.

Pages

Tuesday, April 30, 2019

வாலிபால் போட்டியில் தேசிய அளவில் இரண்டாமிடம் பிடித்த மாணவி!

பேராவூரணி ஏப்.30-
வாலிபால் போட்டியில் தேசிய அளவில் இரண்டாம் இடம் பெற்ற பேராவூரணி பகுதி மாணவிக்கு பயிற்சியாளர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணியை அடுத்த நாடாகாடு முனிக்கோயில் பாலம் பகுதியை சேர்ந்தவர் நீலகண்டன்-சரஸ்வதி தம்பதிகள். கூலித் தொழிலாளியான இவர்களது மகள் என்.நிஷா (14) இவர் எட்டாம் வகுப்பு வரை, பேராவூரணி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியிலும், அதன் பிறகு 10 ஆம் வகுப்பை ஈரோடு மாவட்டம் நம்பியூர் குமுதா மெட்ரிக் பள்ளியில் படித்து வருகிறார்.

கடந்த ஏப்ரல் 21 முதல் 26 ஆம் தேதி வரை மகாராஷ்டிர மாநிலம் கோபர்கான் ஷீரடியில் 27 ஆவது மினி நேஷனல் வாலிபால் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது. இதில் இந்தியா முழுவதிலிருந்தும் அனைத்து மாநிலங்களிலிருந்தும், யூனியன் பிரதேசங்களில் இருந்தும் 30க்கும் மேற்பட்ட அணிகள் கலந்து கொண்டன.

இதில்  கலந்து கொண்ட தமிழக அணி இரண்டாம் இடத்தைப் பெற்று வெள்ளிப் பதக்கத்தை பெற்றது. இந்த அணியில் வாலிபால் விளையாட்டு வீராங்கனையான என்.நிஷா துணைக் கேப்டனாக சிறப்பாக விளையாடி வெற்றி பெற்றார். இவர் பேராவூரணி எஸ்.எம்.என் ஸ்போர்ட்ஸ் அகாடெமி மூலம் தொடர்ந்து வாலிபால் பயிற்சி பெற்று வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தேசிய அளவில் இரண்டாம் இடம் பெற்ற மாணவி என்.நிஷாவை எஸ்.எம்.என் ஸ்போர்ட்ஸ் அகாடெமி பயிற்சியாளர்கள் ஆர். பாரதிதாசன், எஸ்.நீலகண்டன் மற்றும் உடற்கல்வி ஆசிரியர்கள், கிராமத்தினர் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.

விழா ஏற்பாடு மே 2 ஆம் தேதி புதன்கிழமை மாணவிக்கு எஸ்.எம்.என்  ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில், பேராவூரணி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பாராட்டு விழா நடைபெற உள்ளது. இதில் பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் மா.கோவிந்தராசு, பள்ளி தலைமையாசிரியர் 
சி.கஜானா தேவி, அணவயல் பாரத் பால் குழுமம், விளையாட்டு ஆர்வலர் பாக்யலட்சுமி திருநீலகண்டன், சிறப்பு விருந்தினர்கள், ஆசிரியர்கள், பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர் கலந்து கொண்டு பாராட்ட உள்ளனர். இதற்கான ஏற்பாடுகளை எஸ்.எம்.என் ஸ்போர்ட்ஸ் அகாடெமி நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.
 

அதிராம்பட்டினம் அருகே இறந்த விவசாயி கண்கள் தானம் (படங்கள்)

அதிராம்பட்டினம் ஏப்.30
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் அருகே உள்ள தம்பிக்கோட்டை  மேலக்காடு கிராமத்தை சேர்ந்தவர் விநாயகத் தேவர் (வயது 88). விவசாயி. இவர் முதுமை காரணமாக இன்று செவ்வாய்கிழமை இயற்கை எய்தினார்.

இந்நிலையில், இவரது மனைவி ராஜட்சுமி, மகன்கள் ஜோதி, ராமலிங்கம், சுப்பிரமணியம், மகள்கள் பாலசுந்தரி, ஞானோதயம், கமலா ஆகியோர் விவசாயி விநாயகத் தேவர் விருப்பப்படி கண்களை தானம் செய்வதற்கு முன்வந்தனர்.

விவசாயி விநாயகத் தேவர் 
இதையடுத்து, அதிராம்பட்டினம் சுற்றுச்சூழல் மன்றத் தலைவர் வ.விவேகானந்தம் தகவலின் பேரில், அதிராம்பட்டினம் லயன்ஸ் சங்கத் தலைவர் பேராசிரியர் எம்.ஏ முகமது அப்துல் காதர் தலைமையில், அதிராம்பட்டினம் லயன்ஸ் சங்கச் செயலர் எம்.அப்துல் ரஹ்மான், பொருளாளர் எம்.ஏ அப்துல் ஜலீல், ஆர். மாரிமுத்து ஆகியோர் விரைந்து சென்று, இறந்த விவசாயி விநாயகத் தேவர் இரண்டு கண்களை தானமாகப் பெற்று கும்பகோணம் அரவிந்த் கண் வங்கிக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர், கண்களை தானமாக வழங்கிய விவசாயி விநாயகத் தேவர் குடும்பத்தினருக்கு அதிராம்பட்டினம் லயன்ஸ் சங்க நிர்வாகிகள் நன்றி கூறினார்கள்.

