.

Pages

Thursday, June 25, 2020

விதி மீறல்: திருமண மண்டபத்துக்கு 'சீல்' வைப்பு!

அதிரை நியூஸ்: ஜூன் 25
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தில் தமிழ்நாடு அரசின் உத்தரவை மீறி அதிக நபர்களுடன் திருமண நிகழ்ச்சி நடைபெற்ற திருமண மண்டபத்திற்கு சீல் வைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சித் தலைவர் ம.கோவிந்த ராவ் தகவல் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்துள்ளதாவது :-
கும்பகோணம் பச்சையப்பன் தெருவில் உள்ள பாலாஜி மஹாலில் கடந்த 24.06.2020 அன்று கும்பகோணம் தியாகி ராமசாமி தெருவைச் சேர்ந்த மணமகளுக்கும், கும்பகோணம் பாணாதுறையைச் சேர்ந்த மணமகனுக்கும் திருமண நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு சென்னையிலிருந்து சதீஷ், வெங்கடேசன், வேலு, சுரேந்திரன், சண்முகம், ஸ்ரீதர் ஆகிய ஆறு நபர்கள் வந்தபோது, நீலத்தநல்லூர் சோதனைச்சாவடியில் காவல்துறை மேற்கொண்ட ஆய்வில் ஆறு நபர்களும் உரிய அனுமதியின்றி சென்னையிலிருந்து வந்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. உரிய அனுமதியின்றி வந்த ஆறு நபர்கள் மீது போலீசாரால் சுவாமிமலை காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

மேலும், உரிய அனுமதியின்றி வந்த ஆறு நபர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொண்டபோது, அவர்களில் ஸ்ரீதர் என்பவருக்கு கொரோனா நோய்த்தொற்று உறுதிசெய்யப்பட்டது. போலீசார் உத்தரவை மீறி ஆறு நபர்களும் 24.06.2020 அன்று கும்பகோணம் பாலாஜி மஹாலில் நடைபெற்ற திருமணத்தில் கலந்து கொண்டுள்ளனர். மேலும், திருமண நிகழ்ச்சியில் அரசின் உத்தரவை மீறி அதிகமான நபர்கள் கலந்து கொண்டுள்ளனர். இதனால் ஸ்ரீதர் என்பவர் கொரோனா நோய் பரவுவதற்கு  காரணமாக இருந்துள்ளார்.

எனவே, அனுமதியின்றி வந்த ஸ்ரீதர் மற்றும் ஐந்து நபர்கள் மீதும், அதிகளவில் கூட்டம் சேர்த்த மணமகள் வீட்டார், மணமகன் வீட்டார் மற்றும் அனுமதித்த திருமண மண்டபம் உரிமையாளர் ஆகியோர் மீதும் கும்பகோணம் கிழக்கு காவல் நிலையத்தில் கொலை முயற்சி உட்பட பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, திருமண மண்டபத்திற்கு சீல் வைக்கப்பட்டது.
இவ்வாறு மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.

அதிராம்பட்டினத்தில் ஜூன் 27 ந் தேதி ஜமாபந்தி!

அதிரை நியூஸ்: ஜூன் 25
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வருவாய் கிராமங்களிலும் கிராம நிர்வாக அலுவலர்களால் பராமரிக்கப்பட்டு வரும் வருவாய் கிராமக்கணக்குகளை ஒவ்வொரு வருடமும் அந்தந்த பசலியில் (வருடம்) இறுதி மாதத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர், மாவட்ட வருவாய் அலுவலர் மற்றும் துணை ஆட்சியர்களால் தணிக்கை செய்யப்பட்டு வருகிறது.

