.

Pages

Saturday, October 31, 2015

இறை இல்ல தேர்தலும், பொது நிர்வாக தேர்தலும்:

பொது நிர்வாக தேர்தல்கள் அதன் சட்ட, திட்டங்களுக்குள் அடங்கும். அதன் நிர்வாக அமைப்புகள் தமிழக பதிவுத்துறை சட்டம், 1975க்குள் உட்பட்டது. சில நிர்வாகம் கம்பனி சட்டத்திற்குட்பட்டு செயல் படும். அதன் சட்டத்தினை மீறும் செயலுக்கு சட்டப் பூர்வமான நடவடிக்கை எடுக்க வழி வகுக்கும். அதில் உறுப்பினர் யார், யார் என்பது அந்த பொது நிர்வாகத்தில் தெளிவாக குறிப்பிடப் பட்டிருக்கும்.

பள்ளி வாசல்களை வக்ப்த் சட்டம் மற்றும் ஸ்கீம் வழிமுறைகள் படி நிர்வாகித்து வருகின்றனர். சில இடங்களில் தனிப் பட்டவர் களே பள்ளி வாசல்களை நிர்வாகித்து வருகின்றனர். சில இடங்களில் தனிப் பட்டவர் களே பள்ளி வாசல்களை நிர்வாகித்து வருகின்றனர். ஆனால் இறைவனின் இறை இல்லங்களில் நிர்வகிப்பது சம்பந்தமாக அல் குர்ஆனில் அத்தியாயம் 9 அத் தவா வில் தெளிவாக குறிப்பிட்டுள்ளது.

9:17 இறை நிராகரிப்போருக்கு பள்ளி நிர்வாக நிர்ணயம் செய்யும் உரிமையில்லை .

9: 18 அல்லாஹ்வின் பள்ளியினை பரிபாலனம் செய்கின்றவரேல்லாம் அல்லாஹ்வையும் இறுதி நாளையும் விசுவாசித்து தொழுகையும் நிறைவேற்றி, சக்காத்துக் கொடுத்தும், அல்லாஹ்வையன்றி மற்றவருக்குப் பயப்படாதவராகவும் இருக்க வேண்டும்.

9: 19 விசுவாசம் கொள்ளாமல் இருந்து கொண்டு, ஹாஜிகளுக்குத் தண்ணீர் ஊற்றுகிறோம் என்று கூறிக் கொள்கின்றவர்களும், இறை இல்லத்தினை சிறப்புற பராமரிப்போர்களும், இறை இணை வைக்காதவர்களும் ஒன்றாக மாட்டார்கள்.

மேற்குறிப்பிட்ட சரத்துக்கள் படி பள்ளி நிர்வாகிகள் தொழுகையினை நிறைவேற்ற வேண்டும், சக்காத்துக் கொடுக்க பொருளீட்ட வேண்டும். ஏனென்றால் பொருளீட்டினால் தான் அல்லாஹ் சொன்ன சக்காத்தினைக் கொடுக்க முடியும். பள்ளியினை நிர்வகிக்கின்றேன், ஓடாய் தேய்கின்றேன் என்பதும் , ஹாஜிகளுக்கு தண்ணீர் கொடுக்கேன்றேன் என்பதும் இறைவன் கூறிய கருத்திற்கு மாறு பட்டது.

அத்துடன் இறைவன் கருத்துக்கு மாறான கருத்தாக;
1) பாரம்பரிய, பரம்பரை என்று நிர்வாகத்திற்கு வருகின்றனர்.
2) பிறரின் மதிப்பினைப் பெற வேண்டும் என்று வருகின்றனர்.
3) தனது பிரபலத்தினைக் காட்டுவதற்காக சிலர் நிர்வாகத்திற்கு வருகின்றனர்.
4) முகஸ்துதிக்கும், பொருளாதார தகுதிகளுக்காகவும் நிர்வாகத்திற்கு வருகின்றனர்.

தேர்தல் நடக்கும், பல வாக்குறிதிகள் பறக்கும். பொதுத் தேர்தல் போன்று வீடுகள், வீதிகள் தோறும் ஆள் சேர்ப்பதும், பிட் நோட்டீஸ் அடிப்பதும், ஒருவர் பற்றி ஒருவர் வசை படுவதும் இஸ்லாமிய கோட்பாடுகளுக்கு எதிரானதல்லவா? வெற்றி பெற்ற . நிர்வாகத்தினர் தரையில் கால் படாதவாறு நடக்காமல், மக்கள் பார்வையில் வெற்றி மதிப்பிற்குரியதாகத் தெரியலாம், ஆனால் எல்லாம் வல்ல அல்லாஹ் ஈமானுக்கும், நல்ல பண்புகளுக்குமே மதிப்பளிப்பான். குடும்ப, குலப் பெருமைக்கோ இறைவன் ஒருகாலமும் மதிப்பு அளிக்க மாட்டான்.

