.

Pages

Tuesday, December 29, 2020

தஞ்சை மாவட்டத்தில் ஜன.03 ந் தேதி TNPSC GROUP-1 போட்டித்தேர்வு!


அதிரை நியூஸ், டிச.29 

தஞ்சாவூர் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் போட்டித்தேர்வு  தொகுதி-1க்கு 21 தேர்வு மையங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது என ம.கோவிந்த ராவ் தகவல் தெரிவித்துள்ளார்.

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் போட்டித்தேர்வு தொகுதி-1 ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் ம.கோவிந்த ராவ் தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்ததாவது

தஞ்சாவூர் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் மூலமாக 03.01.2021 அன்று முற்பகல் 10 மணி முதல் 1.00 மணி வரை நடைப்பெறும் போட்டித்தேர்வு தொகுதி-1க்கு, 21தேர்வு மையங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. போட்டித் தேர்வு  எழுத வரும் அனைவரையும் அனைத்து மையங்களிலும் தெர்மல் ஸ்கேனர் மற்றும் பல்ஸ் ஆக்ஸிமீட்டர் கொண்டு பரிசோதனை செய்த பிறகே தேர்வர்களை தேர்வு மையத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். 

கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனைத்து தேர்வு மையங்களிலும் கிருமி நாசினி தெளித்திடவும், சுற்றுப்புறங்களை தூய்மையாக பராமரித்திடவும், தொடர்புடைய அலுவலருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் தேர்வு மையங்கள் அருகிலேயே மருத்துவ குழுக்கள் மற்றும் அவசரகால வாகனங்கள் தயார் நிலையில் இருந்திட அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தேர்வு நாளன்று தேர்வாளர்கள் தேர்வு மையங்களுக்கு சென்றிட கூடுதல் போக்குவரத்து வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது தடையில்லா மின்சாரம் வழங்கிடவும், ஆயுதம் ஏந்திய காவலர்கள் பாதுகாப்பு பணிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தேர்வு மையங்களுக்கு தேர்வர்கள் கைப்பேசி மற்றும் மின்னணு தொடர்பான பொருட்கள் கொண்டு செல்ல கண்டிப்பாக அனுமதிக்கப்படாது. தேர்வு மையங்களில் முதன்மை கண்காணிப்பாளர்கள், இயங்கு குழுவினர்கள், ஆய்வு அலுவலர்கள் மற்றும் காவல்துறையினர் ஆகியோரை ஒருங்கிணைத்து தேர்வு மையங்களை கண்காணிக்கவும், பாதுகாப்பு தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது எனவே தேர்வர்கள் அரசு அறிவுறுத்தியுள்ள கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றியும், எவ்வித பயமின்றியும், பாதுகாப்பாகவும் தேர்வு எழுதிட வேண்டும் என மாவட்ட ஆட்சித் தலைவர் ம.கோவிந்த ராவ் தெரிவித்துள்ளார்.

இக்கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தேஷ்முக் சேகர் சஞ்சய், மாவட்ட வருவாய் அலுவலர் (பொ) திருமதி.முத்து மீனாட்சி, தஞ்சாவூர் கோட்டாட்சியர் திருமதி.வேலுமணி மற்றும் வட்டாட்சியர்கள் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


Monday, December 28, 2020

பட்டுக்கோட்டை வாக்கு எண்ணிக்கை மையத்தில் ஆட்சியர் ஆய்வு!


அதிரை நியூஸ், டிச.28

தஞ்சாவூர், கும்பகோணம் மற்றும் பட்டுக்கோட்டை வாக்கு எண்ணும் மையங்களை மாவட்ட ஆட்சித் தலைவர் ம.கோவிந்த ராவ் (27.12.2020) நேரில் பார்வையிட்டு முதற்கட்ட ஆய்வு மேற்கொண்டார்.

