சமீபத்தில் அடுத்தடுத்து வீட்டு மனை வாங்கிய இருவருக்கிடையில் இருவர் மனைகளுக்குமிடையில் சுவர் வைப்பதில் அரை அடி அளவு தொடர்பான பிரச்னை ஏற்பட்டது. அரை அடியை இருவரில் ஒருவர் விட்டுக் கொடுத்துப் போயிருக்கலாம். ஆனால் வீட்டுப் பெண்களின் தூண்டுதலின் பேரில் அவள் என்ன மகாராணியா அவளை போலீஸ் ஸ்டேஷனுக்கு இழுக்கிறேன் பார்! என்று சொல்லி காவல் நிலையத்தில் போய் புகார் கொடுத்தார்கள். காவல் நிலையத்திலிருந்து ஏட்டய்யா வந்து இடத்தைப் பார்த்துவிட்டுப் போனார். போகும்போது முதல் வீட்டாரை காவல் நிலையத்துக்கு வரும்படிக் கூறினார். அதன்படி அவர்களும் அங்கு போனார்கள் . அப்படிப் போனவர்களிடம் காவல் நிலையத்தில் உள்ளவர்கள் சில காந்தித் தாத்தாக்களைப் பெற்றுக் கொண்டு ‘நீ போய் சுவரை எடய்யா எல்லாம் உன்பக்கம் சரியாக இருக்கு ‘என்று சொன்னார்கள். உடனே இரவோடு இரவாக ஆட்களை வைத்து அவர் சுவரை எடுத்து முடித்தார்.
காலையில் அடுத்த மனைக்காரர் வந்து பார்த்த போது சுவர் எடுக்கப்பட்டிருப்பதைப் பார்த்து அதிர்ந்தார். உடனே அவரும் காவல் நிலையம் போனார். காவல் நிலையத்தில் மீண்டும் காந்தித்தாத்தா கைமாறினார். காவல் நிலையத்தில் ‘ உன் இடத்தில் தவறாக சுவரை எடுத்துவிட்டார்கள். நீ சில ஆட்களைக் கூட்டிப்போய் சுவற்றை இடித்துத் தள்ளு ஏதாவது பிரச்னை என்றால் நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் ‘ என்று கூறினார்கள். அதன்படி அவரும் சில ஆட்களைக் கூட்டிவந்து கடப்பாறையை வைத்து இரவு எடுக்கப்பட்ட சுவரை இடித்துத் தள்ளினார். பிரச்னை பெரிதாகி கைகலப்பு - மண்டை உடைப்பு - மருத்துவமனை என்று இரு தரப்பிலும் பெரிய பாதிப்புகள் உண்டாயின. மீண்டும் காவல்துறை வந்தது. இரு தரப்பிலும் சில பேர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு கைதும் செய்யப்பட்டு நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டு ஒரே சப் ஜெயிலில் ரிமாண்ட் செய்யபட்டார்கள் . புத்தருக்கு போதி மரத்தடியில் ஞானம் வந்தது போல் சிறைக்குள் இருதரப்பும் சமாதானமாகப் போவதாக முடிவு செய்தார்கள். சிறையிலிருந்து ஜாமீனில் இரு தரப்பும் ஒன்றாக வெளி வந்தத் போது சிரித்துக் கொண்டு கை குலுக்கிக் கொண்டு வந்தார்கள். அரை அடி நிலத்துக்கு ஒரு விலையை ஊர் ஜமாத்தாரால் நிர்ணயிக்கப்பட்டு அடுத்த தரப்புக்கு பணமாகத் தரப்பட்டது. பிரச்னை முடிந்தது. வழக்குகள் வாபசாயின. இரு குடும்பத்திலும் அமைதி நிலவியது.
இது ஒரு உதாரணம்தான். ஒரே சமுதாயத்தில் வாழ்கின்றவர்கள் தங்களுக்குள் ஏற்படும் எந்தப் பிரச்னையாக இருந்தாலும் தங்களுக்குள் பேசித் தீர்ப்பதன் மூலம் தங்களுக்குத் தாங்களே உண்டாக்கிக் கொள்ளும் மேலதிகப் பிரச்னைகளை தவிர்த்துக் கொள்ள முடியும். இதற்குத்தேவை மனம் விட்டுப் பேசுவது – ஒத்துப் போவது – உடன்படுவது ஆகிய குணங்கள் மட்டுமே. அரசுத் துறையே ஆனாலும் அடுத்தவரை பிரச்னைகளுக்குள் நுழைய விடுவதை முதலில் தேர்ந்தெடுக்காமல் தங்களுக்குள் சமாதானமாக பேசிப்பார்த்துவிட்டு தீர்க்கவே முடியாவிட்டால் நீதிமன்றம் அல்லது காவல் துறையை நாடலாம். ஆனால் எடுத்த எடுப்பிலேயே உன்னை விட்டேனா பார் என்று ஒருவருக்கொருவர் முஷ்டியை மடக்குவது சமூக நல்லிணக்கத்தையும் சமூக அமைதியையும் நிச்சயம் கெடுத்துவிடும்.
