.

Pages

Saturday, November 2, 2019

செடியன் குளத்துக்கு ஆற்று நீர் வருகை!

அதிராம்பட்டினம், நவ.02
அதிராம்பட்டினம் செடியன் குளத்துக்கு ஆற்று நீர் இன்று (நவ.02) சனிக்கிழமை மாலை வரத் தொடங்கியது.

மழைக்காலத்தில், செடியன் குளத்துக்கு வரும் நீரை முழுமையாக தேக்கினால், குளக்கரை உடைந்து விடும் சூழல் ஏற்பட்டதால், பருவமழை பெய்வதற்கு முன்னதாக, பெரிய ஜும்மா பள்ளிவாசல் நிர்வாகம் சார்பில், செடியன் குளத்தை தூர் வாரி கரையை பலப்படுத்தி இருந்தனர். மேலும், மழையின் போது குளத்தின் சுற்றுப்புறப் பகுதியில் இருந்து வெளியேறும் உபரி நீரை குளத்தில் நிரப்பும் வகையில் வடிகால் அமைக்கப்பட்டு இருந்தது.

இந்நிலையில், அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுப்புற பகுதியில், அவ்வப்போது பலத்த மழை பெய்தது. கடந்த ஒரு மாதத்தில் மட்டும், அதிராம்பட்டினத்தில் 377.60 மி.மீ (38 செ.மீ) மழை பதிவாகியது. இதனால், குளத்திற்கு மழை நீர் மளமளவென வரத் தொடங்கியது. இருந்தபோதிலும், குளம் முழுமையாக நிரம்பவில்லை. குளத்தில் மூன்றில் இரண்டு பங்கு மட்டுமே நீர் நிரம்பி இருந்தது.

இந்நிலையில், மேலத்தெரு தாஜுல் இஸ்லாம் சங்கத்தின் சார்பில்,  மகிழங்கோட்டை பெத்தையன் குளம் ~ செடியன் குளம் வால்வீச்சு வரையிலான ஆற்றுநீர் வழித்தட பாதையை ஜெசிபி இயந்திரத்தின் உதவியோடு தூர் வாரி சீரமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டன. இதையடுத்து, நீர்நிலை பாதுகாப்பு அறக்கட்டளை நிறுவனத் தலைவர் எஸ்.எச் அஸ்லம் மற்றும் தாஜுல் இஸ்லாம் இளைஞர் சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள், நீர்நிலை ஆர்வலர்கள் ஆகியோர் கல்லணை கால்வாயிலிருந்து வரும் ஆற்று நீரை ராஜாமடம் தாய் வாய்க்கால் மூலம், மகிழங்கோட்டை பெத்தையன் குளம் வழியாக கொண்டு வந்து குளத்தில் நிரப்பும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர்.

இப்பணிக்காக, அதிராம்பட்டினம் பேரூராட்சி துப்புரவுப் பணியாளர்கள் 2 பேர் உதவியுடன், 10 க்கும் மேற்பட்ட தாஜுல் இஸ்லாம் இளைஞர் சங்க களப்பணியாளர்கள் ஆற்று நீர் வழித்தடத்தில் ஏற்பட்டுள்ள அடைப்பு, உடைப்புகளை கண்காணித்து சீர் செய்தனர். வழித்தடத்தில் உள்ள முட்புதர்களை அகற்றினர். இதையடுத்து, செடியன் குளத்துக்கு ஆற்று நீர் இன்று (நவ.02) சனிக்கிழமை மாலை வரத் தொடங்கியது.
  
 
  

அதிராம்பட்டினத்தில் கடந்த ஒரு மாதத்தில் 377.60 மி.மீ (38 செ.மீ) மழை பதிவு!

அதிராம்பட்டினம், நவ.02
அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 38 செ.மீ மழை பெய்துள்ளது.

அதிராம்பட்டினத்தில் கடந்த
01-11-2019, 7.70 மி.மீ,
31-10-2019, 56.80 மி.மீ,
30-10-2019, 22.70 மி.மீ,
29-10-2019, 9.60 மி.மீ,
24-10-2019, 44.70 மி.மீ,
22-10-2019, 44.80 மி.மீ,
21-10-2019, 5.0 மி.மீ,
20-10-2019, 1.20 மி.மீ,
19-10-2019, 1.0 மி.மீ,
18-10-2019, 8.30 மி.மீ,
17-10-2019, 73.80 மி.மீ,
16-10-2019, 13.0 மி.மீ,
30-09-2019, 89.0 மி.மீ என மொத்தம் 377.60 மி.மீ (38 செ.மீ) மழை பதிவாகியது. 