தஞ்சாவூர் குந்தவை நாச்சியார் கல்லூரியில் தஞ்சாவூர், ஒரத்தநாடு, திருவையாறு சட்டமன்ற தொகுதிகளுக்கும், கும்பகோணம் அரசு கலைக் கல்லூரியில் கும்பகோணம், பாபநாசம், திருவிடைமருதூர் சட்டமன்ற தொகுதிகளுக்கும், பட்டுக்கோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பட்டுக்கோட்டை, பேராவூரணி சட்டமன்ற தொகுதிகளுக்கும் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் இடங்களை நேரில் பார்வையிட்ட மாவட்ட ஆட்சித் தலைவர் வாக்கு எண்ணப்படும் அறை, மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தின் கட்டுப்பாட்டு அலகு, வாக்குப்பதிவு அலகுää விவிபேட் அலகு ஆகியவை வைக்கப்படும் பாதுகாப்பு அறை, தேர்தல் பார்வையாளரின் அறைää ஊடக அறை, கழிவறை ஆகியவற்றை  நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

ஆய்வின்போது மாவட்ட ஆட்சித் தலைவர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது :-

தஞ்சாவூர் மாவட்டத்தில் வாக்கு எண்ணப்படும் மையங்களில் முதற்கட்ட ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. தஞ்சாவூர் மாவட்டத்தில் கொரோனா நோய்த்தொற்று பரவாமல் தடுக்கும் வகையில் லண்டனிலிருந்து தஞ்சாவூர் மாவட்டத்திற்கு திரும்பிய 72 பயணிகள் தற்போது கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். அவர்களில் தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த 53 பயணிகளுக்கு பரிசோதனை செய்யப்பட்டதில், 3 பயணிகளுக்கு நோய்த்தொற்றுக்கான அறிகுறிகள் உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களுக்கு தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்ட மூன்று நபர்களின் மாதிரிகள் மேல்பரிசோதனைக்காக புனேவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.  நோய்த்தொற்று அறிகுறி உறுதி செய்யப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்த நபர்கள் கண்டறியப்பட்டு, வல்லம் கொரோனா சிகிச்சை மையத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இங்கிலாந்து நாட்டிலிருந்து தஞ்சாவூர் மாவட்டத்திற்கு வந்தவர்கள் அருகிலுள்ள அரசு மருத்துவமனைகளில் பரிசோதனை செய்துகொண்டு, தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளி கடைப்பிடித்தல், கைசுத்திகரிப்பான் பயன்படுத்துதல் போன்ற நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பொதுமக்கள் பின்பற்ற வேண்டும்.

இவ்வாறு மாவட்ட ஆட்சித் தலைவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

இவ்வாய்வின் போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தேஷ்முக் சேகர் சஞ்சய், தஞ்சாவூர் வருவாய் கோட்ட அலுவலர் திருமதி.வேலுமணி, கும்பகோணம் வருவாய் கோட்ட அலுவலர் விஜயன்,தஞ்சாவூர் வட்டாட்சியர் வெங்கடேஸ்வரன, கும்பகோணம் வட்டாட்சியர் கண்ணன,பட்டுக்கோட்டை வட்டாட்சியர் திருமதி.தரணிகா மற்றும் அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.






Saturday, December 12, 2020

தேர்தலில் வாக்குச்சீட்டு முறை கோரி அதிராம்பட்டினத்தில் கோரிக்கை முழக்கம் (படங்கள்)

அதிராம்பட்டினம், டிச.12
மின்னணு வாக்கு இயந்திர எதிர்ப்பு ஒருங்கிணைப்புக் குழுவின் சார்பில், தேர்தலில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்துக்குப் பதிலாக வாக்குச்சீட்டு முறையையே மீண்டும் அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்தி அதிராம்பட்டினம் பேருந்து நிலையம் அருகில் கோரிக்கை முழக்கம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

நிகழ்வில், அக்குழுவின் ஒருங்கிணைப்பாளர் ஏ.ஜெ ஜியாவுதீன் தலைமை வகித்து, கண்டன உரை நிகழ்த்தினார். இந்நிகழ்வில், பெண்கள் உள்பட திரளானோர் கலந்துகொண்டு, 'மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை திரும்பப்பெறு' என்பன உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய பதாகையை கைகளில் ஏந்தியவாறு, தேர்தலில் பயன்படுத்தப்பட்டு வரும் மின்னணு வாக்குப்பதிவு  இயந்திரத்தை தடை செய்ய கோரியும், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்துக்குப் பதிலாக வாக்குச்சீட்டு முறையையே மீண்டும் அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்தி முழக்கமிட்டனர்.