அல் பகறா 2:247 இல் நபி மூஸா அலைஹி வஸலாம் அவர்கள் தனக்குப் பிறகு அரசராக 'தாலூத்' அனுப்பியுள்ளான் என்று இஸ்ரவேலர்களிடம் எதிர்ப்பிற்கு நேர்மாறாக கூறும்பொழுது, 'தாலூத் கல்வியிலும், தேகத்திலும் உங்களைவிட சிறந்தவர் என்று கூறினார்கள்.

இந்த ஆயத்து கூறும் கருத்து  என்னவென்றால், ஒருவர் பொருளாதார வசதியில் மிக்கவர், பரம்பரை செல்வந்தர், உடல் அல்லது ஆள் பலம் என்பதிற்காக எந்த பதவியும் வழங்கக் கூடாது. அதே சமயம் ஒருவர் செல்வந்தர் இல்லை என்பதிற்காக பதவியினை மறுக்கக் கூடாது.
புனிதமான இறை பள்ளிக்கு பொறுப்பு வகிக்கும் ஒருவர் திருக் குரானை கொஞ்சமாவது ஓதி கற்று இருக்க வேண்டும்.

நபி வழியை, ஷரீயத்தினை  பூரணமாக உணந்தவர்கள், இஸ்லாத்தை, இஸ்லாமிய வரலாற்றை அறிந்தவர்களே பொருத்தமானவர்கள். குர்ஆனில் உள்ளவை பற்றி சில கேள்விகள் பாடமாக கேட்டாலும் கூறத் தெரிந்தவர்களாக இருக்க வேண்டும். தொழுகையினைப் பேனுவராகவும், தன் குடும்பத்தினை தான் ஏற்றிருக்கும் பொறுப்பிற் கேற்ப நெறிப் படுத்திச் செல்வோராக இருப்போர் மட்டுமே தகுதியானவர்.

பள்ளி நிர்வாகிகள் 'பைத்துல் மால்' பொருளை இறை நேசமுள்ள பயனுள்ள வழியில் செலவு செய்யத் தெரிந்தவராக இருக்க வேண்டும். மாறாக பொருளை சுரண்டு வராகவோ, ஆடம்பர வழியில் செலவு செய்வராகவோ இருக்கக் கூடாது.

ஒரு முறை உமர்(ரழி) அவர்கள் வீதி வழி செல்லும் போது பொது நிலம் ஒன்றில் ஒரு மாடு மேய்ந்து கொண்டிருப்பதைக் கண்டு, அருகிலிருந்தோரிடம் இந்த மாடு எவருடையது என்றார்கள். அங்கே இருந்தவர்கள், 'இந்த மாடு உங்கள் மகன் அப்துல்லாவிற்கு சொந்தமானது' என்றார்களாம். உடனே அந்த இடத்திலேயே மகனை அழைத்து வரச் செய்து, பைத்துல்மால் சொத்தில் மேய்ந்த இந்த மாட்டை சந்தைக்குக் கொண்டு சென்று விற்று விடு. அப்பணம் முழுவதையும் பைத்துல்மால் மக்களுக்கான பொது நிதியகத்தில் சேர்த்து விடு' என்று உத்தரவிட்டார்கள் என்பது வரலாறு.ஆகவே பைத்துல் மால் சொத்தை தான் சொத்தாக பாவிக்காது, அதனை நெருப்பாக பாவிக்க வேண்டும்.

சென்னையில் உள்ள ஒரு பள்ளிவாசலில் பள்ளியின் தலைவர் நீண்ட நாள் நோயில் இருந்து கொண்டு, ஜும்மா தொழுகைக்குக் கூட வரமுடியாத நிலை இருந்தும் நீடித்துக் கொண்டு இருந்தார். அதற்கான காரணத்தினைக் கேட்டபோது, 'அவர் தான் மரித்ததும், தன் ஜனாஸா தெருவில் போகும்போது 'யார் ஜனாசா என்று பிறர் கேட்டால், ஊர் ஜமாத்துத் தலைவர் ஜனாஸா' என்று சொல்ல ஆசைப் பட்டாராம்.

