.

Pages

Friday, May 31, 2019

மரண அறிவிப்பு ~ ரஹ்மத் அம்மாள் (வயது 68)

அதிரை நியூஸ்: மே 31
அதிராம்பட்டினம், மேலத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் அ.அ சித்திக்  மரைக்காயர் அவர்களின் மகளும், அ.அ அப்துல் வஹாப் அவர்களின் மனைவியும், அப்துல் ரஹ்மான், பகுருதீன் ஆகியோரின் தாயாரும், அ.அ சாகுல் ஹமீது, அ.அ முகமது தம்பி ஆகியோரின் சிறிய தாயாரும், எஸ். பசீர் அகமது, எம். முகமது அலி, என். முகமது சலீம் ஆகியோரின் மாமியாருமாகிய ரஹ்மத் அம்மாள் (வயது 68) அவர்கள் இன்று வஃபாத்தாகி விட்டார்கள்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜுவூன்

அன்னாரின் ஜனாஸா நாளை (01-06-2019) காலை 11 மணியளவில் பெரிய ஜும்மா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.

மரண அறிவிப்பு ~ ஹாஜிமா ராபியா அம்மாள் (வயது 71)

அதிரை நியூஸ்: மே 31
அதிராம்பட்டினம், புதுமனைத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் அகமது தம்பி மரைக்காயர் அவர்களின் மகளும், செய்யது புஹாரி அவர்களின் மனைவியும், அப்துல் ரெஜாக் அவர்களின் தாயாரும், அப்துல் காதர், தமீம் அன்சாரி, அப்துல் அஜீஸ் ஆகியோரின் மாமியாருமாகிய ஹாஜிமா ராபியா அம்மாள் (வயது 71) அவர்கள் இன்று நெசவுத்தெரு இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜுவூன்

அன்னாரின் ஜனாஸா இன்று (31-05-2019) இரவு 11 மணியளவில் தக்வா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.

ஆசிரியர் தகுதி தேர்வு ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் (படங்கள்)

தஞ்சாவூர் மாவட்டம், மாவட்ட ஆட்சியர் முகாம் அலுவலக கூட்டரங்கில் ஆசிரியர் தகுதி தேர்வுக்கான ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆ.அண்ணாதுரை தலைமையில் இன்று (30.05.2019) நடைபெற்றது.

ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்ததாவது:-
தஞ்சாவூர் மாவட்டத்தில் வருகின்ற 08.06.2019 மற்றும் 09.06.2019 ஆகிய தேதிகளில் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் ஆசிரியர் தகுதி தேர்வு நடைபெறவுள்ளது. 08.06.2019 அன்று நடைபெறவுள்ள முதல் தாள் தேர்வில் தஞ்சாவூர் கல்வி மாவட்டத்தில் 6 தேர்வு மையங்களில் 2615 தேர்வர்களும், கும்பகோணம் கல்வி மாவட்டத்தில் 4 தேர்வு மையங்களில் 1860 தேர்வர்களும், பட்டுக்கோட்டை கல்வி மாவட்டத்தில் 4 தேர்வு மையங்களில் 1526 தேர்வர்களும் தேர்வு எழுதவுள்ளனர்.

09.06.2019 அன்று நடைபெறவுள்ள இரண்டாம் தாள் தேர்வில் தஞ்சாவூர் கல்வி மாவட்டத்தில் 16 தேர்வு மையங்களில் 6641 தேர்வர்களும், கும்பகோணம் கல்வி மாவட்டத்தில் 13 தேர்வு மையங்களில் 5589 தேர்வர்களும், பட்டுக்கோட்டை கல்வி மாவட்டத்தில் 9 தேர்வு மையங்களில் 3786 தேர்வர்களும், ஒரத்தநாடு கல்வி மாவட்டத்தில் 2 தேர்வு மையங்களில் 629 தேர்வர்களும் தேர்வு எழுதவுள்ளனர். ஆசிரியர் தகுதி தேர்வு சிறப்பாக நடைபெறுவதற்கு தொடர்புடைய அலுவலர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள பணியினை திறம்பட மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்தார்.

ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் முதன்மை கல்வி அலுவலர் சாந்தா மற்றும் பள்ளிக் கல்வித் துறை, வருவாய்த்துறை, காவல் துறை, மாவட்ட ஆய்வு குழு, போக்குவரத்துத் துறை, தீயணைப்புத் துறை, மின்சார வாரியம், ஆசிரியர் கல்வி பயிற்சி நிறுவனம் ஆகிய துறைகளின் அலுவலர்கள்                கலந்து கொண்டனர்.

Thursday, May 30, 2019

அதிராம்பட்டினம் ரயில் நிலையம் சாலை அளவீடு பணி (படங்கள்)

அதிராம்பட்டினம், மே 30
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் ரயில் நிலையம் செல்லும் பழுதடைந்த சாலையை புதிதாக அமைக்கவும், ரயில் நிலையம் குடியிருப்பு பகுதியில் தேங்கும் கழிவு நீர் ~ மழை நீரை அப்புறப்படுத்த முறையான வடிகால் வசதி அமைத்து தரக் கோரி, அதிராம்பட்டினம் ரயில் பயணிகள் நலச்சங்கத் தலைவர் ஹாஜி எம்.எஸ் ஷிகாப்தீன் தலைமையில், செயலாளர் ஹாஜி ஏ.அப்துல் ரெஜாக், நிர்வாகிகள் முகமது இப்ராகிம், சேக்கனா நிஜாம், அகமது கபீர், ஏ. அப்துல் ஹாதி, தஸ்லீம் ஆரிப் உள்ளிட்டோர் அதிராம்பட்டினம் பேரூர் செயல் அலுவலர் எல்.ரமேஷ் அவர்களை அலுவலகத்தில் நேற்று புதன்கிழமை மாலை சந்தித்து மனு அளித்தனர்

