.

Pages

Saturday, January 30, 2016

மரண அறிவிப்பு [ ஆசியாமரியம் அவர்கள்]

கீழத்தெருவை சேர்ந்த மர்ஹும் லெப்பை சாஹிப் அவர்களின் மகளும் மர்ஹும்  யாகூப் லெப்பை சாஹிப் அவர்களின் மருமகளும், மர்ஹூம் உமர்தம்பி லெப்பை அவர்களின் மனைவியும்,காய்கறி கடை ஜமீல், சேக் அப்துல் காதர், அலி அக்பர் ஆகியோரின் சகோதரியும், மர்ஹூம் ஹபீப், அபுதாகிர் ஆலிம், அபுல் ஹசன் ஆலிம் ஆகியோரின் மாமியாரும், ரஹ்மத்துல்லாஹ் அவர்களின் தாயாருமாகிய ஆசியா மரியம் அவர்கள் நேற்று இரவு வஃபாத்தாகி விட்டார்கள்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

அன்னாரின் ஜனாஸா இன்று காலை 10.30 மணிக்கு பெரிய ஜும்மா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.

Friday, January 29, 2016

அதிரை இளைஞரின் வங்கி கணக்கிலிருந்து நூதன முறையில் பண மோசடி !

அதிராம்பட்டினம், ஜன 29,
தஞ்சை மாவட்டம், அதிராம்பட்டினம் இளைஞரின் வங்கிக் கணக்கிலிருந்து நூதன முறையில் ரூ. 5 ஆயிரம் மோசடி செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் மிலாரிக்காடு பகுதியை சேர்ந்தவர் வடிவேல். இவரது மகன் முருகையன். தனியார் பள்ளியில் வாகன ஓட்டுனராக பணியாற்றி வருகிறார். இப்பகுதியில் இயங்கும் அரசுடமையாக்கப்பட்ட மத்திய வங்கி கிளையில் சேமிப்பு கணக்கு வைத்துள்ளார். இவரது வங்கி கணக்கிலிருந்து நூதன முறையில் ரூ. 5 ஆயிரம் மோசடி செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து முருகையன் நம்மிடம் கூறுகையில்...
கடந்த 26 ந்தேதி சனிக்கிழமை மர்ம நபர் ஒருவர் செல்போனில் தொடர்பு கொண்டு, நான் கணக்கு வைத்திருக்கும் வங்கியின் தலைமையகத்தின் மேலாளர் பேசுவதாக கூறினார். அப்போது எனது ஏடிஎம் அட்டை முடக்கப்பட்டுள்ளது என்றும், இவற்றை தொடர்ந்து பயன்படுத்த முடியாது. உங்களுக்கு புதிய கார்டு வழங்குகிறோம். புதிய ஏடிஎம் அட்டையின் பின் நம்பர் 2035. இந்த நம்பரை மிகவும் பத்திரமாக பாதுகாத்துகொள்ளவும், யாரிடமும் இந்த நம்பரைக் கூற வேண்டாம் எனக் கூறினார். பின்னர் எனது ஏடிஎம் அட்டையின் பின் நம்பரை கேட்டார். இதனை உண்மை என நம்பிய நான் ஏடிஎம் அட்டையின் எண்ணைத் தெரிவித்தேன். சற்று நேரத்தில் எனது செல்போனுக்கு அடுத்தடுத்து குறுஞ்செய்தி வந்தது. இதில் முதலில் ரூ 50 எடுக்கப்பட்டது. அடுத்து ரூ 50, பின்னர் ரூ 400, இறுதியாக ரூ 4500  என எனது வங்கிக் கணக்கிலிருந்து மொத்தம் ரூ. 5 ஆயிரம் எடுக்கப்பட்டுள்ள  தகவல் வந்தது. அதிர்ச்சியடைந்த நான் நேராக சம்பந்தப்பட்ட வங்கிக் கிளைக்குச் சென்று விவரம் கேட்டதற்கு, அதுபோன்று வங்கியில் இருந்து யாரும் தொலைபேசியில் தொடர்பு கொள்ளவில்லை என விளக்கம் அளித்தனர். மேலும் இது போன்ற அழைப்புகளைத் தவிர்த்துக்கொள்ள அறிவுறுத்தினர்' என்றார்.