இன்னும் சிலர் பள்ளிவாசல் குடியிருக்கும் பகுதியிலிருந்து வெகு தொலைவில் குடியிருந்தாலும், தான் செய்த தொண்டிற்காக பள்ளியின் நிர்வாகக் குழுவில் இடம் வேண்டும் கேட்பதிணை பார்த்திருக்கின்றேன்.
பள்ளிவாசல் நிர்வாகத்திற்கு வருவதிற்கு முன்பு ஒரு தடவைக்கு இரு தடவை சிந்தித்து நாம் இஸ்லாமிய வரலாறு சொன்ன நிர்வாகப் பொறுப்பிற்கு தகுதியானவரா என்று சுய சிந்தனையில் ஈடுபட வேண்டும் என்று சொன்னால் சரியா?

டாக்டர் ஏ.பீ. முகமது அலி, பிஎச்,டி, ஐ.பீ.எஸ்(ஓ)
ஓய்வுபெற்ற மூத்த காவல்துறை அதிகாரி 
எழுத்தாளர்  
சமூக ஆர்வலர்

224 பேருடன் சென்ற ரஷ்ய விமானம் விழுந்து நொறுங்கி விபத்து!

224 பேருடன் சென்ற ரஷ்ய விமானம் எகிப்தில் விபத்துக்குள்ளானது. அந்த விமானத்தில் இருந்த 217 பயணிகள் உட்பட 224 பேரின் நிலைமை என்னவானது என்பது இன்னும் தெரியவரவில்லை. இந்நிலையில், சினாயில் அதன் பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக எகிப்து அரசு தெரிவித்துள்ளது.

விபத்துக்குள்ளான ஏர்பஸ் ஏ-321 (A-321) விமானம் கோகலிமாவியா ஏர்லைன்ஸுக்கு சொந்தமானது. அந்த விமானத்தின் பதிவு எண் கேஜிஎல்-9268 (KGL-9268).

ரஷ்ய விமானம் சினாயின் மலைப்பகுதிகளில் விழுந்து நொறுங்கியிருக்கலாம் என்று சந்தேகப்பட்டு வரும் நிலையில் அதன் பாகங்களை ராணுவ விமானங்கள் கண்டு பிடித்துள்ளதாக எகிப்து அரசு தெரிவித்துள்ளது.

224 பேருடன் சென்ற ரஷ்ய விமானம் எகிப்தில் விபத்துக்குள்ளானது. அந்த விமானத்தில் இருந்த 217 பயணிகள் உட்பட 224 பேரின் நிலைமை என்னவானது என்பது தெரியவராத நிலையில் விபத்துப் பகுதிக்கு 45 ஆம்புலன்ஸ்கள் அனுப்பப்பட்டுள்ளன. விரைவில் மீட்பு பணி நடைபெறும் என்று எகிப்து அரசு கூறியுள்ளது.

விமானம் எகிப்தின் மத்திய சினாய் பகுதியில் விழுந்து விபத்துக்குள்ளானதை அந்நாட்டு பிரதமர் ஷரீப் இஸ்மாயில் அலுவலகம் உறுதி செய்துள்ளது.

பிரதமர் அலுவலக செய்திக் குறிப்பில், "ரஷ்ய பயணிகள் விமானம் எகிப்தின் மத்திய சினாய் பகுதியில் நொறுங்கி விழுந்து விபத்துக்குள்ளானது" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எகிப்து விமான போக்குவரத்துத் துறை மூத்த அதிகாரி கூறும்போது, "விபத்துக்குள்ளான ரஷ்ய விமானத்தில் 217 பயணிகள், 7 விமான சிப்பந்திகள் என மொத்தம் 224 பேர் இருந்துள்ளனர். விமானத்துடனான தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது. விமானத்தில் இருந்தவர்கள் நிலை என்னவென்று தெரியவில்லை" என்றார்.

எகிப்தில் ஷாம் அல் ஷேக் நகரில் இருந்து ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகருக்குச் செல்லும்போது விபத்து நடந்துள்ளது.

இதற்கிடையில் தங்கள் நாட்டு விமானம் எகிப்தில் ஷாம் அல் ஷேக் நகரில் இருந்து புறப்பட்ட அடுத்த 25-வது நிமிடத்திலிருந்து கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பில் இருந்து விலகியதாக ரஷ்ய விமான போக்குவரத்து துறையும் உறுதிப்படுத்தியுள்ளது.

அதிரையில் ADT நடத்தும் பொதுக்கூட்டம் அதிரை நியூஸில் நேரடி ஒளிப்பரப்பு !

