.

Pages

Wednesday, November 25, 2020

நிவர் புயல் மழையினால் பாதிப்பு ஏற்படக்கூடிய பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் அருகிலுள்ள பாதுகாப்பு மையங்களில் தங்கிக்கொள்ள வேண்டுகோள்!

அதிரை நியூஸ்: நவ.25 
தஞ்சாவூர் மாவட்டத்தில் நிவர் புயல் மழையினால் பாதிப்பு ஏற்படக்கூடிய பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் அருகிலுள்ள பாதுகாப்பு மையங்களில் தாங்களாகவே வந்து தங்கிக் கொள்ள மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள்துறை இயக்குனருமான் என்.சுப்பையன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தஞ்சாவூர்  மாவட்டத்தில் நிவர் புயல்  மழை முன்னெச்சரிக்கை பணிகள் தொடர்பாக தஞ்சாவூர் மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள்துறை இயக்குனருமான என்.சுப்பையன், மாவட்ட ஆட்சித் தலைவர் ம.கோவிந்த ராவ் அவர்களுடன் பாபநாசம் வட்டம் களஞ்சேரியில் வெண்ணாற்றங்கரையில் இன்று (25.11.2020) நேரடியாக ஆய்வு மேற்கொண்டார்கள்.

இவ் ஆய்வின் போது மாவட்ட கண்காணிப்பு அலுவலர் தெரிவித்ததாவது:    தஞ்சாவூர் மாவட்டத்தில் நிவர் புயல் மழையினை எதிர்கொள்ள மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன குறிப்பாக மழை சேதம் மற்றும் பேரிடர் சேதங்கள் ஏற்படக்கூடிய இடங்களை முன்னரே கண்டறிந்து அப்பகுதியில் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. புயல் மழை சேதங்களை மேற்கொள்வதற்கு பேரிடர் மீட்பு குழுவினரும், தன்னார்வ  உறுப்பினர்களும், அரசு அலுவலர்களும்  தொடர்ந்து கண்காணித்து பணியாற்றி வருகின்றனர்.
 
பாபநாசம் ஒன்றியத்திற்கு உட்பட்ட களஞ்சேரியில் வெண்ணாற்றங்கரையில்  பொதுப்பணித்துறை அலுவலகத்தில்  வெள்ளத்தடுப்பு பணிக்காக மணல் முட்டைகள் மற்றும் மரம் அறுவை இயந்திரம் போன்றவைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து, பட்டுக்கோட்டை வட்டம், மதுக்கூர் ஊராட்சி ஒன்றியம் ஒலையக்குன்னம் ஊராட்சி பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள புயல் பாதுகாப்பு மையத்தினை பார்வையிட்ட மாவட்ட கண்காணிப்பு அலுவலர் அவர்கள் புயல் பாதுகாப்பு மையத்திலுள்ள மருத்துவ முகாம், சமையலறை, கழிவறை ஆகிய பகுதிகளை பார்வையிட்டு, சமையலறையில் இருப்பு வைக்கப்பட்டுள்ள தேவையான உணவு தயாரிப்புப் பொருட்கள் மற்றும் மருத்துவ முகாமில் உள்ள மருந்துகளின் கையிருப்பு குறித்து மாவட்ட கண்காணிப்பு அலுவலர் அவர்கள் கேட்டறிந்தார். தொடர்ந்துää பட்டுக்கோட்டை நசுவினியாறு மற்றும் செல்லிக்குறிச்சி ஏரியில் ஆய்வு மேற்கொண்டு தற்போதுள்ள நீர் இருப்பு, நீர்வரத்து மற்றும் வெளியேற்றப்படும் அளவு ஆகியவை குறித்து பொதுப்பணித் துறை அலுவலர்களிடம் கேட்டறிந்து தீவிர கண்காணிப்பு பணி மேற்கொள்ள அறிவுறுத்தினார்.

