.

Pages

Showing posts with label தேர்தல் 2019. Show all posts
Showing posts with label தேர்தல் 2019. Show all posts

Friday, May 24, 2019

அதிராம்பட்டினத்தில் வேட்பாளர்கள் பெற்ற மொத்த வாக்குகள் (முழு விவரம்)

அதிராம்பட்டினம், மே.24
தஞ்சை மக்களவை தொகுதிக்கு உட்பட்ட அதிராம்பட்டினம் பேரூராட்சி 24,786 வாக்காளர்கள் உள்ளனர். மேலத்தெரு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, நடுத்தெரு வாய்க்கால் தெரு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, காதிர் முகைதீன் ஆண்கள் / பெண்கள் மேல்நிலைப்பள்ளிகள், கடற்கரைத்தெரு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, மெயின் ரோடு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, மெயின் ரோடு அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, கரையூர் தெரு ஊராட்சி ஒன்றிய பள்ளி உட்பட 243 முதல் 269 வரை மொத்தம் 27 வாக்குச்சாவடிகள் உள்ளன. கடந்த ஏப்.18 அன்று நடந்த மக்களவை பொதுத்தேர்தலில் அதிராம்பட்டினத்தில் 62% வாக்குகள் பதிவாகியது.

அதிராம்பட்டினத்தில் எஸ்.எஸ். பழனிமாணிக்கம் 11,229 வாக்குகளும், என்.ஆர் நடராஜன் 2309 வாக்குகளும், பொ.முருகேசன் 670 வாக்குகளும் பெற்றுள்ளனர்.

மொத்தம் 27 வாக்குச்சாவடிகளில் பதிவாகிய வாக்குகள் விவரம்:

6-வது முறையாக எம்.பி. ஆகிறார் S.S பழனிமாணிக்கம்!

தஞ்சாவூர், மே 24
தஞ்சாவூர் மக்களவைத் தொகுதியில் திமுகவை சேர்ந்த எஸ்.எஸ். பழநிமாணிக்கம் 6-வது முறையாக எம்.பி. ஆகிறார்.

இவர் கடந்த 1984, 1889, 1991 ஆகிய தேர்தல்களில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தார். அதன் பின்னர் 1996, 1998, 1999, 2004, 2009 ஆகிய தேர்தல்களில் தஞ்சாவூர் மக்களவைத் தொகுதியில் தொடர்ந்து 5 முறை வெற்றி பெற்றார். இதில், 2004 முதல் 2014-ம் ஆண்டு வரை மத்திய நிதித்துறை இணை அமைச்சராக இருந்தார்.

2014-ம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படவில்லை. தற்போது தஞ்சாவூர் மக்களவைத் தொகுதியில் 9-வது முறையாக போட்டியிட்டார்.

இதில், தொடக்கச் சுற்று முதல் இறுதி வரை முன்னிலை பெற்று 3,63,652 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இதன் மூலம், தஞ்சாவூர் தொகுதியிலிருந்து 6-வது முறையாக மக்களவை உறுப்பினராக வெற்றி பெற்றார்.

Thursday, May 23, 2019

தஞ்சை நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர்கள் பெற்ற மொத்த வாக்குகள் (முழு விவரம்)

அதிரை நியூஸ்: மே 23
கடந்த (18-04-2019) அன்று நடைபெற்ற தஞ்சை நாடாளுமன்ற தேர்தலில், திமுக கூட்டணி சார்பில், திமுக வேட்பாளர் எஸ்.எஸ். பழனிமாணிக்கம், அதிமுக கூட்டணி சார்பில், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி வேட்பாளர் என்.ஆர் நடராஜன், அமமுக வேட்பாளர் பொ.முருகேசன் உள்ளிட்ட மொத்தம் 12 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.

இந்நிலையில், இன்று (23-05-2019) வியாழக்கிழமை காலை வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில், திமுக வேட்பாளர் எஸ்.எஸ். பழனிமாணிக்கம் 5,88,978 வாக்குகளும், என்.ஆர் நடராஜன் 2,20,849 வாக்குகளும், அமமுக வேட்பாளர் பொ.முருகேசன் 1,02,871 வாக்குகளும் பெற்றுள்ளனர்.

22-வது சுற்றில்  எஸ்.எஸ். பழனிமாணிக்கம் 5,75,295 வாக்குகளும், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி வேட்பாளர் என்.ஆர் நடராஜன் 2,17,183 வாக்குகளும், அமமுக வேட்பாளர் பொ.முருகேசன் 1,00,568 வாக்குகளும், தபால் ஓட்டில் எஸ்.எஸ். பழனிமாணிக்கம் 5,357 வாக்குகளும், என்.ஆர் நடராஜன் 432 வாக்குகளும், பொ.முருகேசன் 453 வாக்குகளும் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

வேட்பாளர்கள் பெற்ற மொத்த வாக்குகள்:


22-வது சுற்றில் வேட்பாளர்கள் பெற்ற மொத்த வாக்குகள்:

தபால் ஓட்டில் 4 வது சுற்றில் வேட்பாளர்கள் பெற்ற மொத்த வாக்குகள்:

Thursday, April 18, 2019

அதிராம்பட்டினத்தில் 62% வாக்குப்பதிவு (முழு விவரம்)

அதிராம்பட்டினம், ஏப்.18
அதிராம்பட்டினத்தில் 27 வாக்குச் சாவடிகளில் மொத்தம் 62% வாக்குகள் பதிவாகியது.

மக்களவை பொதுத்தேர்தலை முன்னிட்டு அதிராம்பட்டினத்தில் உள்ள வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு இன்று வியாழக்கிழமை நடைபெற்றது.
தஞ்சை மக்களவை தொகுதிக்கு உட்பட்ட அதிராம்பட்டினத்தில் 24,786 வாக்காளர்கள் உள்ளனர்.

