.

Pages

Saturday, November 29, 2014

ஷரியத் சட்டத்தின்படி மியூச்சுவல் பண்டு எஸ்.பி.ஐ வங்கி துவக்குகிறது !

இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல் ரஹ்மான் அவர்கள் நாடாளுமன்றத்தில் இந்தியாவில் வட்டியில்லாத 'இஸ்லாமிய வங்கி' சேவையை துவங்க கோரிக்கை விடுத்து இருந்தார்.

இந்நிலையில் ஷரியத் சட்டத்தின்படி மியூச்சுவல் பண்டு எஸ்.பி.ஐ வங்கி துவக்கம் குறித்து நாளிதழ் செய்தியில் வந்துள்ளது.

இதுகுறித்து வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது...
இஸ்லாமியர்களின் ஷரியத் சட்டத்தின்படி, முஸ்லிம் மக்களுக்கான, மியூச்சுவல் பண்டு திட்டத்தை, முதல் முறையாக, எஸ்.பி.ஐ., வங்கி, அடுத்த மாதம் துவக்குகிறது. ஷரியத் சட்டத்தின்படி, முஸ்லிம் மக்கள், தாங்கள் செய்யும் முதலீடுகளில் இருந்து வட்டி பெறுவதோ அல்லது தருவதோ கூடாது. இதன் காரணமாக, அவர்கள், வட்டி வரும் வகையிலான முதலீடுகளை செய்வதில்லை. முஸ்லிம் நாடுகளில் உள்ள இஸ்லாமிய வங்கிகள் கூட, வட்டி தொடர்புள்ள, எந்த முதலீடுகளையும் ஊக்குவிப்பதில்லை.நாடு முழுவதும் உள்ள, 17 கோடி முஸ்லிம் மக்களின் நலன் கருதி, அவர்கள் சட்டப்படி, புதிய முதலீட்டு திட்டத்தை, அரசு வங்கியான எஸ்.பி.ஐ., துவக்குகிறது. இத்திட்டத்திற்கு மத்திய அரசும், இந்திய ரிசர்வ் வங்கியும் ஒப்புதல் அளித்துள்ளன. எஸ்.பி.ஐ., வங்கியின், இந்த புதிய முதலீட்டு திட்டத்தில், எத்தகைய வட்டியும் இல்லை என்பதால், இதற்கு, அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் ஆதரவு தெரிவித்து உள்ளது.

மரண அறிவிப்பு !

ஆஸ்பத்திரி தெருவை சேர்ந்த மர்ஹும் மஹ்மூது அவர்களின் மகனும், மர்ஹூம் ஹாஜி 'நூர்லாட்ஜ்' நூர் முஹம்மது அவர்களின் மருமகனும், மீரா சாஹிப், ஹாஜா ஷெரீப் ஆகியோரின் மாமனாரும், 'நூர்லாட்ஜ்' இக்பால் அவர்களின் மைத்துனருமாகிய முஸ்தபா கமால் அவர்கள் புதுப்பள்ளிவாசல் அருகில் உள்ள இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

அன்னாரின் ஜனாஸா இன்று லுஹர் தொழுதவுடன் மரைக்கா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்.

Friday, November 28, 2014

தஞ்சாவூர் மாவட்டத்தில் சாலை விபத்துகளில் 393 பேர் பலி !

தஞ்சாவூர் மாவட்டத்தில், இந்த ஆண்டு நடந்த சாலை விபத்துகளில், 393 பேர் உயிரிழந்துள்ளனர்.தஞ்சையில், சாலை பாதுகாப்பு குறித்த ஆய்வுக் கூட்டம், மாவட்ட கலெக்டர் சுப்பையன் தலைமையில் நடந்தது. எஸ்.பி., தர்மராஜன் உட்பட போலீஸ் துறை, வருவாய்த் துறை, நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.தஞ்சை மாவட்டத்தில், போக்குவரத்து விதிகளை மீறியும், குடிபோதையிலும் வாகனம் ஓட்டுவதால் தான், விபத்துகள் அதிகரிக்கிறது. இருசக்கர வாகனங்கள் தான் அடிக்கடி விபத்துக்குள்ளாகின்றன. கடந்த ஆண்டு, மாவட்டம் முழுவதும், 2,273 சாலை விபத்துகள் நடந்துள்ளது. இதில், 445 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த ஆண்டு நவம்பர், 25ம் தேதி முடிய, 1,877 சாலை விபத்துகள் நடந்துள்ளது. இதில், 393 பேர் உயிரிழந்திருப்பது, ஆய்வில் தெரியவந்தது.சாலை விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்புகள் ஆண்டுதோறும் அதிகரித்து வருவதால், அதை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை போலீஸார் மேற்கொள்ள வேண்டும், என்று அறிவுறுத்தப்பட்டது.தொடர்ந்து, வாகன ஓட்டிகள் போக்குவரத்து மற்றும் சாலை விதிகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். இருசக்கர வாகனங்களில் இரண்டு பேருக்கு மேல் செல்வதை தவிர்க்க வேண்டும். குடிபோதையிலும், ஃபோன் பேசியவாறும் வாகனம் ஓட்டுவதை தவிர்க்க வேண்டும். இரு சக்கர வாகனங்களில் செல்வோர், கண்டிப்பாக ஹெல்மெட் அணிய வேண்டும். டிரைவிங் லைசென்ஸ், இன்சூரன்ஸ் உள்ளிட்ட ஆவணங்கள் இல்லாமல் வாகனங்கள் ஓட்டுவதை தவிர்க்க வேண்டும். வாகனங்களில் ஏர் ஹாரன் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும், என வாகன ஓட்டிகளுக்கு, போக்குவரத்து போலீஸார் அறிவுரை வழங்கினர். மேலும், போக்குவரத்து மற்றும் சாலை விதிகளை மீறும் வாகன ஓட்டிகள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுப்பதோடு, அபராதம் விதிக்கப்படும், என போலீஸார் எச்சரித்தனர்.

