.

Pages

Monday, February 25, 2019

கஜா பேரிடர் மீட்பு பணி: கடற்கரைத்தெரு ஜமாத் சார்பில் விருந்தினர்கள் கெளரவிப்பு (படங்கள்)

அதிராம்பட்டினம், பிப்.25
அதிராம்பட்டினம் கடற்கரை ஜும்ஆ மஸ்ஜித் மஹல்லா நிர்வாகக் கமிட்டி சார்பில், கடந்த ஆண்டு வீசிய கஜா புயலில் பெரிதும் பாதிப்படைந்த அதிராம்பட்டினம் பகுதியில் தீவிர துப்புரவுப் பணியில் ஈடுபட்ட அதிராம்பட்டினம் பேரூர் நிர்வாகம், மின்சாரம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் துரிதமாக மீட்பு நடவடிக்கைகள் மேற்கொண்ட அதிராம்பட்டினம் மின்சார வாரியம் ஆகியவற்றின் சேவையை பாராட்டி நினைவுப்பரிசு வழங்கும் நிகழ்ச்சி அதிராம்பட்டினம் ரிச்வே கார்டன் ரெஸ்டாரண்ட் கதிஜா மஹாலில் இன்று திங்கட்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சியை ஹாஜி தாஜுதீன் ஆலிம் கிராத் ஓதி தொடங்கி வைத்தார். கடற்கரை ஜும்ஆ மஸ்ஜித் மஹல்லா நிர்வாகக் கமிட்டித் தலைவர் எம். அப்துல் ரெஜாக் தலைமை வகித்தார். எஸ்.எம்.ஏ அக்பர் ஹாஜியார் முன்னிலை வகித்தார்.

நிகழ்ச்சியில், சிறப்பு விருந்தினர் தென்னக ரயில்வே சென்னை மண்டல கட்டுமானப்பிரிவு துணை முதன்மை பொறியாளர் சாம்சங் விஜயகுமார் கலந்துகொண்டு பேசியது;
வரும் மார்ச் 25 க்குள் ரயில் போக்குவரத்து சேவை தொடங்கிவிடும். அதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது என்றார். பின்னர், கஜா புயலில் மீட்பு பணிகளில் ஈடுபட்ட அதிராம்பட்டினம் மின்சார வாரிய உதவி செயற்பொறியாளர் பிரகாஷ், அதிராம்பட்டினம் துப்புரவுப் பணி ஆய்வாளர் அன்பரசன், மேற்பார்வையாளர் வெங்கடேசன் ஆகியோருக்கு சால்வை அணிவித்து நினைவுப் பரிசுகளை வழங்கி பாராட்டுத் தெரிவித்தார்.

முன்னதாக, அதிராம்பட்டினம் கடற்கரை ஜும்ஆ மஸ்ஜித் மஹல்லா நிர்வாகக் கமிட்டி ஆலோசகர் ஜமீல் எம். சாலிகு சிறப்புரை வழங்கினார்.

நிகழ்ச்சியில், பட்டுக்கோட்டை ~ திருவாரூர் வழித்தடத்தில் ரயில் போக்குவரத்து சேவையை விரைவில் தொடங்க தீவிரமாகப் பணியாற்றி வரும் தென்னக ரயில்வே சென்னை மண்டல கட்டுமானப்பிரிவு துணை முதன்மை பொறியாளர் சாம்சங் விஜயகுமார் மற்றும் அவரது குழுவினருக்கு பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது.

முன்னதாக, செயலாளர் எம்.கே முகமது சித்திக் வரவேற்றுப் பேசினார். நிகழ்ச்சிகள் அனைத்தையும் கடற்கரை ஜும்ஆ மஸ்ஜித் மஹல்லா நிர்வாகக் கமிட்டி பொருளாளர் எஸ்.எம் ஹாஜா முகைதீன் தொகுத்து வழங்கினார். முடிவில், தீன் மெடிக்கல்ஸ் எம்.கே சம்சுதீன் நன்றி கூறினார்.

