.

Pages

Wednesday, September 30, 2015

பட்டா மாறுதல் குறைபாடு: மேல்முறையீடு செய்யலாம்!

தஞ்சாவூர் மாவட்டத்தில் பட்டா மாறுதல் பெற்றவர்கள், குறைபாடுகள் தொடர்பாக மேல்முறையீடு செய்யலாம் என்று ஆட்சியர் என். சுப்பையன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தஞ்சாவூர் மாவட்ட வட்டாட்சியர் அலுவலகங்களில் பட்டா மாறுதல் செய்து, அதன் பெயரில் உத்தரவு பிறப்பிக்கப்பட்ட இனங்களில் திருத்தம், குறைபாடுகள் இருந்தால்  மனுதாரர்கள்  வருவாய் கோட்டாட்சியரிடம் மேல்முறையீடு செய்யலாம்.  மேலும், வருவாய் கோட்டாட்சியர் உத்தரவின்பேரில், மனுதாரர்கள், மேல்முறையீட்டாளர்கள் மாவட்ட வருவாய் அலுவலரிடம் இரண்டாவது மேல்முறையீடு செய்யலாம்.

தஞ்சாவூர் மாவட்டத்தில் பட்டா மாறுதல் தொடர்பாக, தஞ்சாவூர் கோட்டத்தில் 27 மனுக்களும், கும்பகோணம் கோட்டத்தில் 15 மனுக்களும், பட்டுக்கோட்டை கோட்டத்தில் 13 மனுக்களும் நிலுவையில் உள்ளன.

மாவட்ட வருவாய் அலுவலரிடம் 25 பட்டா மாறுதல் இரண்டாம் மேல்முறையீட்டு மனுக்கள் நிலுவையில் உள்ளதாக கணக்கெடுக்கப்பட்டுள்ளது.

இந்த மேல்முறையீட்டு மனுக்களின் பட்டியல் முழு விவரங்களோடு  பி.டி.எப். முறையில், மாவட்ட  இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

மேல்முறையீடு செய்தவர்களின் பெயர், பட்டியலில் விடுபட்டிருந்தால் சம்மந்தப்பட்ட மனுதாரர்கள் மாவட்ட வருவாய் அலுவலர் மற்றும் வருவாய் கோட்டாட்சியரை நேரில் அணுகி விவரம் தெரிவிக்கலாம்.

Tuesday, September 29, 2015

அதிரையில் மீண்டும் மழை !

அதிரையில் இன்று இரவு 7.30 மணி முதல் மீண்டும் மழை பெய்து வருகிறது. பலத்த இடியுடன் துவங்கிய மழை தொடர்ந்து மிதமாகவும், பலமாகவும் பெய்து வருகிறது. அதிரையில் கடந்த சில நாட்களாக பெய்துவரும் தொடர் மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

அதிரை அருகே உயிருக்கு போராடிய ஆட்டுக்கு சிசேரியன் அறுவை சிகிச்சை !

