.

Pages

Wednesday, April 10, 2013

காயல்பட்டினத்தில் மாபெரும் தப்லீக் இஜ்திமா மாநாடு !

காயல்பட்டினத்தில் தப்லீக் இஜ்திமா நிகழ்ச்சிகள் இம்மாதம் 06, 07 தேதிகளில் (சனி, ஞாயிறு) நடைபெற்றது. காயல்பட்டினம் பேருந்து நிலையத்தையொட்டிய பரந்த மைதானத்தில் நடைபெற்ற இந்த இஜ்திமா - ஒன்றுகூடல் நிகழ்வில் கலந்துகொள்வதற்காக, தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி, விருதுநகர், இராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து சுமார் 50 ஆயிரம் ஆண்கள், பேருந்துகளிலும், வேன், கார், இருசக்கர வாகனம் உள்ளிட்ட வாகனங்களிலும் வந்து நிகழ்விடத்தில் திரண்டனர். 







திருநெல்வேலி, தூத்துக்குடி வழித்தடங்களிலிருந்து காயல்பட்டினத்தை நோக்கி வந்த பேருந்துகள் அனைத்திலும், இஜ்திமாவில் கலந்துகொள்வதற்காக முஸ்லிம் மக்களே நிறைந்து காணப்பட்டனர். போக்குவரத்து நெரிசலைத் தவிர்த்திடுவதற்காக, தூத்துக்குடியிலிருந்து வந்த பேருந்துகள் காயல்பட்டினம் புறவழிச் சாலை வழியாக திருப்பி விடப்பட்டது. காயல்பட்டினத்திலிருந்து செல்லும் பேருந்துகள் அனைத்தும், வழமை போல ஆறுமுகநேரி - காயல்பட்டினம் நெடுஞ்சாலை வழியே சென்றன. 

பேருந்து, வேன், கார், இரு சக்கர வாகனங்களை நிறுத்துவதற்காக ஆங்காங்கே வாகன நிறுத்தங்கள் தனித்தனியே ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இஜ்திமாவில் கலந்துகொள்வோருக்காக பந்தலிலேயே - மாவட்ட வாரியாக தனித்தனி மெஸ்களில் உணவு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இஜ்திமாவில் பங்கேற்க வருவோரிடம் 100 ரூபாய் கட்டணமாகப் பெற்று, முதல் நாள் இரவு உணவு, இரண்டாம் நாள் காலை, மதியம் மற்றும் இரவு உணவு வினியோகிக்கப்பட்டது. 

06.04.2013 சனிக்கிழமையன்று மாலை 06.30 மணியளவில் மஃரிப் தொழுகையுடன் இஜ்திமா நிகழ்வுகள் துவங்கின. மார்க்க அறிஞர்களின் சொற்பொழிவுகள் தொடர்ச்சியாக நடைபெற்றன. முதல் நாள் நிகழ்வுகள் அனைத்தும் இரவு 09.00 மணியளவில், இஷா தொழுகையுடன் நிறைவுற்றது. 

















இரண்டாம் நாளான ஏப்ரல் 07ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை என்பதாலும், இஜ்திமா நிறைவில் நடைபெறும் சிறப்புப் பிரார்த்தனையில் பங்கேற்பதற்காகவும் பல்லாயிரக்கணக்கான மக்கள் காயல்பட்டினத்திலுள்ள இஜ்திமா நிகழ்விடத்திற்கு கூட்டங்கூட்டமாக வந்த வண்ணம் இருந்தனர். 

இரண்டாம் நாள் நிகழ்ச்சிகள் அனைத்தும் இரவு 08.30 மணியளவில் சிறப்புப் பிரார்த்தனை - துஆ மஜ்லிஸுடன் நிறைவுற்றது. உலக அமைதி, சகோதரத்துவம், சமுதாய ஒற்றுமை, நோய் நிவாரணம், சமய நல்லிணக்கம், மனித நேயம் உள்ளிட்டவற்றை வலியுறுத்தி பிரார்த்தனை செய்யப்பட்டது. 

இந்த இஜ்திமாவில், அனைத்துப் பகுதிகளைச் சேர்ந்த ஜமாஅத் நிர்வாகிகள், சமுதாய அமைப்புகளின் பிரதிநிதிகள், பொதுமக்கள் பெருந்திரளாகக் கலந்துகொண்டனர். 

ஆறுமுகநேரி காவல்துறை ஆய்வாளர் டி.பார்த்திபன் தலைமையிலான காவல்துறையினர், இஜ்திமா நடைபெற்ற இரண்டு நாட்களிலும் நிகழ்விடத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். 

