்.ஒய் ஹாஜா சரீப் தலைமை வகித்தார். துணைத்தலைவர் ஏ.சிராஜுதீன், பொதுச்செயலாளர் எஸ்.ஏ நூருல் அமீன், இணைச்செயலாளர் உமர் தம்பி, பொருளாளர் ஆர்.மன்சூர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

விழாவில், மாற்றுத்திறனாளிகள் பேச இயலாத - காது கேளாதோருக்கு இலவச பஸ் பாஸ் வழங்க வேண்டும், நலச்சங்க ஏழை எளிய உறுப்பினர்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்க அரசை வலியுறுத்துவது, விடுபட்ட நல அறக்கட்டளை உறுப்பினர்களுக்கு அரசின் மாதாந்திர உதவித்தொகை வழங்க அரசை கேட்டுக்கொள்வது,  தொழிற்கடன் வழங்க அரசு ஏற்பாடு செய்தல் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இந்த விழாவில் அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளைச் சேர்ந்த நலச் சங்க உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர். அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.
 
 

பட்டுக்கோட்டை அருகே கல்விச் சீர்வரிசை !

பட்டுக்கோட்டை மார்ச்.02-
பட்டுக்கோட்டையை அடுத்த கரம்பயம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் சமச்சீர் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

வட்டார வளமைய மேற்பார்வையாளர் பாக்கியராஜ் தலைமை வகித்தார். தலைமை ஆசிரியை லதா வரவேற்புரை ஆற்றினார். பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் ராஜ்குமார் முன்னிலை வகித்தார்.

பள்ளியின் முன்னாள் மாணவர்கள், மாணவர்களின் பெற்றோர், பெற்றோர் ஆசிரியர் கழக குடும்பத்தினர் பள்ளிக்கு 1 லட்சம் ரூபாய் மதிப்பில் மின்விசிறி, டேபிள், சேர்கள், மைக், ஆம்ப்ளிபயர், தலைவர்களின் படங்கள் உள்ளிட்ட பொருட்களை சீராக வழங்கினர். முடிவில் உதவி ஆசிரியை மீனாட்சி நன்றி கூறினார்.

Friday, March 1, 2019

தக்வா பள்ளிவாசல் டிரஸ்ட் புதிய தலைவராக ஹாஜி எம்.எஸ் ஷிஹாபுதீன் தேர்வு! (முழு விவரம்)

அதிராம்பட்டினம், மார்ச்.01
அதிராம்பட்டினம், நடுத்தெரு 'துலுக்க பள்ளிவாசல்' நிர்வாகப் பொறுப்பிற்கு புதிதாக 7 டிரஸ்டிகள் தமிழ்நாடு வக்பு வாரியத்தால் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

அதிராம்பட்டினம், நடுத்தெரு 'துலுக்க பள்ளிவாசல்' நிர்வாகப் பொறுப்பிற்கு புதிதாக 7 டிரஸ்டிகள் தேர்விற்கு, கடந்த செப்.28 ந் தேதி, தஞ்சாவூர் வக்ஃபு கண்காணிப்பாளர் அலுவலகத்தில்  நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ மஹல்லாவாசிகள் விண்ணப்பிப்பதற்கு 'பொதுஅறிவிப்பு' தக்வா பள்ளிவாசல், பெரிய ஜும்மா பள்ளிவாசல், வி.ஏ.ஓ அலுவலகம் ஆகியவற்றின் அறிவிப்பு பலகையில் தகவல் வெளியிடப்பட்டது.

இதையடுத்து, அதிராம்பட்டினம் தக்வா பள்ளிவாசல் மஹல்லாவைச் சேர்ந்த எம்.ஏ முகமது ஹனீபா, எஸ்.கே.எம் அகமது அன்சாரி, ஏ.அயூப்கான். அ.அப்துல் ரஹ்மான், எம்.அகமது அஸ்லம், எம்.இசட். அப்துல்  மாலிக், எஸ்.முகமது ஜமீல், ஏ. சாகுல் ஹமீது, எம்.எஸ் ஷிஹாபுதீன், எஸ்.ஜெ அப்துல் ஜலீல், எம்.சாகுல் ஹமீது, எம்.அகமது இப்ராஹீம், எம்.அபூபக்கர், எஸ்.அகமது ஹாஜா ஆகியோர் அடங்கிய 14 பேர் விண்ணப்ப மனுக்களை தாக்கல் செய்திருந்தனர்.

