.

Pages

Saturday, May 18, 2019

காரைக்குடி ~ திருவாரூர் ரயில் சேவை தாமதம்: மக்களை திரட்டி போராட முடிவு!

பேராவூரணி மே.18-
காரைக்குடி - திருவாரூர் இடையே அகல ரயில் பாதை பணிகள் முடிவடைந்த நிலையில், இதுவரை ரயில் சேவையை தொடங்காத தென்னக ரயில்வே நிர்வாகத்தை கண்டித்து பொதுமக்களைத் திரட்டி போராட்டம் நடத்தப்படும் என பேராவூரணி வட்ட ரயில் பயனாளிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து இச்சங்கத்தின் தலைவர் ஏ.மெய்ஞானமூர்த்தி, செயலாளர் ஏ.கே.பழனிவேல், பொருளாளர் சி.கணேசன், அமைப்பாளர் கே.வி.கிருஷ்ணன், ஒருங்கிணைப்பாளர் பாரதி வை.நடராஜன் ஆகியோர் கையெழுத்திட்டு, தென்னக ரயில்வே சென்னை பொது மேலாளர் மற்றும் தென்னக ரயில்வே, திருச்சி கோட்ட மேலாளர் ஆகியோருக்கு மனு ஒன்றினை அனுப்பி உள்ளனர்.

அம்மனுவில் கூறியிருப்பதாவது, " தென்னக ரயில்வே காரைக்குடி- திருவாரூர் மீட்டர் கேஜ் ரயில் பாதையை அகல ரயில் பாதை ஆக்குவதற்காக 2012ஆம் ஆண்டு ரயில் போக்குவரத்து நிறுத்தியது.

ரூபாய் 1,500 கோடி செலவு செய்து முதற்கட்டமாக காரைக்குடியிலிருந்து பட்டுக்கோட்டை வரையிலும் பணிகளை கடந்த 2018 ஆம் ஆண்டு நிறைவு செய்தது. காரைக்குடி- பட்டுக்கோட்டை இடையே டெமு ரயில் வாரத்தில் இரு நாட்கள் இயக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது அதுவும் நிறுத்தப்பட்டுள்ளது.

மீதமிருந்த பட்டுக்கோட்டை - திருவாரூர் இடையிலான அகல ரயில் பாதை பணிகள் அன்மையில் முடிக்கப்பட்டு வெள்ளோட்டமும் விடப்பட்டது. பல ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் செலவில் பணிகள் முடிக்கப்பட்டும், இதுவரை ரயில் சேவை தொடங்கப்படாமல் உள்ளது பொதுமக்களிடையே மிகுந்த மன வேதனையை ஏற்படுத்தியுள்ளது.

குறைந்த செலவில் நிறைந்த பயன் அளிக்கும் ரயில் சேவையை பொதுமக்களுக்கு வழங்காமல் தென்னக ரயில்வே செயல்படுவதற்கு பேராவூரணி வட்ட ரயில் பயணிகள் சங்கம் தனது கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறது.

2019ஆம் ஆண்டு ஜூன் முதல் வாரத்தில் காரைக்குடி- திருவாரூர் வரை தொடர்ச்சியான ரயில் சேவை தொடங்கப்பட வேண்டும் என சங்கத்தின் சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.

காரைக்குடி திருவாரூர் இடையே உள்ள ரயில்வே ஸ்டேஷன்களிலும், ரயில்வே கேட்களிலும் பணியாற்றுவதற்கு தேவையான ஸ்டேஷன் மாஸ்டர்,  கேட் கீப்பர், பாயிண்ட் மேன் மற்றும் தேவையான பணியாளர்களை உடனடியாக நியமிக்க வேண்டும்.

தற்போது காரைக்குடி-திருவாரூர் இடையே டெமு ரயில் இயக்கப்படும் எனவும், பயண நேரம் 6 மணி நேரம் என்பது மிக அதிகமான நேரம் ஆகும். இதனால் பயணிகளுக்கு கால விரயம் ஆகிறது. ஏற்கனவே இருந்தது போல் இரண்டேமுக்கால் மணி நேரமாக பயண நேரத்தை குறைத்து, ரயிலின் வேகத்தை அதிகரித்து தர வேண்டும். ஏற்கனவே டெமு ரயில் சேவை வாரம் இருமுறை இயக்கப்பட்டு, பின்னர் நிறுத்தி வைக்கப்பட்டது.

எனவே டெமு ரயில் என இல்லாமல் ஜூன் முதல் வாரத்தில், தினசரி ரயில் சேவை தொடங்கப்பட வேண்டும். இல்லாவிட்டால்  இவ்வழித்தடத்தில் உள்ள காரைக்குடி, வாளரமாணிக்கம், கண்டனூர்- புதுவயல், அறந்தாங்கி, ஆயிங்குடி, பேராவூரணி, ஒட்டங்காடு, பட்டுக்கோட்டை, அதிராம்பட்டினம், முத்துப்பேட்டை, தில்லைவிளாகம், பாண்டி திருத்துறைப்பூண்டி, ஆலத்தம்பாடி மற்றும் திருவாரூர் வரை உள்ள ஊர் மக்கள், ரயில் பயணிகள் சங்கம், ரோட்டரி, லயன்ஸ் கிளப், அரசியல் கட்சிகள் மற்றும் தன்னார்வ சமூக அமைப்புகளை திரட்டி பெருமளவில் மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

எனவே தென்னக ரயில்வே உடனடியாக உரிய நடவடிக்கை எடுத்து காரைக்குடி - திருவாரூர் வழியே சென்னை வரைக்கும், அதேபோல் தென் மாவட்டங்களை இணைக்கும் வகையில் ரயில் சேவையை உடனடியாக தொடங்க வேண்டுமென வலியுறுத்துகிறோம்" இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது. 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.