அதிரை நகரில் சுற்றித்திரியும் மனநிலை பாதித்தோர் ஸாரி வயதுவந்த குழந்தைகள் என்றே இவர்களை அழைக்கவேண்டும். இவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இவர்களில் அதிகமானோர் தெருக்களின் முக்கிய வீதிகளில் உலா வருவதை கண்கூடாக்காணலாம்.
குடும்பச்சூழல், மன அழுத்தம், நோய் உள்ளிட்ட பலவித காரணங்களால் இவர்களுக்கு மனநிலை பாதிப்பு உண்டாகிறது என்றாலும் இவர்களை அரவணைத்து பணிவிடை செய்ய யாரும் முன்வருவதில்லை.
இவர்களில் சிலர் தங்களின் அன்றாட உணவுக்காக பலரிடம் கையேந்துவதையும் நிறுத்துவதில்லை. சில ஆண்டுகளுக்கு முன்பு வரை ஓரிருவர் மாத்திரமே இருந்த நமதூரில் இன்று அதன் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துள்ளது.
இதுபோன்ற மனநிலை பாதித்தோரை [ மீண்டும் ஸாரி வயதுவந்த குழந்தைகளாகிய இவர்களை ] பராமரிக்க மனநலக் காப்பகம் நமதூரில் அமைக்கப்பட வேண்டும் என்பதே பெரும்பாலான மனிதநேய ஆர்வலர்களின் எண்ணமாக இருக்கின்றது.
அதே போல் முதியோர் அரவணைப்பு என்பதும் சமூகத்தில் பெரும் கேள்விக்குறியாக உள்ளது.
1. பேரக்குழந்தைகளுடன் கொஞ்சி விளையாட வாய்ப்புகளற்று, பலவகை வேதனைகளைச் சுமந்து வாழ்வோரும்....
2. தான் தூக்கி வளர்த்த மகன்/மகள் ஆகியோரின் அன்பைப்பெறாமல் தவிக்கக் கூடியோரும்...
3. ‘பெரும் பாரமாக’ இருக்கிறார்களே என நினைத்து வீட்டை விட்டு அடித்து விரட்டப்பட்டோரும்...
4. மகன்/மகள் செய்த கொடுமைகளை கண்டு பொறுக்காமல் வீட்டிலிருந்து வேதனையுடன் வெளியேறியோரும்....
5. தேவையான மருத்துவ உதவி இல்லாமல் வீட்டின்/தெருவின் மூளை முடுக்குகளில் படுத்துறங்குபவர்களும்...
6. தேவையான நேரத்தில் உன்ன உணவு கொடுக்காமல் பசிக் கொடுமையால் அவதிப்படுபவர்களும்...
7. ஓய்வில்லாமல் வீட்டு வேலைகளைச் செய்ய சொல்லி தரும் நெருக்கடியால் மன வேதனைப்படுவோரும்...
8. சொத்துகளை அபகரித்துக்கொண்டு வீட்டை விட்டு துரத்தப்பட்டோரும்...
9. வீட்டைப் பாதுகாத்துக்கொள்ள காவலாளி என்ற உரிமையுடன் தங்க வைக்கப்பட்டுள்ளதை நினைத்து வேதனைப்படுவோரும்...
10. தனிமைபடுத்தப்பட்டு அருகில் உற்றார் - உறவினர் இல்லாமால் இறந்தோரும்...
நமதூரில் உண்டு !
வளர்ந்து வரும் நாகரீக உலகில் மனிதர்கள் பணம், பொருள் ஈட்ட புலம் பெயர்ந்து சென்றுவிடுகின்றனர். செல்லுமிடத்தில் சிலரது சூழ்நிலை மாறும் பட்சத்தில் அங்கேயே தங்கிவிடும சூழல் அமைந்து விடுகிறது. அப்படி அங்கேயே நீண்ட நாட்கள் தங்கிவிடும் சூழ்நிலையில் அவர்களின் பெற்றோறோர்களில் சிலர் பெரும் அவதிக்குள்ளாகின்றனர். குடும்ப உறவுகளும் கைவிட்ட நிலையில் இத்தகைய பெற்றோர்கள் நம் சமுதாயத்தில் கூடிக்கொண்டே போகிறார்கள். இது யாரும் அறிந்திராத ஆச்சரியமான கசப்பானதொரு உண்மை ! வசதி வாய்ப்புக்கள் இருந்தும் தள்ளாத வயதினில் கவனிக்க ஆளில்லாமல் கஷ்டப்படும் நிலையில் அவர்கள் அவதியுறும் நிலை உருவாகிறது. அப்பெற்றோர்கள் அரவணைப்புக்கு ஆளில்லாமல் மனதளவிலும் உடலளவிலும் பாதிப்புக்குள்ளாகிறார்கள்.
புலம்பெயர்வோர்களால் மட்டுமல்லாது பல்வேறு காரணங்களால் குடும்ப உறவுகளால் கைவிடப்பட்டவர்களில் சில முதியோர்களும் உண்டு. இப்படி ஆதரவற்ற முதியோர்களை ஆதரிக்க இல்லம் ஒன்று அவசியம் வேண்டும்.
ஆகவே வயோதியர்களை அரவணைக்க மருத்துவ வசதியோடு சகல வசதியும் அமையப்பெற்ற முதியோர் இல்லம் ஒன்று நமதூருக்கும் அவசியமானதாய் தோன்றுகிறது. நல்லெண்ணம் படைத்த நம் சமுதாய மக்கள் இவற்றை உருவாக்க முன்வரவேண்டும்.
அதிரை நியூஸ் குழு