இந்தக் கட்டுரையின் தலைப்பே வேடிக்கையானதாகத் தோன்றும். ஆனால் இன்று நாட்டில் நடக்கும் நிகழ்வுகளின் நிர்வாக அலங்கோலங்களின் அடையாளங்களையே இந்தத் தலைப்பு வெளிச்சம் போடுகிறது. இதைப் பற்றி விவாதிக்கலாம்.
கடந்த சில வருடங்களாகவே தமிழகத்தில் மழை பொய்த்துவிட்டது. காவிரி நீரும் சரிவர வராததால் தமிழ்நாடு வறட்சியின் கோரப் பிடியில் சிக்கித் தவித்தது. நமது விவசாயிகளின் வாழ்வாதரங்களாகத் திகழும் தென்னை மரங்கள், மழை இல்லாத காரணத்தாலும் நிலத்தடி நீர் உறிஞ்சப்பட்ட காரணத்தாலும் விதவைக் கோலத்தில் காட்சியளித்தன.
கரூர், பல்லடம் போன்ற பகுதிகளில் தென்னை, வாழை முதலிய விவசாயங்கள் தோல்வியுற்றன. தென்னகத்தின் நெற்களஞ்சியமான காவிரி டெல்டா மாவட்டங்களில் விவசாய நிலங்கள் அச்சத்தின் காரணமாக தரிசுகளாகப் போடப்பட்டன. குடிநீருக்குக் கூட மக்கள் குடங்களைத் தூக்கிக் கொண்டு தூரந்தொலைகளுக்கு துரத்தப்படும் நிலைக்குத் தள்ளப்பட்டனர். தண்ணீர்ப் பஞ்சம் தாண்டவமாடியது. காலிக் குடங்களுடன் பொதுமக்கள், பல ஊர்களிலும் சாலை மறியல்களில் ஈடுபட்டனர்.
அடிக்கிற தண்ணிக்கு
அங்கங்கே கடை இருக்கு
குடிக்கிற தண்ணிக்கோ
குடமெல்லாம் தவமிருக்கு - என்று அடுக்குமொழிக் கோஷங்கள் முழங்கப்பட்டன.
பல ஊர்களில் மழைக்காக சர்வமதப் பிரார்த்தனைகள் நடத்தப்பட்டன. உயர்நீதிமன்றங்கள் தொடங்கி உச்சநீதிமன்றம் வரை நதிநீருக்காக மாநிலங்கள் வரிந்து கட்டிப் போராடின.
இந்த நிலையில் காவிரி நீர்ப் பிடிப்புப் பகுதிகளில் கனமழை பெய்ததன் காரணமாக உபரி நீர் வெளியேற்றப்பட்டு மேட்டூர் அணையும் நிறைந்து தண்ணீரும் திறந்துவிடப்பட்டது. மேட்டூர் அணையில் இருந்து திறந்து விடப்பட்ட காவிரி நீர், பல மாவட்டங்களைக் கடந்து, கடைமடையில் உள்ள நாகை மாவட்டம் வரை, பல லட்சம் ஏக்கர் பாசனத் திற்கு பயன்பட்டு வருவது பழக்கமான விஷயம். ஆனால் காவிரி நீர் கடந்து செல்லும் பகுதிகளில், ஆறுகள், வாய்க்கால்கள் உள்ளிட்ட நீர்நிலைகள் தூர்வாரப்படாமல் நீர்நிலைகளின் கொள்ளளவு அளவுக்கு மேட்டூரிலிருந்து வந்த தண்ணீரை நிரப்ப வழி இல்லாமல் வழிந்தோடி கண்முன்னே கடலில் கலந்து வீணானது. ‘நடந்தாய் வாழி காவேரி’ என்று சிலப்பதிகாரம் பாடியது. ஆனால் இன்றோ நிர்வாகச் சீர்கேடுகளால் காவேரி நடக்க முடியாமல் முடக்கு நோய் வந்து முடங்கியது.
