.

Pages

Thursday, February 7, 2013

சுகாதார இணை இயக்குனர் மற்றும் போக்குவரத்துக் கழக வணிக மேலாளர் ஆகியோருடன் AAMF’ன் நிர்வாகிகள் சந்திப்பு !

நமதூர் பொது நலன் தொடர்பான மூன்று முக்கிய பிரச்சனைகளை வலியுறுத்தி கடந்த [ 22-01-2013 ] அன்று சம்சுல் இஸ்லாம் சங்கத்தில் கூட்டப்பட்ட சிறப்புக்கூட்டத்தில் பேசப்பட்டது. அந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின் படி சம்பந்தப்பட்ட அலுவலர்களை விரைவில் அணுகி துரித நடவடிக்கை எடுக்க வலியுறுத்துவது என்று முடிவு செய்யப்பட்டது.

அதன் படி மூன்று கோரிக்கைகள் அடங்கிய தனிததனி மனுக்கள் தயாரிக்கப்பட்டு கடந்த [ 04-02-2013 ] அன்று தஞ்சை மாவட்ட ஆட்சியரை நேரடியாக அணுகி துரித நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் AAMF'ன் சார்பாக அன்புடன் கேட்டுக்கொள்ளப்பட்டது.

இதன் தொடர்ச்சியாக மாவட்ட ஆட்சியர் அவர்களின் பரிந்துரையின் அடிப்படையில் இன்று [ 07-02-2013 ] காலை 9 மணியளவில் AAMF'ன் சார்பாக அதன் செயலாளர் பேராசிரியர் M.A. முஹம்மது அப்துல் காதர் அவர்களோடு சேக்கனா M. நிஜாம், S.M.A. அஹமது கபீர், S.S. சேக்தாவூது உள்ளிட்ட AAMF'ன் நிர்வாகிகள் கும்பகோணம் சென்று சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களை தனித்தனியாக சந்தித்து நமதூர் பொது நலன் தொடர்பான முக்கிய பிரச்சனைகளை அவர்களிடம் எடுத்துக்கூறி உடனடி நடவடிக்கை எடுக்க AAMF'ன் சார்பாக அன்புடன் கேட்டுக்கொள்ளப்பட்டது.
முதல் கோரிக்கை :

சந்திப்பு :
சுகாதார இணை இயக்குனர்
கும்பகோணம்
தஞ்சை மாவட்டம்

பொருள் : அதிராம்பட்டினம் அரசு மருத்துவமனையில் கூடுதல் மருத்துவர்கள் மற்றும் 24 மணி நேர சேவை வசதி செய்து தருவது தொடர்பாக. 

ஐயா,
சேது பெருவழிச்சாலையில் அமையப்பெற்றுள்ள ஊர்களில் அதிராம்பட்டினமும் ஒன்று. ஏறக்குறைய அறுபதாயிரம் மக்கள் தொகையைக் கொண்டு வாழ்கின்ற இவ்வூரைச் சுற்றி ஏரிப்புறக்கரை, ராஜாமடம், மகிளங்கோட்டை, தொக்காலிக்காடு, பழஞ்சூர், மளவேனிக்காடு, நடுவிக்காடு, விலாரிக்காடு, உள்ளூர் புதுக்கோட்டை, மாளியக்காடு, சென்டாக்கோட்டை, பள்ளிகொண்டான், முதல் சேரி, நரசிங்கபுரம், போன்ற கிராமகங்களை உள்ளடக்கிய பகுதிகளைக் கொண்டுள்ளது. இரவு நேரத்தில் நோய்வாய்ப்பட்டவர்களுக்கு மருத்துவ முதலுதவி என்பது பெரும் குறையாகவே காணப்பட்டு வருகின்றது.  மருத்துவர்களும் இரவு நேரங்களில் கண் விழித்து நோயாளிகளுக்கு சிகிச்சை மேற்கொள்வது என்பது அரிதாகவே இருகின்றது. இதற்காக அவசர . மருத்துவத்திற்காக பெரும் சிரமத்துடன் தொலைதூரத்தில் உள்ள குறிப்பாக திருச்சி, தஞ்சை, கும்பகோணம், மன்னார்குடி, பட்டுக்கோட்டை போன்ற ஊர்களுக்கு செல்லக்கூடிய சூழ்நிலை ஏற்பட்டுவிடுகின்றன. அதோடு மட்டுமல்லாமல் இப்பகுதியில் அமைந்துள்ள சேது பெருவழிச்சாலையில் அடிக்கடி வாகன விபத்துகளும் நடந்து வருகின்றன. விபத்தில் பாதிக்கப்பட்டோரை நீண்ட தூரத்தில் உள்ள மருத்துவமனைக்கு எடுத்துச்செல்லும் போதே உயிர் இழப்புகளும் ஏற்பட்டு விடுகின்றன. ஆகவே இதுபோன்ற சிரமங்களை கருத்தில் கொண்டு அதிராம்பட்டினம் அரசு மருத்துவமனையில் 24 மணி நேர பணியை தொடரவும், அதற்காக கூடுதல் மருத்துவர்கள் நியமிக்கவும் ஆவன செய்யும்மாறு தங்களை அதிரை அனைத்து மஹல்லா கூட்டமைப்பு சார்பாக அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். நன்றி !
இரண்டாவது கோரிக்கை :