Friday, December 11, 2020

பட்டுக்கோட்டையில் மருத்துவர்கள் வேலை நிறுத்தம்!

பட்டுக்கோட்டைடிச.11
ஆயுர்வேத மருத்துவர்களுக்கு அறுவை சிகிச்சை செய்வதற்கு உரிமை வழங்குவதை கண்டித்து, வேலைநிறுத்தம் நடைபெற்றது. தொடர்ந்து இந்திய மருத்துவ சங்கம் சார்பில் பட்டுக்கோட்டை சார் ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. 

இந்திய மருத்துவர் சங்கத்தின் பட்டுக்கோட்டை கிளைத் தலைவர் டாக்டர் ஏ.ஆர்.அன்பரசன் தலைமையில், டாக்டர்கள் அன்பழகன், பாலகிருஷ்ணன், சுப்பிரமணியன், கிளாடிஸ் காமராஜ், மகேஸ்வரி அன்பரசன், ஸ்ரீதர் பாபு, ராஜா ராமலிங்கம் ஆகியோர் பட்டுக்கோட்டை சார் ஆட்சியர் பாலச்சந்தரை வெள்ளிக்கிழமை அன்று நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். 

அம்மனுவில், "அறிவு சார்ந்த நவீன அறிவியல் மருத்துவத்தை உலகநாடுகள் பிரதானமாக ஏற்றுக்கொண்டு, நடைமுறையில் மிகச்சிறப்பாக மக்களின் சுகாதாரத்தை தொடர்ந்து பேணிக்காத்து வருகின்றனர். அறிவுசார் நவீன அறிவியல் அறுவை சிகிச்சை மருத்துவ படிப்பு மற்றும் பயிற்சி இன்றி (அடிப்படை தகுதியின்றி) மற்ற துறையினரை எடுத்துக்காட்டாக ஆயுர்வேத மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்ய அனுமதிப்பது என்பது, பொது மக்களுக்கு கேடு விளைவிக்கும் செயலாகும் என்பதோடு மட்டுமல்லாமல், மருத்துவத் துறையின் அடிப்படை கட்டமைப்பை சிதைக்கும் செயலாகும். எனவே மக்கள் நலனுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் இதனை அரசு அனுமதிக்கக் கூடாது" இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது. 

இந்திய மருத்துவ சங்கத்தின் அறைகூவலை ஏற்று, பட்டுக்கோட்டையில் மருத்துவர்கள் வெள்ளிக்கிழமை காலை 6 மணி முதல் சனிக்கிழமை காலை 6 மணி வரை வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். அவசர சிகிச்சை மற்றும் அறுவை சிகிச்சை மட்டும் பொதுமக்கள் நலன் கருதி மேற்கொள்ளப்பட்டது. 

வாக்காளர் பட்டியல் விழிப்புணர்வு கையெழுத்து இயக்கம்: ஆட்சியர் தொடங்கி வைத்தார்!

அதிரை நியூஸ்: டிச.11
தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையத்தில் வாக்காளர் பட்டியல் விழிப்புணர்வு கையெழுத்து இயக்கத்தினை மாவட்ட ஆட்சித் தலைவர் ம.கோவிந்த ராவ்  இன்று (11.12.2020) துவக்கி வைத்தார்.

தஞ்சாவூர் மாவட்டத்தில் 18 வயது பூர்த்தியடைந்தவர்கள் வாக்காளர் பட்டியலில் தங்களின் பெயரை சேர்த்துக் கொள்வது குறித்த விழிப்புணர்வு கையெழுத்து இயக்கத்தை முதல் கையெழுத்திட்டு மாவட்ட ஆட்சித் தலைவர்  துவக்கி வைத்தார். தொடர்ந்து, வாக்காளர் பட்டியலில் தங்களின் பெயரை சேர்ப்பதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்களை பேருந்துகளில் இருந்த பொதுமக்களிடம் மாவட்ட ஆட்சித் தலைவர் வழங்கினார். மேலும், 18 வயது பூர்த்தியடைந்த இளைஞர்கள், மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர்களிடம் புதிய வாக்காளர் சேர்க்கை படிவத்தினை மாவட்ட ஆட்சித் தலைவர் வழங்கினார்.