சோழமண்டலத்தின் அனைத்து ஆறுகளும் மற்றும் பல்வேறு ஏரிகளும் , முட்புதர்கள், மண்மேடுகள், மற்றும் கழிவுநீர் ஒடைகளால் பாதிக்கப்பட்டுள்ளன. அவ்வளவு ஏன் கரிகாலன் கட்டிவைத்த கல்லணையில் கூட தூர்வார வக்கற்ற நிர்வாகம்தான் நம்முடையது. தஞ்சாவூர் மாவட்டத்தில் வடலாறு, வெண்ணாறு, வெட்டாறு உள் ளிட்ட ஆறுகள், மிகவும் மோசமான நிலையில் நாணல்கள் மண்டிப்போய் உள்ளன. இதேபோல் திருவாரூரில் ஒடம்போக்கி ஆறு, பாமிணி ஆறு, முள்ளிஆறு உள்ளிட்ட பல்வேறு ஆறுகள் தூர்வாரப்படாமல் உள்ளன. இங்குள்ள ஏரிகள் மற்றும் குளங்களிலும் காட்டாமணக்கு, வெங்காய தாமரை, கொண்டை குளைச்சான் உள்ளிட்டவை அதிகளவில் வளர்ந்துள்ளன என்பதை அந்தப் பகுதிகளை பஸ்களில் கடந்து செல்வோர் கவலையுடன் காணலாம். தூர்வாரப்படாத நீர் நிலைகளால், கடைமடை வரை காவிரித் தண்ணீர் வந்து சேர்வது கேள்விக் குறியாகி இருந்தது.
ஆற்றிலே தண்ணீர்! ஆனால் அந்தத் தண்ணீர் வந்து சேர வழி இல்லாததால் பட்டுக் கோட்டை, பேராவூரணி, மதுக்கூர் முதலிய கடைமடை பகுதிகளிலும் நாகை மாவட்டத்தில் வேதாரண்யம் முதலிய பகுதிகளிலும் புதுவை மாநிலம் காரைக்கால் பகுதிகளிலும் பல போராட்டங்கள் நடத்தப்பட்டன. மாவட்ட ஆட்சித்தலைவர் நடத்திய கூட்டங்களில் விவசாயிகள் இந்தக் குறையை எடுத்துச்சொல்லி அரசை இயங்கச் சொன்னார்கள். ஆனால் அரசு காதில் போட்டுக் கொள்ளவில்லை. கோபம்கொண்ட விரக்தியடைந்த விவசாயிகள் நாற்காளிகளைத் தூக்கி வீசிவிட்டு வந்த காட்சிகளையும் கண்டோம்.
காவிரியில் நீர் வருமா வராதா என்ற நிலையில் சரளமாகவே காவிரியில் தண்ணீர் வந்தும் அந்தத் தண்ணீர் எல்லாப் பகுதிகளுக்கும் சரிவரப் பகிர்வு செய்யப்படாமல், “ முள்ளு முனையிலே மூணு குளம் வெட்டினேன்- ரெண்டு குளம் பாழ்! ஒன்னிலே தண்ணியே இல்லே” என்கிற நாட்டுப்பாடல் போல நாட்டு நிலையும் ஆனது. மேட்டூரிலிருந்து தண்ணீர் வருவது அதிர்ஷ்டவசமாக நிற்கவில்லை. விவசாயியின் கண்ணிலிருந்து தண்ணீர் வருவதும் நிற்கவில்லை. விவசாயிகள் தண்ணீர் வந்த மகிழ்ச்சியைக் கொண்டாட முடியாமல் விவசாயம் செய்யவே அச்சப்பட்டனர். இந்த நிலை ஏன்? சிந்திக்க வேண்டும்.
மேட்டூரிலிருந்து நீர் வந்த நிலையில் கூட மழை வேண்டி இறைவனை வேண்டிய மக்களின் குரல் இறைவனின் காதுகளில் கேட்டது. இந்த வருடத்தில் பெய்ய வேண்டிய வடகிழக்குப் பருவமழை ஒரே நேரத்தில் போதும் போதுமென்கிற அளவுக்குத் தமிழகம் முழுதும் பெய்தது. ஆனாலும் பயன் என்ன ?
பெய்த மழையில் பெரும்பகுதி, நீரை சேகரித்து வைக்க வழியில்லாமல் காட்டாறுகளாக வழிந்தோடின. வீராணம் , மதுராந்தகம், செங்கல்பட்டு போன்ற பெரிய ஏரிகள் யாவும் தங்களது கொள்ளளவுக்குரிய நீரை சேமிக்க முடியாமல் தங்கள் வீட்டுக்கு வலதுகால் எடுத்து வைத்து புதுமணப்பெண்ணாக வந்த புதுவெள்ளத்தை , வரவேற்று பால்பழம் கொடுக்க இயலாத நிலையில் தண்ணீரின் பிறந்த வீடான கடலுக்கே வழி அனுப்பிவைத்தது பொதுப்பணித்துறை நிர்வாகம்.
