.

Pages

Saturday, February 27, 2016

சிறிய முதலிட்டில் தென்னந்தோப்பு விற்பனை !

அதிரையருக்கு சொந்தமான மணமேல்குடி தாலுக்கா, கோட்டைபட்டினம் கொடிக்குளம் கிராமத்தில் 106.5 சென்ட், 320 குழி பரப்பளவில் தென்னை தோப்பு விற்பனைக்கு உள்ளது.

தேவையுடையோர் மேலதிக விவரங்களுக்கு நேரடியாக உரிமையாளரை தொடர்பு கொள்ளலாம். நில புரோக்கர்கள் தொடர்பு கொள்ள வேண்டாம் என உரிமையாளர் சார்பில் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

தொடர்புக்கு : 
முஹம்மது இக்பால் 8124578886
Y.M.H ஃபாருக் 9488619429


குறிப்பு:  தளத்தில் இலவசமாக பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் ஏற்படும் நிறை / குறைகளுக்கு அதிரை நியூஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது.

Friday, February 26, 2016

எஸ்டிபிஐ இல்யாஸ் தொடர்ந்த வழக்கில் போலீசாருக்கு 2 வது முறையாக அபராதம் விதிப்பு !

கடந்த 01-04-2013 அன்று எஸ்டிபிஐ கட்சி தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் முஹம்மது இல்யாஸ் காவல்துறை அதிகாரி ராஜ்கமல் மற்றும் காவல்துறையினரால் தாக்கப்பட்டதாக கூறி மனித உரிமை ஆணையத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் கடந்த 24-04-2015 அன்று சாட்சிகளின் குறுக்கு விசாரணை நடைபெற இருந்தது. இதில் போலீஸ் தரப்பு வழக்கறிஞர் ஆஜராகாமல் வழக்கு விசாரணையை தள்ளி வைக்க கோரி சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரி சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. மனுவை ஏற்க மறுத்த நீதிபதி போலீசாரை எச்சரித்து புகார்தாரரின் போக்குவரத்து செலவீனங்களுக்காக ரூ 600 அபராதம் செலுத்த உத்தரவிட்டார்.

இது தொடர்பான வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. இதில் இல்யாஸ் தரப்பு வழக்கறிஞர் முஹம்மது இஸ்மாயில் ஆஜாராகி இருந்தார். வழக்கில் சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரி ஆஜராகததால் 2 வது முறையாக ரூ 300 அபராதம் செலுத்த நீதிபதி உத்தரவிட்டார். மேலும் வழக்கு விசாரணையை எதிர்வரும் 22-04-2016 அன்று ஒத்திவைத்தார்.

விண்வெளியில் கேட்ட பாங்கு ஓசை... நாசா வெளியிட்ட வீடியோ!

அப்போலோ- 10 விண்கலத்தின் மூலம் விண்வெளியில் பயணித்த அமெரிக்க விண்வெளி ஆய்வாளர்களான ஜான் யங், யூகேன் கெர்னன் ஆகியோர், பூமியில் இருந்து சுமார் இரண்டு லட்சம் மைல்கள் தொலைவில் சந்திரனின் மறுபக்கம் இந்த அபூர்வ ஒலியை கேட்டனர். அதுதொடர்பாக பேசிக் கொண்ட தகவல்களை நாசா பதிவு செய்து வைத்துள்ளது.

இதுநாள்வரை இந்த அபூர்வ  ஒலி தொடர்பான செய்திகள் வெளியாகாதது ஏன்? என்பது குறித்து நாசா தரப்பில் உரிய விளக்கம் அளிக்கப்படவில்லை.

எனினும், விண்வெளி ஆராய்ச்சிகளில் முட்டுக்கட்டை ஏற்படாத வகையில் தங்களது விண்வெளிப் பயணத்தின்போது ஆய்வாளர்கள் சந்திக்கும் விபரீதமான, விசித்திரமான அனுபவங்களை பகிரங்கமாக வெளியிட அவர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

உதாரணமாக, 1969ம் ஆண்டு சந்திரனில் முதன்முதலில் காலடி பதித்த அமெரிக்க விண்வெளி வீரரான நீல் ஆர்ம்ஸ்டிராங், மசூதிகளில் தொழுகைக்காக அழைக்கப்படும் பாங்கொலியைப் போன்ற சப்தத்தை தனது விண்வெளிப் பயணத்தின்போது சந்திரனில் கேட்க நேர்ந்ததாக பல ஆண்டுகளுக்கு பின்னர் தெரிவித்திருந்தார்.