இந்நிலையில், அதிராம்பட்டினம் ரயில் நிலையம் செல்லும் சாலை அமைக்க, அதிராம்பட்டினம் பேரூராட்சி செயல் அலுவலர் எல். ரமேஷ் மேற்பார்வையில், பேரூராட்சி பணி மேற்பார்வையாளர் (பொறியியல்) ராமலிங்கம் மற்றும் பேரூராட்சி ஊழியர்கள் இன்று வியாழக்கிழமை அளவீடு செய்தனர். இதில், அதிராம்பட்டினம் ஈஸ்ட் கோஸ்ட் சாலை தொடங்கி ஹாஜா நகர், கடற்கரைத்தெரு வழியாக ரயில் நிலையம் வரையிலான 650 மீட்டர் நீளம் கணக்கிடப்பட்டது. பின்னர், அதிராம்பட்டினம் ரயில் நிலையம் குடியிருப்பு பகுதியில் தேங்கும் கழிவு நீர் ~ மழை நீரை அப்புறப்படுத்த வடிகால் வசதி அமைப்பதற்கான சாத்தியக்கூறு பற்றி ஆய்வைக் மேற்கொண்டனர்.

அப்போது, அதிராம்பட்டினம் பேரூராட்சி துப்புரவு மேற்பார்வையாளர் வெங்கடேசன், அதிராம்பட்டினம் ரயில் பயணிகள் நலச்சங்க செயலாளர் ஹாஜி ஏ.அப்துல் ரெஜாக், நிர்வாகிகள் சேக்கனா நிஜாம், தஸ்லீம் ஆரிப் ஆகியோர் உடன் இருந்தனர். அடுத்து ஓரிரு நாட்களில் சாலைப் பணிக்கான திட்ட மதிப்பீடு தயாரித்து உயர் அதிகாரியின் ஒப்புதலுக்கு அனுப்ப இருப்பதாக பேரூராட்சி நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
 

Wednesday, May 29, 2019

மரண அறிவிப்பு ~ ஆய்ஷா அம்மாள் (வயது 70)

அதிரை நியூஸ்: மே 29
அதிராம்பட்டினம், புதுமனைத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் சுண்டைக்காய் 'மொமியாக்கா' என்கிற முகமது முகைதீன் அவர்களின் மகளும், மு.செ.மு மஹ்மூது அவர்களின் மனைவியும், மர்ஹூம் முகமது ஜெக்கரியா, முகமது அப்பாஸ், அகமது கபீர் ஆகியோரின் சகோதரியும், முகமது இக்ராம், அப்துல் கஃபார் ஆகியோரின் தாயாரும், அன்சார் டிராவல்ஸ் எஸ். அப்துல் ரெஜாக் அவர்களின் மாமியாருமாகிய ஆய்ஷா அம்மாள் (வயது 70) அவர்கள்  இன்று சி.எம்.பி லேன் ஏ.எல் மெட்ரிக். பள்ளி எதிரில் உள்ள இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜுவூன்

அன்னாரின் ஜனாஸா நாளை (30-05-2019) பகல் லுஹர் தொழுதவுடன் தக்வா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.

அதிராம்பட்டினத்தில் இஃப்தார் நிகழ்ச்சியில் 1000 பேர் பங்கேற்பு (படங்கள்)

அதிராம்பட்டினம், மே 29
அதிராம்பட்டினத்தில் நடைபெற்ற இஃப்தார் நிகழ்ச்சியில் 1000 பேர் பங்கேற்றனர்.

தஞ்சாவூர்  மாவட்டம், அதிராம்பட்டினம் வெற்றிலைக்காரத் தெரு, காலியார் தெரு பகுதி இளைஞர்கள் சார்பில், 'இஃப்தார்' எனும் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி காலியார் தெருவில் இன்று புதன்கிழமை மாலை நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில், அதிராம்பட்டினம் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த சுமார் 1000 பேர் பங்கேற்றனர். இவர்கள் அனைவரும் சுமார் 500 மீட்டர் நீளம் கொண்ட பிரதான சாலையில், 4 வரிசைகளில் அமர்ந்து இருந்தனர். பிரமாண்டமாக காட்சியளித்த இந்நிகழ்ச்சியில், நோன்பு கஞ்சி, பேரிச்சை பழம், சமூசா, கடல்பாசி, பழ ஜூஸ், ஐஸ் கிரீம் உட்பட 10 வகை உணவு வகைகள் பரிமாறப்பட்டன.
 

அதிராம்பட்டினம் ரயில் நிலையம் செல்லும் பழுதடைந்த சாலையை புதிதாக அமைத்துதர கோரிக்கை!

அதிராம்பட்டினம், மே 29
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் ரயில் நிலையம் செல்லும் பழுதடைந்த சாலையை புதிதாக அமைக்கவும், ரயில் நிலையம் குடியிருப்பு பகுதியில் தேங்கும் கழிவு நீர் ~ மழை நீரை அப்புறப்படுத்த முறையான வடிகால் வசதி அமைத்து தரக் கோரி, அதிராம்பட்டினம் ரயில் பயணிகள் நலச்சங்கத் தலைவர் ஹாஜி எம்.எஸ் ஷிகாப்தீன் தலைமையில், செயலாளர் ஹாஜி ஏ.அப்துல் ரெஜாக், நிர்வாகிகள் முகமது இப்ராகிம், சேக்கனா நிஜாம், அகமது கபீர், ஏ. அப்துல் ஹாதி, தஸ்லீம் ஆரிப் உள்ளிட்டோர் அதிராம்பட்டினம் பேரூர் செயல் அலுவலர் எல்.ரமேஷ் அவர்களை அலுவலகத்தில் இன்று புதன்கிழமை மாலை சந்தித்து மனு அளித்தனர்.

