.

Pages

Saturday, April 30, 2016

வேட்புமனு ஏற்றுக்கொள்ளப்பட்ட பட்டுக்கோட்டை தொகுதி வேட்பாளர்களின் விவரங்கள் !

சட்டமன்ற தேர்தலில் பட்டுக்கோட்டை தொகுதியில் போட்டியிடும் 13 வேட்பாளர்களின் வேட்பு மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டது. வேட்பாளர்கள் குறித்த விவரங்கள் அடங்கிய பட்டியலை தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் சார் ஆட்சியர் டி.எஸ் ராஜசேகரன் இன்று மாலை வெளியிட்டார்.

இதில் தேமுதிக சார்பில் நா. செந்தில் குமார், அதிமுக சார்பில் வெ. சேகர், இந்திய தேசிய காங்கிரஸ் சார்பில் க. மகேந்திரன், பாரதிய ஜனதா கட்சி சார்பில் மு.முருகானந்தம், நாம் தமிழர் கட்சி சார்பில் கருணாநிதி ( மாற்று ), கீதா ஆகியோரும், எஸ்.டி.பி.ஐ கட்சி சார்பில் ஜெ. முஹம்மது இலியாஸ், ஜ. ஹாஜி சேக் ( மாற்று ) ஆகியோரும், பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் சி. லெட்சுமி, சிவசேனா சார்பில் சி.குபேந்திரன், தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் ஜெ.விவேகானந்தன், சுயேட்சை வேட்பாளர்களாக கா. சஞ்சய் காந்தி, செ. லெட்சுமி உள்ளிட்ட 13 வேட்பாளர்களின் வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன.


மரண அறிவிப்பு ! [ மல்லிபட்டினம் லுத்துபுல்லாஹ் அவர்கள் ]

மல்லிபட்டினம் காசிம் அப்பா தெரு HNM மளிகை பஸ்ரூல் ஹக் அவர்களின் மகனும் ஹுமாயுன் அவர்களின் சகோதரரும், அஸ்கர, நஜ்முல் ஹசன் ஆகியோரின் தகப்பனாருமாகிய லுத்துபுல்லாஹ் அவர்கள் இன்று காலை வஃபாத்தாகி விட்டார்கள்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

அன்னாரின் ஜனாஸா இன்று மாலை 5 மணியளவில் மல்லிபட்டினம் ஜும்மா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.

தஞ்சை எஸ்.பி மயில்வாகணன் பணியிட மாற்றம் !

தமிழக சட்டசபை தேர்தலை முன்னிட்டு அரசு உயர் அதிகாரிகளை தலைமை தேர்தல் கமிஷன் இடமாற்றம் செய்து வருகிறது. கடந்த வாரம் 4 மாவட்ட கலெக்டர்கள் மற்றும் 5 மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள் மாற்றம் செய்யப்பட்டனர்.

இந்த நிலையில் இன்று (சனிக்கிழமை) மேலும் 5 மாவட்ட கலெக்டர்களை மாற்றம் செய்து தலைமை தேர்தல் கமிஷன் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. இதில் தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மயில்வாகணன் மாற்றப்பட்டு அவருக்குப் பதிலாக சுதாகர் நியமிக்கப்பட்டு உள்ளார். இவர் இது வரை அம்பத்தூர் துணை கமிஷனாக பணியாற்றிவர் ஆவார்.

துபாயில் கடலுக்கு அடியில் சொகுசு வீடுகள் !

துபாயில் உலகின் மிகப்பெரிய கட்டிடம், வணிக வளாகம் மற்றும் மனிதனால் உருவாக்கப்பட்ட பேரீச்சை மரம் வடிவிலான தீவுகள் போன்ற உலகின் மிகச்சிறந்த இடங்கள் உள்ளன. இதன் காரணமாக துபாய்க்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இந்த நிலையில் மக்கள் நிலத்தில் உள்ள வீடுகளில் மட்டுமல்லாமல் இனி கடலுக்கு அடியில் தங்கும் வகையில், பிரமிக்கத்தக்க அளவில் சொகுசு வீடுகள் அமைக்கப்பட்டு வருகிறது.

துபாயை சேர்ந்த கட்டுமான நிறுவனம் ஒன்று கடலுக்கு அடியில் மக்கள் தங்கக்கூடிய வகையில் சொகுசு வீடுகளை உருவாக்கி வருகிறது. இந்த வீட்டில் மக்கள் தங்கி ஓய்வு எடுத்துக் கொள்ளும் வசதி உள்ளது. மீன்கள் சுற்றி வலம் வரக்கூடிய சூழலில் கடலுக்கு அடியில் உள்ள வீட்டில் தங்கி மகிழலாம்.

இதுகுறித்து அந்த கட்டுமான நிறுவன அதிகாரிகள் கூறியதாவது:-
இந்த சொகுசு வீடுகள், துபாய் கடல்பகுதியில் அலைகள் இல்லாத பகுதியில் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த வீட்டின் மேல் பகுதி கடல் மட்டத்தில் இருந்து வெளியே இருக்கும். வீட்டின் உள்பகுதி கடலுக்கு அடியில் இருக்கும். இந்த வீட்டுக்குள் சென்றால் நீர்மூழ்கி கப்பலில் இருப்பது போன்ற உணர்வு ஏற்படும்.

இந்த வீட்டுக்கு படகு மூலம் செல்லவேண்டும். படகில் இருந்து இறங்கி வீட்டின் மேல் பகுதி வழியாக உள்ளே சென்றால் பிரமிக்க வைக்கும் உள்பகுதியை காண முடியும். மேல்புறத்தில் இருந்து அடிப்பகுதிக்கு செல்ல படிக்கட்டுகள் அமைக்கப்பட்டிருக்கும்.

இந்த சொகுசு வீட்டுக்குள் இருக்கும் ஒவ்வொரு நிமிடமும் கடலுக்கு அடியில் வசிப்பது போல் இருக்கும். வீட்டில் இருந்தபடியே வண்ண மீன்களை பார்த்து மகிழ்ச்சி அடையலாம். மேலும் அந்த வீட்டுக்குள்ளேயே மீன்களை வளர்க்கும் வசதியும் உள்ளது. இந்த வீடுகளில் படகு போல் என்ஜின் இருக்காது. அடுப்பறை, விளையாட்டு அறை உள்ளிட்ட பல்வேறு வசதிகள் இருக்கும். இந்த வீடுகளை கடலுக்கு அடியில் அமைந்துள்ள சொகுசு வீடு என அழைக்கலாம்.

