.

Pages

Thursday, October 31, 2013

The Message ! [ Is it Story of Islam !? ]

இறைவனின் செய்தியை
மானுடர்க்கு
எத்தி வைக்க வந்தவரை
தலைவராய் ஏற்றவர்
இஸ்லாமியர்கள்

அவரை முஹம்மது [ ஸல் ]
கதாநாயகனாய் கொண்டு
படமெடுப்போர்
சினிமாக்காரர்கள்

கதாநாயகன் இல்லாது
[ காட்டாது ]
ஒரு படமென்றால்
அது மெசேஜ் மாத்திரமே

கதாநாயனை காட்டாததின்
காரணம்
இஸ்லாமியர்கள்
காட்டு காட்டி விடுவார்களே

அபூபக்கரும், உமரும்
அலியும்
இங்கே பீட்டரும், காட்டரும்
ஆல்பர்ட்டுமே

பள்ளியில் உமரைப்பற்றி [ ரலி ]
பயான் செய்ய
நம் மன கண்முன்னே
காட்டர்தான் வந்து நிற்பார்

வீர பாண்டியரை [ கட்டபொம்மன் ]
பற்றி பேசினால்
சிவாஜி தெரிவதுபோல் !

முள்ளை முள்ளால்தான்
எடுக்கவேணும்
என்பவரே ?

தைத்த முள்ளுக்கு
ஆண்டி செப்டிக்
அவசியமன்றோ

தாவா பணிக்கு
THE MESSAGE  CD
வேண்டாம் அன்பர்களே

எச்சில் துப்பும்
படிக்கனில்
பால் குடிக்காதீர்
மாந்தரே

மு.செ.மு. சபீர் அஹமது

பள்ளி அருகே வேகத்தடை ! சமூக ஆர்வலரின் ஆதங்கம் !!

அதிரை காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஆறாம் வகுப்பு முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரை சுமார் 1500 க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இப்பள்ளிக்கு செல்லும் பிரதான வழியாக ஈசிஆர் சாலை உள்ளதால் மாணவர்கள் மதிய இடைவேளையின் போதும், வகுப்புகள் முடிந்த பிறகும் அவரவர்களின் வீடுகளுக்கு செல்ல இச்சாலை வழியே கடந்து செல்கின்றனர். இச்சாலையில் செல்லும் வாகனங்களும் அசுர வேகத்தில் செல்வதால் விபத்துகள் ஏற்படுகின்றன.

இதுகுறித்து சமூக ஆர்வலர் சாகுல் ஹமீதிடம் பேசிய வகையில்...
'இந்தப்பகுதியில் கடந்த சில ஆண்டுகளில் மட்டும் அதிக எண்ணிக்கையில் விபத்துகள் நடந்துள்ளன. இந்த நான்குவழி இணைப்பு சாலையில் வேகத்தடை ஏற்படுத்தி, விபத்து பகுதி என எச்சரிக்கை பலகையையும் வைத்தால் ஓரளவு விபத்தை குறைக்கலாம்' என்கின்றார்.

இவர் சொல்வதிலும் நியாயம் இருப்பதை நாம் உணர முடிகிறது. சம்பந்தபட்ட நெடுஞ்சாலை துறையினர் மாணவர்களின் நலனில் அக்கறைகொண்டு வேகத்தடை ஏற்படுத்திக்கொடுப்பது அவசியம்.



Wednesday, October 30, 2013

புதிய வாக்காளர்கள் சேர்க்கும் பணிகளில் அதிரை கவுன்சிலர்கள் !

இந்திய தேர்தல் ஆணையத்தின் ஆணைப்படி அக்டோபர் 1-ம் தேதியிலிருந்து 31-ம் தேதி வரை வாக்காளர் சுருக்கமுறை திருத்தப் பட்டியல் முகாம் நடைபெறும் என்ற அறிவிப்பை தொடர்ந்து. இதற்கான  புதிய வாக்காளர்கள் சேர்க்கும் பணிகள் அதிரையில் நடைபெற்று வருகின்றன. இவற்றில் பதிவுசெய்ய 31-12-1995-க்கு முன்பு பிறந்தவர்களாகவும், 1-1-2014 அன்று 18 வயது நிரம்பியவர்களாகவும் இருக்க வேண்டும் என்பதால், தற்போது சேர்க்கப்பட உள்ள வாக்காளர்களையும் பட்டியலில் சேர்த்து, ஜனவரி முதல் வாரத்தில் இறுதி பட்டியல் வெளியிடப்படவுள்ளது.  மேலும், தேசிய வாக்காளர் தினமான ஜன. 25-ம் தேதி வாக்காளர்களுக்கு அடையாள அட்டையும் வழங்கப்பட உள்ளது.