இதுகுறித்து சமூக ஆர்வலர் ஹாஜி முஹம்மது பாருக் அவர்கள் நம்மிடம் கூறுகையில்...
'இதுபோன்ற நூதன முறையில் பண மோசடி செய்யும் சம்பவம் அவ்வப்போது நடந்து வருகிறது. அதிரை சுற்று வட்டார பொதுமக்கள் அறிமுகமில்லாத நபர்களிடமிருந்து வரும் இதுபோன்ற மோசடி அழைப்புகளை தவிர்த்துக்கொள்ளவும். தொடர்ந்து அழைப்பு வரும் பட்சத்தில் அருகில் உள்ள காவல்துறையின் உதவியை நாடலாம். செல்போனில் தொடர்பு கொள்ளும் அறிமுக மில்லாத நபர்களிடம் நம்மை பற்றிய விவரங்கள் அல்லது வங்கி கணக்கு குறித்த தகவல்கள் தெரிவிக்க வேண்டாம். இவை ஆபத்தை விளைவிக்கும்' என்றார்.

மரண அறிவிப்பு [ சுபைதா அம்மாள் அவர்கள் ]

கடற்கரைத் தெருவை சேர்ந்த மர்ஹும் சேக் நூர்தீன் அவர்களின் மகளும் மர்ஹும் அஹமது ஜெக்கரியா அவர்களின் மனைவியும், ஹாஜா ஷரிப் அவர்களின் பெரிய தாயாருமாகிய சூரியத்து வீட்டை சேர்ந்த சுபைதா அம்மாள் அவர்கள் நேற்று மதியம் வஃபாத்தாகி விட்டார்கள்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

அன்னாரின் ஜனாஸா இன்று காலை 9 மணிக்கு கடற்கரைத் தெரு ஜும்மா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.

முத்துப்பேட்டையில் ரயில்வே துறையை கண்டித்து பிப்ரவரி-2 ந்தேதி அனைத்துக்கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம்!

முத்துப்பேட்டை ரயில்வே நிலையம் பழமை வாய்ந்ததாகும். வெள்ளைக்கார ஆட்சியில் உருவாக்கப்பட்ட இந்த ரயில்வே நிலையம் மூலம் இப்பகுதியில் உள்ள தர்கா மற்றும் வழிப்பாட்டு தளங்கள், சுற்றுலா தளங்களால் ஒரு காலத்தில் ரயில்வே துறைக்கு அதிக லாபத்தை பெற்று தந்த ஒரு பகுதியாகும். இந்த நிலையில் 4 வருடங்களுக்கு முன்பு அகல ரயில் பாதை பணிக்காக இப்பகுதிக்கு வந்த ரயில்கள் நிறுத்தப்பட்டது. பணிகள் தற்பொழுது துவங்கி நடைபெற்று வரும் நிலையில் அதனை விரைந்து முடிக்க வேண்டும் என்று இப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது.

இந்த நிலையில் பி கிரேடாக இருந்த முத்துப்பேட்டை ரயில்வே நிலையத்தை தரம் குறைத்து சி கிரேடாக மாற்ற தென்னக ரயில்வே துறை முயற்சி செய்து வருகிறது. இதன் மூலம் இப்பகுதிக்கு வரும் ரயில்கள் 2 நிமிடங்கள் மட்டுமே நின்று செல்லும் வகையிலும், மேலும் ஸ்டேஷன் மாஸ்டர் இல்லாத ஒரு ரயில்வே நிலையமாக மட்டுமே செயல்படும். இதனால் இப்பகுதி மக்களுக்கும் வியாபாரிகளுக்கும், சுற்றுலா பயணிகளுக்கும் தொலை தூர பயணம் மேற்கொள்ள பல்வேறு இடற்பாடுகள் மற்றும் வசதிகள் பெற வாய்புகள் இல்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த இப்பகுதி மக்கள் பல்வேறு போராட்டங்கள் நடத்தினர்.

