.

Pages

Thursday, March 10, 2016

காதிர் முகைதீன் கல்லூரியில் உமறுப்புலவர் தமிழ்ப்பேரவை நிறைவு விழா !

காதிர் முகைதீன் கல்லூரியில் உமறுப்புலவர் தமிழ்ப்பேரவையின் நிறைவு - மற்றும் முத்தமிழ் விழா இன்று காலை கல்லூரி அரங்கில் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் முனைவர் ஏ. ஜலால் தலைமை வகித்து உரை நிகழ்த்தினார்.  கல்லூரி துணை முதலவர் முனைவர் உதுமான் முகைதீன், ஆங்கிலத்துறை தலைவர் முஹம்மது முகைதீன் ஆகியோர் முன்னிலை வகித்து வாழ்த்துரை வழங்கினார்கள்.

விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட கவிஞர் நந்தலாலா சிறப்புரை நிகழ்த்தினார். விழாவில் தமிழ் இலக்கிய போட்டிகளில் கலந்துகொண்டு வெற்றிபெற்ற மாணவ, மாணவிகளுக்கு சிறப்பு பரிசுகள் வழங்கி கெளரவிக்கப்பட்டது.

முன்னதாக தமிழ்த்துறை தலைவர் அ. கலீல் ரஹ்மான் வரவேற்புரை ஆற்றினார். நிகழ்ச்சிகள் அனைத்தையும் தமிழ்த்துறை பேராசிரியர் முனைவர் செய்யது அஹமது கபீர் இனிய தமிழில் அழகாக தொகுத்து வழங்கினார். விழா முடிவில் பேராசிரியை முனைவர் எம். சாபிரா நன்றி கூறினார்.

இந்நிகழ்ச்சியில் கல்லூரி பேராசிரியர்கள், பேராசிரியைகள், கல்லூரி மாணவ மாணவிகள் பலர் கலந்துகொண்டனர்.

செய்தி மற்றும் படங்கள்:
அஃப்ரீத் ( மாணவ செய்தியாளர் )
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

4 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. நம் காதிர் முகைதீன் கல்லூரியில் தமிழ் பட்டப்படிப்பில்லாத அன்று முத்தமிழ் விழா இரண்டு நாட்கள் தொடர்ந்து நடைபெற்றன. ஆனால் இன்றோ தமிழ் B.A., M.A., M.Phil., Ph.D., போன்ற தமிழ் பட்டப் படிப்புகளும், ஆய்வுகளும் இருந்தும், முத்தமிழ் விழா இரண்டு மணி நேரம் கூட நடை பெறவில்லை என்பதை எண்ணும் போது மிகவும் வேதனைக்குரிய செய்தியாகத்தான் இங்கே காண்கிறோம்.

    இது யார் மீது குற்றம்? தமிழ்த்துறை மீது குற்றமா? முறையான நிர்வாகம் இல்லாது இயங்குவதன் குற்றமா?! நீதியரசரின் நிர்வாகத்தின் மீது குற்றமா? விடை கிடைக்குமா?

    ReplyDelete
  3. மறைந்த பேராசிரியர் கா. அப்துல் கபூர், மு. அப்துல் கரீம் அவர்கள் தமிழ்த்துறைத் தலைவர்களாக இருந்த போது இளங்கலை பட்ட வகுப்புகளுக்கு மட்டுமே தமிழ் மொழிப் பாடமாக இருந்தது. அத்துடன் புகுமுக வகுப்பில் சிறப்புத்தமிழ் பாடமாக இருந்தது. நான், பேராசிரியர் அப்துல் காதர், அதிரை அன்வர் ஆகியோர் சிறப்புத் தமிழ் படித்தவர்கள். எங்களுக்கு அப்துல் கரீம் சார் அவர்கள் வகுப்பெடுத்தார்கள். இன்றுவரை மறக்க முடியாத தேனாறு .

    அப்போது தமிழ்மன்றத்தின் முத்தமிழ் விழா இரண்டு நாட்கள் நடைபெறும்.

