.

Pages

Sunday, July 29, 2018

முத்துப்பேட்டையில் முன்னாள் எம்.பி அப்துல் ரஹ்மான் தகப்பனார் வஃபாத்!

அதிரை நியூஸ்: ஜூலை 29
திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை முகைதீன் பள்ளிவாசல் தெருவை சேர்ந்த மர்ஹூம் நெ.மு. முகம்மது முகைதீன் அவர்களின் மகனும், மர்ஹூம் எஸ். அப்துல் ஜப்பார் அவர்களின் மருமகனும், N.M.M முகம்மது முகைதீன்,
 N.M.M ராஜ் முகம்மது, முன்னாள் எம்.பி N.M.M அப்துல் ரஹ்மான், N.N.M நெய்னா முகம்மது, N.M.M சிராஜூதீன் ஆகியோரின் தகப்பனாரும், திருச்சி மர்ஹூம் Y. செய்யது காசீம் அவர்களின் மாமாரும், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியினர் மூத்த உறுப்பினருமாகிய ஹாஜி N.M முகைதீன் அப்துல் காதர் (வயது 88) அவர்கள் இன்று அதிகாலை முத்துப்பேட்டை முகைதீன் பள்ளிவாசல் தெரு இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

அன்னாரின் ஜனாஸா நாளை (30-07-2018) காலை 9 மணியளவில் முத்துப்பேட்டை முகைதீன் பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.

தகவல்: 'சமூக ஆர்வலர்' சுனா இனா, 
முத்துப்பேட்டை.

Saturday, July 28, 2018

அதிரையில் லயன்ஸ் சங்கம் சார்பில் காமராஜர் பிறந்த தின விழா பேச்சுப் போட்டி (படங்கள்)

அதிராம்பட்டினம், ஜூலை 28
அதிராம்பட்டினம் லயன்ஸ் சங்கம் சார்பில், காமராஜர் 116-வது பிறந்த தின விழா பேச்சுப் போட்டி, இன்று சனிக்கிழமை லாவண்யா திருமண மஹாலில் நடைபெற்றது.

விழாவுக்கு, அதிராம்பட்டினம் லயன்ஸ் சங்கத் தலைவர் பேராசிரியர் ஹாஜி
எம்.ஏ முகமது அப்துல் காதர் தலைமை வகித்து போட்டியை வழிநடத்தினார். செயலர் எம்.அப்துல் ரஹ்மான், பொருளாளர் எம்.ஏ அப்துல் ஜலீல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

விழாவில், பள்ளி மாணவ, மாணவிகளுக்கு 'கல்விக்கண் திறந்த காமராஜர்', 'காமராஜர் காண விழைந்த இந்தியா' ஆகிய தலைப்புகளின் கீழ், கீழோர் பிரிவில் 6,7,8 வகுப்புகளுக்கும், மேலோர் பிரிவில் 9,10,11,12 ஆகிய வகுப்புகளுக்கு பேச்சுப் போட்டி நடத்தப்பட்டன. இதில், அதிரை காதிர் முகைதீன் மேல்நிலைப்பள்ளிகள், இமாம் ஷாஃபி மெட்ரிக். மேல்நிலைப்பள்ளி, ராஜாமடம் அரசு மேல்நிலைப்பள்ளி, ஆக்ஸ்போர்டு மெட்ரிக். மேல்நிலைப்பள்ளி, பிரிலியண்ட் சிபிஎஸ்இ மேல்நிலைப்பள்ளி, முத்துப்பேட்டை ரஹ்மத் மெட்ரிக். மேல்நிலைப்பள்ளி, புதுப்பட்டினம் அபூ மெட்ரிக். மேல்நிலைப்பள்ளி ஆகிய பள்ளிகளைச் சேர்ந்த மொத்தம் 28 மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர்.

லயன்ஸ் சங்க மாவட்டத் தலைவர் பேராசிரியர் எஸ்.பி கணபதி போட்டியைத் தொடங்கி வைத்தார். போட்டி நடுவர்களாக, காதிர் முகைதீன் கல்லூரி பேராசிரியர் கே.செய்யது அகமது கபீர், இமாம் ஷாஃபி மெட்ரிக். மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் பார்த்தசாரதி, லயன்ஸ் சங்க முன்னாள் தலைவர் எஸ்.எம் முகமது முகைதீன் ஆகியோர் பொறுப்பேற்று நடத்தினர். போட்டி முடிவில், கீழோர் பிரிவில், எழில் ஜீவானா, எச். முஜம்மில், விஷாலினி ஆகியோரும், மேலோர் பிரிவில், எஸ்.கவிப்பிரியா, எம். அனீஸ் பாத்திமா, பிரியதர்ஷினி ஆகியோரும் முதல் மூன்று இடங்களைப் பெற்றனர். சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு சுழற்கோப்பை மற்றும் சான்றிதழ்கள் வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது. மேலும், போட்டியில் கலந்துகொண்ட அனைத்து மாணவ, மாணவிகளுக்கு பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