SSLC தேர்வில், காதிர் முகைதீன் பெண்கள் பள்ளி 99% தேர்ச்சி (முழுவிவரம்)

அதிராம்பட்டினம், ஏப்.30
தமிழகமெங்கும் SSLC தேர்வின் முடிவு திங்கட்கிழமை காலை வெளியானது. இந்த தேர்வில் தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் பெண்கள் மேல்நிலைப்பள்ளியின் மொத்தம் 145 மாணவிகள் தேர்வு எழுதியதில் 143 மாணவிகள் வெற்றி பெற்று, 99 சதவீத தேர்ச்சியுடன் பள்ளி சாதனை நிகழ்த்தியுள்ளது.

கடந்த ஆண்டுகளை விட நடப்பு கல்வியாண்டில் மாணவிகள் அதிக தேர்ச்சி பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து, பள்ளிச் செயலர் எஸ்.ஜெ அபுல் ஹசன், கல்லூரி முதல்வர் எம். முகமது முகைதீன், பள்ளி தலைமை ஆசிரியை எம்.சுராஜ் மற்றும் பள்ளி ஆசிரியர்கள், அலுவலகப் பணியாளர்கள் ஆகியோர் மாணவிகளை பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.

பள்ளியளவில் முதல் 3 இடங்கள் மதிப்பெண்கள்:
முதல் இடம்: 456/500
இரண்டாம் இடம்: 445/500
மூன்றாம் இடம் : 432/500

Monday, April 29, 2019

காரைக்குடி ~ பட்டுக்கோட்டை ~ திருவாரூர் ரயில் சேவையை உடனே தொடங்க கோரிக்கை!

பட்டுக்கோட்டை, ஏப்.29
காரைக்குடி - பட்டுக்கோட்டை - திருவாரூர் இடையே இரயில் சேவையை உடனடியாக துவங்க வேண்டும் - பட்டுக்கோட்டை வட்ட இரயில் பயணிகள் நல சங்கம் கோரிக்கை.                   

பட்டுக்கோட்டை வட்ட இரயில் பயணிகள் சங்கத்தின் உறுப்பினர்கள் கூட்டம், பட்டுக்கோட்டை நிலா ஸ்கூலில் 27.04.2019 சனிக்கிழமை இரவு நடைபெற்றது.             

கூட்டத்திற்கு சங்க தலைவர் என். ஜெயராமன் தலைமை வகித்தார். துணைத் தலைவர் கே.லட்சுமிகாந்தன் முன்னிலை வகித்தார். பொருளாளர் பி. சுந்தரராஜூலு வரவேற்றார்.

கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன:
பாராளுமன்ற தேர்தலில் தேர்வு செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களை சந்தித்து இப்பகுதி இரயில் சம்பந்தமான கோரிக்கைகளை வைக்க முடிவு செய்யப்பட்டது.           

காரைக்குடி - திருவாரூர் அகல ரயில் பாதை அமைக்கும் பணிகள் முடிவடைந்து, இரயில்வே பாதுகாப்பு ஆணையாளரின் சோதனை ஓட்ட ஆய்வுகள் முடிவடைந்தும், இத்தடத்தில் இரயில் சேவை தொடங்கப்படவில்லை. எனவே இத்தடத்தில் சென்னைக்கு இரவு நேர விரைவு இர‌யி‌ல் சேவையை துவங்க வேண்டும்.

பள்ளி, கல்லூரி மாணவர்கள், வியாபாரிகள், பொதுமக்களுக்கு பயன்படும் வகையிலும், இரவு நேரங்களில் சென்னைக்கு செல்லும் இரயில்களுக்கு இணைப்பு இரயில்களாக பயன்படும் வகையில் பயணிகள் இரயில்களை இயக்க வேண்டும்.     

பட்டுக்கோட்டை இரயில்வே நிலையத்திற்கு அருகில் உள்ள சுடுகாட்டிற்கு செல்ல சாலை வசதியினை ஏற்பாடு செய்து தர வேண்டும்.                     

அண்ணா நகர் மற்றும் இசபெல் பள்ளிக்கூடத்திற்கு இடையில் இரயில் பாதைக்கு கீழ் உடனடியாக, பள்ளிக்கூடம் துவங்கும் முன், விடுமுறை காலத்தில் தரைப்பாலம் அமைக்க வேண்டும்.     

கிழக்கு கடற்கரை சாலையில் இருந்து அதிராம்பட்டினம் இரயில் நிலையத்திற்கு செல்லும் சாலை பழுதடைந்துள்ளது. இச்சாலையை இரயில் சேவை துவங்குவதற்கு முன் சரி செய்ய வேண்டும்.                   

மேற்கண்ட கோரிக்கைகளை இரயில்வே நிர்வாகம் நிறைவேற்ற, பட்டுக்கோட்டை பகுதியில் தெருமுனை பிரச்சாரம் செய்ய முடிவு செய்யப்பட்டது.         

கூட்டத்தில் கலியபெருமாள், சுப்பிரமணி, நஜ்முதீன், இராசேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டு ஆலோசனைகளை வழங்கினார்கள்.          முடிவில் செயலாளர் வ. விவேகானந்தம் நன்றி கூறினார்.