நிகழ்ச்சியில், கடற்கரை ஜும்ஆ மஸ்ஜித் மஹல்லா நிர்வாகக் கமிட்டியினர், அதிராம்பட்டினம் பேரூராட்சி அலுவலகப் பணியாளர்கள், அதிராம்பட்டினம் மின்சார வாரிய பணியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
 

மரண அறிவிப்பு ~ ஹாஜிமா சுபைதா அம்மாள் (வயது 70)

அதிரை நியூஸ்: பிப்.25
அதிராம்பட்டினம் மேலத்தெரு குற்று வீட்டை சேர்ந்த மர்ஹும் செ.செ சாகுல் ஹமீது அவர்களின் மகளும், மர்ஹும் குட்டையப்பா என்கிற டி.கே நெய்னா முகமது அவர்களின் மனைவியும், எஸ்.பகுருதீன், எஸ்.முகமது முகைதீன், ஆகியோரின் சகோதரியும், என். முகமது இஸ்மாயில், என்.சேக்தாவூது ஆகியோரின் தாயாரும், முகைதீன் அப்துல் காதர், அப்துல் ரவூப் ஆகியோரின் சிறிய தாயாருமாகிய ஹாஜிமா சுபைதா அம்மாள் (வயது 70) அவர்கள் நேற்று இரவு வஃபாத்தாகி விட்டார்கள்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜுவூன்

அன்னாரின் ஜனாஸா இன்று (25-02-2019) மாலை மஹ்ரிப் தொழுதவுடன் பெரிய ஜும்மா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.

மரண அறிவிப்பு ~ 'கொழும்பு ஸ்டோர்ஸ்' ஹாஜி முகமது யாகூப் (வயது 81)

அதிரை நியூஸ்: பிப்.25
அதிராம்பட்டினம், தட்டாரத்தெரு மர்ஹூம் எம்.கே.எம் முஹைதீன் அவர்களின் மகனும், எம்.கே.எம். சுல்தான் அப்துல் காதிர், எம்.கே.எம். பஷீர் அகமது ஆகியோரின் சகோதரரும் , எம். முஹம்மது ஹவாஜ், முஹம்மது மஸ்ஊத், முஹம்மத் ஃபாரித் ஆகியோரின் தகப்பனாரும், எஸ்.ஓ. அபுல்கலாம், எம்.எஸ். நஜீர் அஹ்மத் ஆகியோரின் மாமனாருமாகிய "கொழும்பு ஸ்டோர்ஸ்" ஹாஜி முஹம்மது யாகூப் (வயது 81) அவர்கள் வஃப்பாத்தாகி விட்டார்கள்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜுவூன்

அன்னாரின் ஜனாஸா இன்று (25-02-2019) மாலை அஸர் தொழுகைக்கு பிறகு மரைக்கா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.

Sunday, February 24, 2019

தமிழக அரசின் ரூ.2000 நிதியுதவி வழங்கும் திட்டம்: விடுபட்டவர்கள் கணக்கெடுப்பு!

தஞ்சாவூர் மாவட்டம், மாவட்ட ஆட்சியரக முகாம் அலுவலகத்தில் தமிழக அரசின் உத்தரவின்படி வறுமை கோட்டிற்கு கீழ் வாழும் கிராமப்புற மற்றும் நகர்ப்புற ஏழைகளுக்கு குறிப்பாக விவசாய தொழிலாளர்கள் மற்றும் பல்வேறு தொழில்களில் ஈடுபட்டுள்ள ஏழை தொழிலாளர் குடும்பங்களுக்கான ஒருமுறை நிதியுதவி (ரூ.2000) வழங்கும் திட்டத்தில் விண்ணப்பங்கள் பெறுவது குறித்து  மாவட்ட ஆட்சித்தலைவர் ஆ.அணணாதுரை தலைமையில் இன்று (23.02.2019) கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது

இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்ததாவது : -
தமிழ்நாடு முதலமைச்சர் தமிழ்நாடு சட்ட மன்ற பேரவை விதி எண் 110ன் கீழ் வறுமைகோட்டிற்கு கீழ் வாழும் கிராமப்புற மற்றும் நகர்ப்புற ஏழைகளுக்கு குறிப்பாக விவசாய தொழிலாளர்கள் மற்றும் பல்வேறு தொழில்களில் ஈடுபட்டுள்ள ஏழை தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு ஒரு முறை சிறப்பு நிதியுதவியாக ரூ.2000 வழங்கிட உத்தரவிட்டதனை தொடர்ந்து, கணக்கெடுக்கும் பணி நடைபெற்று இணையதளத்தில் பதிவேற்றும் செய்யும் பணி முடிவடைந்தது. இதில் ஊரக பகுதிகளில் 1,26,082 குடும்பத்தினரும், நகர்ப்புற பகுதிகளில் 51,977 குடும்பத்தினரும் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதில் தகுதி வாய்ந்த குடும்பங்கள் விடுபட்டுள்ளதாக தமிழக அரசிற்கு தெரியவந்ததின் பேரில் தற்போது விடுப்பட்ட தகுதி வாய்ந்த குடும்பங்கள் குறித்து நகர்ப்புற மற்றும் ஊரக பகுதிகளில் கணக்கெடுப்பு பணி செய்திட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

