.

Pages

Friday, September 6, 2019

அதிரை அரசு மருத்துவமனையில் கர்ப்பிணி தாய்மார்களுக்கு இயற்கை உணவு வழங்கல்!

அதிராம்பட்டினம், செப்.06
தேசிய ஊட்டச்சத்து வார விழாவை முன்னிட்டு, அதிராம்பட்டினம் அரிமா சங்கம் சார்பில், கர்ப்பிணி தாய்மார்களுக்கு காய்கறிகள் உள்ளிட்ட  ஊட்டச்சத்து நிறைந்த இயற்கை உணவு வழங்கும் முகாம் அதிராம்பட்டினம் அரசு மருத்துவமனையில் இன்று வெள்ளிக்கிழமை காலை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு, அதிராம்பட்டினம் அரிமா சங்கத் தலைவர் எம். அப்துல் ஜலீல் தலைமை வகித்தார். செயலாளர் எம்.நிஜாமுதீன், பொருளாளர் எஸ்.எம் முகமது முகைதீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில், அதிராம்பட்டினம் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் டாக்டர். ஏ.அன்பழகன், மகப்பேறு மருத்துவர் டாக்டர் எச். இர்ஷத் நஸ்ரின், டாக்டர் பி.சீனிவாசன், டாக்டர் கலைவாணி, டாக்டர் சி.ஷெரீன் பேகம், மருத்துவ அலுவலர் பாரதி, அரிமா சங்க மாவட்டத் தலைவர் எம். நெய்னா முகமது ஆகியோர் கலந்துகொண்டு, ஊட்டச்சத்தின் அவசியம் குறித்தும், இயற்கை உணவுகளால் ஏற்படும் நன்மைகள் பற்றியும், கர்ப்பிணி தாய்மார்கள் எடுத்துக்கொள்ள வேண்டிய சத்தான உணவுகள் குறித்தும் பேசினர்.

நிகழ்ச்சியில், கர்ப்பிணி தாய்மார்கள் 20 பேருக்கு காய்கறிகள், முட்டை, ஆப்பிள் உள்ளிட்ட சத்து நிறைந்த இயற்கை உணவுகள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்ச்சியில், அதிராம்பட்டினம் அரசு மருத்துவமனை மருத்துவர்கள், செவிலியர்கள், அரிமா சங்க மாவட்டத் தலைவர் எம்.அகமது, அதிராம்பட்டினம் அரிமா சங்க முன்னாள் தலைவர் என். ஆறுமுகச்சாமி, இணைச் செயலாளர் எம். முகமது அபூபக்கர், சி.சார்லஸ், முல்லை ஆர்.மதி, குப்பாசா அகமது கபீர், எம்.கே.எம் அபூபக்கர் உள்ளிட்ட சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் பலர் கலந்துகொண்டனர்.





அதிராம்பட்டினம், மதுக்கூர், முத்துப்பேட்டை பகுதிகளில் நாளை (செப்.07) மின்தடை!

அதிராம்பட்டினம், செப்.06
அதிராம்பட்டினம், மதுக்கூர், முத்துப்பேட்டை பகுதிகளில் நாளை (செப்.07) சனிக்கிழமை மின்சார விநியோகம் இருக்காது.

மதுக்கூர் துணை மின் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளதால், இங்கிருந்து மின்சாரம் பெறும் அதிராம்பட்டினம், அத்திவெட்டி, பெரியக்கோட்டை, கன்னியாக்குறிச்சி, மூத்தாக்குறிச்சி, காடந்தங்குடி, துவரங்குறிச்சி, தாமரங்கோட்டை, மதுக்கூர் நகர், முத்துப்பேட்டை ஆகிய பகுதிகளில் நாளை செப்.07 ந் தேதி சனிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சார விநியோகம் இருக்காது என மதுக்கூர் மின் வாரிய உதவி செயற்பொறியாளர் ஆர். ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

கடைசி செய்தி: மின்தடை ரத்து செய்யப்பட்டுள்ளதாக மதுக்கூர் மின் வாரிய உதவி செயற்பொறியாளர் ஆர். ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

* Updated on 7:30 PM

Wednesday, September 4, 2019

இமாம் ஷாஃபி மெட்ரிக். பள்ளியில் 'HONESTY SHOP' தொடக்கம்!

அதிராம்பட்டினம், செப்.04
அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி மெட்ரிக். மேல்நிலைப்பள்ளி வளாகத்தில், 'HONESTY SHOP' என்ற பெயரில் மாணவர்களுக்கு தேவைப்படும் கல்வி உபகரணங்கள் அடங்கிய ஸ்டேசனரி பொருட்களின் விற்பனை அங்காடி இன்று புதன்கிழமை தொடங்கப்பட்டுள்ளது.

