.

Pages

Friday, June 12, 2015

அதிரை ஈசிஆர் சாலையோரத்தில் 'டேக்ஸி ஸ்டாண்ட்' அமைக்க எதிர்ப்பு: கோர்ட்டில் தடை உத்தரவு பெற முடிவு !

அதிரை பேரூராட்சியின் பொது நிதி மற்றும் தஞ்சையின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எஸ் பழனிமாணிக்கத்தின் 'தொகுதி மேம்பாடு நிதி' ஆகியவற்றிலிருந்து அதிரை பேருந்து நிலைய பகுதியில் வர்த்தக கட்டிடங்கள் மற்றும் மேற்கூரை கட்டி முடிக்கப்பட்டது. இதில் மொத்தம் 24 வர்த்தக கடைகள் பொது ஏலத்திற்கு வர இருக்கிறது. இந்த கடைகளிலிருந்து வாடகையாக கிடைக்கும் வருமானத்தை அதிரை பேரூராட்சி பொதுநல பணிக்கு பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கான கட்டுமான பணிகள் கடந்த சில வருடங்களாக மும்முரமாக நடைபெற்று வந்தன.

இந்நிலையில் பெரும்பாலான பணிகள் நிறைவடைந்ததை தொடர்ந்து இதற்கான டெண்டர் விடும் பணியை விரைவில் மேற்கொள்ள இருப்பதாக தெரிகிறது. முதற்கட்டமாக பேருந்து நிலைய மைய பகுதியில் பயன்பாட்டில் இருந்து வரும் வாடகை டேக்ஸி வாகனங்களை அப்புறப்படுத்தும் முயற்சியில் பேரூராட்சி நிர்வாகம் தீவிரமாக இறங்கியது.

இதுதொடர்பாக பேரூராட்சி நிர்வாகத்தின் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் அளித்த புகாரின் பேரில் அதிரைக்கு வருகை தந்த வருவாய்துறை அலுவலர் டேக்ஸி ஸ்டாண்ட் வாகன ஓட்டுனர்களிடம் நேரடி விசாரணையை மேற்கொண்டார். தொடர்ந்து இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அதிரை பேரூராட்சி சார்பில் டேக்ஸி வாகனங்களை நிறுத்துவதற்கு மாற்று இடமாக ஈசிஆர் சாலையில் அமைந்துள்ள காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியின் விளையாட்டு மைதானம் வடக்கு பகுதியை ஒட்டி அமைந்துள்ள நெடுஞ்சாலைதுறைக்கு சொந்தமான கிழமேல் பகுதியை பயன்படுத்திக்கொள்ள கூறியதாக தெரிகிறது. இதைதொடர்ந்து அதிரை பேரூராட்சி பொது நிதியிலிருந்து அப்பகுதியில் வடிகால் வாய்க்கால் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்றது. பெரும்பாலான பணிகள் நிறைவுறும் தருவாயில் இருக்கின்றன.

இது ஒரு புறமிருக்க, அதிரை காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆறாம் வகுப்பு முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரை சுமார் 1500 க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். தினமும் பள்ளிக்கு சென்று வர பிரதான வழியாக ஈசிஆர் சாலை அமைந்துள்ளது. பள்ளி மாணவர்கள் மதிய இடைவேளையின் போதும், வகுப்புகள் முடிந்த பிறகு வீடுகளுக்கு செல்லவும் இந்த சாலையை கடந்து செல்வார்கள். அதே போல் அதிரை சுற்று வட்டார பகுதியிலிருந்து காதிர் முகைதீன் கல்லூரியில் படித்து வரும் மாணவ, மாணவிகளும் இந்த சாலையை பிரதானமாக பயன்படுத்தி வருகின்றனர். இதனால் இந்த பகுதி எந்நேரமும் பரபரப்பாக காணப்படும்.

இந்த சாலை வழியே அதிவேகமாக செல்லும் வாகனங்களால் அவ்வப்போது திடீர் விபத்துகளும் ஏற்படுவதுண்டு. இந்த பகுதியில் அடிக்கடி விபத்து நடப்பதால் இந்த பகுதியை ஒட்டி தமுமுக ஆம்புலன்ஸ் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக அதிரை நியூஸில் 'பள்ளி அருகே வேகத்தடை: அதிரை ஆர்வலரின் ஆதங்கம் !' என்ற பெயரில் வெளிவந்த தலையங்கத்தை வாசித்த நமது சட்டமன்ற உறுப்பினர் திரு. என்.ஆர் ரெங்கராஜன் எம்.எல்.ஏ அவர்கள் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அவர்களிடம் வாகன வேகத்தடுப்பு அமைக்க கோரிக்கை விடுத்து இருந்தார். இதைதொடர்ந்து காவல்துறை சார்பில் இப்பகுதியில் வாகன வேகத்தடுப்புகள் இரு புறங்களிலும் அமைக்கப்பட்டன.

இந்நிலையில் இந்த பகுதியில் டேக்ஸி வாகனங்கள் நிறுத்துவதற்கு காதிர் முகைதீன் கல்வி நிறுவனம் சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு புகார் தெரிவிக்கப்பட்டது.

இதைதொடர்ந்து காதிர் முகைதீன் கல்வி நிறுவனம் சார்பில் 'டேக்ஸி ஸ்டாண்ட்' அமைக்க கோர்ட்டில் தடை உத்தரவு பெற முடிவு செய்யப்பட்டது. இதுதொடர்பாக தடை உத்தரவு கோரி பட்டுக்கோட்டை நீதி மன்றத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது. இதில் மூத்த வழக்கறிஞர் ஜபருல்லாஹ் ஆஜாராகி வருகிறார். இதுதொடர்பாக பட்டுக்கோட்டை நீதிமன்றம் சார்பில் விசாரணை கமிஷன் நியமிக்கப்பட்டது. இதில் வழக்கறிஞர் உஷா சம்பவ இடத்தை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். விரைவில் இதற்கான அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்பிப்பார் என எதிர் பார்க்கப்படுகிறது. இதையடுத்து நீதிமன்றத்தால் தடை உத்தரவு பிறப்பிக்கப்படுமா ? என்பது தெரியவரும்.
 
 
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.