இஜ்திமா நிகழ்வில் காணக்கிடைத்தவை: 

>> வழமையாக இதுபோன்று மக்களை ஓரிடத்தில் திரளச் செய்வதற்கு கையாளப்படும் பரப்புரை வழிமுறைகளான சுவரொட்டி, தொலைக்காட்சி விளம்பரம், சுற்றறிக்கை, தட்டிப் பலகை, பதாகைகள், துண்டுப் பிரசுரம் எதுவும் இங்கு இல்லை. பள்ளிவாசல்களிலும், தனிநபர்களை தனித்தனியாக சந்தித்தும் நேரடியாக அழைப்பு விடுக்கப்பட்டதைத் தவிர வேறெந்த பரப்புரை நடைமுறையும் கையாளப்படவில்லை

>> இஜ்திமாவுக்காக, யாரிடமும் நன்கொடையாக எதுவும் ஏற்பாட்டாளர்களால் வசூலிக்கப்படாத நிலையில், தன்னார்வத்துடன் பலர் பலவற்றுக்கு பொருளாதார அனுசரணை அளித்திருந்தனர்

>> சுமார் 50 ஆயிரம் பேர் வரை கலந்துகொண்ட இந்நிகழ்வில், பேச்சாளர்கள் யாருடைய பெயரும் அறிவிக்கப்படவில்லை. பிரம்மாண்டமான மேடையோ, ஆடம்பர தோரணங்களோ எதுவுமில்லை

ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டிருந்தும், காவல்துறையினருக்கோ, உளவுத் துறையினருக்கோ சிறிதும் வேலை வைக்கவில்லை. யாருக்கிடையிலும் வாக்குவாதங்களோ, தர்க்கங்களோ, சண்டை - சச்சரவுகளோ சிறிதளவு கூட நடைபெறவில்லை

>> “வாழ்க, ஒழிக” முழக்கங்கள் எதுவுமில்லை

>> எந்த அமைப்பையோ, இயக்கத்தையோ - போற்றியோ, தூற்றியோ எதுவும் பேசப்படவில்லை. மாறாக, இறையச்சம், இஸ்லாமிய வாழ்வியல் உள்ளிட்டவை குறித்தே இரு நாட்களிலும் மார்க்க அறிஞர்கள் உரையாற்றினர்

>> பேருந்து, வேன், கார், மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட அனைத்து வாகனங்களுக்கும் தனித்தனியே வாகன நிறுத்தங்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பெரும்பாலான பொதுமக்கள் அரசுப் பேருந்துகளை பல நாட்களுக்கு முன்பாகவே முறைப்படி முன்பதிவு செய்து, அவற்றிலேயே பயணம் செய்து வந்தமை குறிப்பிடத்தக்கது

>> தீ விபத்து நேர்ந்தால் பாதுகாப்பதற்காக, திருச்செந்தூர் தீயணைப்பு நிலையத்திலிருந்தும், காயல்பட்டினம் டி.சி.டபிள்யு. தொழிற்சாலையிலிருந்தும் தீயணைப்பு வாகனங்கள் முகாமிட்டிருந்தன



>> யாருக்கும் உடல் நலன் பாதிக்கப்பட்டால் சிகிச்சைக்கு கொண்டு செல்வதற்காக காயல்பட்டினம் கே.எம்.டி. மருத்துவமனையிலிருந்தும், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் (தமுமுக) காயல்பட்டினம் நகர கிளையிலிருந்தும் ஆம்புலன்ஸ் வாகனம் ஆயத்த நிலையிலிருந்தது



>> இஜ்திமாவையொட்டி நடைபெற்ற பல்வேறு ஏற்பாட்டுப் பணிகள் அனைத்திலும், அதற்கென நியமிக்கப்பட்டிருந்த தன்னார்வலர்கள், தமக்குக் கொடுக்கப்பட்ட பணியை மட்டும் கவனம் சிதறாமல் செய்து, அனைவரின் கவனத்தையும் ஈர்த்தனர்

>> இஜ்திமா பந்தலையொட்டி, தொழுகைக்காக பொதுமக்கள், இயற்கைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கும், தண்ணீரில் சுத்தம் செய்வதற்கும் (உளூ) எளிமையும் - பிரம்மாண்டமுமாக ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. 







>> இஜ்திமா பந்தலைச் சுற்றி ஏராளமான விற்பனை நிலையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. அவற்றின் உரிமையாளர்கள் தம் கடை விற்பனைப் பொருட்களை நியாயமான விலையிலேயே விற்றனர். யாரும், எங்கும் பேரம் பேசியதையோ, சர்ச்சையில் ஈடுபட்டத்தையோ காண முடியவில்லை























































>> ஊடகங்களுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. இவ்வளவு பெரிய மக்கள் திரட்சியையும், போக்குவரத்து வழித்தட மாற்றத்தையும் கருத்திற்கொண்டு, இஜ்திமா பந்தலுக்கு நேரடியாக வந்து செய்தி சேகரிக்க வந்த ஊடகங்களுக்கும் அதிகாரப்பூர்வமாக செய்திகள் வழங்கப்படவில்லை

>> நிலைப்படம் (ஸ்டில் ஃபோட்டோ), அசைபடம் (வீடியோ) உள்ளிட்ட எதுவும் அனுமதிக்கப்படவில்லை

>> பெரும்பெரும் செல்வந்தர்களும், ஏராளமான தொழிலாளர்களுக்கு ஊதியமளிக்கும் தொழிலதிபர்களும் இந்த இஜ்திமாவில் கலந்துகொண்டு, மக்களோடு மக்களாக மண் தரையில் விரிக்கப்பட்ட ப்ளாஸ்டிக் விரிப்புகளில் அமர்ந்ததும், படுத்ததும், பொது கழிப்பறையைப் பயன்படுத்தியதும், வரிசையில் நின்று உணவு டோக்கனைக் காண்பித்து உணவுண்டதும் அவர்களை முன்னரே அறிந்தவர்களுக்கு வியப்பூட்டிய அம்சங்கள்