சிறப்பு விருந்தினராக இஜாபா பள்ளிவாசல் தலைமை இமாம் மவ்லவி. அப்துல் ஹாதி முப்தி கலந்துகொண்டு 'அமானிதம்' (நம்பகத்தன்மை) என்ற தலைப்பில் சிறப்புரை வழங்கி முதல் விற்பனையை தொடங்கி வைத்தார். அங்காடியில் வைக்கப்பட்டுள்ள பேனா, பென்சில், கலர் பென்சில், ரப்பர் (அழிப்பான்), பேப்பர், சார்ட் பேப்பர் உள்ளிட்ட ஒவ்வொரு பொருட்கள் மீதும் விற்பனை விலை எழுதப்பட்டுள்ளது. மாணவர்கள் தங்களுக்கு தேவைப்படும் பொருட்களை சுயமாக எடுத்துக்கொண்டு அதற்குரிய முழு கட்டணத்தையும் அருகில் உள்ள பணப்பெட்டியில் செலுத்தினர்.

இதுகுறித்து பள்ளி துணைத் தாளாளர் எம்.எஸ் முகமது ஆஜம் கூறியது;
'எங்கள் பள்ளியில் தொடங்கி இருக்கும் 'நேர்மை அங்காடி', மாணவர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. முதல் நாளில் மாணவர்கள் ஆர்வமாக தங்களுக்கு தேவைப்படும் பொருட்களை விற்பனையாளர்கள் இன்றி சுயமாக கட்டணம் செலுத்தி எடுத்துச்சென்றனர். இன்று விற்பனையான பொருட்களுக்குரிய கட்டணம் முழுவதும் திரும்ப பெறப்பட்டது. எங்களுக்கு எவ்வீத இழப்பீடும் ஏற்படவில்லை. எங்கள் பள்ளி மாணவர்களின் ஒழுக்கம், நேர்மை, நம்பகத்தன்மை போன்ற சிறந்த பண்புகளை வளர்க்க இந்த முயற்சி மேற்கொள்ளப்படுகிறது' என்றார்.

காதிர் முகைதீன் கல்லூரியில் ஊட்டச்சத்து விழிப்புணர்வு கண்காட்சி (படங்கள்)

அதிராம்பட்டினம், செப்.04
அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் கல்லூரி இளங்கலை ஹோம் சயின்ஸ் (மனையியல்) சார்பில், தேசிய ஊட்டச்சத்து வார விழா விழிப்புணர்வு கண்காட்சி புதன்கிழமை நடைபெற்றது.

விழாவிற்கு, கல்லூரி முதல்வர் ஏ. முகமது முகைதீன் தலைமை வகித்து, ஊட்டச்சத்து பற்றிய கண்காட்சியைத் திறந்து வைத்து ஊட்டச்சத்தின் அவசியம் குறித்து விளக்கிப் பேசினார். கல்லூரி துணை முதல்வர்கள் எம். முகமது முகைதீன், என்.ஏ முகமது பாருக் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

கல்லூரி மனையியல் பிரிவு முதலாம் ஆண்டு மாணவிகள் சினேகா, அரசி ஆகியோர் 'உணவு மற்றும் ஊட்டச்சத்து', 'அழிந்து வரும் பாரம்பரிய உணவு' ஆகிய தலைப்புகளில் பேசினர்.

கண்காட்சியில், ஊட்டச்சத்து உணவுகள், காய்கறி உள்ளிட்ட இயற்கை உணவுகளை நேரடியாக வைத்தும், ஊட்டச்சத்து உணவுகளால் ஏற்படும் நன்மைகள் பற்றியும், ஊட்டச்சத்து உணவுகள் வழங்கியும் மாணவ, மாணவிகளுக்கு விளக்கி கூறப்பபட்டது.

முன்னதாக, கல்லூரிப் பேராசிரியை எஸ்.ஆரிபா வரவேற்றுப் பேசினார். பேராசிரியைகள் என். சித்ரா, வி.கானப்பிரியா ஆகியோர் தொகுத்து வழங்கினர். முடிவில், பேராசிரியை ஏ. ஆர்த்தி நன்றி கூறினார். நிகழ்ச்சி ஏற்பாட்டினை பேராசிரியர் எஸ். ரவீந்தரன் செய்திருந்தார்.

விழாவில், அதிராம்பட்டினம், மதுக்கூர், ராஜாமடம், புதுக்கோட்டை உள்ளூர் ஆகிய பகுதிகளின் 7 பள்ளிகளைச் சேர்ந்த 400 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்துகொண்டு பயனடைந்தனர்.
 

