.

Pages

Wednesday, November 14, 2018

அதிராம்பட்டினம் கடலோரப்பகுதி பொதுமக்களுக்கு மாவட்ட ஆட்சியரின் அறிவிப்பு (வீடியோ)

அதிராம்பட்டினம், நவ.14
தஞ்சாவூர் மாவட்டத்தில் கஜா புயல் நாளை (15.11.2018) கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுவதால், அதிராம்பட்டினம் கடலோரப்பகுதி பொதுமக்களுக்கு மாவட்ட ஆட்சியரின் முன்னெச்சரிக்கை அறிவிப்பு (காணொளி)

இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:-
வங்கக் கடலில் உருவாகியுள்ள கஜா புயலை எதிர்கொள்ளும் வகையில் தஞ்சாவூர் மாவட்டத்தில் முன்னெச்சரிக்கை குழு, தேடுதல் மற்றும் மீட்பு பணிக்குழு, பாதுகாப்பு மற்றும் உணவு வழங்கும் குழு, போக்குவரத்து மேலாண்மை குழு, நீர்வழி மேலாண்மை குழு, செய்தி மேலாண்மை குழு, சுகாதாரம் மற்றும் கழிவு நீர் மேலாண்மை குழு என 7 மாவட்ட அளவிலான குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

மேலும், வருவாய் கோட்ட அளவில் மூன்று குழுக்களும், வட்ட அளவில் 9 குழுக்களும், சரக அளவில் 50 குழுக்களும், கடலோர வட்டங்களில் ஒரு கிராமத்திற்கு 5 குழுக்கள் வீதம் 27 கிராமங்களில் 135 குழுக்களும் அமைக்கப்பட்டுள்ளது.  புயல் பாதிப்பு ஏற்படக்கூடிய பகுதிகளில் 1932 முதல் நிலை உதவியாளர்கள் கண்டறியப்பட்டு அவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.

காவல் துறையை சேர்ந்த 66 பயிற்சி பெற்ற காவலர்களைக் கொண்ட 4 பேரிடர் மீட்பு குழுவினரும், புயல் பாதிப்பு ஏற்படும் பகுதிகளில் பணியாற்றக்கூடிய 161 தீயணைப்பு வீரர்களும் தயார் நிலையில் உள்ளனர்.  புயல் பாதிப்பு ஏற்படக் கூடிய பகுதிகளில் 24 படகுகள், அவசர கால ஊர்திகள், செஞ்சிலுவை சங்கம் மற்றும் தனியார் அவசர கால ஊர்திகள் தயார் நிலையில் உள்ளது. புயல் ஏற்படும் பட்சத்தில் பொது மக்களை தங்க வைக்க 14 பல்நோக்கு புயல் பாதுகாப்பு மையங்கள், 8 இதர புயல் பாதுகாப்பு மையங்கள், 28 இதர நிவாரண மையங்கள் தயார் நிலையில் உள்ளது. மேலும், அரசு பள்ளிகள், சமுதாய கூடங்கள், கிராம சேவை மையங்கள், திருமண மண்டபங்கள், கல்வி நிறுவனங்கள் ஆகியவற்றை திறந்து வைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கால்நடைகளை பாதுகாக்க 195 கால்நடை பாதுகாப்பு முதல்நிலை உதவியாளர்களும், 36 பாதுகாப்பு மையங்களும், 131 கால்நடை பராமரிப்பு குழுக்களும், புயல் மற்றும் வெள்ள பாதிப்புகளை சமாளிக்கும் வகையில் 42,000 மணல் மூட்டைகள், 134 மரம் அறுக்கும் இயந்திரங்கள், 50 பயிற்சி பெற்ற மீனவர்கள் மற்றும் படகு உரிமையாளர்கள் தயார் நிலையில் உள்ளனர்.  1758 மெட்ரிக் டன் அரிசி, அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் தேவையான அளவு மருந்து இருப்பு வைக்கப்பட்டுள்ளது.