SSLC தேர்வில், அதிராம்பட்டினம் அரசு மகளிர் பள்ளி (1 ம் நம்பர்) 99% தேர்ச்சி (முழுவிவரம்)

அதிராம்பட்டினம், ஏப்.29
தமிழகமெங்கும் SSLC தேர்வின் முடிவு இன்று திங்கட்கிழமை காலை வெளியானது. இந்த தேர்வில் தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் அரசு மகளிர் உயர் நிலைப்பள்ளியில் (1 ம் நம்பர்) மொத்தம் 115 மாணவிகள் தேர்வு எழுதியதில், 114 பேர் வெற்றி பெற்று, 99 சதவீத தேர்ச்சியுடன் பள்ளி சாதனை நிகழ்த்தியுள்ளது. இதையடுத்து, பள்ளித் தலைமை ஆசிரியை சுசிலா மற்றும் பள்ளி ஆசிரியர்கள் மாணவ, மாணவிகளை பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.

பள்ளியளவில் சிறப்பிடம் பெற்ற மாணவிகள்:
முதல் இடம்: 477/500 (எம். ஹம்சத்வனி)
இரண்டாம் இடம்: 472/500 (எம்.ரம்யா)
மூன்றாம் இடம் : 466/500 (எச்.புவனா)

SSLC தேர்வில், காதிர் முகைதீன் ஆண்கள் பள்ளி 95% தேர்ச்சி (முழுவிவரம்)

அதிராம்பட்டினம், ஏப்.29
தமிழகமெங்கும் SSLC தேர்வின் முடிவு இன்று திங்கட்கிழமை காலை வெளியானது. இந்த தேர்வில் தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியின் மொத்தம் 164 மாணவர்கள் தேர்வு எழுதியதில் 155 மாணவர்கள் வெற்றி பெற்று, 95 சதவீத தேர்ச்சியுடன் பள்ளி சாதனை நிகழ்த்தியுள்ளது.

கடந்த ஆண்டுகளை விட நடப்பு கல்வியாண்டில் மாணவர்கள் அதிக தேர்ச்சி பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து, பள்ளிச் செயலர் எஸ்.ஜெ அபுல் ஹசன், கல்லூரி முதல்வர் எம். முகமது முகைதீன், பள்ளி தலைமை ஆசிரியர் அஸ்ரப் அலி மற்றும் பள்ளி ஆசிரியர்கள், அலுவலகப் பணியாளர்கள் ஆகியோர் மாணவர்களை பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.

பள்ளியளவில் முதல் 3 இடங்கள் மதிப்பெண்கள்:
முதல் இடம்: 416/500
இரண்டாம் இடம்: 407/500
மூன்றாம் இடம் : 384/500

SSLC தேர்வில், ஆக்ஸ்போர்டு மெட்ரிக்.பள்ளி 100 % தேர்ச்சி (முழுவிவரம்)

அதிராம்பட்டினம், ஏப்.29
தமிழகமெங்கும் SSLC தேர்வின் முடிவு இன்று திங்கட்கிழமை காலை வெளியானது. இந்த தேர்வில் தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் அடுத்துள்ள புதுக்கோட்டை உள்ளூர், ஆக்ஸ்போர்டு மெட்ரிக். மேல்நிலைப்பள்ளியில் மொத்தம் 23 மாணவர்கள் தேர்வு எழுதியதில், அனைவரும் வெற்றி பெற்று, 100 சதவீத தேர்ச்சியுடன் பள்ளி சாதனை நிகழ்த்தியுள்ளது. மேலும் அனைத்து மாணவர்களும் மொத்தம் மதிப்பெண்ணில் 400 க்கும் அதிகமாக பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
பள்ளி தொடர்ந்து 100% தேர்ச்சி பெற்றுவருகிறது. இதையடுத்து, பள்ளித் தாளாளர் என்.உதயகுமார், பள்ளி இயக்குநர் மகாலட்சுமி, மற்றும் பள்ளி ஆசிரியர்கள் மாணவ, மாணவிகளை பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.

பள்ளியளவில் முதல் 3 இடங்கள் மதிப்பெண்கள்:
முதல் இடம்: 478/500
இரண்டாம் இடம்: 476/500
மூன்றாம் இடம் : 468/500

SSLC தேர்வில், இமாம் ஷாஃபி மெட்ரிக் பள்ளி 98% தேர்ச்சி (முழுவிவரம்)

அதிராம்பட்டினம், ஏப்.29
தமிழகமெங்கும் SSLC தேர்வின் முடிவு இன்று திங்கட்கிழமை காலை வெளியானது. இந்த தேர்வில் தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் மொத்தம் 90 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதியதில், 88 மாணவர்கள் வெற்றி பெற்று, 98 சதவீத தேர்ச்சியுடன் பள்ளி சாதனை நிகழ்த்தியுள்ளது. மேலும், 9 மாணவர்கள் மொத்த மதிப்பெண்ணில் 400 க்கும் அதிமாக பெற்றுள்ளனர். கடந்த ஆண்டுகளை விட நடப்பு கல்வியாண்டில் மாணவர்கள் அதிக தேர்ச்சி பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

இதையடுத்து, பள்ளித் தாளாளர் ஹாஜி எம்.எஸ் தாஜுதீன், பள்ளி நிர்வாகப் பொருளாளர் ஹாஜி ஏ. அகமது இப்ராஹீம், பள்ளி இணைத்தாளாளர் எம்.எஸ் முகமது ஆஜம், பள்ளி முதல்வர் மீனா குமாரி மற்றும் பள்ளி ஆசிரியர்கள், அலுவலகப் பணியாளர்கள் ஆகியோர் மாணவர்களை பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.