அதிரை தக்வா பள்ளி அருகே இன்று மாலை அதிரை தாருத் தவ்ஹீத் அமைப்பின் சார்பில் நடைபெற உள்ள இஸ்லாமிய மார்க்க விளக்க பொதுக்கூட்டத்தின் நேரலை நிகழ்ச்சி அதிரை நியூஸில் இன்று மாலை சரியாக 7 மணிக்கு ஒளிப்பரப்பாக உள்ளது.

இந்த கூட்டத்தில் 'ஜகாத்தின் நிலையும் அதன் தெளிவும்' என்ற தலைப்பில் எஸ். அப்பாஸ் அலி Misc மற்றும் 'வாழ்வின் முடிவை தேர்ந்தெடுக்கும் உரிமை' என்ற தலைப்பில் ஜே. முகம்மது நியாஸ் ஃபிர்தவ்ஸி ஆகியோர் சிறப்புரை வழங்க இருக்கின்றனர்.


அதிரை பேரூராட்சி அலுவலகத்தில் புதிதாக இ-சேவை மையம் அமைக்க முடிவு !

பொது இசேவை மையம் மூலமாக தமிழக அரசு பல்வேறு சேவைகளை வழங்கி வருகிறது. இந்தமையங்களில் இருந்து வருவாய்த்துறையின் மூலம் வழங்கப்படும் வருமானச் சான்று, சாதிச் சான்று, இருப்பிடச் சான்று, முதல் பட்டதாரிச் சான்று, கணவரால் கைவிடப்பட்டோருக்கான சான்று, சிட்டா நகல், அ பதிவேடு நகல் மற்றும் சமூக நலத்துறையின் மூலம் வழங்கப்படும் திருமணஉதவித் திட்டத்தின் கீழ் பயன் பெறுவதற்கான விண்ணப்பங்கள் பதிவு செய்தல், பிளாஸ்டிக் ஆதார் அட்டைகள் வழங்கப்படுகிறது. மேலும் ஆன்லைன் மூலமாக பாஸ்போர்ட் பெற விண்ணப்பிக்கும் சேவையும் வழங்கி வருகிறது.

இதுதொடர்பாக அதிரை பேரூராட்சியின் 21 வது வார்டு உறுப்பினர் முஹம்மது இப்ராஹீம் நம்மிடம் கூறுகையில்...
நேற்று அதிரை பேரூராட்சியின் மன்றக்கூட்டம் பேரூராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் நான் கலந்துகொண்டு பேசினேன். இதில் தமிழக அரசின் பொது இசேவை மையம் அதிரை பேரூராட்சி அலுவலத்தில் திறக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினேன். எனது கோரிக்கை அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டு அதிரை பேரூராட்சி அலுவலகத்தில் இசேவை மையம் அமைக்க இடம் ஒதுக்கி கொடுப்பது என தீர்மாணிக்கப்பட்டது. இதுதொடர்பாக அதிரை பேரூராட்சி நிர்வாகத்தின் சார்பில் மாவட்ட ஆட்சியரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும்' என்றார்.

பேரூராட்சி அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டம் அறிவிப்பு எதிரொலி: 2 முக்கிய கோரிக்கைகள் உடனடி ஏற்பு !

அதிரை பேரூராட்சிக்கு உட்பட்ட 17 மற்றும் 19 வது வார்டுகளின் கோரிக்கைகளை தொடர்ந்து புறக்கணித்து வருவதாக கூறி அதிரை பேரூராட்சி நிர்வாகத்தை கண்டித்து மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் கடந்த [ 15-06-2015 ] அன்று அதிரை பேரூராட்சி அலுவலகம் எதிரே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அப்போது பேரூராட்சி அலுவலக தரப்பில் கோரிக்கைகள் நிறைவேற்ற முயற்சிக்கப்படும் என கூறியதாக தெரிகிறது. இந்த நிலையில் கோரிக்கைகள் தொடர்ந்து புறக்கணிப்படுவதாகவும், கடந்த 4 ஆண்டுகளில் வார்டுகளின் அடிப்படை வசதிகள் எதுவும் செய்துகொடுக்க வில்லை எனவும், அரசியல் காரணங்களால் தொடர்ந்து புறக்கணிக்கப்படுவதாகவும், வார்டுகளில் அடிப்படை வசதிகளை உடனடியாக நிறைவேற்றி தர வலியுறுத்தி கடந்த [26-10-2015 ] அன்று தஞ்சை மாவட்ட ஆட்சியர் மக்கள் குறைதீர்ப்பு நாளில் மனிதநேய மக்கள் கட்சியின் 17 வது வார்டு கவுன்சிலர் சகோதரி ரபீக்கா முஹம்மது சலீம்  மற்றும் 19 வது கவுன்சிலர் சகோதரி செளதா அஹமது ஹாஜா ஆகியோர் தனித்தனியே எழுதிய கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சியரகத்தில் நேரிடையாக சென்று வழங்கினார்கள்.

