.

Pages

Showing posts with label மல்லிபட்டினம் செய்திகள். Show all posts
Showing posts with label மல்லிபட்டினம் செய்திகள். Show all posts

Wednesday, November 25, 2020

மல்லிபட்டினம் கடலோரப் பகுதியில் புயல் முன்னெச்சரிக்கை கண்காணிப்பு அலுவலர், ஆட்சியர் ஆய்வு!

மல்லிபட்டினம், நவ.25-
தஞ்சாவூர் மாவட்டம், மல்லிபட்டினம் கடலோரப் பகுதியில், புயல் முன்னெச்சரிக்கை பணிகளை கண்காணிக்கும் விதமாக, புதன்கிழமை மாலை, மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், தோட்டக்கலை துறை இயக்குனருமான என்.சுப்பையன், தஞ்சை மாவட்ட ஆட்சியர் ம.கோவிந்தராவ் முன்னிலையில் ஆய்வு மேற்கொண்டார். 

மல்லிப்பட்டினம் துறைமுகம், காரங்குடா புயல் பாதுகாப்பு மையம் ஆகிய இடங்களில் ஆய்வு நடத்தி, அங்குள்ள நிவாரண முகாம்களில் உரிய வசதிகள் செய்யப்பட்டுள்ளதா என கேட்டறிந்தார். பின்னர் அம்புலியாறு பகுதிக்கு வந்த அவரை பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் மா.கோவிந்தராவ் வரவேற்றார். அம்புலியாற்றின் முகத்துவாரத்தில் தற்காலிகமாக படகுகள் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதை ஆய்வு செய்தார். 

அவரிடம்,  சட்டமன்றத்தில் முதலமைச்சர் 110 விதியின் கீழ் அறிவித்த அம்புலியாறு தடுப்பணை திட்டப்பணிகளை விரைந்து தொடங்குமாறு வலியுறுத்தினார். தொடர்ந்து முடியனாறு பகுதியில் ஆற்று முகத்துவாரத்தில் தூர்வாரும் பணிகளை தொடங்க வேண்டும் என வலியுறுத்திய சட்டமன்ற உறுப்பினர் ம.கோவிந்தராசு, புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து சிறப்பு அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியரிடம் கலந்து ஆலோசனை நடத்தினார். 

ஆய்வின்போது, பட்டுக்கோட்டை சார் ஆட்சியர் பாலச்சந்தர், பயிற்சி ஆட்சியர் அமித், பட்டுக்கோட்டை காவல்துறை கண்காணிப்பாளர் புகழேந்தி கணேஷ், மீன்துறை இயக்குநர் சிவகுமார், சேதுபாவாசத்திரம் அதிமுக  வடக்கு ஒன்றியச் செயலாளர் நாடியும் சிவ. மதிவாணன், தெற்கு ஒன்றியச் செயலாளர் அருணாச்சலம், மாவட்ட மாணவர் அணி இணைச் செயலாளர் ஆர்.பி.ராஜேந்திரன், வட்டாட்சியர் க.ஜெயலெட்சுமி மற்றும் பொதுப்பணித்துறை, வருவாய்த்துறை அலுவலர்கள் உடன் இருந்தனர். 


Monday, August 24, 2020

மல்லிபட்டினத்தில் எஸ்டிபிஐ கட்சியின் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம்!

மல்லிபட்டினம், ஆக. 24
எஸ்டிபிஐ கட்சி தஞ்சை தெற்கு மாவட்ட நிர்வாகிகளின் கலந்தாலோசனைக் கூட்டம், அக்கட்சியின் மல்லிபட்டினம் கிளை அலுவலகத்தில் இன்று (24.8.2020) திங்கள்கிழமை நடைபெற்றது.

கூட்டத்திற்கு, அக்கட்சியின் தஞ்சை தெற்கு மாவட்டத் தலைவர் என். முகமது புகாரி தலைமை வகித்தார். மாவட்ட பொதுச்செயலாளர் எஸ். சாகுல் ஹமீது முன்னிலை வகித்தார்.

கூட்டத்தில், புதிய கல்விக் கொள்கை ரத்து செய்தல், சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு அறிக்கையை கைவிடுதல், கிரிமினல் சட்டங்களில் திருத்தம் செய்வதை கைவிடுதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் முழுவதும் எஸ்டிபிஐ கட்சி முன்னெடுக்கும் பிரச்சாரம் குறித்து விளக்கிக் கூறப்பட்டது. மேலும், இந்த 3 கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்டம் முழுவதும் தெருமுனை பிரச்சாரம் மேற்கொள்வது, நோட்டீஸ் விநியோகிப்பது, ஆர்ப்பாட்டங்கள் நடத்துவது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

நிறைவில், சுதந்திர தினத்தில் மாவட்டம் முழுவதும் மேற்கொண்ட பணிகள் குறித்தும், கட்சியின் புதிய உறுப்பினர் சேர்க்கை குறித்தும், சமூக ஊடக அணியை மேம்படுத்துதல் குறித்தும் எடுத்துரைக்கப்பட்டன.
 