4 படுக்கை அறைகள் கொண்ட 4,004 சதுர அடி கொண்ட இந்த வீடு ஒன்றின் விலை 12 மில்லியன் திர்ஹாம் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.21 கோடியே 68 லட்சம்) ஆகும். ஏற்கனவே 60 வீடுகள் முன்பதிவு செய்யப்பட்டு விட்டன.

இந்த வீடுகள் கட்டி முடிந்ததும் விரைவில் அதன் உரிமையாளர்களுக்கு வழங்கப்படும். முதற்கட்டமாக 50 வீடுகள் வரும் அக்டோபர் மாதம் ஒப்படைக்கப்படும். இந்த வீடுகளின் உரிமையாளர்கள் 2017-ம் ஆண்டில் கடலுக்கு அடியில் அமையும் சொகுசு வீட்டில் குடியேறலாம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

வீடுகளை வாங்க முடியாதவர்களுக்கு வாடகைக்கு வழங்கவும் இந்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது. பொதுமக்களின் ஆர்வத்தை பொறுத்து 10 ஆயிரம் திர்ஹாம் முதல் 25 ஆயிரம் திர்ஹாம் வரை தினசரி வாடகையாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இந்த புதிய திட்டம் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. புதுமையான விஷயங்களை செய்வதில் துபாய் எப்பொழுதும் முன்னிலையில் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

நன்றி:மாலை மலர்

அதிரையில் வாய் பேச இயலாத - காது கேளாத நலஅறக்கட்டளை உறுப்பினர்களிடம் வேட்பாளர் செந்தில்குமார் வாக்கு சேகரிப்பு !

அதிராம்பட்டினம் ஏப்-30
தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் வாழும் மாற்றுத்திறனாளிகள் பேச இயலாத - காது கேளாதோர் நல அறக்கட்டளை உறுப்பினர்களிடம் பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதி தேமுதிக - தமாகா - மக்கள் நலக்கூட்டணி வேட்பாளர் என். செந்தில் குமார் முரசு சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற வேண்டுகோள் விடுத்தார். அப்போது நலஅறக்கட்டளைத் தலைவர் சாகுல் ஹமீது, துணைத்தலைவர் ஹாஜா ஷெரிப், பொதுச்செயலாளர் சிராஜுதீன், இணைச்செயலாளர் உமர் தம்பி, பொருளாளர் ஜெஹபர் சாதிக் உள்ளிட்ட உறுப்பினர்கள் தமிழக அரசின் இலவச பஸ் பாஸ் வழங்க வலியுறுத்தவும், நலச்சங்க ஏழை எளிய உறுப்பினர்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்க அரசை வலியுறுத்துவது உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய மனுவை வழங்கினார்கள். மனுவை பெற்றுக்கொண்டு தான் வெற்றி பெற்று சட்டமன்ற தொகுதி வேட்பாளராக தேர்வு ஆனால் இரண்டு கோரிக்கைகளும் நிறைவேற்றும் முயற்சியில் ஈடுபடுவேன் என வாக்குறுதி அளித்தார்.

அப்போது தமாகா அதிரை பேரூர் தலைவர் எம்எம்எஸ் அப்துல் கரீம், தமாகா தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளர் அதிரை மைதீன், தமாகா மாவட்ட செயற்குழு உறுப்பினர் சிங்கார வேலு, மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் பொன்னம்பலம், அக்பர் சுல்தான் ( தேமுதிக ), காளிதாஸ் (இந்திய கம்யூ), உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
 
 
 
 
 
 

AFFA முதல் நாள் ஆட்டத்தில் நாகூர் அணி அபாரம் !

அதிராம்பட்டினம் ஏப்-30
அதிரை ப்ரெண்ட்ஸ் ஃபுட் பால் அசோசியேஷன் [ AFFA ] நடத்தும் 13 ஆம் ஆண்டு மாபெரும் எழுவர் கால்பந்து தொடர் போட்டி இன்று [ 29-04-2016 ] மாலை 5 மணியளவில் நமதூர் ஷிஃபா மருத்துவமனை எதிரே அமைந்துள்ள கிராணி மைதானத்தில் துவங்கியது.

இன்றைய முதல் ஆட்டத்தில் நாகூர் அணியினரும், பாலு மெம்மரியல் திருச்சி அணியினரும் மோதினர். விறுவிறுப்பாக நடைபெற்ற ஆட்ட இறுதியில் நாகூர் அணியை சேர்ந்த பக்கர் முதல் கோலை அடித்து தனது அணி வெற்றிபெற உதவினார். ஆட்ட இறுதியில் 3-0 என்ற கணக்கில் கோல் அடித்து நாகூர் அணியினர் வெற்றிபெற்றனர்.

முன்னதாக சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட தமிழக அரசின் கோட்டை அமீர் விருது பெற்ற எம்.பி அபூபக்கர் முதல் நாள் ஆட்டத்தை தொடங்கி வைத்தார். காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் மஹபூப் அலி, AFFA நிர்வாகிகள் சமியுல்லாஹ், அபுல் ஹசன் சாதுலி, அஹமது அனஸ், சேக் தம்பி, அஸ்ரப், பாருக், தாரிக், கால்பந்தாட்ட பயிற்சியாளர்கள் அன்வர் அலி, லியாகத் அலி ஆகியோர் வீரர்களுக்கு கைகுலுக்கி வாழ்த்து தெரிவித்து இன்றைய முதல் ஆட்டத்தை துவக்கி வைத்தனர்.

நிகழ்ச்சிகள் அனைத்தையும் எஸ்.ஐ.எஸ் முஹம்மது தொகுத்து வழங்கினார். ஆட்ட அம்பயராக வாசு தேவனும், அவருக்கு உதவியாக ஷபானுதீன் ஆகியோர் சிறப்பாக பணிபுரிந்தனர்.

