.

Pages

Saturday, August 31, 2019

பட்டுக்கோட்டையில் TNTJ சார்பில் இரத்த தானம் முகாம் (படங்கள்)

பட்டுக்கோட்டை, ஆக.31
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் பட்டுக்கோட்டை கிளை மற்றும் தஞ்சை அரசு மருத்துவமனை இணைந்து நடத்தும் மாபெரும் இரத்த தானம், இரத்த வகை கண்டறிதல் முகாம் மற்றும் இலவச மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்ச்சி  பட்டுக்கோட்டை பள்ளிவாசல் தெரு  நகராட்சி நடுநிலைப் பள்ளியில் இன்று சனிக்கிழமை நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாவட்ட மருத்துவ அணி செயலாளர் ஹாஜா ஜியாவுதீன் தலைமை வகித்தார். அவ்வமைப்பின் தஞ்சை தெற்கு மாவட்டத் தலைவர் அதிரை கே.ராஜிக் முகமது, மாவட்டச் செயலாளர் வல்லம் பாட்ஷா, மாவட்ட துணைச் செயலாளர் ஆவணம் ரியாஸ் மற்றும் கிளை நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு விருந்தினராக பட்டுக்கோட்டை நகராட்சி ஆணையர் பாஸ்கர் கலந்துகொண்டார். மேலும், தொழில் அதிபர் எஸ்.ஆர் ரகு, சமூக ஆர்வலர் ஏ.கே குமார், கலாம் நண்பர்கள் மாநில ஒருங்கிணைப்பாளர் பாலமுருகன், முஸ்லிம் பள்ளி தலைமை ஆசிரியை வைரமணி மற்றும் அவ்வமைப்பின் மாவட்ட மற்றும் கிளை நிர்வாகிகள் கான்சாகிப், பாரூக், சித்திக், பத்ரூத்தீன், யஹ்யா மற்றும் பலர் கலந்து கொண்டனர். இதில், 55 பேர்கள் ரத்த தானம் வழங்கினர். ரத்ததானம் வழங்கியவர்களுக்கு அரசு மருத்துவமனை சார்பில் பாராட்டுச்சான்றிதழ் வழங்கப்பட்டது.
 
 

மரண அறிவிப்பு ~ நூருல் அமீன் (வயது 72)

அதிரை நியூஸ்: ஆக.31
அதிராம்பட்டினம், பெரிய நெசவுத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் ஆ.சி முகமது அபூபக்கர் அவர்களின் மகனும், மர்ஹும் அப்துல் ரஹ்மான் அவர்களின் சகோதரரும், மர்ஹும் கோமண்டை கே. அகமது ஜலாலுதீன் அவர்களின் மருமகனும், அபூபக்கர், அபூதாஹிர் ஆகியோரின் தகப்பனாருமாகிய நூருல் அமீன் (வயது 72) அவர்கள் இன்று மாலை வஃபாத்தாகி விட்டார்கள்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜுவூன்

அன்னாரின் ஜனாஸா இன்று (31-08-2019) இரவு 9.30 மணியளவில் மரைக்கா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.

காரைக்குடி ~ திருவாரூர் பாதையில் சென்னைக்கு விரைவு ரயில் இயக்க எஸ்.எஸ் பழனிமாணிக்கம் எம்.பி., யிடம் கோரிக்கை!

அதிராம்பட்டினம், ஆக.30
காரைக்குடி ~ திருவாரூர் பாதையில் சென்னைக்கு விரைவு ரயில் இயக்க நடவடிக்கை எடுக்கக் கோரி தஞ்சை நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எஸ் பழனிமாணிக்கம் எம்.பி., யிடம் அதிராம்பட்டினம் நல்வாழ்வு பேரவை அமைப்பினர் இன்று வெள்ளிக்கிழமை மனு அளித்தனர்.

அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுப்புற ஆற்று நீர் வழித்தட வாய்க்கால் பகுதிகளை பார்வையிடுவதற்கு இன்று வருகை தந்த தஞ்சை நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எஸ் பழனிமாணிக்கம் எம்.பி., யிடம், அதிராம்பட்டினம் நல்வாழ்வு பேரவையின் நிறுவனத் தலைவர் மு.க.செ அகமது அலி ஜாஃபர் கோரிக்கை மனு அளித்தார். அதில், காரைக்குடி ~ திருவாரூர் பாதையில் சென்னைக்கு விரைவு ரயில் போக்குவரத்தை உடனடியாக இயக்கவும்,  காரைக்குடி ~ திருவாரூர் வழித்தடத்தில் காலியாக உள்ள கேட் கீப்பர் பணியிடங்களை நிரப்பக் கோரியும் குறிப்பிட்டு இருந்தார்.

மனுவை பெற்றுக்கொண்டு, எதிர்வரும் (03-09-2019) அன்று தெற்கு ரயில்வே திருச்சி மண்டல வர்த்தக மேலாளரை சந்திக்க திட்டமிட்டுள்ளதாகவும், கோரிக்கை பற்றி எடுத்துக்கூறி, அதன் மீது துரித நடவடிக்கை மேற்கொள்ள அதிகாரிகளிடம் தாம் வலியுறுத்த உள்ளதாக அவர்களிடம் தெரிவித்தார்.

அப்போது, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கா. அண்ணாதுரை, முன்னாள் சேர்மன் எஸ்.எச் அஸ்லம், திமுக அதிரை பேரூர் செயலாளர் இராம.குணசேகரன், அதிரை அரிமா சங்க நிர்வாகிகள் பேராசிரியர் எம்.ஏ. முகமது அப்துல் காதர், எஸ்.எம். முகமது முகைதீன், எம். அப்துல் ஜலீல், ரோட்டரி சங்க நிர்வாகிகள் டி. முகமது நவாஸ்கான், இசட். அகமது மன்சூர், திமுகவை சேர்ந்த கோடி முதலி, முல்லை ஆர்.மதி, இன்பநாதன், எம். பகுருதீன், ஏ.எம்.ஒய். அன்சர்கான், நாகராஜ், எஸ்.எஸ்.எம்.ஜி பசூல்கான்,  இ.வாப்பு மரைக்காயர், என்.கே.எஸ் முகமது சரீப், எஸ்.கார்த்திகேயன் (காங்கிரஸ்), ஏ.சாகுல் ஹமீது  (இந்திய யூனியன் முஸ்லீம் லீக்), என்.காளிதாஸ் (இந்திய கம்யூனிஸ்ட்) உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு இக்கோரிக்கையை ரயில்வே உயர் அதிகாரிகள், சம்பந்தப்பட்ட ரயில்வே துறை அமைச்சர் உள்ளிடோர் கவனத்துக்கு எடுத்துச்செல்லுமாறு வலியுறுத்தினர்.

அதிராம்பட்டினம் ஆற்று நீர் வழித்தட பகுதிகளில் எஸ்.எஸ் பழனிமாணிக்கம் எம்.பி ஆய்வு (படங்கள்)

அதிராம்பட்டினம், ஆக. 30
அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுப்புற ஆற்று நீர் வழித்தட வாய்க்கால் பகுதிகளில் தஞ்சை நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எஸ் பழனிமாணிக்கம் எம்.பி., இன்று வெள்ளிக்கிழமை மாலை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அதிராம்பட்டினம் பேரூர் பகுதியின் குடிநீர் தேவைக்காக, அதிராம்பட்டினம் கடைமடைப் பகுதி குளங்களுக்கு தண்ணீர் திறந்து விடக்கோரி நீர்நிலை பாதுகாப்பு அறக்கட்டளை சார்பில், அவ்வமைப்பினர் மாவட்ட ஆட்சியர், பொதுப்பணித்துறை உள்ளிட்ட அதிகாரிகளிடம் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், டெல்டா பாசனத்திற்காக, கல்லணையிலிருந்து கடந்த (17-08-2019) அன்று தண்ணீர் திறந்து விடப்பட்டதை அடுத்து நேற்று வியாழக்கிழமை முதல் இராஜமடம் கிளை வாய்க்காலில் தண்ணீர் மிதமாக வந்துகொண்டு இருக்கிறது.