கடைமடைப் பகுதிக்கு காவிரி நீர் வந்து குளங்கள் நிரம்புவது என்று அதிகபட்சமாக எதிர்பார்ப்பது கூட தவறாக இருக்கலாம். ஆனால் அதிகமாகப் பெய்த மழையின் காரணமாக குளத்தின் கரைகளைத் தொட்டுக் கொண்டு ஓடும் தண்ணீரைக் கூட குள்ங்களுக்குள் திசை திருப்பிவிட்டு அந்தக் குளங்களை நிரப்பாமல் இருக்கும் நிர்வாகத்தை என்ன சொல்வது?
அதிரையின் செடியன் குளத்தை ஒட்டி ஓடும் மழைத்தண்ணீர் வாய்க்காலை செடியன் குளத்துக்குள் திருப்பாததும் முத்துப்பேட்டையில் பட்டறைக் குளத்தைத் தொட்டுக் கொண்டு ஓடும் கோரையாற்றுத் தண்ணீரை கண்டுகொள்ளாமல் கடலுக்குள் அனுப்பும் காட்சிகளையும் காணும் போது நமது இரத்தம் சூடாவதைத் தடுக்க இயலவில்லை. இவைகள் உதாரணங்களே.
வரம் வேண்டிப் பெற்ற மழையால் வந்த நீர் தங்கும் இடமெங்கும் ஆக்கிரமிப்புகள் , அரசு கட்டிடங்கள், பேருந்து நிலையங்கள், காட்டாமணக்குச் செடிகள், காட்டுக் கருவைப் புதர்கள். தங்க இடமின்றி தண்ணீர் வெள்ளமாக தாவிப் பாய்ந்தது கடல் நோக்கி.
இதுவும் போக பல நகரங்கள் தண்ணீரில் மிதந்தன. குறிப்பாக தமிழகத்தின் தலை நகர் சென்னை தண்ணீரில் மிதக்கிறது என்று தலைப்புச் செய்திகளை வெளியிட்டன பத்திரிகைகள். குடியிருப்புப் பகுதிகளில் உள்ளே இருப்போர் வெளியே செல்ல முடியாமலும் வெளியூர்களில் இருந்து வந்தோர் வீட்டுக்குள் செல்ல முடியாமலும் வெள்ளம் சூழ்ந்து நின்றகாட்சிகள் தொலைக் காட்சிகளில்.
தாழ்வான நிலப் பகுதிகளில் வீடு கட்டி குடியேறியவர்கள் தங்களின் வீட்டுக்குள் மீன் பிடித்தால் கூட பரவாயில்லை. ஆனால் பாம்புகளையும் பிடித்தார்களே இந்த நிலைக்கு என்ன காரணம்? எந்த மழைக்காக தவம் இருந்தோமோ அந்த மழையால் வந்த வெள்ளத்தை வெறுக்கும் நிலைக்குத் தள்ளப் பட்டோம். காரணங்கள் என்ன?
சென்னையைப் பொறுத்தவரை , பெரிய ஏரிகளை எல்லாம் தூர்த்து வீட்டுமனைகளாக்கி விற்று நகரமயமாக்கிவிட்டோம். “ நீரின்றி அமையாது உலகு “ என்று குறள் எழுதிய வள்ளுவருக்கான வள்ளுவர் கோட்டம் கட்டப்பட்டிருப்பது ஒரு காலத்தில் லேக் ஏரியா ( Lake Area ) என்று அழைக்கப்பட்ட நுங்கம்பாக்கம் ஏரியைத் தூர்த்துத்தான் என்பது வேதனையான உண்மை. அதே போல மாம்பலம் பகுதியிலும் ஒரு ஏரி இருந்தது இன்று அதன் அடையாளம் கூட யில்லை என்று பழம்பெரும் சென்னைவாசிகள் சொல்கிறார்கள். சென்னை நகரைச் சுற்றியுள்ள ஆவடி , பொன்னேரி போன்ற பகுதிகளின் ஏரிகளும் ரியல் எஸ்டேட்காரர்களால் கபளீகரம் செய்யப்பட்டுவிட்டன. இப்படிப் பெய்யும் மழையைத் தாங்கி தங்களிடம் சேர்த்துவைக்கும் நீர்நிலைகளை அழித்துவிட்டு குடியிருப்புப் பகுதிகளைக் கூட்டிக் கொண்டே போனால் தலைநகரம் தண்ணீரில் தத்தளிக்காமல் என்ன செய்யும். பொழியும் மழைநீர் எங்கே செல்லும்?