பள்ளியளவில் முதல் 3 இடங்கள் மதிப்பெண்கள்:
முதல் இடம்: 434/500
இரண்டாம் இடம்: 433/500
மூன்றாம் இடம் : 427/500

Thursday, April 25, 2019

ஃபானி புயல்: முன்னேற்பாடு பணிகள் குறித்து அலுவலர்களுடன் ஆட்சியர் கலந்தாய்வு!

தஞ்சாவூர், ஏப்.25
தஞ்சாவூர் மாவட்டம். மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் இந்திய பெருங்கடலில் உருவாகியுள்ள புதிய புயல் சின்னம் தொடர்பான முன்னெச்சரிக்கை ஒருங்கிணைப்பு குழு கூட்டம் மாவட்ட  ஆட்சித்தலைவர் ஆ.அண்ணாதுரை தலைமையில் அனைத்து துறை அலுவலர்களுடன் இன்று (25,04,2019) நடைபெற்றது.

கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் பேசியதாவது;
இந்தியப் பெருங்கடலில் புதிய புயல் சின்னம் உருவாகி உள்ளதாக வானிலை ஆய்வு மையத்திலிருந்து தகவல் வரப்பெற்றுள்ளது, இந்திய வானிலை ஆய்வு மைய அறிவிப்பின்படி இந்தியப் பெருங்கடலில் உருவாகியுள்ள புயல் சின்னம் தொடர்பாக மேற்கொள்ளப்பட வேண்டிய அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் தொடர்புடைய அலுவலர்கள் செய்திட வேண்டும்,

அனைத்து மாவட்ட நிலை அலுவலர்கள் மற்றும் அவர்களின் கீழ் பணிபுரியும் அலுவலர்கள் இயற்கை போpடர் முன்னெச்சாpக்கை தகவல்களை அறிந்துகொள்ள ஏதுவாக TNSMART என்ற செயலியை தங்களது அலைபேசியில் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும், மாவட்ட நிலை அலுவலர்கள், இரண்டாம் நிலை மற்றும் கள அலுவலர்கள் அனைவரும் விடுமுறை நாட்களிலும் அவர்களது தலைமையிடத்தில் கட்டாயம் தங்கியிருக்க வேண்டும், வருவாய் கோட்ட அலுவலர்கள் மற்றும் வட்ட அலுவலகங்களில் 24 மணி நேரமும் இயங்கக்கூடிய கட்டுப்பாட்டு அறையை ஏற்படுத்தி அதில் பணியாளர்களை முழுநேரமும் இருக்குமாறு முறைப்பணியில் பணியாற்ற வேண்டும். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள 14 புதிய பல்நோக்கு புயல் பாதுகாப்பு மையங்கள். 8 இதர புயல் பாதுகாப்பு மையங்கள் ஆகியவற்றை புயல் நேரத்தில் பொதுமக்களை தங்க வைப்பதற்கு ஏதுவாக தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும், புயல் பாதுகாப்பு மையங்களில் மின் விநியோகம். குடிநீர் விநியோகம் ஆகியவற்றை சீர் செய்து ஜெனரேட்டர்களை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.

மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிக் கட்டடங்களிலும் அவசர காலத்தில் பொதுமக்களை தங்க வைப்பதற்கு ஏதுவாக அவற்றை சுத்தம் செய்து. குடிநீர் மற்றும் மின்சாரம் தடையில்லாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும், புயலினால் விழும் மரங்களை உடனடியாக அப்புறப்படுத்திட ஏதுவாக மரம் அறுக்கும் கருவிகள் மற்றும்  JCB இயந்திரங்களை அந்தந்த வட்டங்களில் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.  புயலினால் சாய்ந்து விழும் மின்கம்பங்களை சீர் செய்யத் தேவையான பணியாளர்களை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். புயலினால் மின்தடை ஏற்படும்பட்சத்தில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாத வகையில் கிராமங்களில் உள்ள மேல்நிலை நீர்தேக்கத்தொட்டிகளில் நீர் ஏற்ற ஏதுவாக Power Generator-களை தயார் நிலையில் வைத்துக்கொள்ள வேண்டும்.

புயல் எச்சரிக்கை அறிவிக்கப்படும் சமயத்தில் மீனவர்கள் எவரும் மீன்பிடிக்க கடலுக்குள் செல்லாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும், அனைத்து அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் மருத்துவர்கள் மற்றும் மருத்துவமனை பணியாளர்கள் 24 மணி நேரமும் பணியிலிருப்பதை உறுதி செய்ய வேண்டும்.  மேலும், ஆம்புலன்ஸ் வாகனங்களை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் ஆ.அண்ணாதுரை பேசினார்,

ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.எஸ்.மகேஸ்வரன். கஜா புயல் மறு சீரமைப்பு மற்றும் மறுவாழ்வு கூடுதல் திட்ட இயக்குநர் ராஜகோபால் சுங்காரா, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட  இயக்குநர் மந்திராசலம் மற்றும் அனைத்து துறை முதன்மை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

அதிராம்பட்டினத்தில் குடிசை வீடு எரிந்து நாசம் (படங்கள்)

அதிராம்பட்டினம், ஏப்.25
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் கீழத்தெரு புதுக்குடியை சேர்ந்தவர் காதர் பாட்சா. இவரது மனைவி, மகன் உள்ளிட்ட குடும்பத்தினர் அப்பகுதியில் உள்ள குடிசை வீட்டில் வசித்து வருகின்றனர். இந்நிலையில், இன்று வியாழக்கிழமை மதியம் திடீரென வீட்டின் மேற்கூரையில் தீ பற்றியது, பின்னர், தீ மளமளவென பரவியதால் வீட்டில் இருந்த அனைத்துப் பொருட்களும் எரிந்து நாசமாகின. இதனால், அப்பகுதி முழுவதும் ஒரே புகை மண்டலமாக காட்சி அளித்தது. பின்னர், அப்பகுதியினர் திரண்டு வந்து தீயை போராடி அணைத்தனர். இதனால், அருகில் உள்ள குடியிருப்பு பகுதிகளுக்கு தீ மேலும் பரவாமல் தடுக்கப்பட்டது.

