.

Pages

Wednesday, December 2, 2015

பட்டுக்கோட்டையில் தமாகா 2 ம் ஆண்டு தொடக்க விழா!

பட்டுக்கோட்டையில் தமாகா 2 ம் ஆண்டு தொடக்க விழா சனிக்கிழமை கொண்டாடப்பட்டது.

நிகழ்ச்சிக்கு தஞ்சை தெற்கு மாவட்டத் தலைவர் என்.ஆர். ரெங்கராஜன் எம்எல்ஏ தலைமை வகித்தார். மாவட்ட துணைத் தலைவர் வழக்குரைஞர் ஆர். ராமசாமி, எம்எம்எஸ் அப்துல்கரீம், ஜான். தனசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட்டாரத் தலைவர்கள் ஏ. பழனிவேல், வைத்திலிங்கம், பிரபு, நகர்மன்ற உறுப்பினர்கள் செ. கண்ணன், பி.கே. நாடிமுத்து, ஊராட்சித் தலைவர்கள் ஏ.சி. தனபால் கணேசன், சுதாகரன், அதிரை மைதீன், கார்த்திகேயன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக நகரத் தலைவர் ஏ.கே. குமார் வரவேற்றார்.

புதிதாக விண்ணப்பித்த அதிரையர்களுக்கு ரேஷன் கார்டுகள் தயார் !

புதிதாக ரேஷன் கார்டு கேட்டு விண்ணப்பித்த அதிரையை சேர்ந்த கீழ்க்கண்ட விண்ணப்பதாரர்களின் புதிய ரேஷன் கார்டுகள் பட்டுக்கோட்டை தாலுகா அலுவலகத்தில் தயார் நிலையில் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

உரியவர்கள் உரிய ஆவணங்களை உணவு வட்ட வழங்கல் அலுவலர் ( TSO ) அவர்களிடம் நேரடியாக சமர்ப்பித்து அவரவர் ரேஷன் கார்டுகளை பெற்றுச்செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சபுரா அம்மாள்
நடுத்தெரு கீழ்புறம்

உம்மல் நாஜ்ரா
செக்கடி தெரு

ஹாஜா கமாலுதீன்
நேஜாஜி நகர்

சவுதா பேகம்
நேஜாஜி தெரு

சித்திக் மன்சூரா
அம்பேத்கர் தெரு

ஹசீனா அம்மாள்
அம்பேத்கர் தெரு
மேற்படி தகவல் செக்கடி மேடு  பகுதியில் அமைந்துள்ள ரேஷன் கடையின் பொறுப்பாளரிடமிருந்து பெறப்பட்டது. புதிதாக ரேஷன் கார்டு கேட்டு விண்ணப்பித்த அதிரையின் பிற பகுதிகளை சேர்ந்தவர்கள் தங்கள் பகுதியின் ரேஷன் கடைகளின் பொறுப்பாளர்களிடம் கேட்டு தெரிந்துகொண்டு தங்களின் ரேஷன் கார்டுகளை பெற முயற்சிக்கலாம்.

மண் ! - வரமா? சாபமா?

மண் என்று “சிம்பிளாக”   நாம் உச்சரிக்கும் ஒரு சொல் ,  பல அடையாளங்களை நமக்குத் தருகிறது என்பதை நாம் ஒப்புக்கொள்ள வேண்டும். ‘தாய் மண்’ என்று தாய்நாட்டைச் சொல்கிறோம்;  ‘பிறந்த மண்’ என்று பூர்விக ஊரைச் சொல்கிறோம்; ‘மண்ணின் மைந்தர்கள்’ என்று ஒரு குறிப்பிட்ட    வட்டாரத்தைச் சேர்ந்தவர்களை அடையாளப்படுத்துகிறோம்; ‘இந்தமண்ணுக்குச் சொந்தக்காரன்’ என்று உரிமையை நிலைநிறுத்துகிறோம்.