Saturday, August 22, 2020

மல்லிபட்டினத்தில் TNTJ அமைப்பினர் 50 யூனிட் இரத்தம் தானம் (படங்கள்)

மல்லிபட்டினம், ஆக.22
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் மல்லிபட்டினம் கிளை சார்பில், 90-வது இரத்த தானம் முகாம் மல்லிபட்டினத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.

முகாமிற்கு, அவ்வமைப்பின் தஞ்சை தெற்கு மாவட்டத் தலைவர் கே ராஜிக் முகமது தலைமை வகித்தார். மாவட்ட மருத்துவரணி செயலாளர் ஹாஜா ஜியாவுதீன் முன்னிலை வகித்தார். முகாமில், சேதுபாவாசத்திரம் காவல் ஆய்வாளர் வி.ஆர் அண்ணாதுரை கலந்துகொண்டு முகாமை தொடங்கி வைத்தார்.

இதில், தஞ்சாவூர் அரசு இராசா மிராசுதார் மருத்துவமனை மருத்துவக்குழுவினர் கலந்துகொண்டு, 50 யூனிட் இரத்தத்தை டி.என்.டி.ஜே அமைப்பின் கொடையாளர்களிடமிருந்து தானமாகப் பெற்றனர்.

இந்நிகழ்வில், மாவட்டச் செயலாளர் வல்லம் ஜாபர், மாவட்ட துணைச் செயலாளர் பாவா, மல்லிப்பட்டினம் கிளை நிர்வாகிகள் ஷேக் அப்துல்லாஹ், ஜமால் மொய்தீன், கமால் மொய்தீன், அப்துல்லாஹ், சையத் இப்ராஹிம், லுஹா, ரஹீம், ஹாரூன், அப்துல் மஜீத், முகமது, இபாதுர் ரஹ்மான், ஜிஹானுதீன், ஜவாஹிர், ஷாஜஹான், ரத்வான், ஹாலித், நிஜாம், இஸ்மாயில்
உள்ளிட்ட அவ்வமைப்பினர் பலர் முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியைக் கடைபிடித்து கலந்துகொண்டனர். முகாம் ஏற்பாட்டினை, மல்லிபட்டினம் கிளை மருத்துவ அணியினர் செய்திருந்தனர்.
 
 
 
 
 

Friday, July 24, 2020

மீனவர்களையும், மீன்பிடித்தொழிலையும் பாதுகாக்கக் கோரி ஆர்ப்பாட்டம் (படங்கள்)

மல்லிபட்டினம், ஜூலை 24
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் அருகே உள்ள மல்லிப்பட்டினம் மீன்வளத்துறை அலுவலகம் முன்பு தடைசெய்யப்பட்ட இரட்டை மடி சுருக்கு மடி போன்றவற்றை பயன்படுத்தி மீன் பிடிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும், அனைத்து நாட்டுப்படகிற்கும் மானிய விலையில் பெட்ரோல், டீசல் கிடைக்க நடவடிக்கை எடுக்கக்கோரி AITUC மற்றும் நாட்டுப்படகு மீனவர் சங்க மீனவர்கள் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ஆர்ப்பாட்டத்திற்கு, இந்திய கம்னியூனிஸ்ட் கட்சி அதிராம்பட்டினம் பேரூர் செயலாளர் என். காளிதாஸ் தலைமை வகித்தார். இதில், ஏ.ஐ.ஓய்.எப் ஒன்றியச் செயலாளர் கே.ஹாஜா முகைதீன், எஸ். முகமது மீராஷாகிப், அப்துல் முனாப் மற்றும் மல்லிபட்டினம், சேதுபாவாசத்திரம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த கட்சியினர் கலந்துகொண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில், தடைசெய்யப்பட்ட வலைகளை பயன்படுத்துவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும், மானிய விலையில் பெட்ரோல், டீசல் வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
 
 
 
 

Thursday, May 28, 2020

ஊரடங்கு காலத்தில் ஏழை மக்களுக்கு இலவசமாக மருத்துவச் சேவை செய்யும் டாக்டர் சே.ஜியாவுர் ரஹ்மானுக்கு பாராட்டு!

மல்லிபட்டினம், மே 28
ஊரடங்கு காலத்தில் ஏழை மக்களுக்கு இலவசமாக மருத்துவச் சேவை செய்யும் மருத்துவர் சே.ஜியாவுர் ரஹ்மானுக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.

தஞ்சாவூர் மாவட்டம், மல்லிபட்டினம் புதுமனைத்தெருவைச் சேர்ந்தவர் சே. ஜியாவூர் ரஹ்மான் (25). அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் கல்லூரி கணினி அறிவியல் துறைத்தலைவர் பேராசிரியர் ஏ.சேக் அப்துல் காதர் மகன் ஆவார். இவர், எம்.பி.பி.எஸ் முடித்துவிட்டு, மல்லிபட்டினம் பகுதி மக்களுக்கு மருத்துவ சேவையாற்றி வருகிறார்.