அதேபோன்று, நடப்பு பசலி வருடத்திற்கு (1429) தஞ்சாவூர் மாவட்டத்தில் கீழ்க்கண்ட அலுவலர்களால் 26.06.2020 முதல் 30.06.2020 வரை 1429ம் பசலிக்கான கிராமக்கணக்குகள் தணிக்கை செய்யப்படவுள்ளது.
1429ஆம் பசலி ஆண்டு வருவாய்த்தீர்வாய (ஜமாபந்தி) மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களால்  திருவையாறு வட்டாட்சியர் அலுவலகத்தில் 26.06.2020 அன்று நடுக்காவேரி உள்வட்டத்திற்கும், 27.06.2020 அன்று கண்டியூர் உள்வட்டத்திற்கும், 29.06.2020 அன்று திருவையாறு உள்வட்டத்திற்கும் வருவாய்த்தீர்வாயம் நடத்தப்படவுள்ளது.

மாவட்ட வருவாய் அலுவலர் தஞ்சாவூர் அவர்களால் ஒரத்தநாடு வட்டாட்சியர் அலுவலகத்தில் 26.06.2020 அன்று காவாலிப்பட்டி மற்றும் தொண்டராம்பட்டு உள்வட்டங்களுக்கும், 27.06.2020 அன்று உளுர் மற்றும் ஒரத்தநாடு உள்வட்டங்களுக்கும், 29.06.2020 அன்று ஈச்சங்கோட்டை மற்றும் சில்லத்தூர் உள்வட்டங்களுக்கும், 30.06.2020 அன்று திருமங்கலக்கோட்டை மற்றும் தெக்கூர் உள்வட்டங்களுக்கும் வருவாய்த்தீர்வாயம் நடத்தப்படவுள்ளது.

தனி மாவட்ட வருவாய் அலுவலர் (நிலஎடுப்பு) சென்னை-கன்னியாகுமரி தொழிற்தட சாலைத்திட்டம் (ஊமுஐஊP), கும்பகோணம்; அவர்களால் திருவிடைமருதூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் 26.06.2020 அன்று பந்தநல்லூர்; உள்வட்டத்திற்கும். 27.06.2020 அன்று திருப்பனந்தாள் உள்வட்டத்திற்கும் 29.06.2020 அன்று கதிராமங்கலம் உள்வட்டத்திற்கும் 30.06.2020 அன்று ஆடுதுறை மற்றும் திருவிடைமருதூர் உள்வட்டங்களுக்கும் வருவாய்த்தீர்வாயம் நடத்தப்படவுள்ளது.

சார் ஆட்சியர், பட்டுக்கோட்டை அவர்களால் பேராவூரணி வட்டாட்சியர் அலுவலகத்தில் 26.06.2020 அன்று பெருமகளுர், உள்வட்டத்திற்கும், 27.06.2020 அன்று குருவிக்கரம்பை உள்வட்டத்திற்கும் 29.06.2020 அன்று ஆவணம்; உள்வட்டத்திற்கும் 30.06.2020 அன்று பேராவூரணி உள்வட்டத்திற்கும் வருவாய்த்தீர்வாயம் நடத்தப்படவுள்ளது.

வருவாய் கோட்ட அலுவலர் தஞ்சாவூர் அவர்களால் பூதலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் 26.06.2020 அன்று அகரப்பேட்டை உள்வட்டத்திற்கும், 27.06.2020 அன்று திருக்காட்டுப்பள்ளி உள்வட்டத்திற்கும் 29.06.2020 அன்று பூதலூர் உள்வட்டத்திற்கும் 30.06.2020 அன்று செங்கிப்பட்டி உள்வட்டத்திற்கும் வருவாய்த்தீர்வாயம் நடத்தப்படவுள்ளது.

வருவாய் கோட்ட அலுவலர் (பொறுப்பு), கும்பகோணம் அவர்களால் கும்பகோணம்; வட்டாட்சியர் அலுவலகத்தில் 26.06.2020 அன்று தேவனாஞ்சேரி உள்வட்டத்திற்கும், 27.06.2020 அன்று முருக்கங்குடி உள்வட்டத்திற்கும் 29.06.2020 அன்று நாச்சியார்கோவில்; உள்வட்டத்திற்கும் 30.06.2020 அன்று சோழன்மாளிகை மற்றும் கும்பகோணம் உள்வட்டத்திற்கும் வருவாய்த்தீர்வாயம் நடத்தப்படவுள்ளது.

