.

Pages

Wednesday, May 6, 2015

நெசவுத்தெரு சங்கத்தில் பெண்களுக்கான கோடைகால பயிற்சி முகாம் !

கோடை விடுமுறையை மாணவிகள் பயனுள்ள வகையில் செலவிட வேண்டும் என்ற நோக்கத்தில் அதிரை நெசவுத்தெருவில் அமைந்துள்ள மஆதினுல் ஹஸனாத்தில் இஸ்லாமிய சங்கத்தில் பெண்களுக்கான இஸ்லாமிய மார்க்கம் பயிற்சி முகாம் கடந்த 03-05-2015 அன்று முதல் தினமும் காலை 9.30 மணி முதல் 11.30 மணி வரை மாலை 4.30 மணி முதல் 7.30 மணி வரை நடைபெற்று வருகிறது. இதில் சென்னை ஆலந்தூர் உம்முல் குல்சும் பெண்கள் கல்லூரியின் ஆலிமா ரஷீதா, ஆய்ஷா ஆரா ஆகியோர் பயிற்சிகளை வழங்கி வருகின்றனர்.

எதிர்வரும் [ 12-05-2015 ] அன்று வரை நடைபெற இருக்கும் முகாமில் அதிரை பகுதிகளை சேர்ந்த மாணவிகள் திரளாக கலந்துகொண்டு பயனடையுமாறு மஆதினுல் ஹஸனாத்தில் இஸ்லாமிய சங்கம் நிர்வாகம் சார்பில் அழைப்பு விடப்பட்டுள்ளது.

மதுக்கூரில் மாபெரும் ஒரு நாள் இஸ்லாமிய மாநாடு !

அதிரை அடுத்துள்ள மதுக்கூரில் எதிர்வரும் [ 16-05-2015 ] அன்று இஸ்லாமிய பிரச்சார பேரவை சார்பாக "வாருங்கள் நன்மையை நாடி" என்ற தலைப்பில் மாபெரும் ஒரு நாள் இஸ்லாமிய மாநாடு நடைபெற இருக்கிறது.

இந்த மாநாட்டில் இஸ்லாமிய மார்க்க அறிஞர்கள் பலர் கலந்துகொண்டு இஸ்லாமிய மார்க்கம் தொடர்பான பல்வேறு தலைப்புகளில் உரை நிகழ்த்த உள்ளனர். மேலும் மாநாட்டில் கண்காட்சி, மந்திரமா தந்திரமா மேஜிக் நிகழ்ச்சி, புத்தக கண்காட்சி உள்ளிட்ட முக்கிய நிகழ்வுகள் நடைபெற இருக்கிறது.

ஏராளமான பொதுமக்கள் கலந்துகொள்ளும் வகையில் தாராள பந்தல் வசதி, மதிய உணவு, இரவு உணவு, ஆண் பெண் இருபாலருக்கும் தனி தனி இடவசதி உள்ளிட்டவை நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதில் மதுக்கூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்தோர் குடும்பத்தோடு கலந்து கொண்டு பயன்பெறுமாறு இஸ்லாமிய பிரச்சார பேரவை சார்பில் அன்புடன் அழைப்பு விடப்பட்டுள்ளது.

மேலதிக தொடர்புக்கு 9943145503

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு !

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் நாளை வெளியாகிறது. அதை இணைய தளத்தில் பார்க்கும் வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எனவே, தேர்வு எழுதிய மாணவ, மாணவர்கள் தாங்கள் வீட்டுக்கு அருகில் உள்ள இன்டர்நெட் சென்டரில் பார்த்து தெரிந்து கொள்ளலாம். மேலும், வரும் 14ம் தேதி முதல் தற்காலிக மதிப்பெண் சான்றுகளை அந்தந்த பள்ளியில் பெற்றுக் கொள்ள தேர்வுத் துறை ஏற்பாடு செய்துள்ளது. பிளஸ் 2 தேர்வு கடந்த மார்ச் 5ம் தேதி தொடங்கி 31ம் தேதி முடிந்தன. ஏப்ரல் மாதம் விடைத்தாள் திருத்தும் பணிகள் முடிந்து மதிப்பெண்கள் பதிவு செய்யும் பணியும் முடிந்துள்ளன.