மேலத்தெரு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, நடுத்தெரு வாய்க்கால் தெரு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, காதிர் முகைதீன் ஆண்கள் / பெண்கள் மேல்நிலைப்பள்ளிகள், கடற்கரைத்தெரு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, மெயின் ரோடு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, மெயின் ரோடு அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, கரையூர் தெரு ஊராட்சி ஒன்றிய பள்ளி உட்பட மொத்தம் 27 வாக்கு சாவடிகள் உள்ளன.

இந்த வாக்குச் சாவடிகளில் வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்னதாக மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது. அதில் ஒவ்வொரு கட்சியின் முகவர்கள், தத்தமது சின்னங்களில் வாக்களித்தால் அதே சின்னத்தில்தான் வாக்கு விழுகிறதா என்று சோதனை நடத்தப்பட்டது.

அதிரையில் இன்று காலை அமைதியாக வாக்கு பதிவு துவங்கியது. காலை 7 மணி முதல் வாக்காளர்கள் ஆர்வத்துடன் வந்து வாக்கு செலுத்தினர். அதிரையில் அரசியல் கட்சி பிரமுகர்கள், ஜமாஅத்தார்கள், கிராம பஞ்சயாத்தார்கள், கல்வியாளர்கள், சமூக ஆர்வலர்கள், இளம் வாக்காளர்கள் உள்ளிட்டோர் அந்தந்த பகுதிகளில் உள்ள வாக்குச்சாவடிகளுக்கு வந்து வாக்குகளை பதிந்தனர்.

வாக்குப்பதிவை முன்னிட்டு அதிரையின் பிரதானப் பகுதிகளில் உள்ள வர்த்தகக் கடைகள் சில அடைக்கப்பட்டிருந்தன. அதிரையில் பதற்றமானவை என கருதப்பட்ட வாக்குசாவடிகளில் போலீசார் பாதுகாப்பை பலப்படுத்தி இருந்தனர். கண்காணிப்பு கேமிராக்களும் பொருத்தப்பட்டு இருந்தது. தேர்தல் பணிகளில் ஈடுபட்டுள்ள அலுவலகர்கள் பகுதி முழுதும் ரோந்தில் ஈடுபட்டனர். அதிராம்பட்டினத்தில் காலை 10 மணி நிலவரப்படி 24% வாக்குப்பதிவும், மதியம் 1 மணி நேர நிலவரப்படி 41 % வாக்குப்பதிவும், வாக்குப்பதிவு நிறைவில் மொத்தம் 15,693 வாக்குகள் பதிவாகின. இவை 62 % ஆகும்.

Sunday, April 14, 2019

முஸ்லிம்களின் அரசியல் உரிமை பறிபோகிறதா?

அதிரை நியூஸ்: ஏப்.14
1984 ம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில் 543 உறுப்பினர் கொண்ட பாராளுமன்றத்தில் முஸ்லிம்கள் 46 உறுப்பினர்கள் இருந்தார்கள். ஆனால் 2014 ம் ஆண்டு நடந்த நடந்த மக்களவைத் தேர்தலில் வெறும் 22 உறுப்பினர்களே இருந்தனர். மக்கள் தொகையில் 15 விழுக்காடு கொண்ட முஸ்லிம்கள் வெறும் 4 .2 சதவீத உறுப்பினர்களே இருந்தனர் என்றால் உங்களுக்கு ஆச்சரியமாக இல்லையா? ஆனால்  பி.ஜெ.பி.யின் எண்ணிக்கை  282 உயர்ந்தது. அது எதனால் என்று பார்ப்போமேயானால் இந்திய மண்ணில் ஆட்சி செய்த காங்கிரஸ் முஸ்லிம்களுக்கு ஆதரவான கட்சி என்ற அவப்பெயரை இந்துக்களிடம் பரப்பியதினால் அந்த கட்சி மல, மல என்று வளரத் தொடங்கியது.  முஸ்லிம்கள் ஆதரவினை எப்போதுமே பெற்ற சமாஜ்வாடி, பகுஜன் கட்சிகள் கூட முஸ்லிம் உறுப்பினர்களை இந்தியாவிலேயே அதிகமாக உள்ள உ.பி. மாநில 80 உறுப்பினர்களில் ஒருவர் கூட வெற்றி பெற உதவவில்லை. மொத்தமுள்ள 29 மாநிலங்களில் 22 மாநிலங்களில் ஒரு முஸ்லிம் உறுப்பினர் கூட மக்களவையில் செயலாற்ற முடியவில்லை. 1991 பதவியேற்ற நரசிம்மராவ் காங்கிரஸ் ஆட்சியில் தான் 1992 ம் ஆண்டு பழமை மிகு தொல்லியல் துறை முக்கியம் வாய்ந்த பாபரி மஸ்ஜித் இடிக்கப்பட்டபோது கை கட்டி, வாய் பொத்தி காரிய மௌன சாமியாரானார் அன்றைய பிரதமர் என்பது உங்களுக்குத் தெரியும்.

16 மக்களவையில் முக்கிய முத்தலாக்கு, பசுவை பாது காப்போம் என்றும், பசுவைக் கொல்லும் முஸ்லிம்கள் என்று பல முஸ்லிம்கள் கொல்லப்படும்  உட்பட  பிரச்சனைகளில் கூட கம்யூனிஸ்ட், திரிணாமுல் காங்கிரஸ் உறுப்பினர்கள் முஸ்லிம்களுக்கு ஆதரவாக பேசிய அளவிற்கு மற்ற கட்சி உறுப்பினர்கள் குரல் எழுப்பவில்லையே அது ஏன் என்று உங்களுக்கு புரிந்து இருக்கும். வருகின்ற மக்களவை தேர்தலில் இந்துக்களின் ஓட்டுக்களை இழக்க நேரிடும் என்ற அச்ச உணர்வுதான்.