பின்னர், பட்டுக்கோட்டை தீயணைப்பு வாகனத்தில் வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை முழுவதும் அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். தீ விபத்திற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
 
 
 
 

ஃபானி புயல்: கடற்கரையோரங்களில் பெய்யவுள்ள மழைநீரை சேமிப்போம்!

அதிரை நியூஸ்: ஏப்.25
தென் வங்கக்கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை எதிர்வரும் ஏப். 27, 28 தேதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக (புயலாக) உருவாகி தமிழக கடற்கரையை நோக்கி நகரும், இந்தப் புயல் தமிழக கடற்கரை வழியாக கரையை கடக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது இதனால் எதிர்வரும் ஏப். 27, 28, 29 ஆகிய நாட்களில் பலத்த மழை பெய்யும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.

தற்போது தமிழகத்தை கடும் வெயில் வாட்டி வருவதுடன் நீர்நிலைகளும் காய்ந்து வறண்டு போயுள்ளன. கடந்தமுறை கர்நாடக மாநிலம் திறந்துவிட்ட காவிரி நீரும் கடைமடை பகுதிக்குள் நுழையாதவாறு கவனமாக கடலில் கொண்டு சேர்க்கப்பட்ட அவலத்தையும் அறிவோம். எனவே கடைமடை பகுதியினர் காவிரி நீரை எதிர்பார்த்திருப்பது அறிவீனம்.

இந்நிலையில், நம் கையே நமக்கு உதவி என்ற அடிப்படையில் எதிர்வரும் ஏப்ரல் 27, 28, 29 ஆகிய தேதிகளில் பெய்யலாம் என எதிர்பார்க்கப்படும் மழைநீரை பத்திரமாக சேமிப்பது நமது கடமை என உணர்வோம், குளம் குட்டைகளில், நிலத்தடியில் நீரை சேமிப்போம். புனித ரமலான் மாதத்திற்கும், எஞ்சியுள்ள கோடைகாலத்தை சமாளிப்பதற்கு இந்த மழைநீர் மிக மிக அவசியம்.

தற்போது பள்ளி, கல்லூரி மாணவர்கள் விடுமுறையில் உள்ளனர், இவர்களின் சேவையை பயன்படுத்திக் கொள்ள அதிரை முஹல்லா ஜமாத்துகளும் பொதுசேவை அமைப்புக்களும் முன்வர வேண்டும். மழைக்கு முன் நீர்நிலைகளுக்கு மழைநீர் வரும் பாதைகளை கண்டறிந்து செப்பனிட தேவையான முன்னேற்பாடுகளைச் செய்ய வேண்டும். ஒவ்வொரு வீட்டினரும் தாமாக முன்வந்து மழைநீர் சேகரிப்புக்கான கட்டமைப்புக்களை எற்படுத்திட விழிப்புணர்வு பிரச்சாரங்களை செய்வதுடன் நிழல் தரும், பயன் தரும் மரங்களை வளர்க்கவும் ஆர்வம் ஏற்படுத்த வேண்டும்.

மழைநீரை சேமிப்போம், கோடை வெப்பத்தை சமாளிப்போம், நிலத்தடி நீரை உயர்த்துவோம்.

மரம் வளர்ப்போம் மழைநீரை பெறுவோம்.

கஜா எனும் கோரப்புயலால் பாதிக்கப்பட்ட நாம் முன்னேற்பாடாக தேவையான அவசரகால உபகரணங்களை சேமித்து வைப்பதுடன் இந்த புயலால் மக்களுக்கு எத்தகைய பேரிடர்களும் ஏற்பட்டுவிடக்கூடாது என ஏகன் அல்லாஹ்விடம் தொழுது துஆச் செய்து வருவோமாக.

கோடையில் எப்போதும் மழைகள் பெய்து கொண்டிருக்காது என்பதை அறிந்துள்ள தெரு சங்கங்களும், முஹல்லா ஜமாத்துகளும், இளைஞர்களும், மாணவர்களும் விரைந்து போர்க்கால அடிப்படையில் செயல்பட வேண்டிய அறிய தருணம் இது என்பதை மறவாதீர்.

குறிப்பு: அதிரையை மையப்படுத்தி பதிவு எழுதப்பட்டிருந்தாலும் அனைத்து ஊர்களுக்குமான பொதுவான பதிவே.

அக்கறையுடன்
அதிரை அமீன்

Wednesday, April 24, 2019

அதிரை பைத்துல்மால் ரியாத் கிளையின் மாதாந்திரக் கூட்டம்!

அதிரை நியூஸ்: ஏப்.24
அதிரை பைத்துல்மால் ரியாத் கிளையின் 66-வது கூட்டம் கடந்த 19/04/2019      அன்று ஹாராவில் இனிதே நடைபெற்றது.