இந்நிலையில், புதிய டிரஸ்டிக்கான தேர்வு தமிழ்நாடு வக்ஃப் வாரிய சென்னை அலுவலகத்தில் கடந்த பிப்.19 ந் தேதி நடத்தப்பட்டது. இதில், எஸ். முகமது ஜமீல் (த/பெ. ஷேக் அப்துல் காதர்), ஏ.சாகுல் ஹமீது (த/பெ. அப்துல் வஹாப்), எம்.எஸ். ஷிஹாபுதீன் (த/பெ. ஷம்சுதீன் ஹாஜியார்), எம்.சாகுல் ஹமீது (த/பெ. முகைதீன்), எம்.அபுபக்கர் (த/பெ. முகமது யூசுப்), ஏ.அயூப்கான் (த/பெ. அமானுல்லா), ஏ.அகமது அஸ்லம் (த/பெ. முகமது புகாரி) ஆகியோர் டிரஸ்டியாக தேர்வு செய்யப்பட்டு, தமிழ்நாடு வக்ஃப் வாரிய முதன்மை செயல் அலுவலர் சே. முகமது அஸ்லம் முன்னிலையில் நியமண ஆணை பிறப்பிக்கப்பட்டது.

இந்நிலையில், தஞ்சாவூர் வக்ஃப் ஆய்வாளர் ஹைதர் அலி (பொ) முன்னிலையில், புதிய நிர்வாகிகளின் கூட்டம் தக்வா பள்ளிவாசல் அலுவலகத்தில் இன்று வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது. இதில்,  நிர்வாகக் கமிட்டித் தலைவராக ஹாஜி எம்.எஸ். ஷிஹாபுதீன் (த/பெ. ஷம்சுதீன் ஹாஜியார்), செயலாளராக எஸ். முகமது ஜமீல் (த/பெ. ஷேக் அப்துல் காதர்), பொருளாளராக எம்.சாகுல் ஹமீது (த/பெ. முகைதீன்) ஆகியோர் ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டனர். இவர்களது பதவிக்காலம் 3 ஆண்டுகள் ஆகும்.

இதையடுத்து, புதிதாக தேர்வு செய்யப்பட்ட நிர்வாகிகளுக்கு சம்சுல் இஸ்லாம் சங்கத் தலைவர் ஹாஜி முகமது அபூபக்கர், தக்வா பள்ளிவாசல் தலைமை இமாம் முகமது தமீம் ஆலிம், துணை இமாம் ஹாபீஸ் கலீல் ரஹ்மான் மற்றும் மஹல்லாவாசிகள் பலர் வாழ்த்து தெரிவித்தனர்.
 

அரசுப்பள்ளிகளுக்கு கல்விச் சீர்வரிசை வழங்கும் விழா (படங்கள்)

பேராவூரணி மார்ச்.01-
தஞ்சாவூர் மாவட்டத்தில் அரசுப் பள்ளிகளில் கல்விச் சீர்வரிசை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

பொன்-காடு
பேராவூரணியை அடுத்த பொன்னாங்கண்ணிக்காடு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் கல்வி சீர்வரிசை வழங்கும் விழா நடைபெற்றது. பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் சு.கணேசன் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தார். பள்ளி தலைமை ஆசிரியர் பா.நிர்மலா வரவேற்றார். கிராமக் கல்விக்குழு தலைவர் இந்திரா கணேசன், கல்வியாளர்கள்
ஆர்.பி.ராஜேந்திரன், நீலகண்டன், பாண்டியராஜன், அய்யாச்சாமி, முன்னாள் மாணவர் பிரதீஸ், ஆசிரியர் பயிற்றுனர் ரகுராம் ஊர் பொதுமக்கள், பெற்றோர்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். ஆசிரியர் சேகர் நன்றி கூறினார். கிராம பொதுமக்கள் சார்பில் ரூபாய் ஒரு லட்சம் மதிப்பிலான பொருட்கள் பள்ளிக்கு சீர்வரிசையாக வழங்கப்பட்டது.

பெரியதெற்குக்காடு 
பெரிய தெற்குக்காடு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் முருகேசன் தலைமை வகித்தார். முன்னாள் கிராம நிர்வாக அலுவலர் சிவலிங்கம், முத்துவேல், அன்பழகன், அம்பிகாபதி, பள்ளி மேலாண்மைக்குழு ஜெயா உள்ளிட்டோர் கலந்துகொண்டு 50 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான சீர்வரிசை பொருட்களை பள்ளிக்கு வழங்கினார்.

முன்னதாக பள்ளி தலைமை ஆசிரியை வீரம்மாள் வரவேற்றார். ஆசிரியர் பயிற்றுனர் இராம.தனலட்சுமி முன்னிலை வகித்தார். ஆசிரியர் செ.இராமநாதன் நன்றி கூறினார்.