கரோனா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்த கடந்த மார்ச் 24-ம் தேதி முதல் நாடு முழுவதும் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டது. இதையடுத்து ஊரடங்கு தொடங்கியதும் பெரும்பாலான தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் சமூக இடைவெளியை கடைபிடிப்பதற்காக தங்களது கிளினிக்குகளை மூடிவிட்டு வீட்டில் ஓய்வில் இருந்து வந்த நிலையில், இதற்கு மாறாக, மருத்துவ சிகிச்சைக்காக தன்னிடம் வரும் ஏழை மக்கள், முதியோர், ஆதரவற்றோர், கூலித்தொழிலாளிகள் உள்ளிட்ட நோயாளிகளை பரிசோதனை செய்து, உரிய ஆலோசனை வழங்கி வருகிறார் டாக்டர் சே.ஜியாவுர் ரஹ்மான். இதற்காக, நோயாளிகளிடம் எவ்வித மருத்துவக் கட்டணமும் வசூலிப்பதில்லை. அவர்களை பரிசோதனை செய்து மருந்துகள் மட்டும் எழுதிக் கொடுத்து வருகிறார்.

சாதி, மதம், இனம் என எவ்வித பாகுபாடின்றி அனைவருக்கும் எந்நேரமும் இன்முகத்தோடு மருத்துவச் சிகிச்சை அளிக்கிறார். அவசர சிகிச்சைக்காக நோயாளிகளின் வீடுகளுக்கு தேடிச் சென்றும் சிகிச்சை அளிக்கும் இவர், கரோனா காலத்தில் இதுவரையில் 500 க்கும் மேற்பட்ட நோயாளிகளுக்கு இலவசமாக சிகிச்சை அளித்துள்ளார்.

ஊரடங்கு காலத்தில் மக்களின் சிரமங்களை அறிந்து இலவசமாக சிகிச்சை அளிக்கும் டாக்டர் சே.ஜியாவுர் ரஹ்மானின் ஓய்வில்லா மருத்துவச் சேவையைப் பாராட்டி மல்லிபட்டினம் மற்றும் சுற்றுப்புற பகுதி பொதுமக்கள் நன்றி தெரிவித்து வரும் நிலையில், இவருக்கு காங்கிரஸ் கட்சியின் தஞ்சை தெற்கு மாவட்ட சிறுபான்மை நலப்பிரிவு துணைத்தலைவர் நாகூர் கனி இன்று வியாழக்கிழமை நேரில் சந்தித்து சால்வை அணிவித்து பாராட்டுத் தெரிவித்தார்.
 

Sunday, November 24, 2019

மல்லிப்பட்டினத்தில் உலக மீனவா் தின விழா!

மல்லிபட்டினம்: நவ.24
மல்லிப்பட்டினம் அரசு மேல்நிலைப் பள்ளியில், உலக மீனவா் தின விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

ஒவ்வொரு ஆண்டும் நவம்பா் 21- ஆம் தேதி உலக மீனவா் தினமாகக் கடைப்பிடிக்கப்படுகிறது. விவசாயிகளுக்கு அடுத்தபடியாக உணவுத் தேவையைப் பூா்த்திச் செய்வதில் மீனவா்கள் முக்கிய பங்கு வகிக்கின்றனா். தங்கள் உயிரை பணயம் வைத்து கடலுக்கு சென்று மீன் பிடித்து வரும் மீனவா்களை நாம் மதிக்க வேண்டும். அந்நியச் செலவாணி கிடைப்பதற்கும், தேசத்தின் வளா்ச்சிக்கும் ஒரு பங்காக இருக்கும் மீனவா்களை போற்ற வேண்டும் என்ற நோக்கில் இந்த விழா நடத்தப்பட்டது.

விழாவுக்கு மாவட்ட மீன்வளத் துறை உதவி இயக்குநா் சிவக்குமாா் தலைமை வகித்தாா். தமிழ்நாடு மீனவா் பேரவைப் பொதுச் செயலா் ஏ.தாஜுதீன், கடலோரக் காவல்படை உதவி ஆய்வாளா் மனோகரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். தொடா்ந்து, உலக மீனவா் தினத்தையொட்டி நடைபெற்ற பேச்சு, கட்டுரை, ஓவியப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது.

விழாவில், மீனவா் கூட்டுறவு சங்கத் தலைவா் அப்துல் சமது, நாட்டுப்படகு சங்கத் தலைவா் செய்யது முகம்மது, செயலா் அப்துல் ரகுமான், விசைப்படகு சங்கச் செயலா் இப்ராஹிம், மீனவா் கூட்டுறவு சங்க இயக்குநா்கள் நூருல் அமீன், காதா் மைதீன் மற்றும் ஜமாஅத்தாா்கள், பள்ளி ஆசிரிய, ஆசிரியைகள் மாணவ, மாணவிகள் பங்கேற்றனா்.

முன்னதாக உதவி தலைமையாசிரியை உஷா வரவேற்றாா், மீன்வளத்துறை ஆய்வாளா் கங்கேசுவரி நன்றி கூறினாா்

Tuesday, June 25, 2019

மல்லிப்பட்டினத்தில் மீன்பிடி துறைமுகம் திறப்பு!