மனுவில் கூறியிருப்பது;
பட்டுக்கோட்டை ~ திருவாரூர் அகல ரயில் ரயில் பாதை அமைக்கும் பணிகள் நிறைவடைந்ததையடுத்து, வரும் ஜூன் 1 முதல் திருவாரூர் ~ பட்டுக்கோட்டை ~ காரைக்குடி வழித்தடத்தில் பயணிகள் ரயில் போக்குவரத்து சேவை தொடங்க உள்ளது.

இந்நிலையில், கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்ட அதிராம்பட்டினம் ரயில் நிலையம் செல்லும் சாலை சீரமைக்காமல் மிகவும் பழுதடைந்து காணப்படுகின்றன. இப்பகுதியில், அதிராம்பட்டினம் ரயில் நிலையம், ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, அர்ரவ்ழா இஸ்லாமிய மகளிர் கல்லூரி மற்றும் ஹஜரத் ஹாஜா செய்கு அலாவுதீன் தர்ஹா, கடற்கரைத்தெரு ஜும்மா பள்ளிவாசல் உள்ளிட்ட வழிபாட்டு தளங்கள் அமைந்துள்ளதால், நாள்தோறும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் இச்சாலையில் கடந்து செல்கின்றன.

கடந்த சில ஆண்டுகளாக நடந்து வந்த அதிராம்பட்டினம் ரயில் நிலைய கட்டுமானப்பணியின் போது, இந்த வழியாக கனரக வாகனங்களில் பொருட்கள் ஏற்றிச் செல்லப்பட்டன. இதனால் சாலை பழுதடைந்து ஆங்காங்கே குண்டு, குழியுமாக காட்சி தருகிறது. மழைக்காலங்களில் தண்ணீர் ஆங்காங்கே தேங்கி நின்று, பயணம் செய்ய முடியாத நிலையிலும், வெயில் காலங்களில் செம்மண் தூசிகள் பறந்து அப்பகுதியில் பொதுமக்கள் குடியிருக்க முடியாத நிலையில் உள்ளது. எனவே, அதிராம்பட்டினம் ரயில் நிலையம் செல்லும் பழுதடைந்த சாலையை புதிதாக அமைத்துதர துரித நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமெனவும், ரயில் நிலைய  நுழைவாயில் பகுதியில் சுமார் 10 அடி உயரத்திற்கு மண் நிரப்பப்பட்டுள்ளதால், கழிவு நீர் / மழை நீர் சீராகச் செல்ல வழியில்லாமால் வடிகாலில் நிரம்பி வழிந்து அருகில் உள்ள சாலைகளில் ஆங்காங்கே தேங்கிவிடுகிறது. இதனால், இப்பகுதியில் துர்நாற்றம் வீசி வருகின்றன. தொற்று நோய் பரவும் அபாயம் இருப்பதால் எங்கள் பகுதி பொதுமக்கள் கலக்கமடைந்துள்ளனர்.

எனவே, கழிவு நீர் / மழை நீர் குடியிருப்பு பகுதிகளில் தேங்காதவாறும், சீராகச் செல்லும் வகையிலும், புதிதாக காங்கிரட் மூடியுடன் கூடிய மழை நீர் வடிகால் அமைத்து தருவதற்குரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். என்று அதில் கூறப்பட்டுள்ளது.

மனுவை பெற்றுக்கொண்ட அதிராம்பட்டினம் பேரூர் செயல் அலுவலர் எல்.ரமேஷ் கோரிக்கை மீது உரிய நடவடிக்கையை ஓரிரு நாட்களில் தாம் மேற்கொள்வதாக உறுதியளித்தார்.

Tuesday, May 28, 2019

ஜூன் 1ந் தேதி முதல், திருவாரூர் ~ பட்டுக்கோட்டை ~ காரைக்குடி வழித்தடத்தில் பயணிகள் ரயில் சேவை தொடக்கம்!

அதிராம்பட்டினம், மே 28
ஜூன் 1ந் தேதி முதல் திருவாரூர் ~ பட்டுக்கோட்டை ~ காரைக்குடி இடையே பயணிகள் ரயில் போக்குவரத்து சேவை தொடங்க உள்ளது.

பட்டுக்கோட்டை ~ திருவாரூர் அகல ரயில் ரயில் பாதை அமைக்கும் பணிகள் நிறைவடைந்ததையடுத்து, கடந்த மார்ச் 29ந் தேதி அதிவேக சோதனை ஓட்டம் நடந்து முடிந்தது. இதையடுத்து, இந்த வழித்தடத்தில் ரயில் போக்குவரத்து சேவையை உடனடியாக தொடங்க வேண்டுமென பல்வேறு தரப்பினர் தொடர் கோரிக்கை விடுத்து வந்தனர். மேலும், பட்டுக்கோட்டை ~ காரைக்குடி இடையே இயக்கப்பட்டு வந்த பயணிகள் போக்குவரத்து சில நிர்வாகக் காரணங்களால் தற்காலிகமாக நிறுத்தப்பட்டதால் ரயில் பயணிகள், வர்த்தகர்கள், மாணவர்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகினர்.