இந்த நிலையில் நேற்று மாலை அதிரை பேரூராட்சியின் மன்றக்கூட்டம் அலுவலகத்தில் நடைபெற்றது. அப்போது மனித நேய மக்கள் கட்சியின் உறுப்பினர்கள் தங்கள் வார்டுகளின் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற தரவேண்டும் எனவும், தவறினால் அதிரை பேரூராட்சி அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டம் நடத்தப்படும் என பேசினார்கள். இதற்கு தயாராக அதிரை பேரூராட்சி அலுவலக வராண்டாவில் அதிரை மனிதநேய மக்கள் கட்சியினர் காத்திருந்தனர். இதனால் பெரும் பரபரப்பு கூடியது.

இந்தநிலையில் மன்றக்கூட்டம் முடிந்தவுடன் அதிரை பேரூராட்சியின் செயல் அலுவலர் திரு.முனியசாமி மனிதநேய மக்கள் கட்சியினருடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் 17 மற்றும் 19 வது வார்டுகளின் முக்கிய கோரிக்கைகளில் இரண்டு கோரிக்கைகளை நிறைவேற்றி தருவதாகக் கூறினார். இதையடுத்து 17 வது வார்டு கவுன்சிலர் ரபீக்கா முஹம்மது சலீம் மற்றும் 19 வது கவுன்சிலர் செளதா அஹமது ஹாஜா ஆகியோர் கோரிக்கைகளை எழுத்து பூர்வமாக செயல் அலுவலர் முனியசாமியிடம் வழங்கினார்கள்.

தங்கள் வார்டுகளின் முக்கிய கோரிக்கைகளில் இரண்டு கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டதை தொடர்ந்து நடத்த இருந்த பேரூராட்சி அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அதிரை மனிதநேய மக்கள் கட்சியினர் அறிவித்தனர்.
 
 
 
 
 
 
 

அதிரை பேருந்து நிலையத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் !

ஹரியான மாநிலத்தில் தலித் குடும்பத்தைச் சேர்ந்த பச்சிளம் குழந்தைகள் தீ வைத்து கொளுத்திய குற்றவாளிகளை கண்டித்து இஸ்லாமிய ஜனநாயக முன்னணி கட்சியின் சார்பில் அதிரை பேருந்து நிலையம் அருகே கண்டன ஆர்பாட்டம் நடந்தது.

கண்டன ஆர்பாட்டத்திற்கு இஸ்லாமிய ஜனநாயக முன்னணி கட்சியின் தஞ்சை மாவட்ட தலைவர் அதிரை ஜெஹபர் சாதிக் தலைமை வகித்தார். இஸ்லாமிய ஜனநாயக முன்னணி கட்சியின் அதிரை நகர செயலாளர் முஹம்மது மொய்தீன், நகர தலைவர் அன்சாரி, அப்துல் ஜப்பார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட இஸ்லாமிய ஜனநாயக முன்னணி கட்சியின் மாநில ஒருங்கினைப்பாளர் மதுக்கூர் மைதின் கண்டன உரை நிகழ்த்தினார்.

மேலும் இஸ்லாமிய ஜனநாயக முன்னணி கட்சியின் திருச்சி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ரியாஸ், தமிழக மக்கள் ஜனநாயக கட்சி மாநில துணை பொதுச்செயலாளர் ஜியாவுதீன், விடுதலை சிறுத்தை கட்சியின் அதிரை நகர செயலாளர் புருசோத்தமன் என்கிற புதியவன், ஆதி திராவிட முன்னேற்ற கழக நிறுவன தலைவர் சதாசிவ குமார் ஆகியோர் தங்களது கண்டனங்களை பதிவு செய்தார்கள்.

முன்னதாக இஸ்லாமிய ஜனநாயக முன்னணி கட்சியின் அதிரை நகர செயலாளர் முஹம்மது மொய்தீன் வரவேற்புரை ஆற்றினார்.