பின்னர், மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்ததாவது :-
இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி, டிசம்பர் 15ஆம் தேதி வரை வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்தம் நடைபெறுகிறது. வருகின்ற 12.12.2020 மற்றும் 13.12.2020 ஆகிய நாட்களில் தஞ்சாவூர் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல் மற்றும் திருத்தம் செய்தல் தொடர்பான சிறப்பு முகாம்கள் நிர்ணயிக்கப்பட்ட வாக்குச்சாவடி மையங்களில் நடைபெறுகிறது. வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்ப்பதற்கு படிவம் - 6, வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கம் செய்வதற்கு படிவம் - 7, வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்வதற்கு படிவம் - 8, ஒரே தொகுதிக்குள் குடியிருப்பு மாறியவர்கள் புதிய குடியிருப்பில் முகவரி மாற்றம் செய்ய படிவம் - 8ஏ ஆகியவற்றை பயன்படுத்த வேண்டும். வாக்களர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்ப்பவர்கள் பிறப்பு சான்று, பள்ளி மாற்றுச் சான்று, மதிப்பெண் சான்று ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை வயது சான்றாகவும், ரேஷன் ஸ்மார்ட் கார்ட், ஓட்டுனர் உரிமம், கடவுச்சீட்டு ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை முகவரி சான்றாகவும் சமர்ப்பிக்க வேண்டும். இந்த அரியவாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சித் தலைவர் ம.கோவிந்த ராவ் தெரிவித்தார்.

இந்நிகழ்வின்போது தஞ்சாவூர் மாநகராட்சி ஆணையர் ஜானகி ரவீந்திரன், தஞ்சாவூர் வருவாய் கோட்ட அலுவலர் வேலுமணி, தஞ்சாவூர் வட்டாட்சியர் வெங்கடேஸ்வரன், தஞ்சாவூர் நகர் நல அலுவலர் நமச்சிவாயம் மற்றும் அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.


சேவையாளர்களுக்கு IHWVO விருது!

சென்னை, டிச.12
இந்தியன் ஹுமன் வெல்பர்ஸ் & விஜிலன்ஸ் ஆர்கனைசேசன் (IHWVO) அமைப்பின் சார்பில், உலக மனித உரிமை தின விழா, சேவையாளர்களுக்கு விருது வழங்கும் விழா உள்பட முப்பெரும் விழா சென்னையில் வியாழக்கிழமை நடைபெற்றது.

விழாவில், அவ்வமைப்பின் அதிராம்பட்டினம் பேரூர் தலைவர் எம்.அப்துல் ஜலீல், அவ்வமைப்பின் தஞ்சை மாவட்டத் தலைவர் எம்.சாகுல் ஹமீது, சாரா எம்.அகமது ஆகியோருக்கு சேவை விருது வழங்கி பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது.

இந்நிகழ்வில், அவ்வமைப்பின் உறுப்பினர்கள் பிரின்ஸ் ராவூத்தர், ஏ.முகமது ஆரிப், காதர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.


தஞ்சை மாவட்டத்தில் நீர்நிலைகளை புனரமைக்க தன்னார்வலர்கள் ~ நன்கொடையாளர்கள் முன்வர வேண்டுகோள்!


அதிரை நியூஸ்: டிச.11
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள நீர்நிலைகளை புனரமைக்க தன்னார்வலர்கள் ~ நன்கொடையாளர்கள் முன்வர மாவட்ட ஆட்சியர் ஆய்வுக்கூட்டத்தில் வேண்டுகோள்!

