.

Pages

Sunday, May 12, 2019

அன்னையர் அன்புக்கு ஈடிணையுண்டோ?

அதிரை நியூஸ்: மே 12
சில ஆண்டுகளுக்கு முன் 'ஆனந்த விகடன்' வார இதழில் நான் படித்து ரசித்த ஒரு கவிதை என் நினைவில் நிற்கிறது.

"அன்பு எனும் தலைப்பில் சின்னதாய்
ஒரு கவிதை கேட்டார்கள்.
'அம்மா' என்றேன் உடனே
கேட்டது அம்மாவாக
இருந்திருந்தால் இன்னும்
சின்னதாய் சொல்லியிருப்பேன்
'நீ' என்று."

அன்பு என்பதற்குச் சரியான விளக்கத்தை அழகாகச் சுட்டிக் காட்டுகிறது மேற்கண்ட கவிதை. ஒரு குழந்தை மீது அதன் அன்னை கொண்டுள்ள அன்பை வெளிக்காட்டும் ஒரு நிகழ்வைப் பார்ப்போம்.

தன் குழந்தைக்குப் பாலுட்டித் தூங்கச் செய்து விட்டுத் தன் சமையல் பணியில் ஈடுபட்டிருக்கிறாள் ஓர் அன்னை. குழந்தையின் அழுகைக் குரல் கேட்கிறது. அவன் திடுக்கிடுகிறான். ஏதேதோ எண்ணத் தொடங்குகிறாள். 'குழந்தை தொட்டியிலிருந்து கீழே விழுந்து விட்டதோ/ பூச்சி ஏதேனும் கடித்து விட்டிருக்குமோ?'

ஓடிச் சென்று குழந்தையை வாரியணைத்து முத்தமிடுகிறாள். தொட்டிலைச் சோதனை செய்கிறாள். பூச்சி ஏதும் இல்லை. குழந்தை தொட்டியிலிருந்து விழவும் இல்லை. பின் ஏன் குழந்தை அழுகிறது? யாரவது அடித்திருப்பாரோ? என எண்ணுகிறாள். அதன் வெளிப்பாடாக எழுகிறது ஒரு தாலாட்டுப் பாடல்.

"யாரடிச்சா நீயழுக! அடிச்சாளா சொல்லியழு
பாட்டியடிச்சாரோ பால் வார்க்கும் கையாலே
மாமன் அடிச்சாரோ மல்லிகைப் பூச்செண்டாலே
அத்தை அடிச்சாரோ அரளிப் பூச்செண்டாலே
அண்ணன் அடிச்சாரோ அணைத்தெடுக்கும் கையாலே
அடிச்சாரை சொல்லியழு ஆக்கினைகள் செய்திடுவோம்
தொட்டாரை சொல்லியழு தோள்விலங்குப் போட்டிடுவோம்."

குழந்தை அழுதால் மேற்கண்டவாறு தாய் தவித்துப் போகிறாள்.

குழந்தையின் அழுகுரல் கேட்கவில்லையென்றால் கூட அவளது மனம் நிலை கொள்வதில்லை. 'குழந்தை அழவில்லையே ஏன்? குழந்தைக்கு எதாவது ஆகியிருக்குமோ?' தாயின் மனம் தடுமாறுகிறது.

நாம் குழந்தையாக இருந்தபோது எப்படியெல்லாம் நம் அன்னை நம்மீது அன்பு காட்டி நம்மை வளர்த்து ஆளாக்கியிருக்கிறாள் என்பதற்கு ஒரு சிறிய எடுத்துக்காட்டுதான் மேற்கண்ட சம்பவம். மேலும், தன் இரத்தத்தைப் பாலாகி நமக்குத் தந்தாள்; நாம் தூங்குவதற்காகத் தன் தூக்கத்தைத் தியாகம் செய்தாள்; நாம் வயிறாற உண்ண வேண்டும் என்பதற்காகப் பல நேரங்களில் பட்டினி கிடந்தாள்; நம் நோய் தீர்வதற்காகப் பத்தியம் காத்தாள். எல்லாவற்றிற்கும் மேலாக ஒரு தாய் தன் குழந்தையைப் பிரசவிக்கும் போது மரண வாசல் வரை சென்று மீண்டு வருகிறாள் என்று சொல்லப்படுகிறது.

வளர்ந்து வாலிப வயதை எட்டிய போது இவற்றையெல்லாம் நம்மில் பலர் மறந்துவிடுகிறோம். அன்னையை மதிக்க மறுத்துவிடுகிறோம். நாம் நம் பெற்றோர்களிடம் எவ்வளவு நடந்து கொள்ளவேண்டும் என்பதை இறைமறை குர் ஆன் அழகுற எடுத்துக் கூறுகிறது.

"அவர்களைக் கடிந்து பேசாதீர். மாறாக அவர்களிடம் கண்ணியமாகப் பேசுவீராக! மேலும், பணிவுடனும், கருணையுடனும் அவர்களிடம் நடந்து கொள்வீராக! (குர்ஆன்-17:24). பெற்றோருக்காகத் தன்னிடம் பிரார்த்தனை செய்யுமாறு கூறி ஓர் அழகிய பிரார்த்தனையை அல்லாஹ் சொல்லித் தருகிறான். " என் இறைவனே! எனது சிறு வயதில் என்னை இவர்கள் கருணையுடனும், பாசத்துடனும் எவ்வாறு வளர்த்தார்களோ, அவ்வாறு இவர்கள் மீது நீ கருணை புரிவாயாக! ( குர்ஆன்-17:24)