>> இஜ்திமா நடைபெறுவதையும், அதற்காக ஏற்பாடு செய்யப்பட்ட பரந்து விரிந்த பந்தல் உள்ளிட்ட ஏற்பாடுகளையும் கேள்வியுற்று, இஜ்திமாவுக்கு முந்திய நாளான ஏப்ரல் 05ஆம் தேதியன்று, நேரில் பார்க்க வந்திருந்த பெண்களுக்கு, இருபாலர் ஓரிடத்தில் கலந்திருப்பது இஸ்லாமிய முறையல்ல என்று எடுத்துரைக்கப்பட்டு, திரும்பிச் செல்ல பொறுப்பாளர்களால் வலியுறுத்தப்பட்டது. பலமுறை எடுத்துக்கூறியும் அப்பெண்கள் திரும்பிச் செல்ல தாமதமானபோது, பந்தலின் ஒளி விளக்குகள் அணைக்கப்பட்டு இருள்மயமாக்கப்பட்டது. பின்னர் பெண்கள் கலைந்து சென்றனர்

>> இஜ்திமாவுக்காக பகுதி வாரியாக உணவு வினியோகம் செய்ய தனித்தனியாக 11 மெஸ்கள் அமைக்கப்பட்டிருந்தன. அனைத்திலும் சராசரியாக 3,500 டோக்கன்கள் விற்பனை செய்யப்பட்டிருந்தது

>> 40 ஆயிரம் மக்கள் மட்டுமே இஜ்திமா ஏற்பாட்டாளர்களால் எதிர்பார்க்கப்பட்டதாக அறிய முடிகிறது எனினும், பெறப்பட்ட உணவு டோக்கன்கள் கணக்கீட்டின்படி சுமார் 40 ஆயிரம் பேர், உணவு டோக்கன் பெறாமல் கலந்துகொண்ட உள்ளூர் – வெளியூர் மக்கள் சுமார் 10 ஆயிரம் பேர் என்ற கணக்கில் சுமார் 50 ஆயிரம் ஆண்கள் கலந்துகொண்டதாக கணக்கிடப்பட்டது. 

>> உணவு ஏற்பாடுகள் சில வேளைகளில் சுவை நிறைந்தும், சில வேளைகளில் சுவை குன்றியும் காணப்பட்டது. எனினும், உணவுண்டவர்கள் யாராலும் அது சர்ச்சையாக்கப்படவில்லை

>> எதிர்பார்க்கப்பட்டதை விட அதிகளவில் மக்கள் கலந்துகொண்டதால், ஏற்கனவே அமைக்கப்பட்டிருந்த கீற்றுப்பந்தலையொட்டி சாமியானா - துணிப்பந்தலும் அமைக்கப்பட்டது

>> இஜ்திமாவுக்கு வருவோர் தங்குவதற்காக, காயல்பட்டினம் மகுதூம் ஜும்ஆ பள்ளி, அல்ஜாமிஉல் அஸ்ஹர் ஜும்ஆ பள்ளி உள்ளிட்ட பள்ளிகள் திறந்தே வைக்கப்பட்டிருந்தன. பெரும்பாலான பள்ளிவாசல்களில், பொதுமக்கள் கழிப்பறை செல்வதற்கும், குளிப்பதற்கும் ஏற்பாடுகள் செய்து கொடுக்கப்பட்டிருந்தது

>> காயல்பட்டினத்தில் நடைபெற்ற இந்த இஜ்திமாவையொட்டி, சில கேள்விகளைக் கேட்டும், விவாதத்திற்கு அழைப்பு விடுத்தும் நகரின் பல இடங்களில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தது. ஆங்காங்கே பிரசுரங்களும் வினியோகிக்கப்பட்டது. அவற்றில், தொடர்பு எண்களாக 4 கைபேசி எண்களும் அச்சிடப்பட்டிருந்தது. அந்த எண்களுக்குத் தொடர்புகொள்ள முயன்றபோது, அனைத்து எண்களும் செயலிழந்து இருந்ததை அறிய முடிந்தது

>> இஜ்திமா நடைபெற்ற இரண்டு நாட்களிலும், காயல்பட்டினத்தைச் சேர்ந்த ஆண்கள் கருத்து வேறுபாடின்றி, கூட்டங்கூட்டமாகச் சென்று கலந்துகொண்டனர்











>> இஜ்திமாவில் பாதுகாப்புப் பணிக்காக முகாமிட்டிருந்த காவல்துறையினருக்கு குறிப்பிடும் அளவில் பணிகள் எதுவுமில்லாதிருந்தமையால், அவர்களும் பொதுமக்களுக்கு வழிகாட்டி உதவும் பணிகளைச் செய்தனர். 



>> இஜ்திமாவுக்கு பேருந்துகளில் வந்தோர், பேருந்து நடத்துநருக்கு சிரமம் அளிக்காமல், நிகழ்விடம் வந்திறங்கிய பிறகு பயணியர் எண்ணிக்கை விபரங்களை அவரிடம் பகிர்ந்துகொண்டனர். 



>> இஜ்திமா நடைபெற்ற நாட்களில், காயல்பட்டினம் கடற்கரை தொழுமிடத்தில், மஃரிப் - இஷா கூட்டுத் தொழுகைகளில் ஏராளமானோர் கலந்துகொண்டனர். 





