.

Pages

Wednesday, June 8, 2016

அதிரை நியூஸின் நன்றி அறிவிப்பு !

அன்பானவர்களே!

அதிரை நியூஸ் இணைய தளம் முன்னெடுத்துள்ள அதிரை சமூக நல அறக்கட்டளையின் சார்பாக,  கல்வி மற்றும் பல்வேறு துறைகளில் தங்களை சாதனையாளர்களாக நிலை நிறுத்தியவர்களுக்கு அங்கீகாரம் அளித்து   விருதுகள்  வழங்கும் விழா கடந்த  03-06-2016  வெள்ளிக்கிழமை மாலை 5 மணியளவில் அதிரை இ.சி. ஆர் சாலையில் அமைந்துள்ள சாரா திருமண மஹாலில் நடைபெற்றது.

புனித ரமலான் மாதம் நெருங்கி வந்த காரணத்தால் அதற்கு முன்பே இந்த விருதுகள் வழங்கும் விழாவை நடத்தி விடவேண்டும் என்ற நெருக்கடியான காலச்சூழலில், பள்ளித் தேர்வு முடிவுகள் வெளியான பின்  மிகவும் குறைந்த நாட்களே இடையில் இருந்ததால் அதிரை சமூக நல அறக்கட்டளை மற்றும் அதிரை நியூசின் அனைத்து குழுக்களும் விரைவு படுத்தப்பட்டு விழாவுக்கான செயல்பாடுகள் முடுக்கிவிடப்பட்டன.

அல்லாஹ்வின் பெரும் கருணையாலும் அனைவரின் உள்ளம் நிறைந்த ஒத்துழைப்பாலும் இந்த விழா  வெற்றிகரமாகவும் சிறப்பாகவும்   நடைபெற்றது. இது ஒரு கை ஓசை அல்ல; பல கைகள் இணைந்து இந்த நினைவில் நிற்கும் விழாவை நிகழ்த்திக் காட்டின.

அதிரை சமூக நல அறக்கட்டளையின் சார்பாகவும், அதிரை நியூஸ் வலைதளத்தின் சார்பாகவும் இந்த விழாவை வெற்றிகரமாக நடத்த பல்வேறு வகைகளிலும் பேருதவி புரிந்த அனைவருக்கும் ஜசாக்கல்லாஹ் ஹைரன் என்று நன்றி  சொல்லும் கடப்பாட்டில் நாம் நின்று கொண்டிருக்கிறோம்.

அழகான  குரலில் திருமறை வசனத்தை ( கிராத் ) ஓதி சன்மார்க்க மக்களின் நெஞ்சையும் கவர்ந்த இமாம் ஷாஃபி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர் முஹம்மது ஃபாதில் அவர்களுக்கு எங்களது நன்றியுடன் நல் வாழ்த்துக்களையும் தொடக்கமாகத் தெரிவித்துக் கொள்கிறோம்.

தொடர்ந்து அதிரையின் அறிவொளியின் அடையாளமாகத் திகழும் கணினி தமிழ் அறிஞர் ஜமீல் எம் ஸாலிஹ் வரவேற்புரை ஆற்றினார்கள். அதைத்தொடர்ந்து அதிரை சமூக நல அறக்கட்டளையின் செயல்திட்டங்கள் பற்றிய அறிமுக உரையை காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியின்  தலைமை ஆசிரியர் சகோதரர் மகபூப் அலி அவர்கள் ஆற்றினார்கள். இவ்விரு நல்ல நெஞ்சங்களுக்கும் அதிரை நியூஸ் மற்றும் அதிரை சமூக நல அறக்கட்டளை தனது நன்றியை  தெரிவித்துக் கொள்கிறது.