பொது மக்கள் புயல் மற்றும் மழை காலங்களில் வெளியில் செல்லாமல்  பாதுகாப்பான இடங்களில் தங்க வேண்டும். முதியோர்கள், குழந்தைகள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் கால்நடைகளை பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்க வேண்டும். வெளிப்புறங்களில் இருக்கும் போது மின்சார கம்பங்கள், தொலைபேசி கம்பங்கள், உயர்ந்த கட்டடங்கள், இடிபாடு உடைய கட்டடங்கள் அருகில் செல்வதையும், அறுந்து கிடக்கும் மின்சார கம்பிகள் அருகில் செல்வதையும், மரங்களுக்கு அருகில் செல்வதையும் தவிர்க்க வேண்டும். ஆறு, குளம், ஏரி ஆகிய நீர் நிலைகளில் குளிப்பது, துணி துவைப்பது, கால்நடைகளை குளிப்பாட்டுவது ஆகிய செயல்களை தவிர்க்க வேண்டும். மீனவர்கள் மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்குள் செல்லக்கூடாது. அவசர காலத்திற்கு தேவையான உணவு, மருந்து மற்றும் இதர அத்தியாவசியப் பொருட்களை கையிருப்பில் வைத்துக்கொள்ள வேண்டும். புயல் மற்றும் மழை குறித்த விவரங்களை அவ்வப்போது ஊடகங்கள் வாயிலாக தெரிந்து கொள்ள வேண்டும்.

புயல் மற்றும் மழை தொடர்பான புகார்களை 1077 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் தஞ்சாவ10ர் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் செயல்படும் 24 மணி நேர அவசர கட்டுப்பாட்டு அறைக்கும், 100 என்ற எண்ணில் காவல் துறை கட்டுப்பாட்டு அறைக்கும், 101 என்ற எண்ணில் தீயணைப்பு துறை கட்டுபாட்டு அறைக்கும் தெரிவிக்கலாம்.

மேலும், பாதிப்புகள் குறித்த புகார்களை 04362-230456 என்ற எண்ணில் தஞ்சாவூர் வட்டத்திலும், 04362-260248 என்ற எண்ணில் திருவையாறு வட்டத்திலும், 04362-288107 என்ற எண்ணில் பூதலூர் வட்டத்திலும், 04372-233225 என்ற எண்ணில் ஒரத்தநாடு வட்டத்திலும், 0435-2430227 என்ற எண்ணில் கும்பகோணம் வட்டத்திலும், 0435-2460187 என்ற எண்ணில் திருவிடைமருதூர்; வட்டத்திலும், 04374-222456 என்ற எண்ணில் பாபநாசம் வட்டத்திலும், 04373-235049 என்ற எண்ணில் பட்டுக்கோட்டை வட்டத்திலும், 04373-232456 என்ற எண்ணில் பேராவூரணி வட்டத்திலும் உள்ள பொது மக்கள் தெரிவிக்கலாம்.

இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார்.

மரண அறிவிப்பு ~ ஹாஜிமா ஹசினா அம்மாள் (வயது 62)

அதிரை நியூஸ்: நவ.14
அதிராம்பட்டினம், நடுத்தெருவைச் சேர்ந்த மு.க.செ அகமது உதுமான் அவர்களின் மகளும், ஹாஜி மு.க.செ முகமது இபுராகிம் அவர்களின் மனைவியும், மர்ஹும் நெய்னா முகமது, ஹாஜி அகமது அலி ஜெஹபர், ஹாஜி முகமது தம்பி மரைக்காயர், ஹாஜி பசீர் அகமது ஆகியோரின் சகோதரியும், முகமது உமர், அமமுக அதிரை பேரூர் பொருளாளர் ரபிக் அகமது, ஹாஜா முகைதீன், முகமது புஹாரி ஆகியோரின் தாயாரும், முகமது இலியாஸ் அவர்களின் மாமியாருமாகிய ஹாஜிமா ஹசினா அம்மாள் (வயது 62) அவர்கள் இன்று பகல் வஃபாத்தாகி விட்டார்கள்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

அன்னாரின் ஜனாஸா நாளை (15-11-2018) வியாழக்கிழமை காலை 8.30 மணியளவில் தக்வா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.

அதிராம்பட்டினத்தில் நாளை (நவ.15) மின்தடை ரத்து!