நிகழ்ச்சி நிரல்:- 
கிராஅத்                 : இக்பால் (உறுப்பினர்)
முன்னிலை           : S.சரபுதீன் (தலைவர்)
வரவேற்புரை       : N.அபூபக்கர் (பொருளாளர்)
சிறப்புரை: A.M.அஹமது ஜலீல் (செயலாளர்)
நன்றியுரை: A.சாதிக் அகமது (இணைத் தலைவர்)

தீர்மானங்கள்:
1) இன்ஷா அல்லாஹ் வரும் 10-ம் தேதி மே மாதம் நோன்பு பிறை 5-ல் வழமை போல் இந்த வருடம் இஃப்தார் நிகழ்ச்சி CLASSIC RESTAURANT ஆடிட்டோரியத்தில் நடத்த இருப்பதாக முடிவு செய்யப்பட்டு அதில் குடும்ப நிகழ்ச்சியாக மற்றும் ஆலிம்களின் பயான் மற்றும் கேள்வி பதில்கள் மார்க்க அடிப்படையில் நடைபெற இருப்பதால் அதிரை அனைத்து முஹல்லாவாசிகள் அனைவர்களும் வந்து கலந்து சிறப்பிக்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

2) இக்கூட்டத்தில் வட்டியில்லா நகைக்கடன் மற்றும் MSM நகர் குடிதண்ணீர்  போருக்காக உதவிய இரு நபர்களுக்காக நன்றி தெரிவிக்கப்பட்டு இருவரின் ஹக்கிலும் துஆ செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது.

3) ABM தலைமையகம் அனுப்பிய கடிதம் வாசிக்கப்பட்டு இன்ஷா அல்லாஹ் இந்த வருடம் பித்ரா, ஜக்காத் மற்றும் சந்தாவை அதிகம் வசூல் செய்து மேலும் புதிய சேவைகளை தொடர்வதற்கு முழு ஒத்துழைப்பு நல்குமாறு இக்கூட்டத்தில் கேட்டுக் கொள்ளப்பட்டது.

4) இவ்வருடம் ஜக்காத் பித்ரா மற்றும் வருட சந்தா விஷயமாக அனைவருக்கும் தெளிவுபடுத்தப்பட்டு மேலும் நிரந்தர உறுப்பினர்கள் சேர்க்கையை அதிகரிக்கும் விசயமாக கலந்து ஆலோசிக்கப்பட்டு வரும் இப்தார் நிகழ்ச்சியில் ஒத்துழைப்பு தருமாறு கேட்டுக் கொள்ளப்பட்டு பொறுப்புதாரிகள் நியமிக்கப்பட்டது.

5) கஜா நிவாரண வீடு புனரமைப்பு குழு இதுவரை 260 வீடுகள் சரி செய்து கொடுக்க உதவியாக இருந்து செயல்பட்ட அனைத்து AGRA அமைப்பின் சகோதரர்களும் மேலும் அதற்காக பண உதவி (பொருளாதாரம்) மற்றும் பொருட்கள் மற்றும் பல வகையிலும் உதவிய அனைத்து பெரும் நல்உள்ளங்களின் பெயரிலும் துவா செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டு இந்த AGRA மூலம் பைத்துல்மாலுக்கு மேலும் பெருமை சேர்த்து தந்து மேலும் ஒற்றுமை ஏற்படுத்திய அனைவருக்கும் இக்கூட்டத்தில் நன்றி தெரிவிக்கப்பட்டது. 

6) இன்ஷா அல்லாஹ் அடுத்த அமர்வு வரும் MAY 10-ம் தேதி வெள்ளிக்கிழமை மாலை 5 மணியளவில் பத்ஹா CLASSIC RESTAURANT ஆடிட்டோரியத்தில் இப்தார் நிகழ்ச்சி  நடத்துவதென முடிவு செய்யப்பட்டு, அதில் அதிரை வாசிகள் அனைவர்களும் குடும்பத்தோடு கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கப்படுகிறார்கள்.

இப்படிக்கு,
அதிரை பைத்துல்மால் ரியாத் கிளை
 
 

அதிராம்பட்டினத்தில் வெள்ளரிப் பழங்கள் விற்பனை தொடக்கம் (படங்கள்)

அதிராம்பட்டினம் ஏப்.24
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் பகுதியில் நாளுக்கு நாள் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதிலிருந்து தப்பிக்க பொதுமக்கள் குளிர்பானக் கடைகளை நோக்கி படையெடுத்த வண்ணம் உள்ளனர். இந்நிலையில், திங்கள்கிழமை அதிராம்பட்டினம் கடைவீதிக்கு வெயிலுக்கு இதமான வெள்ளரிப் பழங்கள் கூடை, கூடையாக விற்பனைக்கு வந்து குவிந்துள்ளன.

இந்தப் பழங்கள் பக்கத்திலுள்ள மங்கனங்காடு கிராமத்திலிருந்து அதிராம்பட்டினம் கடைத்தெரு மார்கெட்டுக்கு கொண்டு வரப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. சிறிய பழம் ரூ.40-க்கும், பெரிய பழம் ரூ.60-க்கும் விற்பனையாகிறது.

இதுகுறித்து வெள்ளரிப்பழ சாகுபடியாளரும், விற்பனையாளருமான மங்கனங்காடு சுப்பிரமணியன் கூறியது: 
'எனது கிராமத்தில் கடந்த பல ஆண்டுகளாக சுமார் 1 ஏக்கர் நிலத்தில் வெள்ளரிப்பழங்களை சொந்தமாக சாகுபடி செய்கிறேன். கோடைக்காலம் தொடங்கியுள்ளதால் அதிராம்பட்டினம் கடைத்தெரு பகுதிக்கு வழக்கம் போல் வெள்ளரிப் பழங்களை கொண்டு வந்து விற்பனை செய்து வருகிறேன். தினமும் 150 பழங்கள் வரை விற்பனையாகிறது.

