.

Pages

Friday, March 28, 2014

அதிரையில் தெருத்தெருவா ஓட்டு சேகரித்த அதிமுக வேட்பாளர் !

இன்று மாலை அதிமுக வேட்பாளர் திரு. கு.பரசுராமன் தனக்கு ஆதரவு அளிக்க வேண்டி அதிரையின் முக்கிய பகுதிகளுக்கு அதிமுகவினருடன் சென்று ஒட்டு சேகரித்தார்.

அதிமுக கட்சியின் நகர நிர்வாகிகள் அதிரையின் அனைத்து தெருக்களுக்கும் ஒட்டு சேகரிக்க அழைத்து சென்றனர். இதில் அதிமுகவினர் இருசக்கர வாகனங்களில் கட்சியின் கொடிகளை கட்டிக்கொண்டு வேட்பாளரை பின்தொடர்ந்து சென்றனர்.

பெட்டி வந்துருச்சாம்ல !?

பெட்டி : குறிப்பிட்ட பொருட்களை பாதுகாப்பதற்காக நாம் பெட்டிகளில் அடைத்து பாதுகாப்பது வழக்கமாக கொண்டிருந்தாலும், சூட்கேஸ் என ஆங்கிலத்தில் அழைக்கும் இவற்றை பலவகை பெயர்களில் நாம் அழைத்து மகிழ்வதுண்டு. இதில் பணத்தை பாதுகாக்கும் பெட்டிகளுக்கு சற்று மவுசு அதிகமாகவே காணப்படும். அதுவும் தேர்தல் நடைபெறும் காலங்களில் பயன்படும் பெட்டிகளுக்கு சொல்லவே வேண்டியதில்லை.

பாராளுமன்ற தேர்தலாகட்டும், சட்டமன்ற தேர்தலாகட்டும் அல்லது உள்ளாட்சி தேர்தலாகட்டும் இதில் ஓட்டு போடுவதற்காக வாக்காளர் சாத(ப)ணத்தை பெட்டிகளில் வைத்துதான் பாதுகாப்பாக அந்தந்த வாக்கு சாவடிகளுக்கு அனுப்பி வைப்பார்கள். பல்வேறு கட்டங்களாக பெட்டிகளை அனுப்பி விநியோகித்து வந்தாலும் உச்சகட்டமாக தேர்தல் நடைபெறும் முந்திய நாள் இரவில் ஆரவாரமில்லாமல் இவற்றை திறந்து பார்ப்பது கொண்டாட்டமாகத்தான் இருக்கும்.

சரி விசயத்துக்கு வருவோம்...

இப்படி தேர்தலில் பங்குபெரும் ஒவ்வொருவருக்கும் ஏதாவது ஒருவகையில் பயனைத்தரும் பெட்டியின் ( சூட்கேஸ் ) பயோடேட்டாவை சற்று நகைச்சுவையாக காண்போம்.

பெயர் : பெட்டி ( சூட்கேஸ் )
நிறம் : கருப்பு
அடையாளம் : இரவு நேரங்களில்
வயது : விநியோகிக்கும் வரை
நண்பர்கள் : கூட்டணி கட்சிகள், சாதி சமுதாய அமைப்புகள்
எதிரிகள் : தேர்தல் அலுவலர்கள், பறக்கும் படைகள்
பொறுப்பு : ஓட்டுகளை பெற நினைப்பது
எரிச்சலடைய வைப்பது : எனக்காக கோஷ்டிகள் மோதிக்கொள்வது
நிகழ்த்திய சாதனை : பதவிகளை பெற்று தருவது
கேட்க நினைப்பது : பெட்டிக்கு மயங்காதவர்கள் யாரேனும் உண்டோ !?

அபூ இஸ்ரா

அதிரையரின் மனோரா பாலிடெக்னிக் கல்லூரியில் ஆண்டு விழா நிகழ்ச்சி !

