.

Pages

Saturday, July 25, 2015

காதல் மாணவர்களின் பாதை மாறிய பயணம்! பணம் தீர்ந்ததும் முடிவுக்கு வந்தது!?.



12ம் வகுப்பு மாணவ, மாணவிகள் காதல் மயக்கத்தில் வீட்டை விட்டு வெளியேறினர். ஒரு வார பயணத்தில் கையில் இருந்த பணம் முழுவதும்  காலியானது. இதைத் தொடர்ந்து பெற்றோரின் பாசம் நினைவுக்கு வந்து பாதை மாறிய பயணம் முடிவுக்கு வந்தது.

கோயம்புத்தூர் ஒட்டிபுதூர் பகுதியை சேர்ந்தவர்  ராமு (17). அதே பகுதியை சேர்ந்தவர் லதா (17). (இருவரின் பெயரும் மாற்றப்பட்டுள்ளது). இருவரும் அங்குள்ள பள்ளி ஒன்றில் 12ம் வகுப்பு படித்து வந்தனர்.  ஒரே வகுப்பு மாணவர்கள் என்பதால் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர் நட்பு ஏற்பட்டுள்ளது. நட்பு காதலாக மலர்ந்தது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து  பேசி பழகி வந்துள்ளனர். இந்நிலையில், இருவரும் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். எங்கு வைத்து திருமணம் செய்வதுயார் முன்னிலையில் திருமணம் செய்வது என்ற எந்த தீர்க்கமான முடிவுக்கும் வராமல் திருமண வயது அடைவதற்கு முன்னரே விளையாட்டுப் போக்கில் கடந்த  17ம் தேதி இருவரும் வீட்டை விட்டு புறப்பட்டனர்.

கையில் பணம் இல்லாததால் லதா கழுத்தில் கிடந்த செயினை அடகு வைத்து ரூ.10 ஆயிரம் பெற்றனர். அந்த பணம் மூலம் பழனி புறப்பட்டனர். அங்கிருந்து  கன்னியாகுமரி சென்றனர். மீண்டும் அங்கிருந்து ஊட்டிக்கு பயணித்தனர். ஊட்டியில் இருந்து ராமேஸ்வரம் நோக்கி புறப்பட்டனர். அங்கிருந்து திருச்சி விரைந்தனர். மீண்டும் திருச்சியில் இருந்து சென்னைக்கு வந்தனர். அனைத்து பயணமும் பஸ்சிலேயே நடந்தது. எங்கு தங்குவது? யாரிடம் அடைக்கலம் கேட்பது என்று  புரியாமல் பஸ்சிலேயே பயணம் தொடர்ந்துள்ளது. சென்னை வந்த உடன் மாணவர்களின் கையில் இருந்த பணம் முழுவதும் காலியானது. இதைத் தொடர்ந்து  என்ன செய்வது என்று தெரியாமல் தவித்த மாணவி கதறி அழுதார். 

எனக்கு பெற்றோரை பார்க்க வேண்டும் என்று கண் கலங்கினார். பின்னர், இருவரும் பேசி நாம் வீடு சென்று விடுவோம் என்ற முடிவுக்கு வந்தனர். சென்ட்ரல்  ரயில் நிலையத்தில் இருந்த ரயில்வே போலீசாரிடம் நடந்த சம்பவத்தை கூறினர். இதைத் தொடர்ந்து அங்கிருந்து பெரியமேடு காவல் நிலையத்திற்கு காதல்  ஜோடி அழைத்து செல்லப்பட்டது. அவர்கள் கோவை போலீசாருக்கு தொடர்பு கொண்டு மாணவர்களின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து  இருவரின் பெற்றோரும் நேற்று இரவோடு இரவாக சென்னை வந்து மாணவர்கள் இருவரையும் தனித்தனியாக அழைத்து சென்றனர். காதல் மாணவர்களின் பாதை மாறிய  பயணம் பணம் தீர்ந்ததும் முடிவுக்கு வந்தது.

K.M.A. ஜமால் முஹம்மது. கோ.மு.அ.
த/பெ. (மர்ஹூம்) கோ.மு. முஹம்மது அலியார்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.