மல்லிபட்டினம், ஜூன் 25
அதிராம்பட்டினம் அருகே மல்லிப்பட்டினத்தில் ரூ. 60 லட்சத்தில் கட்டப்பட்டுள்ள புதிய மீன்பிடி துறைமுகத்தை திங்கள்கிழமை சென்னையிலிருந்து காணொலிக் காட்சி மூலம் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி திறந்து வைத்தார்.

துறைமுகம் மறுசீரமைப்பு மற்றும் நவீனப்படுத்தும் திட்டத்தின் கீழ், மல்லிப்பட்டினத்தில் படகு அணையும் துறை, படகு பழுதுபார்க்கும் தளம், நிர்வாக அலுவலக கட்டடம், மீன் ஏலக் கூடங்கள் 2, வலை பின்னும் கூடங்கள் 2, முப்பதாயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இரண்டு, சிமெண்ட் சாலைகள், மழைநீர் வடிகால்கள், கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம், துறைமுகப் பகுதியில் தூர்வாரும் பணி ஆகியவை இத்திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ளன.

மேலும், துறைமுகத்தில் 213 விசைப்படகுகளும், 102 வல்லம் படகுகளும், 967 பாரம்பரிய மீன்பிடி படகுகளும் நிறுத்தம் செய்வதற்கு வகை செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம் 4,249 மீனவர்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் பயன்பெறுவர்.

புதிய மீன்பிடி துறைமுகம் மூலம் மீனவர்கள் மீன்பிடி தொழிலுக்கு தேவையான உபகரணங்களை இலகுவாக ஏற்றுவதற்கும், பிடித்து வரப்பட்ட மீன்களை இலகுவாக கையாள்வதற்கும், மீன்களை சுகாதாரமான முறையில் விற்பனை செய்வதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதனால் மீனவர்களின் வாழ்வாதாரம் மேம்பாடு அடையும். மீன்களை ஏற்றுமதி செய்ய வழி செய்யப்பட்டு உள்ளதால், அரசுக்கான வருவாய் கணிசமான அளவில் பெருகும். துறைமுகம் அமைந்துள்ள பகுதியில் வேலை வாய்ப்பு ஏற்படும் என மீன்வளத் துறையினர் தெரிவித்தனர்.

மல்லிப்பட்டினத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பட்டுக்கோட்டை எம்எல்ஏ சி.வி.சேகர், பேராவூரணி எம்எல்ஏ மா.கோவிந்தராசு, ஒன்றியச் செயலாளர்கள் சேதுபாவாசத்திரம் நாடியம் சிவ. மதிவாணன், கூட்டுறவு சங்கத் தலைவர் ஆர்.பி.ராஜேந்திரன், மீன்வளத்துறை உதவி இயக்குநர் சிவகுமார், மீன்வளத் துறை ஆய்வாளர் கெங்கடேஸ்வரி, சேதுபாவாசத்திரம் காவல்துறை ஆய்வாளர் வீர. அண்ணாதுரை, மல்லிப்பட்டினம் ஜமாத் தலைவர் அல்லாபிச்சை மற்றும் மீனவர்கள் கலந்து கொண்டனர்.

Friday, April 12, 2019

மோடி அரசை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் ~ பேராசிரியர் காதர் முகைதீன் தேர்தல் பரப்புரை!

மல்லிபட்டினம், ஏப்.12
மோடி அரசை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்றார் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி தேசியத் தலைவர் பேராசிரியர் காதர் முகைதீன்.

தஞ்சாவூர் மாவட்டம், மல்லிபட்டினத்தில் திமுக தஞ்சை நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் எஸ்.எஸ் பழனி மாணிக்கத்திற்கு ஆதரவாக இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி தேசியத் தலைவர் பேராசிரியர் கே.எம் காதர் முகைதீன் மக்களிடம் வாக்குகள் சேகரித்து பேசியது;
மாநிலங்களின் உரிமைகளை நசுக்குகின்ற கொள்கைகளை பின்பற்றி வரும் நீங்கள் தமிழக மக்களிடம் ஓட்டு போடுங்கள் என வெட்கமில்லாமல் கேட்பது தமிழக மக்களை ஏமாளிகள் என நினைத்துள்ளார். தமிழ் நாட்டு மக்கள் ஒரு போதும் ஏமாறப் போவதில்லை. மத்தியில் நாளை ஆட்சி செய்யப்போகிற ராகுல் காந்தி அளித்திருக்கும் தேர்தல் அறிக்கையில், இந்தியாவில், குறிப்பாக தமிழகத்தில் மீனவ சமுதாயத்தில் உருவாகும் பிரச்சனைகளை தீர்ப்பதற்கு மத்தியில் தனி அமைச்சகம் உருவாக்கப்படும் என கூறியிருக்கிறார். இதன் மூலம் மீனவ சமுதாயத்தில் நல்ல காலம் பிறக்கும் என்பதில் ஐயமில்லை. ஏழை, எளிய குடும்பங்களுக்கு மாதந்தோறும் 6 ஆயிரம் வீதம், ஆண்டு ஒன்றுக்கு ரூ.72 ஆயிரம் வழங்குவோம் என கூறியிருக்கிறார். ஏழ்மையைப் போக்க வேலை வாய்ப்புகளை கொடுத்திருக்க வேண்டும். வருமானத்தை பெருக்குவதற்கு வழிவகை செய்திருக்க வேண்டும். ஆனால், இன்றைய மத்திய அரசு ஜி.எஸ்.டி வரியை போட்டு, குறைவாக வருவாய் ஈட்டி வந்த விவசாயிகள், சிறு, குறு தொழில் செய்யும் வர்த்தகர்கள் உள்ளிட்ட அனைவரும் பெரும் பாதிப்படைந்துள்ளனர்.

