.

Pages

Saturday, December 2, 2017

அதிராம்பட்டினத்தில் பொது இ சேவை மையத்தில் 174 சேவைகள் தொடக்கம் (படங்கள்)

அதிராம்பட்டினம், டிச.02
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் கடைத்தெரு எஸ்.ஏ.எச் டவரில் புதிதாக அரசின் அங்கீகாரம் பெற்ற பொது இ சேவை மையம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இச்சேவையை தினமும் ஏராளமானோர்  பயன்படுத்தி வருகின்றனர்.

இதுகுறித்து 'எவர் கிரீன் கஸ்டமர் கேர்' நிறுவனர் ஏ. ஷேக் அப்துல்லா கூறியது;
'அரசின் அங்கீகாரம் பெற்ற எங்களது பொது இ சேவை மையத்தில் சுமார் 174 சேவைகள் வரை மேற்கொள்ளப்படுகிறது. இனி பொதுமக்கள் தொலை தூரங்களில் உள்ள தாலுகா உள்ளிட்ட அரசு அலுவலகங்களுக்கு சென்று நேரம், பொருளாதரம் போன்றவற்றை வீண் விரையம் செய்ய வேண்டிய அவசியமிருக்காது. எங்களது சேவை மையத்தில் புதிய குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, பாஸ்போர்ட், பான் கார்டு போன்றவற்றை புதிதாக விண்ணப்பிக்க / திருத்தங்கள் செய்ய, பஸ், ரெயில் ஆன்லைன் டிக்கெட், ரீசார்ஜ், மின்சார கட்டணம், டெலிபோன் கட்டணம் செலுத்துதல் உள்ளிட்ட சேவைகள் உடனுக்குடன் மேற்கொள்ளப்படுகின்றன. அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுப்புற பகுதி பொதுமக்கள் இச்சேவையை பயன்படுத்திக்கொள்ள வேண்டும்' என்றார்.

மேலதிக தகவல் மற்றும் தொடர்புக்கு
99520 39825
 

பட்டுக்கோட்டையில் கொட்டும் மழையில் மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம் (படங்கள்)

பட்டுக்கோட்டை, டிச.02
பட்டுக்கோட்டையில் கொட்டும் மழையிலும் மாற்றுத்திறனாளிகள் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஊனமுற்றோர் உரிமைச் சட்டம்-2016 ஐ மாநிலங்களில் அமல்படுத்த ஏதுவாக, தமிழக அரசு சட்டம் இயற்றி விதிமுறைகளை உருவாக்க வேண்டும். உதவித்தொகை கோரி விண்ணப்பித்த மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பங்களை பரிசீலித்து உத்தரவு வழங்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி, மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் பட்டுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் எதிரே இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்துக்கு சேதுபாவாசத்திரம் ஹெச்.ஜலீல் முகைதீன் தலைமை வகித்தார். க.கிருஷ்ணமூர்த்தி கோரிக்கைகளை விளக்கிப் பேசினார். ஹெச்.குமரேசன் நிறைவுரையாற்றினார்.

அதிரை ஏ.பஹாத் அகமது, பேராவூரணி எஸ்.எஸ்.லாரன்ஸ் சேவியர், தஞ்சாவூர் ஹெச்.ஜமால் முகமது, மதுக்கூர் ஆர்.பார்த்தசாரதி, காது கேளாதோர் மற்றும் வாய் பேசாதோர் சங்க நிர்வாகி டி.பாண்டித்துரை உள்ளிட்ட பலர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர். அதிரை ஏ.அக்பர் அலி நன்றி கூறினார். முடிவில், கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.
 
 

பட்டுக்கோட்டையில் ஆம்னி பேருந்துகள் போலீசார் திடீர் ஆய்வு (படங்கள்)

பட்டுக்கோட்டை, டிச.02
பட்டுக்கோட்டையில் ஆம்னி பேருந்து ஓட்டுநரின் ஆடைகள், வாகன ஆவணங்கள், பயணிகளின் எண்ணிக்கை மற்றும் ஓட்டுநர்கள் மது அருந்தியுள்ளனரா என ஆய்வு செய்யப்பட்டது.

பட்டுக்கோட்டை பேருந்து நிலையத்தில் இருந்து நேற்று இரவு புறப்பட்ட 30க்கும் மேற்பட்ட அனைத்து ஆம்னி பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்கள் மது அருந்தியுள்ளனரா என ஆய்வு நடத்தப்பட்டது.

ஆம்னி பேருந்துகளின் ஓட்டுநர்கள் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவதாக போலீசாருக்கு வந்த தகவலை தொடர்ந்து மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் செந்தில்குமார் மற்றும் மாவட்ட போக்குவரத்து அலுவலரின் உத்தரவின் பெயரில் பட்டுக்கோட்டை வட்டார போக்குவரத்து ஆய்வாளர் கதிர்வேல் மற்றும் பட்டுக்கோட்டை காவல்துறை ஆய்வாளர் அன்பழகன் மற்றும் காவல்துறையினர் இணைந்து ஆம்னி பேருந்தின் ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனரிடம் ஆய்வு மேற்கொண்டனர்.