அதிரை தாருத் தவ்ஹீத் சார்பில் நடந்த இஸ்லாமிய மார்க்க விளக்கக் கூட்டம்!

அதிராம்பட்டினம், நவ.02
அதிராம்பட்டினத்தில், அதிரை தாருத் தவ்ஹீத் சார்பில் நடந்த இஸ்லாமிய மார்க்க விளக்கக் கூட்டத்தில் மவ்லவி ஹுசைன் மன்பஈ அவர்கள் கலந்து கொண்டு இஸ்லாத்தின் பார்வையில் வெற்றியும், தோல்வியும் என்ற தலைப்பில் சொற்பொழிவு நிகழ்த்தினார்.

பிலால் நகர் இஸ்லாமிய பயிற்சி மைய அரங்கில் நடைபெற்ற இந்நிகழ்வில், இரவும், பகலும் மாறி மாறி வருவது போல் மனிதர்களின் வாழ்விலும் வெற்றியும், தோல்வியும் மாறி மாறி வருகின்றன, இவை உண்மையான வெற்றி தோல்விகள் அல்ல மாறாக மறுமையில் தோல்வியுற்று நரகிற்கு செல்லாமல் வெற்றிபெற்று சொர்க்கத்திற்கு செல்வதே உண்மையான வெற்றி என்றும், இத்தகைய மறுமை வெற்றிக்காக ஸஹாபாக்கள் எனப்படும் நபித்தோழர்கள் தங்களுடைய உயிர், உடமைகள், சொத்துக்கள் போன்றவைகளை அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை பெற்று வெற்றிபெற எவ்வாறெல்லாம் தியாகம் செய்தார்கள் என உருக்கமாக எடுத்துரைத்தார்.

அதிரை தாருத் தவ்ஹீத் ஏற்பாட்டின் கீழ் நடைபெற்ற இந்த ஆன்மீக நிகழ்வில் ஆண்களும், பெண்களும் பெருமளவில் கலந்து கொண்டனர். முன்னதாக, மவ்லவி ஹுசைன் மன்பஈ அவர்கள் மஸ்ஜித் இஹ்சானில் நடைபெற்ற வெள்ளிக்கிழமை ஜூம்ஆவில் நாமும், சமூகக் கடமையும் என்ற தலைப்பில் குத்பா பேருரை நிகழ்த்தினார்.

ஊழல் தடுப்பு விழிப்புணர்வு பேரணி!

தஞ்சாவூர் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு சார்பில் ஊழல் தடுப்பு விழிப்புணர்வு வாரத்தை முன்னிட்டு தஞ்சை ரயில் நிலையத்திலிருந்து பள்ளி கல்லூரி மாணவ மாணவியர்கள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை இன்று (2.11.2019) தொடங்கி வைத்தார்.

ஊழல் தடுப்பு விழிப்புணர்வு வாரத்தை முன்னிட்டு தஞ்சை ரயில் நிலையத்திலிருந்து பள்ளி கல்லூரி மாணவ மாணவியர்கள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணி தஞ்சாவூர் ரயிலடியில் நடைபெற்றது.  பேரணியை மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை கொடியசைத்து  தொடங்கி வைத்தார்.

மன்னர் சரபோஜி அரசு கல்லூரி, குந்தவை நாச்சியார் அரசு கல்லூரி, அரசர் மேல்நிலைப்பள்ளி, விரராகவ மேல்நிலைப்பள்ளி, தமிழ் பல்கலைக்கழகம், பான் செகொர்ஸ் பெண்கள் கல்லூரி, செஞ்சிலுவை சங்க சேர்ந்த 500க்கும் மேற்ப்பட்ட மாணவ மாணவியர்கள் பேரணியில் கலந்துகொண்டனர். பேரணியானது இரயிலடியில் தொடங்கி ஆற்று பாலம், பழைய பேருந்து நிலையம், மற்றும் முக்கிய வீதிகள் வழியாக அரண்மனை வளாகம் அரசர் மேல்நிலைப்பள்ளியில் நிறைவடைந்ததது. பின்னர் மாணவ மாணவியர்கள் ஊழல் தடுப்பு விழிப்புணர்வு உறுதிமொழியை ஏற்றுக் கொண்டனர்.

விழிப்புணர்வு பேரணியில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு; காவல் கண்காணிப்பாளர் மனோஹரன், மாவட்ட ஆட்சியர் அலுவலக ஆய்வுக்குழு அலுவலர் தவசெல்வம், துணை ஆய்வு அலுவலர் கஜேந்திரன், மாவட்ட பிற்படுத்தபட்டோர் நல அலுவலர் சங்கர் மற்றும் பலர்கலந்துகொண்டனர்.