சந்திப்பு :
வணிக மேலாளர்
தமிழக போக்குவரத்து கழகம்
கும்பகோணம் மண்டலம்
தஞ்சை மாவட்டம்

பொருள் : பட்டுக்கோட்டை தாலுகா அதிராம்பட்டினத்திலிருந்து – மன்னார் குடிக்கும் மன்னார்குடி வழியாக கும்பகோணம் – திருவாரூர் ஆகிய ஊர்களுக்கு அரசு பேருந்து வசதி செய்து தரக்கோருதல் தொடர்பாக.

ஐயா,
கடற்கரைப்பட்டினங்களில் ஒன்றாகிய அதிராம்பட்டினத்தில் ஏறக்குறைய அறுபதாயிரம் மக்கள் தொகையைக் கொண்டு வாழ்கின்ற ஒரு தேர்வு நிலை பேரூராட்சியாகும். அதிரை மற்றும் இப்பகுதியை சுற்றி வாசிக்கக்கூடிய மக்கள் மன்னார்குடிக்கும், மன்னார்குடி வழியாக கும்பகோணம், திருவாரூர், மயிலாடுதுறை போன்ற ஊர்களுக்குச் சென்றுவர போதிய பேருந்து வசதி இல்லாமல் மிகவும் சிரமப்படுகின்றனர்.

புதிதாக தொடங்கப்பட்ட மன்னை எக்ஸ்பிரஸ் ரயிலில் சென்னைக்குப் பயணம் செய்ய வேண்டிய அதிராம்பட்டினம் ரயில் பயணிகள் உரிய நேரத்தில் பேருந்தைப் பிடித்து மன்னார்குடி செல்லவும், அதேபோல் காலையில் சென்னையில் இருந்துவரும் அதிராம்பட்டினம் பயணிகள் மன்னார்குடியில் இருந்து உரிய நேரத்தில் பேருந்து வசதி இல்லை. ஆகவே மன்னார்குடிக்கும், மன்னார்குடி வழியாக கும்பகோணம், திருவாரூர், மயிலாடுதுறை போன்ற ஊர்களுக்கு சென்றுவர இருவழி அரசு போக்குவரத்தை ஏற்பாடு செய்து தரும்படி ஆவன செய்யும்மாறு தங்களை அதிரை அனைத்து மஹல்லா கூட்டமைப்பு சார்பாக அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். நன்றி !

மூன்றாவது கோரிக்கை : 

ஊராட்சி ஒன்றியத் தலைவர் சென்னையில் இருப்பதால் கீழ் கண்ட கோரிக்கை தொடர்பாக இன்னும் சில தினங்களில் அவரைச் சந்திப்பது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஊராட்சி ஒன்றியத் தலைவர்
பட்டுக்கோட்டை ஊராட்சி ஒன்றியம்
பட்டுக்கோட்டை

பொருள் : அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் இருந்து கடைத்தெரு, கீழத்தெரு, மேலத்தெரு வழியாக மகிழங்கோட்டை வரையிலான ஊராட்சி ஒன்றிய நெடுஞ்சாலையைப் புதுபித்தல் தொடர்பாக.