தமிழ் நாட்டில் ஜனநாயக முற்போக்கு கூட்டணியில் மைனாரிட்டி சமூகத்தினவருக்கு உரிய முக்கியத்துவம் கொடுக்கவில்லை என்று முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், காங்கிரசில் முக்கிய தலைவருமான பீட்டர் அல்போன்சும் சமீபத்தில் ஒரு பேட்டியில் கூறியிருப்பது உண்மைபோல தேனி மக்களவை தேர்தலில் போட்டியிட வாய்ப்புக் கேட்ட முன்னாள் மக்களவை உறுப்பினர் ஜெ.எம்.ஹாரூனுக்கு வழங்கப்படவில்லை, அத்துடன் தி.மு.காவில் ஒரு முஸ்லிம் வேட்பாளருக்கும் வாய்ப்பு வழங்கப் படவில்லை என்ற ஆதங்கம் இருக்கத்தானே செய்யும்.

முஸ்லிம்கள், கிருத்துவர்கள் அதிகமாக கொண்ட கேரள மாநிலத்தில் ஒரு முஸ்லிம் அல்லது கிருத்துவர் போட்டியிட வாய்ப்புக் கொடுக்காமல் காங்கிரஸ் தலைவரே நிற்பதிலிருந்து பீட்டர் அல்போன்ஸ் சொல்லுவது உண்மையாக இருக்குமோ என்று எண்ணத் தோன்றவில்லையா உங்களுக்கு. தமிழகத்தில் முஸ்லிம் லீக்கு கட்சிக்கு ஒரு சீட் வழங்கி அதில் எத்தனையோ ஆரம்பகால ராமநாதபுரம் ஷாஜஹான் போன்ற உறுப்பினர் இருந்தாலும், அறிமுகமில்லா ஒருவருக்கு சீட்டு வழங்கியதால் தேவர் பெரும்பானமையினைக் கொண்ட இராமநாதபுர மக்களவை தேர்தலில் வெற்றி வாய்ப்பினை இழந்து விடுவோமோ என்று உங்களுக்கு ஓர் அச்சமிருக்கத் தானே செய்யும்.

இந்தியா சுதந்திரம் அடைந்தபின்பு கண்ணியமிகு காயிதே மில்லத் அவர்களுக்குப் பிறகு தமிழகத்தில் முஸ்லிம்களின் அரசியல் வாழ்வு மங்கி வருகின்றது வெள்ளிடைமலை தானே. காயிதே மில்லத் அவர்கள் குரோம்பேட்டை வீட்டிற்கு அருகில் குடியிருக்கும் 90 வயதான சுப்ரமணிய அய்யர் முஸ்லிம்  மக்கள் விரோத ஹிந்துக்களுக்கு ஒரு செய்தி சொல்லியுள்ளார். அவர் போன்று ஒரு பரந்த அண்ணன்-தம்பி உறவு கொண்ட ஒரு தலைவரை நான் பார்க்கவில்லை. அவர் வீட்டுக்குள் நான் சென்று வர ஒரு சகோதரனைப் போன்ற அனுமதி வழங்கியிருந்தார் என்றும், அவர் மரணம் அடைந்த செய்தி கேட்டு தான் மயங்கி விழுந்து விட்டதாகவும் சொல்லியுள்ளார்.

அவ்வாறு முஸ்லிம்களும் ஹிந்துக்களும் அண்ணன் தம்பியாக வாழ்ந்த தமிழகத்தில் முஸ்லிம்களிடையே உத்தரபிரதேசம் போன்று ஒருவித பய உணர்வினை ஏற்படுத்த பி.ஜெ.பி. முயலுவதாக அதனுடைய தலைவர்கள் பேச்சிலிருந்து தெரியவில்லையா? ஆனால் முஸ்லிம் அமைப்புகளிடையே கிட்டத்தட்ட 19  பிரிவுகளாக நிர்கதியாக உள்ளனர். காயிதே மில்லத் வானில் மின்னும் நம்பிக்கை நட்சத்திரமாக திகழ்ந்தார். போர்ப்படை தளபதியாக இருந்தார். ரசூலுல்லாஹ் போருக்கு செல்லும்போது முன்னின்று நடத்துவார்கள். ரசூலுல்லாஹ் போருக்கு செல்லாத நேரத்தில் தன் குடும்பத்திலிருந்து ஒருவரை அனுப்புவார்கள்.

ஒரு தடவை அப்துல் இபின் ரவாதா அவர்களை போருக்கு முன்னின்று நடத்துமாறு கூறினார்கள். போர் படை வீரர்கள் எல்லாம் புறப்பட்டு சென்று விட்டார்கள். ஆனால் அப்துல் இபின் ராவதா போருக்கு செல்லு முன்பு ரசூலுல்லாஹ் முன்னின்று நடத்தும் ஜும்மாவினில் கலந்துவிட்டு செல்லலாம் என்று ஜும்மாவில் கடைசி ஸப்பில் நின்றார்கள். ரசூலுல்லாஹ் தொழுகை முடிந்ததும் அப்துல் இபின் அவர்களை பார்த்து விட்டு, ஏன் நீங்கள் இன்னும் புறப்படவில்லையா என்று கேட்டபோது அவர் சொன்ன விளக்கத்தினை ஏற்க மறுத்து, ஒரு தலைவர் முன்னின்று போர் வீரர்களை வழி நடத்துவது ஜும்மா தொழுவதினை விட மேலானது என்று கூறினார்களாம். ஆனால் தமிழ்நாட்டில் முஸ்லிம் லீகிற்கு ஒரு உறுப்பினர் தேர்வாக வாய்ப்பு இருக்கும்போது அதன் தலைவர் அதனை நழுவி விடுவாரோ என்று அவர் தேர்தெடுத்த வேட்பாளர் இருக்கின்றார் என்று பலரும் ஆதங்கப் படுகின்றனர்.