ஆய்வில் ஓட்டுநரின் ஆடைகள், வாகன ஆவணங்கள், பயணிகளின் எண்ணிக்கை மற்றும் ஓட்டுநர்கள் மது அருந்தியுள்ளனரா என்றும் ஆய்வு செய்யப்பட்டது. ஆய்வின் முடிவில் அனைத்து வாகனங்களும் முறையாக இருந்ததாக வாகன போக்குவரத்து ஆய்வாளர் கதிர்வேல் கூறினார்.

செய்தி மற்றும் படங்கள்:
'நிருபர்' பட்டுக்கோட்டை ஐ.எம் ராஜா
 
 

அதிரை அருகே மின்சாரம் பாய்ந்து தொழிலாளி பலி !

அதிராம்பட்டினம், டிச.02
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் அருகே மரக்கிளையை வெட்டிக் கொண்டிருந்த தொழிலாளி மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தார்.

அதிராம்பட்டினம் அடுத்த செங்கப்படுத்தான்காடு காலனித் தெருவைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் (45). தொழிலாளியான இவர், வெள்ளிக்கிழமை காலை அதிராம்பட்டினம் அருகே சுந்தரநாயகிபுரம் கிராமத்திலுள்ள மரத்தில் ஏறி, கிளைகளை வெட்டிக் கொண்டிருந்தாராம். அப்போது, எதிர்பாராதவிதமாக இவர் கையில் பிடித்திருந்த கிளை ஒன்று அருகிலுள்ள உயர் மின் அழுத்த கம்பியில் உரசியது. இதில், ராஜேந்திரன் மீது மின்சாரம் பாய்ந்து, அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்த புகாரின் பேரில் அதிராம்பட்டினம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Friday, December 1, 2017

அவசர சிகிச்சைக்கு உதவிய முன்னாள் கவுன்சிலர்!

அதிராம்பட்டினம், டிச.01
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் பேரூராட்சி 12 வது வார்டு முன்னாள் கவுன்சிலர் நூர்லாட்ஜ் செய்யது முகமது. இவர் பட்டுக்கோட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளி ஒருவருக்கு தனது A1 +ve வகை இரத்தத்தை தானமாக வழங்கி உதவினார். இவருக்கு தனியார் மருத்துவமனை இரத்த வங்கி அலுவலர் ராஜகோபால், பாராட்டுச் சான்றிதழ் வழங்கி வாழ்த்து தெரிவித்தார். அருகில், சமூக ஆர்வலர் அதிரை ஏ.சாகுல் ஹமீது உடன் இருந்தார்.
 


தஞ்சை மாவட்டத்தில் உள்ளாட்சி வார்டுகள் மறுவரையறை செய்யும் பணி தொடக்கம்!

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் கூட்ட அரங்கில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் தொகுதி மறுவரையறை தொடர்பாக அலுவலர்களுடன் மாவட்ட மறுவரையறை  அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆ.அண்ணாதுரை தலைமையில் இன்று 01-12-2017 வெள்ளிக்கிழமை கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது.

தஞ்சாவூர் மாவட்டத்தில் மொத்தம் உள்ள 589 ஊராட்சிகளில், 4569 ஊராட்சி வார்டுகளும், 276 ஊராட்சி ஒன்றிய வார்டுகளும் 28 மாவட்ட ஊராட்சி வார்டுகளும் மறுவரையறை செய்யும் பணி நடைபெற்று வருகின்றது. இதில் கிராம ஊராட்சி வார்டுகளுக்கு வட்டார வளர்ச்சி அலுவலர், ஊராட்சி ஒன்றிய வார்டுகளுக்கு  உதவி இயக்குநர், மாவட்ட ஊராட்சியிலுள்ள வார்டுகளுக்கு மாவட்ட ஊராட்சி செயலர், பேரூராட்சியில் உள்ள வார்டுகளுக்கு சம்மந்தப்பட்ட பேரூராட்சியின் செயல் அலுவலர், நகராட்சியிலுள்ள வார்டுகளுக்கு சம்மந்தப்பட்ட நகராட்சியின் ஆணையர், மாநகராட்சி வார்டுகளுக்கு சம்மந்தப்பட்ட மாநகராட்சி ஆணையர் ஆகியோர் மறுவரையறை செய்யும் அதிகாரம் பெற்று அலுவலர்களாக செயல்படுவார்கள்.

