.

Pages

Monday, March 28, 2016

அதிரையில் உப்பு உற்பத்தி தொடங்கியது ! [ படங்கள் இணைப்பு ]

அதிராம்பட்டினம், மார்ச்-28
தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் பகுதியில் கடற்கரையை ஒட்டி 3 ஆயிரம் ஏக்கரில் உப்பளங்கள் உள்ளன. ஜனவரி மாதம் உப்பு உற்பத்தி செய்வதற்கு முதல் கட்டப்பணிகள் துவங்கியது. பாத்தி கட்டுதல், பாத்தி சீர்அமைத்தல், பாத்தி மிதித்தல், கட்டை போடுதல், கடல் வாய்க்கால் சீரமைத்தல், கடல் வாய்க்கால் வண்டல் அகற்றுதல், கடல் முகத்துவாரம் சீர் அமைத்தல், போன்ற பணிகள் முடிந்து கடல் நீரை பாத்தியில் பாய்ச்சும் பணி முடிவடைந்து உப்பளங்களில் விளைந்த உப்பை வாரும் பணி துவங்கி உள்ளது.  இதில் அதிராம்பட்டினம் பகுதியில் உள்ள அனைத்து உப்பளங்களிலும் உப்பு உற்பத்தி துவங்கி உள்ளது.

இதுகுறித்து உப்பு உற்பத்தியாளர் செல்வராஜ் என்பவர் கூறுகையில், 'மழைக்காலம் முடிந்து உப்பளங்களில் தேங்கி உள்ள மழைநீரை பம்ப் செட் உதவியுடன் வெளியேற்றி மூன்று மாதங்களாக முதல் கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது நேற்று முதல் உப்பு உற்பத்தி துவங்கியுள்ளது' என்றார்.

அமெரிக்கா அதிரையர் கூட்டமைப்பின் விடுமுறை கால சந்திப்பு !

அமெரிக்கா அதிரையர் கூட்டமைப்பின் [ AAF ] விடுமுறை கால சந்திப்பு நிகழ்ச்சி கலிபோர்னியா மகாணம் பிரிமௌன்ட் (Fremont) நகரில் உள்ள வோம் ஸ்பிரிங் பார்க்கில் (Womm Spring Park) நடந்தது.

சந்திப்பு நிகழ்ச்சிக்கு சேக் அலி அவர்கள் தலைமை வகித்தார். பஜூல் ஹக் கிராத் ஓதினார். சிப்லி முகைதீன் வரவேற்புரை ஆற்றினார். AAF பொருளாளர் ஆண்டறிக்கை வாசித்தார். இதில் AAF ஆற்றி வரும் சேவை குறித்து எடுத்துரைத்தார்.

இதில் அமெரிக்கா வாழ் அதிரையர் குழந்தைகளுக்காக கல்வி வழிகாட்டுதல் குறித்தும், புதிய தொழில் செய்ய முயல்வோருக்கு தேவையான ஆலோசனை வழங்குவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. அதிரை நல திட்டங்கள் பற்றி அறிந்துகொள்ள அதிரையில் ஒரு பிரதிநிதி நியமிப்பது எனவும் முடிவெடுக்கப்பட்டது.

சந்திப்பு நிகழ்ச்சி முடிவில் சமீபத்தில் மரணமடைந்த அமெரிக்கா வாழ் அதிரையர் குடும்பத்தை சேர்ந்தவர்களின் மறுமை வாழ்வு சிறக்க து ஆ செய்யப்பட்டது.

நிகழ்ச்சி ஏற்பாட்டை AAF சிறப்பாக செய்து இருந்தது. இந்த நிகழ்ச்சியில் பெரும்பாலான அமெரிக்கா வாழ் அதிரை குடும்பத்தினர் குழந்தைகளுடன் கலந்துகொண்டனர். ஒருவருக்கொருவர் அன்பை பரிமாறவும், புரிந்துணர்வு ஏற்படவும், கலாச்சாரத்தை கட்டிக்காக்கவும் இந்த சந்திப்பு நிகழ்ச்சி அமைந்து இருந்ததாக நிகழ்ச்சியில் கலந்துகொண்டவர்கள் கூறினார்கள்.
 