மரண அறிவிப்பு ~ முகமது ரஃபி (வயது 40)

அதிரை நியூஸ்: நவ.02
மல்லிபட்டினம், புதுமனைத்தெருவைச் சேர்ந்த முகமது யாசின் அவர்களின் மகனும், (லக்கோஸ்டா) மொபைல் ஷாப் ரெஜீஸ்கான், புரோஸ்கான் ஆகியோரின் சகோதரருமாகிய முகமது ரஃபி (வயது 40) அவர்கள் இன்று வஃபாத்தாகி விட்டார்கள்.

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

அன்னாரின் ஜனாஸா இன்று (02-11-2019) காலை 11 மணியளவில் மல்லிபட்டினம் புதுமனைத்தெரு முகைதீன் ஜும்மா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.

Friday, November 1, 2019

திறந்த கிணறு, ஆழ்குழாய் கிணறு மூடி பராமரிப்பது தொடர்பாக கலந்தாய்வுக்கூட்டம்!

தஞ்சாவூர் மாவட்டம், தஞ்சாவூர் மாவட்ட ஆடசியர் அலுவலக கூட்டரங்கில் பயன்பாட்டில் இல்லாத திறந்த கிணறுகள் மற்றம் ஆழ்குழாய் கிணறுகளை பொதுமக்கள் மற்றும் கால்நடைகளுக்கு பாதிப்பு இல்லாதவாறு மூடி பராமரிப்பது தொடர்பாக அனைத்து துறை அலுவலர்களுடன் கலந்தாய்வு கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.ஆண்ணாதுரை தலைமையில் இன்று (01.11.2019) நடைபெற்றது.

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.ஆண்ணாதுரை தஞ்சாவூர் மாவட்டத்தில் பயன்பாட்டில் இல்லாத திறந்த கிணறுகள் மற்றம் ஆழ்குழாய் கிணறுகளை தொடர்பாக அனைத்துறை அலுவலர்களுடன் கல்தாய்வு கூட்டத்தில் தெரிவித்தாவது:

அனுமதி பெற்ற ஒவ்வொருவரும் மற்றும் பயன்பாட்டில் உள்ள அல்லது பயன்பாட்டில் இல்லாத கிணற்றின் உரிமையாளர் கிணற்றை தோண்டும்போது ஆழப்படுத்தும்போது அல்லது புனரமைக்கும்போது பணிகளை மேற்கொள்ளும் நபர் துணை விதி 2 ல் வரையறுக்கப்பட்டுள்ள பாதுகாப்பு முன்னேற்பாடுகளை பின்பற்றுகின்றாரா என்பதை உறுதிபடுத்திக்கொள்ள வேண்டும்.

மேற்படி பணியை மேற்கொள்கின்ற நபர் இவ்விதிகளின்படி முறையான பதிவுச்சான்று வழங்கப்பட்டவரா என சரி பார்க்கவேண்டும். பணி இடைவேளையின்போதும். பணி நிறுத்தப்பட்ட பின்னரும் அந்தக்கிணறு சாpயான முறையில் மு்டப்பட்டுள்ளதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும், கைவிடப்பட்ட கிணறுகள். களிமண், மணல், சிறுகற்கள் மற்றும் உரிய பிற பொருட்களைக்கொண்டு தரைமட்ட அளவிற்கு நிரப்பப்படவேண்டும்.

கிணறுகளை தோண்டும், ஆழப்படுத்தும் மற்றும் புனரமைக்கும் பணிகளை மேற்கொள்ளும் தொழிலை மேற்கொள்ளும் ஒவ்வொரு நபரும்  பணிகளை ஆரம்பிக்கும் முன்  கிணற்றின் உரிமையாளர் படிவம் “ஆ”வில் குறிப்பிடப்பட்டுள்ளபடி பணிகளை செய்வதற்கான அனுமதி பெற்றுள்ளாரா என்பதை உறுதிப்படுத்திக்கொள்ளவேண்டும்.

கிணற்றின் வகை. ஆழம் மற்றும் குறுக்களவு, பணி மேற்கொள்பவர் மற்றும் கிணற்றின் உரிமையாளர் பெயர், முகவரி மற்றும் தொடர்பு விவரங்களையும் பணி நடக்கும் இடத்தில் கவனத்தை கவரும் வகையில் அறிவிப்பு பலகை மூலம் தெரிவிக்கப்படவேண்டும். கிணறு தொடர்பான பணி மேற்கொள்ளும் இடத்தைச் சுற்றிலும் முள்கம்பிவேலி அல்லது தகுந்த தடுப்பு அமைக்கப்படவேண்டும். 0.5 x 0.5 x 0.6 மீட்டர் அளவிலான சிமிட்டி அல்லது சிமிட்டி கற்காரையிலான தளம் நிலமட்டத்திலிருந்து 0.3 மீட்டர் மேற்புறமும், 0.3 மீட்டர் நிலத்திற்கு கீழ்புறமும் உள்ளவாறு கிணற்றை சுற்றிலும் கட்டப்படவேண்டும்.