உதவி ஆணையர் (கலால்), தஞ்சாவூர் அவர்களால் தஞ்சாவூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் 26.06.2020 அன்று பெரம்ப10ர் உள்வட்டத்திற்கும், 27.06.2020 அன்று வல்லம் உள்வட்டத்திற்கும் 29.06.2020 அன்று தஞ்சாவூர் உள்வட்டத்திற்கும் 30.06.2020 அன்று இராமாபுரம் மற்றும் நாஞ்சிக்கோட்டை உள்வட்டங்களுக்கும்; வருவாய்த்தீர்வாயம் நடத்தப்படவுள்ளது.

மாவட்ட ஆட்சியரின் கூடுதல் நேர்முக உதவியாளர் (நிலம்) தஞ்சாவூர் அவர்களால் பாபநாசம் வட்டாட்சியர் அலுவலகத்தில் 26.06.2020 அன்று அய்யம்பேட்டை உள்வட்டத்திற்கும், 27.06.2020 அன்று கபிஸ்தலம் உள்வட்டத்திற்கும் 29.06.2020 அன்று பாபநாசம் மற்றும் மெலட்டூர் உள்வட்டங்களுக்கும் 30.06.2020 அன்று சாலியமங்கலம் மற்றும் அம்மாப்பேட்டை உள்வட்டங்களுக்கும்; வருவாய்த்தீர்வாயம் நடத்தப்படவுள்ளது.

தனித்துணை ஆட்சியர் (வருவாய் நீதிமன்றம்) தஞ்சாவூர் அவர்களால் பட்டுக்கோட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில் 26.06.2020 அன்று குறிச்சி மற்றும் திருச்சிற்றம்பலம் உள்வட்டங்களுக்கும் 27.06.2020 அன்று அதிராம்பட்டினம் மற்றும் தம்பிக்கோட்டை உள்வட்டங்களுக்கும் 29.06.2020 அன்று நம்பிவயல், பெரியக்கோட்டை மற்றும் துவரங்குறிச்சி உள்வட்டங்களுக்கும் 30.06.2020 அன்று மதுக்கூர். ஆண்டிக்காடு மற்றும் பட்டுக்கோட்டை உள்வட்டங்களுக்கும் வருவாய்த்தீர்வாயம் நடத்தப்படவுள்ளது.

வருவாய்த்தீர்வாயம் குறிப்பிட்ட நாட்களில் காலை 10.00 மணிக்கு அந்தந்த வட்டாட்சியர் அலவலகத்தில் துவங்கி நடைபெறும். கொரோனா வைரஸ் நோய்த்தொற்றை தடுப்பதற்காக அனைத்து மாவட்டங்களிலும் குற்றவியல் நடைமுறைச்சட்டப்பிரிவு-144ன் கீழ் ஊரடங்கு உத்தரவு 30.06.2020 நள்ளிரவு 12.00 மணிவரை நீட்டிக்கப்பட்டுள்ளது. குற்றவியல் நடைமுறைச் சட்டப்பிரிவு-144ன்படி மாவட்டத்தில் பொது இடங்களில் 5 மற்றும் அதற்கு மேற்பட்ட நபர்கள் கூடுவதற்கும், பொதுமக்கள் கூட்டத்திற்கும் தடை ஆணை விதிக்கப்பட்டுள்ளது. 30.06.2020 நள்ளிரவு 12.00 மணிவரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளதால் வருவாய்த்தீர்வாயம் முடிந்தவுடன் குடிகள் கூட்டம் நடைபெறாது.