இவ்வாறு , நாம் மண் என்று சொல்லும் ஒரு சொல்,  ஒரு சொல் மட்டும்தானா? இல்லை. அது ஒரு அடையாளம்; உரிமை; உணர்வு; உத்வேகம்; ஊக்கம்.
“கண் மூடிப் பழக்கமெல்லாம் மண்மூடிப் போகட்டும்” என்று ஒழிக்கப்பட வேண்டிய மூட நம்பிக்கைகளை ஒழிக்கும் உணர்வை ஊட்டவும் மண்ணைத்தான் கவிஞர்கள் பயன்படுத்தப் பழக்கிக் கொண்டார்கள்.

இதே மண்ணை,  பிறர் மீது சாபத்தையும் வெறுப்பையும் உமிழவும் நாம் பயன்படுத்தும் நிலைக்குத் தள்ளப்படுகிறோம். நமது வெறுப்புக்குள்ளானவரை அல்லது நமக்கு துரோகம் இழைத்தவராக நாம் கருதுபவர்களை நோக்கி சாபமிட,  ‘மண்ணாகிப் போய்விடுவான்’ என்று கூக்குரலிடுகிறோம்.       அத்தகையோரின்  வீடுகளின் முன்பு மண்ணை வாரி இறைப்பவர்களும் உண்டு. வழிபாட்டுத் தளங்களின் வாயிலில் நின்று கூட ஒருவரின் பெயரைக் குடும்பத்துடன் குறிப்பிட்டு அவர்கள்  அழிந்து போகட்டும் என்று குமுறும் உள்ளத்துடனும் கொட்டும் கண்ணீருடன் ஒருவித கோபத்தின் வெளிப்பாடாக கைகளால் அள்ளித் தூற்றுவதும் மண்ணைத்தான்.

இவ்வாறு சாபமிடுவதற்காக மண்ணை அள்ளித் தூற்றுவதை  இஸ்லாமிய வரலாற்று விழுமியங்களிலும் விதிவிலக்கின்றி  காண முடிகிறது.
ஹிஜ்ரி இரண்டாம் ஆண்டு , இறைநிராகரிப்பாளர்களான     குறைஷிகளுக்கெதிரான பத்ருப் போரில் கலந்து கொள்வதற்காக கவச ஆடை அணிந்து கூடாரத்திலிருந்து வெளிப்பட்ட பெருமானார் ( ஸல்) அவர்கள் ,

“அதிசீக்கிரத்தில் இக்கூட்டம் தோற்கடிக்கப்படுவார்கள் , (பிறகு) புறங்காட்டி ஓடுவார்கள் “ ( அல் குர்-ஆன் 54: 45) .  . .

என்ற  வசனத்தைக் கூறியவர்களாக பொடிகற்கள் நிறைந்த மண்ணை “ முகங்கள் மாறட்டும் “ என்று கூறி எதிரிகளின் முகத்தை நோக்கி எறிந்தார்கள். அது எதிரிகளின் கண், தொண்டை, வாய் என்று      அனைத்தையும் சென்றடைந்தது

அதுமட்டுமல்ல, பெருமானார் ( ஸல்) அவர்கள் மண்ணை அள்ளித் தூற்றிய இந்த சம்பவம் குறித்தே ,

“ நீங்கள் எறியும் போது உண்மையில் அதை நீங்கள் எறியவில்லை. எனினும் அதை நிச்சயமாக அல்லாஹ்தான் எறிந்தான் “ ( அல் குர்—ஆன்  9: 17)  என்ற வசனமும் இறங்கியது. ( அர் ரஹீக் அல் மக்தூம் page 272 ) . என்று அறிகிறோம்.
மனித குலத்தின் மூலப் பிதாவான நபி  ஆதம் ( அலை ) அவர்கள் மண்ணால்தான் படைக்கப்பட்டார்கள்.