நன்றி www.kayalpatnam.com

11 comments:

  1. பதிவுக்கு நன்றி.

    தகவலுக்கும் நன்றி.

    வாழ்த்துக்கள்
    வாழ்க வளமுடன்.
    அன்புடன்.

    K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
    த.பெ. மர்ஹும். கோ.மு.முஹம்மது அலியார்.
    உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை

    ReplyDelete
  2. தகவல் அறியத்தந்தமக்கு நன்றி.

    ReplyDelete
  3. அருமையான புகைப்படங்கள் பதிவுக்கு நன்றி இந்த இஜ்திமா நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட அனைவர்க்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  4. அல்ஹம்துலில்லாஹ்

    ReplyDelete
  5. மாஷா அல்லாஹ்

    தப்லீக் அமைப்பு ஒருவருக்கொருவர் ஈகோ இல்லாத அமைப்பு

    அன்று முதல் இன்று வரை தலைமைக்கு போட்டியிட்டு பிரிவுகள் காணாத அமைப்பு.

    மாற்றார் காணும்போதுகூட தனி மரியாதை தோணும் அமைப்பு.

    கொடியில்லை.. தோரணம் இல்லை..அனாச்சார செலவு செய்யும் கட் அவுட் இல்லை பொன்னாடை இல்லை..இத்தனைக்கும் மேலான மரியாதை மட்டும் இவ்வமைப்பிற்கு உண்டு.

    பாலியல் குற்றச் சாட்டு இல்லை..நோட்டீஸ்,.. வசூல் என்று எதுவும் இல்லை.

    குறைகளை தோளில் போட்டுக் கொண்டு நாங்கள் அதை செய்தோம் இதை செய்தோம் என்று மேடை போட்டு விளம்பரம் தேடுபவர்களுக்கு மத்தியில்


    நிறைகள் மட்டுமே இவர்களது பலம் என்றாலும் இன்னும் எங்களிடம் குறைகள் உள்ளது என்று இவர்கள் செய்யும் வணக்கங்கள் போதாது என்று கண்ணீருடன் தன் வாழ்க்கையை அல்லாஹ்விடம் ஒப்படைத்துள்ள ஒப்பற்ற அமைப்பு.

    5000 பேர் கூட கூடாமல் 5 லட்சம் பேர் என்று வாய் கூசாமல் பொய் புரட்டு செய்யும் அமைப்புகளுக்கு மத்தியில் 40000 பேரை எதிர்பார்த்து 50000 த்திற்கு அதிகமாக மக்களை கலந்து கொண்ட இஜ்திமா என்றால் மாஷா அல்லாஹ்..

    ReplyDelete
  6. தப்லீக் ஜமாஅத்தினர் சில நன்மையான காரியங்களைச் சிறப்பான முறையில் செய்து வருவதை யாரும் மறுக்க இயலாது. மக்களைத் தொழுகைக்கு அழைப்பது அதிகமான வணக்கங்கள் புரிவது பாவம் செய்துகொண்டிருந்தவர்களுக்கு சரியான பயிற்சி அளித்து அவர்களிடம் நல்ல மாற்றத்தை ஏற்படுத்துவது சில மார்க்க விஷயங்களைப் பிடிப்பாகவும் பேணுதலாகவும் இருப்பது இது போன்ற நல்ல விஷயங்களை இவர்களிடம் காண முடிகிறது. இவ்விஷயத்தில் இவர்களை நாம் பாராட்டவே செய்கிறோம்.
    இவர்கள் புரியும் இந்த நன்மையான காரியங்களை மட்டும் சிலர் கவனத்தில் கொண்டு இவர்கள் தான் மிகச் சரியாக செயல்படுகிறார்கள் என்ற தவறான முடிவுக்கு வருகின்றனர். தப்லீக் ஜமாஅத்தினருக்கு இப்படி ஒரு முகம் இருப்பது போன்று இவர்களுக்கு வேறு ஒரு முகமும் இருக்கின்றது. இவர்களுடைய மறுபாதியை பலர் கவனிக்கத் தவறி விடுகின்றனர்.