ரசூலுல்லாஹ் கட்டளையினை ஏற்று காலித் பின் வாலித் அவர்கள் போருக்கு சென்று விட்டு வெற்றியுடன் திரும்பும் பொது அவரை வரவேற்க ரசூலுல்லாஹ் எதிர்நோக்கி இருக்கும்போது முதலில் படை வீரர்கள் வந்தனர். அதனை பார்த்த ரசூலுல்லாஹ் காலித் அவர்கள் எங்கே என்று கேட்கும்போது, அவர் பின்னால் நிற்பதினை பார்த்து, 'காலித் அவர்களே, பெரிய வெற்றியுடன் வரும்போது கம்பீரமாக முன்னாள் வரவில்லையே' என்று கேட்டதிற்கு, காலித் அவர்கள், 'ரஸூலல்லாஹ்வே, போர் வீரர்கள் பல வகையினைச் சார்ந்தவர்கள். போருக்கு செல்லும்போது அவர்களுக்கு முன்னோடியாக நான் வழி நடத்தி சென்றேன். வெற்றி பெற்று திரும்பும்போது எதிரிகள் பல திசைகளிருந்து தாக்கினால் நமது வீரர்கள் சிதறி விடக்கூடாது என்று நான் அவர்களுக்கு பின்னல்' வந்தேன் என்கிறார்களாம். அவ்வாறு ஒருங்கிணைக்கும் முஸ்லிம் தலைவர்கள் நம்மிடையே இல்லாதது ஒரு இழப்புதானே!

ஒரு தடவை சஹாபி ஒருவர் ரசூலுல்லாஹ் அவர்களிடம் வந்து, 'தனக்கு மன அமைதி இல்லாமல் இருக்கின்றது என்றாராம்' அதற்கு ரசூலுல்லாஹ் அவர்கள், 'இன்று இரவு உணவு உண்ணும்போது உன் குடும்பத்துடன் அமர்ந்து சாப்பிட்டு விட்டு தூங்கி எழுந்து வந்து' காலையில் சொல்லும் என்கிறார்களாம். சகாபியும் ரசூலுல்லாஹ் வார்த்தையினைக் கேட்டு பல நாட்கள் இல்லாத வகையில் குடும்பத்துடன் அமர்ந்து சாப்பிட்டு பின்பு நிம்மதியாக தூங்கி எழுந்து வந்து, ' ரசூலுல்லாஹ் அவர்களே இன்று நான் மன அமைதி பெற்றேன்' என்றாராம்.

ஆகவே முஸ்லிம் சகோதர அமைப்புகள் பல பிரிவுகளாக பிரிந்து சிறுசிறு கருத்து வேற்றுமைக்காவாகவும், யார் பெரியவர், எந்த அமைப்பு அதிக உறுப்பினர் கொண்டுள்ளது, யார் பணத்தினை அள்ளி இறைக்கின்றாரே அவரிடம் சோரம் போய், ஒரு சமுதாயத்தினையே அடகு வைப்பது போன்ற செயல்களால், நம்முடைய அரசியல் உரிமை, வேலை வாய்ப்பில் முன்னுரிமை, தொழில் தொடங்குவதிலிருந்து பின்னடைவு, சில வளைகுடா நாடுகளின் பணத்திற்காக இளைஞர்கள் உயர்  படிப்பினை தொடராது மிகவும் சிரமப் படும் பரிதாப நிலை, ஏழை முஸ்லிம்கள் வாழ்வாதாரம் இன்றி மூலையில் முடங்கி விடுதல், முதியோர் புறக்கணிப்பு போன்றவை நடந்து கொண்டுள்ளன.

பல சமுதாய அமைப்புகள் கொண்ட எந்த சமூகமும் இனி முன்னேற முடியாது. ஆகவே தான், பி.ஜெ.பி. அமைப்பினர் இந்துக்களின் ஓட்டுக்களை அறுவடை செய்ய நினைக்கின்றனர். முஸ்லிம்களும் வேற்றுமையினை வேரறுத்து இனியாவது ஒற்றுமையுடன் செயலாற்ற வேண்டும் என்போமா!

டாக்டர் ஏ.பீ. முகமது அலி, பிஎச்,டி, ஐ.பீ.எஸ் (ஓய்வு)
ஓய்வுபெற்ற மூத்த காவல்துறை அதிகாரி 
எழுத்தாளர்  
சமூக ஆர்வலர்

அதிராம்பட்டினத்தில் காவலர்கள் கொடி அணிவகுப்பு (படங்கள்)

அதிராம்பட்டினம், ஏப்.14
மக்களவைத் தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள காவலர்கள் சுமார் 100-க்கும் மேற்பட்டோர் காவலர் கொடி அணிவகுப்பு பேரணியில் கலந்துகொண்டு, பொதுமக்கள் எந்தவித அச்சமுமின்றி வாக்களிக்கலாம் என்பதை வலியுறுத்தினர்.

நிகழ்ச்சிக்கு பட்டுக்கோட்டை காவல் துணைக் கண்காணிப்பாளர் எஸ். கணேஷமூர்த்தி தலைமை வகித்தார். இதில், காவல் ஆய்வாளர்கள் ஜெயமோகன், பாலசுப்பிரமணியன், உதவி காவல் ஆய்வாளர்கள், அதிவிரைவு படை காவலர்கள் என பலர் கலந்துகொண்டனர். இந்த தேர்தல் கொடி அணிவகுப்பு வண்டிப்பேட்டை சாலையில் தொடங்கி மெயின் ரோடு, சுப்ரமணிய கோவில் தெரு, பழையபோஸ்ட் ஆபீஸ் சாலை, கிழக்கு கடற்கரைச் சாலை வழியாகச் சென்று அதிராம்பட்டினம் பேருந்து நிலையம் வளாகத்தில் முடிவுற்றது.