திருச்சி கூட்டத்தில் வாசன் அதிரை ஆதரவாளர்கள் பங்கேற்பு !

காங்கிரசில் இருந்து பிரிந்த ஜி.கே. வாசன் அணியின் முதல் பொதுக்கூட்டம் திருச்சி பொன்மலை,ஜி.கார்னர் மைதானத்தில் இன்று நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் ஜி.கே.வாசனின் புதிய கட்சிப் பெயர் தமிழ் மாநில காங்கிரஸ் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கட்சியின் சின்னமாக சைக்கிள் இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக இந்த கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக வாசன் ஆதரவாளர்கள் அதிரையிலிருந்து 12 வேன்கள் மற்றும் ஆதரவாளர்களின் சொந்த வாகனங்களில் திருச்சி புறப்பட்டு சென்றனர்.

அதிரை தவ்ஹீத் பள்ளியில் நடைபெற்ற எளிய திருமணம் !

அதிரை தவ்ஹீத் பள்ளியில் இன்று ( 28-11-2014 ) மாலை 4 மணியளவில் நபிவழி அடிப்படையில் திருமணம் நடைபெற்றது. இதில் நமதூர் பிலால் நகரை சேர்ந்த முஹம்மது சித்திக் அவர்களின் மகன் எம். அப்துல் காதர் மணமகனுக்கு, சேதுபாவாசத்திரத்தை சேர்ந்த அனஸ் அவர்களின் மகளை 8 கிராம் தங்க நகையை மஹராக மணமகளின் தந்தையிடம் கொடுத்து மணமுடித்தார்.

இந்த நிகழ்ச்சியில் தவ்ஹீத் ஜமாத்தின் மாநில பேச்சாளர் அஸரஃப்தீன் பிர்தவ்ஸி கலந்து கொண்டு, தவ்ஹீத் ஜமாத் நிர்வாகிகள், மணமக்கள் உறவினர்கள் - நண்பர்கள் முன்னிலையில் திருமணத்தை நடத்தி வைத்தார். முன்னதாக 'இஸ்லாமிய திருமணங்கள்' என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார். இந்நிகழ்ச்சியில் தவ்ஹீத் ஜமாத்தினர், இருவீட்டார் உறவினர்கள் - நண்பர்கள் கலந்துகொண்டு மணமகனை வாழ்த்தினர்.

அதிரையில் பலத்த காற்று !

அதிரையில் நேற்று காலை முதல் விட்டுவிட்டு தூறல் மழை பெய்தது. குளிர்ந்த காற்றும் வீசி வந்தது. வானம் மேகங்களால் சூழ்ந்து காணப்பட்டன. இந்நிலையில் நேற்று நள்ளிரவு முதல் பலத்த மழை பெய்து வருகிறது. இன்று காலை 11 மணி முதல் பலத்த காற்றும் வீசி வருகிறது.

செல்லிக்குறிச்சி ஏரியிலிருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு !

அதிரை அடுத்து காணப்படும் செல்லிக்குறிச்சிரியில் கடந்த மூன்று வருடங்களாக நீரின்றி வறண்டு காணப்பட்டது. இந்நிலையில் பொதுப்பணித்துறை மூலம் செல்லிக்குறிச்சி ஏரிக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதனால் செல்லிக்குறிச்சி ஏரி தண்ணீருடன் நிரம்பி காணப்பட்டது.

இதையடுத்து புதுக்கோட்டை உள்ளூர் பகுதியில் நடைபெறும் பாசனத்திற்கு தேவைப்படும் தண்ணீர் பொதுப்பணித்துறை அலுவலர், ஊழியர்கள் முன்னிலையில் திறந்து விடப்பட்டது. அப்போது புதுக்கோட்டை உள்ளூர் ஊராட்சி மன்ற தலைவர், விவசாயிகள், கிராம மக்கள் ஆகியோர்  தமிழக அரசுக்கும், பொதுப்பணிதுறைக்கும் நன்றி தெரிவித்தனர்.

தொடர் மழையால் வெறிச்சோடி காணப்படும் முத்துப்பேட்டை சாலைகள் !

முத்துப்பேட்டை பகுதியில் நேற்று முதல் இன்று வரை வரை தொடர்ச்சியாக மழை பெய்து வருவதால் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டது. மேலும் முத்துப்பேட்டை நகரில் எந்த நேரமும் பரபரப்பாக காணப்படும் பல்வேறு சாலைகள் இன்று வெறிச்சோடி காணப்பட்டது. பல்வேறு சாலைகள் மலைக்கு சேதமாகி குண்டும் குழியுமாகி ஆங்கங்கே மழைநீர் தேங்கியது. மேலும் செக்கடி குளம் உட்பட பல்வேறு குளங்கள் நிரம்பியது. பள்ளிகள் அதிகமாக உள்ள பட்டுக்கோட்டை சாலை எந்தநேரமும் மக்கள் கூட்டம் அதிகஅளவில் காணப்படும் ஆனால் இன்று தொடர் மழையின் காரணமாக தனியார் ரகுமத் மெட்ரிக்குலேஷன் பள்ளியின் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டது.

செய்தி மற்றும் படங்கள்:
'நிருபர்' மொய்தீன் பிச்சை
முத்துப்பேட்டை