இதையடுத்து நாளை தேர்வு  முடிவுகளை வெளியிடுவதாக தேர்வுத்துறை அறிவித்துள்ளது. நாளை காலை 10 மணிக்கு கல்லூரி சாலையில் உள்ள தேர்வுத்துறை அலுவலகத்தில் முடிவுகள் வெளியிடப்படுகிறது. இணைய தளத்தில் தேர்வு முடிவுகளை பார்க்கவும், ஒவ்வொரு மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் உள்ள தேசிய தகவலியல் மையங்களிலும், அனைத்து மைய மற்றும் கிளை நூலகங்களிலும் தேர்வு முடிவுகளை மாணவர்கள் பார்த்துக் கொள்ளலாம்.

மேலும், அந்தந்த பள்ளிகளிலும் மதிப்பெண்களுடன் கூடிய முடிவுகளை தெரிந்து கொள்ளலாம். தவிரவும், தேர்வு எழுதியுள்ள மாணவர்களுக்கு தற்காலிக மதிப்பெண் பட்டியல்களை மாணவர்கள் படித்த  பள்ளியில் தலைமை ஆசிரியர்கள் மூலம் பெற்றுக் கொள்ளலாம். தனித் தேர்வர்கள் தாங்கள் தேர்வு எழுதிய தேர்வு மையத்தின் தலைமை ஆசிரியரிடம் இணைய தளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்யப்பட்ட மதிப்பெண் சான்றுகளை பெற்றுக் கொள்ளலாம்.

இணைய தள முகவரிகள்:
www.tnresults.nic.in
www.dge1.tn.nic.in
www.dge2.tn.nic.in
www.dge3.tn.nic.in

Tuesday, May 5, 2015

முத்துப்பேட்டையில் கூரை வீடு எரிந்து சாம்பல்!

முத்துப்பேட்டை எஸ்.பி.கே.எம்.தோட்ட வளாகத்தில் வசிப்பவர் ஹைஜாஅம்மாள், பாத்திமா இருவரும் சகோதிரிகள். அமானுல்லாவுக்கு சொந்தமான கூரை வீட்டில் ஒன்றாக வசித்து வந்தனர். இவர்கள் நேற்று முன்தினம் இரவு உறவினர் வீட்டுக்கு சென்று இருந்தார். இந்த நிலையில் நள்ளிரவு 1-மணிக்கு வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் இவரது வீட்டுகூரையில் தீபிடித்து எரிந்தது. உடன் அக்கம் பக்கத்தினர் போராடி தீயை அணைக்க முயற்சி செய்தனர் ஆனால் அதற்குள் தீ பரவி வீடு முழுவதும் எரிந்து நாசமானது. இதில் வீட்டில் இருந்த கட்டில், பீரோ மற்றும் முக்கிய பொருட்கள் தீயில் எரிந்து சாம்பலாயின. தகவல் அறிந்ததும் பேரூராட்சி கவுன்சிலர் மேட்ரோமாலிக். மற்றும் வருவாய்த்துறையினர் நேரில் சென்று நிவாரண பணிகளுக்கு ஏற்பாடு செய்தனர. இதுக்குறித்து முத்துப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

செய்தி மற்றும் படம் :
நிருபர் மொய்தீன் பிச்சை
முத்துப்பேட்டை

AFFA கால்பந்தாட்ட போட்டி: இரண்டு ஆட்டங்களில் பட்டுக்கோட்டை - மேலநத்தம் அணிகள் வெற்றி !

அதிரை ப்ரெண்ட்ஸ் ஃபுட் பால் அசோசியேஷன் [ AFFA ] நடத்தும் 11 ஆம் ஆண்டு மாபெரும் எழுவர் கால் பந்து தொடர் போட்டியின் இரண்டாவது நாள் ஆட்டம் இன்று [ 05-05-2015 ] மாலை 5 மணியளவில் ஷிஃபா மருத்துவமனை எதிரே அமைந்துள்ள கிராணி மைதானத்தில் சிறப்பாக துவங்கியது.

இன்றைய முதல் ஆட்டத்தில் பட்டுக்கோட்டை அணியினரோடு பிச்சினிக்காடு அணியினர் மோதினார்கள். விறுவிருப்பாக நடைபெற்ற ஆட்ட இறுதியில் 2 கோல் அடித்து பட்டுக்கோட்டை அணியினர் வெற்றிபெற்றனர்.

இரண்டாவது ஆட்டமாக மதுக்கூர் அணியினரும், மேலநத்தம் அணியினரும் மோதினார்கள். இதில் 3-0 என்ற கோல் கணக்கில் மேலநத்தம் அணியினர் வெற்றி பெற்றனர்.