    ஒருவருடைய அனைத்து செயல்பாடுகளை வைத்துத் தான் அவர் நல்லவரா? கெட்டவரா? என்ற முடிவை எடுக்க வேண்டும். சமுதாயத்துக்கு தீங்கிழைக்கும் தீயவர்களிடம் கூட சில நன்மையான காரியங்களைப் பார்க்கத் தான் முடிகிறது. இதனால் ஒட்டுமொத்தமாக அவர்களை நல்லவர்கள் என்று நாம் கூறி விடுவதில்லை. அவர்களின் அனைத்து செயல்பாடுகளையும் கவனத்தில் கொண்டே முடிவெடுக்கின்றோம்.
    இதே போன்று தான் தப்லீக் ஜமாஅத் விஷயத்தில் நாம் முடிவெடுக்கக் கடமைப்பட்டிருக்கின்றோம். இவர்களிடம் பல நன்மையான காரிங்கள் இருப்பதைப் போன்று ஏராளமான வழிகேடுகளும் தவறான நம்பிக்கைகளும் நிறைந்துள்ளது.
    இஸ்லாத்தைப் புறக்கணிப்பவர்கள்
    நன்மைகளை ஏவி தீமைகளைத் தடுக்கும் பணியை இஸ்லாம் இந்தச் சமுதாயத்தில் ஒவ்வொருவரின் மீதும் சுமத்தியுள்ளது. குர்ஆனிலும் ஹதீஸ்களிலும் தீமையைத் தடுப்பதின் அவசியம் தெளிவாக விளக்கப்பட்டிருக்கின்றது.
    குர்ஆன் நன்மையை மட்டும் ஏவவில்லை. தீமைகளைத் செய்யக் கூடாது எனத் தடுக்கவும் செய்கின்றது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது தூதுப் பணியில் நன்மையை மட்டும் ஏவவில்லை. மாறாக சமுதாயத்தில் நிலவியிருந்த அனைத்துத் தீமைகளையும் தடுத்து ஒழிக்கப் பாடுபட்டார்கள். அவற்றை சமூகத்திலிருந்து அகற்றியும் காட்டினார்கள்.
    இப்படிப்பட்ட ஒரு முக்கியமான பணியைச் செய்ய வேண்டியதில்லை என்பது தப்லீக் ஜமாஅத்தின் கொள்கை. நன்மையை மட்டும் சொன்னால் போதும். தீமை தானாக சென்று விடும் என்று குர்ஆனுக்கும் ஹதீஸ்களுக்கும் எதிராகப் பேசி வருகின்றனர்.
    இஸ்லாம் என்றாலே நன்மையை ஏவும் மார்க்கம். தீமையைத் தடுக்கும் மார்க்கம். இந்த இரண்டில் ஒன்றை ஏற்று மற்றொன்றை விட்டதன் மூலம் இவர்கள் இஸ்லாத்தின் ஒரு பாதியை புறக்கணித்து விட்டனர்.
    நன்மைகளைச் சொல்லும் போது மக்கள் எதிர்ப்பதில்லை. தீமைகளைக் கண்டிக்கும் போது தான் எதிர்ப்புகளும் சிரமங்களும் தலை தூக்குகின்றன. இந்தச் சிரமங்களை எதிர்கொள்ளும் மனப் பக்குவம் இல்லாத இவர்கள் தங்களால் இது இயலாது என்று கூறி ஒதுங்கி விட்டால் அது வேறு விஷயம்.
    ஆனால் அவ்வாறு தனது இயலாமையை ஒப்புக் கொள்ளாமல் அதை மறைப்பதற்காக நன்மைகளை மட்டும் சொல்வதே சிறந்த மார்க்கப் பணி என்றும் இதுவே அறிவுப்பூர்வமான வழி என்றும் பொய்யான தத்துவத்தைக் கூறுவதை ஒருக்காலும் ஏற்க முடியாது.
    சமூகத் தீமைகளை ஒழிக்கவில்லை