“ மனிதனின் படைப்பைக் களிமண்ணிலிருந்து துவக்கினான்”   ( அல்  குர் – ஆன் 32:7 )

( காய்ந்தால் கன்,  கன் என்று ) சப்தம் கொடுக்கக்கூடிய பிசுபிசுப்பான  களிமண்ணால் நிச்சயமாக நாமே மனிதனைப் படைத்தோம் “ (  அல்  குர் – ஆன் 15:26  ) என்றும் அல்லாஹ் தனது அருள்மறையில் கூறுகிறான்.
அல்லாஹ் இந்த பூமியின் அனைத்துப் பகுதியிலிருந்தும் மண்ணை சேகரித்து அதன் ஒரு பிடியிலிருந்து ஆதம் ( அலை) அவர்களைப் படைத்தான். அதனால்தான் பூமியின் (பலதரப்பட்ட) தன்மைக்கேற்ப ஆதமின் மக்கள் வந்துள்ளனர். அந்த மக்களில் கருப்பர், வெள்ளையர், சிவப்பு நிறத்தவர் (என பலதரப்பட்டநிறமுடையவர்களும்)  நல்லவர், கெட்டவர், மென்மையானவர், கவலை கொள்பவர் என பலதரப்பட்ட பண்புகளை உடையவர்களும் ஆகியோர் உள்ளனர்.

அபூமூஸா அல்  அஷ்ஹரி ( ரலி) அவர்கள் முஸ்னத் அஹமத் 19811, 19876, 19812 நபி மொழிப்பதிவுகளில்  மேற்கண்டவாறு  அறிவிக்கிறார்கள் . ( குர் ஆன் கூறும் நபிமார்கள் வரலாறு – ஜைனப் காதர் சித்தீக்கியா )
மேலும்,  மனிதர்கள் மரணமடைந்தபிறகு மண்ணிலேயே அடக்கம்           செய்யப்படுகிறார்கள்.  மீண்டும் மண்ணிலிருந்தே எழுப்பப்படுவார்கள். அடக்கம் செய்யும் நேரத்தில் , பிடிமண்ணை பிடித்து மரணமடைந்த  உடலுடன் ஒட்டி வைக்கிறோம். ஆகவே நம்முடன் மண்தான் இறுதிவரை பயணிக்கிறது. அந்த நேரத்தில்   “ மண்ணாலேயே படைக்கப்பட்டோம்; இந்த மண்ணிலேயே அடக்கப்பட்டோம் ; மீண்டும் இந்த  மண்ணிலிருந்தே எழுப்பபடுவோம் “ என்று உணர்கிறோம். ஆகவே மண்ணை மண்தானே என்று தரம் குறைத்துப் பார்க்க இயலாது.

அது மட்டுமா?
பஞ்சபூதங்களான நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகியவற்றில் நிலம் அல்லது மண்ணுக்கு,  இறந்தவற்றை உயிர்ப்பிக்கும் தன்மை உண்டு. உயிரற்ற விதைகள்,  மண்ணோடு சேர்ந்து “மகா கூட்டணி” அமைத்தால் அந்த விதைகள் மரமாகி வளர்ந்து மனித குலத்துக்கு தனது தன்மைகளை வாழ்நாளெல்லாம்  வாரி வழங்குகின்றன.

மழைக் காலங்களில் மழை நீரை 57%  வரை உறிஞ்சி,  தன்னுடைய சேமிப்பு வங்கியில்  மண்தான் வைத்துக் கொள்கிறது. பிறகு மனிதன் தனது தண்ணீர் தேவைக்காகத் தோண்டினால் ஊற்று நீராக, அந்த   சேமிப்பிலிருந்து  “செக்” கேட்காமலேயே  திருப்பித் தருகிறது.

இந்து சமய சகோதரர்கள் மண்ணை புனிதமாகக் கருதுகிறார்கள். மண்ணை எடுத்து “ திருமண் ” என்று சிறப்புப் பெயர் சூட்டி தங்களது நெற்றியில் இட்டுக் கொள்கிறார்கள்.