Sunday, March 27, 2016

எஸ்டிபிஐ கட்சி தஞ்சை தெற்கு மாவட்ட தேர்தல் பணிக்குழுக்கள் அமைப்பு !

எஸ்டிபிஐ கட்சி தஞ்சை தெற்கு மாவட்ட செயற்குழு கூட்டம் தஞ்சையில் நடைபெற்றது.

கூட்டத்திற்கு  எஸ்டிபிஐ கட்சியின் தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் முஹம்மது இல்யாஸ் தலைமை வகித்தார். எஸ்டிபிஐ கட்சியின் மாவட்ட செயலாளர் அபுல் ஹசன், மாவட்ட பொருளாளர் சேக் ஜலாலுதீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

முன்னதாக எஸ்டிபிஐ கட்சியின் மாவட்ட பொதுச்செயலாளர் ஹாஜி சேக் வரவேற்புரை ஆற்றினார். செயற்குழு முடிவில் தஞ்சை தெற்கு மாவட்ட எஸ்டிபிஐ கட்சியின் தேர்தல் பணிக்குழுக்கள் அமைக்கப்பட்டன. இதில் தஞ்சை சட்டமன்ற தொகுதிக்கு அபுல் ஹசன் அவர்களும், ஒரத்தநாடு சட்டமன்ற தொகுதிக்கு செய்யது முஹம்மது அவர்களும், பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதிக்கு அப்துல் ரஹ்மான் அவர்களும், பேராவூரணி சட்டமன்ற தொகுதிக்கு சேக் ஜலாலுதீன் அவர்களும் ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டனர். இவர்களின் தலைமையின் கீழ் தலா 5 பேர் வீதம் திமுக மற்றும் கூட்டணி கட்சிகளுக்கு ஆதரவாக களப்பணியாற்றுவார்கள் என தீர்மானிக்கப்பட்டது.

கூட்ட முடிவில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் முஹம்மது அசாருதீன் நன்றி கூறினார். கூட்டத்தில் எஸ்டிபிஐ கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

அல் ஷனா பள்ளி ஆண்டு விழா நிகழ்ச்சியில் சாதனையாளர்கள் கெளரவிப்பு !

அதிரை அல்-ஷனா மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளியின் 5 ஆம் ஆண்டு விழா நிகழ்ச்சி மற்றும் டாக்டர் அப்துல் கலாம் அறிவியல் மன்றம் துவக்க விழா நிகழ்ச்சி இன்று மாலை லாவண்யா திருமண மண்டபத்தில் நடந்தது.

நிகழ்ச்சிக்கு பள்ளி தாளாளர் எம்.ஐ நெய்னா முஹம்மது தலைமை வகித்தார். வழக்கறிஞர் ஏ.அப்துல் முனாப், டி சுப்ராயன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட டாக்டர் ஏ.பி.ஜே அப்துல் கலாம் இன்டர்நேஷனல் பவுண்டேஷன் சேர்மன் ஏ.பி.ஜே. சேக் சலீம் சிறப்புரை வழங்கினார். நிகழ்ச்சியில் கெளரவ சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட காதிர் முகைதீன் கல்லூரி பேராசிரியர் கே. செய்யது அஹமது கபீர் சிறப்புரை வழங்கினார்.

மேலும் நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட காதிர் முகைதீன் கல்லூரி பேராசிரியர் முனைவர் மேஜர் எஸ்.பி கணபதி, தமிழ்நாடு முத்தமிழ் அறிவியல் மன்ற பொதுச்செயலாளர் வீ. காந்தி லெனின், பட்டதாரி தமிழ் ஆசிரியர் மாநில தலைவர் விழிகள் சி ராஜ்குமார் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.