பணி இடைவேளையின்போது துளையிடப்பட்ட குழி அல்லது கிணறு சரியான முறையில் மூடப்பட்டிருத்தல் வேண்டும். பணி முடிவுற்ற பின் கிணற்றைச் சுற்றி உள்ள சகதி குழிகளும், கால்வாய்களும் நிரப்பி மூடப்படவேண்டும். முன்பிருந்த நிலைக்கு  தரைமட்ட நிலையை கொண்டு வரவேண்டும். கிணற்றின் மேற்புறத்தை எகு தகடுகளாலும், ஒன்றோடு ஒன்று இணைத்து பற்ற வைக்கப்பட்ட மூடியைக்கொண்டோ அல்லது இரும்பு குழாயின் மேற்புறத்தை உறுதியான மு்டியைக்கொண்டு மு்டி திருகு மரையாணிகளைக் கொண்டு குழாயுடன் இணைத்து மூடவேண்டும்.

செயல் அலுவலர் எந்த ஒரு கிணற்றின் பாதுகாப்பு முன்னேற்பாடுகளிலும். ஏதேனும் குறைபாடு இருப்பதாக கருதும்பட்சத்தில் எழுத்து மு்லமான அறிவிப்பு மூலம் கிணற்றின் உரிமையாளருக்கோ அல்லது பணி மேற்கொள்ளும் நபருக்கோ இதர பாதுகாப்பு முன்னேற்பாடுகளை சரியான முறையில் செயல்படுத்த அறிவுறுத்துவார். அவ்வறிவுரைகள் முழுமையாக பின்பற்றப்படவேண்டும். இவ்வாறு மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.ஆண்ணாதுரை தெரிவித்தார்.

கலந்தாய்வு கூட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் பழனி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) முத்துமீனாட்சி, தஞ்சாவூர் வருவாய் கோட்ட அலுவலர் சுரேஷ் மற்றும் தொர்புடைய துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

அதிரை நூவண்ணா திமுகவில் இணைந்தார்!

அதிராம்பட்டினம், நவ.01
அதிராம்பட்டினம், மேலத்தெருவைச் சேர்ந்தவர் நூவண்ணா' என்கிற நூர் முகமது. இவரது தலைமையில், அப்துல் பத்தாஹ், வி.கே.எம் சேக்காதி, ஜபருல்லா, அஸ்லம் ஆகியோர் திமுக அதிராம்பட்டினம் பேரூர் செயலாளர் இராம. குணசேகரன், முன்னாள் ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் டி.சபீர், மாவட்ட பிரதிநிதி மீராசா பகுருதின் ஆகியோர் முன்னிலையில், இன்று வெள்ளிக்கிழமை திமுகவில் இணைந்தனர்.

இந்நிகழ்ச்சியில், திமுக மாவட்ட கலை, இலக்கியப் பேரவை அமைப்பாளர் பழஞ்சூர் கே.செல்வம், ஒன்றிய பிரதிநிதி முல்லை மதி, இராஜாமடம் இளங்கோ உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
 
 
 
 
 

மரண அறிவிப்பு ~ ஹாஜிமா ஜெமிலா அம்மாள் (வயது 71)

அதிரை நியூஸ்: நவ.01
அதிராம்பட்டினம், புதுமனைத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் எஸ்.எம்.ஓ முகமது உமர் அவர்களின் மகளும், மர்ஹூம் ஏ.வி.எம் முகைதீன் அப்துல் காதர் அவர்களின் மனைவியும், மர்ஹூம் கண்ணாடி ஜமாலுதீன், மர்ஹூம் அப்துல் காதர், அராமேக்ஸ் தாஜுதீன் ஆகியோரின் சகோதரியும், ஆஷிக் அகமது, நிஜாஸ், அஸ்லம் ஆகியோரின் தாயாரும், சோனி அபுல் ஹசன் அவர்களின் மாமியாருமாகிய ஹாஜிமா ஜெமிலா அம்மாள் (வயது 71) அவர்கள் இன்று அதிகாலை சி.எம்.பி லேன் இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

அன்னாரின் ஜனாஸா இன்று (01-11-2019) மாலை தக்வா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.