விடுபட்ட குடும்ப தலைவி/தலைவர் இதற்கான படிவத்தினை www.tnrd.gov.in  என்ற இணைய தளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது அந்தந்த மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சி  அலுவலகங்களில் இலவசமாக பெற்றுக் கொள்ளலாம்.

இவ்விண்ணப்பங்களை தங்கள் குடியிருப்பு பகுதியில் நேரடியாக வந்து பூர்த்தி செய்து பெற்றுக்கொள்ள ஊரக மற்றும் நகர்ப்பகுதிகளில் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.  ஊரக மற்றும் நகர்ப்புற அலுவலர்கள்/பணியாளர்கள் கணக்கெடுப்பு பணிக்கு வருகை தரும்பொழுது விண்ணப்பத்தில் கோரியுள்ள விவரங்களை தயாராக வைத்திருக்க கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும், முழுமையாக பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவங்களை ஊரக பகுதிகளுக்கு வருகை தரும் வறுமை ஒழிப்பு சங்க அலுவலர்கள், ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு அலுவலர்கள், வட்டார வள பயிற்றுநர்கள், சுய உதவிக்குழு பயிற்சியாளர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்களிடமும் மற்றும் நகர்ப்புற பகுதிகளில் நகராட்சி அலுவலர்களிடமும் நேரடியாக வழங்கி அதற்கான ஒப்புதல் சீட்டினையும் பெற்றுக்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.

இக்கூட்டத்தில் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் மந்திராசலம், ஊரக வாழ்வாதார இயக்க திட்ட அலுவலர் இந்துபாலா மற்றும் அலுவலர்கள் உடன் இருந்தனர்.

பேரூராட்சியில் மொபைல் வாகனம் மூலம் வரி வசூல் ~ இதர சேவை தொடக்கம்!

பேராவூரணி பிப்.24-
பேராவூரணி தேர்வு நிலை பேரூராட்சியில் மொபைல் வாகனம் மூலம் பொதுமக்களை நேரடியாக தேடிச் சென்று வரிவசூல் மற்றும் இதர சேவைகள் வழங்கப்படுகிறது.

தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி பேரூராட்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆ.அண்ணாதுரை மற்றும் தனி அலுவலர் மற்றும் பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் ப.குற்றாலிங்கம் ஆகியோர் ஆலோசனைப்படி, பேரூராட்சிக்கு செலுத்தப்பட வேண்டிய வீட்டுவரி, சொத்துவரி, தொழில்வரி, குடிநீர் கட்டணம் மற்றும் உரிமக்கட்டணம் ஆகியவற்றை நிலுவையின்றி வசூலிக்க திட்டமிடப்பட்டது.

இதையடுத்து பேரூராட்சி அலுவலகத்தில் பொதுமக்கள் வந்து செலுத்தவும், பேரூராட்சி பணியாளர்கள் நேரடியாக சென்று வசூல் செய்யும் பணிகளும் முடுக்கி விடப்பட்டது. மேலும் இரண்டு ஆம்னி வேனில் லேப்டாப், பிரிண்டர், இன்வெர்ட்டர் அமைக்கப்பட்டுள்ளது. ஒலிபெருக்கி மூலம் அறிவிப்பு செய்யப்பட்டு, பேரூராட்சிக்குட்பட்ட 18 வார்டுகளிலும் வீடு தேடிச் சென்று நடமாடும் கணினி ஆன்லைன் வரிவசூல் வாகனம் மூலம் வீட்டுவரி, சொத்துவரி, தொழில்வரி, குடிநீர் கட்டணம் மற்றும் உரிமக்கட்டணம் வசூல் செய்யப்படுகிறது. மேலும் பிறப்பு, இறப்பு சான்றிதழ், சொத்துவரி பெயர் மாற்றம் மற்றும் இதர சேவைகளுக்கு விண்ணப்பங்கள் பெறப்பட்டு, அதற்கு தீர்வு காணப்படுகிறது.