Tuesday, September 3, 2019

அதிரை பைத்துல்மால் சேவை அமைப்பின் மாதாந்திரக் கூட்டம் (படங்கள்)

அதிராம்பட்டினம், செப்.03
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் பைத்துல்மால் சேவை அமைப்பின் ஆகஸ்ட் மாத மாதாந்திரக் கூட்டம், அவ்வமைப்பின் தலைவர் பேராசிரியர் எஸ்.பர்கத் அவர்களின் தலைமையில், அதன் அலுவலகத்தில் கடந்த (ஆக. 31) சனிக்கிழமை இரவு நடைபெற்றது. இக்கூட்டத்தில், அதிரை பைத்துல்மால் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் பலர் கலந்துகொண்டு ஆலோசனைகள் வழங்கினர்.
 

அதிராம்பட்டினத்தில் 2-வது நாளாக தொடரும் மழை!

அதிராம்பட்டினம், செப்.03
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில்
கடந்த சில நாட்களாக கடும் வெப்பம் நிலவி வந்த நிலையில், நேற்று திங்கட்கிழமை மாலை திடீரென இடியுடன் கூடிய மழை பெய்தது. இரவு வரை நீடித்தது. இந்நிலையில், 2-வது நாளாக இன்று செவ்வாய்க்கிழமை மாலை முதல் அவ்வப்போது விட்டு விட்டு மழை பெய்தது. பின்னர், சிறிது இடைவெளி விட்டு மீண்டும் இரவு முதல் தொடர் மழை பெய்து வருகிறது.

பகலில் கடும் புழுக்கம் நிலவி வருவதும், இரவில் குளிர்ந்த காற்றுடன் தொடர் மழை பெய்து வருவதும் தொடர்கிறது. இதனால், இப்பகுதியில் வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியது. 

Monday, September 2, 2019

மலேசியாவில் அதிரை சகோதரி ரைஹான் அம்மாள் (80) வஃபாத்!

அதிரை நியூஸ்: செப்.02
அதிராம்பட்டினம், தரகர் தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மு.கா காதர் முகைதீன் அவர்களின் மகளும், ஓ.எம் அப்துல் ஹையர் அவர்களின் மனைவியும், மர்ஹூம் மு.கா முகமது பாரூக் அவர்களின் சகோதரியும், மர்ஹூம் கே.எம். நிஜாம் முகைதீன் அவர்களின் மாமியாரும், ஜாஹிர் ஹுசைன், நைய்யூம் ஹுசைன், அன்வர் ஹுசைன் ஆகியோரின் தாயாருமாகிய ரைஹான் அம்மாள் (வயது 80) அவர்கள் இன்று மலேசியா கோலாலம்பூர் நகரில் வஃபாத்தாகி விட்டார்கள்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜுவூன்

அன்னாரின் ஜனாஸா இன்று (02-09-2019) மலேசியா கோலாலம்பூர் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.

Sunday, September 1, 2019

பிலால் நகரில் ADT சார்பில் நடைபெற்ற இஸ்லாமிய மார்க்க விளக்கக் கூட்டம்!

அதிராம்பட்டினம், செப்.01
அதிரை தாருத் தவ்ஹீத் அமைப்பின் சார்பில், அதிரை பிலால் நகரில் அமைந்துள்ள இஸ்லாமிய பயிற்சி மைய அரங்கில் ஆண்களுக்கான முதலாவது மார்க்க விளக்கக் கூட்டம் இனிதே நடந்தேறியது.

இந்த மார்க்க விளக்க கூட்டத்தில் சென்னையிலிருந்து வருகை தந்திருந்த மவ்லவி. ரஹ்மத்துல்லாஹ் ஃபிர்தவ்ஸி அவர்கள் கலந்து கொண்டு 'நெறியான வாழ்விற்கு வழி எது?' என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்கள்.

இளைஞர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்ட இந்நிகழ்வில் ஒவ்வொருவரும் இறையச்சத்துடன் இஸ்லாமியர்களாக, பிற மக்களுக்கு வாழ்வின் முன்னுதாரணமாக வாழ வேண்டிய அவசியம் குறித்தும், சமூக வலைத்தளங்களில் இளைஞர்களிடையே காணப்படும் அவசரப்போக்குகள் குறித்தும் அதனால் ஏற்படும் பின் விளைவுகள் குறித்தும் எச்சரிக்கப்பட்டன.

ஆண்களுக்கான இதுபோன்ற பயனுள்ள சிறப்பு மார்க்க விளக்க நிகழ்ச்சிகளை பிலால் நகர் மர்கஸில் மாதம் ஒருமுறை தொடர்ந்து நடத்திட அதிரை தாருத் தவ்ஹீத் அமைப்பின் சார்பில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதிரை அமீன்