அதிராம்பட்டினம், நவ.14
அதிராம்பட்டினம், மதுக்கூர், முத்துப்பேட்டை பகுதிகளில் நாளை (நவ.15) வியாழக்கிழமை மின்சார விநியோகம் இருக்காது என மதுக்கூர் மின் வாரிய உதவி செயற்பொறியாளர் ஆர். ஜெய்சங்கர் அறிவித்து இருந்தார்.

இந்நிலையில், தஞ்சாவூர் மாவட்டத்தில் கஜா புயல் நாளை (15.11.2018) கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுவதால், மதுக்கூர் துணை மின் நிலையத்திலிருந்து மின்சாரம் பெறும் அதிராம்பட்டினம், அத்திவெட்டி, பெரியக்கோட்டை, கன்னியாக்குறிச்சி, மூத்தாக்குறிச்சி, காடந்தங்குடி, துவரங்குறிச்சி, தாமரங்கோட்டை, மதுக்கூர் நகர், முத்துப்பேட்டை ஆகிய பகுதிகளில் நாளை நவ-15 ந் தேதி வியாழக்கிழமை மின்தடை ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிராம்பட்டினம் கடலோரப்பகுதிகளில் ஆட்சியர் ஆய்வு (படங்கள்)

தஞ்சாவூர் மாவட்டத்தில் கஜா புயல் நாளை (15.11.2018) கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுவதால், அதிராம்பட்டினம் முதல் சேதுபாவா சத்திரம் வரையிலான கடலோரப்பகுதிகளில் முன்னெச்சரிக்கை குறித்து இன்று (நவ.14) புதன்கிழமை ஒலிப்பெருக்கி மூலம் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை அவர்கள் பொதுமக்களை பாதுகாப்பாக இருக்கும் படி அறிவுறுத்தி, தஞ்சாவூர் மாவட்ட கடலோரப்பகுதிகளில் அமைந்திருக்கும் புயல் பாதுகாப்பு மையங்கள், சிறு துறைமுகங்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும், மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தினார். அப்போது, மாவட்ட வருவாய் ஆய்வாளர் ந.சக்திவேல் மற்றும் மாவட்ட முதன்மை அலுவலர்கள் உடன் இருந்தனர்.
 

அதிரைக்கு காவிரி நீர் வழங்காததை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட முயன்ற முன்னாள் சேர்மன் அஸ்லம் உட்பட அனைவரும் கைது ~ மாலை விடுவிப்பு (படங்கள்)

அதிராம்பட்டினம், நவ.13
அதிராம்பட்டினத்துக்கு காவிரி நீர் வழங்காத பொதுப்பணித்துறை அதிகாரிகளை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட முயன்ற முன்னாள் சேர்மன் அஸ்லம் உட்பட அனைவரும் கைது செய்யப்பட்டு, மாலை விடுவிக்கப்பட்டனர்.

டெல்டா பாசனத்துக்காக கடந்த ஜூலை 19-ம் தேதி மேட்டூர் அணையும், ஜூலை 22-ம் தேதி கல்லணையும் திறக்கப்பட்டது. இந்த இரு அணைகளும் திறக்கப்பட்டு சுமார் 4 மாதங்களாகியுள்ள நிலையில் பல முறை மனுக்கள் அளித்தும் தஞ்சாவூர் மாவட்டத்தில் கடைமடைப் பகுதியான அதிராம்பட்டினம் பகுதிக்கு இதுவரை காவிரி நீர் வரவில்லை. இதனால் தங்கள் ஊரை தொடர்ந்து புறக்கணிக்கணிக்கும் பொதுப்பணித்துறை நிர்வாகத்தைக் கண்டித்து, அதிராம்பட்டினம் கடைமடைப்பகுதி விவசாயிகள், நீர்நிலை பாதுகாப்பு ஆர்வலர்கள், மீனவர்கள், ஜமாத்தார்கள், கிராம பஞ்சாயத்தார்கள், பொதுமக்கள் சார்பில், இன்று (நவ.14) புதன்கிழமை காலை 10 மணியளவில், அதிராம்பட்டினம் பேரூராட்சி அலுவலகம் அருகில் சாலை மறியலில் ஈடுபட முயன்ற அதிராம்பட்டினம் பேரூர் முன்னாள் சேர்மன் எஸ்.எச் அஸ்லம், திமுக பட்டுக்கோட்டை ஒன்றிய பிரதிநிதி அப்துல் ஹலீம், நாம் தமிழர் கட்சி தஞ்சை தெற்கு மாவட்ட பொருளாளர் ஏ.ஜே ஜியாவுதீன் உட்பட அதிரை பேருந்து நிலையம் அருகே திரண்டிருந்த விவசாயிகள், மீனவர்கள், ஜமாத்தார்கள் உள்ளிட்ட 60 பேர் கைது செய்யப்பட்டு ஏரிப்புறக்கரை இந்திய செஞ்சுலுவைச் சங்க மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டு மாலை விடுவிக்கப்பட்டனர்.