மத்தியில் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஜி.எஸ்.டி வரியை மாற்றி அமைப்போம் என்று காங்கிரஸ் கட்சித்தலைவர் ராகுல் காந்தி வாக்குறுதி அளித்துள்ளார். மத்திய மோடி அரசின் பணமதிப்பிழப்பு நடவடிக்கை மூலம் சுமார் 4-1/2 கோடி மக்கள் வேலை வாய்ப்பை இழந்துள்ளனர். சென்னை, திருப்பூர், வேலூர், கோவை உள்ளிட்ட பெருநகரங்களில் உள்ள தொழிற்சாலைகள் மூடிக்கிடக்கின்றன.

வேலை வாய்ப்புகளை அதிகளவில் உருவாக்கும் விதத்தில், நாட்டிலே தொழிற்கூடங்களை அதிகளவில் உருவாக்க வேண்டும் என்ற நோக்கில், படித்த இளைஞர்கள் புதிதாக தொழில் தொடங்குவதற்கு இலகுவாக விண்ணப்பித்து உரிமம் பெற முடியும் என்று ராகுல் காந்தி தேர்தல் அறிவிப்பில் கூறியிருக்கிறார்.

வரும் நாடாளுமன்ற தேர்தலில் மத்திய மோடி அரசை வீட்டுக்கு அனுப்ப வேண்டும். உதய சூரியன் சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர் எஸ்.எஸ் பழனி மாணிக்கத்தை வெற்றி பெற செய்ய வேண்டும். மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் திமுக தலைமையிலான கூட்டணி அமோக வெற்றி பெறும். மத்தியில் ராகுல்காந்தி தலைமையிலான ஆட்சியும், 22 தொகுதி இடைத்தேர்தலுக்கு பிறகு தமிழகத்தில் மு.க.ஸ்டாலின் தலைமையிலும் ஆட்சி அமையும்' என்றார்.
 

Monday, March 25, 2019

மல்லிப்பட்டினத்தில் படகுப்போட்டி (படங்கள்)

தஞ்சாவூர் மாவட்டம், மல்லிப்பட்டினத்தில் 100 சதவீதம் நேர்மையாக வாக்களிப்பதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு படகுப்போட்டி இன்று (25.03.2019) நடைபெற்றது. 

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி, 2019 இந்திய நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் 100 சதவீதம் நேர்மையான வாக்குப்பதிவு செய்வது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தஞ்சாவ10ர் மாவட்டம், மல்லிப்பட்டிணம் மீன்பிடி இறங்கு தளத்தில் இன்று (25.03.2019) படகுப்போட்டி நடைபெற்றது. 

படகுப்போட்டியை மாவட்ட வருவாய் அலுவலர் ந.சக்திவேல் கொடி அசைத்து துவக்கிவைத்தார்.  படகுப்போட்டியில் மல்லிப்பட்டிணம், கள்ளிவயல், சின்னமனை உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த மீனவர்கள் கலந்துகொண்டனர்.  கடற்கரையிலிருந்து சுமார் இரண்டு கி.மீ தூரத்திற்கு நடைபெற்ற இப்போட்டியில் 10-க்கும் மேற்பட்ட இயந்திரம் பொருத்திய நாட்டுப்படகுகள் பங்கேற்றன.  படகுப்போட்டியில் முதலிடம் பிடித்த கள்ளிவயலை சேர்ந்த அசலார்முகமது என்பவருக்கு வெற்றிக்கோப்பை மற்றும் ரூ.3000 பரிசு தொகையை மாவட்ட வருவாய் அலுவலர் அவர்கள் வழங்கினார்.  மல்லிப்பட்டிணத்தைச் சேர்ந்த கோபி என்பவர் இரண்டாம் இடத்தையும், கள்ளிவயலைச் சேர்ந்த அப்துல்ஹமீது என்பவர் மூன்றாம் இடத்தையும் பெற்றனர்.  படகுப்போட்டியில் பங்குபெற்ற அனைவருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது.  படகுப்போட்டி தொடங்குவதற்கு முன்னர் போட்டியில் கலந்து கொண்ட வீரர்கள் அனைவரும் 100 சதவீதம் நேர்மையாக வாக்களிப்பது குறித்த உறுதிமொழியினை எடுத்துக்கொண்டனர்.  படகுப்போட்டி நிறைவுப்பெற்ற பின்னர்; மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் பொதுமக்கள் அனைவரும் 100 சதவீதம் நேர்மையாக வாக்களிப்பது குறித்த உறுதிமொழியினை எடுத்துக்கொண்டனர்.  தொடர்ந்து, நேர்மையாக வாக்களிப்பதன் அவசியம் குறித்து பொதுமக்களிடையே மாவட்ட வருவாய் அலுவலர் ந.சக்திவேல் உரையாற்றினார். 