எழுத்தாளர் சுஜாதா அவர்கள் தனது  “சிலிகான் சில்லுப் புரட்சி”  என்ற படைப்பில்  சிலிகான் என்றால் என்ன என்று விளக்கமாகக்  குறிப்பிட்டு இருக்கிறார்.  மண்ணில் உள்ளூர ஊடுருவி  இருக்கும் ஒரு சிறப்புத் தன்மைதான் சிலிக்கான். அந்த சிறப்புத் தன்மை இன்று உலகை ஆள்கிறது. . இன்றைக்கு மெமரிகார்டுகளில் மூலப் பொருளாக பூசப்படுவது இந்த மண்தான். இந்தத் தன்மையைப் பக்குவப்படுத்தியும் பயன்படுத்தியும்   வானொலி, தொலைகாட்சி, கைபேசி போன்ற சாதனங்களால் தொழில், போக்குவரத்து, செய்திப் பரிமாற்றம், விண்வெளி ஆய்வு போன்ற பல துறைகள் வளர்ச்சி அடைந்துள்ளன. சிலிகான் உடைய சகோதரிதான்   சிலிகேட். இதன்  தன்மை வாய்ந்த மண்ணால்தான் கண்ணாடிகள் வார்த்தெடுக்கப்படுகின்றன என்பது உபரித் தகவல். .

வெறிநாய்கள் கடித்துவிட்டால் அதற்கு முதல் உதவியாக பரிந்துரைக்கப்படுவது என்ன தெரியுமா? கொஞ்சம் தெரு மண்ணை எடுத்து தண்ணீரில் கரைத்து அந்தக் கரைசலை வெறிநாய் கடித்த இடத்தில் ஊற்றிக் கழுவ வேண்டும் என்பதுதான்.

இன்று செய்தித்தாள்களில் அடிபடும்  செய்தி,  “தாதுமணல் கொள்ளை” என்பதாகும். தாதுச்சத்துக்கள் நிறைந்த மணலைக்   கொள்ளையடித்து கோடி கோடியாக குவித்து தங்களை வளமாக்கி,  வைகுண்டம் அளவுக்கு உயர்ந்த செய்திகள் மண்ணில் மறைந்து இருக்கும்  வளம் எத்தகையது என்பதை நமக்குச் சொல்கின்றன.    

குளங்களில் இருக்கும் பட்டு மணல் என்கிற மென்மையான மண்ணைக் கைகளில் எடுத்து பல் துலக்குவதும் நமது பரம்பரைப் பழக்கம். இன்றும் கிராமங்களில் பற்பசையைப்  பயன்படுத்தாமல் நீர்நிலைகளின் மண்ணைப் பயன்படுத்தும் பெரியவர்கள் இன்னும் ஆடாத பற்களோடு பளிச்சென்று சிரிப்பதைக் காணலாம்.

இன்று நாம் சலவைக்குப் பயன்படுத்தும் இரசாயனங்கள் நிறைந்த டிட்டர்ஜென்ட் சோப் வகைகள் அறிமுகமாகும் முன்பு , ஆற்றுப் படுகைகளில் இருக்கும் உவர்  மண் என்ற வகை மண் தான் நமது பாரம்பரிய சலவைத் தொழிலாளர்களால் துணிகளை வெளுக்கப்பயன்பட்டன.

குளிப்பதற்குக் கூட, குளங்களில் படிந்து இருக்கும் களிமண் கலந்த வண்டல் மண்ணை  உடல்களில் பூசி ஊறவைத்துக் குளித்த வரலாறுகள் எல்லாம் நிறைய உள்ளன. பெரியவர்களிடம் கேட்டால் இது பற்றிய பயன்களைக்   கதை கதையாக சொல்கிறார்கள்.