முதல் ஆட்டத்தைக்காண ஏராளமான விளையாட்டுப் பிரியர்கள் மற்றும் பொதுமக்கள் மைதானத்திற்கு திரளாக வருகை தந்து ரசித்தனர். இன்று இரண்டு ஆட்டங்கள் நடைபெற இருக்கிறது. இதில் முதல் ஆட்டமாக பட்டுக்கோட்டை அணியினரோடு மேலநத்தம் அணியினரும், இரண்டாவது ஆட்டமாக பி அணியினரோடு, அட்ட்திவெட்டி அணியினர் மோத இருப்பதாக நிர்வாகிகள் தெரிவித்தனர்.

நாளைய ஆட்டம் சரியாக மாலை 4.45 மணிக்கு துவங்கும் என அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது. இந்த தொடரில் சாதனை நிகழ்த்தும் சிறந்த கால்பந்தாட்ட வீரர்களுக்கு சிறப்பு பரிசுகளை பல்வேறு நிறுவனங்கள் வழங்க காத்திருக்கின்றன.

பட்டுக்கோட்டை தொகுதி திமுக தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்களாக அதிரை சேர்மன் உள்ளிட்ட 11 பேர் நியமனம் !

சட்டப்பேரவை தேர்தல் தொகுதி வாரியாக திமுக தேர்தல் பணிக்குழு பட்டியல் விவரங்கள் திமுக தலைமையகம் இன்று காலை அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதில் அதிரை பேரூராட்சி பெருந்தலைவர் எஸ்.ஹெச் அஸ்லம் உள்ளிட்ட 11 பேர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

பட்டுக்கோட்டை சட்டப்பேரவை தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்களாக திமுக தஞ்சை ஒருங்கிணைந்த மாவட்ட முன்னாள் அவைத்தலைவர் மிசா. அப்துல் சமது, பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதி முன்னாள் உறுப்பினர் ஏனாதி பாலசுப்பிரமணியம், பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதி முன்னாள் உறுப்பினர் கா. அண்ணாதுரை, திமுக பட்டுக்கோட்டை நகர பொறுப்பாளர் தங்க. மனோகரன், அதிரை பேரூராட்சி பெருந்தலைவர் எஸ்.ஹெச் அஸ்லம், தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் லண்டன் கோவிந்தராசு, திமுக மதுக்கூர் ஒன்றிய செயலாளர் ஆர். இளங்கோவன், பட்டுக்கோட்டை கிழக்கு ஒன்றிய செயலளார் என்.பி பார்த்திபன், பட்டுக்கோட்டை மேற்கு ஒன்றிய செயலளார் பா. இராமநாதன், மதுக்கூர் பேரூர் செயலாளர் பி.ஆர் ராஜாகோபால், அதிரை பேரூர் செயலாளர் இராம. குணசேகரன் ஆகியோர் நியமனம் செய்து அறிவிப்பு வெளிடப்பட்டுள்ளது.

Friday, April 29, 2016

பாஸ்போர்ட் கேட்டு விண்ணப்பித்த 24 மணி நேரத்தில் வீட்டில் டெலிவரி !

பாஸ்போர்ட் கேட்டு விண்ணப்பித்த 24 மணி நேரத்தில் வீட்டில் டெலிவரி செய்யும் அளவுக்கு பாஸ்போர்ட் துறையின் சேவை பெரும் முன்னேற்றம் அடைந்துள்ளது.

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அருகேயுள்ள கீழத் திருப்பாலக்குடி கிராமத்தைச் சேர்ந்த 6 வயது சிறுவன் கவின். இவனது பெற்றோருக்கு ஏற் கெனவே பாஸ்போர்ட் உள்ளது. மகனுக்கும் பாஸ்போர்ட் எடுக்க முடிவு செய்தனர். ஆன்லைன் மூலம் விண்ணப்பித்தனர். விண்ணப்பத் துடன் சிறுவனின் பிறப்புச் சான்றி தழ், பெற்றோரின் பாஸ்போர்ட் நகல் போன்ற ஆவணங்களை பதிவேற்றம் செய்தனர்.

தஞ்சாவூரில் உள்ள பாஸ்போர்ட் சேவை மையத்தில் கடந்த ஏப்ரல் 15-ம் தேதி வெள்ளிக்கிழமை காலை 9.30 மணிக்கு நேர்காணலுக்காக நேரம் கிடைத்தது. சிறுவனும், பெற்றோரும் 15-ம் தேதி காலை 10 மணிக்கு பாஸ்போர்ட் சேவை மையத்துக்குள் நுழைந்தனர். அசல் ஆவணங்கள் சரிபார்த்தல், சிறுவனின் கைரேகை பதிவு, புகைப்படம் எடுத்தல், அதிகாரிக ளுடன் நேர்காணல் என அடுத்தடுத்த 4 கவுன்ட்டர்களுக்குச் சென்றனர். எல்லா நடைமுறைகளும் 30 நிமிடங்களிலேயே முடிந்துவிட்டன.

காலை 10.30 மணிக்கு சேவை மையத்தை விட்டு வெளியே வந்தனர். ‘பாஸ்போர்ட் சேவை மையத்துக்கு வருகை தந்தமைக் காக நன்றி’ என்ற குறுந்தகவல் ஏற்கெனவே பதிவு செய்யப்பட்டி ருந்த பெற்றோரின் செல்போன் எண்ணுக்கு காலை 10.31 மணிக்கு வந்தது. ‘காவல் துறை விசாரணை தேவையில்லை என்ற அடிப்படை யில் உங்கள் விண்ணப்பம் ஏற்றுக் கொள்ளப்பட்டது’ என்ற குறுந் தகவல் காலை 10.35 மணிக்கு வந்தது.

‘பாஸ்போர்ட் அச்சிடுவதற்கான நடவடிக்கைகள் தொடங்கிவிட்டன’ என்ற மற்றொரு குறுந்தகவல் காலை 11.02 மணிக்கு வந்தது. ‘பாஸ்போர்ட் அச்சிடும் பணி முடிந்துவிட்டது’ என்ற குறுந்தகவல் மதியம் 1.30 மணிக்கு கிடைத்தது. அதாவது பாஸ்போர்ட் சேவை மையத்துக்கு சென்று விண்ணப்பித்துவிட்டு, வீடு வந்து சேருவதற்குள் பாஸ்போர்ட் அச்சிடப்பட்டுவிட்டது.