அதிரை அருகே உள்ள தம்பிக்கோட்டை கீழக்காடு பகுதியைச் சேர்ந்தவர் செல்லப்பா மகன் ராஜ்மோகன், இவரது ஆடு ஒன்று கடந்த சனிக்கிழமை அருகிலுள்ள தோப்பிற்கு மேய்ச்சலுக்கு சென்று அங்கேயே குட்டிபோட முடியாமல் தங்கிவிட்டது. மாலையில் வீடுத் திரும்ப வேண்டிய ஆட்டைக் காணாததால் தேடிச்சென்ற ராஜ்மோகன் அது குட்டிபோட சிரமப்படுவதை கண்டதும் உடனடியாக கால்நடை மருத்துவரை அழைத்து சென்று ஆட்டுக்குட்டியை எடுக்கும் முயற்சியில் ஈடுபட்டார். ஆனால் கால்நடை மருத்துவர் பலமணி நேரம் போராடியும் எடுக்க முடியவில்லை. ஆட்டின் இடுப்பு பகுதியில் குறைபாடு உள்ளதாகவும் அறுவைசிகிச்சை செய்தால் மட்டுமே ஆடு பிழைப்பதற்கு வாய்ப்புள்ளது எனவும் கால்நடை மருத்துவர் தெரிவித்தார். அதன்படி நேற்று காலை சுமார் 9 மணிக்கு முத்துப்பேட்டை கால்நடை மருத்துவ மனைக்கு செல்லப்பா ஆட்டைக் கொண்டு வந்தார். அங்கு டாக்டர் கங்கா சூடன் ஆட்டுக்கு மயக்க ஊசி போடப்பட்டு அறுவை சிகிச்சை செய்து வயிற்றிலேயே இறந்த நிலையில் ஒரு ஆட்டுக்குட்டியை எடுத்தார். அறுவைசிகிச்சை சுமார் 45 நிமிடங்களில் செய்து முடிக்கப்பட்டது. ஆட்டுக்குட்டி வயிற்றில் இறந்துப் போன சரியான நேரத்தில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டதால் குட்டியை ஈன்றெடுத்த ஆட்டின் உயிர் காப்பாற்றப்பட்டது. பின்னர் அறுவைசிகிச்சை செய்து முடித்த 15 நிமிடங்களிலேயே ஆடு எழுந்து நடந்து சென்றது. அங்கிருந்த அனைவரையும் மிகுந்த வியப்பில் ஆழ்த்தியது.

இதுகுறித்து முத்துப்பேட்டை கால்நடை மருத்துவர் கங்காசூடன் கூறுகையில், 
சிசேரியன் அறுவை சிகிச்சை செய்யப்பட்ட ஆட்டிற்கு 'நேரோ பெல்விஸ்' எனும் குறைபாடு இருந்தது. இந்த குறைபாடு உள்ள ஆட்டின் இடுப்பு எலும்புகள் குறுகியவாறு இருக்கும், இவ்வகை ஆடுகள் இயற்கையான முறையில் குட்டியீன இயலாது. இந்த ஆடு 3 மாத குட்டியாக இருந்தபோது இருசக்கர வாகனத்தில் மோதி முதுகு பகுதியில் அடிபட்டதே இக்குறைபாடு வர காரணம். இந்த ஆட்டிற்கு முதலில் ' ஃபீட்டாட்டமி ' எனும் முறையில் இறந்துபோன ஆட்டுக்குட்டியை எடுக்க முயற்சிசெய்யப்பட்டது, ஆட்டுக்குட்டியின் தலை இடுப்பெழும்பைத் தாண்டி வரமுடியாததால் சிசேரியன் அறுவை சிகிச்சை செய்து ஆட்டுக்குட்டி எடுக்கபட்டது. அறுவைசிகிச்சை செய்யப்பட்ட ஆடு தற்போது நல்ல நிலையில் நலமாக உள்ளது என தெரிவித்தார். இப்பகுதியில் உள்ள கால்நடைகளுக்கு சிசேரியன் போன்ற அறுவை சிகிச்சை மன்னார்குடி மற்றும் திருத்துறைப்பூண்டியில் உள்ள கால்நடை மருத்துவமனைகளில் 25 வருட அனுபவம் வாய்ந்த மருத்துவர்களால் செய்யப்படுவது வழக்கம். தற்பொழுது முத்துப்பேட்டை கால்நடை மருத்துவமனையில் சிசேரியன் அறுவை சிகிச்சை செய்வது இதுவே முதல் முறை என்பதால் பொதுமக்கள் டாக்டரை பாராட்டினர்.

செய்தி மற்றும் படங்கள்:
'நிருபர்' மொய்தீன் பிச்சை, முத்துப்பேட்டை
 

வாக்காளர் சேர்ப்பு விழிப்புணர்வு பேரணி !

தஞ்சாவூர் அருங்காட்சியக வளாகத்தில் வருவாய் துறையின் சார்பில் வாக்காளர் சேர்ப்பு விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் என்.சுப்பையன் அவர்கள் கொடியசைத்து தொடங்கிவைத்தார்.
     