பொதுவாக ஒவ்வொரு சமூகத்திலும் உள்ளூர் பஞ்சாயத்து அல்லது ஜமாஅத் என்ற ஒரு அமைப்பு இருக்கவே செய்கிறது. சில கிராமங்களில் இப்படிப்பட்ட அமைப்புக்கள் வலுவாக இருக்கின்றன. அதே போல் சில குறிப்பிட்ட தொழில் செய்பவர்களின் மத்தியிலும் இப்படிப்பட்ட அமைப்புக்கள் இருக்கின்றன. உதாரணமாக மீனவ சமுதாயத்து நண்பர்கள் மிகவும் கட்டுப்பாடாக இத்தகைய அமைப்புகளை வைத்து நடைமுறைப் படுத்தி வைத்து இருக்கிறார்கள். இதே ரீதியில் சில சாதியினர் பெரும்பான்மையாக வாழும் சமூகங்களிலும் இப்படிப்பட்ட அமைப்புகளை வைத்து தங்களுக்குள் ஏற்படும் பிரச்னைகளைத் தீர்த்துக் கொள்கிறார்கள். உதாரணமாக நாட்டுக் கோட்டை செட்டியார் சமூகத்தினரைச் சொல்லலாம் . அனேகமாக பொருளாதாரத்தில் சிறப்பான வளர்ச்சியைப் பெற்று இருக்கும் இந்த சமூகத்தின் வெற்றிக்கு இப்படிப் பட்ட நற்குணங்களே காரணங்களாக இருக்கலாம்.
திருநெல்வேலி மாவட்டம் காயல் பட்டினத்தில் முஸ்லிம்களுக்கு இடையே ஏற்படும் பிரச்னைகளுக்கு ஜமாஅத் மூலமே தீர்வு காணப்படுவதாகவும் காவல் நிலையம் செல்லும் வழக்கம் அந்த ஊர் மக்களிடையே இல்லை என்றும் புகழ்ந்து அண்மையில் சண் டிவியில் அந்த ஊரைப் பற்றி ஒரு நிகழ்ச்சி ஒளிபரப்பானது. இதற்காகவே தனியாக ஒரு பஞ்சாயத்துக் கூடம் இருப்பதாகவும் காட்டப்பட்டது.
“நன்மையான காரியங்களில் நீங்கள் ஒருவருக்கொருவர் ஒத்துழைப்பாக இருங்கள் “ என்று பெருமானார் ( ஸல் ) அவர்கள் சொல்லி இருக்கிறார்கள். காயல்பட்டினம் போல முஸ்லிம்கள் பெரும்பான்மையாக இருக்கும் ஊர்களில் அனைத்து அமைப்புகளும் பிரதிநிதித்துவம் வகிக்கும் சமாதான அமைப்பு ஏற்படுத்தப்படலாமே!
நமது நாட்டு நீதிமன்றங்களில் பல ஆண்டுகளாக பல வழக்குகள் தேங்கி இருப்பதாக புள்ளி விபரங்கள் கூறுகின்றன. இப்படி தாமதப் படுத்தப்படும் வழக்குகளுக்குப் பல காரணங்கள் இருக்கின்றன. நீதிமன்றங்களில் இரு தரப்புக்காக வழக்காடும் வழக்கறிஞர்கள் தங்களிடம் வந்துள்ள வழக்கைத் தீர்த்து வைத்து தீர்வு காண்பதற்கு முயற்சிப்பதற்கு தங்களின் நேரத்தையும் அறிவையும் செலவிடுவதைக் காட்டிலும் வழக்கை நீடித்துக் கொண்டே போவதற்கே தங்களது திறமைகளைப் பயன்படுத்துகிறார்கள் என்பது பொதுவான குற்றச் சாட்டாக இருக்கிறது. காரணம் வழக்கு நடைபெறும் நாட்கள் நீடிக்க நீடிக்க வழக்கறிஞர்களின் வருமானம் பெருகுகிறது என்பதே உண்மை. இதன் பாதிப்பு இரு தரப்புக் கட்சிக்காரர்களுக்கு மட்டுமே என்பதை உணர வேண்டும்.
