.

Pages

Monday, June 17, 2019

அதிராம்பட்டினம் கடலோரப் பகுதிகளில் வளர்ச்சிப்பணிகள் ஆய்வு (படங்கள்)

அதிரை நியூஸ்: ஜூன் 17
அதிராம்பட்டினம் கரையூர் தெரு, ஏரிப்புறக்கரை, மல்லிப்பட்டினம் ஆகிய பகுதிகளில் மீன்வளத் துறை சார்பில் ரூ. 63.23 கோடியில் முடிக்கப்பட்ட பணிகளை, மாவட்ட ஆட்சியர் ஆ. அண்ணாதுரை ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்தார்.

மல்லிப்பட்டினம் கிராமத்தில் படகு அணையும் துறை, படகு பழுது பார்க்கும் தளம், நிர்வாக அலுவலகக் கட்டடம், இரண்டு மீன் ஏலக் கூடங்கள், இரண்டு வலை பின்னும் கூடங்கள், 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட இரண்டு மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள், சிமெண்ட் சாலைகள், மழைநீர் வடிகால், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் ஆகிய பணிகள் ரூ. 60 கோடியில் முடிக்கப்பட்டுள்ளன.

இத்திட்டத்தில் 213 விசைப்படகுகளும், 102 வல்லம் படகுகளும், 967 பாரம்பரியப் மீன்பிடி படகுகளும் நிறுத்த வகை செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம் 4,249 மீனவர்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் பயன் பெறுவர். இத்திட்டத்தின் மூலம் மீனவர்கள் மீன்பிடித் தொழிலுக்கு தேவையான உபகரணங்களை இலகுவாக ஏற்றவும், பிடித்து வரப்பட்ட மீன்களை இலகுவாக கையாளவும் வகை செய்யப்பட்டுள்ளது. மேலும் மீன்களை சுகாதாரமான முறையில் விற்கவும், மீனவர்களின் வாழ்வாதாரம் மேம்பாடு அடைவதற்கும் இத்திட்டம் பயனுள்ளதாக அமையும்.

அதிராம்பட்டினம் கரையூர் தெருவில் ரூ. 2 கோடியில் வலை பின்னும் கூடம், தார்ச்சாலை, 900 மி.மீ. விட்ட ஆர்.சி.சி குழாய் பாலங்கள், வடிகால் வாய்க்கால் தூர்வாருதல் தடுப்பு சுவர் அமைத்தல் ஆகிய பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. இத்திட்டத்தின் மூலம் மீனவர்கள் சுகாதாரமான முறையில் வலைகளை பின்ன வசதி செய்யப்பட்டுள்ளது. மீனவர்கள் மீன்வளங்களை முழுமையாகப் பயன்படுத்தி, சுகாதாரமான முறையில் மீன்களைப் பிடித்து விற்பனை செய்து முன்னேற்றம் அடைய வகை செய்யப்பட்டுள்ளது.

ஏரிப்புறக்கரையில் ரூ.1 கோடியே 23 லட்சத்தில் வலை பின்னும் கூடம், உலர் மீன் சேமிப்பு அறை, தடுப்புச்சுவர் அமைத்தல், வடிகால் வாய்க்கால் தூர்வாருதல் ஆகிய பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. இத்திட்டத்தால் மீனவர்களின் படகு ஆண்டுதோறும் மீன்பிடி தொழில் செய்ய ஏதுவாக அமையும், இதன் மூலம் மீன்பிடி தொழில் ஊக்குவிக்கப்பட்டு மீனவர்களின் வாழ்வாதாரம் முன்னேற்றமடையும் என்றார் ஆட்சியர். மேலும் மீனவர்களின் தேவைகளை குறித்து விவரங்களை மீனவர்களிடம் கேட்டறிந்தார்.

ஆய்வின்போது மீன்வளத் துறை உதவி இயக்குநர் சிவக்குமார், செயற்பொறியாளர் ராமநாதன், உதவி செயற்பொறியாளர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் உடன் இருந்தனர்.
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.