‘தமிழ்நாட்டில் இருந்த 39,200 கண்மாய்களில் 10 சதவிகிதம் அழிந்து போய்விட்டன’ என்று அதிரவைக்கிறது சர்வதேச நீர் மேலாண்மை மையத்தின் தகவல். இதன்படி, தமிழகத்தின் முக்கிய நகரங்களிலுள்ள கண்மாய்கள், ஏரிகளின் இன்றைய நிலைமை என்னவென்று பார்த்தோமானால் மதுரையில் உள்ள மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் , புதிய நீதிமன்றக் கட்டிடம் , சட்டக்கல்லூரி ஆகியவை கட்டப்பட்டிருப்பது ஒரு காலத்தில் தல்லாகுளம் என்ற ஏரியாக இருந்த இடங்களில்தான். விழுப்புரம் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகம் கட்டப்பட்டிருப்பதும் ஒரு ஏரியில்தான். அவ்வளவு தூரம் போகவேண்டாம். இன்று பட்டுக் கோட்டையில் இருக்கும் பேருந்து நிலையம் கூட ஒருகாலத்தில் குளமாக இருந்ததுதான்.
எப்போதும் இல்லாத அளவிற்கு இந்த வருடம் வடகிழக்குப் பருவமழை அதிகமாகப் பெய்துள்ளது. இதுவரை தமிழகம் முழுவதும் 31 செ.மீ. மழை பெய்திருக்கிறது. இந்தப் பருவத்தில் வழக்கமாகப் பெய்யும் மழையைவிட இது அதிகம் என்று வானிலை மைய அதிகாரிகள் கூறுகிறார்கள். ஆனாலும் தஞ்சாவூர், திருவாரூர் , நாகை ஆகிய டெல்டா மாவட்ட விவசாயிகள் கைகளைப் பிசைந்துகொண்டு இருக்கிறார்கள்.
எப்படி சம்பா நெல்லைக் காப்பாற்றி மகசூல் எடுக்கப் போகிறோம் எனத் தெரியவில்லை என்று விவசாயிகள் புலம்புகிறார்கள். மழைக்காக தவமிருந்தவர்களின் வயிற்றில் பாலை வார்க்கவேண்டிய தண்ணீர் அவர்களை பரிதவிக்கவைத்து இருக்கிறது.
“இந்த முறை நல்ல மழை பெய்கிறது, ஆனால், இந்த மழையை எங்களால் இப்போது மட்டும்தான் பயன்படுத்த முடியும். மழைநீரை சேமித்துவைத்துப் பயன்படுத்த எந்த வசதியுமில்லை. இந்த மழைநீர் வடிவதற்கான சரியான வடிகால்கள் இல்லாத காரணத்தினால் மழைநீர் தேங்கி நின்று பயிர்கள் அழுகும் அபாயமும் உள்ளது" என்கிறார் திருவாரூர் மாவட்ட விவசாயிகள் சங்கத் தலைவர் திரு. சுந்தரமூர்த்தி. ( தினமணி )
இவ்வளவு மழைபெய்தும் இன்னும் எதிர்காலத்தின் தேவைப்படும் தண்ணீர் தேவைகளுக்கு மறுமழையையோ, புயல் சின்னத்தையோ, வளி மண்டலமேலடுக்கு சுழற்சியையோ அல்லது கர்நாடகத்தையோதான் எதிர்பார்த்து இருக்க வேண்டிய நிலைமை இருக்கிறது. காரணம் சேமிக்க வேண்டிய நீரை கடலுக்கு அனுப்பிவிட்டு அடுத்தவரிடம் கையேந்தும் நிலையில் நாமும் நமது நிர்வாகமும் இருப்பதுதான். நம்மால் மழை நீரை போதுமான அளவு சேமிக்க முடியாதது ஏன் ?