செய்தி மற்றும் படங்கள்:
மர்ஜூக் ( மாணவச் செய்தியாளர்)
 

Friday, April 12, 2019

மோடி அரசை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் ~ பேராசிரியர் காதர் முகைதீன் தேர்தல் பரப்புரை!

மல்லிபட்டினம், ஏப்.12
மோடி அரசை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்றார் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி தேசியத் தலைவர் பேராசிரியர் காதர் முகைதீன்.

தஞ்சாவூர் மாவட்டம், மல்லிபட்டினத்தில் திமுக தஞ்சை நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் எஸ்.எஸ் பழனி மாணிக்கத்திற்கு ஆதரவாக இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி தேசியத் தலைவர் பேராசிரியர் கே.எம் காதர் முகைதீன் மக்களிடம் வாக்குகள் சேகரித்து பேசியது;
மாநிலங்களின் உரிமைகளை நசுக்குகின்ற கொள்கைகளை பின்பற்றி வரும் நீங்கள் தமிழக மக்களிடம் ஓட்டு போடுங்கள் என வெட்கமில்லாமல் கேட்பது தமிழக மக்களை ஏமாளிகள் என நினைத்துள்ளார். தமிழ் நாட்டு மக்கள் ஒரு போதும் ஏமாறப் போவதில்லை. மத்தியில் நாளை ஆட்சி செய்யப்போகிற ராகுல் காந்தி அளித்திருக்கும் தேர்தல் அறிக்கையில், இந்தியாவில், குறிப்பாக தமிழகத்தில் மீனவ சமுதாயத்தில் உருவாகும் பிரச்சனைகளை தீர்ப்பதற்கு மத்தியில் தனி அமைச்சகம் உருவாக்கப்படும் என கூறியிருக்கிறார். இதன் மூலம் மீனவ சமுதாயத்தில் நல்ல காலம் பிறக்கும் என்பதில் ஐயமில்லை. ஏழை, எளிய குடும்பங்களுக்கு மாதந்தோறும் 6 ஆயிரம் வீதம், ஆண்டு ஒன்றுக்கு ரூ.72 ஆயிரம் வழங்குவோம் என கூறியிருக்கிறார். ஏழ்மையைப் போக்க வேலை வாய்ப்புகளை கொடுத்திருக்க வேண்டும். வருமானத்தை பெருக்குவதற்கு வழிவகை செய்திருக்க வேண்டும். ஆனால், இன்றைய மத்திய அரசு ஜி.எஸ்.டி வரியை போட்டு, குறைவாக வருவாய் ஈட்டி வந்த விவசாயிகள், சிறு, குறு தொழில் செய்யும் வர்த்தகர்கள் உள்ளிட்ட அனைவரும் பெரும் பாதிப்படைந்துள்ளனர்.

மத்தியில் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஜி.எஸ்.டி வரியை மாற்றி அமைப்போம் என்று காங்கிரஸ் கட்சித்தலைவர் ராகுல் காந்தி வாக்குறுதி அளித்துள்ளார். மத்திய மோடி அரசின் பணமதிப்பிழப்பு நடவடிக்கை மூலம் சுமார் 4-1/2 கோடி மக்கள் வேலை வாய்ப்பை இழந்துள்ளனர். சென்னை, திருப்பூர், வேலூர், கோவை உள்ளிட்ட பெருநகரங்களில் உள்ள தொழிற்சாலைகள் மூடிக்கிடக்கின்றன.

வேலை வாய்ப்புகளை அதிகளவில் உருவாக்கும் விதத்தில், நாட்டிலே தொழிற்கூடங்களை அதிகளவில் உருவாக்க வேண்டும் என்ற நோக்கில், படித்த இளைஞர்கள் புதிதாக தொழில் தொடங்குவதற்கு இலகுவாக விண்ணப்பித்து உரிமம் பெற முடியும் என்று ராகுல் காந்தி தேர்தல் அறிவிப்பில் கூறியிருக்கிறார்.

வரும் நாடாளுமன்ற தேர்தலில் மத்திய மோடி அரசை வீட்டுக்கு அனுப்ப வேண்டும். உதய சூரியன் சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர் எஸ்.எஸ் பழனி மாணிக்கத்தை வெற்றி பெற செய்ய வேண்டும். மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் திமுக தலைமையிலான கூட்டணி அமோக வெற்றி பெறும். மத்தியில் ராகுல்காந்தி தலைமையிலான ஆட்சியும், 22 தொகுதி இடைத்தேர்தலுக்கு பிறகு தமிழகத்தில் மு.க.ஸ்டாலின் தலைமையிலும் ஆட்சி அமையும்' என்றார்.
 

Thursday, April 11, 2019

தஞ்சை தொகுதி மக்களுக்கு எஸ்.எஸ் பழனி மாணிக்கம் அளிக்கும் வாக்குறுதிகள்: சிறப்பு நேர்காணல் (வீடியோ)

அதிராம்பட்டினம், ஏப்.11
தமிழகத்தில் வரும் 18 ஆம் தேதி மக்களவை தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான தேர்தல் பிரச்சாரம் தீவிரமாக நடைபெற்று வருகிறது. தஞ்சாவூர் மக்களவை தொகுதியில் திமுக சார்பில், எஸ்.எஸ் பழனி மாணிக்கம், தமாகா சார்பில் என்.ஆர் நடராஜன், அமமுக சார்பில் பொ.முருகேசன் ஆகியோர் மோதுகின்றனர்.