முதல் ஆட்டத்தின் அம்பயர்களாக முபீஸ், அவருக்கு உதவியாக ஷபா ஆகியோர் பணியாற்றினர். இவர்கள் இருவரும் கால்பந்து தொடர்போட்டிகளில் நடுவர்களாக பணியாற்ற கால்பந்து கழகத்தின் மூலம் தேர்வு எழுதியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இரண்டாவது ஆட்டத்தின் அம்பயர்களாக வாசு தேவனும், ஷபா ஆகியோர் பணியாற்றினார். நிகழ்சிகள் அனைத்தையும் வழக்கம் போல் அஹமது ஹாஜா இனிய தமிழில் அழகாக தொகுத்து வழங்கினார்.

இன்று நடைபெற்ற இரண்டு ஆட்டங்களை காண ஏராளமான விளையாட்டுப் பிரியர்கள் மற்றும் பொதுமக்கள் மைதானத்திற்கு திரளாக வருகை தந்து ரசித்தனர்.

நாளை இரண்டு ஆட்டங்கள் நடைபெற இருக்கிறது. இதில் முதல் ஆட்டமாக அதிரை எஸ்எஸ்எம்ஜி அணியினரோடு, பட்டுக்கோட்டை விவேகானந்தா அணியினரும், இரண்டாவது ஆட்டமாக ஆலத்தூர் அணியினரோடு பட்டுக்கோட்டை அணியினரும் மோத இருப்பதாக நிர்வாகிகள் தெரிவித்தனர்.

நாளைய ஆட்டம் சரியாக மாலை 4.45 மணிக்கு துவங்கும் என அறிவிப்பு செய்யப்பட்டது.

துபாயில் நீருக்கடியில் டென்னிஸ் மைதானம் !

சர்வதேச அளவில் புகழ்பெற்ற தனியார் கட்டிட வடிவமைப்பாளர்களால் துபாயில் நீருக்குடியில் டென்னிஸ் மைதானம் அமைப்பதற்கான  திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. மிதக்கும் பாலம், உயரமான கட்டிடம் என பல்வேறு பிரமிக்கத்தக்க கட்டிடங்களைக் கொண்டுள்ள துபாயில் இது போன்ற மைதானம் அமைவது பொருத்தமானதாக இருக்கும் என இப்பணியில் ஈடுபட்டுள்ள புகழ்பெற்ற கட்டிட வரைபட வடிவமைப்பாளர்களில் ஒருவரான கோட்லா தெரிவித்தார்.

மேலும் இப்பணியை தொடங்குவதற்கு தேவையான ஏற்பாடுகளை ஆர்வமுள்ள முதலீட்டாளர்கள் மற்றும்  வங்கிகள் மூலம் செய்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
 
செய்தி:தினகரன்
படங்கள்:எமிரேட்ஸ் 247

வீடுகளில் சூரிய மின்தகடு அமைக்க ஆன்-லைனில் விண்ணப்பிப்பது எப்படி?

ஒருவர் தனது வீட்டுக்கு சோலார் பேனல் அமைத்து அதன்மூலம் சூரிய மின்சக்தி மூலம் மின்சாரம் உற்பத்தி செய்து பயன்படுத்த விரும்பினால் ஆன்-லைனிலேயே விண்ணப்பிக்கலாம்.

தமிழ்நாடு எரிசக்தி மேம்பாட்டு முகமையின் இணையதளத்தில் http://teda.in/apply/ இ-பார்ம்ஸை கிளிக் செய்ய வேண்டும். அதில் டொமஸ்டிக் கிளிக் செய்தால் விண்ணப்ப படிவம் வந்துவிடும். அதில் கேட்டுள்ள விவரங்களை முழுமையாக பூர்த்தி செய்து மேற்கண்ட இணையதள முகவரிக்கு அனுப்பிவிட வேண்டும். விண்ணப்பப் படிவத்தைப் பெற்றுக் கொண்டதற்கான ஒப்புகைச் சீட்டு ஆன்-லைனிலேயே அனுப்பப்படும்.

இந்த இணையதளத்தில் சோலார் பேனல் விற்பனையில் ஈடுபட்டுள்ள 17 கம்பெனிகளின் பட்டியலும் இடம் பெற்றிருக்கும். அதில் ஏதாவது ஒரு கம்பெனியை வீட்டு உரிமையாளர் தேர்வு செய்து விண்ணப்பப் படிவத்தில் தெரிவிக்கலாம்.