    ReplyDelete
  7. இவர்களின் இந்தத் தவறான கொள்கையால் தான் சமுதாயம் கெட்டு நாசமாகி உள்ளது. தமிழகத்தில் தவ்ஹீது வருவதற்கு பல வருடங்களுக்கு முன்னரே இவர்கள் இருந்தனர். இவர்களின் வாதத்தில் உண்மை இருந்தால் இவர்கள் சமுதாயத்துக்கு நன்மையை ஏவிய காரணத்தால் சமூகத்தில் தீமை அழிந்து நல்ல நிலை ஏற்பட்டிருக்க வேண்டும்.
    ஆனால் தவ்ஹீது ஆரம்பித்த அந்தக் காலகட்டத்தில் சமுதாய நிலையோ படுமோசமாக இருந்தது. இணைவைப்பு, பித்அத், வட்டி, வரதட்சணை, மூட நம்பிக்கைகள் மற்றும் எல்லா அநாச்சாரங்களும் வீரியமாக நடந்தேறிக் கொண்டிருந்தது.
    தீமையைத் தடுக்காததின் விளைவால் அந்நேரத்தில் தொழுகையாளியாக இருந்த பலர் இணைவைத்துக் கொண்டும் பித்அத்களை செய்து கொண்டும் மூடநம்பிக்கைகளில் மூழ்கியும் இருந்தனர். வட்டி வரதட்சணை போன்ற பாவங்களைச் சர்வ சாதாரணமாக செய்து கொண்டிருந்தார். பள்ளிவாசல் நிர்வாகிகளே பாவமான காரியங்களுக்கு முன்னோடியாக இருந்தனர். தப்லீக் ஜமாஅத்தினர் தீமையைக் கண்டிப்பதை விட்டுவிட்டு நன்மையை மட்டும் ஏவியதே இந்த மோசமான நிலைக்குக் காரணம்.
    இதன் பிறகு தவ்ஹீது பிரச்சாரம் முடிக்கிவிடப்பட்டு தீமைகளுக்கு எதிராகக் குரல் ஒலித்த பின்பே இந்தத் தீமைகள் ஓரளவுக்கு ஒடுக்கப்பட்டு ஓரங்கட்டப்பட்டன.
    சமுதாயத்தில் இந்தத் தீமைகள் புரையோடிப் போயிருந்ததற்கு இவர்களுடைய இந்த தவறான கொள்கையும் ஒரு காரணம். சிரமம் இல்லாமல் மார்க்கப் பணி ஆற்ற வேண்டும் என்ற எண்ணமே இந்த நிலைபாட்டிற்கு இவர்களைத் தள்ளியது.
    தீமையைத் தடுத்ததின் விளைவால் வரலாற்றில் ஏற்பட்ட இந்த மாற்றத்தைக் கண்கூடாகக் கண்ட பிறகும் கூட தங்களின் நிலைபாட்டை இவர்கள் மாற்றிக் கொள்ளவில்லை. இன்றும் இவர்கள் தீமைகளைக் கண்டித்துப் பேசுவதில்லை.
    தீமைகள் இவர்களுக்கு ஒரு பொருட்டே அல்ல. எனவே தான் வரதட்சணை போன்ற மார்க்கத்திற்கு மாற்றமான காரியங்கள் நடக்கும் திருமணங்களில் சர்வ சாதாரணமாக கலந்து கொள்கின்றனர். சில நேரங்களில் தாங்களே இத்தீமைகளைச் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டாலும் கொஞ்சம் கூட தடுமாறாமல் இவற்றைச் செய்து விடுகின்றனர். மார்க்கத்திற்கு எதிராக உறவோ நட்போ வரும் போது மார்க்கத்தை விட உறவுக்கும் நட்பிற்குமே முன்னுரிமை கொடுக்கின்றார்கள்.
    இஸ்லாமிய பிரச்சாரத்தின் பாதியைப் புறக்கணிக்கச் சொல்லும் இப்படிப்பட்ட ஜமாஅத்தால் சமுதாயம் ஒருக்காலும் முன்னுக்கு வர முடியாது. இவர்களால் சமுதாயத்தை நல்ல ஒரு நிலைக்கு கொண்டு வரவும் முடியாது.
    அடிப்படையில் கோளாறு
    குர்ஆன் ஹதீஸ் ஆகிய இரண்டு மட்டுமே ஒரு முஸ்லிமுடைய அடிப்படைக் கொள்கையாகும். இந்த அடிப்படைக் கொள்கையில் கோட்டை விட்டவர் மறுமையில் வெற்றி பெற முடியாது.
    தப்லீக் ஜமாஅத்தினர் இந்த அடிப்படைக் கொள்கையில் கோட்டை விட்டுள்ளனர். குர்ஆன் ஹதீஸை என்ற வட்டத்தைத் தாண்டி மத்ஹபுகளை மார்க்கமாக ஏற்றுக் கொண்டுள்ளனர்.
    மத்ஹபுச் சட்டங்கள் மனிதர்களின் சுய சிந்தனையால் உருவாக்கப்பட்டவை. குர்ஆனுடனும் ஹதீஸ்களுடன் மோதும் வகையில் அமைந்தவை. இந்த வழிகேட்டை இவர்கள் சரி என்று நம்புகின்றனர். தனது வணக்க வழிபாடுகளை இதனடிப்படையிலேயே அமைத்துக் கொள்கின்றனர். இந்த சட்டங்கள் குர்ஆனுக்கும் ஹதீஸ்களுக்கும் மாற்றமாக அமைந்திருப்பதை அறிந்த பின்னரும் இவற்றைப் பற்றிப் பிடித்துக் கொண்டிருக்கின்றனர்.
    தவ்ஹீதை மட்டும் எதிர்ப்பார்கள்
    தீமைகளைத் தடுக்க வேண்டியதில்லை என்ற கொள்கையில் உள்ள இவர்கள் நம் விஷயத்தில் மட்டும் இக்கொள்கையைத் தளர்த்திக் கொண்டனர்.
    இவர்களின் கருத்துப்படி நமது கொள்கையும் செயல்பாடுகளும் தீமையானது. இவர்களின் கொள்கைப்படி பார்த்தால் இவர்கள் நம்மை எதிர்க்க வேண்டிய அவசியமே இல்லை. ஆனால் இவர்கள் தமிழகத்தில் பல பகுதிகளில் நமக்கு எதிராக முழு முயற்சியுடன் செயல்படுகின்றனர். எப்பாடு பட்டாவது நம்மை அழித்துவிட வேண்டும் என்று நினைக்கின்றனர்.
    தப்லீக் உலமாக்களும் கப்று வழிபாட்டை ஆதரிக்கும் பரேலேவிகளும் கொள்கையில் மாறுபட்டவர்கள். தர்ஹா வழிபாட்டை அங்கீகரிக்காத தப்லீக் உலமாக்கள் பரேலவிஸத்திற்கு எதிராகப் போர்க்குரல் கொடுக்கவில்லை. போர்க்கொடி உயர்த்தவில்லை.
    மாறாக மத்ஹபுகள் கூடாது என்று நாம் சொன்னதற்காக இவர்களும், பரேலவிகளும் ஒன்றாகச் சேர்ந்து கொண்டு, நமக்கு எதிராகக் கை கோர்த்துக் கொண்டு நம்மைப் பூண்டோடு களையெடுக்கக் களமிறங்கினர்

