.

Pages

Tuesday, August 28, 2018

அதிராம்பட்டினத்திற்கு இன்று (ஆக.28) தண்ணீர் திறப்பு (படங்கள்)

அதிராம்பட்டினம், ஆக.28
அதிராம்பட்டினம் கடைமடை பகுதியில் வறண்டு காணப்படும் ஏரி, குளங்கள், குட்டைகள், விவசாய நிலங்களுக்கு ஆற்றுநீர் நிரப்ப வலியுறுத்தி,
அதிராம்பட்டினம் கடைமடைப் பகுதி விவசாயிகள், நீர் நிலை பாதுகாப்பு ஆர்வலர்கள் மற்றும் மீனவர்கள் சார்பில், கடந்த ஆக. 23 ந் தேதி சாலை மறியல் போராட்டம் நடத்துவதற்கு அறிவிக்கப்பட்டு இருந்தது.

இதையடுத்து, கடந்த 21 ந் தேதி பட்டுக்கோட்டை கோட்டாட்சியர் அலுவலகத்தில், வருவாய் கோட்டாட்சியர் ஐ. மகாலெட்சுமி தலைமையில், கல்லணை கால்வாய் கோட்ட உதவி செயற்பொறியாளர் அன்பரசன், உதவி செயற்பொறியாளர் சுகன்யா, அதிராம்பட்டினம் காவல் நிலைய ஆய்வாளர் தியாகராஜன், அதிராம்பட்டினம் வருவாய் ஆய்வாளர் முத்துலெட்சுமி, கிராம நிர்வாக அலுவலர் ராஜசேகர், நீர் நிலை பாதுகாப்பு அறக்கட்டளை ஒருங்கிணைப்பாளர் எஸ்.எச் அஸ்லம் மற்றும் அதிராம்பட்டினம் பகுதி விவசாயிகள், மீனவர்கள், ஜமாத்தார்கள், பஞ்சாய்த்தார்கள் பங்கேற்ற அமைதிப் பேச்சுவார்த்தைக் கூட்டம் நடத்தப்பட்டது. இதில், முதல்கட்டமாக, இராஜமடம் கிளை வாய்க்காலின்  அதிராம்பட்டினம் கடைமடைப் பகுதியில் உள்ள 5 குளங்களுக்கு 20 நாட்களுக்குள் தண்ணீர் நிரப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அதிகாரிகள் தரப்பில் உறுதி அளிக்கப்பட்டன.

இந்நிலையில், பட்டுக்கோட்டை பொதுப்பணித்துறை அலுவலகம் அருகில் அமைந்துள்ள இராஜமடம் கிளை வாய்க்கால் 11/10 லிருந்து இன்று (ஆக.28) செவ்வாய்கிழமை மாலை 6 மணிக்கு அதிராம்பட்டினம் பகுதிக்கு தண்ணீர் திறந்துவிடப்பட்டன.

இந்நிகழ்ச்சியில், பொதுப்பணித்துறை அதிகாரி ஆர். சுகன்யா, நீர் நிலை பாதுகாப்பு அறக்கட்டளை ஒருங்கிணைப்பாளர் எஸ்.எச் அஸ்லம் மற்றும் எம்.நிஜாமுதீன் (சேக்கனா நிஜாம்) ஆகியோர் கலந்துகொண்டனர். இன்னும் இரண்டு, மூன்று தினங்களில் அதிராம்பட்டினம் பகுதி வறண்ட குளங்களுக்கு தண்ணீர் வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. வாய்க்கால் அடைப்பு, உடைப்பு சீர் செய்யும் முன்னேற்பாடு பணிகளில் பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர். மேலும், தண்ணீர் செல்லும் வாய்க்காலின் குறுக்கே எவ்வித தடுப்பணைகளும் இல்லாமல் வருவாய்துறை மற்றும் காவல்துறை மூலம் உரிய நடவடிக்கை எடுக்க பொதுப்பணித்துறை அதிகாரிகள் திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
 

கால்பந்து மாநிலப் போட்டிக்கு தகுதி பெற்ற பள்ளி மாணவனுக்கு பாராட்டு!