பல்வேறு கல்வியாளர்களும் சாதனையாளர்களும் பங்கேற்கும் இந்த கவின்மிகு நிகழ்ச்சிக்கு ஒரு பொருத்தம்வாய்ந்த தலைமையாக அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியின்  ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் அனைவரின் மரியாதைக்குரிய எஸ் கே எம் ஹாஜா முகைதீன் அவர்கள்  தலைமை வகித்து நிகழ்ச்சிகளை நடத்தித் தந்தார்கள். நாம் அவர்களை அணுகிக் கேட்ட உடனே சம்மதித்து மிகச் சிறப்பாக  நிகழ்ச்சிகளை நடத்தித்தந்த  எங்களின் அன்புக்குரிய அவர்களுக்கு எங்களது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

நிகழ்ச்சித் தொகுப்பாளராக நமது அன்புக்கு உரிய பேராசிரியர் செய்யது அஹமது கபீர் அவர்கள்  சம்மதித்து இருந்தாலும் சில தவிர்க்க இயலாத சொந்தக் காரணங்களால் சென்னையில் இருக்கவேண்டிய நிலை ஏற்பட்டது. இருந்தாலும் விழாவுக்கான ஏற்பாடுகளின் அன்றாட நிலைகளை அக்கறையுடன் விசாரித்தறிந்து கொண்டதுடன் தேவையான ஆலோசனைகளையும் வழங்கி வந்தார்கள். பேராசிரியர் செய்யது அஹமது கபீர் அவர்கள் ஊரில் இல்லாத நிலையில் அவரது தமிழாசான் என்கிற நிலையில் அந்தப் பொறுப்பை தானாக முன்வந்து ஏற்றுக் கொண்டு தனக்கே உரிய அழகு தமிழில் நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கிய  நற்றமிழ் நாவலர் பேராசிரியர் எம் ஏ . முஹம்மது அப்துல் காதர் அவர்களுக்கு எங்களது அன்பு கலந்த நன்றியை உரித்தாக்குகிறோம். அதிரை சமூக நல அறக்கட்டளை மற்றும் அதிரை நியூசின் வளர்ச்சியில் பேராசிரியருக்கு இருக்கும் அக்கறையின் அடையாளமாகவே இதனை நாம் கண்டோம் என்பதை பெருமையுடன் குறிப்பிட விரும்புகிறோம்.

சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட திருச்சி அய்மான் மகளிர் கல்லூரி தாளாளர் டாக்டர் எம்.எம் சாகுல்ஹமீது அவர்கள் சிறப்புரை வழங்கினார்கள். ஒரு தகுதிவாய்ந்த பெருமகனான அவர்கள் இந்த விழாவில் கலந்து கொண்டு மாணவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் முயல்,  ஆமை போன்ற கதைகளை எல்லாம் எளிமையாக சொல்லி இனிய உரை ஆற்றி தங்களது அன்புக்கரங்களால் பரிசுகளையும் வழங்கித்தந்த தன்மைக்காக நாம் என்றென்றும் அவர்களுக்கு நன்றி செலுத்துகிறோம்.

விழாவின் இன்னொரு சிறப்பம்சமாக  சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட தஞ்சாவூர் தமிழ்ப்பல்கலை கழகப்  பதிவாளர் டாக்டர் செ. சுப்பிரமணியன் அவர்கள் தனது மனைவியுடன் வந்து கலந்து கொண்டு ஆற்றொழுக்கான  சிறந்த ஒரு சொற்பொழிவையும் நிகழ்த்தினார்கள். அதிரை சமூக நல அறக்கட்டளையின் குறிக்கோள்களை மகிழ்வுடன் குறிப்பிட்டு தனது பாராட்டுக்களைத் தெரிவித்தார்கள். ஒரு பெரும்பொறுப்பில் இருக்கும் இத்தகைய தகைமை சான்றோர் நமது விழாவில் கலந்து கொண்டது அதிரைக்கு பெருமை சேர்த்ததாகும். தஞ்சாவூர் தமிழ்ப்பல்கலை கழகப்  பதிவாளர் டாக்டர் செ. சுப்பிரமணியன் அவர்களுக்கு நாம் நமது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