இந்த நிலையில் சமீபத்தில் கரூரில் உள்ள அவரது இல்லத்தில் பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பித்துரையிடம் முத்துப்பேட்டை தர்கா முதன்மை அறங்காவலர் எஸ்.எஸ்.பாக்கர் அலி சாஹிப் தலைமையில் அனைத்து கட்சி பிரமுகர்கள் முத்துப்பேட்டை ரயில்வே நிலையத்தை தரம் குறைக்க நினைக்கும் ரயில்வே துறையிடம் பேசி எண்ணத்தைக் கைவிட வேண்டும் எனக் கோரி மனுக் கொடுத்தனர். அதேபோல் முத்துப்பேட்டை தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகிகளும் தென்னக ரயில்வே அதிகாரிகளை சந்தித்து கோரிக்கை மனு கொடுத்தனர். இருந்தும் ரயில்வே துறை எண்ணத்தை மாற்றிக் கொள்ளவில்லை என்று தெரிகிறது.

இது தொடர்பான எந்த அறிவிப்பும் ரயில்வே துறை அறிவிக்கவில்லை. இதனையடுத்து ரயில்வே துறையின் செயலைக் கண்டித்தும், அடுத்தக்கட்ட நிலையை அறிவிக்கவும் நேற்று முன்தினம் முத்துப்பேட்டையில் அனைத்து கட்சி கூட்டம் தர்கா முதன்மை அறங்காவலர் எஸ்.எஸ்.பாக்கர் அலி சாஹிப் தலைமையில் நடைப்பெற்றது. இதில் தி.மு.க ஒன்றிய செயலாளர் மனோகரன், அ.தி.மு.க மாவட்ட அவைத்தலைவர் அருணாசலம், தவ்ஹீத் ஜமாஅத் முன்னால் மாவட்ட தலைவர் அன்சாரி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய செயலாளர் முருகையன், துணைச்செயலாளர் ராமநாதன், மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் தீன்முகமது, ஒன்றிய தலைவர் நெய்னாமுகமது, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நகர செயலாளர் காளிமுத்து, விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய செயலாளர் கனகசுந்தரம், நகர காங்கிரஸ் தலைவர் ஜெகபர்அலி, நுகர்வோர் பாதுக்காப்பு அமைப்பு தலைவர் சுல்த்தான் இபுராஹிம் விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட துணைச்செயலாளர் வெற்றி, ஒன்றிய செயலாளர் செந்தில், வர்த்தகக் கழக ராஜாராம், துணைத்தலைவர் மெட்ரோ மாலில், பொதுச்செயலாளர் கண்ணன், வர்த்தக சங்க பொதுச்செயலாளர் அஜிஸ், நிர்வாகி ராஜசேகர், அரிமா சங்க மாவட்ட நிர்வாகி ஜெயபால், தமுஏச செயலாளர் செல்லத்துரை, இலக்கிய மன்ற செயலாளர் ராஜ்மோகன், ரோட்டரி சங்கம் சார்பில் ராமலிங்கம், தமுமுக நகர செயலாளர் சம்சுதீன், அணைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு தலைவர் கோவிந்தராஜ் உட்பட பலரும் கலந்துக்கொண்டனர்.

இக்கூட்டத்தில் முத்துப்பேட்டை ரயில்வே நிலையத்தை தரம் குறைப்பதை கைவிடாத ரயில்வே துறையை கண்டித்து முதல் கட்டமாக வருகிற பிப்ரவரி 02- ந்தேதி முத்துப்பேட்டை பழைய பஸ்டாண்டில் அனைத்துக் கட்சி சார்பில் பெரும் திரள் ஆர்ப்பாட்டம் நடத்துவது. மேலும் அனைத்துக் கட்சி சார்பில் ரயில்வே போராட்டத்திற்கு அணைத்து மக்களையும் ஒன்று திரட்டும் வகையில் ஒருங்கிணைப்பு குழு அமைப்பது இவ்வாறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

செய்தி மற்றும் படங்கள்:
'நிருபர்' மொய்தீன் பிச்சை, முத்துப்பேட்டை

மரண அறிவிப்பு ! [ 'கவியன்பன்' கலாம் தகப்பனார் ஹாஜி சேக் அப்துல் காதர் அவர்கள் ]

