.

Pages

Tuesday, June 9, 2015

மாவட்ட ஆட்சியர் நடத்திய பறவை காய்ச்சல் நோய் முன்னெச்சரிக்கை நடவடிக்கை ஆலோசனைக் கூட்டம் !

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரக அலுவலகக்கூட்ட அரங்கில் பறவை காய்ச்சல் நோய் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் டாக்டர் என்.சுப்பையன் அவர்கள்  தலைமையில் நடைபெற்றது.

ஆலோசனைக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்ததாவது: உலகில் பல்வேறு நாடுகளிலும் பரவி வரும் பறவைக் காய்ச்சல் இந்தியாவில் குறிப்பாக தமிழ்நாட்டில் பரவாமல் இருக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.  மத்திய மற்றும் மாநில அரசுகளின் போர்கால நடவடிக்கைகள் மூலம் இந்நோய் முழுவதும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நோய் பறவை இனங்களை தாக்கும் ஒரு வைரஸ் நோய் ஆகும். இந்நோய் ஆங்கிலத்தில் Avian Influenza மற்றும் Bird Flu என்றழைக்கப்படுகிறது. இந்நோய் கோழி, வாத்து, வான்கோழி, நீர்பறவைகள் மற்றும் வனப்பறவைகள் முக்கியமாக தாக்கும்.  குதிரைகள், பன்றிகள் மற்றும் மனிதர்களையும் கூட இந்நோய் தாக்கவல்லது.

பறவைக் காய்ச்சல் வைரஸ் கிருமிகளுள் பல வகைகள் இருந்தாலும், H5,N1 என்ற வகை வைரஸ் கிருமி அதிக வீரியம் வாய்ந்தது. இந்நோய் பாதித்த பண்ணைகளின் இறந்த கோழிகளின் கழிவுகள், உபகரணங்கள், முட்டைத்தட்டு, கோழித்தீவனம், தண்ணீர், உடைந்த முட்டைகள் மற்றும் குஞ்சு பொரிப்பு இயந்திரங்கள், பறவைக் கூண்டுகள் ஆகியவற்றிலிருந்து வெளிப்படும் பறவைக் காய்ச்சல் வைரஸ், சுவாச காற்றின் மூலம் வேகமாக பரவுகிறது.

பறவைகளுக்கு இந்நோயின் அறிகுறிகள் தலை மற்றும் கொண்டை வீக்கம், கொண்டையில் நிறம் பரவுதல், சிலிர்ந்த இறகுகள், கண்கள் மற்றும் நாசியிலிருந்து நீர் வடிதல், தீவனத்தில் நாட்டமின்மை, சோர்வு, கழிச்சல், கெண்டைக்கால் பகுதிகளில் கருஞ்சிவப்பாக மாறுதல், கால்கள் நடக்க முடியாமல் பின்னி கொள்ளுதல் போன்றவற்றால் பாதிக்கப்பட்டால் உடனடியாக அப்பறவை இறக்க நேரிடும்.

மனிதர்களுக்கு பறவைக் காய்ச்சல், தொண்டைப்புண், இருமல், நிமோனியா, கண்களில் புண்கள், தசைகளில் வலி ஏற்படுதல், நோய் முற்றிய நிலையில் முச்சு திணறல் ஆகியவைகள் அறிகுறிகளாக தென்படும்.

நோய் வராமல் தடுக்க சுகாதார தடுப்பு முறைகளை மட்டுமே கையாள வேண்டும். வெளிநாட்டு பறவைகள் வந்து செல்லும் பறகைள் சரணாலயங்களுக்கு அருகில் கோழி அல்லது வாத்து கண்டிப்பாக வளர்க்கக் கூடாது.  நாடுவிட்டு நாடு பறந்து செல்லும் வனப்பறவைகள் பறவைக் காய்ச்சல் நோயை பரப்புகின்றன.

கோழிப்பண்ணைக்குள் இதர கோழிகள் அல்லது வனப்பறவைகள் நுழைவதை அறவே தடுக்க வேண்டும்.   கொக்கு, நாரை போன்ற நீர் பறவைகள் நுழைந்து விடாமல் தடுக்கும் வகையில் பண்ணை வளாகத்திற்குள் நீர்நிலைகள் ஏதும் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

கோழிகள், வாத்துகள் மற்றும் வான்கோழிகள் போன்ற பல்வேறு வகை பறவை இனங்களை ஒரே பண்ணையில் வைத்து பராமரிப்பதை தவிர்க்க வேண்டும். பண்ணையினுள் நுழையும் வாகனங்களின் சக்கரங்கள் மீது கிருமி நாசினிகளை விசைத் தெளிப்பான் மூலம் தெளித்த பின்னரே பண்ணையினுள் அனுமதிக்க வேண்டும்.  15 நாட்களுக்கொரு முறை பண்ணை வளாகத்தை முற்றிலும் சுத்தம் செய்து கிருமிநாசினி தெளிக்க வேண்டும்.

பண்ணையினுள் மனித நடமாட்டம் மிகக் குறைந்த அளவிலேயே இருத்தல் வேண்டும். கோழி எச்சம் உள்ள இடங்களில் சிறுவர்களை விளையாட விடக்கூடாது. கோழி வளர்க்கும் இடங்களில் செருப்பு அணியாமல் நடக்க வேண்டாம். கோழக் கூண்டு சுத்தம் செய்யும் போது மூக்கின் மீது துணி கட்டி முடிக்கொள்ளவும், சுத்தம் செய்த பின்பு கைகளை நன்கு சோப்பு போட்டு கழுவுங்கள்.

தமிழ்நாட்டில் பறவைக்காய்ச்சல் நோய் இல்லை.  எனவே நன்கு சமைத்த கோழிக்கறி மற்றும் முட்டை தைரியமாக சாப்பிடலாம்.  முழுக்கோழியை அப்படியே சமைப்பது கூடாது.   ஏனெனில் கோழி உடலின் அனைத்து பகுதிகளில் வெப்பம் எட்டாமல் போய்விடலாம்.  அரைவேக்காட்டில் சமைத்த கோழி அல்லது முட்டை உண்ணக்கூடாது.

பச்சை முட்டை அல்லது ஆப்பாயில் சாப்பிடக்கூடாது.  முழுமையாக அவித்த முட்டை அல்லது முழுமையாக பொரித்த ஆம்லெட் சாப்பிடலாம்.  எனவே பறவைக்காய்ச்சல் நோய் பற்றிய அச்சம் தேவையில்லை. மேலும் விவரங்களுக்கு அருகில் உள்ள அரசு கால்நடை மருத்துவரை அணுகலாம். இவ்வாறு மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் என்.சுப்பையன் அவர்கள் தெரிவித்தார்.

ஆலோசனைக் கூட்டத்தில் கால்நடை பராமரிப்புத்துறை இணை இயக்குநர் டாக்டர் செல்வ விநாயகம், உதவி இயக்குநர் டாக்டர் நெடுஞ்செழியன், சுகாதாரத்துறை இணை இயக்குநர் டாக்டர் மீனாட்சி, துணை இயக்குநர் டாக்டர் சுப்பிரமணி, ஊராட்சிகள் உதவி இயக்குநர் திரு.ராஜகோபாலன், வனத்துறை வனவர் திரு.பார்த்தசாரதி, கால்நடை பராமரிப்புத்துறை உதவி இயக்குநர்கள் உள்ளிட்ட அலுவலர்கள் பங்கேற்றனர்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.