இந்நிலையில், திருவாரூர் ~ பட்டுக்கோட்டை ~ காரைக்குடி இடையே பயணிகள் சிறப்பு ரயிலை இயக்க ரயில்வே துறைக்கு அனுமதி கிடைத்துள்ளதையடுத்து, வரும் ஜூன் 1ந் தேதி முதல் திருவாரூரிலிருந்து (வண்டி எண்: 06847) காலை 8.15 மணிக்குப் புறப்பட்டு திருத்துறைப்பூண்டி, தில்லைவிளாகம், முத்துப்பேட்டை, அதிராம்பட்டினம் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று, பட்டுக்கோட்டை ரயில் நிலையத்திற்கு காலை 11.30 மணிக்கு வந்து சேரும். பின்னர் அங்கிருந்து காலை 11.32 மணிக்கு புறப்பட்டு, ஒட்டங்காடு, பேராவூரணி, ஆயங்குடி, அறந்தாங்கி, வாளரமாணிக்கம், பெரியகோட்டை, பெரியகோட்டை, புதுவயல், கண்டனூர் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று, பின்னர் பிற்பகல் 14.15 மணிக்கு காரைக்குடி ரயில் நிலையத்தை அடையும் எனவும், எதிர் மார்க்கத்தில், காரைக்குடியில் இருந்து (வண்டி எண்: 06848) பிற்பகல் 14.30 மணிக்குப் புறப்படும் ரயில் பட்டுக்கோட்டை ரயில் நிலையத்திற்கு மாலை 17.18 மணிக்கு வந்து சேரும், பின்னர் அங்கிருந்து மாலை 17.20 மணிக்கு புறப்பட்டு, இரவு 20.30 மணிக்கு திருவாரூர் சென்றடையும் என்றும், இந்த பயணிகள் ரயில் சேவை ஜூன் 1ந் தேதி தொடங்கி, வரும் ஆகஸ்ட் 30 ந் தேதி வரை  ஞாயிற்றுக்கிழமை தவிர்த்து வாரத்தில் 6 நாட்கள் மட்டும் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

திருவாரூர் ~ பட்டுக்கோட்டை ~ காரைக்குடி வழித்தடத்தில் பயணிகள் ரயில் இயங்கும் கால அட்டவணை:

ஞாயிற்றுக்கிழமை தோறும் திருச்சி ~ திருவாரூர் வழித்தடத்தில் பயணிகள் ரயில் இயங்கும் கால அட்டவணை:

இறகுப்பந்து போட்டியில் காதிர் முகைதீன் பெண்கள் பள்ளி மாணவி தொடர் சாதனை!

தொடர் சாதனை நிகழ்த்திய பள்ளி மாணவி அஸ்மிதா
அதிராம்பட்டினம், மே.28
மன்னார்குடி சாய்னா இறகுப் பந்து கழகத்தின் சார்பில், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்கள் அடங்கிய மண்டல அளவிலான இறகுப்பந்துப் போட்டி மன்னார்குடியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில், தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி அ. அஸ்மிதா கலந்து கொண்டு, 15 வயதிற்குட்பட்ட பெண்கள் ஒற்றையர் பிரிவில் முதலிடமும், 19 வயதிற்குட்பட்ட பெண்கள் ஒற்றையர் பிரிவில் முதலிடமும், 17 வயதிற்குட்பட்ட பெண்கள் ஒற்றையர் பிரிவில் மூன்றாமிடம் பெற்று பள்ளிக்கும், அதிராம்பட்டினத்திற்கும் பெருமை சேர்த்துள்ளார்.

ஏற்கனவே இவர் மாவட்ட, மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்று சிறப்பிடம் பெற்றுள்ளார். மேலும், கடந்த மே.10, 11, 12 ஆகிய தேதிகளில் அகில இந்திய அளவிலான இறகுப்பந்து சாம்பியன்ஷிப் போட்டியில் மாணவி அஸ்மிதா வெண்கலப் பதக்கம் வென்று சாதனை படைத்திருப்பது குறிப்பிடத்தக்கது. இவர், அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி முதுகலை ஆசிரியர் ஆ.அஜுமுதீன் மகள் ஆவார்.

தொடர் சாதனை படைத்த மாணவி அஸ்மிதா, பயிற்சியளித்த உடற்கல்வி ஆசிரியர் ஆகியோரை, பள்ளித் தாளாளர் எஸ்.ஜெ அபுல் ஹசன், காதிர் முகைதீன் கல்லூரி முதல்வர் ஏ.முகமது முகைதீன், பள்ளித்தலைமை ஆசிரியை எம்.சுராஜ் மற்றும் ஆசிரியர்கள், அலுவலக, ஆய்வகப் பணியாளர்கள், பெற்றோர்கள் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.

காரைக்குடி ~ திருவாரூர் ரயில் சேவையை தொடங்க வேண்டும்: ஓய்வூதியர் சங்கம் வலியுறுத்தல்!

பட்டுக்கோட்டை மே.28-
தமிழ்நாடு அரசு  அனைத்து துறை ஓய்வூதியர் சங்கத்தின் பட்டுக்கோட்டை வட்டக் கிளை மூன்றாம் ஆண்டு மாநாடு பட்டுக்கோட்டை விஜயாலயம் நகராட்சி நடுநிலைப் பள்ளியில் நடைபெற்றது.

சங்கக் கொடியை வட்டக் கிளைத் தலைவர் ஆர்.தமிழ்ச்செல்வன் ஏற்றி வைத்தார். தியாகிகள் நினைவு ஸ்தூபிக்கு மலரஞ்சலி செலுத்தி மாநாடு தொடங்கியது. வட்டத் தலைவர் ஆர்.தமிழ்ச்செல்வன் மாநாட்டிற்கு தலைமை வகித்தார். தமிழரசன் தமிழ்தாய் வாழ்த்து பாடினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் கண.கல்யாணம் அஞ்சலி தீர்மானம் வாசித்தார். த.வேதையன் வரவேற்றார்.

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க தஞ்சை மாவட்ட துணைத்தலைவர் சிவ. ரவிச்சந்திரன் மாநாட்டை துவக்கி வைத்து உரையாற்றினார். வட்டச் செயலாளர் சு.க.பாலகிருஷ்ணன் வேலை அறிக்கை வாசித்தார். பொருளாளர் ஆர். புருஷோத்தமன் நிதிநிலை அறிக்கை வாசித்தார். விவாதத்தில் ஏ.மணி, எஸ். பட்டாபிராமன் கலந்து கொண்டனர்.