பேரணியை தொடங்கிவைத்து மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்ததாவது:-
இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவுபடி, 01.01.2016 தேதியினை (31.12.1997 அன்றும் அதற்கு முன்னர் பிறந்தவர்களும்) தகுதி நாளாக கொண்டு வாக்காளர் சேர்க்கும் பணி 15.09.2015 அன்று தொடங்கி 14.10.2015 வரை நடைபெற்று வருகிறது. மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்குச் சாவடி மையங்களிலும் வாக்குச்சாவடி மைய அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டு வரைவு வாக்காளர் பட்டியல் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.
   
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பேரவூரணி, பட்டுக்கோட்டை, ஒரத்தநாடு, தஞ்சாவூர், பாபநாசம், திருவையாறு, கும்பகோணம், திருவிடைமருதூர் ஆகிய சட்டமன்ற தொகுதியைச் சார்ந்த தகுதியுள்ள வாக்காளர்கள் அனைவரும் பெயர்சேர்ப்பு, திருத்தம், முகவரி மாற்றம் மற்றும் நீக்கம் தொடர்பான படிவங்களை (6, 6ஏ, 7, 8 மற்றும் 8ஏ) பூர்த்தி செய்து அந்தந்த வாக்குச்சாவடி மையங்களில் கொடுத்து பயன் பெறலாம்.
   
அனைத்து படிவங்களும் அனைத்து வாக்குச் சாவடி மையங்களிலும் போதிய அளவு இருப்பில் உள்ளதால் படிவங்களை பெற்று பெயர் சேர்த்தல் மற்றும் உரிய திருத்தங்கள் செய்து கொள்ளலாம்.  படிவங்களை நிரப்பிட  பொது மக்களுக்கு வாக்குசாவடி நிலை அலுவலர்கள் மற்றும் வாக்குச்சாவடி முகவர்கள் உதவி செய்வார்கள்.

இருப்பிடம் மற்றும் வயதுக்கான ஆதாரங்களுடன் விண்ணப்பித்து வாக்காளராக கேட்டுக் கொள்கிறேன்.  வாக்காளாராவது நமது உரிமை. வாக்களிப்பது நமது ஜனநாயக கடமை, வாக்காளராகி பொது மக்கள் உரிமையை நிலை நாட்டவும்,  வாக்காளராகி இந்திய குடிமகன் என்பதை உறுதி செய்யவும், உடனடியாக தஞ்சாவூர் மாவட்ட பொது மக்கள் தகுதியுள்ள அனைவரும் வாக்களராகபதிவு செய்ய கேட்டுக் கொள்கிறேன்.   இவ்வாறு மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்தாhர்.
     
பேரணி முக்கிய வீதிகள் வழியாக சென்று மாநகராட்சி அறிஞர் அண்ணா திருமண மண்டபம் சென்றடைந்தது.   பேரணியில் வருவாய் கோட்டாட்சியர் திரு.ஜெய்பீம், வட்டாட்சியர் திரு.சுரேஷ், பள்ளி கல்லூரி மாணவ, மாணவியர்கள் மற்றும் வருவாய் துறையினர் பங்கேற்றனர்.

பிலால் நகர் உயர் மின் அழுத்த கம்பிகளுக்கிடையே செல்லும் முட்புதர்கள் அகற்றும் பணி தீவிரம் !

அதிரையின் பெரும்பாலான இடங்களில் ஆபத்தான நிலைமையில் காணப்படும் மின்கம்பங்கள் மற்றும் பிலால் நகரின் குடியிருப்பு பகுதியில் தாழ்வாக செல்லும் உயர் மின் அழுத்த கம்பிகளை மாற்று இடத்தில் அமைத்து கொடுக்கவும், பழுதடைந்த மின்கம்பிகள், மின்கம்பங்களை உடனடியாக மாற்றி தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்து இருந்தனர். இதையடுத்து கடந்த [ 23-09-2015 ] அன்று நடைபெற்ற சட்டசபை கூட்டத்தில் இதுதொடர்பாக நமது சட்டமன்ற உறுப்பினர் என்.ஆர் ரெங்கராஜன் எம்எல்ஏ அவர்கள் கலந்துகொண்டு பேசினார்.