இந்த பணிகளுக்காக அதிரை பேரூராட்சியின் 12 வது வார்டு உறுப்பினர் நூர்லாட்ஜ் செய்யது மற்றும் 14 வது வார்டு உறுப்பினர் முஹம்மது செரீப் ஆகியோர் அவரவர்களுக்கு உட்பட்ட வார்டுகளில் உள்ள புதிய வாக்காளர்களை சேர்க்கும் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.






அதிரையில் மத்திய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் !

இன்று மாலை 4.30 மணியளவில் அதிரை பேருந்து நிலையம் அருகே இலங்கையில் நடைபெற இருக்கிற காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா கலந்து கொள்ளக்கூடாது என வலியுறுத்தியும், தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் தொடர்ந்து தாக்கப்படுவதை தடுக்க தவறிய மத்திய அரசை கண்டித்தும் தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மாவட்ட இளைஞரணி செயலாளர் அவிசோ சேக் அப்துல்லா தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்பாட்டத்தில் ஏராளமான கழக நிர்வாகிகள் உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.



விபத்தில்லா பண்டிகை கொண்டாட மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள் !

விபத்தில்லா பண்டிகையை கொண்டாட பொதுமக்களிடம் தஞ்சை மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
 

தொழில்வரி உயர்வு குறித்து அதிரை பேரூராட்சியின் அறிவிப்பு !

அதிரை பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் பணிபுரியும் அரசு மற்றும் அரசு சார்துறை கூட்டுறவு, உள்ளாட்சி மற்றும் இதர பொது நிறுவன பணியாளர்களும், இதர வர்த்தக நிறுவனங்களும் கீழ்க்கண்ட அட்டவணைபடி தொழில்வரியை செலுத்தும்படி அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது. இந்த தொழில்வரி 25 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tuesday, October 29, 2013

அதிரை நியூஸில் விரைவில் !?


'சமூக சீர்கேட்டிற்கு காரணம் ?' 


தகவல் தொழில்நுட்பமா !?   மாறிவரும் கலாச்சாரமா !? 

என்ற இரு தலைப்புகளில் அதிரையின் பிரபல பட்டிமன்ற நகைச்சுவை பேச்சாளர்கள் இரு அணிகளாக இருந்து மோதும் சூடான விவாதங்கள் உங்கள் அதிரை நியூஸில் ! விரைவில்...

நிகழ்ச்சி தயாரிப்பு : அதிரை நியூஸ்

அதிரையில் ரோட்டரி சங்கம் நடத்திய இலவச கண் பரிசோதனை முகாம் !

அதிரை ரோட்டரி சங்கம் மற்றும் கோவை சங்கரா கண் மருத்துவமனை இணைந்து நடத்தும் மாபெரும் இலவச கண் பரிசோதனை முகாம் நமதூர் அரசினர் பெண்கள் உயர்நிலைப்பள்ளியில் கடந்த 20-10-2013 அன்று காலை 8.00 மணி முதல் மதியம் 1.00 மணி வரை நடைபெற்றது. இதில் அதிரை மற்றும் அதிரையை சுற்றி வசிக்கக்கூடிய பொதுமக்கள் கலந்துகொண்டு பயனடைந்தனர்.

முன்னதாக முகாமை அதிரை பேரூராட்சி துணைத் தலைவர் பிச்சை துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சிக்கு ரோட்டரி சங்க நிர்வாகிகள் ஹாஜா பகுருதீன், சண்முகவேல், நடராஜன் உள்ளிட்டோர் சிறப்பாக ஏற்பாடு செய்து இருந்தனர். முகாமில் கலந்துகொண்டோருக்கு வேண்டிய உதவியை N.S.S. மாணவர்கள் செய்தனர்.

Monday, October 28, 2013

சகதிகளை குடியிருப்பு பகுதியின் வழியே அள்ளிச்செல்வதை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல் !

அதிரை பேரூராட்சியின் சார்பாக 2012-2013 ஆம் ஆண்டுக்கான நபார்டு நிதி உதவி திட்டத்தின் கீழ் நடுத்தெரு வாய்க்கால் தெருவில் உள்ள செட்டியா குளத்திற்கு தடுப்பு சுவர் அமைத்தல் மற்றும் மேம்படுத்துதல் ஆகிய பணிகளுக்காக ரூபாய் 50 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டு புனரமைக்கும் பணிகள் மும்முரமாக.நடைபெற்று வருகின்றன.