பொதுமக்கள் புயல் மழை நேரங்களில் வெளியே வராமல் பாதுகாப்பாக வீட்டிலேயே இருந்திட தொடர்ந்து அறிவுறுத்தப்பட்டு வருகிறது. மாவட்டத்தில்  பாதிப்பு  ஏற்படக்கூடிய  பகுதியிலுள்ள பொதுமக்களும் மற்றும் தாழ்வான  பகுதிகளில்  வசிக்கும்  மக்களையும் கண்டறிந்து 78 வெள்ள நிவாரண தடுப்பு முகாம்களில் 972 ஆண்களும் 1477 பெண்களும் 754 குழந்தைகளும் என 3203 பேர்கள் பாதுகாப்பாக தங்கவைக்கப்பட்டு அவர்களுக்கு தேவையான உணவு குடிநீர் போன்ற அத்தியாவசியமான பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. மல்லிப்பட்டினம் மீன்பிடி இறங்குதளத்தில் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட கண்காணிப்பு அலுவலர் அவர்கள் படகுகளை போதிய இடைவெளியுடன் நிறுத்துமாறு அறிவுறுத்தினார். மல்லிப்பட்டினம் மீன்பிடி இறங்கு தளத்திற்கு காரைக்காலில் இருந்து வந்துள்ள 15 மீனவர்களின் தேவைகள் குறித்து கேட்டறிந்து அதன் பின்னர், பிள்ளையார் திடல் பல்நோக்கு புயல் பாதுகாப்பு மையத்தினை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பேராவூரணி ஒன்றியம் அடைக்கதேவன் ஊராட்சியில் அம்புலியாறு நெடுகை பகுதிகளில் மீனவர்களின் படகுகள் பாதுகாப்பாக உள்ளதா என ஆய்வு செய்து பாதுகாப்பான பகுதியில் படகுகளை நிறுத்தி வைக்குமாறு அறிவுறுத்தினார்கள். 

நிவர் புயல் இன்று இரவு முதல் நாளை காலைக்குள் கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தஞ்சாவூர் மாவட்டத்தில் அதிகமான மழைப்பொழிவு எதிர்பார்க்கலாம். பாதிப்பு ஏற்படக்கூடிய பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் அருகிலுள்ள பாதுகாப்பு மையங்களில் தாங்களாகவே வந்து தங்கிக் கொள்ள வேண்டும். பாதுகாப்பு மையங்களில் பொதுமக்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை மற்றும் அத்தியாவசிய வசதிகள் செய்யப்பட்டுள்ளது.
பொதுமக்கள் தங்களின் கோரிக்கைகள் மற்றும் புகார்களை மாவட்ட ஆட்சியர் அலுவலக கட்டுப்பாட்டு அறை கட்டணமில்லா தொலைபேசி 1077 என்ற எண்ணின் மூலம் தெரிவிக்கலாம். பொதுமக்கள் எவ்வித அச்சமுமின்றி அரசின் வழிகாட்டுதலை பின்பற்ற வேண்டும். களப்பணியாளர்கள் அனைவரும் சம்பந்தப்பட்ட பகுதிகளில் முகாமிட்டு தயார் நிலையில் உள்ளனர். கடற்கரை பகுதிகளில் மாநில பேரிடர் மீட்புக்குழுவினர் தேவையான உபகரணங்களுடன் தயாராக இருக்கின்றனர். சாலைகளில் விழும் மரங்களை உடனடியாக அப்புறப்படுத்த பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறை, வேளாண் பொறியியல் துறை அலுவலர்கள் தயார் நிலையில் உள்ளனர். காற்று வீசும் பகுதிகளில் மின்சார இணைப்பு தற்காலிகமாக துண்டிக்கப்பட்டு, நிலைமை சரியான பிறகு மீண்டும் வழங்கப்படும்.

மேலும் மாவட்டத்தில் கால்நடைகளுக்கு அவசர சிகிச்சை மேற்கொள்ள ஈரோடு மற்றும் தேனியிலிருந்து கூடுதலாக 2 அம்மா ஆம்புலன்ஸ்கள் வரவழைக்கப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. கால்நடைகளுக்கு பாதிப்புகள் தொடர்பாக கட்டணமில்லா தொலைபேசி எண் 1962 தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட கண்காணிப்பு அலுவலரும் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் இயக்குனருமான என்.சுப்பையன் தெரிவித்துள்ளார்.

இவ்வாய்வின் போது பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் சி.வி.சேகர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ராமச்சந்திரன், பட்டுக்கோட்டை சார் ஆட்சியர் பாலச்சந்தர், பயிற்சி ஆட்சியர் அமித், அக்னியாறு செயற்பொறியாளர் திருமதி.கனிமொழி, சுகாதாரத்துறை இணை இயக்குனர் டாக்டர் ராமு, நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர், பட்டுக்கோட்டை வட்டாட்சியர் திருமதி தரணியா மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.