“ தமிழ்நாட்டில் இருந்த 39, 200 கண்மாய்களில் 10% கண்மாய்கள் ஆக்கிரமிப்பு காரணமாகவும், நகரமயமாதல் காரணமாகவும் அழிந்து போய்விட்டன. மொத்தக் கொள்ளளவில் 22% நீரை சேர்த்துவைக்க திறனுள்ள தமிழக கண்மாய்கள் தற்போது 30% தூர்ந்து போயுள்ளதால், 15% மட்டுமே தேக்க முடிகிறது" என்ற அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளார், சர்வதேச நீர் மேலாண்மை மையத்தின் (International Water Management Institute ) இயக்குனரான பழனிச்சாமி.
அவர் மேலும் கூறும்போது , “ தமிழகத்தில் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் மட்டுமே அணைகள் கட்டப்பட்டுள்ளன. தமிழகத்தில் நீர்ப்பிடிப்புப் பகுதிகள் குறைவு என்பதால் புதிய அணைகள் கட்ட வாய்ப்பில்லை. ஆனால், அதை ஈடுசெய்ய தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் கண்மாய்கள் பரவலாக உள்ளன. சிறு மற்றும் குறு விவசாயிகளில் பெரும்பாலானோர் கண்மாய் பாசனத்தைத்தான் நம்பியுள்ளனர். கிராமங்கள் மட்டுமில்லாமல், நகரங்களிலும் இதே நிலைதான் உள்ளது. நகரங்களில் அதிக அளவு மழை பெய்யும் போது, வடிகாலாகவும் உபரி நீரின் சேமிப்பு வங்கியாகவும் கண்மாய்கள் பயன்பட்டதால் நகரங்கள் வெள்ளப் பாதிப்பிலிருந்து தப்பின.
ஆனால், தற்போது நகரங்களில் இருந்த கண்மாய்கள் குடியிருப்புப் பகுதிகளாகவும், பஸ் ஸ்டாண்டுகளாகவும் மாறியதன் விளைவு, ஒருநாளின் சின்ன மழையைக் கூடத் தாங்க இயலாமல் நகர்ப்பகுதிகள் வெள்ளக்காடாகின்றன. “
எப்போது எந்த ஒரு சிறிய ஊரும் வளர்ச்சி பெற்று அங்கு புதிய அரசாங்கக் கட்டிடங்களோ நகர்ப் புறக் குடியமைப்பு அடுக்குமாடிக் கட்டிடங்களோ கட்டப்பட வேண்டுமானால் அனைவரும் கை வைப்பது ஏரிகள் மற்றும் குளங்கள் உள்ள இடங்களைத்தான். ஏதாவது போராட்டம் என்றால் தொடர்பு இருக்கிறதோ இல்லையோ கல்லால் அடி படுவது பரிதாபத்துக்குரிய பஸ்கள்தானே ! அதைப் போலத்தான் இதுவும்.
ஒரே நேரத்தில் வடிகாலாகவும் உபரிநீரின் சேமிப்பு நிலையங்களாகவும் செயல்பட்ட நீர்நிலைகள் தூர் வாரப்பட்டு பராமரிக்கப்படாததன் விளைவுகள் காரணமாக தமிழ்நாட்டில் வெள்ளம்! ஓடைகள் உடைப்பு! ஹெலிகாப்டரில் காப்பாற்றப்பட்ட மக்கள் ! என்றெல்லாம் செய்திகள் வருகின்றன.
செய்யக் கூடாதத்தை செய்வதாலும் செய்யவேண்டியதை செய்யாமல் விடுவதாலும் வருவது சீரழிவுதான் என்பதை எப்போதுதான் நிர்வாகம் உணரும்?
ஊர்ப்பெயர்களில் ஆறுமுகநேரி, பொன்னேரி, நாங்குனேரி, பாகனேரி , விளாத்திகுளம், குருங்குளம், கருங்குளம், அருங்குளம் , பரம்பிக்குளம் , காரைவாய்க்கால், ஆழிவாய்க்கால் , திருவையாறு, அடையாறு, கொள்ளிடம் காரைமடை, சேத்துமடை என்கிற நீர்நிலைகளின் பெயர்களை ஊர்களுக்கு சூட்டி மகிழ்ந்த நாடு தமிழ்நாடு. இதிலிருந்தே நமது முன்னோர்கள் அதிகம் படிக்காதவர்களாக இருந்தாலும் அறிவியல்ரீதியான பாசனமுறைக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுத்தனர் என்பதை உணரமுடியும்.
இது பற்றி இன்னும் நிறைய விவாதிக்க வேண்டும். இறைவன் நாடினால் அடுத்த வாரம்...