இந்நிலையில், தொக்காலிகாடு கிராமத்தில் உள்ள இராஜமடம் கிளை
வாய்க்கால் 20/21 ல், தஞ்சை நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எஸ் பழனிமாணிக்கம் எம்.பி., இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது நீர்நிலை பாதுகாப்பு அறக்கட்டளை அமைப்பின் தலைவர் எஸ்.எச் அஸ்லம் தலைமையில் அங்கு திரண்டிருந்த சுமார் 100 க்கும் மேற்பட்டோர் அதிராம்பட்டினம் கடைமடைப் பகுதி வரை தண்ணீர் வருவதற்கு உரிய நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு எஸ்.எஸ் பழனிமாணிக்கம் எம்.பி., யிடம் கேட்டுக்கொண்டனர்.

பின்னர், அதிராம்பட்டினம் கடைமடைப் பகுதிக்கு தண்ணீர் செல்லும் சி.எம்.பி வாய்க்கால் பகுதியை பார்வையிட்டார். சி.எம்.பி வாய்க்கால் இணைப்பில் இருந்து பெண்கள் குளத்திற்கு (மரைக்கா குளம்) தண்ணீர் செல்லும் 100 மீட்டர் தூரத்தில் வடிகால் அமைக்கும் திட்டம் குறித்து கேட்டறிந்தார்.

அப்போது, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கா. அண்ணாதுரை, திமுக பட்டுக்கோட்டை (மேற்கு) ஒன்றிய செயலாளர் பா.இராமநாதன், திமுக அதிராம்பட்டினம் பேரூர் செயலாளர் இராம.குணசேகரன், மாளியாக்காடு ஊராட்சி முன்னாள் தலைவர் ரமேஷ், மகிழங்கோட்டை ஊராட்சி முன்னாள் தலைவர் சுப்புமாறன், தொக்காலிகாடு கிராம நீர்நிலை ஆர்வலர்கள் சாமிநாதன், பாண்டியன் மற்றும் அதிராம்பட்டினம் நீர் நிலை பாதுகாப்பு அறக்கட்டளை அமைப்பினர் பலர் உடன் இருந்தனர்.
 
 
 

Friday, August 30, 2019

மரண அறிவிப்பு ~ இன்ஜினியர் எம்.ஏ அகமது அலி (வயது 70)

அதிரை நியூஸ்: ஆக.30
அதிராம்பட்டினம், கடற்கரைத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் எம். அப்துல் சமது அவர்களின் மகனும், மர்ஹூம் எம்.ஆர் அப்துல் லத்திப் அவர்களின் மருமகனும், எம்.ஏ ஜமால் முகமது, மர்ஹும் எம்.ஏ அன்வர் ஹுசைன் ஆகியோரின் மூத்த சகோதரரும், மர்ஹும் ஏ.எல் கமருல் ஜமான், மர்ஹும் ஏ.எல் முத்தலிப், ஏ.டி அல்லா பிச்சை, ஏ.டி தாஜுதீன், என். முகமது மீரா, ஏ.எல் அயூப், ஏ.எல் அப்துல் அஜீஸ், ஏ.டி முகமது ஹுசைன் ஆகியோரின் சகோதரரும், பி.எம்.எஸ் முகமது அமீன், எம்.முகமது மர்ஜூக் ஆகியோரின் மாமனாரும், ஏ.அபூபைசல், ஏ.ஆதம் மாலிக் ஆகியோரின் தகப்பனாருமாகிய இன்ஜினியர் எம்.ஏ அகமது அலி (வயது 70) அவர்கள் இன்று காலை வஃபாத்தாகி விட்டார்கள்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜுவூன்

அன்னாரின் ஜனாஸா இன்று (30-08-2019) மாலை அஸர் தொழுகைக்கு பிறகு  கடற்கரைத்தெரு ஜும்மா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.

பிலால் நகரில் ADT சார்பில் இஸ்லாமிய மார்க்க விளக்க சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி!