அதிராம்பட்டினம், ஆக.28
அதிராம்பட்டினத்தை சேர்ந்தவர் ஏ.கே அப்துல் சுக்கூர். இவரது மகன் ஏ.எஸ் முகமது ஆதிப் (13). காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி 8 ஆம் வகுப்பு படிக்கும் மாணவரான இவர், அகில இந்திய பள்ளிகளின் விளையாட்டு குழுமம் (SGFT) தஞ்சாவூர் பள்ளிக்கல்வித்துறை மூலம் நடத்தப்படும் தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், கும்பகோணம், மயிலாடுதுறை, பட்டுக்கோட்டை ஆகிய கல்வி மாவட்டங்களை உள்ளடக்கிய மண்டல அளவிலான 14-வயதுக்கு உட்பட்டோருக்கான கால்பந்து போட்டி, நாகப்பட்டினம் மாவட்ட விளையாட்டு அரங்கில் ஆக.29 ந் தேதி நடைபெற்றது.

இதில், அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவன் முகமது ஆதிப் கலந்துகொண்டு வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, வரும் அக்டோபர் 16 ந் தேதி தூத்துக்குடி மாவட்ட விளையாட்டு அரங்கில் நடைபெறும் மாநிலப் போட்டியில் விளையாடுவதற்கு தகுதி பெற்றுள்ளார். இதையடுத்து, அதிராம்பட்டினம் ரோட்டரி சங்கம் சார்பில், அதன் தலைவர் எம்.கே சம்சுதீன் பாராட்டி சால்வை அணிவித்து, சான்றிதழ் மற்றும் நினைவுப் பரிசு செவ்வாய்க்கிழமை வழங்கினார். அருகில், அதிராம்பட்டினம் ரோட்டரி சங்க செயலாளர் இசட். அகமது மன்சூர், பொருளாளர் எஸ். சாகுல் ஹமீது, முன்னாள் செயலர் டி. முகமது நவாஸ்கான், பாவா பகுருதீன் ஆகியோர் உடன் உள்ளனர். 

செய்தி மற்றும் படங்கள்:
மர்ஜூக் (மாணவச் செய்தியாளர்)

மரண அறிவிப்பு ~ 'கறிக்கடை' ஹாஜா முகைதீன் (வயது 61)

அதிரை நியூஸ்: ஆக. 28
அதிராம்பட்டினம், பிலால் நகரைச் சேர்ந்த வஹாப் ராவூத்தர் அவர்களின் மகனும், மர்ஹூம் அபுல் ஹசன் அவர்களின் மருமகனும், மர்ஹூம் பக்கீர் முகமது, பாரிஸ் முகமது ஆகியோரின் சகோதரரும், மர்ஹூம் செ.மு அபுபக்கர், மர்ஹூம் செ.மு உமர் தம்பி ஆகியோரின் சகலையும், சாகுல் ஹமீது, அப்துல் மாலிக் ஆகியோரின் தகப்பனாருமாகிய 'கறிக்கடை' ஹாஜா முகைதீன் (வயது 61) அவர்கள் இன்று வஃபாத்தாகி விட்டார்கள்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

அன்னாரின் ஜனாஸா இன்று (28-08-2018) இரவு இஷா தொழுதவுடன் தக்வா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.

அமெரிக்கா அதிரையர் கூட்டமைப்பின் (AAF) மூன்றாம் காலாண்டு சந்திப்பு (படங்கள்)

அதிரை நியூஸ்: ஆக.28
அமெரிக்கா வாழ் அதிரையர்களின் நலன் கருதி கடந்த 2012 ஆம் ஆண்டு  அமெரிக்கா அதிரையர் கூட்டமைப்பு (AAF) தொடங்கப்பட்டது. இந்த அமைப்பினர் கால் ஆண்டிற்கு ஒரு முறை குடும்பத்துடன் ஒன்று கூடி தங்களின் அன்பை பரிமாறிக் கொள்வதுடன், சமூக நலன் சார்ந்த திட்டங்கள் குறித்து கலந்தாலோசனை செய்வது வழக்கம். குறிப்பாக பெருநாள் பண்டிகைகள், விடுமுறை தின காலங்களில் சந்திப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது.

அதன்படி, அமெரிக்கா அதிரையர் கூட்டமைப்பின் (AAF) 3 ஆம் காலாண்டு சந்திப்புக் கூட்டம், கலிபோர்னியா மாஹானம் ஃபேர்ஃபீல்ட் (Fairfield) நகர் லாரல் க்ரீக் பார்க்கில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மதியம் லுஹர் தொழுகைக்கு பிறகு நடைபெற்றது.