விழாவில் பள்ளி குழந்தைகளின் பல்சுவை கலை நிகழ்ச்சிகள் நடந்தது. பின்னர் கல்வியில், விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற சிறுவர் சிறுமிகளுக்கு பரிசுகள் வழங்கி கெளரவிக்கப்பட்டது.

மறைந்த மாமேதை டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் பெயரில் 'ஏ.பி.ஜே அப்துல் கலாம் அறிவியல் மன்றம்' துவக்க விழா நிகழ்ச்சி நடந்தது. இதில் பல்வேறு துறைகளில் சாதனை நிகழ்த்தியவர்களுக்கு விருது வழங்கி கெளரவிக்கப்பட்டது. இதில் 'மனிதநேய காவலர்' விருது டாக்டர் அப்துல் ஹக்கீம் அவர்களுக்கும், 'கல்வி வல்லமையாளர்' விருது பேராசிரியர் முனைவர் ஹாஜா முகைதீன் அவர்களுக்கும், 'இலக்கியச்சிற்பி' விருது எழுத்தாளர் இப்ராஹீம் அன்சாரி அவர்களுக்கும், மனிதநேய சேவை' விருது ஆர்.மாரிமுத்து அவர்களுக்கும், 'சேவைச் செம்மல்' விருது போக்குவரத்து உதவி ஆய்வாளர் அபுதல்ஹா அவர்களுக்கும், 'இளம் சாதனையாளர்' விருது எம். ஆக்கிப் அஹமது அவர்களுக்கும் வழங்கப்பட்டது. இவற்றை  ஏ.பி.ஜே. சேக் சலீம் வழங்கி கெளரவித்தார்.

முன்னதாக டாக்டர் அப்துல் கலாம் அறிவியல் மன்ற புதிய நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களுக்கு அடையாள அட்டைகள் வழங்கப்பட்டன.

இந்த நிகழ்ச்சியில் ஊர் பிரமுகர்கள், ஆசிரியைகள், பெற்றோர்கள், பத்திரிகையாளர்கள், பள்ளி சிறுவர், சிறுமிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

செய்தி மற்றும் படங்கள்:
அஃப்ரீத் ( மாணவ செய்தியாளர் ) 


காதிர் முகைதீன் மேல்நிலைப்பள்ளி ஆண்டு விழா நிகழ்ச்சி ! [ படங்கள் இணைப்பு ]

அதிரை காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியின் 67 ஆம் ஆண்டு விழா நிகழ்ச்சி இன்று பள்ளியில் நடந்தது.

விழாவிற்கு காதிர் முகைதீன் கல்லூரி முதல்வர் முனைவர் ஏ. ஜலால் தலைமையுரை நிகழ்த்தினார். காதிர் முகைதீன் கல்லூரியின் துணை முதல்வர் முனைவர் உதுமான் மொய்தீன் முன்னிலை வகித்து வாழ்த்துரை வழங்கினார். 

முன்னதாக பள்ளியின் தலைமை ஆசிரியர் ஏ. மஹபூப் அலி வரவேற்புரை ஆற்றி, பின்னர் ஆண்டறிக்கையை  வாசித்தார் அதில் பள்ளியின் சார்பில் நடப்பு ஆண்டில் கல்வியில் விளையாட்டில் மாணவர்கள் - ஆசிரியர்கள் நிகழ்த்திய பல்வேறு சாதனைகளை பட்டியலிட்டார். மேலும் பள்ளி ஆற்றிவரும் சமூக பணிகளையும், பள்ளியின் சார்பில் நிகழ்த்தப்பட்ட சாதனைகளையும் குறிப்பிட்டு பேசினார். 