இந்நிகழ்ச்சியில் பட்டுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் பூங்கோதை, துணை ஆட்சியர் கமலக்கண்ணன்,மீன்வளத்துறை உதவி இயக்குநர் சிவக்குமார், வட்டாட்சியர்கள் அருள்பிரகாசம் (பட்டுக்கோட்டை), ஜெயலெட்சுமி (பேராவூரணி), மீன்வளத்துறை ஆய்வாளர்கள் துரைராஜ், கங்கேஷ்வரி மற்றும் மீனவ சங்க பிரதிநிதிகள், படகு சங்க உறுப்பினர்கள், ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
 

Saturday, February 2, 2019

மல்லிப்பட்டினம் மீன்பிடி துறைமுகம் நவீனப்படுத்தப்படும் பணி ஆய்வு (படங்கள்)

தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி வட்டம், மல்லிப்பட்டினம் மீன்பிடி துறைமுகம் நவீனப்படுத்தப்படும் பணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் ஆ.அண்ணாதுரை இன்று (02.02.2019) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

மல்லிப்பட்டினத்தில் அமைந்துள்ள மீன்பிடி துறைமுகத்தினை மீன்வளத்துறை மூலமாக நவீனப்படுத்தி மறு கட்டமைப்பு செய்யும் பணி நடைபெற்று வருவதை மாவட்ட ஆட்சித் தலைவர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்பகுதியில் கஜா புயலால் சேதமடைந்து படகுகளை இழந்த மீனவர் சங்க பிரதிநிதிகளுடன் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆலோசனைக் கூட்டம் நடத்தினார்.

கூட்டத்தில் கஜா புயல் தொடர்பாக மேற்கொள்ள வேண்டிய நிவாரணப் பணிகள் குறித்து மீனவர் சங்க பிரதிநிதிகளின் கோரிக்கையை அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு தேவைப்படும் நிவாரண உதவி கிடைத்திட மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை மேற்கொள்ளும் என மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்;தார்.

மீனவ தொழிலாளர்களுக்கு தற்சமயம் மாற்று வருவாய் ஏற்படுத்த தேவையான உதவிகளை செய்திட மாவட்டம் நிர்வாகம் தயாராக உள்ளது என தெரிவித்த மாவட்ட ஆட்சித் தலைவர் மாடு, கோழி வளர்ப்பு மற்றும் கோழி புறக்கடை அமைத்து மாற்று வருவாய் ஈட்ட தேவையான உதவிகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொள்ளும் என தெரிவித்தார். மேலும், கஜா புயலால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு வங்கிக் கடன் தடையின்றி அளிப்பது குறித்து வங்கியாளர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்தி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்தார்.

தொடர்ந்து, சேதுபாவாசத்திரம் பகுதியில் கஜா புயலால் பாதிக்கப்பட்டு அரசு நிவாரணம் பெற்ற மீனவர்கள் தங்களின் படகுகளை சீரமைப்பு செய்வதை மாவட்ட ஆட்சித் தலைவர் நேரில் பார்வையிட்டார். இந்நிகழ்வின் போது உதவி இயக்குநர் (மீனவளத்துறை) எம்.சிவக்குமார் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

மல்லிபட்டினத்தில் மீனவ சமுதாய மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை தேர்வு!

மல்லிபட்டினம், பிப்.02-
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் அடுத்த மல்லிப்பட்டினம் அரசு மேல்நிலைப்பள்ளியில், தஞ்சாவூர் மாவட்ட கடலோரக் கிராம மீனவ சமுதாய மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் திட்டத்திற்கான தேர்வு வெள்ளிக்கிழமை அன்று நடைபெற்றது.

இந்திய வன உயிர் நிறுவனம், வனத்துறை, மீன்வளத்துறை, கடலோரக் காவல்துறை, தொண்டு நிறுவனங்கள் மற்றும் மீனவ சமுதாய மக்கள் இணைந்து பாக் ஜலசந்தி, மன்னார் வளைகுடா பகுதியில் வசிக்கும் கடல்பசு (ஆவுரியா) உள்ளிட்ட, அரசால் பிடிக்க தடை செய்யப்பட்ட அபூர்வ வகை கடல் வாழ் உயிரினங்களை காப்பாற்றும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அந்த வகையில் மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் பொருட்டு கடல்பசு (ஆவுரியா) உதவித்தொகை திட்டம் இந்திய வன உயிர் நிறுவனம் மற்றும் வனத்துறை சார்பில் மாதம் ரூ 500 வீதம் 24 மாதங்களுக்கு ரூ 12 ஆயிரம் வழங்கப்படுகிறது. இதற்கான போட்டித் தேர்வை 9 மற்றும் 11 ஆம் வகுப்பு மாணவர்கள் 150 பேர் கலந்து கொண்டு எழுதினர்.