நிகழ்ச்சியை, அவ்வமைப்பின் முன்னாள் செயலர் நசீர் அகமது கிராஅத் ஓதி தொடங்கி வைத்தார். நிகழ்ச்சிக்கு, அவ்வமைப்பின் தலைவர் புஹாரி தலைமை வகித்தார்.

கூட்டத்தில், AAF நிதி நிலை அறிக்கையை செயலாளர் நஜ்முதீன் சமர்ப்பித்தார். பின்னர், AAF ஆற்றிய சேவை - செயல்பாடுகள் மற்றும் எதிர்காலத் திட்டங்கள் பற்றிய தகவலை எடுத்துரைத்தார். இதில், அமைப்பின் அடுத்த இரண்டு ஆண்டிற்கான புதிய நிர்வாகிகள் தேர்வு குறித்து விவாதிக்கப்பட்டது. கூட்ட முடிவில், அமைப்பின் துணைத்தலைவர் சலீம் நன்றி கூறினார்.

இந்தக் கூட்டத்தில், அமைப்பின் முன்னாள் நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டு ஆலோசனை வழங்கினர். இதில், வடக்கு கலிபோர்னியா வாழ் அதிரை பிரமுகர்கள் பலர் குடும்பத்துடன் கலந்து கொண்டனர்.

Monday, August 27, 2018

மரண அறிவிப்பு ~ ஜரீனா அம்மாள் (வயது 55)

அதிரை நியூஸ்: ஆக. 27
அதிராம்பட்டினம், கீழத்தெரு பாட்டன் வீட்டு குடும்பத்தை சேர்ந்த கு.அ அப்துல் அஜீஸ் அவர்களின் மகளும், மர்ஹூம் சி.சு எஹ்யா மரைக்காயர் அவர்களின் மருமகளும், இ.அப்துல் ஜப்பார் அவர்களின் மனைவியும், ஏ.தாஜுதீன், ஏ.அகமது அன்சாரி, ஏ.சாதிக் பாட்சா ஆகியோரின் சகோதரியும், எப். குத்புதீன், எஸ். அஸ்பாக் அகமது ஆகியோரின் மாமியாரும், சமீர் அவர்களின் தாயாருமாகிய ஜரீனா அம்மாள் (வயது 55) அவர்கள் இன்று வஃபாத்தாகி விட்டார்கள்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

அன்னாரின் ஜனாஸா நாளை (28-08-2018) பெரிய ஜும்மா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும். (நேரம் பின்னர் அறிவிக்கப்படும்)

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.

அதிராம்பட்டினத்தில் குளிர்ந்த காற்றுடன் மழை !

அதிராம்பட்டினம், ஆக. 27
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில்
கடந்த சில நாட்களாக கடும் வெப்பம் இருந்து வந்தது. இன்று திங்கட்கிழமை பகல் முழுவதும் கடும் புழுக்கம் நிலவி வந்த நிலையில், மாலை 6.30 மணி முதல் திடீரென குளிர்ந்த காற்றுடன் மழை பெய்து வருகிறது. இதனால், இப்பகுதியில் வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியது. மழை தொடர்ந்து நீடித்து பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Sunday, August 26, 2018

அதிரை ஏ.பஹாத் அகமது தலைமையில் TARATDAC அமைப்பினர் வைத்திலிங்கத்தை சந்தித்து கோரிக்கை!

தஞ்சாவூர், ஆக.26
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் பணியாற்றும் பருவகால மாற்றுத்திறனாளிகள் சங்கத்தினர் பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி மாநிலங்களவை உறுப்பினர் வைத்திலிங்கத்தை தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தினர் (TARATDAC) இன்று ஞாயிற்றுக்கிழமை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.

இரு ஆண்டுகளுக்கு மேல் தொகுப்பு ஊதியத்தில் பணிபுரியக்கூடிய மாற்றுத்திறனாளி பணியாளர்களைப் பணி நிரந்தரப்படுத்த வேண்டும் என 2008 ஆம் ஆண்டு அரசாணை எண் 151-இல் இருந்தும், இதுவரை தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் பணிபுரியும் பருவகால மாற்றுத்திறனாளி பணியாளர்கள் பணி நிரந்தரம் செய்யப்படவில்லை.
எனவே, அரசாணைப்படி உடனடியாக பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி மாநிலங்களவை உறுப்பினர் வைத்திலிங்கத்தை தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தலைவர் ஏ. பஹாத்அகமது தலைமையில், அவ்வமைப்பினர் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். மனுவை பெற்றுக்கொண்டு இதுகுறித்து தமிழக முதல்வரின் கவனத்துக்கு எடுத்துச்செல்வதாக அவர்களிடம் கூறினாராம்.
 