‘அடுத்து விரைவு தபால் சேவை மூலம் உங்கள் பாஸ்போர்ட் அனுப்பப்பட்டு விட்டது’ என்ற குறுந்தகவல் மாலை 6.30 மணிக்கு கிடைத்தது. மறுநாள் காலை சுமார் 11 மணிக்கு வீட்டில் பாஸ்போர்ட் டெலிவரி செய்யப்பட்டுவிட்டது.

விண்ணப்பித்த 24 மணி நேரத் தில் வீட்டிலேயே பாஸ்போர்ட் டெலிவரி செய்யப்பட்ட இந்த நிகழ்வானது சிறுவன் கவின் குடும்பத்தாரை மட்டுமின்றி, இதனை அறிந்த அந்த கிராமத்தினர் அனைவரையும் பெரும் வியப்பில் ஆழ்த்தியது. பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பித்து மாதக்கணக்கில் காத்திருந்த காலம் மாறி, 24 மணி நேரத்தில் வீட்டுக்கே பாஸ்போர்ட் கிடைக்கும் அளவுக்கு ஏற்பட்டுள்ள இந்த முன்னேற்றமே அவர்களது வியப்புக்கு காரணம்.

இந்த முன்னேற்றம் எவ்வாறு சாத்தியமானது என்பது குறித்து திருச்சி மண்டல பாஸ்போர்ட் அதிகாரி எஸ்.லிங்கசாமி கூறியதாவது:

கணினிமயம்

பாஸ்போர்ட் அலுவலக செயல் பாடுகள் அனைத்தும் 100 சதவீதம் கணினிமயமாக்கப்பட்டதுதான் விரைவான சேவைக்கான முதல் காரணம். இதன் காரணமாக நிலுவையில் உள்ள விண்ணப்பங்கள் பெருமளவில் குறைக்கப்பட்டுவிட்டன. இதனால் விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டு, காவல் துறை விசாரணை அறிக்கையும் கிடைக்கப் பெற்றால் உடனே பாஸ்போர்ட் விநியோகம் செய்ய முடியும் என்ற நிலை தற்போது ஏற்பட்டுள்ளது.

பிறப்புச் சான்று, முகவரிச் சான்று போன்ற அசல் ஆவணங்கள் எவ்வித வில்லங்கமும் இன்றி மிகச் சரியாக இருந்தால், பாஸ்போர்ட் சேவை மையத்துக்கு அழைக்கப்படும் அதே தினத்தில் அவர்கள் விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்படும். காவல் துறை விசாரணை தேவையில்லாத விண்ணப்பங்களுக்கு அன்றைய தினமே பாஸ்போர்ட் அச்சிடப்பட்டு, அடுத்த நாளோ அல்லது அதற்கு மறுநாளோ விண்ணப்பதாரருக்கு பாஸ்போர்ட் கிடைத்துவிடும். காவல் துறை விசாரணை தேவை எனில், பாஸ்போர்ட் விண்ணப்பம் ஏற்கப்படும் அதே வினாடியில் சம்பந்தப்பட்ட மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் அலுவலகத்துக்கு விண்ணப்பதாரர் பற்றிய தகவல்கள் ஆன்லைன் மூலம் சென்றுவிடும். அங்கிருந்து காவல் நிலையத்துக்கு தகவல்கள் அனுப்பப்பட்டு, காவல் துறையினர் விண்ணப்பதாரரின் இருப்பிடத்துக்கு சென்று விசாரணை செய்து, அறிக்கை அனுப்புவார்கள்.

21 நாட்கள்

காவல் துறையினரின் இந்த நடைமுறைகள் முடிய அதிக பட்சம் 21 நாட்கள் ஆகும். காவல் துறை அறிக்கை எங்களுக்கு கிடைத் தவுடன், அடுத்த ஓரிரு நாட்களில் பாஸ்போர்ட் அச்சிடப்பட்டு, விண்ணப்பதாரருக்கு கிடைத்து விடும்.

ஆக, பாஸ்போர்ட் சேவை மையத்துக்கு செல்லும்போது தேவையான அனைத்து அசல் ஆவணங்களையும் மிகச் சரியாக விண்ணப்பதாரர்கள் சமர்ப்பித்தால், எங்களால் மிக விரைவில் பாஸ்போர்ட் விநியோகம் செய்ய முடியும். திருச்சி மண்டலத்தில் கடந்த மார்ச் மாதத்தில் மட்டும் 19 ஆயிரத்து 832 பேர் பாஸ்போர்ட் கேட்டு விண்ணப்பித்தனர். அவர் களில் 18 ஆயிரத்து 256 பேருக்கு பாஸ்போர்ட் விநியோகம் செய்யப் பட்டுவிட்டது.

சாதாரண முறையிலேயே பாஸ் போர்ட் மிக விரைவாக கிடைத்து விடுவதால், தத்கால் திட்டத்தில் விண்ணப்பிப்போரின் எண்ணிக்கை மிகவும் குறைந்துவிட்டது. இவ்வாறு அவர் கூறினார்.

நன்றி: தி தமிழ் இந்து

ஜித்தா கிரிக்கெட் போட்டியில் டெல்லியை வீழ்த்தி அய்டா வெற்றி!

சவூதி அரேபியா ஜித்தாவில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில் டெல்லி அணியை வீழ்த்தி அதிரை அய்டா கோப்பையை கைபற்றியது.

இந்தியா ஃபெடர்னிட்டி ஃபாரம் சார்பில் ஜித்தாவில் இன்று காலை கிரிக்கெட் போட்டி நடத்தப்பட்டது.  முதல் சுற்றில் காயல் அணியை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு அதிரையின் அய்டா அணி தகுதி பெற்றது.

பின்பு டெல்லி அணியுடன் இறுதிப் போட்டியை சந்தித்த அய்டா அணி, மிகச்சிறப்பாக ஆடி வெற்றிபெற்று கோப்பையை கைபற்றியது.

ஜித்தா வாழ் அதிரை வீரர்கள் சிறப்பாக ஆடி அனைவரது பாராட்டையும் பெற்றனர்.

வாக்காளர்களுக்கு பணமோ, பொருளோ வழங்கினால் புகார் தெரிவிக்க வேண்டிய அலைப்பேசி எண்கள் !

அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளிடம் தேர்தல் செலவினங்கள் மற்றும் தேர்தல் நடத்தை  விதி மீறல்கள் குறித்து கருத்துக்கேட்பு கூட்டம் 27-04-2016 மற்றும் 28-04-2016 ஆகிய இரு தினங்களில் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் தேர்தல் நடத்தை விதிகளின்படி அனைத்து அரசியல் கட்சிகள் செயல்பாடுகள் மற்றும் தேர்தல் செலவின கண்காணிப்பு குழுக்களின் பணிகள் குறித்தும் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள், மற்றும் குழுக்களில் நியமிக்கப்பட்ட பொறுப்பு அலுவலர்கள் ஆகியோருடன் தனித்தனியே கருத்துக் கேட்புக் கூட்டம் தஞ்சாவூர் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் டாக்டர்,என்,சுப்பையன். அவர்கள் தலைமையில் நடத்தப்பட்டது. கருத்துக்கேட்பு கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு,என்,எம்,மயில்வாகணன் அவர்கள் உடனிருந்தார்,

மேற்படி கருத்து கேட்புக் கூட்டத்தில் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள 8 சட்ட மன்றத் தொகுதிகளிலும். தேர்தல் நடத்தை விதிமுறைகளை அனைத்து கட்சிகளும் கடைப்பிடித்து. அதன்படி நடந்துகொள்ள அறிவுறுத்தப்பட்டது, இந்திய  தேர்தல் ஆணையத்தால் தஞ்சாவூர் மாவட்டத்திற்கு நியமனம் செய்யப்பட்ட மத்திய தேர்தல் பொது மேற்பார்வையாளர்கள்  மற்றும் தேர்தல் செலவின மேற்பார்வையாளர்கள் தேர்தல் குறித்த நடவடிக்கைகளை கண்காணித்து வருகிறார்கள் என தெரிவிக்கப்பட்டது,

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள 8 சட்ட மன்றத் தொகுதிகளிலும் 100 % நேர்மையாக தேர்தல் நடைபெறுவதற்காக தேர்தலின் போது வாக்காளர்களுக்கு பணமோ. பொருளோ வழங்குவதாக தெரியவந்தால் பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சியினர் கீழ்க்கண்ட அலைபேசி எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் என்,சுப்பையன் அவர்களால் தெரிவிக்கப்பட்டது,

பறக்கும்படை நிலையான கண்காணிப்பு குழு
1 170-திருவிடைமருதூர் 83000 23842 83000 23851
2 171-கும்பகோணம்  83000 23843 83000 23852
3 172-பாபநாசம் 83000 23844 83000 23853
4 173-திருவையாறு 83000 23845 83000 23854
5 174-தஞ்சாவூர்  83000 23846 83000 23855
6 175-ஒரத்தநாடு 83000 23847 83000 23856
7 176-பட்டுக்கோட்டை 83000 23849 83000 23857
8 177-பேராவூரணி 83000 23850 83000 23859

1 தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக தேர்தல் கட்டுப்பாட்டு அறை
(இலவச தொலைபேசி எண்கள் 1800 425 7036 & 1077 )
2 வாட்ஸ்ஆப் மு்லம் தொடர்பு கொள்ள 83000 23880
3 தஞ்சாவூர் மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை 83000 71100

தேர்தல் பொது பார்வையாளர்கள் அலைபேசி எண்,
1 170-திருவிடைமருதூர் திரு,லதங்குயா சைலோ. 9489009474
2 171-கும்பகோணம்
3 172-பாபநாசம் திரு,எல்,ஆர்,கார்க். 9489009478
4 173-திருவையாறு
5 174-தஞ்சாவூர் திரு,சியாம் நாராயன் திரிபாதி. 9489009480
6 175-ஒரத்தநாடு திரு,சியாம் நாராயன் திரிபாதி. 9489009480
7 176-பட்டுக்கோட்டை திருமதி,கவிதா சிங். 9489009483
8 177-பேராவூரணி திருமதி,கவிதா சிங். 9489009483

அரசியல் கட்சியினர் மற்றும் பொது மக்கள் தேர்தல் தொடர்பான நடத்தை விதிமீறல்கள் மற்றும் புகார்களை மேற்காஹணும் தொலைபேசி எண்களில் தெரிவித்தால். உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் என்,சுப்பையன். அவர்கள் தெரிவித்தார்.
 

விரைந்து செல்லும் பறக்கும் படை சிறப்பு வாகனங்கள்: மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டு ஆய்வு !

சட்டமன்ற தேர்தலையொட்டி தஞ்சை மாவட்டத்தில் எட்டு சட்டமன்ற தொகுதிகளுக்கும் விரைந்து செல்லும் பறக்கும் படை சிறப்பு வாகனங்கள் பயன்படுத்த உள்ளது. இவற்றை மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான டாக்டர் என். சுப்பையன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அருகில் வட்டார போக்குவரத்து ஆய்வாளர் விஜயகுமார் உள்ளார்.

அதிரையில் AFFA நடத்தும் கால்பந்தாட்ட தொடர் போட்டி இன்று முதல் துவக்கம் !

அதிராம்பட்டினம் ஏப்-29
தஞ்சை மாவட்டம், அதிரை பிரண்ட்ஸ் ஃபுட்பால் அசோசியேஷன் ( AFFA ) நடத்தும் 13 ஆம் ஆண்டு மாநில அளவிலான தலை சிறந்த அணிகள் பங்கு பெரும் மாபெரும் எழுவர் கால்பந்தாட்ட தொடர் போட்டி இன்று மாலை 4.30 மணிக்கு அதிரை ஷிஃபா மருத்துவமனை எதிரே அமைந்துள்ள விளையாட்டு மைதானத்தில் தொடங்க உள்ளது.

முதல் நாள் ஆட்டத்தில் திருச்சி பாலு மெம்மேரியல் அணியும், நாகூர் அணியினரும் மோத உள்ளனர். தமிழக அரசின் கோட்டை அமீர் விருது பெற்ற எம்.பி அபூபக்கர் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு முதல் ஆட்டத்தை தொடங்கி வைக்க உள்ளார். மேலும் ஊர் பிரமுகர்கள், விளையாட்டு வீரர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொள்ள இருக்கின்றனர்.

