.

Pages

Sunday, June 21, 2015

தஞ்சை புத்தக திருவிழாவில் ₹ 1.5 கோடி மதிப்பிலான புத்தகங்கள் விற்பனை !

தஞ்சாவூர் அரண்மனை மைதானத்தில் இன்றுடன் புத்தக திருவிழா நிறைவடைந்தது. அதனையொட்டி மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் என்.சுப்பையன் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:
சென்ற ஆண்டுகளில் பல்வேறு தரப்பினர் சிறிய அளவில் புத்தக திருவிழாக்களை நடத்தி வந்தனர். தற்பொழுது முதல் முறையாக  மன்னர் சரபோஜி சரஸ்வதி மஹால் நூலகம், தமிழ் பல்கலைக் கழகம், மாவட்ட தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள், பதிப்பாளர்கள்  சங்கம் ( BAPASI ) மற்றும் மாவட்ட நிர்வாகம் இணைந்து மாபெரும் புத்தக கண்காட்சியினை நடத்தியுள்ளது.

பல்கலைக்கழக ஆராய்ச்சி மாணவர்கள், கல்லூரி மாணவர்கள், பள்ளி மாணவர்கள் மற்றும் பொது மக்கள் பயன் பெறும் வகையில் தஞ்சாவூர் அரண்மனை வளாகத்தில் 12.06.2015 இன்று முதல் 21.06.2015 இன்றுடன் தஞ்சாவூர் புத்தகத் திருவிழா சிறப்பாக நடைபெற்றது.

இதில் மாவட்டத்தை சேர்ந்த 200 பள்ளிகளில் படிக்கும்  சுமார் 40 ஆயிரம் மாணவ மாணவியர்கள் பங்கேற்றனர். 20க்கு மேற்பட்ட கல்லூரிகளிலிருந்து 20 ஆயிரம் மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டனர்.

10 நாட்கள் நடைபெற்ற புத்தக திருவிழாவினை ஏறத்தாழ 1 இலட்சத்திற்கு மேற்பட்ட மாணவ மாணவியர்கள், பொது மக்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு சுமார் ரூ.1.50 கோடி மதிப்பில் புத்தகங்களை வாங்கி பயன் அடைந்துள்ளனர்.

பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதுடன் வன்முறையற்ற சமுதாயம் அமைய  அனைவரும் படிப்பது அவசியமாகும். புத்தகத் திருவிழாவில் அதிகபட்சமாக 25 சதவிகிதமும், குறைந்தபட்சமாக 10 சதவிகிதமும் புத்தக விலையில் தள்ளுபடி அளிக்கப்பட்டுள்ளது.

பள்ளிகளில் பல்வேறு தலைப்புகளில் பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி, கவிதை போட்டி நடைபெற்றது.  இதில் வெற்றி பெறும் மாணவ மாணவியர்கள் புத்தகங்கள் பரிசாக வழங்கப்பட்டது. மேலும் புத்தக திருவிழாவில் தினமும் 3 வாசகங்கள் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கு புத்தகங்கள் பரிசாக வழங்கப்பட்டது.

மாவட்ட நிர்வாக சார்பில் சிறப்பாக ஒருங்கிணைக்கப்பட்ட புத்தக திருவிழா   எதிர்பார்த்ததை விட அதிக அளவில் பொது மக்கள் பங்கேற்று ஆர்வத்துடன் புத்தகங்களை வாங்கி சென்றுள்ளனர்.  இதன் மூலம் பதிப்பாளர்களும் அதிக லாபம் அடைந்துள்ளனர். எனவே ஒவ்வொரு ஆண்டு புத்தக திருவிழாவினை கண்டிப்பாக நடத்த வேண்டுமென மாவட்ட நிர்வாகத்திடம் பதிப்பாளர்கள் மற்றும் பொது மக்களும் கோரிக்கை வைத்துள்ளனர்.  இதனை பார்க்கும் பொழுது புத்தகம் வாசிக்கும் பழக்கம் குறையவில்லை என்பதை காட்டுகிறது. சென்னை, ஈரோடு, மதுரைக்கு அடுத்தபடியாக அதிக அளவில்  தஞ்சையில் தான் புத்தகம் அதிகமாக விற்பனையாகியுள்ளது.