அப்போது, அது என்ன சப்தம்? என்பதை அறியாமல் இருந்த ஆர்ம்ஸ்டிராங், பூமிக்கு திரும்பிய பின்னர், எகிப்துக்கு சென்றிருந்தபோது அதே சப்தத்தை அங்கு கேட்க நேரிட்டது. அது என்ன சப்தம்? என்று தனது அருகில் இருந்த நண்பரை ஆர்ம்ஸ்டிராங் கேட்டதாகவும், தொழுகைக்காக அழைப்பு விடுக்கும் பாங்கொலியின் சப்தம் என அந்த நண்பர் தெரிவித்ததாகவும், இதையடுத்து, ஆர்ம்ஸ்டிராங் இஸ்லாமிய மதத்தை தழுவியதாகவும் இதற்கு முன்னர் செய்திகள் வெளியாகின என்பது நினைவிருக்கலாம்.

நன்றி: விகடன்

அதிரை ஈசிஆர் சாலை வாகன விபத்தில் படுகாயமடைந்த கல்லூரி மாணவன் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு !

அதிராம்பட்டினம், பிப்-26
தஞ்சை மாவட்டம், அதிராம்பட்டினம் தம்பிக்கோட்டை வடகாடு பகுதியை சேர்ந்தவர் முத்துகுமார். டைலர் தொழில் செய்து வருகிறார். இவரது மகன் பாலாஜி ( வயது 18 ) அதிரையில் தனியார் கல்லூரியின் முதலாம் ஆண்டு மாணவன். இவரது நண்பர் ஜெயமுருகன் ( வயது 20 ) அதே கல்லூரியின் இரண்டாம் ஆண்டு மாணவன்.

நேற்று மாலை இரண்டு பேரும் வகுப்பு முடித்துவிட்டு இருசக்கர வாகனத்தில் அதிரை ஈசிஆர் சாலையில் ஊர் சென்று கொண்டிருந்தனர். அப்போது அதிரை ஹாஜா நகர் பகுதியை சேர்ந்த அப்துல் ஜப்பார் மகன் ஹிஷாம் ( வயது 21 ) தனது இருசக்கர வாகனத்தை அதே சாலையில் வலது புறமாக திருப்பியபோது பாலாஜி ஓட்டிவந்த வாகனத்தில் மோதியது. இதில் 3 பேருக்கும் பலத்த காயங்கள் ஏற்பட்டது. பலத்த காயம் ஏற்பட்டு உயிருக்கு போராடிக்கொண்டிருந்த பாலாஜியை தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸில் அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு மருத்துவர்களால் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று இரவு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். படுகாயமடைந்த மற்ற இரண்டு பேரும் பட்டுக்கோட்டை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து அதிரை காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் கல்லூரி மாணவர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

லக்கேஜ் கட்ட கயிறுகளை பயன்படுத்த வேண்டாம் - ஏர் இந்தியா அறிவிப்பு !

விமானத்தில் பயணிக்கும் பொழுது நாம் கொண்டு செல்லும் லக்கேஜ் மற்றும் இதர பொருள்களின் மீது கயிறுகளை கட்டி பாதுகாப்பாக கொண்டு செல்வது வழக்கம்.

இவ்வாறு கயிறுகளை பயன்படுத்துவதால், விமான நிலையத்தில் லக்கேஜ்ஐ இழுத்து செல்லும் கன்வேயர் பெல்டில் இக்கயிறுகள் சிக்கி நிறைய அசம்பாவிதங்கள் ஏற்படுகிறது. இதை தவிர்க்கும் பொருட்டு லக்கேஜ் கட்ட கயிறுகளை பயன்படுத்த வேண்டாம் என சவுதி தமாம் கிங் பஹத் ஏர்போர்ட் அதிகாரிகள் அறிவுருத்தி சவுதியில் உடனடியாக அமல்படுத்தினர். இது விரைவில் அனைத்து விமான நிலையங்களிலும் அமலுக்கு வரும் என தெரிகிறது.

ஒற்றுமை என்ற இணைப்புப் பாலத்தினை அமைக்காதவர் முஸ்லிமா?

2016 மே மாத முதல் வாரத்திற்குள்ளாக தமிழக சட்டமன்ற தேர்தலை நடத்தி புது அரசு பற்றி அறிவிப்பு வரவேண்டும் என்று தமிழகமே எதிர்பார்க்கிறது.

வழக்கம் போல் தமிழக முஸ்லிம் அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சிகள், பெயரளவு உள்ள அரசியல் அமைப்புகள் என்று பிரிந்து பல்வேறு நிலைப்பாட்டினை எடுக்கும் என எதிர் பார்த்து கொண்டு இருக்கின்றோம்.