அதிரையர் நிறுவனர்களாக செயல்படும் மனோரா பாலிடெக்னிக் கல்லூரியின் ஆண்டு விழா கல்லூரி வளாகத்தில் நடந்தது. இதில் சிறப்பு அழைப்பாளர்களாக அதிரை பேரூராட்சி தலைவர் அஸ்லம் மற்றும் அதிரையர்கள் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்ச்சிக்கு கல்லூரித் தலைவர் முகம்மது முகைதீன் தலைமை வகித்தார். செயலாளர் ஜெகபர்அலி, துணை செயலாளர் நஜ்முதீன், பொருளாளர் சாகுல்அமீது ஆகியோர் முன்னிலை வகித்தனர். துணைத் தலைவர் சுப்பிரமணியன் வரவேற்றார். முதல்வர் சரவணன் ஆண்டறிக்கை வாசித்தார். கல் லூரித் தாளாளர் நாடி முத்து கல்லூரியின் வளர்ச்சி பற்றியும், மாணவர்களுக்கு அறிவுரைகள் குறித்து பேசினார். விழாவில் வல்லம் பெரியார் மணியம்மை பல்கலைக் கழக துணைவேந்தர் பேராசிரியர் நல்ராமச்சந்திரன் பேசுகையில்,.மாணவர்களாகிய நீங்கள் படித்து விட்டு வேலை தேடி அலை யாமல் பலருக்கு வேலை வழங்கக் கூடிய தொழில் முனைவராக தங்கள் திறனை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்றார். திருச்சி சிதம்பரம் பிள்ளை மகளிர் கல்லூரி முதல்வர் சேகர் பேசினார். விழாவில் பள்ளத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளி பத்தாம் வகுப்பு மற்றும் பனிரெண்டாம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு சிறப்புப் பரிசுகள் கல்லூரி சார்பில் வழங்கப்பட்டது. தொடர்ந்து கடந்த பருவத் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கும், அதிக தேர்ச்சி சதவிகிதம் வழங்கிய ஆசிரியர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது. பண்ணவயல் ஊராட்சித் தலைவர் ராஜாதம்பி, கல்லூரி இயக்குநர்கள் சத்தியாசுப்பிரமணியன், அசாருதீன், முகம்மதுபுகாரி, பஷீர்அகம்மது, கார்காவயல் ஊராட்சித் தலைவர் வெங்கடாசலம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மின்னணுவி யல் துறைத் தலைவர் அட்சயகுமார் நன்றி கூறினார்.




Thursday, March 27, 2014

எஸ்.டி.பி.ஐ கட்சி போட்டியிடாத 37 தொகுதிகளில் தி.மு.க.கூட்டணிக்கு ஆதரவு!

எஸ்.டி.பி.ஐ  கட்சி போட்டியிடாத 37 தொகுதிகளில் தி.மு.க.கூட்டணிக்கு ஆதரவு தருவது என கட்சியின் நிர்வாகக்குழுவில் முடிவு.

இதுகுறித்து இன்று வெளியிடப்பட்டுள்ள பத்திரிகை செய்தியில் கூறியிருப்பதாவது :
எஸ்.டி.பி.ஐ  கட்சியின் நிர்வாகக்குழு கூட்டம் 26.03.2014  அன்று மாநில தலைமை அலுவலகத்தில் கட்சியின் மாநில தலைவர் கே.கே.எஸ்.எம்.தெஹ்லான் பாகவி தலைமையில் நடைபெற்றது.  அதில் கீழ்க்கண்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

வரும் நாடாளுமன்ற தேர்தலில் இந்தியா முழுவதும் 40 தொகுதிகளில் எஸ்.டி.பி.ஐ கட்சி போட்டியிடுகிறது.

கட்சியின்  மாநில பொதுக்குழு முடிவின்படி தமிழகத்தில் வட சென்னை, திருநெல்வேலி, இராமநாதபுரம் ஆகியதொகுதிகளில்  எஸ்.டி.பி.ஐ கட்சி தனித்து போட்டியிடுகிறது. நாட்டில் நிலவும் மதவாதம், ஊழல், மோசமானஅரசியல் கலாச்சாரம்,  ஒடுக்கப்பட்ட சமூகங்கள் தொடர்ந்து  புறக்கணிக்கப்படும் நிலை, தவறான பொருளாதாரகொள்கை போன்றவற்றிற்கெதிராக போராட்ட அரசியல் இயக்கமாக  எஸ்.டி.பி.ஐ கட்சி  தொடர்ந்து போராடிவருகிறது. வளர்ச்சியும் பெற்று வருகிறது.

மாற்று அரசியல் சக்தியாக வளர்ந்து வரும் எஸ்.டி.பி.ஐ வளர்ச்சி பெறுவதும், வெற்றி பெறுவதும் காலத்தின் தேவையாகும். எனவே  எஸ்.டி.பி.ஐ கட்சி போட்டியிடும் மூன்று தொகுதிகளிலும் எஸ்.டி.பி.ஐ கட்சியின் வேட்ப்பாளர்களுக்கு வாக்களித்து வெற்றி பெற செய்யுமாறு தமிழக வாக்காளர்களை கட்சியின் நிர்வாக குழு கேட்டுக்கொள்கிறது.

எஸ்.டி.பி.ஐ கட்சி போட்டியிடாத தமிழகம் மற்றும் புதுவையில்  37 தொகுதிகளிலும் மதவாத பா.ஜ.க கூட்டணிக்குஎதிராக மதசார்ப்பற்ற வாக்குகளை ஒருங்கிணைக்கும் வகையில் தி.மு.க கூட்டணியை ஆதரிப்பது என்று நிர்வாககுழு முடிவு செய்கிறது.

மதவாதம் இன்று நாடு சந்திக்கும் பேரபாயம் ஆகும். மதவாதத்தின் அடையாளமாக திகழும் நரேந்திரமோடி தலைமையிலான மதவாத கூட்டணி படுதோல்வியடைய வேண்டும் என்பது காலத்தின் கட்டாயம். எனவே மதவாதத்திற்கு  எதிராக  வலுவான அணியாக களம் காணும் தி.மு.க கூட்டணிக்கு எஸ்.டி.பி.ஐ கட்சி தான் போட்டியிடாத தொகுதிகளில் ஆதரவளிக்கிறது. இந்நாட்டின் மதசார்பின்மையின் மீது நம்பிக்கையுள்ள அனைவரும் எஸ்.டி.பி.ஐ  போட்டியிடும் தொகுதிகளில் எஸ்.டி.பி.ஐ கட்சிக்கும், இதர  37 தொகுதிகளில் தி.மு.க கூட்டணிக்கும் வாக்களித்து வெற்றி பெற செய்ய வேண்டுமென எஸ்.டி.பி.ஐ கட்சி வேண்டி கேட்டுக்கொள்கிறது.