செட்டியா குளத்தில் உள்ள கழிவுகளை ஜேசிபி எந்திரம் மூலம் அள்ளப்பட்டு அவற்றை டிராக்டர்கள் மூலம் தேவையான இடங்களுக்கு எடுத்துச்சென்று வருகின்றனர். இவ்வாறு எடுத்துச்செல்லும்  கழிவுகள் கீழே கொட்டுவதால் குடியிருப்பு சாலைகள் நாசமாகி வருகின்றன.

கடந்த சிலநாட்களுக்கு முன்பு அதிரையில் பெய்த தொடர் மழையால் சாலை முற்றிலும் நாசமாகியது. இதனால் அப்பாதை வழியே செல்லும் பொதுமக்கள் பலர் வழுக்கி விழும் அவலநிலை தொடர்ந்தது. கடந்த 23-10-2013 அன்று வாய்கால் தெரு குடியிருப்பு பகுதியின் வழியே டிராக்டர்கள் மூலம் கொண்டு சென்ற கழிவுகள் கீழே கொட்டி சாலைகள் முற்றிலும் நாசமாகியதை கண்டித்து அதிரை நகர த.மு.மு.க வினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இதில் ஒப்பந்தக்காரரோடு நடத்திய பேச்சுவார்த்தையில் சாலையில் கொட்டும் கழிவுகளை தினமும் மாலை வேளையில் ஊழியர்களைக்கொண்டு அப்புறப்படுத்தப்படும் என உறுதியளித்ததை அடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்

இதன் தொடர்ச்சியாக மீண்டும் இன்று மாலை 3 மணியளவில் சேர்மன் வாடி வழியாக கழிவுகள் எடுத்துசெல்லப்பட்டன. தகவலறிந்த அப்பகுதி பொதுமக்கள் திரண்டு வந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது டிராக்டர் வாகனங்களை அதிவேகமாக ஓட்டிச்செல்வது, அதிகமான கழிவுகளை ஏற்றிச்செல்வது, கழிவுகள் கீழே கொட்டிச்செல்வது ஆகியன குறித்து ஒப்பந்தக்காரர்  மற்றும் டிராக்டர் உரிமையாளரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனால் இந்தப்பகுதி முழுதும் பரப்பரப்பாக காணப்பட்டது.

நீரின்றி தவிக்கும் நம்மூரு குளங்கள் [ புகைப்படங்கள் ] !

அதிரையின் ஒவ்வொரு பகுதிகளிலும் காணப்படும் குளங்கள் ஒவ்வொன்றும் பல தலைமுறையைக் கண்டு ஒரு வரலாற்றை எடுத்துச்சொல்லும் அளவுக்கு விசேஷமானவை. இன்றும் ஏதாவது ஒரு குளத்தைக் நாம் காண நேரிட்டால் நமது நெஞ்சம் துடிதுடித்து அக்குளத்தில் நீராடத்தோணும். அதில் குளித்து மகிழ்வோரைக் கண்டு நமது உள்ளம் பூரிப்படையும் ஆனந்தமடையும்.

இக்குளங்களில் உள்ளூர் மக்கள் நீராடி மகிழ்வதற்கு மாத்திரமல்ல, ஆடு மாடுகள், பறவைகள் நீர் அருந்தி செல்வதற்கும், சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கும் பயன்தரக்கூடியதாகவும், நீர் ஆதாரத்தை நம்மூருக்கு வாரி வழங்கக்கூடியவையாகவும் இருந்து வருகின்றன.

கோடை காலங்களில் நமக்கு தேவையான தண்ணீர் கிடைக்காதபோது, தாகத்தால் தவித்து விடுகிறோம். குடிக்க மட்டுமல்லாமல் குளிக்க, துணி துவைக்க, பாத்திரம் கழுவ, சமையல் செய்ய என அன்றாடம் தேவைப்படும் தண்ணீரின் அளவு சற்று கூடிக்கொண்டேதான் போகும்.

சமீப காலமாக மழை இல்லாமல் கடும் வெப்பம் நிலவி வந்ததன் காரணமாக நம்மூரின் முக்கிய பகுதிகளில் காணப்படுகின்ற குளங்களும் நீரின்றி வறன்று கிடக்கின்றன. எப்புடி இருந்த நீ ! ஏன் இப்புடி ஆயிட்டே ? என கேட்கும் அளவிற்கு குளங்களின் நிலைமை மோசமடைந்துவிட்டது.