இன்று முதல் தொடர்ந்து 16 நாட்கள் நடைபெற உள்ள தொடர் போட்டியின் ஆட்டங்களை தொடர்ந்து வருகை தந்து கண்டுகளிக்குமாறு கால்பந்தாட்ட போட்டியை ஏற்று நடத்தும் அதிரை பிரண்ட்ஸ் ஃபுட்பால் அசோசியேஷன் ( AFFA ) சார்பில் அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறது. 

அதிரையில் 7 மணி நேர மின் தடையால் பொதுமக்கள் அவதி !

அதிராம்பட்டினம் ஏப்-29
தஞ்சை மாவட்டம், அதிராம்பட்டினம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளுக்கு மதுக்கூர் வாடியக்காடு 33 கே.வி.ஏ துணை மின் நிலையத்தின் மின் பாதை வழியாக மின்சாரம் வழங்கப்படுகிறது. இந்நிலையில் நேற்று இரவு 11.20 மணியளவில் மின் பாதையில் ஏற்பட்ட திடீர் பழுதால் சுமார் 7 மணி நேரம் மின் தடை ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகினர். மீண்டும் காலை 6.10 மணியளவில் மின் இணைப்பு வழங்கப்பட்டது. இரவு நேர மின்தடையால் முதியவர்கள், நோயாளிகள், குழந்தைகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகினர்.

அதிரை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது. மேலும் குறைந்த மின்னழுத்த மின்சாரம் வழங்கப்படுகிறது. இதனால் வீடுகளில் பயன்படுத்திவரும் குளிர்சாதனப் பெட்டி, ஏர்கண்டிஷன், குடிநீர் மின்மோட்டார், கிரைன்டர் உள்ளிட்ட மின்சாதனங்கள் இயங்குவதில்லை. இந்த பகுதிகளில் திடீர் மின்தடை ஏற்படாமலும், சீரான மின்சாரம் வழங்கவும் மின்வாரியம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Thursday, April 28, 2016

மரண அறிவிப்பு [ ஹாஜிமா நபிஸா அம்மாள் அவர்கள் ]

நடுத்தெரு மர்ஹும் செ.மு.மீ.மு முகைதீன் அப்துல் காதர் அவர்களின் மகளும், ஹாஜி மீ.மு செய்யது உதுமான் அவர்களின் மனைவியும், எம். ஐ அப்துல் ஜப்பார் அவர்களின் மாமியாரும், சாகுல் ஹமீது அவர்களின் பெரிய தாயாரும், பைசல் அஹமது அவர்களின் தாயாருமாகிய ஹாஜிமா நபிஸா அம்மாள் அவர்கள் இன்று மாலை சிஎம்பி லேன் கல்லுகொல்லை இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

அன்னாரின் ஜனாஸா நாளை ( 29-04-2016 ) காலை 8 மணியளவில் தக்வா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டும்.

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.

பணி ஓய்வு பெற்ற இமாம் ஷாஃபி மெட்ரிக். பள்ளி முதல்வர் ஆஃப்தா பேகத்திற்கு பாராட்டு !

அதிராம்பட்டினம் ஏப்-28
தஞ்சை மாவட்டம், அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப்பள்ளியில் கடந்த 1980 ஆம் ஆண்டும் முதல் ஆசிரியையாக பணியாற்றியவர் ஆஃப்தா பேகம். இவர் காதிர் முகைதீன் கல்லூரியில் பணியாற்றி ஓய்வு பெற்ற பேராசிரியர் பர்கத் அவர்களின் துணைவியார் ஆவார்.  கடந்த ஆண்டுகளாக பள்ளியின் முதல்வராக சிறப்பாக பணியாற்றி வந்தார். இந்த நிலையில் கடந்த 27-04-2016 அன்று பள்ளியிலிருந்து பணி ஓய்வு பெற்றார். இவரது சிறப்பான பணியை பாராட்டி பள்ளி நிர்வாகம் - பெற்றோர் ஆசிரியர் கழகம் மற்றும் பள்ளி பணியாளர்கள் சார்பில் பாராட்டு விழா நிகழ்ச்சி நடந்தது.

நிகழ்ச்சிக்கு பள்ளி மூத்த முதல்வர் பர்கத் தலைமை வகித்தார். பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக பொறுப்பாளர்கள் ஓகேஎம் சிபஹத்துல்லா, முஹம்மது சலீம், பேராசிரியை எம்.ஏ தஸ்லீமா மற்றும் பள்ளி ஆசிரியர்கள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் பள்ளி ஆசிரியர்கள் - பெற்றோர் ஆசிரியர் கழக பொறுப்பாளர்கள் பள்ளி முதல்வர் ஆஃப்தா பேகம் பள்ளியில் பணிபுரிந்த காலத்தில் ஆற்றிய கல்வி பணிகள் குறித்து எடுத்துரைத்தனர். மேலும் பள்ளி நிர்வாகம், பெற்றோர் ஆசிரியர் கழகம் மற்றும் பள்ளி பணியாளர்கள் சார்பில் நினைவு பரிசுகள் வழங்கி கெளரவிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியர்கள், அலுவலக பணியாளர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
 

மரண அறிவிப்பு [ M.O முஹம்மது அபூபக்கர் அவர்கள் ]

சிஎம்பி லேன் பகுதி சேகனா வீட்டைச் சேர்ந்த சேகனா அவர்களின் பேரனும், மர்ஹும் மு.அ முஹம்மது உமர் அவர்களின் மகனும், ஹாஜி முஹம்மூது அலி அவர்களின் மருமகனும், முஹம்மது காமில் அவர்களின் மாமனாரும், அகமது அலி, முஹம்மது ஹசன் ஆகியோரின் மைத்துனரும், அஹமது ஹாஜி, செய்யது முஹம்மது புஹாரி, தாஜுதீன், அபுல் ஹசன் சாதுலி ஆகியோரின் சகோதரரும், முகமது உமர் அவர்களின் தகப்பனாருமாகிய M.O முஹம்மது அபூபக்கர் வர்கள் இன்று அதிகாலை வஃபாத்தாகி விட்டார்கள்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

அன்னாரின் ஜனாஸா இன்று மஹ்ரிப் தொழுதவுடன் மரைக்கா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டும்.

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.