எனவே, கொரோனா வைரஸ் நோய்த்தொற்றை தடுக்கும்பொருட்டு நேரடியாக மனுக்களை பெறுவதைத் தவிர்க்கவும், 29.06.2020ஆம் தேதி முதல் 15.07.2020ஆம் தேதிவரை இணையவழியாக ( https://gdp.tn.gov.in/jamabandhi ) என்ற இணையதள முகவரியிலோ அல்லது இ-சேவை மையங்கள் மூலமாகவோ பொதுமக்களிடமிருந்து மனுக்கள் பெறப்படும். பெறப்பட்ட மனுக்கள் 15.07.2020-க்கு பின் தீர்வு செய்யப்படும் எனவும் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார்.

அதிராம்பட்டினம் 4 செ.மீ, மதுக்கூர் 3 செ.மீ, பட்டுக்கோட்டை 2 செ.மீ மழை பதிவு!

கோப்பு படம்
அதிராம்பட்டினம், ஜூன் 25
அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுப்புற பகுதியில் பகலில் கடும் வெப்பம் நிலவி வந்த நிலையில், வியாழக்கிழமை நள்ளிரவில் மழை செய்தது. சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நீடித்து பெய்த மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியது.

தஞ்சாவூர் மாவட்டத்தில் இன்று (25-06-2020) வியாழக்கிழமை காலை 8.30 மணி நேர நிலவரப்படி, அதிகபட்சமாக அதிராம்பட்டினம் 4 செ.மீ, மதுக்கூர் 3 செ.மீ, பட்டுக்கோட்டை 2 செ.மீ மழை பதிவாகியது.

அதிராம்பட்டினத்தில் அல்ஹாஜ் L.S.M முகமது அப்துல் காதர் ஆலிம் (81) வஃபாத்!

அதிரை நியூஸ்: ஜூன் 25
அதிராம்பட்டினம், நடுத்தெருவை சேர்ந்த மர்ஹூம் L.S.M முகமது உமர் தம்பி மரைக்காயர் அவர்களின் மகனும், மர்ஹூம் ஹாஜி L.M.S முகமது அப்துல்லா மரைக்காயர் அவர்களின் மருமகனும், ஹாஜி ஹாஜா முகைதீன், ஹாஜி முகமது அப்துல்லா, ஹாஜி சுஹைப் ஆலிம், ஹாஜி சாகுல் ஹமீது ஆகியோரின் மாமனாருமாகிய அல்ஹாஜ் L.S.M முகமது அப்துல் காதர் ஆலிம் (வயது 81) அவர்கள் இன்று (25-06-2020) பகல் இஜாபா பள்ளிவாசல் அருகில் உள்ள இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

அன்னாரின் ஜனாஸா இன்று (25-06-2020) மாலை 5 மணியளவில் அதிராம்பட்டினம் மரைக்கா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.

Wednesday, June 24, 2020

அதிராம்பட்டினத்தில் 95.54 டிகிரி வெப்பம் பதிவு!

அதிராம்பட்டினம், ஜூன்.24
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் பகுதியில் இன்று புதன்கிழமை மாலை 5.30 மணி நேர நிலவரப்படி 95.54 டிகிரி ஃபாரன்ஹீட் (35.3" C) வெப்பம் பதிவாகியது என சென்னை வானிலை மையம் இன்று (24.06.2020) வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

அதிராமபட்டினம் பகுதியில், பகலில் கடும் வெப்பம் பதிவாகிய நிலையில், இரவில் லேசான குளிர்ந்த காற்று வீசி வருகிறது. தமிழகத்தில் அதிகபட்சமாக மதுரை 102.2, வேலூர் 101.6, திருச்சி 101.3, கரூர் பரமத்தி 100.4 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவாகியது. 

பட்டுக்கோட்டை சப் கலெக்டருக்கு நன்றி தெரிவிப்பு!