செய்தி மற்றும் படங்கள்:
மர்ஜூக் (மாணவச் செய்தியாளர்)
 
 
 
 
 
 









தஞ்சை மாவட்டத்தில் நாளை (நவ.15) பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு!

தஞ்சாவூர் மாவட்டத்தில் கஜா புயல் நாளை (15.11.2018) கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுவதால் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அளிக்கப்படுகிறது என மாவட்ட ஆட்சித்தலைவர் ஆ.அண்ணாதுரை அறிவித்துள்ளார்.

இதுகுறித்து இன்று (நவ.14) வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பது;
தஞ்சாவூர் மாவட்டத்தில் கஜா புயல் நாளை (15.11.2018) கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுவதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு நாளை (15.11.2018) அன்று விடுமுறை அளிக்கப்படுகிறது என மாவட்ட ஆட்சித்தலைவர் ஆ.அண்ணாதுரை அறிவித்துள்ளார்.

குழந்தைகளைக் கொண்டாடுவோம் ~ குழந்தைகள் தின சிறப்பு பதிவு!

அதிரை நியூஸ்: நவ.14
இன்று (நவ.14) புதன்கிழமை. இந்தியத் திருநாட்டின் முதல் பிரதமர் பண்டித ஜவஹர்லால் நேரு அவர்களின் பிறந்த நாள். இந்நாள் ஒவ்வோராண்டும் குழந்தைகள் தினமாகக் கொண்டாடப்படுகிறது. நேரு அவர்களுக்கு குழந்தைகள் என்றால் கொள்ளைப் பிரியம். அதனால் தனது பிறந்த நாளைக் குழந்தைகள் தினமாகக் கொண்டாடும்படிப் பணித்தார். இந்நாளில் குழந்தைகளின் குணாதிசயம் பற்றியும், அவர்களுக்கான உரிமைகள் பற்றியும், அவர்களுக்கு அளிக்கப்பட வேண்டிய சமூக அக்கறை பற்றியும் விரித்துரைக்க விரும்புகிறேன்.

"குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று
குற்றங்களை மறந்துவிடும் மனத்தால் ஒன்று"

என்பது இளமையில் என்றோ கேட்ட திரை இசைப் பாடல். குற்றங்களை மறந்து மன்னிக்கும் குழந்தைகளின் குணத்தைத் தென்னெனத் தெரிவிக்கிறது. இப்பாடல். குழந்தைகள் அவ்வப்போது சண்டையிட்டுக் கொள்வதும், அடுத்த சில நிமிடங்களில் மீண்டும் கரம் கோர்த்து விளையாடுவதும் நாம் அன்றாடம் காணும் காட்சிகள் தானே. இத்தகைய உயர் குணம் பெரியவர்களிடமும் இருந்தால் உலகில் சண்டை ஏது? பகை ஏது?

குழந்தைகளுக்கென சில உரிமைகள் உண்டு. அவற்றை அவர்களுக்குத் தராமல் குழந்தை உரிமை மீறல்கள் ஆங்காங்கே நடைபெறுவது குறித்து வருந்த வேண்டியுள்ளது.