    ReplyDelete
  8. தப்லீகும், பரேலவிஸமும் ஒன்றுக்கொன்று எதிரும் புதிருமானது. இப்படிப்பட்டவர்கள் நம்மை எதிர்ப்பதில், ஒழிப்பதில் ஓரணியில் நின்றனர் என்றால் இவர்களது வெறுப்பு எந்த அளவுக்கு ஆழமானது என்பதை நம்மால் உணர முடிகின்றது.
    இதில் வேதனைக்குரிய விஷயம் என்னவென்றால் இவர்கள் நம்மை மேடையில் பிளந்தெடுத்தது போன்று பரேலவிகளைப் பிளந்தெடுக்க வேண்டாம். கொஞ்சம் பிடித்தாவது விடலாம். அப்படிக் கூடச் செய்யவில்லை. ஆனால் நம்மை வாட்டி வறுத்தெடுக்க வகை வகையான கூட்டங்கள், மாநாடுகள்!
    அரைக்க அரைக்க சந்தனம் மணக்கும்! தீட்டத் தீட்ட வைரம் மிளிரும் என்பது போல் இவர்கள் நம்மைத் திட்டத் திட்ட இறையருளால் நாம் வளர்ந்து கொண்டு தான் இருக்கிறோம், அல்ஹம்து லில்லாஹ்!
    இன்று இஸ்லாமிய மாநாடுகள் என்றால் அது ஏகத்துவ மாநாடுகள் என்றாகி விட்டன. இவர்களது மாநாடுகளே பள்ளிவாசலின் வளாகங்களில் தான் நடக்கின்றன. இது தமிழகத்தில் அல்லாஹ் ஏற்படுத்தி இருக்கும் மாற்றமும் மறுமலர்ச்சியும் ஆகும்.
    தனிமனித வழிபாடு
    இஸ்லாம் அனுமதிக்காத தனிமனித வழிபாட்டை இவர்களிடம் காண முடியும். அமீர் ஷாப் என்று ஒருவரை ஏற்படுத்தி அவரை மற்ற மனிதர்களை விட்டும் வித்தியாசப்படுத்திப் பார்க்கின்றனர். மக்கள் நீண்ட அணியில் நின்று ஒருவர் பின் ஒருவராக அவரிடம் முசாபாஹா செய்யும் பழக்கத்தைக் கொண்டு வந்துள்ளனர்.
    இந்த அமீர் இறைநேசர் என்பது நூறு சதவீதம் உறுதியானதைப் போன்றும் இவரிடம் முசாபாஹா செய்தால் தனக்கு நல்வாழ்வு கிடைப்பது நிச்சயம் என்ற நம்பிக்கையிலும் இவ்வாறு முசாபஹா செய்கின்றனர்.
    இது இஸ்லாத்திற்குப் புறம்பானதாகும். அல்லாஹ்வின் நேசத்திற்குரியவர் யார்? அவனுக்கு நெருக்கமானவர் யார்? என்பதை யாராலும் உறுதிபடக் கூற முடியாது. அப்படி ஒருவர் உறுதியாக அறியப்பட்டாலும் கூட இவ்வாறு செய்து மக்களை விட்டும் தன்னை தனிமைப்படுத்தி பெருமைப்படுத்திக் கொள்வது கூடாது.
    ஏனென்றால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களோ, இந்த உலகத்தில் வாழும்போதே அவர்களால் இறைநேசர்கள் என்று சான்று வழங்கப்பட்ட அவர்களின் தோழர்களோ இவ்வாறு தங்களை மக்களிடம் பெருமைபடுத்திக் கொள்ளவில்லை. மாறாக மக்களுடன் மக்களாக எல்லோரையும் போன்றே வாழ்ந்தார்கள். பணிவை வெளிப்படுத்தினார்கள். சொல்லப் போனால் தங்களை மக்களுக்குப் பணியாற்றும் பணியாளர்கள் என்றே கருதி மக்கள நலப் பணிகளை செய்தனர்.
    பெரியார் கதைகள்
    இவர்கள் மக்களுக்கு நல்லுபதேசங்களைச் செய்கின்ற போது மக்களுக்குத் தேவையான சரியான தகவல்களை மட்டும் கூறுவதில்லை. மாறாக பொய்யான கதைகளையும் கப்சாக்களையும் கூறுகின்றனர்.
    பெரும்பாலும் இந்த கப்சாக்கள் பெரியார்களைப் பற்றிய கதைகளாகவே இருக்கின்றது. இவை கேட்பதற்கு சுவாரஸ்யமாக இருந்தாலும் இவற்றைச் சிந்தித்துப் பார்த்தால் இவற்றில் ஏராளமான அறியாமையும் மார்க்கத்திற்கு முரணான அம்சங்களும் இருப்பதை காணலாம்.
    மனித குலத்துக்குத் தேவையான அனைத்து உபதேசங்களும் குர்ஆனிலும் ஹதீஸ்களிலும் ஏராளமாக பரவி கிடக்கின்றது. அப்படியிருக்க இந்த புருடாக்கள் எதற்கு? இவை மக்களை அறிவீனர்களாக ஆக்குமே தவிர அறிவாளிகளாக ஆக்காது.
    கடமை தவறுபவர்கள்
    ஒரு மனிதன் இறைவனுக்கு ஆற்ற வேண்டிய கடமைகளை இஸ்லாம் வலியுறுத்துவதைப் போன்று பிற மனிதர்களுக்கு ஆற்ற வேண்டிய கடமைகளையும் இஸ்லாம் வலியுறுத்துகின்றது. இந்தக் கடமைகளை ஒருவர் முறையாக நிறைவேற்றினாôல் இதுவும் வணக்கமாகி விடுகின்றது. எனவே அதற்கு நன்மை உண்டு என்று மார்க்கம் கூறுகின்றது.
    இஸ்லாத்தின் உபதேசங்கள் கொள்கை கோட்பாடுகள் சட்டதிட்டங்கள் ஆகியவை அனைத்தும் பிறரைப் பாதிக்காத வகையில் பிறருக்கு நன்மை ஏற்படுத்தக்கூடிய வகையிலேயே அமைந்துள்ளது.
    மார்க்கத்தை அறிந்து கொள்வதற்காக குறிப்பிட்ட சில நாட்களை இதற்கு என ஒதுக்குவது மார்க்கத்தில் குற்றமில்லை. மாறாக இது ஒரு நன்மையான காரியமே. ஆனால் தான் ஆற்ற வேண்டிய மற்ற கடமைகளுக்கு பங்கம் ஏற்படாத வகையில் இந்த நல்ல காரியத்தைச் செய்ய வேண்டும்.
    இந்த சாதாரண விஷயத்தைக் கூட தப்லீக் ஜமாஅத்தினர் விளங்கவில்லை. ஒரு வாரம் ஜமாஅத், 40 நாள் ஜமாஅத் என்று பல நாட்களை ஒதுக்குமாறு இவர்கள் மக்களிடம் கூறுகின்றனர். குடும்ப சூழ்நிலையின் காரணத்தால் இதில் வர இயலாதவர்களும் இருப்பார்கள். இத்தகையவர்கள் நாங்கள் கடையைப் பார்க்க வேண்டியுள்ளது. குடும்பத்தைப் பார்க்க வேண்டியுள்ளது. எனவே தற்போதைய சூழ்நிலையில் எங்களால் ஜமாஅத்திற்கு வர இயலாது என்று கூறுவர்.
    ஆனால் ஜமாஅத்தினர் இவர்களை விட்டு விடுவதில்லை. குடும்பத்தை அல்லாஹ் பார்த்துக் கொள்வான் என்று கூறி இவர்களை அழைத்துச் சென்று விடுகின்றனர்