ஐயா,
எங்கள் அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்திலிருந்து கடைத்தெரு, கீழத்தெரு, மேலத்தெரு வழியாக மகிழங்கோட்டை வரை செல்லும் ஊராட்சி ஒன்றிய நெடுஞ்சாலை சுமார் எட்டு ஆண்டுகளுக்கும் மேலாகி விட்டது. இந் நெடுஞ்சாலை இடையில் புதுப்பிக்கப்படாததால் மிகவும் சேதமடைந்து குண்டும் குழியுமாக ஆங்காங்கே காட்சியளிக்கின்றன. இச்சாலையில் நடந்து செல்பவர்கள் இடறி விழக்கூடிய சூழ்நிலையும் வாகனங்களில் செல்வோர் மிகவும் கஷ்டப்பட்டு பயணம் செய்யக்கூடிய சூழ்நிலையும் உள்ளது.

இச்சாலையில் பெண்கள் மற்றும் ஆண்கள் மேல்நிலைப்பள்ளிக்குச் செல்லும் மாணவ மாணவியர் உள்ளனர். வர்த்தக நிறுவனங்கள், வங்கிகள், வழிபாட்டுத்தளங்கள் ஆகியவையும் உள்ளன. மினி பஸ், கல்லூரி பேருந்து போன்ற போக்குவரத்தும் உள்ளது. ஆகவே மிக அதிகமான மக்கள் பயன்படுத்தும் ஊராட்சி ஒன்றிய எல்லைக்குட்பட்ட இச்சாலையை போதிய நிதி ஒதிக்கீடு செய்து விரைவில் புதிதாக தார்ச்சாலை அமைத்து தருமாறு தங்களை அதிரை அனைத்து மஹல்லா கூட்டமைப்பு சார்பாக அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். நன்றி !

இப்படிக்கு,
தகவல் தொடர்பாளர்
AAMF - அதிரை

7 comments:

  1. நமதூர் பொது நலன் கருதி சென்னதை செய்வோம் என்று சொந்த வேலைகளை விட்டு ஊர்க்காக பாடு படும் அனைவருக்கும் என் நன்றி வாழ்த்துகள் !!!!

    ReplyDelete
  2. பதிவுக்கு நன்றி.

    அருமையான சந்திப்பு, எதிர்பார்த்தது நிச்சயம் நடக்கும்.

    வாழ்த்துக்கள்.
    வாழ்க வளமுடன்.
    அன்புடன்.

    K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
    த.பெ. மர்ஹும். கோ.மு.முஹம்மது அலியார்.
    உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை.

    ReplyDelete
  3. மரியாதைக்குரிய பொதுச்சேவகர்களுக்கு என் மனமார்ந்த நன்றியுடன் வாழ்த்துக்கள்..!

    எவ்வித பிரதி பலனையும் எதிர்பாராமல் நமதூர் சிறப்புடனும் அனைத்து நிலையிலும் உயர்ந்திருக்க பாடுபடும் நல்லுள்ளம் படைத்த அன்புள்ளம் கொண்டவர்களுக்கு. மீண்டும் நன்றியுடன் வாழ்த்துக்கள்..!

    ReplyDelete
  4. அருமையான செய்தி சொன்னீர்கள் போங்க.இதுபோல சமூக அக்கறையில் ஈடுபடும் அனைவரையும் பாராட்ட வேண்டும். மூன்று கோரிக்கை என்பது மட்டும் அல்ல இதுபோல ஊருக்கு தேவையான பல கோரிக்கைகளை வைக்க நமதூரில் உள்ள அனைவரும் பங்கெடுக்க வேண்டும் என்பதே இச்செய்தியின் மூலம் தெரிவிக்கிறேன். இச்செய்தியை பதிந்த நண்பர்களுக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்.

    ReplyDelete
  5. சொன்னதைச் செய்தீர்; செய்வதையே சொன்னீர்
    பாராட்டுகள்; வாழ்த்துகள்!

    ReplyDelete
  6. ஊர் நலம் காக்க
    பாடுபடும் அன்பர்களுக்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.