ஒரு காலத்தில், சமையல் பாத்திரங்களை சுத்தபடுத்த அடுப்பு சாம்பலுடன் மணலைக் கலந்து தேங்காய்ச் செம்பில் வைத்துத் தேய்த்தே கழுவுவார்கள். காரணம், உடல்நலத்துக்கு நலம் பயக்கும்  மண்பாண்டங்களே       சமையலுக்காகப் பயன்படுத்தப்பட்டன. அதன் பின் அலுமினியப் பாத்திரங்கள் அமுலுக்கு வந்தன. மண்பாண்டங்கள், அலுமினியப் பாத்திரங்கள் ஆகியவை மண் மற்றும் சாம்பல் கலந்த கலவையால்தான் தூய்மைப்படுத்தபட்டன. எவர்சில்வர்  பாத்திரங்களும் நான் ஸ்டிக் வகை சமையல் பாத்திரங்களும் பயன்பாட்டுக்கு வந்த பின்தான் இன்று நாம் பயன்படுத்தும் விம், ப்ரில், FAIRY போன்ற லிக்விட்கள் பாத்திரங்களை சுத்தம் செய்யப் பயன்படுத்தப் படுகின்றன. இன்றும் கூட SABENA  என்கிற பாத்திரம் கழுவும்  தூள் கூட ஒருவகை மண்னின் மூலப்பொருளால் உருவானதுதான்.      

ஜப்பானின் மூன்றாவது பெரிய தீவு கியுஷு. அங்கே வெந்நீர் ஊற்றுகள் ஏராளமாக இருக்கின்றன. இங்கே நிலவும் பருவநிலைக்காகவும் வெந்நீர் ஊற்றுகளுக்காகவும் சுற்றுலாப் பயணிகள் வருகை தருகிறார்கள். இங்குள்ள SPA ஸ்பாக்களில் மண் குளியல் சிறப்பு அம்சமாகக் கருதப்படுகிறது. எரிமலைப் பகுதிகளில் இருந்து எடுத்து வந்த ஈரமண்ணை ஒரு பெட்டியில் கொட்டுகிறார்கள்.

பெட்டிக்கு அடியில் ஊற்றுகளில் இருந்து கிடைக்கும் நீரைச் சூடேற்றுகிறார்கள். மண் சூடாக இருக்கும்பொழுது, மனிதர்களைப் பெட்டிக்குள் படுக்க வைத்து, மேலே மண்ணைக் கொட்டி மூடி விடுகிறார்கள். மண்ணில் உள்ள வெப்பம் குறைந்தவுடன் மனிதர்களை வெளியில் எடுக்கிறார்கள். பிறகு வெந்நீர் ஊற்று நீரால் குளிக்க வைக்கிறார்கள். இந்த மண் குளியலால் குழந்தையின்மை, சர்க்கரை நோய், ஆஸ்த்மா போன்ற பிரச்சினைகள் சரியாகும் என்றும் உடல் எடை குறையும் என்றும் சொல்கிறார்கள். நோய் சரியாகிறதோ, இல்லையோ மண் குளியலால் புத்துணர்ச்சி கிடைப்பதாகப் பலரும் ஒப்புக்கொள்கிறார்கள்.

மண் குளியல், முறைகள்  மற்றும் இது தொடர்பான இன்னும் பல வரலாற்றுத் தொடர்புடைய,  உடல் ஆரோக்கியம் பற்றிய தகவல்களும்  நிரம்ப இருக்கின்றன. இதற்காக ஜோர்டான் நாட்டுக்கெல்லாம் நாம் பயணிக்க வேண்டிய தேவை இருக்கிறது; பைபிளின் பக்கங்களை புரட்ட வேண்டி இருக்கிறது. .

ஆகவே இந்தத் தலைப்பைப் பற்றிய தகவல்களை அடுத்தவாரமும் இன்ஷா அல்லாஹ் தொடர்ந்து எழுதவேண்டும்.

இப்ராஹீம் அன்சாரி 
கல்லூரி முதல்வர் 
எழுத்தாளர்  
சமூக ஆர்வலர்

Tuesday, December 1, 2015

அதிரை தமாகா நிர்வாகிகள் அறிவிப்பு !