    ReplyDelete
  9. இவர்களின் இத்தகைய பிரச்சாரத்தால் பலர் தான் ஆற்ற வேண்டிய கடமைகளை விட்டுவிட்டு அல்லாஹ் பார்த்துக் கொள்வான் என்ற நம்பிக்கையில் ஜமாஅத்திற்குப் புறப்பட்டு விடுகின்றனர். ஆனால் இவர்களின் குடும்பமோ ஊரில் சிரமப்பட்டுக் கொண்டிருக்கும்.
    தப்லீக் ஜமாஅத்தில் செல்லும் பலரது குடும்பம் இந்தச் சிரமத்தை அனுபவித்து வருகின்றது. பலர் தங்களுடைய பொருளாதாரத்தை இழந்துள்ளனர். அல்லாஹ் பார்த்துக் கொள்வான் என்ற குருட்டு நம்பிக்கையே இதற்குக் காரணம்.
    தன்னால் இயன்ற முயற்சிகளைச் செய்துவிட்டு இதன் பிறகே இறைவன் பார்த்துக் கொள்வான் என்று நம்பிக்கை வைக்க வேண்டும் என்று இஸ்லாம் கூறுகிறது. ஆனால் இவர்களோ முயற்சியைக் கைவிட்டுவிட்டு இறைவன் மீது நம்பிக்கை வைக்கிறார்களாம்.
    சாப்பாட்டு விஷயத்தில் இறைவன் மீது பழிபோடாமல் தாங்கள் செய்ய வேண்டிய பணிகளை முறையாக செய்கின்றனர். ஜமாஅத்திற்குச் செல்லும் போது உணவுப் பொருட்களையும் பாத்திரங்களையும் ஒன்று விடாமல் தேவையான அனைத்தையும் எடுத்துச் செல்கின்றனர். இறைவன் பார்த்துக் கொள்வான் என்று கூறி இவற்றை விட்டு விடுவதில்லை.
    மேலும் தப்லீக் ஜமாஅத்தில் உள்ள பலர் எளிமை என்ற பெயரில் தங்களைத் தானே வருத்திக் கொள்கின்றனர். மார்க்கம் அனுமதித்த இன்பங்களை ஹராமாக்கிக் கொள்கின்றனர்........

    ReplyDelete
  10. தப்லீக் ஜமாஅத்..?

    தப்லீக் தலைவர்கள் ஒன்று கூடி இஸ்லாமிய சமுதாய மக்களின் அடிப்படை உரிமைகளுக்கு குரள் எழுப்பி போராட்டங்கள், பேரணிகள் நடத்தியது உண்டா?


    இந்த தப்லீக் ஜமாஅத்தினர் கத்தம் ஃபாத்திஹா ஓதுவதை தடுத்தது உண்டா?


    இந்த தப்லீக் சகோதரர்கள் தர்காஹ்வை எதிர்த்து மேடையில் பேசியது உண்டா?



    இந்த தப்லீக் சகோதரர்கள் தொழுகைக்கு அழைக்கிறார்களே அது போன்று மவ்லூது, மீலாது விழாக்களை தடுத்தது உண்டா?


    இந்த தப்லீக் சகோதரர்கள் ஸலவாத்துன் நாரியாவை எதிர்த்தது உண்டா?


    இந்த தப்லீக் சகோதரர்கள் இந்துக்கள், கிருஸ்தவர்கள், நாத்திகர்களுக்கு உபதேசம் செய்கிறார்களா?

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.