இதுகுறித்து செயல் அலுவலர் மு.பொன்னுசாமி, தலைமை எழுத்தர் வீ.சிவலிங்கம் ஆகியோர் கூறுகையில், " பேரூராட்சி சார்பில் அடிப்படை வசதிகளான குடிநீர், தெருவிளக்கு, சாலைப்பணிகள், திடக்கழிவு மேலாண்மை பணிகள் செவ்வணே செய்திட இரண்டு நடமாடும் கணினி ஆன்லைன் வரிவசூல் வாகனம் மூலம் வாரத்தில் 7 நாளும் காலை 8 மணி முதல் மாலை 8 மணி வரை வசூல் பணி நடந்து வருகிறது. ஒவ்வொரு வாகனத்திலும் ஒரு பில் கலெக்டர், இரண்டு பணியாளர்கள் வரி வசூலில் ஈடுபடுகின்றனர். இது பொது மக்களிடையே பலத்த வரவேற்பை பெற்றுள்ளது. குறிப்பிடத்தக்க அளவில் வரி வசூலில் முன்னேற்றமும் உள்ளது" என்றார்.

தஞ்சாவூர் மாவட்டத்திலேயே முதன்முறையாக  நடமாடும் கணினி ஆன்லைன் வரிவசூல் வாகனம் மூலம் பேராவூரணி பேரூராட்சியில் வரிவசூல் செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.

Friday, February 22, 2019

'B' கிரேடு தரத்தில் அதிராம்பட்டினம் ரயில் நிலையம் (முழு விவரம்)

அதிராம்பட்டினம், பிப்.22
காரைக்குடி ~ திருவாரூர் இடையிலான 147 கி.மீ. தொலைவுக்கு அகல ரயில் பாதை அமைக்கும் பணியில், தற்போது காரைக்குடி ~ பட்டுக்கோட்டை வரையிலான 73 கி.மீ. தொலைவுக்கு அகலப் பாதை அமைக்கும் பணிகள் நிறைவடைந்துள்ளன. எஞ்சிய, பட்டுக்கோட்டை ~ திருவாரூர் வரையிலான 76 கிலோ மீட்டர் தொலைவுக்கு அகல ரயில் பாதை அமைக்கும் பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இந்த வழித்தடத்தில் உள்ள அதிராம்பட்டினம், முத்துப்பேட்டை, தில்லைவிளாகம், திருநெல்லிக்காவல் ஆகிய பகுதிகளில் ரயில் நிலையங்கள் கட்டுமானப்பணிகள் நிறைவடையும் தருவாயில் உள்ளது.

இதில், அதிராம்பட்டினம் ரயில் நிலையம் 'பி' கிரேடு தர உயர்வை பெற்றுள்ளது. பொதுவாக, ரயில் நிலையங்களில் கிடைக்கும் வருவாயை கணக்கிட்டு, அதன் கிரேடு நிர்ணயிக்கப்படுகிறது. ஆண்டுக்கு, 60 கோடிக்கு மேல் வருவாய் கிடைத்தால், 'ஏ1 கிரேடு' எனவும், 8 முதல் 60 கோடி ரூபாய் வருவாய் கிடைத்தால் 'ஏ கிரேடு' எனவும், 4 முதல் 8 கோடி ரூபாய்க்குள் வருவாய் கிடைத்தால், 'பி கிரேடு' எனவும் தரம் நிர்ணயிக்கப்படுகிறது.