முன்னதாக, மல்லிப்பட்டினம் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமையாசிரியர் கோவிந்தசாமி தலைமை வகித்தார். இந்திய வன உயிர் நிறுவன ஆராய்ச்சியாளர் கே.மதுமகேஷ் வரவேற்றார். தஞ்சாவூர் மாவட்ட வன அலுவலர் எஸ்.குருசாமி கலந்து கொண்டு பேசுகையில், ''அபூர்வ வகை உயிரினங்களான கடல்பசுக்களை பிடிக்க அரசு தடை விதித்துள்ளது. அழிந்து வரும் நிலையில் உள்ள இதுபோன்ற கடல்வாழ் உயிரினங்களை பாதுகாக்க அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்'' என்றார்.

பட்டுக்கோட்டை வனச்சரக அலுவலர் மோகன், கடலோரக் காவல்துறை ஆய்வாளர் சுபா, மீன் வளத்துறை ஆய்வாளர் கங்கேஷ்வரி, ஓம்கார் பவுண்டேஷன் பாலாஜி ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

மீனவர் கிராமத்தலைவர் பேத்தையா, இந்திய வன உயிர் நிறுவன அதிகாரிகள் குழுவினர், ஆசிரிய, ஆசிரியைகள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். நிறைவாக இந்திய வன உயிர் நிறுவன ஆராய்ச்சியாளர் ருக்மிணி சேகர் நன்றி கூறினார். தொடர்ந்து பள்ளி வளாகத்தில் மாவட்ட வன அலுவலர் என்.குருசாமி மரக்கன்றுகளை நட்டு வைத்தார்.
 
 
 

Monday, December 31, 2018

மல்லிப்பட்டினத்தில் முறையாக நிவாரணம் வழங்கக்கோரி மீனவர்கள் ஆர்ப்பட்டாம் ( படங்கள்)

மல்லிபட்டினம், டிச.31-
மீனவ மக்களுக்கு புயல் நிவாரணம் முறையாக வழங்கிடக் கோரி தஞ்சை மாவட்ட மீன்பிடித் தொழிலாளர்கள் சங்கம் (சிஐடியு) சார்பில், தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் அடுத்த மல்லிப்பட்டினம் மீன்துறை ஆய்வாளர் அலுவலகம் முன்பு திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு சிஐடியு மாவட்டச் செயலாளர் சி.ஜெயபால் தலைமை வகித்து சிறப்புரையாற்றினார். சங்கத்தின் மாவட்டச் செயலாளர் எஸ்.சுப்பிரமணியன் முன்னிலை வகித்தார். அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க மாவட்டச் செயலாளர் எஸ்.தமிழ்செல்வி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சேதுபாவாசத்திரம் ஒன்றியச்செயலாளர் ஆர்.எஸ்.வேலுச்சாமி ஆகியோர் கண்டன உரையாற்றினர்.

சங்க நிர்வாகிகள் கே.குத்புதீன், பி.பெரியண்ணன், எஸ்.நிஜாமுதீன், செந்தில்குமார், நாகேந்திரன், சந்திரசேகர், முகமது அனிபா மற்றும் 20 பெண்கள் உள்ளிட்ட 200 பேர் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தில்,  "மீனவ குடும்பங்களுக்கு குடும்ப அட்டை அடிப்படையில் ரூ 10 ஆயிரம் வாழ்வாதார நிதியாக உடனடியாக வழங்க வேண்டும். சேதமடைந்த நாட்டுப் படகுகளுக்கு அரசு அறிவித்த இழப்பீட்டு தொகை ரூ 80 ஆயிரத்தை கூட்டு வங்கி கணக்கில் சேர்க்காமல் நேரடியாக மீனவர்கள் கணக்கில் வரவு வைக்க வேண்டும்.

பகுதி சேதமடைந்த படகுகளுக்கு அரசு அறிவித்த ரூபாய் 30 ஆயிரத்தை குறைக்காமல் வழங்கிடவேண்டும். சுனாமி வீட்டில் குடியிருப்பவர்களுக்கும் நிவாரணம் வழங்க வேண்டும். அனைத்து மீனவ குடும்பங்களுக்கும் 27 பொருட்கள் அடங்கிய நிவாரணப் பெட்டகம் வழங்க வேண்டும்.

மீனவக் குடும்பங்களின் அனைத்து கூட்டுறவுக் கடன், வங்கிக் கடன், கல்விக் கடன்களை ரத்து செய்ய வேண்டும். மீனவப் பெண்கள் வாங்கியுள்ள சுய உதவி குழு கடன்கள் அனைத்தையும் ரத்து செய்ய வேண்டும். பெண்களிடம் நுண்கடன் நிதி நிறுவனங்கள் அடாவடி வசூல் செய்ய அனுமதிக்கக்கூடாது. தமிழக அரசு கேட்டுள்ள ரூபாய் 15 ஆயிரம் கோடியை மத்திய அரசு உடனே வழங்க வேண்டும்.