முன்னதாக, காதிர் முகைதீன் கல்லூரி பேராசிரியர் கே. செய்யது அகமது கபீர் காமராஜரின் சாதனைகள், தொண்டு குறித்துப் பேசினார். விழாவில், அதிராம்பட்டினம் லயன்ஸ் சங்க நிர்வாகிகள் எம். அகமது, எம். சாகுல் ஹமீது, எஸ்.ஏ அப்துல் ஹமீது, என்.ஆறுமுகச்சாமி, சி.சார்லஸ், எம்.நிஜாமுதீன், ஏ.கண்ணன் மற்றும் கல்வி நிறுவனங்களின் ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர்.
 
 
 

அதிரை பைத்துல்மால் நிர்வாகிகளுடன் தொண்டி ஜமாத் பிரமுகர்கள் கலந்தாலோசனை (படங்கள்)

அதிராம்பட்டினம், ஜூலை 28
அதிரை பைத்துல்மால் சேவை அமைப்பின் நிர்வாகிகளை, தொண்டி ஜமாத் பிரமுகர்கள், ஞாயிற்றுக்கிழமை காலை அலுவலகத்தில் சந்தித்து ஆலோசனைகள் பெற்றனர்.

இராமநாதபுரம் மாவட்டம், தொண்டி பகுதி ஏழை, எளிய மக்களின் நலனுக்காக புதிதாக தொடங்க உள்ள பைத்துல்மால் அமைப்புக்காக, அதன் சேவைத்திட்டங்கள் மற்றும் செயல்பாடுகள் பற்றி, அதிரை பைத்துல்மால் துணைத்தலைவர் எஸ்.கே.எம் ஹாஜா முகைதீன், செயலாளர் எஸ்.ஏ அப்துல் ஹமீது, பொருளாளர் எஸ்.எம் முகமது முகைதீன், துணைத்தலைவர்கள் வழக்குரைஞர் ஏ.முனாப், எம்.இசட் அப்துல் மாலிக், துணைப் பொருளாளர் ஏ. முகமது முகைதீன், தகவல் தொடர்பு அலுவலர் எம்.நிஜாமுதீன் ஆகியோரை, தொண்டி ஜாமத் பிரமுகர்கள் இன்ஜினியர் அபூபக்கர், ஆடிட்டர் ஆஷிக் அகமது, ஜலீல் ஆலிம், எஸ். செய்யது அலி, அலிகான் ஆகியோர் அலுவலகத்தில் சந்தித்து ஆலோசனைகளைப் பெற்றனர்.

சிறப்பு விருந்தினர்களாக, அதிரை பேரூராட்சி முன்னாள் சேர்மன் எஸ்.எச் அஸ்லம், அதிரை குழந்தைகள் நல மருத்துவர் டாக்டர் எஸ்.ஹாஜா முகைதீன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

அதே போல், கடந்த ஏப்ரல் மாதம் கும்பகோணம் ஆஷிகா ஜுவல்லரி நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்களின் நலனுக்காக புதிதாக தொடங்கப்பட்டுள்ள பைத்துல்மால் அமைப்புக்கு, அதன் நிர்வாகிகள், சேவைத்திட்டங்கள் மற்றும் செயல்பாடுகள் பற்றிய ஆலோசனைகளை அதிரை பைத்துல்மால் நிர்வாகிகளிடம் பெற்றது குறிப்பிடத்தக்கது.
 
 

அதிரையில் நாளை (ஜூலை 29) இலவச பல் சிகிச்சை முகாம் ~ பொதுமக்கள் பயன்பெற அழைப்பு!

பல் மருத்துவர் பா.பாரதி
அதிராம்பட்டினம், ஜூலை 28
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் அட்ஜயா பல் மருத்துவமனை 3
ஆம் ஆண்டு துவக்க விழாவையொட்டி, இலவச பல் மருத்துவ பரிசோதனை மற்றும் ஆலோசனை முகாம் அதிராம்பட்டினம் அட்ஜயா பல் மருத்துவமனையில் நாளை (29-07-2018) ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெற உள்ளது.