அது ஒருபுறம் இருக்க; இன்றைய இந்தியாவில் அரசுக்கு எதிராகப் பேசும் தலித் இனத்தவர் மற்றும் மைனாரிட்டி சமூகத்தினரை தீவிர வாத அமைப்புக்கு ஆதரவு அளிப்பவர்கள் என்று முத்திரை குத்தும் அச்ச நிலை உள்ளது. அது மாணவர்கள் ஆனாலும் சரியே! அப்படிப் பாதிக்கப் பட்டவர்கள் நீதி மன்றங்களை  அணுகும்போது  குண்டர்களால் தாக்கப் படும் நிலையினை தொலைக் காட்சி நிறுவனங்கள் படம் பிடித்து காட்டுவது அதிர்ச்சியினை அளிக்கின்றது என்று பல்வேறு பத்திரிக்கைகள் கூறுகின்றன.

தமிழக முஸ்லிம் தலைவர்கள் சக  இயக்கத் தலைவர்களுடன் சுமூக உறவு காண்பது அரிதாக இருப்பது  வேதனையாக உள்ளது. தலை எப்படியோ அப்படியே தொண்டர்களும் இருக்கின்றார்கள் என்ற பரிதாப நிலை.

இஸ்லாம் ஒரு சகோதர இயக்கம் என்று மார் தட்டும் நாம், சகோதரர்களுக்குள்ளேயே வெட்டு, குத்து என்ற நிலை சமீபத்தில் மண்ணடி பகுதியில் கொடி ஏற்றும் பிரச்சனையில் வெடித்து, காவல் நிலையம் வரை சென்று, வட சென்னையே சிரித்தது. முஸ்லிம் அல்லாத சமூகத்தினரும் 'ஒற்றுமை என்னும் பாசக் கயிரினைப் பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள' என்று சொல்லும் மார்க்கத் தொண்டர்கள் ஒருவருக்கொருவர் முட்டி, மோதிக் கொள்கிறார்கள் என்று வட சென்னையில் பேசப் பட்டது அனைவருக்கும் தெரியும்.

அதற்குக் காரணம் இயக்கத் தலைவர்களிடையே யார் பெரியவர், யார் பேசுவதிற்கு அதிகம் கூட்டம் சேருகிறது. நானா, நீயா என்ற ஈகோ (தலைக்கனம்) இருப்பது தான் என்றால் மிகையாகாது. அந்தத் தலை, தலைக்குள் இருக்கும் அறிவு  எல்லாம் வல்ல அல்லாஹ் அருளால் வழங்கப் பட்டது, அவன் அருளிய தலையில் கனம் கூடாது. அந்தக் கனத்தினை இறைவனுக்கு சஜ்தா செய்தால் இறக்கி  விடும். தலைவர்களுக்கிடையே ஒரு புன் முறுவல், பாசம், பற்று மருந்துக்குக் கூட அரவே இல்லையே அது ஏன்? அவர்கள் உண்மையான உம்மத்தாக இருக்க முடியுமா?

உங்களுக்கெல்லாம் தெரியும் மேற்காசிய நாடுகளில் முஸ்லிம் நாடுகளில் போர்கள் நடக்கின்றன. அவைகளில் தப்பித்தோம், பிழைத்தோம் என்று ஓடி வரும் மக்களை ஐரோப்பிய நாடுகளில் ஐரோப்பிய யூனியன் குடியமர்த்துகிறது. அமெரிக்காவும் அவர்களை குடியமர்த்த முன் வந்துள்ளது. அதற்கு அமெரிக்காவில் இந்த ஆண்டு இறுதியில் நடக்கும் ஜனாதிபதி தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் போட்டியிட தயார் நிலையில் உள்ள 'டிரம்ப்' என்பவர் முஸ்லிம்களை அமெரிக்காவில் குடியமர்த்தக் கூடாது என்று கூக்கிரலிடுகிறார். அதனை அறிந்த கத்தோலிக கிருத்துவ மத குரு போப் பிரான்சிஸ் அவர்கள் 18.2.2016 அன்று ரோமில் பேசும்போது 'மனித உள்ளங்களில் பிரிவை எற்படுத்தி சுவர் எழுப்புவன் உண்மையான கிருத்துவனாக இருக்க முடியாது'. 'மாறாக  உள்ளங்களை பாலங்கள் மூலம் இணைப்பவனே உண்மையான கிருத்துவனாக இருக்க முடியும்' என்று நெற்றியில் அடித்தது போல சொல்லியுள்ளார்.

சகோதர மதமான கிருத்துவ மத குரு போப் அவர்களே மனங்களை பாலங்கள் மூலம் இணைக்கச் சொல்லும் போது, ஒற்றுமை என்ற கயிறைப் பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள் என்று போதித்ததினை  இஸ்லாமிய மார்க்கத் தலைவர்களும், அதன் தொண்டர்களும் மறுக்கலாமா?

ஆகவே இஸ்லாமிய அமைப்புகள் ஒன்று பேசி வரும் சட்டமன்றத் தேர்தலில் நல்ல முடிவினை எடுக்க வேண்டும் என்ற கருத்தோடு   நின்று விடாமல், தேர்தலுக்குப் பின்னும் மனம் விட்டுப் பேசி சகோதரப் பாசத்துடன் பழக வேண்டும் என்று கேட்டுக் கொண்டால் சரியா?

