.

Pages

Wednesday, March 16, 2016

முஸ்லிம்கள் வேலை வாய்ப்பில்லாமைக்கு யார் காரணம்!

இந்தியாவில் முஸ்லிம்கள் வேலை வாய்ப்பு எந்த நிலையில் உள்ளது என்று தெரிந்து கொள்ள உங்களுக்கெல்லாம் ஆவலாக இருக்கும். ஆகவே உங்களுடன் சமூதாய முன்னேற்றத்திற்காக சில புள்ளி விவரங்களை பகிர்ந்து கொள்ள ஆசைப் படுகின்றேன்.

'உம்மி நபி எம்பெருமானார் ரசூலல்லாஹ்(ஸல் ) அவர்களுக்கு, முதல் முதல் வாசகம் எல்லாம் வல்ல அல்லாஹ்வால் அருளப் பெற்றது, 'ஓதுக' என்ற வசனம். அந்த வசனம் கல்வி, கேள்வியின் முக்கியத்துவத்தினை அகிலத்திற்கு  எடுத்துக் காட்டும் முன்னுதாரணம்.

அந்த கல்வி, கேள்வி உலக அறிவியல், விஞ்ஞானம், கணிதம் பெருக காரணமாக அமைந்தது என்பதினை மேலை நாட்டு அறிஞர்களும் மறுக்க வில்லை.

இந்தியாவினைப் பொருத்தமட்டில் கல்வி காலனி ஆதிக்கத்துக்கு முன்பு, பின்பு என்று பிரிக்கலாம். காலனி ஆட்சிக்கு முன்பு முகலாய சாம்ராஜ்யம் இருந்தது உங்களுக்குத் தெரியும்.

முகலாய ஆட்சி காலத்தில் மத சார்பில்லாத உயர்  கல்வி நிலையங்களாக,
1) மேற்கு வங்கத்தில், 'அலியா யுனிவர்சிட்டி'
2) ஹைதராபாத், 'ஜாமியா நிஜாமா'
3) பிஜாப்பூரில், 'ஜாமியா ஹாசிமியா'
ஆகியவைகள் இருந்து கல்விப் பணி செய்து வந்தது.

காலனி ஆட்சி காலத்தில் மத சார்பில்லாத உயர் கல்வி நிலையங்களாக:

1) யுனிவெர்சிட்டி ஆப் முனாவருள் இஸ்லாம்.
2) அலிகார் முஸ்லிம் யுனிவெர்சிட்டி
3) ஜமியா மிலியா இஸ்லாமியா
4) ஜாமியா உஸ்மானியா

ஆகியவை கலை மற்றும் விஞ்ஞான கல்விப் பணி ஆற்றி வந்தது.
ஆரம்பத்தில் உயர் கல்வி உயர் கல்வி நிலையங்களை முஸ்லிம்கள் நடத்தி வந்தாலும் சுதந்திர இந்தியாவில் வேலை பார்க்கும் முஸ்லிம்கள் நிலை பரிதாபமாக இருக்கின்றது என்பதினை  இந்திய பாராளுமன்றத்தில் 26.2.2016 அன்று மைனாரிட்டி வெல்பார் மந்திரி அப்பாஸ் நக்வி பட்டியலிட்டுக் காட்டியதினை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஆசைப் படுகின்றேன்.
இந்தியாவில் உள்ள 120 கோடி மக்களிடையே வேளையில் இருக்கும் இந்துக்கள் 41 சதவீதமாகும், முஸ்லிம்களைவிட குறைந்த மக்களைக் கொண்ட கிருத்துவர்கள் 41.9 ச34தவீதமும், புத்தர்கள் 43.1 சதவீதமும், சீக்கியர்கள் 36.3 சதவீதமும், ஜைன மதத்தினர் 35.5 சதவீதமும், மைனாரிட்டி சமூகத்தினரிடையே அதிகமான மக்கள் தொகையினைக் கொண்ட முஸ்லிம்கள் 32.6 சதவீதமாகவும் உள்ளனர்.

தனியார் வேலை நிறுவனம் அவர்கள் விருப்பப் படி வேலையாட்களை நியமனம் செய்து கொள்ளலாம். ஆனால் அரசு நிறுவனங்களில் முஸ்லிம்களுக்கென்று 27 சதவீத பிற்பட்டோர் பட்டியலில் இடம் கொடுக்க அரசியல் சட்டத்தில் வழி வகை செய்துள்ளது. அதன் படி முஸ்லிம்கள் அரசு வேளையில் 23.7 சதவீதமும், தனியார் நிறுவனங்களில் 6.5 சதவீதமும், ஹிந்துக்கள் 34.2 சதவீத அரசு வேலைகளிலும், 13.1 சதவீதம் உள்ளனர்.