முகாமை, குழந்தைகள் நல மருத்துவர் டாக்டர் எஸ். ஹாஜா முகைதீன் தொடங்கி வைக்கிறார். இதில், அதிராம்பட்டினம் அட்ஜயா பல் மருத்துவமனை பல் மருத்துவர் பா.பாரதி தலைமையிலான மருத்துவக் குழுவினர் பல், தாடை மற்றும் வாய் சம்மந்தமான பிரச்னைகளுக்கு மருத்துவ பரிசோதனையும், ஆலோசனைகளும், சிகிச்சையும் அளிக்கின்றனர். இதில், அதிராம்பட்டினம் மற்றும்  சுற்றுப்புற பகுதி பொதுமக்கள் கலந்துகொண்டு பல் சம்பந்தப்பட்ட பிரச்னைகளை தெரிவித்து பயன் பெறலாம்.

மேலதிக தகவல் மற்றும் தொடர்புக்கு:
8973389814 / 7094809148


சவுதியில் ஒரு வருடமாக இருந்த தடை நீக்கம் ! விசாவில் தொழில்முறை பெயர் மாற்றும் வசதி மீண்டும் அமல்!

அதிரை நியூஸ்: ஜூலை 28
சவுதியில் ஒரு வருடமாக இருந்த தடை நீக்கம்! விசாவில் தொழில்முறை பெயரை மாற்றிக் கொள்ளலாம்.

சவுதியில் கடந்த ஒரு வருடமாக வெளிநாட்டு ஊழியர்கள் ரெஸிடென்ஸ் விசா, இகாமாவில் உள்ள தொழில்முறை பெயர்களை மாற்றிக் கொள்ள விதிக்கப்பட்டிருந்த தடை விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது. இனி முன்பு போல் வெளிநாட்டினர் தகுந்த ஆவணங்களை சமர்ப்பித்து தொழில்முறை பெயர்களை மாற்றிக் கொள்ள சவுதியின் தொழிலாளர் நலன் மற்றும் சமூக மேம்பாட்டுக்கான அமைச்சகம் அறிவித்துள்ளது. Employers can now change expat workers’ job titles mentioned on their iqamas (residence permits)

தொழில்முறை பெயர் மாற்றம் செய்ய விரும்பும் விண்ணப்பதாரர்கள் அமைச்சகத்தின் இணையதளத்தில் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க வேண்டும். சவுதி அரசின் தொழில்முறை மேட்ரிக்ஸ் அமைப்பு (Occupation matrix system) மற்றும் தொழிலாளர் சட்ட வரம்பிற்குள் உட்பட்டிருந்தால் மாற்றித் தரப்படும் இல்லையேல் நிராகரிக்கப்படும்.

(Applications for profession change should be submitted online at the ministry’s portal. Job titles will not be changed if they are not in line with the occupation matrix system and the labor rules)

Source: Saudi Gazette
தமிழில்: நம்ம ஊரான்

அபுதாபி சாலையோரங்களில் வேகக்கட்டுப்பாடு அறிவிப்பு பலகைகள் அகற்ற முடிவு!

அதிரை நியூஸ்: ஜூலை 28
அபுதாபி சாலையோரங்களில் வேகக்கட்டுப்பாடு அறிவிப்பு பலகைகள் அகற்றப்படுகின்றன

அபுதாபியில் நேற்று கருணை அடிப்படையிலான மணிக்கு கூடுதல் 20 கி.மீ என்ற அனுமதி தடை செய்யப்பட்டு அனுமதிக்கப்பட்ட வேக அளவை மட்டுமே சீராக கடைபிடிக்குமாறு வாகன ஓட்டிகள் உத்தரவிடப்பட்டிருந்தனர். இதனடிப்படையில், அபுதாபி எமிரேட்டின் சாலை ஓரங்களில் நடப்பட்டிருந்த வேகக்கட்டுப்பாடு சம்பந்தமான அனைத்து அறிவிப்பு பலகைகளும் 3 வார காலங்களுக்குள் மாற்றப்படவுள்ளன.