தீர்மானம் 
கூட்டத்தில், காரைக்குடி - திருவாரூர் அகல ரயில் பாதை பணிகள் முடிந்து, மார்ச் 29 இல் சோதனை ஓட்டமும் நிறைவு பெற்ற நிலையில், இதுவரை ரயில் சேவை இயக்கப்படவில்லை. காரைக்குடி - திருவாரூர் அகல ரயில் பாதையில் லெவல் கிராசிங் கேட்டுகளுக்கு, கேட்கீப்பர்கள் பணியமர்த்தாத காரணத்தினால், ரயில் சேவை தொடங்கப்படவில்லை.

எனவே காலியாக உள்ள ஸ்டேஷன் மாஸ்டர், கேட் கீப்பர் பணியிடங்களை ரயில்வே நிர்வாகம் உடனடியாக நிரப்பி, பொதுமக்களுக்கு முழு அளவிலான ரயில் சேவையை தொடங்க வேண்டும். ஏற்கனவே மீட்டர் கேஜ் பாதையில் இயங்கியது போல, சென்னைக்கும், காரைக்குடிக்கும் இரு முனைகளில் இருந்தும் இரவு, பகல் நேர ரயில் வசதி செய்ய வேண்டும்.

மயிலாடுதுறை, திருவாரூர், பட்டுக்கோட்டை வழியாக காரைக்குடிக்கு பள்ளி, கல்லூரி மாணவர்கள், பொது மக்களுக்கு பயன்படும் வகையிலும், சென்னை செல்லும் இரவு மற்றும் பகல் நேர விரைவு ரயில்களுக்கு இணைப்பு ரயிலாக பயணிகள் ரயில்களை இயக்க வேண்டும்" என்பன உள்ளிட்ட 6 தீர்மானங்களை ஆர்.மனோகரன், என்.செல்வம், பி.சமுதாக்கனி,
ஜீ.தெட்சிணாமூர்த்தி, த. சந்திரமோகன் ஆகியோரால் முன்மொழியப்பட்டது.

பாராட்டு 
75 வயதுக்கு மேற்பட்ட ஓய்வூதியர்களுக்கு கைத்தறி துண்டு அணிவித்து பேராசிரியர் மரு.சி.கணேசன் பாராட்டுரை வழங்கினார். ஜாக்டோ- ஜியோ போராட்டத்தில் கலந்துகொண்டு கைதாகி சிறை சென்ற வருவாய் கிராம உதவியாளர்கள் கே.பாலு, டி.ஜெயக்குமார், பி.முகுந்தன், சி.ஜார்ஜ், சத்தியராஜ், வி.கிருஷ்ணமூர்த்தி ஆகியோருக்கு கைத்தறி ஆடை அணிவித்து, மாவட்ட துணைத் தலைவர் ஏ.விஸ்வநாதன், மாவட்ட இணைச் செயலாளர் ஆர்.அண்ணாதுரை ஆகியோர் பாராட்டிப் பேசினர்.

மாநாட்டில் தோழமை தொழிற் சங்கத்தின் நிர்வாகிகள் சி.திருஞானம்,
எஸ்.பாலகிருஷ்ணன், பி.அறிவழகன், ஏ.செல்வராஜ், முருக.சரவணன், கி.பிச்சைமுத்து ஆகியோர் வாழ்த்தி பேசினர்.

புதிய நிர்வாகிகள் தேர்வு 
இம் மூன்றாவது மாநாட்டில் சங்க வட்ட கிளை புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். தலைவராக ஆர்.அண்ணாதுரை, செயலாளராக கண.கல்யாணம், துணைத் தலைவர்களாக ஆர்.தமிழ் செல்வன், தி.தமிழரசன், இணைச் செயலாளர்களாக க.கிருஷ்ணமூர்த்தி, எஸ்.ஆறுமுகம் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

தேர்வு செய்யப்பட்ட புதிய நிர்வாகிகளை அறிமுகம் செய்து வைத்து சங்கத்தின் மாவட்ட துணைத் தலைவர் ஆர்.தமிழ்மணி நிறைவுரையாற்றினார். நிறைவாக க.கிருஷ்ணமூர்த்தி நன்றி கூறினார். கூட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
 
 

Monday, May 27, 2019

'உங்களில் ஒருவனாக இருந்து தொண்டாற்றுவேன்' ~ அதிரையில் எஸ்.எஸ் பழனிமாணிக்கம் பேச்சு!

அதிராம்பட்டினம், மே 27
நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க சார்பில் தஞ்சை தொகுதியில் போட்டியிட்ட எஸ்.எஸ் பழனிமாணிக்கம் 3,68,129 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். தனது வெற்றிக்கு பாடுபட்ட திமுக தலைமையிலான காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி, விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்ட் கட்சிகள், மதிமுக உள்ளிட்ட பல்வேறு கூட்டணிக்கட்சி நிர்வாகிகள் மற்றும் தொகுதி மக்களை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்து வருகிறார்.

அதன்படி, அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்திற்கு இன்று திங்கட்கிழமை இரவு வருகை தந்த எஸ்.எஸ் பழனிமாணிக்கம், சுமார் 11,000 த்திற்கும் மேற்பட்ட வாக்குகளை செலுத்தி வெற்றி பெற செய்த அதிராம்பட்டினம் பேரூர் பகுதி பொதுமக்களுக்கு நன்றி தெரிவித்து பேசியது;  
எனது வேண்டுகோளை ஏற்று நான் எதிர்பார்த்ததை வீட அதிக வாக்குகள் வித்தியாசத்தில் என்னை வெற்றி பெற செய்தீர்கள். தேர்தலின் போது நீங்கள் அளித்த வேண்டுகோளை நிறைவேற்றித்தருவது என்னுடைய கடமை.