மைனாரிட்டிகளாக இருந்தாலும் கிருத்துவர்களும், புத்தர்களும், ஜைன மதத்தினரும், சீக்கியரும் அதிக வேலைவாய்ப்பினை கொண்டிருக்கின்றார்கள் என்றால், அவர்கள் நடத்தும் கல்வி நிறுவனங்கள் அதிகம். அது மட்டுமல்லாமல் அவர்கள் பொருளாதாரத்தில் முன்னேறி இருக்கின்றார்கள்,

அது மட்டுமல்லாமல் அவர்கள் அரசு வேலைகளை அவர்கள் சமூகத்தாருக்கு பயிற்சி மையங்கள் நடத்தி எடுத்துச் சொல்கிறார்கள். அவர்கள் சமுதாயங்களில் பெண்கள் வேலைக்குச் செல்கிறார்கள் .

மத்திய அரசால் முஸ்லிம்கள் கல்வி,அரசு வேளைகளில் வாய்ப்பினைப் பெற்றிருக்கின்றார்களா என்று ஆராய அமைக்கப் பட்ட உச்சமன்ற முன்னாள் நீதிபதி ராஜேந்திர சச்சார் தலைமயிலான குழு தன்  அறிக்கையில்:

முஸ்லிம்கள் 3 சதவீதம் ஐ.ஏ எஸ் பதவியிலும், 1.8 சதவீதம் இந்திய பாரின் சர்வீஸில் 1.8 சதவீதமும்(வெளி விவகார அமைச்சகரம்), இந்திய காவல் பணியில் 4 சதவீதமும், மத்திய காவல் படையில் 6 சதவீதமும், சுகாதாரப் பணியில் 4.4 சதவீதமும், போக்குவரத்தில் 6.5 சதவீதமும் தான் என்ற பரிதாபகரமான நிலையினைச் சொல்கிறது.

இதற்கு காரணம் என்ன என்று சொல்லும்போது முஸ்லிம் பெண்கள் 70 சதவீதம் வீட்டுக்குள்ளே முடங்கிக் கிடக்கின்றார்கள், ஹிந்துப் பெண்கள் 50 சதவீதப் பெண்களும் முடங்கிக் கிடக்கின்றார்கள் என்று பட்டியலிட்டுக் காட்டுகின்றது.

இது ஒருபுறம் இருக்க அரசு பணிகளில் முஸ்லிம்கள் சமீப காலத்தில் வேண்டுமென்றே ஒதுக்கப் படுகின்றார்களோ என்ற எண்ணம் கீழ்க்கண்ட உதாரணம் மூலம் தெரிகின்றது.

இந்திய மைய அரசில் ஆயுஸ் என்ற யோகா, யுனானி, ஆயுர்வேதம் ஆகியவற்றில் முஸ்லிம்கள் எத்தனை பேர்கள் வெளிநாட்டிற்கு அனுப்பப் பட்டுள்ளனர் என்ற ஆர்டிஐ(தகவல் உரிமை சட்டப்படி) கேட்கப் பட்ட கேள்விக்கு பதிலாக மைய அமைச்சரகம், 26 பேர் வெளி நாட்டினுக்கு யோகா கற்றுத் தருவதிற்காக, அனுப்பப் பட்டோரில் அந்த வேலைக்காக மனு செய்த 111 முஸ்லிம்களில் ஒருவர்கூட இல்லை என்ற தகவலுடன், அவர்களை அனுப்பச் சட்டத்தில் அனுமதியில்லை என்று கூறியிருப்பதாக பத்திரிக்கை படம் போட்டுக் காட்டுகின்றன என்று நீங்களும் படித்திருப்பீர்கள்.

ஏன் நாமும் இந்திய நாட்டுக் குடிமகன் தானே, அரசியலமைப்பில் வேலைவாய்ப்பில் முன்னுரிமை மைனாரிட்டி சமூகத்தினவருக்குக் கொடுக்கப் படவேண்டும் அதனை ஏன் மறுக்கின்றார்கள் என்ற ஆதங்கம் உங்களுக்கு இருப்பது நியாயமே!

இதற்கு முக்கியக் காரணமாக இருப்பது என்று பார்க்கும்போது நீதிபதி சச்சார் குழு சொன்ன, 'ஈக்குவல் ஆப்பர்சுனடி கமிசன்'( சமமான வாய்ப்புக் குழு) இதுவரை மைய அரசு மற்றும் மாநில அரசுகள் அமைத்து, முஸ்லிம்கள் வேலை வாய்ப்பினை கூடுகளாகப் பெற எந்த முயற்ச்சியும் எடுக்கப் படவில்லை. பாராளுமன்றத்தில் ஒரு சில முஸ்லிம் உறுப்பினர்கள் எழுப்பினாலும் அது செவிடன் காதில் ஊதிய சங்காகவே உள்ளது. அதற்கான எந்த முயற்ச்சியும் எந்த அரசும் செய்யவில்லை.