பட்டுக்கோட்டை, ஜூன் 24
தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான நலச் சங்கத்தின் சார்பாக, பட்டுக்கோட்டை சார் ஆட்சியர் ஏ.ஆர் கிளாஸ்டன் புஷ்பராஜ், மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத் துறை இணைச் செயலாளராக பணி மாற்றம் செய்யப்பட்டுள்ளதை அடுத்து, சங்கத்தின் சார்பில், தஞ்சை மாவட்டத் தலைவர் அ.பஹாத் முகமது, சேதுபாவாசத்திரம் ஒன்றியச் செயலாளர் ஜலீல் முகைதீன் மற்றும் மஞ்சு அறக்கட்டளை நிர்வாக இயக்குனர் கௌரி ஆகியோர் நேரில் சந்தித்து சால்வை அணிவித்து பூங்கொத்து வழங்கி வாழ்த்து தெரிவித்துனர்.

அப்போது, மாதந்தோறும் மாற்றுத்திறனாளிகளுக்கான குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடத்தி, மாற்றுத்திறனாளிகள் அளித்த கோரிக்கைகளுக்கு உடனடி தீர்வுகளைப் பெற்றுத்தந்தற்கு நன்றி தெரிவித்துக்கொண்டனர்.

அதிராம்பட்டினத்தில் நாம் தமிழர் கட்சி சார்பில் பொதுமக்களுக்கு கப சுரக் குடிநீர் விநியோகம் (படங்கள்)

அதிராம்பட்டினம், ஜூன் 24
கரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வகையில், நாம் தமிழர் கட்சி அதிராமபட்டினம் பேரூர் சார்பில், அதிராம்பட்டினத்தில் பொதுமக்களுக்கு கப சுரக் குடிநீர் இன்று புதன்கிழமை காலை வழங்கப்பட்டது.

அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் பயணிகள், வர்த்தகர்கள் உள்பட பொதுமக்கள் சமூக இடைவெளியை பின்பற்றி கப சூரக் குடிநீரை வாங்கி அருந்தினர்.

இந்நிகழ்ச்சியில், அக்கட்சியின் அதிராம்பட்டினம் பேரூர் செயலாளர் மீ. ஜெஹபர் சாதிக் மற்றும் அக்கட்சியை சேர்ந்த பலர் கலந்துகொண்டனர்.
 
 
 

Tuesday, June 23, 2020

ஐஸ் குச்சியில் பங்களா வீடு கட்டிய இளைஞர் (படங்கள்)

அதிரை நியூஸ்: ஜூன் 23
அதிராம்பட்டினத்தை சேர்ந்தவர் முகைதீன் சேக்காதி. இவரது மகன் ரஹ்மத்துல்லா (19). இளங்கலை இரண்டாமாண்டு மாணவர். கலை ஆர்வத்தில் அதிக ஈடுபாடு கொண்டவரான இவர். கரோனா ஊரடங்கு காலத்தில் கிடைத்த ஓய்வு நேரங்களில் ஐஸ் குச்சிகளை வைத்து அழகிய அலங்கரிப்புடன் பங்களா வீடு கட்டி அசத்தியுள்ளார். வீட்டுக்கு ஏற்ற பெயிண்டிங் கொடுத்திருப்பது காண்போரை கவர்ந்து வருகிறது.

சிறு சிறு பொருட்களைக் கொண்டு தனது கை வண்ணத்தில் எளிய முறையில் உருவாக்கியுள்ள படகு, சுவர் கடிகாரம், ட்ரை சைக்கிள், பூமாலை, போட்டோ பிரேம், பெயிண்டிங் உள்ளிட்ட 100 க்கும் மேற்பட்ட படைப்புகளை காட்சி படுத்தியுள்ளார். இவரது படைப்புகளை அக்கம்பக்கத்தினர் வியப்புடன் கண்டு ரசித்து இவரது கலை ஆர்வத்தை பாராட்டி உற்சாகப்படுத்தி வருகின்றனர்.

செய்தி மற்றும் படங்கள்:
கே. அப்துல் வஹாப்
ரஹ்மத்துல்லா