தமிழ் மாநில காங்கிரசின் மாநில செயற்குழு உறுப்பினர்கள் ஜிஆர் மூப்பனார், சுரேஷ் மூப்பனார் ஆகியோரின் பரிந்துரையின் படி தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே வாசன் அவர்களின் ஒப்புதலோடு பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினரும், தஞ்சை தெற்கு மாவட்ட தமிழ் மாநில காங்கிரசின் தலைவருமாகிய என்.ஆர் ரெங்கராஜன் எம்எல்ஏ அவர்கள் தமாகா அதிரை நகர புதிய நிர்வாகிகள் பட்டியலை வெளியிட்டுள்ளார். இதில் தமாகா அதிரை நகரத் தலைவராக M.M.S அப்துல் கரீம் அறிவிக்கப்பட்டுள்ளார்.

இதுதொடர்பாக தமாகா தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளர் அதிரை Y. மைதீன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் அதிரை நகர தலைவராக M.M.S அப்துல் கரீம், துணைத்தலைவர்களாக ஆர். ராமானுஜம், ஏ. கண்ணன், பொதுச்செயலாளர்களாக வி.வீரப்பன், ஜே. புஹாரி, வி. சகாதேவன், ஆர். சண்முகம், செயலாளர்களாக ஆர். நாகரத்தினம், சி.கிருஷ்ணன், ஏ. உசேன் முஹம்மது, பொருளாளராக M.M.S அப்துல் ஜலீல், இளைஞர் அணி தலைவராக டி. ராஜா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிரை பேரூராட்சி 13 வது வார்டில் தமுமுக சார்பில் குப்பைகள் சேமிக்கும் தொட்டி அமைப்பு !

அதிரை பேரூராட்சிக்கு உட்பட்ட 13 வது வார்டு தக்வா பள்ளி பின்புறம் அமைந்துள்ள ரேஷன் கடை அருகே அதிரை தமுமுக-மமக சார்பில் குப்பைகள் சேமிக்கும் தொட்டி இன்று புதிதாக அமைக்கப்பட்டது.

இதில் தமுமுக அதிரை நகர செயலாளர் A.R சாதிக்பாட்சா, மனிதநேய மக்கள் கட்சி அதிரை நகர செயலாளர் ஹாலித், துணை செயலாளர்கள் செய்யது முஹம்மது புஹாரி, கமாலுதீன், தமுமுக வார்டு செயலாளர் AFCC சலீம், தமுமுக ஷார்ஜா மண்டல துணை செயலாளர் மன்சூர் அலி, ராஜிக் அஹமது, அபுல் ஹசன் ஷாதலி, முஹம்மது நெய்னா, நசுருதீன், தமுமுக மாணவரணி செயலாளர் நூர் முஹம்மது உள்ளிட்ட தமுமுக-மமகவினர் கலந்துகொண்டனர்.

முன்னதாக இந்த பகுதியில் சிதறிக்கிடந்த குப்பை கூளங்களையும், தொடர் மழையால் தேங்கி நின்ற மழை நீரையும், கழிவு நீரையும் அப்புறப்படுத்தினர். மேலும் இந்த பகுதியை பிளிச்சிங் பவுடர் இட்டு தூய்மை படுத்தினர்.
 

மரண அறிவிப்பு [ M.M.S அஜ்மல்கான் அவர்களின் மனைவி ]

மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம்  கா.செ முஹம்மது செரிப் அவர்களின் மகளும், M.M.S அஜ்மல்கான் அவர்களின் மனைவியும், சாகுல் ஹமீது அவர்களின் மருமகளும், சுல்தான் அப்துல் காதர் அவர்களின் சகோதரியும், சேக்தாவூது, ஹாஜா நஜ்முதீன் ஆகியோரின் மாமியாரும், ராஜிக் அஹமது அவர்களின் தாயாருமாகிய  ஹபிபுனிசா அவர்கள் இன்று காலை வஃபாத்தாகி விட்டார்கள்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் பின்னர் அறிவிக்கப்படும்.

