.

Pages

Wednesday, December 28, 2016

அதிரை அருகே ரூ.1 லட்சம் மதிப்பீட்டில் பயணிகள் நிழற்குடை திறப்பு !

அதிராம்பட்டினம், டிச-28
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் அருகே உள்ள புதுப்பட்டினம் பஸ் நிலையத்தில் பயணிகள் நிழற்குடையை பேராவூரணி சட்டமன்ற தொகுதி உறுப்பினர் மா.கோவிந்தராசு திறந்து வைத்து பேசினார்.

உலக அளவில் வெளிநாட்டு பணப்பரிமாற்றம் செய்து வரும் பால் மெர்ச்சண்ட்ஸ், வெஸ்டர்ன் யூனியன் நிறுவனம் சார்பில் ரூ. 1 லட்சம் மதிப்பீட்டில் பயணிகள் நிழற்குடை திறப்பு விழா நிகழ்ச்சி புதுப்பட்டினம் பஸ் நிறுத்தம் அருகே செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு குழ. சுந்தர்ராஜன் தலைமை வகித்தார்.சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் மா. கோவிந்தராசு பயணியர் நிழற்கூடத்தை பொது மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்து பேசினார்.

நிகழ்ச்சியில் பால் மெர்ச்சண்ட்ஸ் நிறுவனத்தின் தமிழ்நாடு மற்றும் கர்நாடக தலைவர் கே .கோவிந்தராஜன் , வெஸ்டர்ன் யூனியன் தமிழ்நாடு வாணிப மேம்பாட்டு மேலாளர் பிரேம் சுகுணேஷ் ஆகியோர் கலந்துகொண்டனர். முடிவில் பால் மெர்ச்சண்ட்ஸ் நிறுவன பணியாளர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்தனர்.
 



அதிநவீன கட்டமைப்பில் ஏ.ஜே ஜும்மா பள்ளி சுகாதார வளாகம் ( படங்கள் )

அதிராம்பட்டினம், டிச-28
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் ஏ.ஜே நகரில் அமைந்துள்ள ஏ.ஜே ஜூம்மா பள்ளியில் தினமும் தொழுகையும், வாரந்தோறும் ஜும்மா தொழுகை, மக்தப் மதரசா, பெண்கள் பயான் உள்ளிட்ட இஸ்லாமிய தாவா பணிகள் நடந்து வருகிறது.

இதில் இப்பகுதியை சேர்ந்த இஸ்லாமியர்கள் பலர் கலந்துகொள்கின்றனர். குறிப்பாக வெள்ளிக்கிழமை தோறும் நடந்து வரும் ஜும்மா தொழுகையில் 600 பேர் வரை கலந்துகொள்கின்றனர். இப்பள்ளிக்கு வரும் தொழுகையாளிகள் வரத்து நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் பள்ளியில் தொழுகையாளிகள் பயன்படுத்துவதற்காக அதிநவீன கட்டமைப்பில் கழிப்பறைகள், குளியலறை, வெஸ்டர்ன் கழிப்பறை, வயோதிகர்கள் பிரத்தியோக கழிப்பறை ஆகியன அடங்கிய சுகாதார வளாகம், நவீன வடிவில் ஹவ்த் (அகல் ) மற்றும் பள்ளிவாசல் இமாம் மற்றும் முஅத்தினார் தங்குவதற்கு வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இவை அனைத்தும் பள்ளிக்கு வந்த செல்லும் தொழுகையாளிகளை பெரிதும் கவர்ந்து இழுக்கின்றன.

கடந்த சில வருடங்களாக பள்ளிவாசல் புனரைமைப்பு மற்றும் இஸ்லாமிய தாவாப் பணிகளில் பள்ளி நிர்வாகக் கமிட்டியினர் தீவிரமாக செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

அதிரையில் 7.60 மி.மீ மழை பதிவு !

அதிராம்பட்டினம், டிச-28
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் நேற்று நள்ளிரவில் மழை பெய்தது. இன்று காலை முதல் வானம் மேகம் மூட்டத்துடன் சூழ்ந்து காணப்படுகிறது. பகலில் அவ்வப்போது விட்டு விட்டு மிதமாகவும், கனமாகவும் மழை பெய்துவருகிறது.

இன்று காலை 8 மணி நேர நிலவரப்படி அதிரையில் 7.60 மி.மீ மழை பதிவாகி உள்ளது. பட்டுக்கோட்டையில் 25 மி.மீ, பேராவூரணி 6 மி.மீ, மதுக்கூரில் 4.60 மி.மீ மழை பதிவாகி உள்ளது.

அமீரகத்தில் கடும் பனிப்பொழிவு ! போக்குவரத்து ஸ்தம்பித்தது !