திமுக கூட்டணியை சேர்ந்த அணி மத்தியில் ஆட்சியில் வராத காரணத்தால், நீங்கள் அளித்த வாக்குறுதிகளெல்லாம் நிறைவேற்ற முடியுமா? என்று கேள்வி கேட்க தொடங்கி இருக்கின்றனர். காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையானாலும், திமுக தேர்தல் அறிக்கையானாலும், இவை, எங்களின் விருப்பு-வெறுப்பு அடிப்படையில் தயாரிக்கப்பட்டது அல்ல. மக்களின் தேவையை உணர்ந்து அவர்களின் விருப்பத்தின் பேரில் தயாரிக்கப்பட்டது. விவசாயிகள் கடன் தள்ளுபடி என்பது நியாமற்றது அல்ல, மாணவர்களின் கல்விக் கடன் தள்ளுபடி என்பது நியாமற்ற கோரிக்கை அல்ல. கூலித் தொழிலாளிகளுக்கு 150 நாள் வேலை வாய்ப்பு என்பது தேவை இல்லாத ஒன்றல்ல. இவையெல்லாம் நாட்டின் அடிப்படைத் தேவைகள்.

தமிழனத் தலைவர் கலைஞர் காலத்தில் எப்படி சிறுபான்மையின மக்களின் காவல் அரணாக திகழ்ந்தாரோ, அதைபோலத்தான் தளபதி ஸ்டாலின் காலத்திலும் சிறுபான்மையின மக்களின் நலனைப் பாதுகாப்பதில் காவல் அரணாக, சிப்பாய்களில் ஒருவனாக உங்கள் நாடாளுமன்ற உறுப்பினராகிய நானும் செயல்படுவேன்.

தேர்தலுக்கு முன்பு நான் ஒரு மதச்சார்பற்ற கூட்டணிக் கட்சியின் வேட்பாளர். தேர்தலுக்கு பிறகு இந்த தொகுதி வாக்காளர்கள் அனைவருக்குமான நாடாளுமன்ற உறுப்பினர். நான் இங்கு வாக்கு கேட்டு வரும் போது, நீங்கள் இந்த ஊரின் பல்வேறு பிரச்சனைகளை என்னிடம் எடுத்து வைத்திருக்கிறிர்கள். அதில், அதிராம்பட்டினம் பகுதியில் நீர் ஆதாரங்களை கொண்டுவர வேண்டும் என்பது. அதற்கான முயற்சியில் ஒரு அரசாங்கம் மாறினால்தான் கொண்டு வர வேண்டும் என்பது அவசியமில்லை. ஒரு நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினரால் கொண்டு வர முடியும். உங்களில் ஒருவனாக இருந்து எதிர்காலத்தில் தொண்டாற்றுவேன். எந்த தேர்தலிலும் நான் அளித்த வாக்குறுதிகளை எந்தக் காலத்திலும் மறக்காத காரணத்தால்தான் உங்களின் ஆதரவை தொடர்ந்து பெற முடிகிறது' என்றார்.

இதில், திமுக பட்டுக்கோட்டை சட்டமன்ற முன்னாள் உறுப்பினர்கள் ஏனாதி. பாலசுப்பிரமணியம், கா. அண்ணாதுரை, அதிராம்பட்டினம் பேரூர் செயலாளர் இராம. குணசேகரன், அதிராம்பட்டினம் பேரூர் முன்னாள் பெருந்தலைவர் எஸ்.எச் அஸ்லம் உள்ளிட்ட திமுக மற்றும் கூட்டணி கட்சியினர் பலர் கலந்துகொண்டனர்.

காதிர் முகைதீன் கல்லூரி பேராசிரியர் என்.ஏ சாகுல் ஹமீது தாயார் வஃபாத்!

அதிரை நியூஸ்: மே 27
இராமநாதபுரம் மாவட்டம், பனைக்குளம் கிழக்குத் தெருவைச் சேர்ந்த மர்ஹூம் அப்துல் ரெஜாக் அவர்களின் மனைவியும், தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் கல்லூரி கணினி அறிவியல் துறை முன்னாள் தலைவர் பேராசிரியர் என்.ஏ சாகுல் ஹமீது, அஸ்ரப் ஆகியோரின் தாயாருமாகிய ஹாஜிமா ஆத்திகா பீவி (வயது 95) அவர்கள் இன்று பகல் பனைக்குளம் இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜுவூன்

அன்னாரின் ஜனாஸா இன்று (27-05-2019) திங்கட்கிழமை மாலை 5.30 மணியளவில் பனைக்குளம் பெரிய ஜும்மா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.

தஞ்சை மாவட்டத்தில் மே 30ந் தேதி முதல் ஜூன் 18ந் தேதி வரை ஜமாபந்தி~ ஆட்சியர் தகவல்!

தஞ்சாவூர், மே 27
தஞ்சாவூர் மாவட்டம், 30.05.2019 முதல் 18.06.2019 வரை தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள ஒன்பது வட்டங்களிலும் 1428-ஆம் பசலிக்கான ஜமாபந்தி (வருவாய்த் தீர்வாயம்) நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.

இது குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்துள்ளதாவது:-
தஞ்சாவூர் மாவட்டத்திற்குட்பட்ட தஞ்சாவூர், பூதலூர், திருவையாறு, பாபநாசம், பட்டுக்கோட்டை, பேராவூரணி, ஒரத்தநாடு, கும்பகோணம், திருவிடைமருதூர் ஆகிய ஒன்பது வட்டங்களிலும் 30.05.2019 முதல் 1428-ஆம் பசலிக்கான ஜமாபந்தி (வருவாய்த் தீர்வாயம்) வட்டாட்சியர் அலுவலகங்களில்  நடைபெறவுள்ளது.