ஒரு வேடிக்கையான சம்பவம் இருக்கிறது. கேட்க கதைபோல இருக்கும். இரு உடன் பிறந்த சகோதரர்களுக்குள் பரம்பரை சொத்துப் பிரச்னை ஏற்பட்டது. மூத்தவர் ஒரு வழக்கறிஞரை சந்தித்தார். வழக்கறிஞர் அவர்களின் குடும்ப நண்பரும் கூட. வழக்கறிஞரிடம் சொத்து பற்றி விவாதித்த மூத்தவர் அனைத்து தஸ்தாவேஜுகளையும் அவரிடம் காண்பித்துவிட்டு “ இந்த சொத்து எனக்கே வந்துவிடுமா சார் ? “ என்று கேட்டார். வழக்கறிஞர் சொன்னார் , “ உங்களுக்கு வராது “ என்று . அதிர்ச்சியடைந்த மூத்தவர் “ பின்னே யாருக்குப் போகும் ? “ என்று கேட்டார். வக்கீல் சொன்னார், “ சொத்தோ அல்லது இந்த சொத்தின் மதிப்போ எனக்கு வந்துவிடும்” என்றார். மூத்தவருக்கு ஒன்றும் புரியவில்லை “அது எப்படி உங்களுக்கு வரும்?” என்று கேட்டார். அதற்கு வழக்கறிஞர் சொன்னார், “ இந்த சொத்தின் அளவுக்கு நீங்கள் எனக்கு பீஸ் தரவேண்டி வரும். அதற்கு பதில் நீங்கள் உங்கள் சகோதரருடன் சமாதானமாகப் போய் ஆளுக்குப் பாதியாக சொத்தைப் பிரித்துக் கொள்ளுங்கள் இரண்டு பேரிடமும் பரம்பரை சொத்து அழியாமல் தங்கி இருக்கும். இல்லாவிட்டால் இந்த சொத்து அழிந்துவிடுவதுடன் , மேலும் உங்கள் இருவரையும் கடன்காரர்களாக ஆக்கிவிடும்” என்று சொன்னார். வழக்குகளை வாபஸ் வாங்கிக் கொண்டு சகோதரர்கள் ஒற்றுமையுடன் வாழ்கிறார்கள். இது ஒரு உண்மைச் சம்பவம்.
இதேபோல் இதற்கு மாறான இன்னொரு சம்பவமும் நடந்தது. இரு சகோதரர்களின் தகப்பனார் சம்பாதித்து வாங்கிய தென்னந்தோப்பு அளத்திக்காடு கிராமத்தில் இருந்தது. தகப்பனார் திடீரென்று மரணமடைந்துவிட்டதால் , அதற்கு முன் சொத்துக்களைப் பிரித்து பிள்ளைகளுக்குக் கொடுக்க முடிய வில்லை. இளைய சகோதரர் சொத்தை கவனித்துக் கொண்டிருந்தார். மூத்தவருக்கு தேங்காய் வெட்டும்போது ஒரு சிறு தொகையைக் கொடுத்துக் கொண்டிருந்தார். அது போதாது என்று மூத்தவர் முனங்கிக் கொண்டு இருந்தார். இந்த நிலையில், இளையவர் தனது மாமனார் வீடு கட்டுவதற்காக மணல் கிடைக்காததால் , சில லாரிகள் மணலை அந்தத் தோப்பிலிருந்து உதவியாக அள்ளச் சொல்லி இருந்தார். இதை யாரோ மூத்தவரிடம் போய் “உங்க தம்பி தோப்பில் உள்ள மணலை அள்ளி வியாபாரம் செய்கிறார் “ என்று போட்டுக் கொடுத்துவிட்டார்கள். பொங்கி எழுந்தார் மூத்தவர். அவர் போன இடம் நேராக போலீஸ் ஸ்டேஷன். பிறகு வழக்கமான அடிதடி . இன்றுவரை இந்த வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. எட்டு வருடமாக தீர்ப்பு வரவில்லை. இப்போதுதான் இரண்டு சகோதரர்களும் சிந்திக்க ஆரம்பித்து இருக்கிறார்கள்.