டாக்டர் ஏ.பீ. முகமது அலி, பிஎச்,டி, ஐ.பீ.எஸ்(ஓ)
ஓய்வுபெற்ற மூத்த காவல்துறை அதிகாரி 
எழுத்தாளர்  
சமூக ஆர்வலர்

Thursday, February 25, 2016

அதிரையில் நடந்த இலவச கண் பரிசோதனை முகாமில் 525 பேர் பங்கேற்பு!

அதிரை லயன்ஸ் சங்கம் - மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை ஆகியோர் இணைந்து நடத்திய மாபெரும் முழுமையான இலவச கண் பரிசோதனை முகாம் அதிரை சாரா திருமண மண்டபத்தில் இன்று [ 25-02-2016] காலை நடந்தது.

இதில் கண் சம்பந்தப்பட்ட அனைத்து நோய்களுக்கும் பரிசோதனை செய்யப்பட்டது. மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை மருத்துவர்கள் அடங்கிய குழுவினர் பரிசோதனைகளை மேற்கொண்டனர்.

முகாமில் அதிரை மற்றும் அதனைச்சுற்றி வசிக்கும் பொதுமக்கள் மொத்தம் 525 பேர் கலந்துகொண்டு மருத்துவ ஆலோசனை பெற்றனர். இதில் 64 பேருக்கு கண் புரை அறுவை சிகிச்சை செய்துகொள்ள மருத்துவரால் பரிந்துரைக்கப்பட்டது.

நிகழ்ச்சி ஏற்பாடுகளை அதிரை லயன்ஸ் சங்கத் தலைவர் ஆறுமுகச்சாமி, செயலாளர் பேராசிரியர் அல் ஹாஜி, பொருளாளர் எஸ்.ஏ.சி இர்பான் சேக், லயன்ஸ் சங்க மாவட்ட தலைவர்கள் பேராசிரியர் கே.செய்யது அகமது கபீர், எஸ்.எம். முஹம்மது மொய்தீன், சாரா அஹமது, சாகுல் ஹமீது, செல்வம், முத்துகிருஷ்னன், சாகுல்ஹமீது உள்ளிட்டோர் செய்தனர். 

காதிர் முகைதீன் பெண்கள் மேல்நிலைப்பள்ளி நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் ஆசிரியை அனுராதா தலைமையில் பள்ளி மாணவிகள், லியோ கிளப் பொறுப்பாளர்கள் எஸ்.ஏ இத்ரீஸ் அஹமது, காதர் முகைதீன் மற்றும் லயன்ஸ் சங்க உறுப்பினர்கள் முகாமில் ஆலோசனை பெற வந்தவர்களுக்கு வேண்டிய உதவியை செய்தனர்.

இதுகுறித்து லயன்ஸ் சங்க மாவட்ட தலைவர் பேராசிரியர் செய்யது அஹமது கபீர் நம்மிடம் கூறியதாவது...
மாலை 5 மணி வரை நீடித்த இன்றைய முகாமில் 525 பேர் கலந்துகொண்டார்கள். அனைவருக்கும் முழுமையான கண் பரிசோதனைமேற்கொள்ளப்பட்டது. இதில் 64 பேர் கண் அறுவை சிகிச்சை செய்துகொள்ள மருத்துவர்களால் பரிந்துரை செய்யப்பட்டு, இவர்கள் அனைவரும் மதுரை அரவிந்த் கண் மருத்துவமனைக்கு வாகனத்தில் அழைத்து செல்லப்பட்டனர். கண் அறுவை சிகிச்சை முடிந்த பிறகு பத்திரமாக அவரவர் வீடு வந்தடைய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது' என்றார்.
 

மார்ச் 3 ந் தேதி அதிரை பேருந்து நிலைய வர்த்தக கடைகள் ஏலம் !

அதிராம்பட்டினம் பேருந்து நிலையம் அருகில், பேரூராட்சி சார்பில் கட்டப்பட்ட 24 வர்த்தக கடைகள் பொது ஏலத்தில் விட முடிவு செய்யப்பட்டது. இதற்கான பொதுஏலம் எதிர்வரும் 03-03-2016  வியாழக்கிழமை அன்று நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக அதிரை பேரூராட்சி நிர்வாகம் சார்பில் நாளை காலை அதிரை பகுதிகளில் ஆட்டோ ஒலிப்பெருக்கி அறிவிப்பு செய்ய இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏலத்தில் கலந்து கொள்பவர்கள் முன் வைப்பு தொகையாக, ரூ 1 லட்சம் என நிர்ணயம் செய்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.