Wednesday, April 27, 2016

சீட் ஒதுக்காததால் அதிரை பாருக் அதிருப்தி !

இந்திய தேசிய காங்கிரஸின் நீண்டகால பொருளாதார மற்றும் அரசியல் ஆலோசகரான நான் உங்களுக்கெல்லாம் சில விளக்கங்களை கூறவே அவசரமாக இந்த தகவல்களை வெளியிடவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுவிட்டது என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

மாண்புமிகு, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் அவர்களிடம் 25.04.2016 அன்று காலை 07.41 மணிக்கு அவரது செல்லில் தொடர்பு கொண்டு சில விளக்கங்களை கேட்டவகையில் பட்டுக்கோட்டை மற்றும் சில தொகுதிகளில் இப்படி சில சூழ்நிலை உருவாகிவிட்டது. உங்களுடைய வருத்தம் எனக்கு புரிகிறது. நீங்கள் வருத்தப்படவேண்டாம். வழக்கம்போல் உங்களது கட்சி பணிகளில் நல்லபடியாக செயல்படுங்கள் என்பதாக என்னிடம் கனிவுடன் கூறினார்கள். மற்ற விஷயங்களை நான் இங்கே குறிப்பிட விரும்பவில்லை. கட்சி எனக்கு தந்த 5000 ரூபாயை கடந்த 17.02.2016 அன்று விருப்பமனுவுடன் சேர்த்து சத்தியமூர்த்திபவனில் செலுத்தினேன். அதன்பின் 24.02.2016 அன்று தஞ்சையில் நடக்கும் நேர்காணலில் கலந்து கொள்ளுமாறு மாநிலத்தலைவர் அவர்களிடமிருந்து எனக்கு தகவல் வந்தது. அடுத்து தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் உயர்திரு. டி.கிருஷ்ணசாமி வாண்டையார் அவர்களிடமிருந்தும் 23.02.2016 அன்று தகவல் வந்தது. காங். மேலிட பார்வையாளர் ஜனாப் எஸ்.எம்.ஹிதாயத்துல்லா மற்றும் மாவட்டத்தலைவர் முன்னிலையில் நடந்த நேர்காணலில் நான் பங்கேற்ற போது மற்றவர்களிடம் கேட்டது போல் என்னிடம் எவ்வளவு செலவழிப்பீர்கள் என்று கேட்கவில்லை. கேட்க கூடாது என்ற மேலிட உத்தரவால் அவர் என்னிடம் கேட்கவில்லை. தொகுதி நிலவரம் பற்றி மட்டுமே என்னிடம் கேட்டார்.

இந்தநிலையில் முக்கிய தகவலை உங்களுக்கெல்லாம் தெரிவிக்க விரும்புகிறேன்.

இந்த தேர்தலில் காங்கிரஸ் தனித்துவிடப்படும் எனவும், திமுக-வை சீண்டவே ஆளில்லை எனவும், கேலியும் கிண்டலுமாக பத்திரிக்கைகள் எழுதிக்கொண்டிருந்ததை கூர்ந்து கவனித்த எனக்கு மூன்று ஆண்டுகளாக தொடர்பில்லாத திமுக-வையும் காங்கிரசையும், தேமுதிக-வையும் இணைப்பதற்கான ஒரு கூட்டணி முயற்சியை உடனடியாக துவங்குமாறு 05.02.2016 அன்று மாண்புமிகு.காங்கிரஸ் தலைவர் திருமதி.சோனியாகாந்தி அவர்களுக்கும், துணைத்தலைவர் திரு.ராகுல் அவர்களுக்கும் முதல்முதலாக தெரிவித்தேன். அதில் கூட்டணி பேச்சுவார்த்தை தொடர்பாகவும் தேவையான புள்ளி விபரங்களை தெரிவித்திருந்தேன். இது தமிழகத்தில் உள்ள எல்லா அரசியல் கட்சிகளிலும் பரப்பரப்பாக பேசக்கூடிய செய்தியானது. இந்த தொகுதியில் நான் போட்டியிட விரும்பவதை கடந்த அக்டோபர் மாதத்திலிருந்து என்னுடைய நோட்டீசுகள் மூலமாக தெரிவித்து வந்தேன். முக்கிய கட்சிகளுக்கும், இமெயில் மூலம் எனது தகவல்கள் அனுப்பப்பட்டன. இந்த தொகுதியும் நான் விரும்பியபடி காங்கிரசுக்காக பெறப்பட்டது. கட்சி பொறுப்பேற்றுக்கொண்டால் நான் போட்டியிடுவேன். எனக்காக மட்டுமின்றி கூட்டணி வேட்பாளர்களுக்காகவும் மற்ற தொகுதிகளிலும் பிரச்சாரம் செய்வேன் என்ற தகவல்கள் எல்லாம் முன்கூட்டியே என்னிடமிருந்து காங்கிரஸ் கமிட்டிக்கு சென்றுவிட்டது. இந்த நிலையில் தொகுதியை ஏன் காங்கிரசுக்கு கொடுத்தீர்கள் என சமூக வளைதளத்தில் செய்தியை ஓடவிட்டதும் அதை நகர திமுக-வினர் கண்டிக்காததும் காங்கிரஸ்காரர்களிடம் வருத்தத்தை ஏற்படுத்திவிட்டது.

கூட்டணியை உருவாக்கி கொடுத்தவருக்கே குழிபறிக்கும் வேலையில் திட்டமிட்டு செயல்படுவதாக செய்திகள் பரவின. இதைவிட கொடுரம் ஆரம்பத்திலேயே என்னுடைய பெயர் காங்கிரசில் இந்த தொகுதிக்கு தேர்வு செய்யப்பட உள்ளது என்பதை தெரிந்தும் சில இயக்கங்கள் சகிப்புத்தன்மை இல்லாமலும் இன உணர்வு இல்லாமலும் தொகுதியை எங்களுக்கு தாருங்கள் என்று திமுகவிடமும் காங்கிரஸ் கட்சியிடமும் பேசிய விபரங்களும் எனக்கு தெரியவந்தது. பண உணர்வு முன்னிலையில் இருக்கும்போது இன உணர்வு காணாமல் போய்விடும். நயவஞ்சகமும், நம்பிக்கை துரோகமும் நன்றி மறத்தலும் பொதுவாழ்விலும் குடும்ப வாழ்விலும் அரசியலிலும் வெற்றி பெற்றதாக சரித்திரமே இல்லை. வேட்பாளர் தேர்வு (41 இடங்கள்) காங்கிரஸ் தொண்டர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு என்னுடைய பணிவான வேண்டுகோள் என்னவென்றால் அநாவசியமாக கற்பனையில் தேவையில்லாமல் பணத்தை செலவழிக்க வேண்டாம் என்பது தான். 17.04.2016 மற்றும் 21.04.2016 அன்று மாண்புமிகு. காங்கிரஸ் தலைவர் மற்றும் காங்கிரஸ் துணைத்தலைவருக்கு ஆங்கிலத்தில் முக்கிய தகவல்கள் சென்றுள்ளன. இதுவரை எனக்கு ஆதரவளித்த காங்கிரஸ் தலைவர்களுக்கும் 1990 முதல் என்னுடைய ஆலோசனைகளை ஏற்று செயல்படுத்திய முக்கிய அமைச்சகங்களுக்கும் என்னுடைய திட்டங்களுக்காக அடுத்தடுத்து எனக்கு பல கடிதங்கள் அனுப்பிய மரியாதைக்குரிய முன்னாள் பிரதமர்.டாக்டா.மன்மோகன்சிங் அவர்களுக்கும் என்னோடு கடிததொடர்பில் இருந்த முன்னாள் கப்பல்துறை அமைச்சர் திரு.ஜி.கே.வாசன் அவர்களுக்கு, முன்னாள் காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள் திரு.கே.வி.தங்கபாலு அவர்களுக்கும், திரு.ஞானதேசிகன் அவர்களுக்கும், இதே பொறுப்பில் ஏற்கனவே இருந்த திரு. ஜி.கே.வாசன் அவர்களுக்கும் எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

அரசியலில் தொடர்வதா ? அரவிந்த் கெஜிரிவால் அவர்களுக்கு ஆலோசகராக செல்வதா ? மத்திய அரசின் முக்கிய நிர்வாகங்களுக்கு ஆலோசகராக செல்வதா ? இந்த தேர்தலில் சுயேட்சையாக போட்டியிடுவதா ? என்பதை 29.04.2016-க்குள் நானே முடிவு செய்வேன். கட்சியில் இனிமேல் கோஷ்டி இல்லை திறமையானவர்களும் சீட் பெறலாம். பணம் முக்கியத்துவம் இல்லை என்றெல்லாம் அறிக்கை கொடுத்துவிட்டு 27 பேரை தேர்வு குழுவில் நியமித்து தொண்டர்கள் விரும்பாத செயல்கள் அதிகமாக காங்கிரஸ் கட்சியில் தொடர்ந்து நிகழ்கின்றன.

இளைஞர் காங்கிரஸ் - இளைஞர்கள் எல்லாம் எங்கே இருக்கிறார்கள் என்பதை புரிந்துகொள்ளாமல் இதைப்பற்றி நாம் பேசிக்கொண்டிருக்கிறோம். பெரும்பாலான இளைஞர்கள் சூப்பர் ஸ்டார் ரஜினி ரசிகர்களாகவும், கேப்டன் விஜயகாந்த் ரசிகர்களாகவும், விஜய், அஜித், கமலஹாசன், விக்ரம் மற்றும் சிவகார்த்திகேயன் ரசிகர்களாக உள்ளனர். அதிகமாக நான் எழுத விரும்பவில்லை. இறைவன் உதவியால் என்னுடைய எதிர்காலத்தை எப்படி அமைத்துக்கொள்வது என்பது எனக்கு தெரியும். ஆறு ஆண்டுகள் 1980 முதல் 1986 வரை சவுதி அரேபியாவில் பணியிலிருந்தபோதே நான் பணத்திற்கு முக்கியத்துவம் கொடுக்காதவன். மற்ற விபரங்களை இன்ஷா அல்லாஹ் பிறகு தெரிவிக்கின்றேன்.
அறிவிக்கப்பட்ட எந்த வேட்பாளர்களும் எனக்கு வேண்டாதவர்கள் அல்ல. புதியவர்களுக்கும் திறமையானவர்களுக்கும் இனிமேல் காங்கிரஸ் கட்சியில் எந்தகாலத்திலும் முக்கியத்துவம் இருக்காது என்பதால் என்னுடைய முடிவை நானே எடுத்துக்கொள்கிறேன்.

ஏ. பாருக், 
செயலாளர், அதிரை
இந்திய தேசிய காங்கிரஸ் 
68 காலியார் தெரு, அதிராம்பட்டினம் - 614 701. 
பட்டுக்கோட்டை வட்டம், தஞ்சாவூர் 

அஜ்மானில் பூமி நாளையொட்டி மரம் நடும் நிகழ்ச்சி !

அஜ்மானில் பூமி நாளையொட்டி மரம் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.
அஜ்மானில் கிரீன் குளோப் மாணவர்கள் அமைப்பின் சார்பில் பூமி நாளையொட்டி மரம் நடும் விழா மற்றும் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிக்கு கிரீன் குளோப் மாணவர் அமைப்பின் தலைவர் ஹுமைத் அபுபபக்கர் தலைமை வகித்தார். அவர் பூமி நாள் குறித்தும், மாணவர்கள் சுற்றுச்சூழலை பாதுகாக்க மரம் நடுதல் உள்ளிட்ட பல்வேறு பணிகளையும் மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தினார். குறிப்பாக வீட்டில் தோட்டங்களை அமைத்து வீட்டுக்கு தேவையான காய்கறிகளை நாமே உற்பத்தி செய்து கொள்ளும் வாய்ப்புள்ளது. இதனை அனைவரும் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்றார்.

இந்த நிகழ்ச்சி நடைபெற்ற ஓட்டல் ஒன்றின் தோட்டத்தில் நடைபெற்றது. அந்த ஓட்டல் நிர்வாகிகள் மாணவர்களின் இந்த பணிகளை பாராட்டினர். மிகவும் இளம் வயதில் இத்தகைய பணிகளில் ஈடுபட்டு வருவது பாராட்டுக்குரியது என தெரிவித்தனர். இந்த நிகழ்ச்சியில் 30-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.