.

Pages

Tuesday, September 29, 2015

அதிரை அருகே உயிருக்கு போராடிய ஆட்டுக்கு சிசேரியன் அறுவை சிகிச்சை !

அதிரை அருகே உள்ள தம்பிக்கோட்டை கீழக்காடு பகுதியைச் சேர்ந்தவர் செல்லப்பா மகன் ராஜ்மோகன், இவரது ஆடு ஒன்று கடந்த சனிக்கிழமை அருகிலுள்ள தோப்பிற்கு மேய்ச்சலுக்கு சென்று அங்கேயே குட்டிபோட முடியாமல் தங்கிவிட்டது. மாலையில் வீடுத் திரும்ப வேண்டிய ஆட்டைக் காணாததால் தேடிச்சென்ற ராஜ்மோகன் அது குட்டிபோட சிரமப்படுவதை கண்டதும் உடனடியாக கால்நடை மருத்துவரை அழைத்து சென்று ஆட்டுக்குட்டியை எடுக்கும் முயற்சியில் ஈடுபட்டார். ஆனால் கால்நடை மருத்துவர் பலமணி நேரம் போராடியும் எடுக்க முடியவில்லை. ஆட்டின் இடுப்பு பகுதியில் குறைபாடு உள்ளதாகவும் அறுவைசிகிச்சை செய்தால் மட்டுமே ஆடு பிழைப்பதற்கு வாய்ப்புள்ளது எனவும் கால்நடை மருத்துவர் தெரிவித்தார். அதன்படி நேற்று காலை சுமார் 9 மணிக்கு முத்துப்பேட்டை கால்நடை மருத்துவ மனைக்கு செல்லப்பா ஆட்டைக் கொண்டு வந்தார். அங்கு டாக்டர் கங்கா சூடன் ஆட்டுக்கு மயக்க ஊசி போடப்பட்டு அறுவை சிகிச்சை செய்து வயிற்றிலேயே இறந்த நிலையில் ஒரு ஆட்டுக்குட்டியை எடுத்தார். அறுவைசிகிச்சை சுமார் 45 நிமிடங்களில் செய்து முடிக்கப்பட்டது. ஆட்டுக்குட்டி வயிற்றில் இறந்துப் போன சரியான நேரத்தில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டதால் குட்டியை ஈன்றெடுத்த ஆட்டின் உயிர் காப்பாற்றப்பட்டது. பின்னர் அறுவைசிகிச்சை செய்து முடித்த 15 நிமிடங்களிலேயே ஆடு எழுந்து நடந்து சென்றது. அங்கிருந்த அனைவரையும் மிகுந்த வியப்பில் ஆழ்த்தியது.

இதுகுறித்து முத்துப்பேட்டை கால்நடை மருத்துவர் கங்காசூடன் கூறுகையில், 
சிசேரியன் அறுவை சிகிச்சை செய்யப்பட்ட ஆட்டிற்கு 'நேரோ பெல்விஸ்' எனும் குறைபாடு இருந்தது. இந்த குறைபாடு உள்ள ஆட்டின் இடுப்பு எலும்புகள் குறுகியவாறு இருக்கும், இவ்வகை ஆடுகள் இயற்கையான முறையில் குட்டியீன இயலாது. இந்த ஆடு 3 மாத குட்டியாக இருந்தபோது இருசக்கர வாகனத்தில் மோதி முதுகு பகுதியில் அடிபட்டதே இக்குறைபாடு வர காரணம். இந்த ஆட்டிற்கு முதலில் ' ஃபீட்டாட்டமி ' எனும் முறையில் இறந்துபோன ஆட்டுக்குட்டியை எடுக்க முயற்சிசெய்யப்பட்டது, ஆட்டுக்குட்டியின் தலை இடுப்பெழும்பைத் தாண்டி வரமுடியாததால் சிசேரியன் அறுவை சிகிச்சை செய்து ஆட்டுக்குட்டி எடுக்கபட்டது. அறுவைசிகிச்சை செய்யப்பட்ட ஆடு தற்போது நல்ல நிலையில் நலமாக உள்ளது என தெரிவித்தார். இப்பகுதியில் உள்ள கால்நடைகளுக்கு சிசேரியன் போன்ற அறுவை சிகிச்சை மன்னார்குடி மற்றும் திருத்துறைப்பூண்டியில் உள்ள கால்நடை மருத்துவமனைகளில் 25 வருட அனுபவம் வாய்ந்த மருத்துவர்களால் செய்யப்படுவது வழக்கம். தற்பொழுது முத்துப்பேட்டை கால்நடை மருத்துவமனையில் சிசேரியன் அறுவை சிகிச்சை செய்வது இதுவே முதல் முறை என்பதால் பொதுமக்கள் டாக்டரை பாராட்டினர்.

செய்தி மற்றும் படங்கள்:
'நிருபர்' மொய்தீன் பிச்சை, முத்துப்பேட்டை
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.