 

வட்ட அளவிலான விளையாட்டு போட்டிகளில் காதிர் முகைதீன் பள்ளி ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை வென்றது!

அதிராம்பட்டினம், ஆக.26
பட்டுக்கோட்டை வட்ட அளவிலான விளையாட்டு போட்டிகளில், ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வென்றது.

பட்டுக்கோட்டை வட்ட அளவிலான, 51 வது ஆண்டு குடியரசு தின தடகள விளையாட்டு போட்டிகள், கடந்த ஆக.23, 24, 25 ஆகிய 3 தினங்கள் அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.

ஜூனியர், சீனியர், சூப்பர் சீனியர் பிரிவுகளில், தடகளப் போட்டிகளில், 60 க்கும் மேற்பட்ட பள்ளிகளைச் சேர்ந்த 700 மாணவ, மாணவிகள் கலந்துகொண்டு விளையாடினர்.

போட்டிகளை, காதிர் முகைதீன் கல்வி நிறுவனங்களின் செயலர் எஸ்.ஜெ அபுல் ஹசன், மாவட்ட கல்வி அலுவலர் கே.பாண்டியன், மாவட்ட உடற் கல்வி ஆய்வாளர் ஏ.தேன்மொழி, பள்ளித் தலைமை ஆசிரியர் ஏ.எல் அஸரப் அலி ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

போட்டி முடிவில் பரிசளிப்பு விழா நடைபெற்றது. ஆண்கள் பிரிவில், அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி 105 புள்ளிகள் பெற்று முதலிடமும், பட்டுக்கோட்டை புனித தாமஸ் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி 64 புள்ளிகள் பெற்று இரண்டாமிடமும், அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி மெட்ரிக். மேல்நிலைப்பள்ளி 37 புள்ளிகள் பெற்று மூன்றாமிடமும் பிடித்தது. பெண்கள் பிரிவில், வெட்டுவாக்கோட்டை அரசு  மேல்நிலைப்பள்ளி 89 புள்ளிகள் பெற்று முதலிடமும், பட்டுக்கோட்டை புனித இசபெல் பெண்கள் மேல்நிலைப்பள்ளி 72 புள்ளிகள் பெற்று இரண்டாம் இடமும், ஊரணிபுரம் ஸ்ரீ கிருஷ்ணா மேல்நிலைப்பள்ளி 42 புள்ளிகள் பெற்று மூன்றாமிடமும் பிடித்தது. இதில், 105 புள்ளிகள் பெற்று முதலிடம் பிடித்த அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை வென்றது.

பரிசுகளை காதிர் முகைதீன் கல்வி நிறுவனங்களின் செயலர் எஸ்.ஜெ அபுல் ஹசன், முன்னாள் உடற்கல்வி இயக்குநர் (ஓய்வு) டி. ரவிச்சந்தர், உடற்கல்வி ஆசிரியர் (ஓய்வு) ஆர்.ராமச்சந்திரன், முன்னாள் தலைமை ஆசிரியர் ஆர். தர்மலிங்கம் ஆகியோர் வழங்கினர்.

விழா ஏற்பாட்டினை, பள்ளித் தலைமை ஆசிரியர் ஏ.எல் அஸரப் அலி, உடற்கல்வி ஆசிரியர்கள் ஏ. ராஜா, ஏ.ஜெயகாந்தன் மற்றும் ஆசிரியர்கள் செய்து இருந்தனர். நிகழ்ச்சியினை பள்ளி தமிழ் ஆசிரியர் மு. உமர் பாருக் தொகுத்து வழங்கினார். முடிவில் பள்ளி உதவித் தலைமை ஆசிரியர் எஸ்.நாகராஜன் நன்றி கூறினார்.

செய்தி மற்றும் படங்கள்:
மர்ஜூக் (மாணவச் செய்தியாளர்)