அதிராம்பட்டினம்,  மற்றும் சுற்றுப்புற பகுதிகளின் கல்வி நிறுவனங்களில் நடப்பாண்டில் SSLC, +2 அரசு பொதுத்தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெற்று, முதல் 3 இடங்களை பெற்றுள்ள மாணவ மாணவிகள், பள்ளி அளவில் முதல் இடங்களை பிடித்துள்ள மாணவ, மாணவிகள் கல்விச்சேவையில் சிறந்து விளங்கும் ஆசிரியை ஆசிரியர்கள், கல்வி நிறுவனங்கள், பல்வேறு துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு சிறப்பு விருந்தினர்களுடன் இணைந்து இன்னும் சிறப்பு சேர்க்கும் வகையில் தங்களது பொன்னான நேரத்தை ஒதுக்கிக்கொண்டு வருகை தந்த தமிழக காவல்துறையின் மதுவிலக்குப் அமல் பிரிவு மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளர் பி. சேகர், ராஜாமடம் அண்ணா பல்கலைகழக உறுப்பு பொறியியல் கல்லூரி புல முதல்வர் முனைவர் இளங்கோவன், காதிர் முகைதீன் கல்லூரி முதல்வர் முனைவர் உதுமான் முகையதீன் ஆகியோர் பரிசுகள் மற்றும் சாதனை விருதுகள் வழங்கி கெளரவித்தனர். இத்தகைய பெருமகன்களின் வருகை நம்மை மிகவும் மகிழ்ச்செய்ததுடன் நமது நெஞ்சார்ந்த நன்றியையும் இவர்களுக்கு அன்புடன் சமர்ப்பிக்கவும் பெரும் கடமைப்பட்டு இருக்கிறோம்.

கல்வி மற்றும் சாதனையாளர்களுக்கு விருது வழங்கும் இந்த விழாவில் வருகை தந்து கலந்து கொண்டதுடன் தங்களின் அன்புக்கரங்களால் இரண்டு மாணவச் செல்வங்களுக்கு மடிக்கணினி வழங்கிய தொழில் அதிபர் பழஞ்சூர் K செல்வம் அவர்களுக்கும், பதினைந்து மாணவ சாதனையாளர்களுக்கு ரூ. 1000/- வீதம்  தனது கரங்களால் வழங்கிய அல்நூர் ஹஜ் சர்வீஸ் நிறுவனர் அல்ஹாஜ். M.S. முகமது அலி அவர்களுக்கும் அதிரை சமூக நல அறக்கட்டளை மற்றும் அதிரை நியூஸ் தனது அன்பான நன்றியை தெரிவித்துக் கொள்வதில் மட்டற்ற மகிழ்ச்சியடைகிறது.

நலிவுற்ற குடும்பத்துக்கு  தையல் மிஷின் வழங்கி உதவிய முத்துப் பேட்டை அல்மஹா கல்வி அறக்கட்டளையின் நிறுவனர்  டாக்டர் எஸ். எம். ஹைதர் அலி அவர்களுக்கும் நாம் நமது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

விழா குறுகிய காலத்தில் சிறப்பாக நடைபெற தொடக்கம் முதல் எங்களுடன் அனைத்துக் காரியங்களிலும் உறுதுணையாக  இருந்து உதவிய  தம்பி அதிரை மைதீன் அவர்களுக்கும், இணைய தள ஊடகமான அதிரை நியூசுக்கு அச்சு ஊடகங்களின் அரவணைப்பு  அளவிட முடியாமல் இருந்தது. அந்த வகையில் தினகரன் நிருபர் திரு. செல்வகுமார், தினமலர் நிருபர் திரு. சிவா, நிருபர் ஜகுபர் அலி, நிருபர் கண்ணன், நிருபர் பார்த்திபன் ஆகியோர் இந்த விழாவின் வெற்றியின் ஒவ்வொரு அணுவிலும் இருக்கிறார்கள் என்பதை மனமார தெரிவித்து அவர்களுக்கு நன்றி செலுத்துகிறோம்.

இந்த விழா இனிதே நிகழ்வுற ஒத்துழைப்பு நல்கிய நல்ல இதயங்களான ஜபருல்லாஹ், ராஃபியா காக்கா, கே.எம்.ஏ ஜமால் முஹம்மது, நாவலர் நூர் முஹம்மது, திருப்பூர் மு.செ.மு. சபீர் அஹமது, ஷப்னம் மினி டவர்ஸ் அதிபர் கவிஞர் சபீர், எழுத்தாளர் இக்பால்- எம்- ஸாலிஹ், கவிஞர் - எழுத்தாளர் அதிரை மெய்சா, அப்துல் ஜலீல், மான் சேக் ஆகியோருக்கும் நன்றி.