தாயின் தனிச்சிறப்பை இறைத்தூதர் நபி (ஸல்) அவர்கள் எவ்வாறு கணித்தார்கள் எனபதை ஒரு நிகழ்வு நமக்கு எடுத்துக்காட்டுகிறது. ஒரு முறை நபி (ஸல்) அவர்களிடம் ஒரு மனிதர் வந்து, "நான் நன்றியுள்ளவனாகவும், உபகாரியாகவும் நடந்து கொள்வதற்கு யார் மீது அதிகக் கடமைபட்டுள்ளேன்?" என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள், "உமது தாய் மீது" என்று பதில் தந்தார்கள். "அடுத்து யார் மீது?" என்று வந்தவர் கேட்டார். அப்போதும் அண்ணல் நபி (ஸல்) அவர்கள், "உமது தாய் மீது' என்றே பதிலுரைத்தார்கள். வந்தவர் மீண்டும் அதே வினாவைக் கேட்க, அதே பதிலை அண்ணல் நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள். வந்த மனிதரிடமிருந்து நான்காம் முறை அதே வினா வந்தபோது, "உமது தந்தை மீது" என்ற பதில் நபி (ஸல்) அவர்களிடமிருந்து வந்தது.

வந்த மனிதர் கேட்ட கேள்விக்கு முதல் மூன்று முறை "உமது தாய் மீது" என்று நபி (ஸல்) கூறியதற்கு மார்க்க அறிஞர்கள் தரும் விளக்கம் நமது சிந்தனைக்குரியது. ஒரு தாய் கருவுற்றிருக்கும் காலத்தில் குழந்தையின் பொருட்டு அவள் அடையும் வேதனைக்காகவும், குழந்தையைப் பிரசவிக்கும் தருணத்தில் அவள் அடையும் சிரமத்திற்காகவும், குறைந்தது இரண்டாண்டு காலம் குழந்தைக்குப் பாலுட்டி வளர்த்தக் கடமைக்காகவும் என்ற மூன்று காரணங்களுக்காக ஒருவர் தன் தாய்க்கு நன்றியுள்ளவராகவும், உபகாரியாகவும் இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் பொருட்டுதான் முதல் மூன்று முறை "உம் தாய் மீது" என்று பெருமானார் நபி (ஸல்) அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். அத்தகைய அன்னைக்கு எவ்வாறெல்லாம் நாம் நன்றி செலுத்தக் கடமை பட்டுள்ளோம் என்பதை நாம் சிந்தித்து உணர வேண்டுமல்லவா.

அன்னையின் உயர்வுபற்றி இஸ்லாமிய வரலாற்றிலுள்ள நிகழ்வு ஒன்றை இங்கு நினைவு கூர்வது பொருத்தமாயிருக்கும் எனக் கருதுகிறேன் இஸ்லாமிய ஆட்சியின் மூன்றாம் கலீஃபா உதுமான் (ரலி) அவர்கள் 'கஅபா' முற்றத்தில் அமர்ந்திருக்கிறார்கள். எப்போதும் போல் மக்கள் கஅபாவை வலம் வந்துகொண்டிருக்கிறார்கள். அந்தக்கூட்டத்தில் தலையில் ஒரு கூடையைச் சுமந்தவராக ஒருவர் தவாஃப் செய்வதை கலீஃபா அவர்கள் பார்க்கிறார்கள். அந்தக் காட்சி கலீஃபா அவர்களுக்கு வினோதமாகப்படவே, அதுபற்றி அவரிடம் விசாரித்தார்கள்.

"கலீஃபா அவர்களே! எனது வயது முதிர்ந்த அன்னை அந்தக் கூடையில் அமர்ந்திருக்கிறார். மூப்பின் காரணமாக அவரால் சுயமாக நடந்து தவாஃப் செய்ய இயலவில்லை. எனவே அவரை என் தலையில் சுமந்தபடி நான் தவாஃப் சுற்றுகிறேன்" என்றார். இதனைக் கேட்ட கலீஃபா அவர்கள் நெகிழ்ந்து போனார்கள். அந்த மனிதர் கலீஃபாவிடம் கேட்டார். "கலீஃபா அவர்களே! என் தாயைப் புனித கஅபாவுக்கு அழைத்து வந்ததோடு மட்டுமின்றி அவரை என் தலையிலே சுமந்து தவாஃப் செய்யவைக்கிறேன். இப்படியெல்லாம் என் தாய்க்குப் பணிவிடை செய்யும் காரணத்தால் என் தாய்க்குச் செய்ய வேண்டிய கடமைகளைச் செய்தவனாக நான் ஆவேனா?"

கலீஃபா உதுமான் (ரலி) அவர்கள் அந்த மனிதருக்கு பதில் சொன்னார்கள். அந்த பதில் அவருக்கு மட்டுமல்லாமல் நம் எல்லாருக்கும் தான். "என் அருமையான தோழரே! உன் அன்னையின் வயிற்றில் நீ இருந்த போது அல்லாஹ் உன்னில் 'ரூஹ்' (உயிர்) ஊதியதற்குப் பின்னர் நீ அப்படியும் இப்படியுமாக லேசாகப் புரண்டிருப்பாயே, அப்போது உன் அன்னைக்கு ஏற்பட்ட வேதனை இருக்கிறதே, அந்தச் சிறு வேதனைக்குக் கூட ஈடாகாது உன் செயல்" என்றார்கள்.

எஸ்.கே.எம் ஹாஜா முகைதீன் எம்.ஏ., பி.எஸ்சி., பி.டி
தலைமை ஆசிரியர் (பணி நிறைவு)
அதிராம்பட்டினம்
தஞ்சாவூர் மாவட்டம்.       

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.