பேராவூரணி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 1964-65 ஆம் ஆண்டுகளில் அப்போதைய எஸ்.எஸ்.எல்.சி படித்த இருபால் மாணவர்கள் 50 ஆண்டுகள் கழிந்த நிலையில் அனைவரும் ஒன்று கூடி சந்திக்க முடிவு செய்தனர். அப்பொழுது படித்த 70 மாணவர்களில் 25 பேர் இயற்கை எய்தியது போக மீதி 45 பேர் இருப்பதை கண்டறிந்தனர். இதில் உள்ளூரில் இருந்த முன்னாள் மாணவர்கள் ப.குழந்தைசாமி, குமாரவேல், ஆர்.சுப்பிரமணியன் உள்ளிட்ட சிலர் பழைய மாணவர்கள் இருக்கும் இடங்களை விசாரித்து, ஒவ்வொருவராக அவர்கள் இருக்கும் இடங்களை கண்டறிந்து தகவல் அளித்தனர். இதற்காக மூன்று மாதங்களை செலவிட நேர்ந்தது. இவர்களை ஒருங்கிணைப்பதில் நவீன தொழில்நுட்பங்களான பேஸ்புக் மற்றும் வாட்ஸ் அப் போன்றவை பெரும் பங்காற்றின என்றால் மிகையல்ல. இவ்வாறாக 30 மாணவர்கள் விழாவிற்கு வர சம்மதித்தனர்.
பலரும் கோவை, திருச்சி, பெங்களூர், மைசூர், சேலம், சென்னை மற்றும் வெளிநாடுகளில் என பல்வேறு இடங்களில் மருத்துவர், ஆசிரியர், பொறியாளர், அரசுப்பணி, தனியார் நிறுவனப் பணி, சொந்த தொழில், விவசாயம் என பணியிலும், பணி ஓய்விலும் இருந்தனர். இவர்களில் பெரும்பாலானோர் 65 வயதை கடந்தவர்கள். 16-வயதில் பிரிந்த இந்த நண்பர்கள், தங்கள் 66-வயதில் அனைவரும் ஒன்றுகூடி தங்கள் பழைய நினைவுகளை பகிர்ந்து கொண்டதோடு, குடும்பங்களை பற்றி விசாரித்து தெரிந்து கொண்டனர்.
முன்னாள் மாணவர்கள் அனைவரும் ஒன்றுகூடி தாங்கள் படித்த பள்ளிக்கு சென்று குழுவாக புகைப்படம் எடுத்து கொண்டனர். 'இந்த
இடத்தில் தானே நான் பெஞ்சில் அமர்ந்திருந்தேன். இது என்னுடைய இடம். இது நீ அமர்ந்து இருந்த இடம் என ' குழந்தைகளாகவே மாறி விட்டிருந்தனர். பின்னர் தனியார் மண்டபத்தில் ஒன்று கூடி பாட்டு, பேச்சு, அறிமுகம் என தங்கள் மாணவ கால நினைவுகளை அசை போட்டனர்.
நிகழ்ச்சியின் முத்தாய்ப்பாக தங்களுக்கெல்லாம் ஆசிரியராக இருந்து பயிற்றுவித்த புலவர் இல. சிதம்பரம், ஏ.மெய்ஞானமூர்த்தி, முனைவர் வி.ராமையன் ஆகியோரை அதே மேடையில் ஏற்றி கவுரவித்து மகிழ்ந்தனர். பின்னர் முன்னாள் மாணாக்கர்கள் அனைவரும் குடும்பத்தாரோடு சேர்ந்து உணவருந்தி மகிழ்ந்தனர். "ஒவ்வோராண்டும் தாங்கள் மீண்டும் சந்தித்து பேச வேண்டும்" என முடிவு செய்து நெகிழ்ச்சியோடு, கண்கலங்கி பிரியாவிடை பெற்றனர்.
மாணவர் சந்திப்புக்கான ஏற்பாடுகளை முன்னாள் மாணவர் தொழிலதிபர் ப.குழந்தைசாமி தலைமையில் ஆர்.சுப்பிரமணியன், எல்.ஐ.சி.கோவிந்தன், ஆசிரியர் குமாரவேல், சிவராமன், மணிமேகலை உள்ளிட்டோர் செய்திருந்தனர்.
வாழ்த்துக்கள்.பள்ளிக்கூடம் திரைப்படம் நினைவுக்கு வருகிறது. சுய அறிமுகத்துடன் தங்கள் நட்பை பகிர்ந்து கொண்டு; தங்களது மலரும் நினைவுகளை கூறும்பொழுது , அவர்களது பேரன், பேத்திகள் எல்லாம் கலகலப்பாகி விடுவார்கள், உண்மையில் மனதை நெகிழவைத்த நிகழ்ச்சியாகத் தான் இருக்கும் - நன்றிகள் ஏற்பாடாளருக்கு.
ReplyDelete