இன்றையக் காலக்கட்டத்தில் தொலைக்காட்சி வருகைக்கு பின் புத்தகம் படிக்கும் பழக்கம் வெகுவாக குறைந்து விட்டது என்று கூறுகிறார்கள். தற்பொது இங்கு நடைபெற்று வரும் புத்தக திருவிழாவினை பார்க்கும் போது இந்த கூற்று பொய் என்பது நிருபணமாகியுள்ளது.

புத்தக திருவிழாவில் நாவல்கள், நமது பராம்பரியத்தை இந்த தலைமுறையினர் அறிந்து கொள்ளும் வரலாறு புத்தகங்கள், மேலாண்மை புத்தகங்கள், சிறுவர்களுக்கான புத்தகங்கள் அதிகமான அளவில் விற்பனையாகி உள்ளது.  இதை போல் சிறுவர்களுக்கான தொடக்க நிலை புத்தகம் மற்றும் குறுந்தகடு அதிகமாக விற்பனையாகியுள்ளது. இதே போல் பள்ளி நிறுவனங்கள் மொத்த விற்பனையில் 25 சதவிகிதத்திற்கு மேல் வாங்கியுள்ளனர்.

இப்புத்தகத் திருவிழாவில் 120 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் பல்வேறு முதன்மையான பதிப்பகத்தால் வெளியிடப்பட்டுள்ள அறிவியல், தொழில் நுட்பம், வரலாறு, பொது அறிவு, போட்டி தேர்வுகளுக்கான புத்தகங்கள் மற்றும் பல்வேறு துறைகளில் சிறந்த புத்தகங்கள் இடம் பெற்றன.

மேலும் தஞ்சாவூர் புத்தக திருவிழாவில் சிறப்பு பேச்சாளர்கள் திரு.சுகிசிவம், திரு.கு.ஞானசம்பந்தம், முனைவர் அ.அறிவொளி, கவிஞர் நந்தலாலா, திரு.எஸ்.ராம கிருஷ்ணன், திரு.தா.க.சுப்பிரமணியன், மற்றும் திருமதி பாரதிபாஸ்கர் உள்ளிட்டோர் பல்வேறு தலைப்புகளில் தினசரி சொற்பொழிவு ஆற்றினார்கள்.

இப்புத்தக திருவிழாவில் பொருளியல் மற்றும் புள்ளியியல் துறை அரசு முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் திரு.வெ.இறையன்பு அவர்களும், தமிழ்நாடு நீர்வடிப்பகுதி மேம்பாட்டு முகமை செயல் இயக்குநர் திரு.ஆனந்தகுமார் அவர்களும் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள்.  மேலும் திரு.சங்கரசரவணன் அவர்கள் நடத்திய அறிவரங்கம், வினாடி வினா  நிகழச்சியும் நடைப்பெற்றது.

மாணவர்கள், பொது மக்கள் மற்றும் பதிப்பாளர்களின் வேண்டு கேளுங்கிணங்க அடுத்த ஆண்டு மகாமகம் முடிந்தவுடன் இரண்டாவது புத்தக திருவிழா நடைபெறும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் என்.சுப்பையன் அவர்கள் பேசினார்.

மாவட்ட ஆட்சியரின் செய்தியாளர்கள் கூட்டத்தில்  சுற்றுலாத்துறை அலுவலர் திரு.உரு.ராஜசேகரன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் திரு.பொ.க.பாண்டியன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (ஊரக வளர்ச்சி) திரு.கதிரேசன், தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்க செயலாளர் திரு.புகழேந்தி ஆகியோர் உடன் இருந்தனர்.
 
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.