தம்பிக்கோட்டை வடகாடு, மறவக்காடு, அதிராம்பட்டினம், சின்னமனை உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் விடுபட்ட அனைவருக்கும் சுனாமி வீடுகள் கட்டித்தரவேண்டும். மீனவத் தொழிலாளர்களுக்கு வாழ்வாதார நிவாரண நிதியாக ரூ 5 ஆயிரம் வழங்க வேண்டும்" என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
 

Wednesday, December 12, 2018

புயலில் சேதமடைந்த மல்லிபட்டினம் பகுதி விசைப்படகுகள் ~ நிவாரணத் தொகையை அதிகரிக்க கோரிக்கை!

மல்லிபட்டினம், டிச.12-
பாதிக்கப்பட்ட விசைப்படகுகளுக்கு அரசு அறிவித்துள்ள நிவாரணம் போதாது. கூடுதலாக வழங்க வேண்டும் மீனவர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

தமிழ்நாடு விசைப்படகு மீனவர்கள் நலச்சங்க மாநிலச் செயலாளர் மல்லிப்பட்டினம் ஏ.தாஜூதீன் தமிழக மீன்வளத்துறை அமைச்சருக்கு இதுகுறித்து கோரிக்கை மனு அனுப்பி உள்ளார்.

அதில் கூறியிருப்பதாவது, 
"கஜா புயல் பாதிக்கப்பட்ட தஞ்சை மாவட்டம் கள்ளிவயல் தோட்டம், மல்லிப்பட்டினம், சேதுபாவாசத்திரம் பகுதிகளில், 191 விசைப்படகுகள் முற்றிலும் சேதம் அடைந்ததாகவும், 55 விசைப்படகுகள் பகுதி சேதமடைந்ததாகவும் அரசுத்துறை சார்பில் கணக்கிடப்பட்டுள்ளது.
இவற்றில் சில படகுகள் கடற்கரை ஓரம் மணலில் புதைந்து உள்ளதால் மீட்கும் போது ஏற்படக்கூடிய சேதத்திற்கு ஏற்ப அதை மறு ஆய்வு செய்யவும் அதிகாரிகள் உறுதி கூறியுள்ளனர்.

தற்போது 14 ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்ட விதிப்படி படகு முழு சேதத்திற்கு ரூ 5 லட்சமும் பகுதி சேதத்திற்கு ரூ 3 லட்சமும் தருவதாக சொல்லப்படுகிறது அதிலும் முழுத் தொகையை மீன்வளத்துறை உதவி இயக்குனர் மற்றும் படகின் உரிமையாளர் பெயரில் வங்கிக் கணக்கில் போடுவது ஏற்புடையது அல்ல.

தற்போது உள்ள சூழலில் ஒரு படகு கட்டுவதற்கு சுமார் ரூ 30 லட்சம் முதல் 40 லட்சம் வரை செலவாகுமென மதிப்பீட்டு பட்டியல் கொடுத்துள்ளனர். படகிற்காக அரசு ஒதுக்கிய ரூ 5  லட்சத்தில் ஒரு என்ஜின் கூட வாங்க முடியாது. இந்த பணத்தில் படகு கட்டுவது சாத்தியம் இல்லை என அரசுக்கு தெரியாதா?

மேலும் அரசு ஒதுக்கிய பணத்தை  மீன்வளத்துறை உதவி இயக்குனர் மற்றும் உரிமையாளர் பெயரில் போடுவது மீனவர்கள் எந்த வகையிலும் பயன்படுத்த முடியாது. காரணம் ஏற்கனவே வர்தா, ஒக்கி புயலுக்கு மீனவர்களுக்கு அளிக்கப்பட்ட நிவாரணம் எடுக்க முடியாமல் வங்கியிலே கிடக்கிறது.

எனவே தற்போதுள்ள விலைவாசிக்கேற்ப, பழைய ஆணையை மாற்றி, படகுகள் வாங்க கூடுதல் நிவாரணம் வழங்குவதோடு, நிஙழவாரணப் பணத்தை பயனாளிகளின் கணக்கில் நேரடியாக செலுத்த வேண்டும். மேலும் கடற்கரையில் புதைந்து கிடக்கும் படகுகளை, மீட்டு அப்புறப்படுத்த உதவ வேண்டும்.

மல்லிப்பட்டினத்தில் புதிதாக அமைக்கப்பட்டு வரும் துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருந்த அனைத்து படகுகளும், புயலால் சேதமடைந்துள்ளது. எனவே தூண்டில் வளைவு அமைத்து தருவதன் மூலம் படகுகள் இயற்கை சீற்றத்தால் சேதமடைவது தடுக்கப்படும். எனவே அரசு அதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும்.

மேலும் டெல்டா பகுதி புயல் பாதிப்பிற்காக தன்னார்வலர்கள், தொண்டு நிறுவனங்கள், தமிழக அரசிடம் வழங்கும் நிதியை பாதிக்கப்பட்ட மக்களுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். எனவே அரசு பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நிவாரணத்தை வழங்கிட வேண்டும்" இவ்வாறு அம்மனுவில் கூறப்பட்டுள்ளது.