அதிராம்பட்டினம், ஆக. 30
அதிரை தாருத் தவ்ஹீத் (ADT) அமைப்பின் ஏற்பாட்டின் பேரில் ஆண்களுக்கான மார்க்க விளக்கக் கூட்டம் நாளை (31.08.2019) சனிக்கிழமை மாலை மஃரிப் தொழுகை முடிந்தவுடன் பிலால் நகர் இஸ்லாமிய பயிற்சி மைய அரங்கத்தில் நடைபெற உள்ளது.

சிறப்புரை நிகழ்த்துபவர்:
மவ்லவி. ரஹ்மத்துல்லாஹ் ஃபிர்தவ்ஸி அவர்கள்

தலைப்பு:
நெறியுடன் வாழ வழி என்ன?

நிகழ்ச்சியின் இறுதியில் பேசப்படும் தலைப்பை ஒட்டி எழுப்பப்படும் கேள்விகளுக்கு பதில் அளிக்கப்படும்.

பைக் பார்க்கிங் இட வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அனைவரையும் வருக மார்க்க விளக்கம் பெறுக என அன்போடு அழைக்கிறது.

அதிரை தாருத் தவ்ஹீத் - ADT

Thursday, August 29, 2019

பட்டுக்கோட்டையில் கண்களை கட்டிக்கொண்டு சைக்கிள் ஓட்டி 5-ம் வகுப்பு சிறுவன் சாதனை!

பட்டுக்கோட்டை, ஆக. 29
தேசிய விளையாட்டு தினத்தையொட்டி, பட்டுக்கோட்டையில் ஐந்தாம் வகுப்பு மாணவன் தனது கண்களை கட்டிக்கொண்டு மூன்று கிலோமீட்டர் தூரம் சைக்கிள் சாதனை படைத்துள்ளார்.

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை பொன்னவராயன் கோட்டை பகுதியைச் சேர்ந்த கட்டிட பொறியாளர் ஆனந்த் என்பவரின் மகன் ஆசிய்வ் (வயது 9). இவர், 5 ஆம் வகுப்பு படித்து வருகிறார். சிறு வயதிலேயே சைக்கிள் ஓட்டுவதில் ஆர்வம் காட்டி வந்த ஆசிய்வ் கண்ணை கட்டிக் கொண்டு சைக்கிள் ஓட்ட வேண்டும் என்றும் இதன் மூலம் உலக சாதனை செய்ய வேண்டும் என்ற நோக்கில் அதற்கான பயற்சியில் ஈடுபட்டு வந்துள்ளார்.

இந்நிலையில், தேசிய விளையாட்டு தினமான இன்று முதன் முயற்சியாக தமது கண்களை கட்டிக் கொண்டு நகரின் முக்கிய வீதி வழியாக 2.6 கிலோ மீட்டர் தூரத்தை 17 நிமிடம் 11 நொடிகளில் கடந்து சென்று சாதனை படைத்துள்ளார்.

காதிர் முகைதீன் கல்லூரியில் தேசிய விளையாட்டு தின விழா (படங்கள்)

அதிராம்பட்டினம், ஆக.29
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் கல்லூரியில் தேசிய விளையாட்டு தின விழா இன்று (29-08-2019) வியாழக்கிழமை மாலை நடைபெற்றது.

விழாவிற்கு கல்லூரி முதல்வர் ஏ.முகமது முகைதீன் தலைமை வகித்து உரை நிகழ்த்தினார். கல்லூரி துணை முதல்வர் எம். முகமது முகைதீன் வாழ்த்துரை வழங்கினார்.

சிறப்பு விருந்தினராக உடற்கல்வி இயக்குநர் (ஓய்வு) டி.ரவிச்சந்தர் கலந்துகொண்டு சிறப்புரை வழங்கினார். முன்னதாக, கல்லூரி உடற்கல்வி இயக்குநர் கே.முருகானந்தம் அனைவரையும் வரவேற்றுப் பேசினார். முடிவில் உடற்கல்வி பயிற்றுநர் எஸ்.இளமுருகு நன்றி கூறினார். இவ்விழாவில், கல்லூரிப் பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள், பெற்றோர்கள் கலந்துகொண்டனர்.