சிறப்பு பேச்சாளராக  கவிஞர் ராஜப்பா கலந்துகொண்டு சிந்தனை தரும் சொற்பொழிவை நிகழ்த்தி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார். நிகழ்ச்சிகள் அனைத்தையும் பள்ளி உதவி தலைமை ஆசிரியர் நாகராஜன் தொகுத்து வழங்கினார். 

பள்ளியின் சார்பில் நடப்பாண்டில் கல்வி - விளையாட்டில் சாதனை நிகழ்த்திய ஆசிரிய ஆசிரியைகள், மாணவர்கள், அலுவலக ஊழியர்கள் ஆகியோருக்கு சிறப்பு பரிசுகள், பொன்னாடைகள் போர்த்தி கெளரவிக்கப்பட்டது.

கடந்த ஆண்டில் நடந்த பத்தாம் வகுப்பு - பன்னிரெண்டாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வுகளில் பள்ளியளவில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர்களுக்கு ரொக்க பரிசுகள் வழங்கப்பட்டது. இவற்றை பிரபல தொழில் அதிபர் அல் நூர் ஹஜ் சர்வீஸ் முஹம்மது அலி வழங்கினார். மேலும் மாநில அளவில் நடந்த கால்பந்தாட்ட போட்டிகளில் சாதனை நிகழ்த்திய மாணவர்களுக்கு பரிசாக கிடைத்த 4 கால்பந்துகளை பள்ளிக்கு வழங்கினார்கள்.

விழா முடிவில் பள்ளி தீனியாத் ஆசிரியர் நஜ்முதீன் நன்றி கூறினார். விழாவில் ஊர் பிரமுகர்கள், பெற்றோர் ஆசிரியர் கழக பொறுப்பாளர்கள், முன்னாள் ஆசிரியர்கள் - மாணவர்கள், பெற்றோர்கள், பள்ளி மாணவர்கள் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

செய்தி மற்றும் படங்கள்:
அஃப்ரீத் ( மாணவ செய்தியாளர் ) 

துபாய் – திருச்சி விமான சேவையில் இன்று முதல் நேர மாற்றம்: ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் அறிவிப்பு !

திருச்சி விமான நிலையத்தில் குளிர்கால மற்றும் கோடைக்கால அட்டவணைபடி விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. இன்றுடன் குளிர் கால அட்டவணை முடிவுக்கு வந்து புதிதாக வெளியிடப்பட்டுள்ள அட்டவணப்படி இன்று நள்ளிரவு முதல் விமான சேவை செயல்படவுள்ளது.

துபாய் – திருச்சி ஏர்இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் துபாயிலிருந்து காலை 7:10 மணிக்கு புறப்பட்டு மதியம் 12.45 மணிக்கு திருச்சிக்கு சென்றடைந்து பின்னர் மதியம் 2.05 மணிக்கு புறப்பட்டு துபாய்க்கு வந்துக் கொண்டிருந்தது.

இன்று(27/03/2016) முதல் இந்த விமானம் துபாயிலிருந்து மாலை 6:25 மணிக்கு புறப்பட்டு நள்ளிரவு 12.05 மணிக்கு சென்றடைந்து பின்னர் நள்ளிரவு 12.55 மணிக்கு புறப்பட்டு துபாய்க்கு காலை 3.45 மணிக்கு வந்து சேரும் என ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மரண அறிவிப்பு [ சம்சுனார் அவர்கள் ]

சிஎம்பி லேன் பகுதியை சேர்ந்த முஹம்மது சம்சுதீன் அவர்களின் மனைவியும், அபூசாலிஹு, அஜீஸ், சலீம் ஆகியோரின் மாமியாரும், சகாபுதீன், நஜ்முதீன் ஆகியோரின் தயாருமாகியாக சம்சுனார் அவர்கள் இன்று காலை இமாம் ஷாஃபி மெட்ரிக் பள்ளி அருகே உள்ள இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

அன்னாரின் ஜனாஸா இன்று மஹ்ரிப் தொழுகைக்கு பிறகு தக்வா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.