2) இஸ்லாத்தில் பெண்களுக்கு சம உரிமை இருந்தாலும், அவர்கள் கல்வி கற்றிருந்தாலும், உயர் கல்வி முடித்தது அவர்களை திருமணம் செய்வித்து அடுக்களையிலேயே முடங்கச் செய்யும் நிலை ஏழைக் குடும்பமானாலும் இருக்கின்றது. ஒரு பெண்ணுக்கு பருவத்தில் திருமணம் செய்து வைப்பது ஒவ்வொரு தந்தையின் கடமையாகும் என்பதினை மறுக்கமுடியாது. ஆனால் உயர் கல்வி பெற்ற பெண்களை திருமணம் செய்த பிறகும் கூட நல்ல வேளையில் அமர்த்தினால் நடுத்தரக் குடும்பம் பொருளாதாரத்தில் முன்னேறும் அல்லவா?

3) முஸ்லிம்கள் கல்வி நிலையங்கள் தற்போது அதிகமாக இருப்பதினை மறுக்கமுடியாது. ஆனால் அவையெல்லாம் முஸ்லிம் மாணவர்களை அரசு வேலைக்கு எந்த விதத்தில் தயார் செய்கின்றன என்று பார்ப்போமேயானால் விரல் விட்டு எண்ணக்கூடிய நிலையங்கள் தான் உள்ளன. ஆனால் மற்ற மத கல்வி நிலையங்கள் இதற்காக தனியாக பயிற்சி நிலையங்கள் இலவசமாக நடத்துகின்றன.

ஒரு பொறியியல் படித்து வேலை இல்லாமல் இருக்கும் ஒரு  வாலிபனிடம் நீ ஐ.ஈ.எஸ். பரிட்சை எழுது உனக்கு சென்ட்ரல் பொறியியல் நிர்வாகத்தில்( CPWD) வேலை கிடைக்கும் என்றேன். அவனுக்கு அப்படி ஒரு பரீட்சை இருக்கின்றதா என்றும் கேட்டான். ஏன் முஸ்லிம்கள் நடத்தும் பொறியியல் கல்லூரிகளில் ஐ.ஈ.எஸ் பரீட்சைக்கு மாணவர்களை தயார் செய்யக்கூடாது. இந்தப் பரீட்சை ஐ.ஏ .எஸ் பரீட்சைக்கு நிகரானது அல்லவா?

4) சில முஸ்லிம் நிறுவனங்கள் இலவச ஐஏஸ் அகடாமி என்று பெயர் போட்டு மூன்று மாத கோச்சிங் கொடுப்பதிற்கு ரூ 30,000/ வசூல் செய்கின்றன. சில பணக்கார்கள் பெயரில் நடத்தும் பயிர்ச்சி மையங்கள் கூட வசூல் செய்வது பரிதாபமாக உள்ளது அல்லவா?

ஏன் ஒவ்வொரு முஸ்லிம் கல்வி நிலையங்களும் அரசு வேலை வாய்ப்பினுக்கான முகாந்தரங்களை மாணவர்களுக்கு எடுத்துச் சொல்லி, விருப்பம் உள்ள மற்றும் திறமை உள்ள  மாணவர்களுக்கு இலவச விடுதி, பயிற்சி மையங்கள் நடத்தக் கூடாது?

முஸ்லிம் கல்வி நிறுவனங்களில் பிளஸ் 2 படிப்பினை முடித்த உடனேயே மாவட்டம் தோறும் இருக்கும் வேலை வாய்ப்பு நிறுவனங்களில் மாணவர்களை பதிய வைத்தால் சீனியாரிட்டி அடிப்படையில் அவர்களுக்கு அரசு வேலைக்கு அழைப்பு வரும். அத்துடன் பட்டப் படிப்பினை முடித்ததும் தனது மேல் படிப்பினை புதிப்பிக்க வேண்டும்.