    காலையில் கவியரங்கம் . ஈரோடு தமிழன்பன், வாலி, முத்தரசன், மு, மேத்தா , நாஞ்சில் ஆரிது, கூத்தரசன் போன்றவர்கள் பங்கேற்றுள்ளனர் . ஒருமுறை கவிக்கோ அப்துல் ரகுமான் கவியரங்கத் தலைமை ஏற்றார்.

    மேலும் காரைக்குடி அழகப்பா மற்றும் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் இருந்து பல தமிழ்ப் பேராசான்கள் கருத்தரங்கத்தில் கலந்துகொள்வார்கள். ஒளவை நடராஜன், கி. வா. ஜெகநாதன், நா. பார்த்த சாரதி போன்றவர்களும் வருகை தந்து இருக்கிறார்கள். பேராசிரியர் வ.சுப. மா. வருகை தந்து இருக்கிறார்.

    மாலையில் பட்டிமன்றம். திரு. சோ. சத்தியசீலன், அ.வ. இராஜகோபாலன், புலவர் அறிவொளி, கா. முகமது பாரூக் போன்ற அறிஞர்கள் கலந்துகொள்வார்கள். பட்டிமன்றத்தில் மாணவர்களும் பங்கேற்பதுண்டு. அவ்விதம் எதிர் எதிர் அணியில் நானும் பேராசிரியர் அப்துல் காதரும் பேசி இருக்கிறோம்.

    இன்றும் நினைவில் நிற்கும் ஒரு உரை. அன்று திருச்சி தேசியக் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராக இருந்த திரு. ராதாகிருஷ்ணன் அவர்களது உரை. அவிழ்ந்த குடுமியை இழுத்துக் கட்டிக் கொண்டு ஆவேசமாக உரையாடி பட்டிமன்றத் தீர்ப்பு சொன்ன நினைவலைகளை மறக்கவே இயலாது.

    மிக சிறப்பாக கோலாகலமாக இருக்கும்.

    இப்போது ஒரு சிறு நிகழ்ச்சியாக இந்த விழா சுருங்கிவிட்டதை என்னும்போது வருத்தமாகவே இருக்கிறது.

    இன்ஷா அல்லாஹ் அடுத்த வருடமாவது இரண்டுநாட்கள் விழாவாக, இன்று கல்லூரியின் தமிழ்த்துறையின் வளர்ச்சியில் பயிலும் மாணவர்களின் நலன் கருதியாவது கவியரங்கம், கருத்தரங்கம், பட்டிமன்றம் , வழக்காடு மன்றம் என்ற வகைகளில் நடத்தப்பட வேண்டும் என்று கோரிக்கை வைக்க ஆசைப்படுகிறேன்.

    ReplyDelete
  4. நம் காதிர் முகைதீன் கல்லூரியில் அன்று நடக்கும் முத்தமிழ் விழாவை விளக்கும் மர்ஹூம் முனைவர் பேராசிரியர் அப்துல் கறீம் அவர்கள்;

    'காலை அரும்பிப் பகல்எல்லாம் போதாகி
    மாலை மலரும்இந் நோய்'

    என்ற குறளை கோடிட்டு காட்டி, இந்தக் காமநோய் காலைப்பொழுதில் அரும்பாய்த் தோன்றி, பகற்பொழுதெல்லாம் பேரரும்பாய் வளர்ந்து மாலைப்பொழுதில் மலராகின்றது. ஆனால் எங்கள் கல்லூரியின் தமிழ் வேட்கையானது, இன்று காலைப்பொழுதில் அரும்பாய்த் தோன்றி, பகற்பொழுதெல்லாம் பேரரும்பாய் வளர்ந்து மாலைப்பொழுதில் மலராது, அடுத்த நாள் மாலைதான் மலரும் என குறிப்பிட்டு விழா ஆரம்பிக்கப்படும். அனால் இன்றோ மலராத மலாரகிவிட்டது.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.