எனினும், அபுதாபி எமிரேட்டின் பிரதான 2 நெடுஞ்சாலைகளான அல் அய்ன் மற்றும் சவுதி ரோடு ஆகியவையில் மட்டும் அனுமதிக்கப்பட்ட அதேவேகத்தில் செல்ல தொடர்ந்து அனுமதிக்கப்படும், அதாவது அபுதாபி to  அல் அய்ன் மற்றும் ஷேக் கலீபா பின் ஜாயித் ரோடு எனப்படும் அபுதாபி to சவுதி சர்வதேச நெடுஞ்சாலை ஆகிய 2 நெடுஞ்சாலைகளில் மட்டும் உச்சபட்ச வேகமான மணிக்கு 160 கி.மீ என்ற வேகத்தில் செல்லலாம்.

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்

அதிராம்பட்டினம் எஸ்டிபிஐ கட்சி நிர்வாகியை தாக்கிய 3 சப்-இன்ஸ்பெக்டர்களுக்கு ரூ.75 ஆயிரம் அபராதம்!

இசட். முகமது இலியாஸ்
அதிராம்பட்டினம், ஜூலை 28
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினத்தை சேர்ந்தவர் இசட்.முகமது இலியாஸ் (வயது 31). எஸ்.டி.பி.ஐ கட்சியின் நிர்வாகியான இவர், சென்னையில் உள்ள மாநில மனித உரிமை ஆணையத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது;
கடந்த 2013 ஆம் ஆண்டு எஸ்.டி.பி.ஐ கட்சி சார்பில் நடத்தப்படும் நிகழ்ச்சி மற்றும் போராட்டங்களுக்கு அனுமதி கேட்டு செல்லும் போது, அதிராம்பட்டினம் போலீசார் அவதூறாக பேசி வந்தனர். இதுகுறித்து உயர் போலீஸ் அதிகாரிகளிடம் புகார் செய்ததால் அவர்கள் என் மீது ஆத்திரத்தில் இருந்தனர். இந்த நிலையில், 01.04-2013 அன்று மோட்டார் அன்று மோட்டார் சைக்கிளில் புத்துப்பட்டினம் அருகே சென்று கொண்டிருந்தேன். அப்போது வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த அதிராம்பட்டினம் சப்-இன்ஸ்பெக்டர்கள் ராஜ் மோகன், கமல், ரவிச்சந்திரன் பட்டுக்கோட்டை சப்-இன்ஸ்பெக்டர் முத்துலெட்சுமி ஆகியோர் என்னை அவதூறாக பேசி கடுமையாக தாக்கினர். என்னிடம் இருந்த செல்போனை பறித்துக்கொண்டனர். எனவே, அவர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி டி.ஜெயச்சந்திரன், சாட்சியம் மற்றும் ஆவணங்களை வைத்து பார்க்கும்போது சப்-இன்ஸ்பெக்டர்கள் 3 பேரும் மனித உரிமை மீறலில் ஈடுபட்டிருப்பது தெரிகிறது. இதற்காக, அவர்களுக்கு தலா ரூ. 25 ஆயிரம் அபராதம் விதிக்கப்படுகிறது. இந்த தொகையை தமிழக அரசு ஒரு மாதத்துக்குள் மனுதாரருக்கு வழங்கிவிட்டு அவர்களது சம்பளத்தில் இருந்து பிடித்தம் செய்து கொள்ளலாம்' என்று உத்தரவிட்டார்.

மரண அறிவிப்பு ~ 'பரகத் ஸ்டோர்' ஹாஜி எம்.ஏ முகமது இப்ராஹிம் (வயது 74)

அதிரை நியூஸ்: ஜூலை 28
அதிராம்பட்டினம், ஆலடித்தெருவை சேர்ந்த மர்ஹூம் முகமது அப்துல்லா அவர்களின் மகனும், மர்ஹூம் அ.சு.அ அகமது தம்பி அவர்களின் மருமகனும், பேராசிரியர் ஹாஜி எம்.ஏ முகமது அப்துல் காதர், எம்.ஏ முகமது சாலிகு ஆகியோரின் மூத்த சகோதரரும், முகமது அப்துல்லா, முகமது இஸ்மாயில் ஆகியோரின் தகப்பனாரும், எம்.ஏ.ஜெய்னுலாப்தீன் அவர்களின் மாமனாரும், அதிராம்பட்டினம் கடைத்தெரு 'பரகத் ஸ்டோர்' நிறுவனர் ஹாஜி எம்.ஏ முகமது இப்ராஹிம் (வயது 74) அவர்கள் நேற்று இரவு வஃபாத்தாகி விட்டார்கள்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

அன்னாரின் ஜனாஸா இன்று (28-07-2018) பகல் லுஹர் தொழுதவுடன் தக்வா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.