இந்நிலையில், தஞ்சை தொகுதிக்கு உட்பட்ட மதுக்கூர், பட்டுக்கோட்டை ஒன்றியப் பகுதி வாக்காளர்களிடம் வாக்கு சேகரிக்கும் பணிகளில் திமுக வேட்பாளர் எஸ்.எஸ் பழனி மாணிக்கம் இன்று வியாழக்கிழமை ஈடுபட்டார். அப்போது, தொகுதி மக்களுக்கு வேட்பாளர் அளிக்கும் வாக்குறுதிகள் என்ன?, திருவாரூர் ~ பட்டுக்கோட்டை வழித்தடத்தில் ரயில் சேவை தொடக்கம் எப்போது?, அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுப்புற பகுதி நீர்நிலை ஆதாரங்களை அதிகரிக்கும் நடவடிக்கைகள் என்ன?, அதிராம்பட்டினம் ரயில் நிலையத்தில் முன்பதிவுக் கூடம் அமைப்பதற்கு எடுக்கும் நடவடிக்கைகள் உள்ளிட்டவை குறித்து எழுப்பிய கேள்விகளுக்கு வேட்பாளர் எஸ்.எஸ் பழனி மாணிக்கம் அளித்த பதில் (இணைப்பில் வீடியோ)

அப்போது, திமுக பட்டுக்கோட்டை சட்டமன்ற முன்னாள் உறுப்பினர்கள் ஏனாதி. பாலசுப்பிரமணியம், கா. அண்ணாதுரை, அதிராம்பட்டினம் பேரூர் முன்னாள் பெருந்தலைவர் எஸ்.எச் அஸ்லம் ஆகியோர் உடனிருந்தனர்.

Sunday, March 24, 2019

என்.ஆர் நடராஜனுக்கு ஆதரவு: தமாகா அதிரை பேரூர் நிர்வாகிகள் அறிவிப்பு!

அதிராம்பட்டினம், மார்ச் 24
தஞ்சை நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி வேட்பாளர் என்.ஆர் நடராஜனுக்கு ஆதரவு தெரிவித்து அவரின் வெற்றிக்கு தீவிர பிரச்சாரப் பணிகளில் ஈடுபடப் போவதாக அக்கட்சியின் மாநில பொதுக்குழு உறுப்பினர் பொன்னம்பலம் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியது;
தஞ்சை நாடாளுமன்ற தேர்தலில், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி மாநிலத் தலைவர் ஜி.கே வாசன் அறிவித்துள்ள எங்கள் கட்சி வேட்பாளரும், தஞ்சை தெற்கு மாவட்டத் தலைவர் என்.ஆர் ரெங்கராஜன் அவர்களின் சகோதரருமாகிய என்.ஆர் நடராஜனுக்கு ஆதரவு தெரிவித்து அவரின் வெற்றிக்கு தொகுதியில் தீவிர பிரச்சாரப் பணிகளில் ஈடுபட முடிவு செய்துள்ளோம்' என்றார்.

அப்போது, அக்கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் வி.சிங்காரவேலு, தஞ்சை தெற்கு மாவட்ட மீனவரணித் தலைவர் ஏ.கண்ணன், அதிரை பேரூர் பொதுச்செயலாளர் வி.வீரப்பன், செயலாளர்கள் சி.கிருஷ்ணன், வி. சகாதேவன், எம்.சண்முகம், 2-வது வார்டு தலைவர் எம்.முருகன், 5-வது வார்டு துணைச் செயலாளர் ஜி.கணேசன் ஆகியோர் உடன் இருந்தனர்.

தஞ்சை நாடாளுமன்ற திமுக வேட்பாளர் எஸ்.எஸ் பழனி மாணிக்கத்திற்கு M.M.S குடும்பத்தார் நிபந்தனையின்றி ஆதரவு (படங்கள்)

அதிராம்பட்டினம், மார்ச் 24
திமுக தலைமையிலான மத சார்பற்ற கூட்டணியில் திமுக சார்பில் தஞ்சை நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும், வேட்பாளர் எஸ்.எஸ் பழனி மாணிக்கம் வெற்றிபெற நிபந்தனையின்றி ஆதரவு தெரிவித்தனர் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி அதிராம்பட்டினம் பேரூர் தலைவர் எம்.எம்.எஸ் அப்துல் கரீம் தலைமையில், எம்.எம்.எஸ் குடும்பத்தார்.

தமாகா அதிராம்பட்டினம் பேரூர் தலைவர் எம்.எம்.எஸ் அப்துல் கரீம் தலைமையில், எம்.எம்.எஸ் தாஜுதீன், எம்.எம்.எஸ் சேக் நசுருதீன், எம்.எம்.எஸ் அன்வர் உட்பட சுமார் 100 க்கும் மேற்பட்ட எம்.எம்.எஸ் குடும்பத்தார், எம்.எம்.எஸ் வாடி வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்ற நிகழ்ச்சியில், திமுக அதிராம்பட்டினம் பேரூர் செயலாளர் இராம. குணசேகரன் முன்னிலையில், திமுக தலைமையிலான மத சார்பற்ற கூட்டணியில் திமுக சார்பில் தஞ்சை நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும், வேட்பாளர் எஸ்.எஸ் பழனி மாணிக்கம் வெற்றிபெற நிபந்தனையின்றி ஆதரவு தெரிவிப்பதாக அறிவித்தனர்.