ஒரு தடவை தமிழக அமைச்சர் ஒருவர் ஒரு முஸ்லிம் தலைவரைப் பார்த்து முஸ்லிம்கள் 'கருவாட்டு பாய்கள்' என்று அலட்சியமாக சொன்னது உங்களுக்கு நினைவூட்டுகிறேன். அவர் மேலும் ஒரு காலத்தில் அதே முஸ்லிம் ஒருவரிடம் தான்  கையூட்டாக ஒரு வைர நெக்லஸ் வாங்கினார் என்ற  குற்றம் சாட்டப்பட்டது ஒரு பக்கம் இருந்தாலும் முஸ்லிம்களின் பொருளாதார பரிதாப நிலையினை தான் அவர் அவ்வாறு கேலி செய்ய தூண்டுகிறது  என்று எடுத்துக் கொள்ளவேண்டும்.

முஸ்லிம் அரசியல் கட்சிகள் முகல்லா மாநாடு என்று போட்டு வேற்று மத அரசியல் தலைவர்களை அழைத்து பேசச் சொல்லும்போது அரசு வேலைகளுக்கு தகுதி இருப்பவர்களை முகல்லா தோறும் கண்டறிந்து பயிற்சி மையங்கள் நடத்தக் கூடாது. அவர்களுக்கு வேண்டியது அரசியல் தலைவர்கள் என்ற பெயரும் புகழும்தான், அத்துடன் அவர்கள் தூக்கி எறியும் ஓரிரு இடங்கள் தான் அதற்காக தன் மானத்தினையும், தன் சமூதாய மானத்தினையும் காற்றில் பறக்க விடலாமா?

இனிமேலாவது சமூதாயம் முன்னேற வழி வகுக்கப் பாடுபட வேண்டும் எனக் கேட்டுக்கொண்டால் சரியா?

டாக்டர் ஏ.பீ. முகமது அலி, பிஎச்,டி, ஐ.பீ.எஸ்(ஓ)
ஓய்வுபெற்ற மூத்த காவல்துறை அதிகாரி 
எழுத்தாளர்  
சமூக ஆர்வலர்

2 comments:

  1. யோகா கற்றுத்தருவதற்காக 111 பேரில் ஒருவரும் இல்லாதது வேதனையான விஷயம் ,மத்திய அரசில் மட்டுமில்ல மாநில அரசிலும் நம்மக்கள் வஞ்சிக்கப் படுகிறார்கள்.
    நம்சமுதாயம் நடத்தும் அலுவலகங்கள் கல்லூரிகள் இதில் நம்மவனுக்கு முன்னுரிமை கிடையாது அதேப போல் மற்றவர்கள் நடத்தும் எந்தப் பணியாக இருந்தாலும் நமக்கு இடமே கிடையாது.

    எனக்கு தெரிந்த பையன் விளையாட்டில் வீரன்; படிப்பில் மக்கு நான் அவனை பார்த்து, உன் முரட்டு தனத்துக்கு போலீஸ் வேலை தான் லாயக்கு முயற்சி செய்யுன்னு சொன்னேன் application போட்டான் தேர்வில் கலந்துக்கொண்டு பாஸ், ஆனால் அதிகாரியோ " கார்டு வரும் பிறகு வா " என்று சொல்லி அனுப்பி விட்டார்; அவனுக்கு எதுவும் வரல பிறகு வெளிநாட்டில் செக்யூரிட்டி வேலைக்கு போய்விட்டான் , அரசின் வேளையில் ஆர்வம் இருந்தும் அவனுக்கு அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று தெரிய வில்லை.எல்லா இடத்திலும் லஞ்சம் உண்டு; யாரை பார்க்க வேண்டும் என்றும் தெரிய வில்லை.

    சமுதாயத்தில் அதிகமாக படிக்கிறார்கள் பிறகு எப்படி அரசு வேளையில் அமர்வது என்று தெரியவில்ல எனவே கோச்சிங் கிளாஸ் தேவை. சமுதாயக் கணக்கின் படி அரசு வேளையில் இன்னமும் சிங்கள் டிஜிட்டில் தான் இருக்கோம் அதனை மாற்ற அடிப்படையில் அரசு வேலையின் அவசியத்தை உணர்த்த வேண்டும் . படி ! எடு பாஸ்போர்ட் !! புறப்படு வெளிநாடு !!! என்ற நிலைமாற ஒவ்வொருவரும் முயற்சி எடுக்க வேண்டும்.அரசு வேலை கிடைக்கலையா? .. லோன் கிடைக்குது, சுய தொழில் தொடங்கு, நம்ம என்ன மல்லையா போல் 9000 கோடி சுருட்டவா போறோம் !

    மார்க்க சம்பந்தமாக தெருமுனை பிரசாரம் பண்ணும் அதே நேரத்தில் நம் சமுதாய இளைஞர்கள் அரசு வேளையில் சேர சிறப்பு முகாம் நடத்த வேண்டும் என்று பெரும்பாலனோர் கோரிக்கையாக இருக்கு -இன்ஷா அல்லாஹ், நாடுவான்.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.