அதிரை நியூஸ்: துபாய், டிச-28
அமீரகத்தில் இன்று அதிகாலையில் கடும் பனிப்பொழிவு ஏற்பட்டதை தொடர்ந்து அமீரகத்தின் பல இடங்களிலும் போக்குவரத்து ஸ்தம்பித்தது. குறிப்பாக, முஹமது பின் ஜாயித் நெடுஞ்சாலையில் (பழைய எமிரேட்ஸ் ரோடு) துபையிலிருந்து உம்மல் குவைன் வரை வாகனங்கள் கடல் போல் தேங்கியுள்ளது.

இதனை தொடர்ந்து, வாகனங்களை மிக கவனமாகவும் பொறுமையாக கையாளுமாறு போக்குவரத்து போலீஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்

இரு நாய்களின் பாசப் போராட்டம் !

அதிரை நியூஸ்: டிச-28
உக்ரைன் நாட்டில், உறைபனியும் கடும் குளிரும் நிறைந்த உஸ்கோரட் (Uzhgorod) எனும் ஊரில் 'லூசி' (Lucy) என்ற பெண் நாய் அடிபட்டு நகர முடியாமல் ரயில்வே டிரேக் நடுவே பரிதவித்து வந்ததை கண்ட அதன் தோழனான 'பாண்டா' (Panda) என்ற ஆண் நாய், அடிபட்ட பெண் நாய் அருகிலேயே தொடர்ந்து 2 நாட்கள் காவல் காத்து உடல் சூடு ஆறாமல் பார்த்துக் கொண்டதுடன் ரயில்கள் வரும் போதெல்லாம் அதனுடன் சேர்ந்து டிரேக்கின் நடுவே தலைகுனிந்து படுத்து ரயில்கள் கடந்து போகும் வரை உடனிருந்ததன் மூலம் மனரீதியான தன்னம்பிக்கை அளித்து காப்பாற்றியுள்ளது.

பின்பு மக்களால் ரயில்வே டிரேக்கிலிருந்து பெண் நாய் மீட்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வரும் நிலையிலும் ஆண் நாய் பிரியாமல் தொடர்ந்து அதனுடனேயே ஒன்றாக தங்கி வருகிறது. பெரும்பாலான மனிதர்கள் மறந்துவிட்ட இந்த நற்பண்பு  தற்போது சமூக வலைத்தளங்களில் பெரும் ஆச்சரியத்துடன் பகிரப்பட்டு வருகிறது.

Source: Dailymail
தமிழில்: நம்ம ஊரான்


 
 

டெல்லி விமான நிலையத்தில் பெரும் விமான விபத்து தவிர்ப்பு !

அதிரை நியூஸ்:டிச-28
நேற்று காலை டெல்லி விமான நிலையத்தில் இன்டிகோ விமானமும் ஸ்பைஸ்ஜெட் விமானமும் ஒரே ஓடுதளத்தில் நேருக்கு நேர் மோதவிருந்த நிலையில் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

இன்று அதிகாலை சுமார் 7.30 மணியளவில் லக்னோவிலிருந்து வந்த இன்டிகோ விமானம் டெல்லி விமான நிலையத்தில் 176 பயணிகளுடன் தரையிறங்கியது அப்போது அதே ஓடுதளத்தில் ஸ்பைஸ்ஜெட் விமானம் ஹைதராபாத் புறப்பட சென்று கொண்டிருந்த நிலையில் ஸ்பைஸ்ஜெட் விமானி உடனே விமானத்தை நிறுத்திவிட்டு வான்வழி போக்குவரத்து கட்டுப்பாட்டு மையத்திற்கு (Air Traffic Controller) தகவல் கொடுத்தனர்.

இந்த தவறு வான்வழி போக்குவரத்து கட்டுப்பாட்டு மையத்தினாலேயே ஏற்பட்டிருக்கக்கூடும் என முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆக, இன்று மட்டும் கோவாவில் 1, டெல்லியில் 1 என 2 விமான விபத்துக்கள் இந்தியாவில் இறையருளால் தவிர்க்கப்பட்டுள்ளன.