தஞ்சாவூர் வட்டத்தில் 30.05.2019 முதல் 07.06.2019 வரை தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையிலும், பூதலூர் வட்டத்தில் 30.05.2019 முதல் 06.06.2019 வரை தஞ்சாவூர் மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையிலும், திருவையாறு வட்டத்தில் 30.05.2019 முதல் 04.06.2019 வரை தஞ்சாவூர் வருவாய் கோட்ட அலுவலர் தலைமையிலும், பாபநாசம் வட்டத்தில் 30.05.2019 முதல் 11.06.2019 வரை கும்பகோணம் வருவாய் கோட்ட அலுவலர் தலைமையிலும், பட்டுக்கோட்டை வட்டத்தில் 30.05.2019 முதல் 18.06.2019 வரை பட்டுக்கோட்டை வருவாய் கோட்ட அலுவலர் தலைமையிலும், பேராவூரணி வட்டத்தில் 30.05.2019 முதல் 06.06.2019 வரை தனித்துணை ஆட்சியர் (முத்திரைக் கட்டணம்) தலைமையிலும், ஒரத்தநாடு வட்டத்தில் 30.05.2019 முதல் 13.06.2019 வரை மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் தலைமையிலும், கும்பகோணம் வட்டத்தில் 30.05.2019 முதல் 07.06.2019 வரை தனித்துணை ஆட்சியர் (வருவாய் நீதிமன்றம்) தலைமையிலும், திருவிடைமருதூர் வட்டத்தில் 30.05.2019 முதல் 07.06.2019 வரை மாவட்ட வழங்கல் அலுவலர் தலைமையிலும் சனி, ஞாயிறு மற்றும் திங்கள் கிழமைகள் நீங்கலாக தினசரி  காலை 09.00 மணி முதல் நடைபெறவுள்ளது.


ஜமாபந்தி (வருவாய்த் தீர்வாயம்) நடைபெறும் நாட்களில் பட்டா மாறுதல்,  எல்லை பிரச்சனைகள், பொது மக்கள் வீட்டு மனை ஒப்படை, நில ஒப்படை, முதியோர் உதவித் தொகை ஆகிய கோரிக்கைகள் குறித்து சம்மந்தப்பட்ட வருவாய் தீர்வாய அலுவலரிடம் மனு அளித்து தீர்வு காணலாம். மேலும், ஜமாபந்தி (வருவாய்த் தீர்வாயம்) நிறைவு நாளன்று அனைத்து வட்டங்களிலும் வருவாய் தீர்வாய அலுவலர்கள் தலைமையில் விவசாயிகள் மற்றும் பொதுப்பணித்துறை (நீர் வள ஆதாரம்), வேளாண்மைத்துறை, வேளாண் பொறியியல் துறை, ஊரக வளர்ச்சித் துறை, புள்ளியியல் துறை ஆகிய துறைகளின் உட்கோட்ட அலுவலர்கள் கலந்துகொள்ளும் கூட்டம் நடைபெறவுள்ளது. அக்கூட்டத்தில் பாசனம் தொடர்பான கருத்துருக்கள், முன்மொழிவுகள் மற்றும் கோரிக்கைகளை மனுக்கள் மூலம் தெரிவிக்கலாம். என இவ்வாறு தஞ்சாவூ மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.

பறவைகளின் வசிப்பிட மரத்தை வெட்டியவர்கள் மீது நடவடிக்கைக் கோரி புகார்!

பேராவூரணி மே.27
திருச்சிற்றம்பலம் அருகே  குளத்தில், பறவைகள் தங்குமிடமாக இருந்த மரத்தை வெட்டியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென தஞ்சை மாவட்ட ஆட்சியருக்கு செருவாவிடுதி கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
               
சங்கிலி குளம் 
தஞ்சை மாவட்டம், பேராவூரணி ஒன்றியம், திருச்சிற்றம்பலம் அருகே உள்ள செருவாவிடுதி தெற்கு ஊராட்சியில், சங்கிலி குளம் அமைந்துள்ளது. இதன் பரப்பளவு சுமார் 15 ஏக்கர் ஆகும். செருவாவிடுதி தெற்கு ஊராட்சியின் முக்கிய நீர் ஆதாரமாக இந்த குளம் உள்ளது. இந்த குளத்தினை கடந்த 2 ஆண்டுகளாக இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் இணைந்து, தங்கள் சொந்த பணத்தை செலவு செய்து, பல லட்சம் ரூபாய் மதிப்பீட்டில்  தூர்வாரியதுடன், நீரையும் சேமித்து பராமரிப்பு செய்து வருகின்றனர். .

இந் நிலையில், கடந்த ஆண்டு ( 2018 ) நவம்பர் மாதம் வீசிய கஜா  புயல் காற்றினால், செருவாவிடுதி பகுதியில் இருந்த பல ஆயிரம் மரங்கள் சாய்ந்தன. இதனால், பல ஆயிரம் பறவைகள் தங்களுக்கான வசிப்பிடமின்றி  அங்கும் இங்குமாக மரங்களை தேடி அலைந்து திரிகின்றன.  இந் நிலையில், சங்கிலி குளத்தில் போதிய அளவு தண்ணீர் வசதி  இருந்ததால், குளத்தில்  இருந்த ஒரு பழமையான நாட்டுக் கருவேல மரத்தில் பல விதமான பறவையினங்கள் இரவு நேரங்களில் வந்து தங்கி செல்ல  தொடங்கின. 
               
