இன்று தஞ்சாவூர் அரண்மனை வளாகத்தில் புத்தக திருவிழா நடைபெறவுள்ள இடத்தினை பார்வையிட்டு ஆய்வு செய்த மாவட்ட ஆட்சித் தலைவர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:
தஞ்சாவூர் மன்னர் சரபோஜி சரஸ்வதி மஹால் நூலகம், தமிழ் பல்கலைக் கழகம், மாவட்ட தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள், பதிப்பாளர்கள் சங்கம் ( BAPASI ) மற்றும் மாவட்ட நிர்வாகம் இணைந்து மாபெரும் புத்தக கண்காட்சியினை நடத்துகின்றது.
பல்கலைக்கழக ஆராய்ச்சி மாணவர்கள், கல்லூரி மாணவர்கள், பள்ளி மாணவர்கள் மற்றும் பொது மக்கள் பயன் பெறும் வகையில் தஞ்சாவூர் அரண்மனை வளாகத்தில் 12.06.2015 முதல் 21.06.2015 முடிய தஞ்சாவூர் புத்தகத் திருவிழா நடைபெறவுள்ளது. இப்புத்தக திருவிழா காலை 11.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை நடைபெறும். நுழைவுக் கட்டணம் கிடையாது. சிறப்பு பேருந்து வசதியும் ஏற்படுத்தப்படவுள்ளது.
விவசாயம் சார்ந்த பகுதியாக இருப்பதால், விவசாயம் சார்ந்து மட்டும் பேசாமல் அறிவுத் தேடலுக்கு அறிவு சார்ந்த இது போன்ற புத்தகத் திருவிழா நடத்தப்பட வேண்டும். இதன் மூலம் பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதுடன் வன்முறையற்ற சமுதாயம் அமைய அனைவரும் படிப்பது அவசியமாகும். புத்தகத் திருவிழாவில் அதிகபட்சமாக 25 சதவிகிதமும், குறைந்தபட்சமாக 10 சதவிகிதமும் புத்தக விலையில் தள்ளுபடி செய்து தரப்படும். தற்போது பள்ளிகளில் வாசிப்பு போட்டி நடைபெற்று வருகிறது. அதில் வெற்றி பெறும் மாணவ மாணவியர்கள் அடுத்ததாக பள்ளிகளுக்கிடையிலேயான புத்தகம் வாசிக்கும் போட்டி அரண்மனை வளாகத்தில் உள்ள புத்தக கண்காட்சி அரங்கில் நடைபெறும்.
மாவட்ட நூலகங்களும் இந்த புத்தக கண்காட்சியினை பயன்படுத்திக் கொள்ளலாம். நிகழ்ச்சியில பங்கு கொள்ளும் அனைவருக்கும் பரிசுக் கூப்பன் வழங்கப்படும். அதில் தேர்ந்தெடுக்கப்படும் நபர்களுக்கு புத்தகங்கள் பரிசாக வழங்கப்படும்.
இப்புத்தகத் திருவிழாவில் 120 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் பல்வேறு முதன்மையான பதிப்பகத்தரால் வெளியிடப்பட்டுள்ள அறிவியல், தொழில் நுட்பம், வரலாறு, பொது அறிவு, போட்டி தேர்வுகளுக்கான புத்தகங்கள் மற்றும் பல்வேறு துறைகளில் சிறந்த புத்தகங்கள் இடம் பெற உள்ளன.
மேலும் தஞ்சாவூர் புத்தக திருவிழாவில் சிறப்பு பேச்சாளர்கள் திரு.சுகிசிவம், திரு.கு.ஞானசம்பந்தம், முனைவர் அ.அறிவொளி, கவிஞர் நந்தலாலா, திரு.எஸ்.ராம கிருஷ்ணன், திரு.தா.க.சுப்பிரமணியன், மற்றும் திருமதி பாரதிபாஸ்கர் உள்ளிட்டோர் பல்வேறு தலைப்புகளில் தினசரி சொற்பொழிவு ஆற்ற உள்ளார்கள். தினசரி கலை நிகழ்ச்சிகளும் நடைபெறும். சிறுவர்களுக்கான பொழுதுபோக்கு அம்சங்களும் இடம் பெற்றுள்ளது. .
மாநகராட்சி மூலம் குடிநீர் வசதி செய்யப்பட்டுள்ளது. மேலும், அன்றாடம் சுத்தம் செய்யும் பணிகளை மேற்கொள்ளப்படும்.
எனவே, பள்ளி, கல்லூரி மாணவ மாணவியர்கள் அரசு அலுவலர்கள் மற்றும் பொது மக்கள் அனைவரும் சிறப்பாக நடைபெறும் தஞ்சாவூர் புத்தகத் திருவிழாவில் பங்கேற்க கேட்டுக்கொள்கிறேன். அனைவருக்கும் தேவையான புத்தகங்களை வாங்கி பயன் பெற கேட்டுக்கொள்கிறேன்.
தஞ்சாவூர் புத்தகத் திருவிழாவில் கலந்து கொள்ளும் பதிப்பாளர்களின் பெயர்கள், புத்தகங்களின் பெயர்கள் மற்றும் இதர விபரங்கள் www.thanjavurbookfestival.com என்ற இணைய தளத்தில் அறிந்து கொள்ளலாம். இந்த அரிய வாய்ப்பினை தஞ்சாவூர் மாவட்ட பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் பொது மக்கள் பயன்டுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் என்.சுப்பையன் அவர்கள் தெரிவித்தார்.
சுற்றுலாத்துறை அலுவலர் திரு.உரு.ராஜசேகரன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (ஊரக வளர்ச்சி) திரு.கதிரேசன், அருட்காட்சியக காப்பாட்சியர் திரு.சிவக்குமார் ஆகியோர் உடன் இருந்தனர்.


நல்லபாராட்டதக்கநல்லஏற்ப்பாடு.அதிரையர்கள்பயன்படுதிக் கொள்வார்களாக!இதுபோல்புத்தககண்காட்சியேஅதிரையிலும் நடத்தமுயற்சிசெய்யலாம்.
ReplyDelete