இதில் அதிரை வளர்ந்து வரும் பகுதி என்றும், இங்கு பல இடங்களில் மின்கம்பிகள் ஆபத்தான நிலைமையில் இருப்பதாகவும், குறிப்பாக பிலால் நகர் பகுதியில் உயர் மின் அழுத்த கம்பிகள் உயிருக்கு ஆபத்தான நிலை ஏற்படுத்தக்கூடிய வகையில் உள்ளது. அரசு இவற்றை சரி செய்ய நடவடிக்கை எடுக்குமா? என்று கேள்வி எழுப்பி இருந்தார். இதற்கு பதிலளித்த பேசிய மின்துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் அவர்கள் சம்பந்தபட்ட பகுதிகளில் உடனடியாக ஆய்வு செய்யப்பட்டு குறைகளை களைய தமிழக அரசு நடவடிக்கை எடுக்கும் என கூறியிருந்தார்.

இந்நிலையில் ஏரிபுறக்கரை ஊராட்சி மன்றத்தின் ஏற்பாட்டின் பேரில் பிலால் நகரின் குடியிருப்பு பகுதி வழியே செல்லும் உயர் மின்அழுத்த கம்பிகளுக்கிடைய மண்டிக்காணப்படும் முட்புதர்களை அதிரை மின்சார வாரிய பணியாளர்களின் மேற்பார்வையில் ஜேசிபி வாகனம் மூலம் அகற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும் மின்கம்பிகளில் சிக்கியுள்ள தென்னை தோவைகளை அகற்றும் பணியும் நடைபெறுகிறது.

இந்த பணிகளை ஏரிபுறக்கரை ஊராட்சி மன்ற தலைவர் முத்துகிருஷ்ணன் மற்றும் தமுமுக துணை செயலாளர் கமாலுத்தீன் மற்றும் ஏரிபுறக்கரை ஊராட்சி மன்ற பணியாளர்கள் உடனிருந்து பார்வையிட்டு வருகின்றனர். இதனால் பிலால் நகர் பகுதியில் இன்று காலை முதல் மின் இணைப்பு துண்டிப்பு செய்யப்பட்டுள்ளது.
 
 
 
 
 

அதிரை பேருந்து நிலையம் அருகே சாலை மறியலில் ஈடுபட்ட 30 பேர் கைது !

கருகும் சம்பா பயிரை காப்பாற்ற காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பின் படி வழங்க வேண்டிய நீரை தரமறுக்கும் கர்நாடக அரசை கண்டித்தும், கருகும் பயிரை காப்பாற்ற கர்நாடகத்திடமிருந்து தமிழகத்துக்கு தேவையான தண்ணீரை பெற்றுத் தர வலியுறுத்தியும் அதிரை பேரூர் இந்திய கம்யூனிஸ்ட், அனைத்து விவசாய சங்கங்கள், விவசாய தொழிளாலர் சங்கங்கள் சார்பில் அதிரை பேருந்து நிலையம் அருகே சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.

கம்யூனிஸ்ட் கட்சியின் அதிரை பேரூர் செயலாளர் என். காளிதாஸ், கம்யூனிஸ்ட் கட்சியின் பொறுப்பாளர்கள் கே. சோமசுந்திரம், வி ராமலிங்கம், எஸ்.பன்னீர் செல்வம், கே. பிச்சை முத்து, எம்.எல்.ஏ ஹசன், ஹாஜா முகைதீன். ஹலீம், விவசாய சங்க பொறுப்பாளர்கள் பன்னீர், பசீர் உட்பட ஏராளமானோர் கலந்துகொண்டு சாலை மறியலில் ஈடுபட்டனர்.

மறியலில் ஈடுபட்ட பெண்கள் உட்பட 30 பேர் போலீசாரால் கைது செய்யப்பட்டு தனியார் மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதனால் இந்த பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.
 
 
 

அமெரிக்கா அட்லாண்டாவில் அதிரையரின் பெருநாள் சந்திப்பு !

உலககெங்கும் உள்ள நாடுகளில் வசித்து வரும் அதிரையர்கள் அமெரிக்கா அட்லாண்டாவிலும் வசித்து வருகின்றனர்.  இங்கு பெருநாள் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதில் அதிரையர்கள் ஒன்றாக கலந்து கொண்டு ஒருவருக்கொருவர் ஆரத்தழுவி தங்களின் வாழ்த்துகளை அன்புடன் பரிமாறிக்கொண்டனர்.