அப்போது, திமுக கலை இலக்கியப் பகுத்தறிவுப் பேரவை தஞ்சை தெற்கு மாவட்ட அமைப்பாளர் பழஞ்சூர் K.செல்வம், திமுக அதிரை பேரூர் இணைச்செயலாளர் ஏ.எம் அன்சர் கான், பொருளாளர் கோடி. முதலி, மாவட்ட பிரதிநிதி எம்.பகுருதீன், ஒன்றியப் பிரதிநிதி முல்லை மதி, ஒன்றிய சிறுபான்மை நலப்பிரிவு அமைப்பாளர் இத்ரீஸ் அகமது, முன்னாள் கவுன்சிலர் செய்யது முகமது, காங்கிரஸ் கட்சி அதிராம்பட்டினம் பேரூர் முன்னாள் தலைவர் எஸ்.எம் முகமது முகைதீன், தலைவர் எஸ்.கார்த்திகேயன், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் அதிரை பேரூர் தலைவர் கே.கே ஹாஜா நஜ்முதீன், பொருளாளர் ஏ.ஷேக் அப்துல்லா, இணைச்செயலாளர் எம்.கே.எம் அபூ பக்கர், மாவட்ட ஊடகப் பிரிவு பொறுப்பாளர் ஏ.சாகுல் ஹமீது, தமுமுக / மமக தஞ்சை தெற்கு மாவட்டத் தலைவர் அதிரை அகமது ஹாஜா, தமுமுக மாநில செயற்குழு உறுப்பினர் எம்.ஓ செய்யது முகமது புஹாரி, மமக நிர்வாகிகள் அப்துல் ரஹ்மான், முகமது சேக்காதியார், ஹக்கீம், இந்திய கம்யூனிஸ்ட் பசீர் அகமது உள்ளிட்ட திமுக கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

அதிராம்பட்டினம் M.M.S குடும்பத்தார் சுமார் 50 ஆண்டுகளுக்கும் மேலாக காங்கிரஸ் கட்சியில் அங்கம் வகித்து வந்தனர். பின்னர், காங்கிரஸ் கட்சியிலிருந்து தமிழ்மாநில காங்கிரஸ் பிரிந்த சென்ற போது, அக்குடும்பத்தை சேர்ந்தவர்கள் தமாகாவில் இணைந்து அதில் சிலர் நிர்வாகிகளாக பொறுப்பில் இருந்து வந்தது குறிப்பிடத்தக்கது.
 

Tuesday, March 19, 2019

தஞ்சை நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர்கள்: பயோடேட்டா (முழு விவரம்)

அதிரை நியூஸ்: மார்ச் 19
எதிர்வரும் (18-04-2019) அன்று நடைபெற உள்ள தஞ்சை நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணிக்கட்சி சார்பில் போட்டியிடும் திமுக வேட்பாளர் எஸ்.எஸ். பழனிமாணிக்கம், அதிமுக கூட்டணிக் கட்சி சார்பில், போட்டியிடும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி வேட்பாளர் என்.ஆர் நடராஜன், அமமுக சார்பில் போட்டியிடும் அக்கட்சி வேட்பாளர் பொ.முருகேசன் ஆகியோர் பற்றிய சுய விவரக்குறிப்பு (பயோடேட்டா)

பெயர்: எஸ்.எஸ். பழனிமாணிக்கம். (திமுக)
பிறந்த ஆண்டு: 1950,
தந்தை: சுப்பையா
தாய்: மரகதம் அம்மாள்,
மனைவி: மகேஸ்வரி
மகள்: பிரீத்தி,
சொந்த ஊர்: தஞ்சை அருகே உள்ள நாட்டாணி (தற்போது புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ளது).
வசிப்பிடம்: சீனிவாசபுரம், தஞ்சாவூர்.
சாதி: இந்து- கள்ளர்,
படிப்பு: எம்.ஏ., பி.எல்.

தேர்தல் அனுபவம்: 
1984, 89, 91 ஆகிய தேர்தல்களில் போட்டியிட்டு தோல்வி
1996, 98, 99, 2004, 2009 ஆகிய ஆண்டு மக்களவைத் தேர்தல்களில் தஞ்சை தொகுதியில் தொடர்ந்து 5 முறை வெற்றி. 2004-2014ஆம் ஆண்டு வரை மத்திய நிதித்துறை இணை அமைச்சர். தற்போது தஞ்சை தொகுதியில் 9ஆது முறையாக போட்டியிடுகிறார்.

கட்சிப் பதவி: 
மாநில மாணவரணி, விவசாய அணி இணை செயலராகவும், மத்திய வேளாண்மை நிலைக்குழு தலைவராகவும், தஞ்சை மாவட்ட தி.மு.க. செயலராகவும் பணியாற்றியவர். தற்போது திமுக உயர்நிலை செயல் திட்டக் குழு உறுப்பினராக உள்ளார்

பெயர்: என்.ஆர் நடராஜன் (தமாகா)
பிறந்த தேதி: 10-02-1967
வயது: 52
சொந்த ஊர்: பட்டுக்கோட்டை அருகே உள்ள தம்பிக்கோட்டை
பெற்றோர்: என். ராமசாமி தேவர் ~ வைரமணி அம்மாள்
மனைவி: சுகன்யா
கல்வித்தகுதி: தஞ்சாவூர் தூய அந்தோனியார் மேல்நிலைப்பள்ளியில் பள்ளிப்படிப்பை முடித்த இவர் தஞ்சாவூர் சண்முகா பொறியியல் கல்லூரியில் (தற்போது சாஸ்த்ரா) பொறியியல் பட்டம் பெற்றவர்.
தொழில்: விவசாயம், பிளாட் புரொமோட்டர்ஸ்

கட்சிப் பொறுப்பு: த.மா.கா மாநில செயற்குழு உறுப்பினர்
பிற பொறுப்புகள்: பட்டுக்கோட்டை வர்த்தக சங்க கெளரவத் தலைவர், திருவையாறு தியாகராஜ பிரம்ம மகா சபை செயற்குழு உறுப்பினர்,

குடும்பப் பின்னணி: என்.ஆர் நடராஜனின் மூத்த சகோதரர் என்.ஆர் ரெங்கராஜன் 2001 முதல் 2016 வரை பட்டுக்கோட்டை சட்டப்பேரவை உறுப்பினராக இருந்தவர். நடராஜானின் மாமனார் வி.என் சுவாமிநாதன் 1980 - 84ஆம் ஆண்டுகளின் புதுக்கோட்டை தொகுதி மக்களவை உறுப்பினர்.