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்.

உலக எய்ட்ஸ் தின விழிப்புணர்வு போட்டிகள்: வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு !

தஞ்சாவூர் மாவட்டம் சங்கீத மகாலில் உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவியர்களுக்கு பரிசுகளை  மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் என்.சுப்பையன் அவர்கள் வழங்கினார்.

உலக எய்ட்ஸ் தின நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் பங்கேற்று மாணவ மாணவியர்களுக்கு பரிசுகள் வழங்கி பேசியதாவது:
தஞ்சாவூர் மாவட்டத்தில் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 1ம் தேதி உலக எய்ட்ஸ் தினம் அனுசரிக்கப்படுகிறது.   மாவட்டத்தில் எய்ட்ஸ்ல் இறப்பு இல்லை என்ற இலக்கினை அடைய வேண்டும் என்ற இலக்கினை கொண்டு மாவட்ட நிர்வாக திறம்பட செயலாற்றி கொண்டிருக்கிறது.

தஞ்சாவூர் மாவட்டத்தில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு  வருகிறது.  கிராமிய கலைக்குழுக்கள் வழியாக விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி, தெரு முனை பிரச்சாரங்கள், துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டு வருகிறது.  மேலும் அரச மருத்துவமனைகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் வருபவர்களுக்கு ஒருங்கிணைந்த ஆற்றுப்படுத்துதல் மற்றும் பரிசோதனை மையங்கள் மற்றும் சுகவாழ்வு மையங்கள் மூலமாக எச்ஐவி பற்றிய ஆலோசனை வழங்கி பரிசோதனை செய்யப்படுகிறது. இதன் மூலம் எச்.ஐ.வி.யால் பாதிக்கப்பட்ட புதிய நபர்களின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து கொண்டே வருகிறது.

தஞ்சாவூர் மாவட்டத்தில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, தலைமை மருத்துவமனை, பொது மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் 29 எச்ஐவி பரிசோதனை மையங்களும்,  பால்வினை பரிசோதனை செய்து கொள்ள 6 மையங்களும், 4 இரத்த வங்கிகளும், 2 கூட்டு மருத்து சிகிச்சை மையங்களும், ( Anti Retro Viral Therapy )  6 அரசு சாரா தொண்டு நிறுவனங்களும் எச்ஐவி எய்ட்ஸ் தடுப்பு பணியில் செயல்படுகின்றனர். இவ்வாறு மாவட்ட ஆட்சித் தலைவர் பேசினார்.

மாவட்ட எய்ட்ஸ் அலகில் சார்பில் எய்ட்ஸ் விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்வதற்காக பள்ளி மாணவ மாணவியர்களிடையே பேச்சுப்போட்டி, ஒவியப்போட்டி, வினாடி வினா போன்ற போட்டிகள் நடத்தப்பட்டு, போட்டியில் வெற்றிபெற்ற மாணவ மாணவியர்கள் மாவட்ட ஆட்சித் தலைவர் பரிசுகளை வழங்கினார்.  மேலும், மாவட்ட எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அலகில் சார்பில் சமபந்தி போஜனத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் பங்கேற்றார்.