சித்திரை, வைகாசி, ஆனி ஆகிய 3 மாதங்கள் மட்டுமே விளையக் கூடிய வெள்ளரிப் பழங்கள் மருத்துவ குணம் கொண்டவை. வெயிலுக்கு இதம் தரும் இந்த பழங்கள் சர்க்கரை நோயாளிகள், ரத்த அழுத்தம் உள்ளவர்கள் சாப்பிடலாம். குறிப்பாக உடல் பருமனை குறைக்க உதவும்.

3 மாதங்கள் மட்டுமே இந்த பழங்கள் கிடைக்கும் என்பதால், இப்பழத்துக்கு எப்போதும் கிராக்கி அதிகம். வெயிலின் தாக்கத்தால் ஏற்படும் அம்மை, வியர்க்குரு, வியர்வை கொப்பளங்கள் போன்றவற்றை தடுக்கும் வல்லமை கொண்டது.

வெள்ளரிப் பழம் சாப்பிட்டால் உடல் சூடு தணியும். வெள்ளரிப்பழச்சாறு குடித்தால் தாகம் தணியும். இந்த ஆண்டு கோடை வெப்பம் கடுமையாக இருப்பதால் அதிராம்பட்டினம் பகுதியில் பொதுமக்கள் வெள்ளரிப் பழங்களை ஆர்வத்துடன் வாங்கிச் செல்கின்றனர்' என்றார்.






வாக்கு எண்ணும் மையத்தில் ஆட்சியர் ஆய்வு!

தஞ்சாவூர், ஏப்.24
2019 தஞ்சாவூர் நாடாளுமன்ற தொகுதி தேர்தல் மற்றும் தஞ்சாவூர் சட்ட மன்ற தொகுதி இடைத்தேர்தலில் வாக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள மின்னணு வாக்கு இயந்திரங்கள் வாக்கு எண்ணிக்கை மையமான தஞ்சாவூர் குந்தவை நாச்சியார் அரசு மகளிர் கல்லூரி பாதுகாப்பு அறையில் துணை ராணுவம் மற்றும் காவல்துறை அலுவலர்களால் பாதுகாக்கப்படுகிறது.

இந்நிலையில், தஞ்சை மாவட்ட ஆட்சியரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான ஆ.அண்ணாதுரை இன்று புதன்கிழமை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அங்குள்ள வருகை பதிவேட்டில் கையெழுத்துட்டார்.
 

Tuesday, April 23, 2019

காவல்துறையின் முக்கிய அறிவிப்பு!

அதிரை நியூஸ்: ஏப்.23
தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.எஸ். மகேஸ்வரன் இன்று (ஏப்.23) செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பது;
சமூக ஊடகங்களின் மூலமாக இணையத்தில் மத அமைப்புகள், சாதி அமைப்புகள் மற்றும் தனிப்பட்ட நபர்கள் மற்றவர்கள் குறித்து தவறான அவதூறன பேச்சுக்கள், கருத்துக்கள், படங்கள், காட்சிப்பதிவுகள், கருத்துப்பதிவுகள் ஆகியவற்றை உருவாக்கி பதிவேற்றுதல் சட்டப்படி குற்றமாகும். அப்படி பதிவிறக்கம் செய்து பார்த்து அதை மற்றவர்களுக்கு பரப்புதலும் இந்திய தண்டணைச் சட்டம் பிரிவுகள் 504, 505 மற்றும் பிரிவு 67 தகவல் தொழில் நுட்பம் சட்டம் 2000–ன் படி குற்றமாகும். இந்த குற்றங்கள் ஜாமினில் விடமுடியாத குற்றங்களாகும். சமூக ஊடகங்களில் இருப்பவர்கள் தங்களுக்கு கிடைக்கப்பட்ட காட்சி பதிவுகள், கருத்துப்பதிவுகளை மற்றவர்களுக்கு பகிரும் போது, அது நீங்கள் தெரிவிக்கும் கருத்தாகவே சட்டத்தின் முன் கருதப்படும். எனவே சமூக ஊடகத்தை சரியான முறையில் பயன்படுத்தி மேமற்கண்ட சமூக விரோத செயல்களை தடுக்கும் பொருட்டு காவல்துறையினருக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.எஸ். மகேஸ்வரன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

அதிராம்பட்டினத்தின் கோடைவாச குளங்கள் (படங்கள்)

அய்யனார் கோயில் குளம்
அதிராம்பட்டினம், ஏப்.23
சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்வரை நம் அதிராம்பட்டினம் குடிநீர் கிணறுகள் மட்டும் நம்பியிருந்த போது கூடுதலாக மண்ணப்பன் குளமும் பிரத்தியேகமாக அதிரை பகுதி மக்களின் குடிநீர் தேவைகளை நிறைவேற்றி வந்தது. அதேபோல் ஊரெங்கும் நிறைந்திருந்த குளங்கள் மட்டுமே குளியலுக்கு கதி. இன்று கிணறுகள் இல்லவே இல்லை குளங்கள் இருக்கு ஆனால் அதில் தண்ணீர் இல்லை என்ற நிலையே என்றபோதும் நமதூரிலும் நம்மை சூழ்ந்துள்ள கிராமங்களிலும் உள்ள வெகுசில குளங்கள் மட்டும் இன்னும் இந்த கடும் கோடையிலும் பயன் தந்து வருகின்றன.