தேசிய விளையாட்டு தினத்தை முன்னிட்டு, கல்லூரியில் சிறப்பு யோகா பயிற்சி நடைபெற்றது. இதில், கல்லூரி மாணவிகள் பலர் கலந்துகொண்டு யோகா பயிற்சியை மேற்கொண்டனர். 


 

அமெரிக்கா அங்கீகாரத்துடன் அதிரைக்கு பெருமை சேர்த்த பைக் ரேஸ் வீரர் நஜிமுத்தீன்!

பைக் ரேஸ் வீரர் மார்ஷல் நஜி
அதிரை நியூஸ்: ஆக. 29
நம்ம ஊரு அதிரையில் சமீப காலங்களில் துப்பாக்கி சுடுதல், நீண்ட தூர சைக்கிள் ஓட்டுதல், தடகள சாதனைகள், படிப்பிலும் கெட்டி என பல்வேறு வகையான சாதனையாளர்கள் வெளியாகி சமூக வானில் பிரகாசிக்கத் துவங்கியுள்ளனர், அவர்களிலிருந்து இன்னுமோர் அரிய வரவு நீண்ட தூர சாதனை பைக் ரேஸ் வீரர் நஜி என்கிற நஜிமுத்தீன்

சகோதரர் நஜிமுத்தீன் துபையில் பைக் விற்பனை மற்றும் டாக்கர் ரேலி (Dakar Rally), மோட்டோகிராஸ் டிரேக் (MX Track) போன்ற பலவகையான ரேஸ்களை ஒழுங்கு செய்யும் நிறுவனத்தில் பணியாற்றிய நிலையில் நாமும் நீண்ட தூர சாதனை பைக் வீரராக மாறினால் என்ன என தோன்றிய எண்ணத்தை நிஜமாக்கி இன்று 2 சாதனைகளை தன்னகத்தே வைத்துள்ளார்.

நீண்டதூர பைக் ஓட்டும் வீரர்களுக்காகவே சர்வதேச அளவில் பல சங்கங்கள் செயல்படுகின்றன, இணையதளம் வழியாக பதிவு செய்து அவர்களின் கடும் நிபந்தனைகளின் படி பைக் ஓட்டும் வீரர்களின் சான்றுகளை மிகத்துல்லியமாக ஆய்வு செய்து சுமார் ஒரு வருடத்திற்கு பின்பே சாதனைக்காக அங்கீகார சான்றிதழை வழங்குகின்றனர்.

2017 ஆம் ஆண்டு நீண்டதூர பைக் ரேஸ் சாதனைக்கான எண்ணம் துளிர்விடத் துவங்கியவுடன் முன் முயற்சியாக 1,000 கிலோ மீட்டர் தூரத்தை 14 மணிநேரத்தில் அமீரகத்தை சுற்றிவந்து தன்னை 24 மணிநேரத்தில் 1,600 கி.மீ தூரம் என்ற அங்கீகரிக்கப்பட்ட சாதனைப் பயணத்திற்கு தயார்படுத்திக் கொண்டார்.

அமெரிக்காவில் இயங்கும் Iron Butt Association (www.Ironbutt.org) என்ற நிறுவனத்தில் பதிவு செய்து Road Toads என்ற அமீரக பைக்கர் குழுவினருடன் இணைந்து தனது முதல் சாதனை முயற்சியை 2017 வருடம் மார்ச் 31 ஆம் தேதி வெற்றிகரமாக நிறைவு செய்தார். இதற்கான அங்கீகார சான்றிதழ் பல்வேறு ஆய்வுகளுக்குப் பின் 2018 ஆம் ஆண்டு கிடைத்தது.

வழித்தடம்: 
ஆரம்பம் துபை - ருவைஸ் - மதீனத் ஜாயித் - ராஸ் அல் கைமா - திப்பா - ஹட்டா - அல் அய்ன் - துபையில் நிறைவு.