"வெற்றியாளன்" "சுயநலவாதி"


"வெற்றியாளன்"
தன்னுடன் இருப்பவர்களையும்
வெற்றியடையச் செய்து,
தானும் வெற்றி பெறுகிறான்....

*
"
சுயநலவாதி"
தன்னுடன் இருப்பவர்கள்
அனைவரையும் அழித்து விட்டு,
தான் மட்டும் வெற்றி பெற எண்ணுகின்றான்.

K.M.A. ஜமால் முஹம்மது. கோ.மு.அ.
த/பெ. (மர்ஹூம்) கோ.மு. முஹம்மது அலியார்.
தேசிய நுகர்வோர் பாதுகாப்பு சேவை மையம்.
National Consumer Protection Service Centre.

Monday, September 28, 2015

அதிரையில் இடியுடன் பலத்த மழை !

அதிரையில் கடந்த [ 20-09-2015 ] அன்று பலத்த மழை பெய்தது. இதைதொடர்ந்து கடந்த [ 26-09-2015 ] அன்று மீண்டும் மழை 45 நிமிடங்கள் பெய்தது. இந்நிலையில் இன்று இரவு 10 மணி முதல் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்து வருகிறது. குளிர்ந்த காற்றும் வீசிவருகின்றன. மழை தொடர்ந்து நீடித்து பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதிரை பைத்துல்மாலின் மனிதநேயப் பணி !

அதிரையில் பல ஆண்டுகளாக வசித்து வருபவர் கதிஜா பீவி ( வயது 65 ). மணமேல்குடியை சேர்ந்த இவர் அதிரையர்களுக்கு மிகவும் பரிச்சையமானவர். அதிரையில் தங்கியிருந்து வீட்டு வேலைகள் செய்து வந்தார். கடந்த சில வாரங்களுக்கு முன்பு உடல் நலம் மிகவும் குன்றிய நிலையில் சிகிச்சைக்காக அதிரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த இவர் நேற்று உயிரிழந்தார்.

இந்நிலையில் இவர் இறப்பதற்கு முன்பு அதிரை பைத்துல்மால் செய்து வந்த பல்வேறு உதவிகள் குறித்து தகவல் தற்போது வெளியாகியுள்ளது. இவரது ஏழ்மை நிலையை கருத்தில் கொண்டு அதிரை பைத்துல்மால் சார்பில் கடந்த 4 ஆண்டுகளுக்கும் மேலாக பென்சன் நிதி உதவி வழங்கப்பட்டு வந்ததும், மருத்துவ சிகிச்சைக்காக அவ்வப்போது ஆம்புலன்ஸ் வசதி வழங்கி வந்ததும் தெரிய வந்துள்ளது. மேலும் அதிரை பைத்துல்மால் நிர்வாகிகள் ஏற்பாட்டின் பேரில் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தொடர்ந்து கண்காணிப்பில் இருந்து வந்ததாகவும் கூறப்படுகிறது.

ஆதரவற்றோர் மீது அதிக அக்கறை காட்டும் அதிரை பைத்துல்மாலின் மனிதநேயப் பணியை பலரும் பாராட்டுகின்றனர். இறந்த கதிஜா பீவி போல் பலருக்கு பல்வேறு மருத்துவம் மற்றும் வாழ்வாதார உதவிகளை செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

துபாய் மெட்ரோ புதிய நேர அட்டவணை !

துபாய் மெட்ரோ வெள்ளிகிழமைகளில் மதியம் 1 மணி முதல் நள்ளிரவு வரை செயல்பட்டு வருகிறது. தற்பொழுது துபாய் RTA பயணிகளின் வசதிக்காக துபாய் மெட்ரோ சேவையின் நேரத்தை மேலும் அதிகரித்துள்ளது. அதன்படி வரும் அக்டோபர் 2 வெள்ளி முதல் துபாய் மெட்ரோ காலை 10 மணி முதல் தனது சேவையை துவங்கும். இந்த புதிய கால அட்டவணையால் துபாய் மெட்ரோ பயணிகள் பெருத்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 

அமெரிக்காவில் மோடியின் வருகையை எதிர்த்து போராட்டம்: அதிரையர் பங்கேற்பு !