பொதுவாக குழந்தையும், சேட்டையும் கூடப்பிறந்த இரட்டைப் பிறவிகள் எனலாம். பள்ளி செல்லும் வயதில் சேட்டைகள் சற்று அதிகம் இருக்கும். பள்ளி விடுமுறை நாட்களில் அவர்களின் கொண்டாட்டமும், குதூகலமும் கேட்கத் தேவையில்லை. சில நேரங்களில் குழந்தைகளின் கொண்டாட்டம் பெற்றோர்களுக்குத் திண்டாட்டமாகத் தோன்றலாம். இதனால் அவர்களுக்கு உண்டாகும் கோபம் காரணமாகக் கொண்டாட்டத்தில் ஈடுபடும் குழந்தைகள் தண்டனைக்குள்ளாவதும் உண்டு.

அண்மையில் ஊடகங்களில் வெளிவந்த செய்திகள் நம்மை அதிர்ச்சியுறச் செய்தன. தனக்குப் பிறந்ததல்ல என்ற சந்தேகத்தால் தந்தையே தன் குழந்தையை கழுத்தை நெறித்துக் கொன்றுள்ளான். தாய்ப்பால் ஊட்ட விரும்பாத தாயே தன் குழந்தையைக் கொன்றிருக்கிறாள். இருண்ட காலம் எனக் கூறப்படும் அன்றைய நாளில் அரபகத்தில் பெண் குழந்தை பிறந்தால் அதைக் கொன்றழிக்கும் நிலை இருந்ததைக் நாம் அறிந்திருக்கிறோம். அத்தகைய கொடுஞ்செயல் இன்றைய நவீனக் காலத்தில் நிகழ்வது வியப்பையும், வேதனையையும் அளிக்கிறது.

இன்றைய காலக்கட்டத்தில் குழந்தைகளின் உரிமை பல வழிகளில் மீறப்படுகிறது. மாறிவரும் வாழ்க்கை முறையில் பெற்றோர் இருவரும் வேலைக்குச் செல்பவர்களாக உள்ளனர். அவர்கள் வீடு திரும்பும் போது குழந்தைகள் தூங்கிவிடுகின்றனர். காலையில் பெற்றோர் அவசர அவசரமாகப் பணிக்குப் புறப்படுவதிலும், குழந்தைகளை அவசரக் கோலத்தில் தயார்படுத்திப் பள்ளிக்கு அனுப்புவதிலும் மட்டுமே கவனம் செலுத்துகின்றனர். இதனால், பெற்றோர் - குழந்தைகளுக்குமான இடைவெளி அதிகரித்து விடுகிறது. குழந்தைகளிடம் சிறிதுநேரம் பேசுவதற்குக்கூடப் பெற்றோர்களால் நேரம் ஒதுக்க முடிவதில்லை.

கிடைக்கிற விடுமுறை நாட்களிலாவது பெற்றோர்கள் குழந்தைகளிடம் மனம்விட்டுப் பேசலாம்; குழந்தைகளின் பள்ளிச் சூழல், அவர்களுடைய நண்பர்கள், வகுப்பில் நிகழ்ந்த சுவாரசியமான சம்பவங்கள் போன்றவற்றைக் கேட்டறியலாம். இது குழந்தைகளுக்கு உற்சாகத்தையும் மன மகிழ்ச்சியையும் தரலாம். இதற்கெல்லாம் இக்காலப் பெற்றோர்களுக்கு எங்கே நேரம் இருக்கிறது. தொலைக்காட்சித் தொடரிலும், கைப்பேசி அழைப்பிலும் பொழுது போய்விடுகிறதே.

விளையாட்டு என்பது குழந்தைகளுக்கு ஒரு குதுகலமான அனுபவம். அதற்கு நேரம் ஒத்துக்கித்தர முடியாத அளவுக்கு டியூசன் கிளாஸ், கம்ப்யூட்டர் கிளாஸ், மியூஸிக் கிளாஸ் என்றெல்லாம் குழந்தைகளின் வயதுக்கு மீறியவற்றையெல்லாம் திணித்து அவர்களைப் பெற்றோர்கள் பாடாய்படுத்துகிறார்கள்.

பெண் குழந்தைகள் பற்றி சமீப காலங்ககளில் ஊடகங்கள் மூலம் அறிய வரும் செய்திகள் நம்மை பதைப்பதைக்கச் செய்கின்றன. 6-வயது, 3-வயது குழந்தைகளெல்லாம் கூடப் பாலியல் வன்கொடுமைக்குள்ளாவதை அறிய நேரும் போது அதிர்ச்சிக்குள்ளாகிறோம்.