36 மணிநேரத்தில் 2,500 கிலோ மீட்டர் என்ற தனது 2 வது இலக்கை 8 பேர் கொண்ட Road Toads பைக்கர் குழுவினருடன் இணைந்து Long Distance Rider (https://longdistanceriders.net) என்ற அமெரிக்க நிறுவனத்தில் பதிவு செய்து கடந்த 09.03 2018 அன்று வெற்றிகரமாக 35 மணிநேரத்திலேயே கடந்து சாதனை புரிந்தார். இதற்கான அங்கீகார சான்றிதழ் பல்வேறு கட்ட ஆய்வுகளுக்குப் பின் தற்போது தான் கிடைத்தது.

வழித்தடம்: 
ஆரம்பம் துபை - அல் குவைபத் (சவுதி பார்டர்), - சிலா - ராஸ் அல் கைமா - ஹட்டா - அல் அய்ன் - (மீண்டும்) சிலா - லிவா பாலைவனம் - துபையில் நிறைவு.

இவருடைய அடுத்த இலக்கு 24 மணிநேரத்தில் 2,500 கி.மீ என்பதே. இந்த சாதனைகளை நிகழ்த்துவதற்கு பல்வேறு கடினமான நிபந்தனைகளை மேற்படி சங்கங்கள் விதிக்கும். அதேபோல் பைக்கில் பயணிக்கும் வேகம் மணிக்கு 100 கி.மீ முதல் 200 கி.மீ வரை அமைந்திருக்கும். அமீரக சாலைகளில் வாகனங்களின் வேகத்தை கண்டறியும் ரேடார் கேமராக்கள் அதிகம். கேமராக்கள் இருக்கும் பகுதிகளில் செல்லும் போது மட்டுமே 100 கி.மீ வேகம் மற்றபடி போக்குவரத்து நிலை மற்றும் சாலைக்கேற்றவாறு பைக்குகள் பறக்கும்.

புரிதலுக்காக மட்டும்... 
நம்ம தப்லீக் ஜமாத்துகளில் அமீர், ரஹுபர், முத்தகல்லீம் என காணப்படுவது போல் இவர்களுடைய குழுவிலும் மஞ்சள் வண்ண ஆடை அணிந்தவர் Road Captain, ஆரஞ்சு வண்ண ஆடை அணிந்தவர் Sweeper, கருப்பு நிற ஆடை அணிந்தவர் Marshal எனவும் அழைக்கப்படுவர். நம்ம நஜி தான் இக்குழுவின் மார்ஷல் என்பதுடன் இச்சாதனைக்குப்பின் சிறந்த மார்ஷல் என்ற (Surprise Medal) பதக்கத்தை Road Toads பைக்கர் குழுவினர் நஜிக்கு வழங்கி மகிழ்ந்தனர்.

யார் இந்த நஜி... 
அதிராம்பட்டினம் மேலத்தெரு தூண்டியப்பா வீட்டைச் சேர்ந்த சகோதரர்கள் தாஜுதீன், ஜாகிர் ஹுசைன், ஜெமீல் ரஹ்மான், சஹாபுதீன், மீடியா மேஜிக் நிஜாமுதீன், அமீருத்தீன் ஆகியோரின் இளைய சகோதரரும்,  TIYA அப்துல் மாலிக் அவர்களின் ஒன்றுவிட்ட சகோதரரும் மர்ஹூம் ஷாஹுல் ஹமீது அவர்களின் குமாரருமாவார் நஜிமுத்தீன்.

அதிரைக்கு பெருமை சேர்த்த நீண்ட தூர சாகச பைக் வீரருக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துக்களுடன்

அதிரை அமீன்
துபை ABCC கிரிக்கெட் அணி வீரர்கள் பாராட்டி வாழ்த்து தெரிவித்த போது

Yellow: Captain, Orange: Sweeper, Black: Marshall (Naji)

UAE Road Toads Bikers Team

 
 


1000 கிலோ மீட்டர் தூரம் சென்றதற்கான வழித்தட புகைப்படம்

1,600 கிலோ மீட்டர் தூரம் சாதனைக்கான பாராட்டுச் சான்றிதழ்


Meter Readings and Date as proof

Bikers Route Map

2,500 கிலோ மீட்டர் தூரம் சாதனைக்கான பாராட்டுச் சான்றிதழ்