இப்படிப்பட்ட சம்பவங்களைப் பார்க்கும்போது , இஸ்லாமிய வரலாற்றில் மக்காவிலிருந்து மதீனாவுக்கு இடம்பெயர்ந்து சென்ற - இதற்கு முன் யாரென்றே தெரியாத முஹாஜிர் தோழர்களை உடன் பிறந்த சகோதரர்களாகப் பாவித்து தங்களது தோட்டத்தின் விளைச்சலில் பாதியை பகிர்ந்து கொடுத்த மதீனா நகரத்து அன்சாரித் தோழர்களின் அரவணைக்கும் தன்மையை நாம் நினைத்துப் பார்க்க வேண்டி இருக்கிறது. ஆனால் இன்று நடக்கும் வழக்கு வியாஜ்ஜியங்களில் பாதிக்கு மேல் உறவினர்கள் - உடன்பிறப்புகள்- ஒருதாய் வயிற்றுப் பிள்ளைகளுக்கு இடையிலேதான் நடக்கின்றன என்பது வேதனையான விஷயம் .
நமக்குள்ளேயே அன்புடனும் பாசத்துடனும் கண்ணியத்துடனும் பேசி தீர்த்துக் கொள்ள தகுதி படைத்த விவகாரங்களுக்கெல்லாம் நீதிமன்றங்களுக்குச் செல்வதால் ஏற்படும் மன உளைச்சல், வாய்தா தினத்தன்று முக்கியமான சில வேலைகளை கவனிக்க இயலாமை போன்ற பிரச்னைகள் ஏற்படுவதை இந்த நிலையில் இருப்பவர்கள் நடைமுறையில் உணர்ந்து இருக்கலாம்.
“ சாட்சிக்காரன் காலில் விழுவதைவிட சண்டைக்காரன் காலில் விழுவது மேல் “ என்று ஒரு பழ மொழி சொல்வார்கள். இது மிகவும் அர்த்தம் உள்ளது.
வட மொழியிலும் அர்த்தமுள்ள ஒரு பழமொழி உள்ளது . “ வாதியும் பிரதிவாதியும் ஒரே படகில் பயணம் செய்தால் , சாட்சி சொல்லப் போகிறவர்கள் நீந்தித்தான் கரைக்குப் போக வேண்டும் “ என்பதே அந்தப் பழமொழி. இருபுறமும் தூபம் போட்டுப் பிழைப்பு நடத்தும் பிரிவினை வாதிகள் வாயில் மண் விழும் என்பதே இந்தப் பழமொழியின் உட்பொருள்.
வழக்குமன்றத்தின் படிக்கட்டுகளை தேய்ப்பதைவிட ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து சகிப்புத்தன்மையுடன் சமாதானமாகப் போனால் மனஉளைச்சல் குறைந்து பொருளாதாரம் மிகுந்து மகிழ்வுடன் வாழலாம் என்பதை மக்கள் உணரவேண்டும். ஆங்கிலத்தில் அமைதியை விலை கொடுத்து வாங்குவது என்று ஒரு கலைச்சொல் உண்டு. “ PURCHASING PEACE “ என்று இதைச் சொல்வார்கள். இந்த அமைதியை வாங்குவதற்கு நமது பிடிவாதம் , அகம்பாவம், ஆணவம் ஆகியவற்றைத்தான் நாம் விலையாகக் கொடுக்க வேண்டும். இதனால் நாம் வாங்குவது அமைதியான வாழ்க்கை.
ஆகவே வழக்குகளைத் தவிர்ப்போம்! அமைதியான வாழ்வை வாழ்வோம் !

வழக்குகளால் மன அழுத்தம் ஒருபக்கமிருந்தாலும், வீண் அலைச்சல், கூடுதல் செலவும் ஆகிவிடுகிறது..
ReplyDeleteநாடிச்செல்வர்கள் சிந்திக்கட்டும்...
மின்னஞ்சல் வழியே நபிதாஸ் கூறிய கருத்து...
ReplyDeleteகட்டுரை மிகவும் சிறப்பானது. அதில் எல்லா வரிகளும் முத்துக்கள். அதில் சில இன்னும் அதிகமாக மின்னின. அவைகள்...