இக்கொடுமைகளுக்கெல்லாம் தீர்வுதான் என்ன? நாம் வாழும் சமூகமும் நம்மை ஆளும் அரசும் இதைப்பற்றிச் சிந்திக்க வேண்டும். பொறுப்பிலுள்ளவர்கள் தகுந்த வழிகாண வேண்டும். இக்கொடுமைகளுக்கெல்லாம் முடிவு கட்டவேண்டும்.

எஸ்.கே.எம் ஹாஜா முகைதீன் எம்.ஏ., பி.எஸ்சி., பி.டி
தலைமை ஆசிரியர் (பணி நிறைவு)
அதிராம்பட்டினம்
தஞ்சாவூர் மாவட்டம்.       

Tuesday, November 13, 2018

100% அரசு மானியத்தில் 50 நாட்டுக்கோழிகள் பெற விண்ணப்பிக்கலாம் ~ ஆட்சியர் தகவல்!

தஞ்சாவூர் மாவட்டம், கோழி அபிவிருத்தி திட்டத்தின் கீழ் 100 சதவிகித அரசு மானியத்தில் 50 நாட்டுக்கோழிகள் பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் ஆ.அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.

இது குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளதாவது:-
கோழி வளர்க்கும் தொழிலை ஊக்குவிக்கும் பொருட்டு 2018-19ம் ஆண்டிற்கு ரூ.50 கோடி செலவில் கோழி அபிவிருத்தி திட்டத்தினை செயல்படுத்த தமிழக அரசால் ஆணையிடப்பட்டுள்ளது. கோழி அபிவிருத்தி திட்டத்தின் கீழ் 100 சதவிகித அரசு மானியத்தில் ஒரு பெண் பயனாளிக்கு 4 வார வயதுடைய 50 “அசில்” இன நாட்டுக்கோழிகள் (25 பெட்டைக்கோழிகள் மற்றும் 25 சேவல்கள்) வழங்கப்படவுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டத்தில் ஒரு ஊராட்சி ஒன்றியத்திற்கு 200 பெண் பயனாளிகள் வீதம் 14 ஊராட்சி ஒன்றியங்களுக்கு 2800 பெண் பயனாளிகள் தேர்வு செய்யப்படவுள்ளனர்.

இத்திட்டத்தின் கீழ் பெண் பயனாளிகள் மட்டுமே விண்ணப்பிக்கலாம்.  கோழி அபிவிருத்தி திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்பும் பெண் பயாளிகள் மாவட்ட ஊரக வாழ்வாதார இயக்கத்தினால் வழங்கப்பட்ட வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள் பட்டியலிலும், நிரந்தரமாக சம்பந்தப்பட்ட கிராமத்தில் வசிப்பவராகவும், ஏற்கனவே விலையில்லா கறவைப் பசுக்கள், வெள்ளாடுகள், செம்மறியாடுகள் திட்டத்தில் பயன் பெறாதவராகவும் இருக்க வேண்டும். விதவைகள், ஆதரவற்றவர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். 30 சதவிகித பயனாளிகள் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வகுப்பிலிருந்து தேர்வு செய்யப்படுவர். 

மேற்காணும் தகுதிகள் மற்றும் விருப்பம் உள்ள மகளிர் விண்ணப்பதாரர்கள், தங்கள் பகுதியின் அருகில் உள்ள கால்நடை மருந்தக கால்நடை உதவி மருத்துவரிடம் உரிய சான்றாவணங்களுடன் 30.11.2018க்குள் விண்ணப்பிக்க வேண்டும். 

கோழி அபிவிருத்தி திட்டம் குறித்து மேலும் விவரங்களை அறிந்து கொள்ள தஞ்சாவூர், கும்பகோணம் மற்றும் பட்டுக்கோட்டை கால்நடை பராமரிப்புத்துறை உதவி இயக்குநர் அலுவலகங்களை  நேரில் அணுகலாம். என இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார்.