ஆர்ப்பாட்ட முடிவில் இஸ்லாமிய ஜனநாயக முன்னணி கட்சி இளைஞர் அணி நகர தலைவர் முஹம்மது செல்ல ராஜா நன்றி கூறினார்.  இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான இஸ்லாமிய ஜனநாயக முன்னணி கட்சியினர் கலந்துகொண்டனர்.

செய்தி மற்றும் படங்கள்:
அஃப்ரீத் ( மாணவ செய்தியாளர் )
 
 
 
 

Friday, October 30, 2015

அதிரையில் வடகிழக்கு பருவ மழை !

தமிழகத்தில் நேற்று வடகிழக்கு பருவ மழை தொடங்கியதை அடுத்து இன்று காலை முதல் அதிரை சுற்று வட்டார பகுதிகளில் வானம் மேகம் கூட்டங்களால் சூழ்ந்து காணப்பட்டது. அதிகாலையில் சிறிது நேரம் சாரல் மழையும் பெய்தன. இந்த நிலையில் இன்று மாலை 4.30 மணி முதல் மிதமான மழை பெய்து வருகிறது. வானம் மேகம் கூட்டங்களால் சூழ்ந்து ரம்மியமாக காட்சியளிக்கின்றன. மழை தொடர்ந்து நீடித்து பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போதைய தலைமையின் கீழ் செயல்பட அமீரக தமுமுக செயற்குழு கூட்டத்தில் முடிவு !

சென்னை தாம்பரத்தில் கடந்த 06-10-2015 அன்று நடந்த மனிதநேய மக்கள் கட்சியின் பொதுக்குழு கூட்டத்தில், மனிதநேய மக்கள் கட்சியின் புதிய மாநில தலைவராக பேராசிரியர் ஜவாஹிருல்லா, பொதுச்செயலாளராக அப்துல் சமது, பொருளாராக ரஹ்மத்துல்லாஹ் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

இந்த நிலையில் தமுமுக அமீரக செயற்குழு கூட்டம் அதிரை அப்துல் ஹாதி தலைமையில் ஷார்ஜாவில் நடைபெற்றது. இதில் தற்போதைய தமுமுக மற்றும் மமக தலைமையின் கீழ் அமீரக அனைத்து மண்டலங்களும் செயல்படுவது என்று முடிவு செய்யப்பட்டது. மேலும் இயக்கத்தினுள் ஒற்றுமையை ஏற்படுத்த முயல்வது என்று தீர்மானம் செய்யப்பட்டது. இந்த செயற்குழு கூட்டத்தில் அமீரக மண்டல தமுமுக பொறுப்பாளர்கள் கலந்துகொண்டனர்.
 

பிரிலியண்ட் சிபிஎஸ்இ பள்ளியில் லயன்ஸ் சங்கம் நடத்திய இலவச கண் பரிசோதனை முகாம் !

அதிரை லயன்ஸ் சங்கம் - பிரிலியண்ட் சிபிஎஸ்இ பள்ளி - தஞ்சை வாசன் கண் மருத்துவமனை ஆகியோர் இணைந்து நடத்திய பள்ளி மாணவ மாணவியர்களுக்கான கண் பரிசோதனை முகாம் பிரிலியண்ட் சிபிஎஸ்இ பள்ளியில் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு அதிரை லயன்ஸ் சங்க தலைவர் என். ஆறுமுகச்சாமி தலைமை வகித்தார். பிரிலியண்ட் சிபிஎஸ்இ பள்ளி தாளாளர் வீ. சுப்பிரமணியன், அதிரை லயன்ஸ் சங்க பொருளாளர் எஸ்ஏசி இர்ஃபான் சேக், லயன்ஸ் சங்க செயலர் பேராசிரியர் அல்ஹாஜ், லயன்ஸ் சங்க மாவட்ட தலைவர்கள் பேராசிரியர் கே. செய்யது அஹமது கபீர், பேராசிரியர் மேஜர் முனைவர் எஸ்.பி. கணபதி, சாரா எம். அஹமது, எம்.நெய்னா முஹம்மது, எஸ்.எம் முஹம்மது மொய்தீன், ஆர். செல்வராஜ், வங்கி மேலாளர் மதியழகன், பிரிலியண்ட் சிபிஎஸ்இ பள்ளி முதல்வர் ஈஸ்வரன், மேலாளார் எஸ்.சுப்பையன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட பட்டுக்கோட்டை வட்டாட்சியர் சேதுராமன் முகாமை துவக்கி வைத்தார். தஞ்சை வாசன் கண் மருத்துவமனை முகாம் ஒருங்கிணைப்பாளர் ராஜ்குமார் தலைமையில் மருத்துவமனை குழுவினர்கள் கண் பரிசோதனையை மேற்கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் பள்ளி மாணவ, மாணவியர்கள் கலந்துகொண்டு கண் பரிசோதனை செய்து கொண்டனர்.