நாட்டாணிக்கோட்டை
நாட்டாணிக்கோட்டை வடக்கு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் வீராசாமி தலைமை வகித்தார். பள்ளி தலைமை ஆசிரியர் லதாஸ்வரி வரவேற்றார். வீ.கே.நீலகண்டன், பள்ளி மேலாண்மை குழு தலைவர் முத்துலட்சுமி,
எம்.சுந்தர்ராஜன், மதியழகன், ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு ஐம்பதாயிரம் ரூபாய் மதிப்பிலான சீர்வரிசை பொருட்களை பள்ளிக்கு வழங்கினர். நிகழ்ச்சிக்கு ஆசிரியர் பயிற்றுநர் சித்ரா முன்னிலை வகித்தார். நிறைவாக ஆசிரியர் திருஞானம் நன்றி கூறினார்.

பேராவூரணி 
பேராவூரணி ஊராட்சி ஒன்றிய கிழக்கு தொடக்கப்பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு ஆசிரியர் பயிற்றுனர் சித்ரா தலைமை வகித்தார். தலைமை ஆசிரியர் இரா.மாலதி வரவேற்றார். ஆசிரியர்கள் சுபா, பாலசுந்தரி, சுமதி ஆகியோர் கலந்து கொண்டனர். ஆசிரியர் சுபாஷ் நன்றி கூறினார். பெற்றோர்கள் சார்பில் சீர்வரிசைப் பொருட்கள் வழங்கப்பட்டது.

கரிசவயல்
சேதுபாவாசத்திரம் ஒன்றியம் கரிசவயல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் கல்விச் சீர்வரிசை வழங்கும் விழா நடைபெற்றது. நிகழ்ச்சியில் வட்டார கல்வி அலுவலர்கள் ராமமூர்த்தி, சகுந்தலா, தலைமை ஆசிரியர் மல்லிகா, பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் வேலாயுதம், ஜமாஅத் தலைவர் அப்துல் சலாம், முன்னாள் ஒன்றியக்குழு உறுப்பினர் சேக்தாவுத், முன்னாள் ஊராட்சி மன்ற துணைத்தலைவர் இளங்கோவன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர் .

கொன்றைக்காடு
கொன்றைக்காடு அரசு உயர்நிலைப்பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில்
பெற்றோர் ஆசிரியர் கழகத்தலைவர் எஸ்.கே.இராமமூர்த்தி தலைமை வகித்தார். நீலகண்டன், கொன்றைக்காடு சுந்தரம், ரெங்கசாமி, கல்லூரணிக்காடு அரசு உயர்நிலைப்பள்ளியின் முன்னாள் தலைமையாசிரியர் இருதயசெல்வராஜ் மற்றும் கிராமத்தினர் கலந்து கொண்டனர். பள்ளித் தலைமை ஆசிரியர் கு.மகேஸ்வரி முன்னிலை வகித்தார். உதவித் தலைமையாசிரியர் ப.இராஜலெட்சுமி வரவேற்றார்.

விழாக்களில் பொதுமக்களால், பிரிண்டர், ஸ்கேனர், பீரோ, நாற்காலிகள், கடிகாரங்கள், கரும்பலகை, சில்வர் பாத்திரங்கள் மற்றும்  பல பொருட்கள் மக்களால் கொண்டு வரப்பட்டன.
 

+2 அரசு பொதுத்தேர்வு: தஞ்சை மாவட்டத்தில் 30,030 பேர் தேர்வு எழுதினர்!

தஞ்சாவூர் மாவட்டம், தஞ்சாவூர் அரசர் மேல்நிலைப் பள்ளியில் பன்னிரெண்டாம் வகுப்பு அரசு பொதுத் தேர்வு  நடைபெற்றதை  மாவட்ட  ஆட்சித்  தலைவர் ஆ. அண்ணாதுரை இன்று ( 01.03.2019 ) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

ஆய்வுக்கு பின்னர் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ. அண்ணாதுரை தெரிவித்ததாவது;
2019 ஆம் ஆண்டுக்கான பனிரெண்டாம் வகுப்பு அரசு பொதுத் தேர்வு 01.03.2019 தொடங்கி 19.03.2019 வரை நடைபெறுகிறது.  தஞ்சாவூர் மாவட்டத்தில் 105 தேர்வு மையங்களில் 13 ஆயிரத்து 130 மாணவர்களும், 16 ஆயிரத்து 426 மாணவியர்களும் என மொத்தம் 29 ஆயிரத்து 556 பள்ளி மாணவ , மாணவியர்களும், தனித் தேர்வர்களுக்கு 2 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு  474 தனித்தேர்வர்களும் ஆக கூடுதல் 30 ஆயிரத்து 030 மாணவ, மாணவியர்கள் தேர்வு எழுதுகின்றனர். 