இந்த மறுசீரமைப்பு பணியின்போது உள்ளாட்சி அமைப்புகளில் தற்போதுள்ள வார்டுகளின் எண்ணிக்கை மாறக்கூடாது. இந்த மறுசீரமைப்பு பணிக்கு வார்டுகள் வடமேற்கில் தொடங்கி தென்கிழக்கு வரை புவியியல் ரீதியாக பிரிக்கப்பட வேண்டும். இதற்கென கணக்கீட்டிற்காக ஊரகம் மற்றும் நகர்ப்புறம் வார்டுகளுக்கு உரிய படிவங்களும் மாதிரி கணக்கீடுகளும் வழங்கப்பட்டுள்ளன.

இதற்காக 2011-ஆம் ஆண்டு மக்கள்தொகையினையும் 31.03.2017 வீடுகளின் எண்ணிக்கையினையும் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும். உள்ளாட்சி அமைப்புகளின் வார்டுகளின் சராசரி மக்கள் தொகை முதலில் அறியப்பட்டு நிர்ணயம் செய்யப்பட வேண்டும். பின்னர் ஒவ்வொரு வார்டுகளிலும் மக்கள் தொகை கணக்கிடப்பட வேண்டும். அவ்வாறு கணக்கிடப்படும் வார்டுகளின் மக்கள் தொகை நகர்ப்புற வார்டுகளுக்கு 10 சதவீதம் வரையிலும், ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் கிராம ஊராட்சி வார்டுகளுக்கு 25 சதவீத வரையிலும் ஊராட்சி ஒன்றிய மற்றும் மாவட்ட ஊராட்சி வார்டுகளுக்கு 10 சதவீத வரையிலும் அதிகமாகலாம் அல்லது குறையலாம்.

வார்டுகளில் எல்லை மற்றும் மறுசீரமைப்பு தொடர்பானதால் இடஒதுக்கீடுகள் தொடர்பான எந்த இனத்தையும் கணக்கில் கொள்ள கூடாது. மறுசீரமைப்பு ஆணையம் வார்டுகளின் எல்லை மறு நிர்ணயம் தொடர்பாக பணிகளை மட்டுமே கவனிக்கும் ஆதலால் இப்பணியில் இட ஒதுக்கீடு தொடர்பாக எந்த நிலையினையும் கணக்கிட கூடாது.
மேலும் ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் கிராம ஊராட்சி வார்டுகளை தவிர ஊராட்சி ஒன்றிய வார்டுகள் மற்றும் மாவட்ட ஊராட்சி வார்டுகளின் மறுவரையறை பணிகள் ஒருங்கே மேற்கொள்ளப்பட வேண்டும்  என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.

இந்த கலந்தாய்வுக்கூட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி திட்ட இயக்குநர் பி.மந்திராச்சலம், உள்ளாட்சி தேர்தல் அலுவலர் உ.நாகராஜன, உதவி இயக்குநர் ஊராட்சிகள் முருகேசன் மற்றும் செயல் அலுவலர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

மரண அறிவிப்பு ~ ஹாஜி அப்துல் ரெஜாக் (வயது 75)

அதிரை நியூஸ்: டிச.01
அதிராம்பட்டினம், காலியார் தெருவைச் சேர்ந்த இடுப்புக்கட்டி மர்ஹூம் நெய்னா மரைக்காயர் அவர்களின் மகனும், மர்ஹூம் செவத்த மரைக்காயர் அவர்களின் மருமகனும், மர்ஹூம் ஜமீல் மரைக்காயர் அவர்களின் சகோதரரரும், மர்ஹூம் கருப்பரிசி இப்ராஹீம், அகமது கபீர் ஆகியோரின் மச்சானும், பிஸ்மில்லாகான் அவர்களின் தகப்பனாருமாகிய ஹாஜி அப்துல் ரெஜாக் (வயது 75) அவர்கள் இன்று காலை வஃபாத்தாகி விட்டார்கள்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

அன்னாரின் ஜனாஸா இன்று (01-12-2017) மாலை 4.30 மணியளவில் மரைக்கா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்.

அதிராம்பட்டினத்தில் 5 செ.மீ மழை பதிவு!

அதிராம்பட்டினம், டிச.01
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில், கடந்த சில நாட்களாக இடைவெளி விட்டு அவ்வப்போது மழை பெய்து வருகிறது.

இன்று (டிச.01) வெள்ளிக்கிழமை காலை 8.30 மணி நேர நிலவரப்படி அதிராம்பட்டினத்தில் 49.40 மி.மீ (5 செ.மீ) மழை பதிவாகியது.

தஞ்சை மாவட்டத்தில் அதிகபட்சமாக கிரென்ட் அணைகட் 78 மி.மீ, பட்டுக்கோட்டையில் 57 மி.மீ, பேராவூரணியில் 10.60 மி.மீ, மதுக்கூரில் 33.80 மி.மீ மழை பதிவாகியது.