ஆஸ்பத்திரி தெருவை சேர்ந்த மர்ஹூம் செ.ஒ முஹம்மது ஹுசைன் அவர்களின் மகனும், மர்ஹூம் ஹாஜி செ.ஒ அப்துல் ரஹ்மான், செ.ஒ அப்துல் காதர் ஆகியோரின் சகோதரரும்,  செ.ஒ. அஹ்மத் ஹூசைன், செ.ஒ. “கவியன்பன்” கலாம், செ.ஒ. ஜமால் முஹம்மத் ஆகியோரின் தந்தையும், மர்ஹூம் செ.ஒ. அஹ்மத் கபீர், மர்ஹூம் மு.ஹ. முஹைதீன் , நெ.மு. இப்றாஹிம், மு. அஹ்மத் பஷீர் ஆகியோரின் மாமானாருமான ஹாஜி 'சீப் சைடு' சேக் அப்துல் காதர் ( வயது 96 ) அவர்கள் நேற்று இரவு சிஎம்பி லேன் இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

அன்னாரின் ஜனாஸா இன்று காலை 10 மணிக்கு மரைக்கா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.

Thursday, January 28, 2016

விண்ணப்பித்த ஒரு வாரத்துக்குள் பாஸ்போர்ட் !

விண்ணப்பித்த ஒரு வாரத்துக்குள் பாஸ்போர்ட் வழங்கப்படும் என்று மத்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

புதிதாக பாஸ்போர்ட் கேட்டு விண்ணப்பிப்பவர்களின் முகவரி, பின்னணியை அறிய போலீஸ் விசாரணை கட்டாயமாக இருந்தது. இதனால் காலதாமதம் ஏற்படுவதாக நீண்ட காலமாக புகார் கூறப்பட்டு வந்தது.

சில ஆண்டுகளுக்கு முன்பு போலீஸ் விசாரணைக்கு அதிகபட்ச கால அவகாசம் 49 நாட்களாக இருந்தது. 2014-ல் 42 நாட்களாகவும் 2015-ல் 21 நாட்களாகவும் குறைக்கப்பட்டது. தற்போது ஒரு வாரத்துக்குள் பாஸ்போர்ட் வழங்கும் வகையில் விதிகள் தளர்த்தப்பட்டுள்ளன.

அதன்படி, தன் மீது எவ்வித குற்றமும் இல்லை என்பதற்கான நோட்டரி அபிடவிட், ஆதார் அட்டை, வாக்காளர் அட்டை, பான் எண் அட்டை ஆகிய 4 ஆவணங்களை சமர்ப்பித்துவிட்டு பாஸ்போர்ட் பெறலாம் என்று மத்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்துள்ளார்.

பாஸ்போர்ட் வழங்கிய பிறகு வழக்கமான போலீஸ் விசாரணை நடத்தப்படும் என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

புதிய நடைமுறை குறித்து சண்டிகர் பாஸ்போர்ட் அலுவலக அதிகாரி ராகேஷ் அகர்வால் கூறியபோது, இனிமேல் புதிதாக விண்ணப்பிப்பவர்களுக்கு 5 முதல் 7 நாட்களுக்குள் பாஸ்போர்ட் வழங்கப்படும். ஒருவேளை ஆதார்- வாக்காளர்- பான் அடையாள அட்டைகள் இல்லை என்றால் வழக்கமான போலீஸ் விசாரணை நடைமுறை பின்பற்றப்படும் என்று தெரிவித்தார்.

நன்றி: தி இந்து தமிழ்

பேராவூரணி தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்து பழஞ்சூர் K.செல்வம் மனு தாக்கல் !

அதிரை அடுத்துள்ள பழஞ்சூர் கிராமத்தை சேர்ந்தவர் K. செல்வம். அதிரை மற்றும் சுற்று வட்டார கிராமப் பகுதி பொதுமக்களிடையே அன்பாக பழகக்கூடியவர். மேலும் பேராவூரணி பகுதி மக்களுக்கு நன்கு பரிச்சையமானவர். திமுக மாநில பொருளாளர் மு.க ஸ்டாலின் அவர்களின் நீண்டகால விசுவாசி. திமுக சார்பில் நடத்துகின்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் ஆர்வமாக கலந்துகொண்டு வருகிறார்.