Wednesday, December 9, 2020

மரண அறிவிப்பு ~ ஜுலைஹா அம்மாள் (வயது 80)

அதிரை நியூஸ்: டிச.09
அதிராம்பட்டினம், தரகர்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் 'சிவப்புதம்பி' என்கிற சுல்தான் அவர்களின் மகளும், மர்ஹூம் அப்துல் சலாம் அவர்களின் மனைவியும், மர்ஹூம் நாகூர் பிச்சை, பாருக் ஆகியோரின் கொளுந்தியாவும், அஜ்மல்கான், ஹாஜா பக்கீர், சேக் நூர்தீன், ஹாஜா அலாவுதீன், சேக்தாவூது ஆகியோரின் மாமியும், சவுக்கத்அலி அவர்களின் மாமியாவுமாகிய ஜலஹா அம்மாள் என்கிற ஜுலைஹா அம்மாள் (வயது 80) அவர்கள் இன்று வஃபாத்தாகி விட்டார்கள்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

அன்னாரின் ஜனாஸா இன்று (09-12-2020) காலை 10 மணியளவில் தரகர் தெரு முகைதீன் ஜும்மா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும். 

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.

தேர்தலில் வாக்குச்சீட்டு முறை கோரி அதிராம்பட்டினத்தில் பிரச்சாரம் (படங்கள்)

அதிராம்பட்டினம், டிச.09
தேர்தலில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்துக்குப் பதிலாக வாக்குச்சீட்டு முறையையே மீண்டும் அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்தி அதிராம்பட்டினத்தில் மின்னணு வாக்கு இயந்திர எதிர்ப்பு ஒருங்கிணைப்புக் குழுவினர் விழிப்புணர்வு பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அதிராம்பட்டினத்தில் ஜமாத் நிர்வாகிகள், கிராம பஞ்சாயத்தார்கள், சமூக நல அமைப்பு நிர்வாகிகள், அரசியல் கட்சி பிரமுகர்கள், வர்த்தகர்கள், தன்னார்வலர்கள் உளிட்டோரை நேரில் சந்தித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். மேலும், அதிரை ஏ.ஜெ ஜியாவுதீன் தலைமையில், எதிர்வரும் 11-12-2020 அன்று மாலை அதிராம்பட்டினத்தில் நடைபெற இருக்கும் பேரணி மற்றும் கோரிக்கை முழக்க நிகழ்வுக்கு அழைப்பு விடுத்து வருகின்றனர்.

இதில், சாந்தா சாகுல் ஹமீது, கிஜார் முகமது, அகமது அனஸ், காமில் உள்ளிட்ட மின்னணு வாக்கு இயந்திர எதிர்ப்பு ஒருங்கிணைப்புக் குழுவினர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.


Tuesday, December 8, 2020

விவசாயிகளுக்கு ஆதரவாக அதிராம்பட்டினத்தில் கடைகள் அடைப்பு, சாலை மறியல்: 200 பேர் கைது (படங்கள்)

அதிராம்பட்டினம், டிச.08
வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாய அமைப்புகளின் நாடு தழுவிய போராட்டத்திற்கு ஆதரவாக, அதிராம்பட்டினத்தில் திமுக உள்ளிட்ட எதிர்கட்சிகள் கடை அடைப்பு, சாலை மறியல் போராட்டத்தில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்ட 200 பேர் கைது செய்யப்பட்டனர். 

மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் திருத்தச் சட்டங்களை திரும்பப் பெறக் கோரி தில்லியில் நடைபெறும் விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாக, திமுக அதிராம்பட்டினம் பேரூர் செயலாளர் இராம.குணசேகரன் தலைமையில் சாலைமறியலில் ஈடுபட்ட இந்திய தேசிய காங்கிரஸ், இடதுசாரி கட்சிகள், மதிமுக, இந்திய யூனியன் முஸ்லீம் லீக், எஸ்டிபிஐ, தமுமுக, மனிதநேய மக்கள் கட்சி, மனிதநேய ஜனநாயகக் கட்சி, நாம் தமிழர், விடுதலை சிறுத்தைகள், நாம் மனிதர் உள்ளிட்ட எதிர்கட்சிகளைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்து, தனியார் மண்டபத்தில் தங்க வைத்தனர்.

முன்னதாக, விவசாயிகளுக்கு ஆதரவாக, அதிராம்பட்டினத்தில் கடையடைப்பு போராட்டம் நடைபெற்றது. இதில், அதிராம்பட்டினம் பேருந்து நிலையம், பழைய அஞ்சலக சாலை, ஆஸ்பத்திரி சாலை, பெரிய கடைத்தெரு, பட்டுக்கோட்டை சாலை உள்ளிட்ட பகுதிகளின் வர்த்தகக் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.