//தங்களுக்குள் ஏற்படும் பிரச்னைகளை ஒரு பொதுவான - கட்டைபஞ்சாயத்து கதாநாயகர்களை தவிர்த்து - நம்பகமான உள்ளூர் நபர்களையோ அல்லது சொந்த பந்தங்களுடனோ கலந்து பேசி தீர்த்துக் கொள்ளாமல் காவல் மற்றும் நீதி மன்றங்களுக்கு செல்வதால் பிரச்னைகள் கூடுகிறதே தவிர குறைவதாக இல்லை.//
//புத்தருக்கு போதி மரத்தடியில் ஞானம் வந்தது போல் சிறைக்குள் இருதரப்பும் சமாதானமாகப் போவதாக முடிவு செய்தார்கள்.//
//பிரச்னைகளை தவிர்த்துக் கொள்ள முடியும். இதற்குத்தேவை மனம் விட்டுப் பேசுவது – ஒத்துப் போவது – உடன்படுவது ஆகிய குணங்கள் மட்டுமே.//
//திருநெல்வேலி மாவட்டம் காயல் பட்டினத்தில் முஸ்லிம்களுக்கு இடையே ஏற்படும் பிரச்னைகளுக்கு ஜமாஅத் மூலமே தீர்வு காணப்படுவதாகவும் காவல் நிலையம் செல்லும் வழக்கம் அந்த ஊர் மக்களிடையே இல்லை என்றும் புகழ்ந்து அண்மையில் சண் டிவியில் அந்த ஊரைப் பற்றி ஒரு நிகழ்ச்சி ஒளிபரப்பானது. இதற்காகவே தனியாக ஒரு பஞ்சாயத்துக் கூடம் இருப்பதாகவும் காட்டப்பட்டது.//
இதைத்தான் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அடிக்கடி சொல்கிறது. ஒவ்வொரு ஜமாத்திலும் அந்த அந்த பள்ளிவாசலில் சரியத் பஞ்சாயத் அமைப்பு இருக்க வேண்டும். அதில் மார்க்க ஆலிம், அறிஞர்கள், நிர்வாகிகள், தலைவர்கள் இவர்கள் இருக்க வேண்டும் என்று கூறுகிறது.
//வழக்கு நடைபெறும் நாட்கள் நீடிக்க நீடிக்க வழக்கறிஞர்களின் வருமானம் பெருகுகிறது என்பதே உண்மை.//
//வழக்கறிஞர் சொன்னார், “ இந்த சொத்தின் அளவுக்கு நீங்கள் எனக்கு பீஸ் தரவேண்டி வரும். அதற்கு பதில் நீங்கள் உங்கள் சகோதரருடன் சமாதானமாகப் போய் ஆளுக்குப் பாதியாக சொத்தைப் பிரித்துக் கொள்ளுங்கள் இரண்டு பேரிடமும் பரம்பரை சொத்து அழியாமல் தங்கி இருக்கும். இல்லாவிட்டால் இந்த சொத்து அழிந்துவிடுவதுடன் , மேலும் உங்கள் இருவரையும் கடன்காரர்களாக ஆக்கிவிடும்” என்று சொன்னார்.//
//இஸ்லாமிய வரலாற்றில் மக்காவிலிருந்து மதீனாவுக்கு இடம்பெயர்ந்து சென்ற - இதற்கு முன் யாரென்றே தெரியாத முஹாஜிர் தோழர்களை உடன் பிறந்த சகோதரர்களாகப் பாவித்து தங்களது தோட்டத்தின் விளைச்சலில் பாதியை பகிர்ந்து கொடுத்த மதீனா நகரத்து அன்சாரித் தோழர்களின் அரவணைக்கும் தன்மையை நாம் நினைத்துப் பார்க்க வேண்டி இருக்கிறது. ஆனால் இன்று நடக்கும் வழக்கு வியாஜ்ஜியங்களில் பாதிக்கு மேல் உறவினர்கள் - உடன்பிறப்புகள்- ஒருதாய் வயிற்றுப் பிள்ளைகளுக்கு இடையிலேதான் நடக்கின்றன என்பது வேதனையான விஷயம் //.
//“ சாட்சிக்காரன் காலில் விழுவதைவிட சண்டைக்காரன் காலில் விழுவது மேல் “ என்று ஒரு பழ மொழி சொல்வார்கள். இது மிகவும் அர்த்தம் உள்ளது.
வட மொழியிலும் அர்த்தமுள்ள ஒரு பழமொழி உள்ளது . “ வாதியும் பிரதிவாதியும் ஒரே படகில் பயணம் செய்தால் , சாட்சி சொல்லப் போகிறவர்கள் நீந்தித்தான் கரைக்குப் போக வேண்டும் “ என்பதே அந்தப் பழமொழி. இருபுறமும் தூபம் போட்டுப் பிழைப்பு நடத்தும் பிரிவினை வாதிகள் வாயில் மண் விழும் என்பதே இந்தப் பழமொழியின் உட்பொருள்.//
//ஆங்கிலத்தில் அமைதியை விலை கொடுத்து வாங்குவது என்று ஒரு கலைச்சொல் உண்டு. “ PURCHASING PEACE “ என்று இதைச் சொல்வார்கள். இந்த அமைதியை வாங்குவதற்கு நமது பிடிவாதம் , அகம்பாவம், ஆணவம் ஆகியவற்றைத்தான் நாம் விலையாகக் கொடுக்க வேண்டும். இதனால் நாம் வாங்குவது அமைதியான வாழ்க்கை.//