இந்த நிலையில் திமுக மீது இவர் காட்டி வரும் அதிக ஈடுபாட்டை தொடர்ந்து திமுக தலைவர் கருணாநிதி, செயலாளர் பேராசிரியர் அன்பழகன், பொருளாளர் மு.க ஸ்டாலின் ஆகியோரின் ஒப்புதலோடும், திமுக உயர்நிலை செயல் திட்டக்குழு உறுப்பினர் எஸ்.எஸ். பழனிமாணிக்கம், மாவட்ட செயலாளர் துரை. சந்திரசேகர் ஆகியோரின் பரிந்துரை அடிப்படையில், திமுக மாநில கலை, இலக்கியப் பகுத்தறிவுப் பேரவை அமைப்பாளர் வாகை சந்திரசேகர் அவர்கள் திமுக கலை, இலக்கிய, பகுத்தறிவு பேரவை  தஞ்சை தெற்கு மாவட்ட அமைப்பாளராக பழஞ்சூர் K. செல்வம் அவர்கள் கடந்த நவம்பர் மாதம் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டார்.

2016  சட்டமன்றத் தேர்தலில் தமிழகம் மற்றம் புதுச்சேரியில் போட்டியிட விரும்புவோர் விருப்ப மனுக்களை தாக்கல் செய்யலாம் என்று திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் கடந்த வாரம் அறிவித்தார். இதையடுத்து கடந்த ஜனவரி 24 முதல் பிப்ரவரி 10 ஆம் தேதி வரை சென்னை அண்ணா அறிவாலயத்தில் விருப்ப மனுக்கள் பெறப்பட்டு வருகின்றன. இதில் பொதுத் தொகுதியில் போட்டியிட விரும்புவோர் ரூபாய் 25 ஆயிரமும், மகளிர் மற்றம் தனித் தொகுதியில் போட்டியிட விரும்புவோர் ரூபாய் 15 ஆயிரமும் செலுத்தி விண்ணப்பத்தினை அளித்து வருகின்றனர்.

இந்நிலையில் திமுக சார்பில் திமுக கலை, இலக்கிய, பகுத்தறிவு பேரவை  தஞ்சை தெற்கு மாவட்ட அமைப்பாளர் பழஞ்சூர் K. செல்வம் அவர்கள் அதிரை அடுத்துள்ள பேராவூரணி சட்டமன்ற தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்து மனு தாக்கல் செய்தார்.

அப்போது திமுக அதிரை பேரூர் செயலாளர் இராம. குணசேகரன், திமுக பட்டுக்கோட்டை ஒன்றிய பிரதிநிதி முல்லை மதி உள்ளிட்டோர் உடனிருந்தனர். முன்னதாக பழஞ்சூர் K. செல்வம், திமுக மாநில பொருளாளர் மு.க ஸ்டாலின் அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்து வாழ்த்து பெற்றார்.

அதிரையில் எஸ்டிபிஐ கட்சி சார்பில் புதிய உறுப்பினர் சேர்க்கை முகாம் !

எஸ்டிபிஐ கட்சி சார்பில் ஜனவரி10 ம் தேதி முதல் பிப்ரவரி 10 ம் தேதி முடிய ஒரு மாதத்திற்கு மாநிலம் தழுவிய தீவிர உறுப்பினர் சேர்க்கை முகாம் நடத்த திட்டமிடப்பட்டது. அதன்படி, தஞ்சை மாவட்டம், அதிராம்பட்டினம் தக்வா பள்ளி அருகே எஸ்டிபிஐ கட்சி சார்பில் தீவிர உறுப்பினர் சேர்க்கை முகாம் நடந்து வருகிறது.

முகாமிற்கு தஞ்சை தெற்கு மாவட்டத் தலைவர் முஹம்மது இல்யாஸ் தலைமை வகித்தார். எஸ்டிபிஐ கட்சி அதிரை நகர தலைவர் முஹம்மது அஜார், துணை தலைவர் நட்ராஜ், மாவட்ட செயற்குழு உறுப்பினர் யூ. அப்துல் ரஹ்மான் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் தூய்மையான அரசியல், ஒடுக்கப்பட்டோரின் உரிமை மீட்பு உள்ளிட்டவற்றை எடுத்துக்கூறி எஸ்டிபிஐ கட்சியில் இணைய அழைப்பு விடப்பட்டது. இதில் பலர் எஸ்டிபிஐ கட்சியில் புதிதாக சேர்ந்தனர்.