இந்திய பிரதமர் மோடி அமெரிக்கா கலிபோர்னியா சிலிக்கான் வேலி என்ற பகுதிக்கு வந்தபோது இங்குள்ள முஸ்லிம்கள் பெருந்திரளாக கலந்துகொண்டு அவருக்கு எதிராக எதிர்ப்பு பதாகைகள் கையில் ஏந்திவாறு கோஷசமிட்டனர்.

இந்த எதிர்ப்பு போராட்டத்தில் 10,000 த்திற்கும் அதிகமான ஆண்களும் பெண்களும் குழந்தைகளும் கலந்து கொண்டு எதிர்ப்பை பதிவு தெரிவித்தார்கள். இதில் அதிரையை சேர்ந்தவர்களும் மற்றும் தஞ்சை, திருச்சி, தின்டுக்கல், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோயில் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்தவர்களும், பஞ்சாப், குஜராத், பம்பாய் ஆகிய மாநிலங்களை சேர்ந்த பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு எதிர்ப்பு தெரிவித்தனர். போராட்டத்தில் கலந்துகொண்ட இஸ்லாமியர்கள் அங்கேயே அஸர் தொழுகையையும் நடத்தினர்.

அதிரையில் புதிதாக அருள்மறை கூறும் அருளகம் திறப்பு !

அதிரையை சேர்ந்தவர் எம்.ஏ அப்துல் ஹாதி. இவரது மனைவி ஆலிமா ரபீஸ். பாரம்பரிய சித்த மருத்துவரான இவர் தனது இல்லத்தில் உடனடி நிவாரணம் அளிக்கும் வகையில் சிறப்பு சித்த வைத்தியம் மேற்கொண்டு வந்தார். இவரிடம் உள்ளூர் மற்றும் வெளியூர் பகுதிகளை சேர்ந்த நோயாளிகள் சிகிச்சை எடுத்து வருகின்றனர். குறிப்பாக பெண்கள் அதிகளவில் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர்.

இந்நிலையில் தனது சித்த மருத்துவமனையை மேலத்தெரு சானவயல் பகுதியில் புதிதாக துவங்கியுள்ளார். இதன் திறப்பு விழா நிகழ்ச்சி நேற்று மாலை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு அதிரை நியூஸ் ஆசிரியர் சேக்கனா நிஜாம் தலைமை வகித்தார். இதில் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட பட்டுக்கோட்டை நகர்மன்ற பெருந்தலைவர் திரு. ஜவஹர் பாபு அவர்கள் சித்த மருத்துவனையை திறந்து வைத்து வாழ்த்துரை வழங்கினார். 

இதை தொடர்ந்து விழாவில் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்ட அதிரை பேரூராட்சி பெருந்தலைவர் எஸ். ஹெச் அஸ்லம், காதிர் முகைதீன் கல்லூரி பேராசிரியர் கே. செய்யது அஹமது கபீர், ஷிஃபா மருத்துவமனை நிர்வாகச் செயலர் ஷிப்ஹத்துல்லாஹ், அதிரை ரெட் கிராஸ் சேர்மன் மரைக்கா கே இத்ரீஸ் அஹமது ஆகியோர் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கினார்கள்.

முன்னதாக அருளகம் சித்த மருத்துவர் ஆலிமா ரபீஸ் அனைவரையும் வரவேற்றார். விழா முடிவில் அருளகம் சித்த மருத்துவமனையின் நிறுவனர் எம்.ஏ அப்துல் ஹாதி அனைவருக்கும் நன்றி கூறினார்.

இந்நிகழ்ச்சியில் அதிரை மற்றும் சுற்றுவட்டார பகுதி சித்த மருத்துவமனையின் வாடிக்கையாளர்கள் பலர் கலந்துகொண்டனர்.

செய்தி மற்றும் படங்கள்:
அஃப்ரீத் ( மாணவ செய்தியாளர் )