![]() |
நெய்னா முகமது |
பீடிகை...
அன்றைய சென்னையிலிருந்து பாண்டிச்சேரிக்கு பிழைப்பிற்காக புலம்பெயர்ந்து சென்று வெற்றிபெற்ற வணிகராகவும், பிரேஞ்சு கிழக்கிந்திய கம்பெனியின் ஆளுநர் "தூய்ப்ளே" (Joseph François Dupleix) என்பவரிடம் *துபாஷி"யாகவும் (பிரெஞ்சு - தமிழ் மொழிபெயர்ப்பாளர்) பணியாற்றியவர் ஆனந்தரங்கப்பிள்ளை. இவர் தன்னர்வமாக 1736 ஆம் ஆண்டு முதல் 1761 ஆம் ஆண்டுவரை சுமார் 25 ஆண்டுகளில் 5,000 பக்கங்களுக்கு மேல் தான் நேரில் கண்ட நிகழ்வுகளை தினசரி குறிப்புக்களாக எழுதி வைத்துச் சென்றுள்ளார். இவையே தமிழில் வெளிவந்த முதலாவது டைரிக்குறிப்புக்கள் என்ற பெருமையை பெற்றதுடன் அன்றைய அரசியலை சொல்லித்தரும் வரலாற்று ஆவணமாகவும் திகழ்கின்றது.
இவரைப்போல் ஏதேச்சையாக வரலாற்று பொக்கிஷங்களை எத்தனையோ பேர் இன்றும் சேகரித்து வைத்திருக்கலாம் அவை ஒருநாள் வெளிப்படும் போது அதன் பெருமையை அறிந்தவர்களால் கொண்டாடப்படும் என்பதில் ஐயமில்லை. அவை காலத்தால் மிகவும் பழமையானவையாக இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை, அவை நம் இளமையில் கடந்து சென்றவையாக கூட இருக்கலாம்.
விஷயத்திற்கு வருவோம்...
அதிரை மக்கள் மத்தியில் அவரது உழைப்பின் அடிப்படையில் பரவலாக ஒரளவு அறியப்பட்ட எளிய மனிதரே "டீக்கடை நெய்னா" ஆனால் அவரிடம் எதார்த்தமாக அமைந்த அரிய பொருட்கள் சேகரிப்பு என்பது பலரும் அறியாதது. நெய்னா அவர்களும் ஆனந்தரங்கப்பிள்ளை போல் முத்துப்பேட்டையிலிருந்து இளம்வயதில் அதிரைக்கு புலம்பெயர்ந்து வந்தவர் என்பது ஓர் ஒற்றுமைச் சிறப்பு. இவருடைய அரிய பொருட்கள் சேகரிப்பு என்பது முழுமையாக இவரோடு சம்பந்தப்பட்டவையே என்பதால் இவற்றைவிட பழமையான பொருட்கள் உங்களில் பலரிடமும் இருக்கும் என்பதையும் ஏற்றுக் கொள்கின்றோம்.
சேகரிப்புகள்...
இவருடைய அப்பா முத்துப்பேட்டையில் பழ வியாபாரம் செய்து வந்தபோது "கொடை ரோட்டை" சேர்ந்த பழ வியாபாரி" ஒருவர் எழுதிய இன்லேண்ட் போஸ்ட் கார்டுகள்.
1972 ஆம் ஆண்டில் இந்த போஸ்ட் கார்டு விலை 10 காசுகள்.
இவற்றில் உள்ள ஒரு ஆச்சார்யா தகவல், ஒரு பானை திராட்சையின் விலை 6 ரூபாய் 50 காசுகள் அதாவது 10 கிலோ திராட்சை. இன்னொரு வகையான பன்னீர் திராட்சை ஒரு பானை 10 ரூபாய், அதே 10 கிலோவே தான்.
1983 ஆம் ஆண்டில் இந்த போஸ்ட் கார்டு விலை 15 காசுகளாக இருந்துள்ளது. 1983 ஆம் ஆண்டு வந்த ஒரு போஸ்ட் கார்டு 2 துண்டுகளாகி எழுத்துக்கள் மறைந்துவிட்ட நிலையிலும் அவரது சட்டை பையை (மணிபர்ஸை) விட்டு இன்று வரை இறங்கவில்லை.
தேசத்தந்தை மகாத்மா காந்தி, சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் நேரு, இந்தியாவின் இரும்புப் பெண்மணி என வர்ணிக்கப்பட்ட முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி போன்றவர்களின் நினைவாக வெளியிடப்பட்ட சிறப்பு நாணயங்கள், 1968, 1969 மற்றும் 1970 ஆண்டு வெளியிடப்பட்ட ஒரு ரூபாய் நாணயங்கள், பித்தளை 20 காசுகள் என சேர்த்து வைத்துள்ளார். இந்திரா காந்தியின் நினைவாக 1984 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட சிறப்பு 5 ரூபாய் நாணயங்கள் மட்டும் சுமார் 30 வைத்துள்ளார்.
80களைச் சேர்ந்த ஜெர்மானிய பெட்ரோமாக்ஸ் லைட், இந்திய பட்டர்பிளை பிராண்ட் பெட்ரோமாக்ஸ் லைட், மலேஷியா தயாரிப்பான கடா மார்க் மற்றும் கழுதை மார்க் கத்திகள் என நீளுகின்றன இவரது கலெக்ஷன்கள்.
மேலும் எம்ஜிஆர் தமிழக முதல்வராக இருந்தபோது 1982 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட ரேசன் கார்டு இன்னும் அதே தரத்தில் எந்த சேதமுமின்றி உள்ளது ஆச்சரியமே. அதேபோல் 1983 ஆம் ஆண்டு அவர் முதன்முதலாக எடுத்த பாஸ்போர்ட்டும் அதற்குபின் ரினீவல் செய்ததும் அவரிடம் பத்திரமாக உள்ளது.
தோண்டினால் இன்னும் கூட பல பழைய சரக்குகள் வெளியே வரலாம் ஆனால் அதற்கு மாதக்கணக்கில் பொறுமையாக காத்திருக்க வேண்டும் என்பதால் இத்துடன் சுபம்.
பொருட்களை கொடுத்துதவிய நெய்னா காக்கா, அவரது மகன் மற்றும் அவரது இல்லத்தரசி ஆகியோருக்கும் மனமார்ந்த நன்றியுடன்
அதிரை அமீன்
![]() |
ஜெர்மானிய பெட்ரோமாக்ஸ் லைட் |
![]() |
பெட்ரோமாக்ஸ் லைட் |
![]() |
MGR ஆட்சியின் போது ரேஷன்கார்டு (1982) |
![]() |
கடா மார்க், கழுதை மார்க் கத்திகள் |
![]() |
காந்தி நேரு நினைவு நாணயங்கள் |
![]() |
மடிப்பு களையாத இருபது ரூபாய் நோட்டு |
![]() |
10 காசு ஸ்டாம்புடன் போஸ்ட் கார்டு |
![]() |
1972 ஆம் ஆண்டு 10 காசு போஸ்ட் கார்டு |
![]() |
இந்திரா காந்தி நினைவு 5 ரூபாய் நாணயங்கள் |
![]() |
1983 ஆம் ஆண்டு 15 பைசா போஸ்ட் கார்டு |
![]() |
1983 ஆம் ஆண்டு வழங்கப்பட்ட பாஸ்போர்ட் |
வாழ்துகள் நைனா முஹம்மது உனது பள்ளி தோழன் மீராஷா
ReplyDelete