செய்தி மற்றும் படங்கள்:
அஃப்ரீத் ( மாணவ செய்தியாளர் )
 
 

 
 
 
 
 

அதிரையில் கடையின் பூட்டை உடைத்து செல்போன்கள் திருட்டு !

அதிரை சின்ன நெசவுத்தெருவை சேர்ந்தவர் சாகுல் ஹமீது இவரது மகன் அப்துல்லா ( வயது 30 ). கடந்த 3 வருடங்களாக அதிரை பேருந்து நிலையம் ஈசிஆர் சாலை பகுதியில் செல்போன் கடை வைத்து மொத்தமாகவும், சில்லறையாகவும் வியாபாரம் செய்து வருகிறார்.

இந்த நிலையில் இன்று காலை கடையை திறக்க வந்த போது கதவின் பூட்டு உடைக்கப்பட்டு கடையின் முன்பகுதி கண்ணாடி சிதறிக்கிடந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தவர் கடையின் உள்ளே சென்று பார்த்தார். அப்பொழுது கடையில் 4 செல்போன்கள் திருட்டு போயிருப்பது தெரியவந்தது.

இதுதொடர்பாக அப்துல்லா அதிரை காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார். அதிரை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருட்டு போன செல்போன்களின் மதிப்பு ரூ 20,000/- என கூறப்படுகிறது. இந்த சம்பவம் இந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
 
 

ஒரு குழந்தை மட்டும் பெற்றுக்கொள்ளும் சட்டம் ரத்து: சீனா அரசு அதிரடி அறிவிப்பு!

பெற்றோர்கள் ஒரு குழந்தை மட்டுமே பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற சர்ச்சைக்குரிய சட்டத்தை உடனடியாக ரத்து செய்யவுள்ளதாக சீனா அரசு அதிரடியாக அறிவித்துள்ளது.

உலக மக்கள் தொகையில் முதலாவதாக உள்ள சீனா, கடந்த 1979ம் ஆண்டு ஒரு புதிய கொள்கை முடிவுகளை நடைமுறைபடுத்தியது.

இதன் மூலம், சீனாவில் உள்ள பெற்றோர்கள் ஒரு குழந்தை மட்டுமே பெற்றுக்கொள்ள வேண்டும் என வலியுறுத்தியிருந்தது.

இதனை மீறி இரண்டு குழந்தைகள் பெற்றுக்கொள்ளும் பெற்றோர்களுக்கு தண்டனையும், அபராதமும் விதிக்கப்பட்டது. சில நேரங்களில் ‘பலவந்தமாக கருக்கலைப்பிற்கும்’ தாயார்கள் உட்படுத்தப்பட்டனர்.

சுமார் 35 ஆண்டுகளாக நடைமுறையில் இருந்த இந்த சட்டத்தை ரத்து செய்ய சீனா அரசு முடிவு செய்துள்ளதாக அந்நாட்டு அரசு செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த அறிவிப்பின் மூலம், சீனாவில் உள்ள அனைத்து பெற்றோர்களும் சட்டரீதியாக இரண்டு குழந்தைகளை பெற்றுக்கொள்ளலாம்.

சர்ச்சைக்குரிய சட்டத்தால் சீனாவில் கடந்த 35 ஆண்டுகளில் 400 மில்லியன் குழந்தைகள் பிறப்பது தடுக்கப்பட்டது.

ஆனால், ஒரு குழந்தை மட்டுமே பெற்றுக்கொள்வதால், அந்நாட்டில் உள்ள பொதுமக்களின் முதுமையினால் எழும் பிரச்சனைகளை தவிர்க்கவே இந்த சட்டத்தை ரத்து செய்ய உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

Thursday, October 29, 2015

மரண அறிவிப்பு ! [ ஹாஜி லெ.மு.செ அஹமது கபீர் மரைக்காயர் ]