இந்த விழா சிறப்புற நடைபெற,  சாரா திருமண மண்டபத்தை நமக்குத் தந்து உதவிய  அதன் உரிமையாளர் லயன் அஹமது , தன்னுடைய அருமையான ஆலோசனைகளை அவ்வப்போது வழங்கிய அதிரை பேரூராட்சி பெருந்தலைவர் எஸ்.ஹெச் அஸ்லம் அவர்களுக்கும், விழா சிறக்க களத்தில் நின்று பணியாற்றிய ஆசிரியர்கள் அஜ்முதீன், சகாபுதீன், நியாஸ் அஹமது, பசூல்கான், நிஜாமுதீன் ( கள்ளுகொல்லை ), எஸ்.ஏ இத்ரீஸ் அஹமது, நவாஸ், இப்ராஹீம் அலி, அஃப்ரீத், நிஜாம், அஜார் ஆகியோருக்கும், விழாவின் நிறைவாக நன்றி உரை ஆற்றிய அபுல் ஹசன் சாதலி, விழா நிகழ்வுகளை படம்பிடித்து காணொளியாக பதிவு செய்த தம்பி கமாலுத்தீன், நண்பர் மீடியா மேஜிக்  நிஜாம். விழாவின் ஒவ்வொரு பகுதிகளையும் புகைப்படங்கள் எடுத்து தந்து உதவிய சூப்பர் ஸ்டுடியோ அப்துல் ரஹ்மான்,  சிறப்பான முறையில் ஒலி ஒளி அமைத்து தந்தவர்களுக்கும், இந்த நிகழ்ச்சியை அனைவரிடத்திலும் எடுத்துச்செல்லும் விதமாக ஃப்ளக்ஸ் பேனர்கள், துண்டு பிரசுரங்கள், வால் போஸ்டர் ஆகியவற்றின் மூலம் விளம்பர உதவிகள் செய்த வர்த்தக உரிமையாளர்கள் மற்றும் தங்களின் உணர்வாலும் உழைப்பாலும் இந்த நிகழ்வை வெற்றிகரமாக்கிட உதவிய ஒவ்வொரு நல்ல நெஞ்சங்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகளை நெகிழ்வுடனும் அன்புடனும் சமர்ப்பித்துக் கொள்கிறோம்.

நமது அழைப்பை ஏற்று வருகை தந்து சிறப்பித்த அனைத்து அரசியல் கட்சி பிரமுகர்கள், பொதுமக்கள், பெற்றோர்கள், வாசகர்கள், சமூக ஆர்வலர்கள், அதிரை நியூசின் பங்களிப்பாளர்கள், பதிவர்கள், சக வலைதளங்களில் இருந்தும் வருகை புரிந்த நண்பர்கள், வாழ்த்து தெரிவித்த நல்ல இதயங்கள், பல்வேறு பள்ளிகள் இருந்தும்  வருகை தந்து சிறப்பித்த ஆசிரிய ஆசிரியைகள், மாணவ, மாணவிகள் மற்றும் விருதுகளைப் பெற்றுக் கொள்ள வருகை தந்த சாதனையாளர்கள் உட்பட அனைவருக்கும் நன்றி செலுத்துகிறோம்.

அதிரை நகரின் பொதுமக்கள் அனைவரும் ஆர்வமுடன் திரண்டு வந்து நிகழ்ச்சிகளின் தொடக்கம் முதல் நிறைவு வரை அமர்ந்திருந்து பரிசுகளும் விருதுகளும் பெற்றவர்களை உற்சாகமூட்டிப் பாராட்டிய காட்சிகளை நாங்கள் மறக்கவே இயலாது.

மேலும் உள்ளூரிலிருந்தும் நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் உலகின் பல பகுதிகளில் இருந்தும் இந்த நிகழ்ச்சியின் பதிவுகளைப் பார்த்தும் வீடியோ பதிவுகளைக் கேட்டும் பாராட்டிய அன்பான நண்பர்களுக்கும் எமது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். உங்களின் இந்தப் பாராட்டுக்கள் எங்களை இன்னும் அதிகம் இந்த தன்னலமற்ற சேவையில் ஈடுபடுத்திக் கொள்ள தூண்டுகோலாக அமையும் என்பதை அறிவிப்பதில் ஆனந்தமடைகிறோம்.

இறைவன் நாடினால் எதிர்வரும் ஆண்டுகளில் சிறப்பாக இந்த விழா நடைபெற அனைத்து நல்ல இதயங்களின் இறைஞ்சல்களையும் வேண்டி நிற்கிறோம். மீண்டும் அனைவருக்கும் நன்றி !

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.