முன்னதாக மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தலைமையில் அனைவரும் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். “எச்.ஐ.வி. மற்றும் எய்ட்ஸ் குறித்து முழுமையாக அறிந்திடுவேன். அறிந்ததை என் குடும்பத்திலுள்ள அனைவருக்கும் தெரிவித்திடுவேன். எச்.ஐ.வி. மற்றும் எய்ட்ஸ் தொற்று இல்லாத குடும்பத்தை உருவாக்கிடுவேன்.   இரத்தப் பரிசோதனை செய்து கொள்ள தன்னார்வமாக முன் வருவேன்.  எச்.ஐ.வி. மற்றும் எய்ட்ஸ் தொற்றுள்ளோரை அரவணைப்பேன், சம உரிமை அளிப்பேன் என உளமார உறுதி அளிக்கின்றேன்” என்ற உறுதிமொழியனை அனைத்துத்துறை அலுவலர்கள் மற்றும் பணியாளர்களும் எடுத்துக்கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில்  சுகாதாரத்துறை இணை இயக்குநர் டாக்டர் ஜெயசேகர், துணை இயக்குநர்கள் டாக்டர் அ.சுப்ரமணி, டாக்டர் சந்திரசேகர், மருத்துவக்கல்லூரி முதல்வர் டாக்டர் பிச்சை பாலசண்முகம், முதன்மைக் கல்வி அலுவலர் திரு.ரெ.திருவளர்செல்வி, ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் துணை முதல்வர் திரு.ஷேக் அலாவுதீன், மாவட்ட திட்ட மேலாளர் திரு.எம்.மாதவன், மாவட்ட திட்ட மேற்பார்வையாளர் எம்.திருநாவுக்கரசு, எச்ஐவி கூட்டமைப்பு தலைவர் திரு.அண்ணாதுரை மற்றும் மாணவ மாணவியர்கள்  ஆகியோர் பங்கேற்றனர்.
 

ஹலோ போலீஸ் திட்டம் தொடக்கம் !

தஞ்சாவூரில் பொதுமக்களின் பிரச்னைகளுக்கு தீர்வு காண்பதற்காக ஹலோ போலீஸ் திட்டம் திங்கள்கிழமை தொடங்கப்பட்டது.

இந்தத் திட்டத்தைத் தொடக்கி வைத்த மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் என்.எம். மயில்வாகனன் செய்தியாளர்களிடம் தெரிவித்தது:
சிறு, சிறு பிரச்னைகள் தொடர்பாக பொதுமக்கள் தொடர்பு கொண்டு தகவல் அளிக்கும் விதமாக இந்த ஹலோ போலீஸ் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இதற்காக 83000 71100 என்ற எண் ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும், மாவட்டக் காவல் அலுவலகத்தில் ஒரு சிறப்புப் பிரிவும் அமைக்கப்பட்டுள்ளது.

பொதுஇடங்களில் தகராறு, பெண்களைக் கேலி செய்தல் உள்பட பொதுமக்களுக்கு இடையூறாக எந்த பிரச்னை நிகழ்ந்தாலும் இந்த எண்ணில் தொடர்பு கொண்டு தெரிவித்தால், தொடர்புடைய காவல் நிலையத்தில் இத்திட்டத்துக்காக நியமிக்கப்பட்டுள்ள போலீஸாருக்கு உடனடியாகத் தகவல் தெரிவித்து நடவடிக்கை எடுக்கப்படும். தகவல் அளிப்பவரின் பெயர், முகவரி எதுவும் கேட்கப்படமாட்டாது.

இதற்கென மாவட்டத்தில் உள்ள 43 காவல் நிலையங்களிலும் தலா ஒரு சிறப்பு உதவி ஆய்வாளர், ஒரு ஊர்க்காவல் படை வீரர் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு ஒரு மோட்டார் சைக்கிள் வழங்கப்பட்டுள்ளது. இவர்கள் சம்பவ இடத்துக்குச் சென்று எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து சிறப்புப் பிரிவுக்குத் தகவல் அளிப்பர். தவிர, மாவட்டத்தில் குற்ற நடவடிக்கைகளைக் குறைப்பதற்காக 16 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில், 8 படைகள் கொலை, கொள்ளைச் சம்பவங்களைத் தடுக்கவும், 8 படைகள் பிக்பாக்கெட் போன்ற சிறு திருட்டுச் சம்பவங்களைத் தடுக்கவும் அமைக்கப்பட்டுள்ளது என்றார் மயில்வாகனன்.
* file image