கஜா புயலால் நமதூர் பேரழிவுகளை சந்தித்து தண்ணீர் இன்றியும் மின்சாரம் இன்றியும் சீரழிந்து கிடந்தபோது பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு தினமும் குளிக்கக் கை கொடுத்தவை இக்குளங்களே. தற்போதும் தேர்தலுக்கு சுமார் 2 தினங்களுக்கு முன் கஜா புயல் துன்ப நாட்களை "களா" செய்தது போலிருந்த மின்சாரமில்லாத அந்த 2 நாட்களிலும் கை கொடுத்தவை இக்குளங்களே.

பொதுவாக கோடை காலங்களில் கோடைவாச ஸ்தலங்களை நோக்கி படையெடுப்போம் அதேபோல் குளக்குளியல் பிரியர்களும் பொதுவானவர்களும் கீழ்க்காணும் நீர்நிலைகளுக்குச் சென்று உடல் சூட்டை தணித்து வருகின்றனர் என்றால் அது மிகையாகாது, இதில் முதலிடத்தில் உள்ளது கடற்கரை தெருவிலுள்ள "வெட்டிக்குளம்"

அதிரையின் பெரும்பான்மையான குளங்கள் காய்ந்திருக்க அருமையான முறையில் மராமத்து செய்யப்பட்டுள்ள வெட்டிக்குளம் ரசித்துக் குளிக்க ஏற்ற நன்நீரை கொண்டுள்ளதுடன் கரை சுவர்களில் இஸ்லாம் வழியுறுத்தும் சுத்தம் பற்றியும் சகலருக்கும் அழகுற எடுத்துரைக்கின்றது.

இதற்கடுத்து வற்றிப் போய்விட்ட சினன ஏரியின் நடுவே குளம் வெட்டி நீரை தேக்கி வைத்துள்ளனர். தெளிவாகவுள்ள இந்த ஏரி குளத்தின் கரைகள் மட்டுமே கொஞ்சம் வழுக்கக்கூடியவை மற்றபடி ஆனந்தக்குளியலுக்கு அற்புதமானது.

அணையப் போகின்ற விளக்கை நினைவூட்டும் செடியன் குளம், அதில் சிறிதளவே எஞ்சியுள்ள நீரிலும் தினமும் நூற்றுக்கணக்கானவர்கள் குளித்து வருகின்றனர் என்றாலும் இந்நிலையில் அது குளியலுக்கு ஏற்ற குளமல்ல.

ஏரிப்புறக்கரை கிராமத்தை சுற்றியும் குஞ்சி குளம், உடையங்குளம், அய்யனார் கோயில் குளம், வழுதியம்மன் கோயில் குளம், பள்ளக்குளம், வென்னீர் குட்டை போன்றவையும் குளியலுக்கு பயன்பட்டு வருகின்றன. இத்துடன் சின்ன பூச்செறி, பெரிய பூச்செரி என்ற குளியல் தவிர்த்த வேறுபல பொதுபயன்பாட்டுக் குளங்களும் நிறைந்த நீருடன் உள்ளன. இன்னும் சில குளங்களும் உள்ளனவாம் நம்மால் தான் அடிக்கிற வெயிலில் அலைய முடியவில்லை.

மேலும் ECR சாலை அமைந்துள்ள ஊர்களான சின்ன ஆவுடையார் கோயில், புதுப்பட்டினம், மல்லிப்பட்டினம் ஆகிய ஊர்களிலும் குளங்களில் தண்ணீர் நிறைந்து காணப்படுவதுடம் குளியலுக்கும் பயன்பட்டு வருகின்றன.

நாம் பார்த்த வகையில், கடற்கரை தெரு வெட்டிக்குளம் துவங்கி மல்லிப்பட்டினம் வரை கடற்கரையை ஒட்டியுள்ள குளங்களில் மட்டும் நீர் நிறைந்து காணப்படுவதன் காரணம் என்னவாக இருக்கும்?  மக்களின் பொறுப்புணர்வா? கடற்கரையை ஒட்டியுள்ள அந்த மண்ணின் தன்மையா?

அதேபோல் நமது ஊருக்குள் குளங்கள் வறண்டு போக காரணமென்ன? மக்களின் அலட்சியமா? மின் மோட்டார்கள் வைத்து சரமாரியாக நிலத்தடி நீரை உறிஞ்சுவதாலா? அல்லது அரசின் புறக்கணிப்பா?

காரணம் எதுவாக இருந்தாலும் சரியே, இருக்கும் குளங்கள் கோடைவாசக் குளங்களாக திகழ்கின்றன என்பதில் மாற்றமில்லை.

களத்தொகுப்பு
அதிரை அமீன்
வெட்டிக்குளத்திற்கு குளிக்க வரும் இளைஞர் ஜமாஅத்
வெட்டிக்குளம்

வெட்டிக்குளம்

வெட்டிக்குளம் அறிவிப்பு பலகை

வெட்டிக்குளம் அறிவிப்பு பலகை
செடியங் குளம்
  
செடியங்குளம்

செடியங்குளம்

வென்னீர் குட்டை

பெரிய பூச்செறி

சின்ன பூச்செறி

சின்ன பூச்செறி

குஞ்சி குளம்

உடையங்குளம்

வழுதி அம்மாள் கோவில் குளம்

சின்ன ஏரி

சின்ன ஏரி