ஏதாவது ஒரு தருணத்தில் நாம் நீந்தி மகிழ்ந்த நமதூர் குளங்கள், இன்று நீரின்றி வற்றிப்போய் அழகு இழந்து அநாதரவாய் கிடக்கின்றன.

சேக்கனா நிஜாம்
நன்றி : சமூக விழிப்புணர்வு பக்கங்கள்












Sunday, October 27, 2013

அதிரையில் நடைபெற்ற TNTJ யின் பெண்கள் பயான் !

நேற்று [ 26-10-2013 ] அஸர் தொழுகைக்குப்பின் நமதூர் மேலத்தெரு சானாவயல் பகுதியில் அமைந்துள்ள சகோதரர் SP பக்கீர் முஹம்மது அவர்களின் இல்லத்தில் பெண்களுக்கான சிறப்பு பயான் நடைபெற்றது.

இதில் தமிழக தவ்ஹீத் ஜமாத்தின் மாநில செயலாளர் சகோதரர் அஷ்ரப்தீன் ஃபிர்தவ்ஸி அவர்கள் 'கேள்வி இல்லாமல் மார்க்கம் இல்லை' என்ற தலைப்பில் உரையாற்றினார். இதில் பெண்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

மரண அறிவிப்பு [ சாரா கல்யாண மண்டபம் பாருக் மரைக்காயார் அவர்களின் மைத்துனர் ]

புதுத்தெருவை சார்ந்த மர்ஹூம் அ.மு. அப்துல் கரீம் அவர்களின் மகனும், மர்ஹூம் சாரா கல்யாண மண்டபம் பாருக் மரைக்காயார் அவர்களின் மைத்துனரும், இப்ராகிம்ஷா, சரபுதீன் ஆகியோரின் மைத்துனரும், அஜ்மல்கான், ஜபருல்லாகான், அயூப்கான், நெய்னாகான் ஆகியோரின் சகோதரரும், அரபாத் அவர்களின் தகப்பனாருமாகிய அ.மு. அஸ்ரப் அலி அவர்கள் இன்று [ 27-10-2013 ] காலை 9 மணியளவில் சேதுரோடு இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

அன்னாரின் ஜனாஸா இன்று மாலை 4 மணியளவில் பெரிய ஜூம்மாப் பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்.

குறிப்பு : பொதுநல நோக்கில் மிகுந்த சிரமங்களுக்கிடையே சம்பந்தப்பட்டவர்களை நேரடியாகத் தொடர்புகொண்டு தகவல்கள் சேகரித்து தளத்தில் பதியப்பட்டு வருகின்றன. இவ்வாறாக பதியப்படும் செய்திகளை இலகுவாக காப்பி செய்து தங்களின் தளத்தில் பதியும் நண்பர்கள் எங்களின் இணையதள முகவரியை நன்றியோடு குறிப்பிட மறந்துவிடுகின்றனர். எங்களைப் பொறுத்தவரை எங்களால் பதியப்படும் செய்திகளை பிற சகோதர தளங்கள் எடுத்துப்பதிவதில் எவ்வித ஆட்சபனையும் எங்களுக்கு இல்லையென்றாலும் தளத்தின் பெயரை அடிக்குறிப்பிட்டு பதிய அன்புடன் வேண்டுகிறோம்.

அதிரையில் வாழும் பேச இயலாத - காது கேளாத ஏழை உறுப்பினர்களுக்கு கைலிகள் வழங்கப்பட்டது !

அதிரையில் வாழும் மாற்றுத்திறனாளிகள் பேச இயலாத - காது கேளாதோர் நல சங்கத்தின் சார்பாக எதிர்வரும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நேற்று மாலை 5.30 மணியளவில் சங்க அலுவலகத்தில் ஏழை எளியோராகக் கருதப்படும் நல சங்கத்தின் மீனவ உறுப்பினர்கள் மூன்று பேருக்கு கைலிகள் வழங்கப்பட்டது.

வந்திருந்த அனைவரையும் நல சங்கத்தின் தலைவர் சாகுல் ஹமீது, துணைத்தலைவர் நூருல் அமீன், பொதுச்செயலாளர் சிராஜுதீன், இணைச்செயலாளர் உமர் தம்பி, பொருளாளர் ஜெஹபர் சாதிக் ஆகிய நிர்வாகிகள் அன்புடன் வரவேற்றனர்.

இதில் நல சங்கத்தின் உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

அதிரை தாருத் தவ்ஹீத் - ஒரு தூய சிந்தனைப் பரிணாமத்தின் அறிமுகம் !

அதிரை தாருத் தவ்ஹீத் - ஒரு தூய சிந்தனைப் பரிணாமத்தின் அறிமுகம்!