தகவல் : Z. முஹம்மது இல்யாஸ் - [ தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் ]

அதிரையில் மழைத்தேடி தொழுகை ! இதில் பங்கேற்க ஜமாத்துல் உலமா சபை அழைப்பு !

அதிரை ஜமாத்துல் உலமா சபை சார்பில் வறண்டு காணப்படும் நமதூருக்கு மழை வேண்டி எதிர்வரும் [ 03-04-2014 ] அன்று வியாழக்கிழமை காலை 8 மணியளவில் நமதூர் பெரிய ஜும்மா பள்ளியில் சிறப்பு தொழுகை நடத்தப்பட உள்ளது. இதற்கான அறிவிப்பு நாளை நடைபெற உள்ள ஜும்மா தொழுகையின் போது அனைத்து பள்ளிகளிலும் அறிவிப்பு செய்யப்பட உள்ளது. தொழுகையில் அனைவரும் கலந்துகொள்ள அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

நடுத்தெரு EP மாடல் பள்ளியில் இலவச கண் பரிசோதனை முகாம் !

நடுத்தெரு EP மாடல் பள்ளி மற்றும் தஞ்சை வாசன் கண் மருத்துவமனை ஆகியோர் இணைந்து நடத்திய மாபெரும் முழுமையான இலவச கண் பரிசோதனை முகாம் பள்ளி வளாகத்தில் இன்று காலை 10 மணிக்கு துவங்கியது.

இதில் தஞ்சையிலிருந்து வருகை தந்த வாசன் கண் மருத்துவமனை குழுவினர் பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு கண் பரிசோதனையை மேற்கொண்டனர்.

செக்கடி மேட்டில் பரபரப்பான அரசியல் திண்ணை பேச்சு !


அதிரை செக்கடி மேட்டின் பிரதான பகுதியில் தினமும் காலை நேரங்களில் நடைபெறும் அரசியல் திண்ணை பேச்சால் இந்தபகுதி பரபரப்பாக காணப்படுகிறது. இதில் முக்கிய பிரதான கட்சிகளின் ஆதரவாளர்கள் ஒன்றுகூடி தாங்கள் அங்கம் வகிக்கும் கட்சிகளுக்கு வரிந்துகட்டிகொண்டு பேசிவருகின்றனர். இதில் ஒருவருக்கொருவர் சளைத்தவர்கள் அல்ல என்பதுபோல் இவர்களின் பேச்சு நீளுகிறது.

இவர்களின் பேச்சை அந்தவழியே செல்வோர் வியப்புடன் பார்வையிட்டு செல்கின்றனர். இந்த பேச்சு தேர்தல் முடிவுகள் அறிவிக்கும் வரை தொடரும் என தெரிகிறது.


Wednesday, March 26, 2014

வாகன விபத்தில் மதுக்கூரை சேர்ந்த பெண் பரிதாப பலி ! 4 பேர் படுகாயம் !


மதுக்கூரை சேர்ந்தவர் ஜாகீர் [ வயது 55 ] இவரும் இவரது மனைவி ஷைலா (50) மற்றும் இவர்களது உறவினர்கள் முகமது யாகூப் (64), ஜெகதார் நாச்சியார் (55) ஆகியோர் ஒரு காரில் புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறும் உறவினரை பார்க்க நேற்று இரவு புதுவைக்கு புறப்பட்டு வந்தனர். காரை டிரைவர் அசாருதீன் (21) என்பவர் ஓட்டி வந்தார்.

இன்று காலை புவனகிரி அருகே தீர்த்தாம்பாளையம் வெள்ளாற்று பாலத்தில் வந்தபோது முன்னால் சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதாமல் இருக்க காரை டிரைவர் வலதுபுறமாக திருப்பினார். அப்போது கார் கட்டுப்பாட்டை இழந்து புதுவையில் இருந்து சிதம்பரம் நோக்கி சென்ற புதுவை அரசு பஸ் மீது படுவேகமாக மோதியது.

இதில் கார் அப்பளம் போல் நொறுங்கியது. காரில் பயணம் செய்த ஷைலா உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே இறந்து போனார். மேலும் ஜாகீர், முகமது யாகூப், ஜெகதார் நாச்சியார் மற்றும் கார் டிரைவர் அசாருதீன் ஆகிய 4 பேரும் படுகாயம் அடைந்தனர். அவர்களை அவ்வழியாக சென்றவர்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிதம்பரம் ராஜாமுத்தையா மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த விபத்து குறித்து பரங்கிப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.