பட்டுக்கோட்டை முதல், அதிராம்பட்டினம், முத்துப்பேட்டை, தில்லைவிளாகம், திருத்துறைப்பூண்டி, திருவாரூர் வரையிலான வழித்தடத்தில் நடைபெறும் பணிகள் இறுதிகட்டத்தை எட்டியுள்ளதாகவும், வரும் மாதம் மார்ச் 15 தேதிக்குள் நிறைவடைய இருப்பதாகவும், இந்த வழித்தடத்தில் முதல் கட்ட சோதனை ஓட்டத்தை வரும் மார்ச் மாத இறுதியில் நடத்த இருப்பதாகவும், பின்னர், சிறப்பு ரயிலைப் பயன்படுத்தி அதிவேக சோதனை ஓட்டத்தை நடத்த இருப்பதாகவும், அப்போது, தென் மண்டல ரயில்வே பாதுகாப்பு ஆணையர் ஆய்வு நடத்துவார் எனவும், சிஆர்எஸ் (கமிஷன் ஆப் ரயில்வே சேப்டி) அனுமதி கிடைத்த பிறகு ரயில் சேவை தொடங்கும் என்றும், இந்த வழித்தடம் வழியாக சென்னை ~ காரைக்குடி, சென்னை ~ இராமேஸ்வரம் ஆகிய 2 எக்ஸ்பிரஸ் ரயில்கள், காலை, மதியம், மாலை, இரவு ஆகிய வேளைகளில் 4 பாசஞ்சர் ரயில்கள் இயக்க இருப்பதாக ரயில்வே வட்டாரங்கள் தகவல் தெரிவித்தன.

அதிராம்பட்டினம் ரயில் நிலையத்திலிருந்து...
சேக்கனா நிஜாம் (எம்.நிஜாமுதீன்)
ஏ.சாகுல் ஹமீது
 
 
 
 
 
 

Thursday, February 21, 2019

அதிராம்பட்டினம் பகுதியில் விளம்பர தட்டிகள் வைப்பது தொடர்பாக அனைத்துக்கட்சி கூட்டம் (படங்கள்)

அதிராம்பட்டினம், பிப்.21
அதிராம்பட்டினம் பேரூர் சாலையோரத்தில் விளம்பரத் தட்டிகள், பிளெக்ஸ் பேனர்கள் வைப்பது தொடர்பாக அதிராம்பட்டினம் பேரூராட்சி அலுவலகத்தில் அனைத்து கட்சிகள், ப்ளெக்ஸ் பேனர் கடை உரிமையாளர்கள் கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை மாலை நடைபெற்றது.

கூட்டத்திற்கு பேரூராட்சி செயல் அலுவலர் எல்.ரமேஷ் தலைமை வகித்தார்.  அதிராம்பட்டினம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் காந்தி, அதிராம்பட்டினம் பேரூர் துப்புரவு ஆய்வாளர் அன்பரசன், மேற்பார்வையாளர் வெங்கடேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இக்கூட்டத்தில், அதிமுக பேரூர் செயலாளர் ஏ.பிச்சை, திமுக பேரூர் இணைச் செயலாளர் ஏ.எம்.ஒய் அன்சர்கான், அமமுக பேரூர் செயலாளர் ஜமால் முகமது, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி பேரூர் செயலாளர் என்.காளிதாஸ், தமுமுக அதிரை பேரூர் செயலளார் எம்.ஆர் கமாலுதீன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில், "சென்னை உயர்நீதிமன்ற வழிகாட்டு நெறிமுறைகளின்படி,  பிளக்ஸ், பேனர்கள், தட்டிகள் வைக்கக்கூடாது. ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ளதை உடனடியாக முற்றிலுமாக அகற்ற வேண்டும். நீதிமன்ற உத்தரவின்படி, மறு அறிவிப்பு வரும் வரை விதிகளை பின்பற்றி நடக்க வேண்டும்" என கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டது.
 
 
 
 

முத்துப்பேட்டை ரயில் நிலைய கட்டுமானப்பணியின் தற்போதைய நிலவரம் (படங்கள்)

முத்துப்பேட்டை, பிப். 21
திருவாரூர் ~ பட்டுக்கோட்டை இடையேயான வழித்தடத்தில் உள்ள திருத்துறைப்பூண்டி, தில்லைவிளாகம் (நாச்சிகுளம்), முத்துப்பேட்டை, அதிராம்பட்டினம், பட்டுக்கோட்டை வரையிலான 70 கிலோ மீட்டர் தூர அகல ரயில் பாதை பணிகள் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.

இந்த வழித்தடத்தில் உள்ள முத்துப்பேட்டை ரயில் நிலையத்தில் 90 சதவிகித பணிகள் நிறைவடைந்துள்ளதாகவும், எஞ்சிய இறுதிகட்டப் பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருவதாக ரயில்வே வட்டாரங்கள் தெரிவித்தன.

முத்துப்பேட்டை ரயில் நிலையத்தில் இன்று வியாழக்கிழமை மாலை எடுக்கப்பட்ட படங்கள்...