மரங்கள் ஏலம் 
இந்நிலையில், கஜா புயலினை தொடர்ந்து ,  கடந்த 3 மாதங்களுக்கு முன்பு செருவாவிடுதி பகுதியில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான நீர் நிலை ஆதாரங்களில் காய்ந்து போன மரங்களை வெட்டுவதற்காக பேராவூரணி பொதுப்பணித்துறை அதிகாரிகளால் ஏலம் விடப்பட்டது.

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடியைச் சேர்ந்த ஒருவர் காய்ந்து போன மரங்களை வெட்டி அப்புறப்படுத்துவதற்கான அனுமதியினை பெற்றுள்ளார். அதனைத் தொடர்ந்து அவரது ஊழியர்கள் பலர் செருவாவிடுதி பகுதியில் உள்ள மரங்களை வெட்டி அப்புறப்படுத்தும் பணியில் தற்சமயம்  ஈடுபட்டு வருகின்றனர். 

பொது மக்கள் எதிர்ப்பு   
இந்நிலையில், செருவாவிடுதி சங்கிலி குளத்தில் இருந்த நாட்டு கருவேல மரத்தினையும் ஊழியர்கள் வெட்டிவிட்டனர். இது குறித்து  தகவல் அறிந்த செருவாவிடுதி கிராம மக்கள் தஞ்சை மாவட்ட ஆட்சியருக்கும் சம்பந்தப்பட்ட பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவித்தனர்.

அதனைத் தொடர்ந்து பேராவூரணி பொதுப்பணித்துறை அதிகாரி ராஜமாணிக்கம், மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டனர்.  பொதுப்பணித்துறையினர் ஏலம் விடாத  சங்கிலி குளம் உட்பட பல இடங்களில் உள்ள நல்ல  பல  மரங்களையும், அனுமதியின்றி ஏலம் எடுத்தவர்கள் வெட்டியிருப்பது விசாரணையில்  தெரியவந்தது.
                     
நடவடிக்கை 
பொதுப்பணித்துறைக்கு சொந்தமான மரங்களை அனுமதி இன்றி வெட்டியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென பேராவூரணி பொதுப்பணித்துறை அலுவலர் ராஜமாணிக்கம் உத்தரவின்  பேரில், துறை ஊழியர்  ராமன் என்பவரும் , செருவாவிடுதி கிராம மக்கள் சார்பிலும்,  திருச்சிற்றம்பலம் காவல் நிலையத்தில் தனித்தனியாக புகார் மனுக்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இது குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.

இந்நிலையில் வழக்கம்போல தங்குமிடத்திற்கு வந்த பறவைைகள், தங்கள் வாழிடமான கருவேல மரங்கள் வெட்டப்பட்டு, தங்களது கூடுகள் சிதைக்கப்பட்டு கிடந்ததை கண்டு, அதிர்ச்சி அடைந்து கீச்சிட்டு குரல் எழுப்பியவாறு, அந்த இடத்தையே சுற்றிச் சுற்றி வந்தது காண்போர் கண்களை உருக்கும் விதமாக இருந்தது. சற்று நேரத்தில் பறவைகள் அங்கிருந்து வேறு இடம் தேடி பறந்து சென்றது.

Sunday, May 26, 2019

அதிராம்பட்டினத்தில் சமூக நல்லிணக்க இஃப்தார் நிகழ்ச்சி (படங்கள்)

அதிராம்பட்டினம், மே 26
மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் சமூக நல்லிணக்க இஃப்தார் நிகழ்ச்சி அதிராம்பட்டினம் பேருந்து நிலையம் அருகில் உள்ள பவித்ரா திருமண மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு, அக்கட்சியின் அதிராம்பட்டினம் பேரூர் செயளாலர் அப்துல் சமது தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் எஸ்.எம் அப்துல் சலாம் முன்னிலை வகித்தார்.

நிகழ்ச்சியை, முகம்மது இப்றாகிம் தாவூதி கிராஅத் ஓதி தொடங்கி வைத்தார். அதிரை பேரூர் துணைச்செயளாலர் யாசர் அரபாத் வரவேற்றுப் பேசினார். 'நோன்பின் மாண்புகள்' குறித்து மாநில செயளாலர் நாச்சிக்குளம் தாஜுதீன் நிகழ்த்தினார். மாநில பொருளாளர் எஸ்.எஸ் ஹாரூன் ரஷீது  'சகோதரத்துவம்' குறித்து நாட்டில் நிலவும் சகிப்புத்தன்மை குறித்து உரை நிகழ்த்தினார். பின்னர், இஃப்தார் எனும் நோன்பு திறப்பு நிகழ்வு நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் அதிராம்பட்டினம் ஜமாத்தார்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள், சமூக அமைப்புகளின் நிர்வாகிகள், சமூக ஆர்வலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். பின்னர். மஹ்ரிப் தொழுகைக்கு தனி இட வசதி செய்யப்பட்டு இருந்தது.

இதில் மாநில இளைஞர் அணி துணைச்செயளாலர் அன்வர் பாஷா, குவைத் மண்டல IKP துணைச்செயலாளர் அதிரை ராஜா, மாவட்ட பொருளாளர் பைசல் அஹமது, மாநில செயற்குழு உறுப்பினர் செய்யது அபுதாஹிர், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஒரத்தநாடு பஷிர் அஹமது, மாவட்ட துணைச்செயலாளர்கள் சாகுல் ஹமீது, மதுக்கூர் ஜுபைர், ஒரத்தநாடு பாரீஸ் ரஹ்மான், அதிரை நகர பொருளாளர் ராஜிக் அஹமது, ஜியாவுல் ஹக், நபில், ஆரிப் மற்றும் மனிதநேய ஜனநாயகக் கட்சியினர் கலந்து கொண்டனர்.