தகவலுக்காக: 
1996 ஆம் ஆண்டு டெல்லியிலிருந்து தம்மாம் (தஹ்ரான்) புறப்பட்ட சவுதி ஏர்லைன்ஸ் விமானமும் கஜாகிஸ்தான் நாட்டு விமானமும் வடக்கு டெல்லியின் சர்க்கி தாத்ரி எனும் கிராமத்திற்கு மேல் நடுவானில் சுமார் 15,000 அடி உயரத்தில் நேருக்கு நேர் மோதிக்கொண்டதால் சவுதி விமானத்தில் இருந்த 312 பேர் உட்பட இருவிமானத்தையும் சேர்ந்த மொத்தம் 359 பேர் மரணமடைந்தனர். இதுவும் டெல்லி வான்வழி போக்குவரத்து கட்டுப்பாட்டு அறையில் இருந்து வழிநடத்தப்பட்ட தவறான தகவலால் நிகழ்ந்தவையே. இந்த விபத்து வான்வெளியில் நடந்த பெரும் விமான விபத்தாகவும், உலகின் 3வது பெரும் விமான விபத்தாகவும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

1977 ஆம் ஆண்டு மார்ச் 27 ஆம் தேதி ஸ்பெயின், கெனாரி தீவில் (Canary Islands) அமைந்துள்ள டெனரீப் விமான நிலைய (Tenerife Airport) ஓடுபாதையில் KLM விமானமும் PAN AM விமானமும் மோதிக்கொண்டதில் 583 பேர் பலியான சம்பவம் முதலிடத்திலும்,

1985 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 12 ஆம் தேதி டோக்கியோவிலிருந்து ஓசாகா விமான நிலையத்திற்கு 509 பயணிகளுடன் சென்று கொண்டிருந்த ஜப்பான் ஏர்லைன்ஸ் விமானம் தவறான தொடர் பராமரிப்பினால் மிகுந்த கேபின் அழுத்தத்திற்கு உள்ளாகி வெடித்துச் சிதறியதில் 505 பேர் பலியான சம்பவம் உலகின் 2வது பெரிய விமான விபத்தாகவும் வரலாற்றில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

Sources: NDTV / Indian Express / Wikipedia
தமிழில்: நம்ம ஊரான்

Tuesday, December 27, 2016

அதிரை, மதுக்கூர், முத்துப்பேட்டை பகுதிகளில் நாளை மறுதினம் ( டிச-29 ) மின்தடை !

அதிராம்பட்டினம், டிச-27
அதிராம்பட்டினம், மதுக்கூர், முத்துப்பேட்டை பகுதிகளில் வியாழக்கிழமை (டிச. 29) மின்சார விநியோகம் இருக்காது.

மதுக்கூர் துணை மின் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளதால், இங்கிருந்து மின்சாரம் பெறும் மதுக்கூர் நகரம், பெரியக்கோட்டை, கன்னியாக்குறிச்சி, மூத்தாக்குறிச்சி, காடந்தங்குடி, அதிராம்பட்டினம், துவரங்குறிச்சி, முத்துப்பேட்டை ஆகிய பகுதிகளில் புதன்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சார விநியோகம் இருக்காது என மதுக்கூர் மின் வாரிய உதவி செயற்பொறியாளர் ஆர். ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

பட்டுக்கோட்டையில் மின்வாரிய ஊழியர் வீட்டில் தீ !

பட்டுக்கோட்டை, டிச-27
பட்டுக்கோட்டையில் திங்கள்கிழமை குடிசை வீட்டில் நேரிட்ட தீ விபத்தில் வீட்டிலிருந்த பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருள்கள் எரிந்து சேதமடைந்தது.

பட்டுக்கோட்டை - அறந்தாங்கி சாலையை சேர்ந்தவர் மின்வாரிய ஊழியர் அ. ஷேக்கபீர் (40). இவர் தனது வீட்டின் தரைத்தளத்தை வாடகைக்கு விட்டுள்ளார். வீட்டின் மாடியில் கீற்றுக்கூரை போட்டு குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

இந்நிலையில், திங்கள்கிழமை பிற்பகல் இவர் வீட்டின் கூரையில் திடிரென தீ பிடித்தது.

தகவலறிந்த பட்டுக்கோட்டை தீயணைப்புப் படையினர் விரைந்து சென்று தீ பரவாமல் அணைத்தனர். தீ விபத்துக்கான காரணம் உடனடியாக தெரியவில்லை.

இந்த தீ விபத்தில் ஷேக்கபீர் வீட்டிலிருந்த அலமாரி, கட்டில், டி.வி, பிரிட்ஜ் மற்றும் பல்வேறு பொருள்கள் எரிந்து சாம்பலாயின.

சம்பவயிடத்தை எம்எல்ஏ சி.வி. சேகர், வட்டாட்சியர் ச. ரவிச்சந்திரன், அதிமுக நகரச் செயலர் சுப. ராஜேந்திரன், நகர்மன்ற முன்னாள் உறுப்பினர் பி.கே. நாடிமுத்து உள்ளிட்டோர் பார்வையிட்டு ஆறுதல் கூறினர்.

செய்தி: தினமணி
படங்கள்: நிருபர் ஐ.எம் ராஜா