இம்மாவட்டத்தில் 78 மாற்றுத் திறனாளி மாணவர்கள் தேர்வு எழுதுகின்றனர்.  இம்மாணவர்கள் தேர்வு எழுத வசதியாக தரை தளத்தில் தேர்வு அறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.   உடல் ஊனமுற்றோர், கண் பார்வையற்றோர், காது கேளாத வாய் பேச இயலாதார்,டிஸ்லெக்சியா மற்றும் மனவளர்ச்சி குன்றிய மாணவர்களுக்கு கூடுதல் நேரம் ஒதுக்கியும், சொல்வதை எழுதுவதற்கு ஆசிரியர்கள் நியமனம் செய்தும் ஆணை வழங்கப்பட்டுள்ளது.

தேர்வு மையங்களில் குடிநீர் வசதி, இருக்கை, மின்சாரம், காற்றோட்டம், வெளிச்சம் மற்றும் கழிப்பிட வசதிகளை சிறப்பான முறையில் அமைத்திட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.  தேர்வு மையங்கள் அமைந்துள்ள பகுதிகளில் தடையில்லா மின்சார வசதி ஏற்படுத்தியும், தேர்வு மைய வழித்தடங்களில் மாணவர்கள் சிரமமின்றி செல்வதற்கு வசதியாக கூடுதல் பேருந்துகளும் இயக்கப்பட்டு வருகிறது.

இம்மாவட்டத்தில் 7 இடங்களில் வினாத்தாள் கட்டுக்காப்பு மையங்கள் அமைக்கப்பட்டு, 17 வினாத்தாள் கட்டுக்காப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டு 24 மணி நேரமும் ஆயுதம் ஏந்திய காவலர்களால் பாதுகாக்கப்பட்டு வருகிறது.

இத்தேர்வு நடைபெறும் அனைத்து தேர்வு மையங்களில் முதன்மைக் கண்காணிப்பாளர்கள், துறை அலுவலர்கள், கூடுதல் துறை அலுவலர்கள், அறைக் கண்காணிப்பாளர்கள் மற்றும் அலுவலகப் பணியாளர்கள் என 2 ஆயிரத்து 668 பணியாளர்கள் நியமனம் செய்யப்பட்டு பணி மேற்கொண்டு வருகின்றனர்.

பள்ளிக் கல்வித் துறையில் அனுபவமிக்க ஆசிரியர்களை கொண்டு 224 பறக்கும்படை உறுப்பினர்கள் நியமனம் செய்யப்பட்டு, தேர்வு மையங்களில் மாணாக்கர்கள் ஒழுங்கீன செயல்களில் ஈடுபடுவதை தடுக்கவும், தேர்வுகள் சிறப்பான முறையில் நடைபெறுவதை கண்காணிக்கவும் உத்தரவிட்பட்டுள்ளது.

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களின் தலைமையில் கல்வித்துறை அலுவலர்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர், மாவட்ட வருவாய் அலுவலர், சார் ஆட்சியர், வருவாய் கோட்டாட்சியர், மாவட்ட ஆய்வு அலுவலர், ஊர்காவல் படைத்தலைவர் மற்றும் பிறத்துறை அலுவலர்களை கொண்டு மாவட்ட தேர்வுக் குழு அமைக்கப்பட்டு தேர்வு மையங்கள் திடீர் ஆய்வு செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. 

இம்மாவட்டத்தில் தேர்வு பணிகள் சிறப்பான முறையில் நடைபெறுவதை கண்காணிக்க தமிழக அரசால் பள்ளிக் கல்வித் துறை இணை இயக்குநர் (ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி இணை இயக்குநர் - II) கே. செல்வகுமார் அவர்களை மேற்பார்வை அலுவலராக நியமனம் செய்து தேர்வு பணிகள் கண்காணிக்கப்பட்டு வருகிறது. 

2018-2019 ஆம் கல்வியாண்டில் மேல்நிலை இரண்டாம் ஆண்டு தேர்வு எழுதும் மாணவ, மாணவியர்கள் அனைவரும் முழுBதர்ச்சி பெற வேண்டும் எனவும், அதிக மதிப்பெண்களை  பெற வேண்டும் எனவும் மாணவ செல்வங்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.  இவ்வாறு மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ. அண்ணாதுரை தெரிவித்தார்.

இந்த ஆய்வின் போது முதன்மை கல்வி அலுவலர் பெ. சாந்தா மற்றும் பள்ளிக் கல்வித் துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.