ஒவ்வொரு வீட்டுக்கும் அதிகபட்சம் 1 கிலோ வாட் (1000 வாட் அவர்) திறன் கொண்ட சோலார் பேனலுக்கு மட்டுமே அரசு மானியம் கிடைக்கும். இந்த திட்டத்தை விரைவுப்படுத்துவதற்காக விண்ணப்பங்கள் 30 நாள் கால அவகாசத்தில் பரிசீலனை செய்து அனுமதி வழங்கப்படுகிறது. இதன் மூலம் மாதம் 150 விண்ணப்பங்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது.

ஒரு கிலோ வாட் திறன் கொண்ட சோலார் பேனல் (பேட்டரி இல்லாமல்) அமைப்பதற்கு ரூ.1 லட்சத்து 10 ஆயிரம் செலவாகும். சோலார் பேனல் அமைக்கும்போது கம்பெனிக்கு மத்திய அரசின் 30 சதவீத மானியத் தொகையை கழித்துக் கொண்டு வீட்டு உரிமையாளர் கொடுத்தால், அந்த மானியத்தொகை கம்பெனிக்கு அனுப்பி வைக்கப்படும்.

ஒருவர் தனது வீட்டு மொட்டை மாடியில் சோலார் பேனல் வைத்த பிறகு அந்தந்த மாவட்டத்தில் உள்ள உதவி பொறியாளர் ஆய்வு செய்து, தமிழ்நாடு எரிசக்தி மேம்பாட்டு முகமைக்கு தகவல் தெரிவிப்பார். அதன்பிறகு ஒரு மாதத்திற்குள் மானியத் தொகை வழங்கப்பட்டுவிடும். 

அதிரை தபால் நிலையத்தில் ரயில் முன்பதிவு மையம்: தீவிர முயற்சியில் அதிரை ஆர்வலர்கள் !

ரயில் டிக்கெட் முன்பதிவிற்காக அதிரை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் வசிக்கும் பெரும்பாலான பயணிகள் பட்டுக்கோட்டை, தஞ்சை, மன்னார்குடி உள்ளிட்ட தொலைதூர பகுதிகளுக்கு சென்று டிக்கெட் முன்பதிவு செய்ய வேண்டியுள்ளதால், தேவையற்ற அலைச்சலை சந்தித்து வருகின்றனர். எனவே அதிரையில் தலைமை தபால் நிலையம் அல்லது அதிரையின் பிரதான மத்திய பகுதியில் முன்பதிவு மையம் அமைக்க வேண்டும் என அதிரை மற்றும் சுற்றுவட்டார பகுதியில் வசிக்கும் பெரும்பாலான பொதுமக்கள் - சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்திருந்தனர்.

இந்நிலையில் நமதூர் சமூக ஆர்வலரும், யூனைட்டட் பவுண்டேசன் அமைப்பின் செயலாளருமாகிய அப்துல் ரெஜாக் அவர்கள் இதற்கான முயற்சியில் மும்முரமாக ஈடுப்பட்டு வருகிறார். இவருக்கு உறுதுணையாக நமதூர் காதிர் முகைதீன் கல்லூரி முன்னாள் முதல்வர் பேராசிரியர் முஹம்மது அப்துல் காதர், அதிரை பைத்துல்மால் செயலாளர் அப்துல் ஹமீது, மனோரா பாலிடெக்னிக் கல்லூரி நிர்வாகி ஜலீலா ஜுவல்லரி முஹம்மது மொய்தீன் ஆகியோர் இருந்து வருகின்றனர். இவர்களின் கோரிக்கை நிறைவேற தஞ்சை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் திரு. பிரசுராமன் அவர்கள் பெரிதும் உதவிருக்கிறார்.

இதுதொடர்பாக சம்பந்தபட்ட திருச்சி ரயில்வே மண்டல வணிக மேலாளர் மற்றும் மண்டல தபால் துறை அலுவலர் ஆகியோரிடம் கோரிக்கை வைத்துள்ளனர். இந்த பணிக்காக தனி ஊழியர்கள் மற்றும் அதிரை தபால் நிலையத்தில் இடம் ஆகியன ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. விரைவில் தொலை தொடர்பு கேபிள் இணைப்பு வழங்கப்பட்டவுடன் ரயில் முன்பதிவு மைய பணிகள் துவங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.