பெயர்: பொ.முருகேசன் (அமமுக)
பிறந்த தேதி: 11.08.1957
ஊர்: தட்டான்கோவில், திருவாரூர் மாவட்டம்.
படிப்பு: எம்.எஸ்.சி.,இயற்பியல்,
ஜாதி: கள்ளர்

தொழில்: 
தஞ்சாவூர் பிரிஸ்ட் பல்கலைக்கழக குழும நிறுவனர், 1986ஆம் ஆண்டு சிறிய அளவில் கணினி மையம் ஒன்றை தொடங்கி நடத்தி வந்தார். பின்னர் 1994ஆம் ஆண்டு கலை கல்லூரியும், 2000ஆம் ஆண்டு பொறியியல் கல்லூரியும், 2004ஆம் ஆண்டு பாலிடெக்னிக் கல்லூரியும் தொடங்கினார். 2008ஆம் ஆண்டு பொன்னையா ராமஜெயம் பல்கலைக்கழகத்தை தொடங்கினார். 2014ஆம் ஆண்டு சட்டக் கல்லூரி, ஆசிரியர் பயிற்சி கல்லூரியும், 2016ஆம் ஆண்டு விவசாயம் மற்றும் மருத்துவக் கல்லூரியும் தொடங்கி நடத்தி வருகிறார். கடந்த 31 ஆண்டுகளாக பொன்னையா ராமஜெயம் என்ற பெயரில் கல்வி நிறுவனங்களை தஞ்சாவூரில் நடத்தி வருகிறார்.

கட்சி அனுபவம்: 
1972-ம் ஆண்டு முதல் அதிமுகவில் அடிப்படை உறுப்பினர். தற்போது அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தில் அடிப்படை உறுப்பினர்.

Wednesday, March 13, 2019

அதிராம்பட்டினத்தில் வாகனச் சோதனையில் ரூ.2.20 லட்சம் பறிமுதல்!

தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம், கரையூர் தெரு சோதனை சாவடியில் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச் சென்ற .ரூ.2,20,500 ரொக்கத் தொகையை தேர்தல் கண்காணிப்பு அலுவலர்கள் பறிமுதல் செய்துள்ளனர் என மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்துள்ளதாவது: -
தஞ்சாவூர் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட பட்டுக்கோட்டை சட்ட மன்ற தொகுதியின் அதிராம்பட்டினம் கரையூர் தெரு சோதனை சாவடியில் 12.03.2019 அன்று காலை 09.20 மணியளவில் மேலபழஞ்சூரிலிருந்து முத்துப்பேட்டையை நோக்கி சென்று கொண்டிருந்த மாருதி ஷிப்ட் என்ற நான்கு சக்கர வாகனம் தேர்தல் கண்காணிப்பு குழுவினரால் சோதனை செய்யப்பட்டது.  அப்போது வாகனத்தை ஒட்டி வந்த விஜயன் என்பவரிடமிருந்து உரிய ஆவணங்கள் இன்றி கண்டறியப்பட்ட ரூ.2,20,500 ரொக்கத் தொகை கண்காணிப்பு அலுவலர் கண்ணகி அவர்களால் பறிமுதல் செய்யப்பட்டது. கைப்பற்றப்பட்ட ரொக்க தொகை பட்டுக்கோட்டை சார்நிலை கருவூலத்தில் சீல் செய்யப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்தார்.

Sunday, March 10, 2019

தமிழகம் ~ புதுவையில் ஏப்.18-ல் தேர்தல்: மே 23 ல் வாக்கு எண்ணிக்கை!

நாடுமுழுவதும் பரபரப்புடன் எதிர்பார்க்கப்பட்ட மக்களவை தேர்தல் தேதி இன்று அறிவிக்கப்பட்டது. டெல்லியில் உள்ள விஞ்ஞான் பவனில் தேர்தல் ஆணையர் சுனில் ஆரோரா மற்றும் தேர்தல் ஆணையர் அசோக் லவசா, சுசில் சந்திரா ஆகியோர் கூட்டாக ஊடகங்களுக்கு தேர்தல் தேதி அறிவிப்பை வெளியிட்டனர்.

மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 11ம் தேதி தொடங்கி மே மாதம் 19-ம் தேதி வரை 7 கட்டமாக நடைபெறுகிறது. வாக்குப்பதிவு மே 23-ம் தேதி நடைபெறுகிறது.

முதற்கட்ட தேர்தல்- ஏப்ரல் 11 தேதி
இரண்டாம் கட்டத் தேர்தல் - ஏப்ரல் 18 தேதி
மூன்றாம் கட்டத் தேர்தல் - ஏப்., 23 தேதி
நான்காம் கட்டத் தேர்தல் - ஏப்., 29 தேதி
5வது கட்ட தேர்தல் மே 6 ஆம் தேதி
6-ம் கட்ட தேர்தல் மே 12 ஆம் தேதி
7-ம் கட்ட தேர்தல் 19 ஆம் தேதியும் நடைபெறும். அனைத்துக் கட்ட தேர்தல் வாக்கு எண்ணிக்கை மே 23 அன்று எண்ணப்படும். 

தமிழகம் மற்றும் புதுசேரியில் ஒரே கட்டமாக ஏப்ரல் 18 -ஆம் தேதியன்று மக்களவைத் தேர்தல் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் அட்டவனை விபரங்கள் வருமாறு:
வேட்பு மனுத் தாக்கல் செய்ய கடைசி நாள்: 26.03.2019
வேட்பு மனு பரிசீலனை நடைபெறும் நாள்: 27.03.2019
வேட்பு மனுக்களை வாபஸ் பெற கடைசி நாள்: 29.03.2019
வாக்குப் பதிவு: 18.04.2019
வாக்கு எண்னிக்கை நடைபெறும் நாள்: 23.05.2019