நடுத்தெரு கீழ்புறத்தை சேர்ந்த மர்ஹூம் ஹாஜி லெ.மு.செ லெப்பை தம்பி மரைக்காயர் அவர்களின் மகனும், மர்ஹூம் ஹாஜி லெ.மு.செ உமர் மரைக்காயர், மர்ஹூம் ஹாஜி லெ.மு.செ அப்துல் கபூர் மரைக்காயர், மர்ஹூம் ஹாஜி லெ.மு.செ செய்யது அப்துல் காதர் மரைக்காயர், ஹாஜி லெ.மு.செ கமால் பாட்சா மரைக்காயர் ஆகியோரின் சகோதரரும், அபூபக்கர், மர்ஹூம் அப்துல் பாஸித், சுஹைஃப்தீன், சிராஜூதீன், ஜுபைர், மர்ஹூம் அஹமது ஆகியோரின் தகப்பனாரும்,  இல்முதீன் அவர்களின் மாமனாருமாகிய  ஹாஜி லெ.மு.செ அஹமது கபீர் மரைக்காயர் அவர்கள் இன்று இரவு 7.30 மணியளவில் வஃபாத்தாகி விட்டார்கள்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

அன்னாரின் ஜனாஸா நாளை காலை 8 மணியளவில் மரைக்கா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.

அதிரையில் புதிய உணவகத்தை சேர்மன் திறந்து வைத்தார் !

அதிரையை சேர்ந்தவர் பிஎம்ஏ ஹாஜா முகைதீன். இவர் அதிரை பேருந்து நிலையம் ஈசிஆர் சாலை பவித்ரா திருமணம் மண்டபம் அருகில் 'A1 ஸ்டார் ரெஸ்டாரண்ட்' என்ற பெயரில் புதிதாக உணவகத்தை தொடங்கியுள்ளார்.

இதன் திறப்பு விழா நிகழ்ச்சி இன்று காலை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு 'திரீ ஸ்டார் ஜிம்' நிறுவனர் பிஎம்ஏ நஜ்முதீன் தலைமை வகித்தார். காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ஏ. மகபூப் அலி, காதிர் முகைதீன் கல்லூரி பேராசிரியர் கே. செய்யது அஹமது கபீர், உதவி பேராசிரியர் அப்துல் ரஹ்மான், லயன்ஸ் சங்க மாவட்ட தலைவர் சாரா அஹமது, ஏவிஎம் சாகுல் ஹமீது, கே. பஜ்ருல் ஹக் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

திறப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட அதிரை பேரூராட்சி தலைவர் எஸ்ஹெச் அஸ்லம் உணவகத்தை திறந்து வைத்து வாழ்த்தினார்.

நிகழ்ச்சியின் முன்னதாக உணவக உரிமையாளர் பிஎம்ஏ ஹாஜா முகைதீன் அனைவரையும் வரவேற்றார். திறப்பு நாளான இன்று ஏராளமானோர் உணவகத்திற்கு வருகை தந்து உணவருந்தி சென்றனர்.

இதுகுறித்து உணவக உரிமையாளர் 'பிஎம்ஏ ஹாஜா முகைதீன்' நம்மிடம் கூறியதாவது...
'எங்கள் உணவகத்தில் காலை நேரத்தில் சுடச்சுட பூரி, இட்லி, தோசை, வடை, சமூசா, புரோட்டா குருமா வகைகளும் பகலில் சாப்பாடு, சிக்கன் - மட்டன் பிரியாணி வகைகளும், இரவு நேரங்களில் சைனீஸ் புட், ஃபாஸ்ட் புட், புரோட்டா, சப்பாத்தி, தோசை ஆகியன தயார் செய்து கொடுக்க இருக்கிறோம். மேலும் அனுபவமிக்க மேஸ்திரிகளை வைத்து சுத்தமாகவும் சுவையானதாகவும் குறித்த நேரத்தில் உணவுகள் தயார் செய்து தரப்படும். மேலும் டீ, காபி ஆகியன தயார் செய்து வழங்க இருக்கிறோம். எங்கள் உணவகத்தில் அஜினாமோட்டா உள்ளிட்ட உடலுக்கு தீங்கு விளைவிக்கக்கூடிய எந்தவொரு செயற்கை சுவையூட்டியும் பயன்படுத்துவது இல்லை. எங்கள் புதிய உணவகத்திற்கு அதிரை மற்றும் சுற்றுவட்டார பகுதி பொதுமக்கள் தொடர்ந்து ஆதரவளிக்க வேண்டும்' என்றார்.

தொடர்புக்கு : 9003983243 / 9944922949 /  8220203334
 

 
 

குறிப்பு: அதிரையரின் தொழில் ஆர்வத்தை ஊக்குவிக்க வேண்டும் என்ற நோக்கில் தளத்தில் இலவசமாக பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் ஏற்படும் நிறை / குறைகளுக்கு அதிரை நியூஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது.