.

Pages

Wednesday, April 13, 2016

என்றும் மறக்க இயலாத இசைமுரசு நாகூர் இ.எம் ஹனிபா !

உலகில் பிறந்த  அனைவருமே இறக்கக் கூடியவர்கள்தான். ஆனால் இறந்தாலும் நினைவில் நிற்பவர்கள் நம்முடைய தாய், தந்தை மற்றும் சில முக்கிய  உறவினர்களாக இருப்பார்கள்.

நமது நினைவலைகளில் அடிக்கடி அவர்களது முகங்களும் நம்மோடு அவர்கள் வாழ்ந்த நாட்களில் நிகழ்ந்த சம்பவங்களும் வந்து போகும். அத்தகையவர்கள் விரும்பி உண்ணும் உணவைக் காணும்போதும், அவர்கள் தந்த பரிசுப் பொருள்களை  நாம் பயன்படுத்தும்போதும்  அவர்களது நினைவு நமது நெஞ்சில் எழுவதும் இயல்பே.

கடந்த வருடம் இவ்வுலகைவிட்டு மறைந்த இசைமுரசு  நாகூர் இ எம் ஹனிபா அவர்களுடைய நினைவு நமக்கு அன்றாடம் ஏற்படும் வகையில் அவர் பல இசைமுத்திரைகளை நமது இதயங்களில் குத்திவிட்டுப் போயிருக்கிறார். அவர் பாடிய பாடல்கள் தேநீர்க்கடைகளில் , பேருந்துகளில் , ஆட்டோ முதலிய இதர வாகனங்களில் அன்றாடம் ஒலிப்பதை நாம் மறுக்க முடியாது. மேலும் இன்றைய அலைபேசிகளில், பலர் ,  இசைமுரசு அவர்களின் பாடல்களை அழைப்பிசைகீதமாக வைத்திருப்பதையும் நாம் மறுக்க முடியாது. இவற்றின்  காரணமாக  இசைமுரசு அவர்களின் நினைவலைகள் ஒரு நாளைக்கு பல முறைகள் நமக்கு ஏற்படுவதையும் நாம் ஒப்புக் கொண்டே ஆகவேண்டும்.  

1952 ஆம் ஆண்டில் அச்சடிக்கப்பட்ட ஒரு நோட்டீசைக் காணும் வாய்ப்பு 1967 ஆம் ஆண்டு எனக்குக் கிடைத்தது.

அந்த நோட்டீஸ் பட்டுக் கோட்டை காசாங்குளம் வடகரையில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுக் கூட்டத்துக்கான அறிவிப்பாகும்.  சிறப்புப் பேச்சாளர் திருவாரூர் மு. கருணாநிதி என்றும் இயக்கப் பாடல்கள் நாகூர் இ. எம் ஹனிபா  என்றும் அச்சிடப்பட்டு இருந்தது. அந்தக் கூட்டம் நடைபெற்ற காலம் ,  பராசக்தி திரைப்படம் வெளியான காலம்.

மெல்ல மெல்ல கலைஞர் புகழ் பெறத் தொடங்கிய காலம். அந்த நேரத்தில் அவரோடு இணைந்து பட்டி தொட்டி எங்கும் தனது திராவிட இயக்கப்பாடல்களைப் பாடி புகழ்பெறத் தொடங்கியவர்தான் இசை முரசு.
1952 க்கும் 1967 க்கும் இடைப்பட்ட காலத்தில் கருணாநிதி கலைஞர் கருணாநிதியாகவும் நாகூர் ஹனிபா இசை முரசு இ எம் ஹனிபாவாகவும் புகழ் பரிணாமம் பெற்று விளங்கத் தொடங்கிவிட்டார்கள்.

1967  ஆம் ஆண்டு தேர்தல் பிரச்சாரத்தில் , ஓடி வருகிறான் உதய சூரியன் உள்ளமெல்லாம் இன்ப வெள்ளம் பொங்கிட ஓடி வருகிறான் உதய சூரியன் என்று நாகூர் ஹனிபாவின் குரல் ஒலிக்காத ஊர்களே  தமிழ் நாட்டில் இல்லை. குதிரை வண்டிகளில்  ஒலிபெருக்கிகளைக் கட்டிக் கொண்டு அந்தப் பாடலை இசைக்கச் செய்து தெருவெங்கும் தேர்தல் பிரச்சாரம் நடக்கும். அந்தப் பாட்டைக் கேட்டுக் கொண்டே குதிரை வண்டிக்குப் பின்னால் நடந்துகொண்டே திமுகவுக்காக, “ காகிதப்பூ மணக்காது காங்கிரஸ் சமதர்மம் இனிக்காது” போன்ற வாசகங்கள் தாங்கிய துண்டுப் பிரசுரங்களை வழங்கிச் செல்வார்கள்.

அரசியலில் இது ஒரு பக்கம் என்றால் ஆன்மீகத்திலும் சமூகத்திலும்  அதிராம் பட்டினத்துக்கும் இ எம் ஹனிபா அவர்களுக்கும் இருந்த இணைப்பு ஒரு வரலாறாக ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் நன்றியுடன் அவரால் நினைவு கூறப்படும்.

அப்போதெல்லாம் அதிரைக் கடைத்தெரு சந்திப்பு அதாவது மெயின்ரோடு புதுத்தெரு ரோடு தக்வாப் பள்ளி செல்லும் ரோடு ஆகியவற்றின் சந்திப்பில் சீப் சைடு என்கிற அன்றைய ஹைபர்மால் இருந்த இடத்தில் வருடந்தோறும் ஒவ்வொரு ஹஜ்ஜுப் பெருநாள் மாலையும் இஷாத் தொழுகைக்குப் பிறகு இசை முரசு அவர்களின் இன்னிசைக் கச்சேரி நடைபெறும். இந்த நிகழ்ச்சியைக் கடைத்தெரு வியாபாரப் பெருமக்கள் பொறுப்பேற்று நடத்துவார்கள்.

அன்றைய நட்சத்திர  கால்பந்தாட்ட வீரராக அதிரையில் வலம் வந்த ஜமால் காக்கா  அவர்கள் வீட்டில் நடைபெறும் ஒவ்வொரு நிகழ்ச்சிகளிலும் இசைமுரசு அவர்கள் இன்னிசை நிகழ்ச்சி நடத்தி இருக்கிறார்கள். ஊரில் நடக்கும் கந்தூரிகளும் விதிவிலக்கு அல்ல.  

எப்போது , எங்கு நிகழ்ச்சி நடைபெற்றாலும்  நிகழ்ச்சியைத் தொடங்கும் முன்பே அதிரையைச் சேர்ந்த அவரது முன்னேற்றத்துக்குக் காரணமான தனது முன்னாள் நண்பர்களுக்கு நன்றி கூறியே  நிகழ்வைத் தொடங்குவார். அவர்களில்  M.A.M.  பாட்சா மரைக்காயர் அவர்கள் “கோடை இடி” என்று கால்பந்தாட்டக் களத்தில் அறியப்பட்ட முகமது காசிம் பாய் அவர்கள் கால்பந்தாட்ட வீரர்  S S M  குல் முகமது ஆகியவர்களைக் குறிப்பிடுவார். இவர்கள் மூவருமே இன்று நம்மிடையே இல்லை. இன்னாளில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

இசை முரசு அவர்கள் பாடிய பல பாடல்கள் அரசியலிலும் ஆன்மீகத்திலும்சமூகத்திலும் சமுதாயத்திலும்  பல தாக்கங்களை ஏற்படுத்தி இருக்கின்றன.

“ இறைவனிடம் கையேந்துங்கள்”  என்கிற  பாடல் ஒரு இஸ்லாமியர் என்றுதான் இல்லை . எந்த மதத்தினரும் பாடும் வகையில் அமைந்தவை அந்தப் பாடல் வரிகள். “அல்லல் படும் மாந்தர்களே அயராதீர்கள் அல்லாஹ்வின் பேரருளை நம்பி நில்லுங்கள்” என்ற வரி அந்தப் பாடலில் வரும்வரை அந்தப் பாடல் ஒரு முஸ்லிம்களுக்கான  பாட்டு என்று யாருக்கும் தெரியாது. அல்லாஹ்வின் பேரருள்  என்று வருகின்ற வரிகளை மாதாவின் பேரருளை நம்பி நில்லுங்கள்  என்று மாற்றிப் பாடிய சகோதர மதத்தவர்களும் வேளாங்கண்ணி போன்ற ஊர்களில் இருக்கவே செய்தார்கள்.        

"நீ கொடுத்ததற்கே நன்றி சொல்ல முடியவில்லை இன்னும் இதில் அடுத்தடுத்து கேட்பதற்கு அஞ்சுதே என் உள்ளம் யா அல்லாஹ்".

"கோமானே! சீமானே”
அருள் மழை பொழிவாய் ரகுமானே!
"எங்கும் நிறைந்தோனே  இருகரம் ஏந்துகிறேன் அல்லாஹ்
என்றெல்லாம் அவர் பாடிய பாடல்களைக் கேட்போர் தங்களின் துயரங்களைத் தாங்களே இறைவனிடம் முறையிடுவதாகவே உணர்ந்தனர்.

“தூக்கத்திலும் உன்னை யோசிக்கிறேன் – என்
துயரத்திலும் உன்னை நேசிக்கிறேன்
தூயவனே உன்னை துதிக்கிறேன் – உன்
துணையே கதியாய் நினைக்கிறேன்.
ஆசையுடன் உன்னை நாடுகிறேன்- அந்த
ஆர்வத்திலேதான் பாடுகிறேன்
இறைவா! உன்னைத் தேடுகிறேன் –அந்த
ஏக்கத்திலேதான் பாடுகிறேன் .

– என்ற பாடலை மதங்களை மீறி  முணுமுணுக்காத உதடுகளே இல்லை.
“பாலைவனத்தில் ஒரு ரோஜா மலர்ந்தது ! இந்தப் பாருலகெங்கும் பூமணம் வீசுது !“ என்று பெருமானார் ( ஸல்) அவர்களைப்பற்றி பாடிய பாடலை மதங்களைக் கடந்தும் உதடுகள் முணுமுணுத்தன.

படிப்பினைகளை எளிய முறையில் பாமரர்க்கும் சொல்லிய விதத்தில் அமைந்த “ பிஸ்மில்லாஹ் என்று ஆரம்பம் செய்யுங்கள் “ , “ எல்லா நோய்க்கும் மருந்துண்டு குர் ஆனிலே “ என்ற பாடல்களும் “ அல்லாஹு அக்பர் என்று முழங்கும் அழகிய தலமே  பள்ளிவாசல் ! “ போன்ற பாடல்களும் ஈர்க்காத நெஞ்சங்களை எல்லாம் ஈர்த்தன.

"காண கண் கோடி வேண்டும் காபாவை"என்ற பாடல்,   ஹஜ் கடமையின் முழுச்  செயல்பாடுகளையும்  வரிசைப் படுத்தி நமது கண் முன் காட்சியாக விரியவைக்கும்.

வரலாற்று நிகழ்வுகளை சொல்லும் வகையில் அமைந்த “ பெரியார்  பிலாலின் தியாக வாழ்வைக் கூறுவேன் இதோ! “ போன்ற பாடல்களும் “ “பைத்துல் முக்கத்தஸ்”  போன்ற  பாடல்களும் பெரும் புரிந்துணர்வையும்  தாக்கங்களையும்  ஏற்படுத்தின. பிற மத சகோதர்களும் எளிதில் புரிந்து கொள்ளும்  விதத்தில் அவை அமைந்து சிறந்தன.

பெண்களுக்கு அறிவுரைகள் சொல்லும் விதத்தில் அமைந்த “ கண்ணுக்கு இமை போன்ற பெண்ணே! நகக் கண்பார்த்து நீ நடக்க வேண்டும் !  “ என்கிற பாடலும் குழந்தைகளுக்குப் பாடமாக அமையும் வண்ணம் “ பாங்கின் ஓசை கேட்கும் நேரம் பாப்பா எழுந்திரு கண்ணே பாப்பா எழுந்திரு ! காலை பஜ்ருத் தொழுது இறையை வணங்கி பாடம் படித்திடு “ என்கிற பாடலும் படிப்பினைகளை பந்திக்குக் கொண்டுவைத்த பாடல் விருந்துகள்.

பெங்களூர் ரமணி அம்மாள் என்பவர் ஒரு புகழ்வாய்ந்த  பக்திப் பாடகி. அவர் பாடிய , பால் மணக்குது பழம் மணக்குது என்கிற பாடல் அந்தக் காலத்தில் மிகவும் புகழ் பெற்ற பாடலாகும். அந்தப் பாடலைத் தழுவி , “அருள் மணக்குது! அறம் மணக்குது! அரபு நாட்டிலே” என்ற  பாடலைப் பாடினார். அந்தப் பாடலில் ,
“எல்லோருக்கும் ஏற்ற வழி
எம்மதமும் போற்றும் வழி
அல்லாஹ் உந்தன் அன்பு வழி
அமைத்தவர் யாராம் அண்ணல் நபிகள் நாதராம்
அவர் பிறந்து வந்தாராம் – கண்களைத்
திறந்து வைத்தாராம். “ என்ற   நெற்றியடியான அந்தப்பாடலின் வரிகளை இலகுவாக மறக்க இயலாது. கண்களைத் திறந்து வைத்தாராம் என வரிகளை உச்சரிக்கும் போது அவர் குரலில் கொடுத்த அழுத்தம் இதயங்களில் இசை மூலம் இஸ்லாத்தின் ஆணியை  அடித்தது.

" பொன்மொழி கேளாயோ நபிகளின் பொன்மொழி கேளாயோ ... "
என்ற பாடலில்
" வாழ்க்கையிலே ஒருபோதும் நீ வட்டி வாங்காதே
என்றுரைத்தார் “ என்று பாடி வட்டியை சாடினார்.
"திருமறையின் அருள் நெறியில் விளைந்திருப்பதென்ன "
என்ற பாடலில் இஸ்லாத்தின் ஐம்பெரும் கடமைகளை அனைவருக்ம் விளங்க அழகாகக் கூறினார்.

“அல்லாஹூ! அல்லாஹூ ! எல்லாம் உன் செயல் அல்லாஹூ !  என்ற  இனிய பாடலில் ...
" அலைகடலும் சூரியனும்
அருமைக் காற்றும் பெருமழையும்
இரவு நேரத்திலே வானில்
அலையும் விண்மீன் கூட்டங்களும்
எல்லையில்லா உந்தன் புகழை
என்றும் சொல்லும் உண்மை இதுதான்
எல்லாம் உன் செயல் அல்லாஹு ..."
எல்லாமே அவன் செயல் என்பதை எத்தனை இனிமையாக மக்கள் மனங்களில் பதிய வைத்தார்.

கவலைகளாலும் கஷ்டங்களாலும் சோர்ந்து போன இதயங்களுக்கு இ எம் ஹனிபாவின், “  ஒரு கையில் இறை வேதம்!  மறு கையில் நபி போதம் இருக்கையில் உனக்கென்ன தயக்கம் ? கண்களில் ஏன்  இந்த கலக்கம்? “ என்ற பாடல் தன்னம்பிக்கையை ஊட்டியது.  

அழைப்புப்பணி என்கிற நற்பணிக்கு இ எம் ஹனிபா அவர்களின் பாடல்கள், உதவி, பிற மத சகோதரர்களின் இதயங்களில்  பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியதை மறுக்க இயலாது. “ விதவைக்கு மணம் வேண்டும் என்றார்! விக்கிரக ஆராதனை கூடாதென்றார்! மது,  சூது,  கொலை, களவு,  காமம், கொடும் வட்டியும் வாங்காதீர் என்றுரைத்தார் “ என்று தாயிப் நகரவீதியிலே என்று தொடங்கும் பாடலில் வரும் வரிகள் இஸ்லாத்தின் இனிய கொள்கைகளை எடுத்துரைத்தன. பல இதயங்களில் வேரூன்றின.

கடைய நல்லூரைச் சேர்ந்த ஆறுமுகம் என்கிற ஒரு ஆட்டோ ஓட்டும் தொழிலாளி இஸ்லாத்தைத் தழுவினார். அவரது ஆட்டோவில் எப்போதும் முழங்குவது இ எம் ஹனிபாவின் பாடல்கள்தான் . அவரை இஸ்லாத்தை தழுவும்படி தூண்டிய செயல் எது என்று பத்திரிகையாளர்கள் வினவியபோது அவர் சொன்னது , “ பகைவர்களையும் மன்னிக்கும் தன்மையுடைய பெருமானார் ( ஸல் ) அவர்களின் மாண்பை விளக்கும் இ எம் ஹனிபா பாடிய , “அதிகாலை நேரம் சுபுஹுக்குப் பின்னே”  என்கிற பாடல் என்னை மிகவும் சிந்திக்கத் தூண்டியது. அதுவே நான் இஸ்லாத்தைத் தழுவ காரணமாயிற்று “ என்றார்.

ஆஸ்கார் பரிசுபெற்ற  ஏ ஆர் ரஹ்மான் ஆஸ்கார் விருது வாங்கியவுடன் சொன்ன முதல் வார்த்தை "எல்லாப் புகழும் இறைவனுக்கு ".என்பதுதான்.
இ. எம். ஹனிபா அவர்கள் அன்றே இதை எல்லோரும் கூறும் வண்ணம் பாடி வைத்தார்.

“ எல்லாப்புகழும் இறைவனுக்கு அல்லாஹ் ஒருவனே துணை நமக்கு “ என்ற அவரது பாடல் ஒரு பரிசுத்தமான ஈமானை விளக்கிய பாடல் ஆகும்.

இன்று திமுகவின் பிரசார பீரங்கிகளாய் ஆயிரம் பேர் வந்தாலும் பட்டி தொட்டியெல்லாம் "கல்லக்குடி கொண்ட கருணாநிதி வாழ்கவே!  "பாடல் தொடங்கி , ஆறிலும் சாவு ! நூறிலும் சாவு! அஞ்சாமல் ஓடிவா! அண்ணாவின் வழியில் பொன்னான கலைஞர்  அழைக்கிறார் ஓடிவா ! என்றெல்லாம்   பல கொள்கை முழக்கப்  பாடலைப் பாடி திமுகவை வளர்த்தவர்.

தமிழ் மீது தீராத பற்று கொண்ட இசைமுரசு பாடிய "பாண்டியர் ஊஞ்சலில் ஆடி வளர்ந்த பைந்தமிழ் அணங்கே! "என்ற பாடல் தமிழ் மொழியின் சிறப்பை விளக்கும்.

அண்ணா அவர்கள் மறைந்த நேரத்தில் “தமிழ் இருக்கும் திசை எல்லாம் தேடுகிறேன் உன்னை ! எங்கே சென்றாய்? எங்கே சென்றாய்? எங்களை ஏங்கவிட்டு எங்கே சென்றாய் ? “  என்று பாடி,  அண்ணா இறந்த போது துன்ப உணர்வு கொண்ட  பலரின் உணர்வுகளை தனது குரலால்   வெளிப்படுத்தினார்.  
திமுக ஒன்றாக இருந்த காலத்தில் எம்ஜியாரைப் பற்றி
எங்கள் வீட்டுப் பிள்ளை ! ஏழைகளின் தோழன் !
தங்க குணம் கொண்ட  எங்கள் மன்னன்
மக்கள் திலகம்  எங்கள் எம்ஜியார்  அண்ணன் – என்று பாடினார்.
ஆனால்  எம்ஜியார்  திமுகவில் இருந்து விலக்கப்பட்டபோது – அதன்பின் அதிமுக என்று புதிய கட்சி கண்டபோது ,
“வளர்த்த கடா மார்பில் பாய்ந்ததடா!
வஞ்சகரின் சூழ்ச்சியிலே வீழ்ந்ததடா! சாய்ந்ததடா! ” என்று சாடினார்.

முஸ்லிம்கள் வகுப்புவாதிகள் என்று அன்றைய ஜனசங்கவாதிகள் – இன்றைய பிஜேபியினர்- கூறியபோது இந்திய சுதந்திரத்துக்காக  முஸ்லிம்கள் செய்த தியாகங்களைப் பட்டியலிட்டு
“இதுதான் நாங்க செய்த துரோகமா? இல்லை
நீங்கள் சொல்லும் வகுப்புவாதமா? “
என்று சரித்திர சான்றுகளோடு சாட்டையடி கொடுத்தார். அதுமட்டுமா?
“ ஈட்டியின் முனையில் நிறுத்தியபோதும்
ஈமான் இழக்க மாட்டோம்
காட்டிக் கொடுத்திடும் கயவர்கள் தம்மை
கனவிலும் விட மாட்டோம் .
எல்லாம் இயன்ற ஏகனுக்கல்லால்
எவருக்கும் அஞ்ச மாட்டோம்
நல்ல நம் நாட்டு நன்றியை மறந்து
நழுவியே ஓட மாட்டோம் ...”
என்பது ஐம்பது வருடங்களுக்கு முன்னால் சிம்மக் குரலில் இசைமுரசு ஹனிபா அவர்கள்  எழுப்பிய கொள்கை முழக்கமாகும்.

ஓரிரு  திரைப்படங்களில் மட்டும்  பலரின் வேண்டுகோளுக்கு இணங்க பாடினார். பாவமன்னிப்பு என்ற படத்தில் எல்லோரும் கொண்டாடுவோம் என்ற பாடலின் தொடக்கத்தில் இசை முரசு அவர்கள் முழங்கும் பாங்கொலி பலரை ஈர்த்தது. பிற மதத்தவர்கள் ,  அதன் பொருளைக் கேட்டுத் தெரிந்து கொண்ட செய்திகளெல்லாம் உள்ளன.

கலைஞர் முதல்வராக இருந்த போது தமிழ்நாடு வக்பு வாரியத்தலைவராக சிலகாலம் பணியாற்றினார். வாணியம்பாடி தொகுதியில்  திமுகவின் சார்பில் சட்டமன்ற உறுப்பினருக்கான இடைத் தேர்தலில் போட்டி இட்டு வெற்றி வாய்ப்பை இழந்தார். சிலகாலம் தமிழக மேலவை உறுப்பினராகவும் பணியாற்றினார்.

மத நல்லிணக்கத்தின் அடையாளமாகத் திகழ்ந்தவர்  இசைமுரசு. அவரது குரல் அடங்கி இருக்கலாம். அவர் வாழ்ந்தகாலத்தில் அவரது குரல் சாதித்த சாதனைகள் ஏராளம். அவரது பாடல்களைப் பற்றி ஒரு தரப்பில் விமர்சனங்கள் இருக்கலாம். ஆனாலும் அனைத்தையும் மீறி அவர் மீது ஈர்ப்பு  இருப்பதை மறுக்க இயலாது. அல்லாஹ் அவரை பொருந்திக் கொள்வானாக!

இசைமுரசு அவர்கள் மறைந்து ஓராண்டு ஆனாலும் இறைவனிடம் இசைமுரசுக்காக கை ஏந்துவோம் ! அவன் இல்லை என்று சொல்வதில்லை. பொறுமையுடன் கேட்டுப் பார்ப்போம் அவன் பொக்கிஷத்தை மூடுவதில்லை.

இப்ராஹீம் அன்சாரி 
கல்லூரி முதல்வர் 
எழுத்தாளர்  
சமூக ஆர்வலர்

2 comments:

  1. அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.

    ReplyDelete
  2. பதிவுக்கு நன்றி.

    பதிவுக்கு நன்றி என்று சாதாரணமாக சொன்னால்! அது போதாது என்றே தோனுகிறது.

    பதிவு என்பது பலவகைகளாக இருந்தாலும், ஒரு சில பதிவுகள் காலத்தால் மறக்கவும் முடியாது, அதை மறைக்கவும் முடியாது.

    அப்பேற்பட்ட பதிவுதான் இந்தப் பதிவு. இதன் சாராம்சத்தை பார்க்கும்போது, ஒரு மகத்துவம் விளங்குகிறது. விளங்கிய மகத்துவத்தை நம் வாழ்விலும் கொண்டு வர இதை படித்தவர்கள் அனைவரும் கொண்டுவர முயற்சிக்க வேண்டும்.

    என்ன முயற்ச்சித்தாலும், இன்னும் ஒரு பிறவி பிறந்தாலும், அது அவர் போல் வருமா?

    அது ஒருக்காலும், வராது, நடக்காது, இருக்காது.

    ஒவ்வொருவருக்கும் ஒரு தனித்துவம் இருக்குது, அந்த வகையில் அன்னார் மர்ஹூம் நாகூர் இ.எம். ஹனிபா அவர்களுக்கு உள்ள தனித்துவம் வேறு யாருக்கும் அமையாது.

    இது உண்மை.

    K.M.A. Jamal Mohamed.
    President – PKT Taluk.
    National Consumer Protection Service Centre.
    State Executive Member of TN
    Adirampattinam-614701.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.